February 28, 2008

புனுகீஸ்வரர் கோயில்

புனுகீஸ்வரர் கோயில்.. சின்ன வயசில் வாரத்தில் முக்கால்வாசி நாட்கள் கோயிலில் தான் சாயங்காலப்பொழுதுகள். வியாழன் தட்சிணாமூர்த்திக்கு ..அபிசேகத்திலிருந்து ஒரு கை சுண்டல் வரை என்று ஆரம்பிக்கும் , வெள்ளிக்கிழமை விடுமுறை என்றால் துர்க்கைக்கு விளக்கு .. சனிக்கிழமை சனிபகவான் அர்ச்சனை, எள்ளுசாதம் ஒரு பிடி.. ஞாயிற்றுக்கிழமை வாரவழிபாடு.. அம்மா அப்பா போகும் இடமெல்லாம் நாங்களும்..
( punugeeswarar temple)

அன்றைக்கெல்லாம் வீட்டில் தொலைகாட்சிப்பெட்டியும் கிடையாது. ஒவ்வொரு சன்னதியிலும் எல்லாரும் பாடல்களைப்பாடி பின்னர் ஒவ்வொரு பூசையாக முடியும்.சாயங்காலம் ஆரம்பிச்சு இரவு ஆகிவிடும் . அடுத்து அங்கே, அடுத்து இங்கே என்று ஓடி ஓடி வரிசையில் முன்னால் இடம் பிடித்து , சில சமயம் எங்களைப்போன்ற சின்னப்பிள்ளைங்களுக்கும் தனியா பாட வாய்ப்பு கிடைக்கும் ..

தேவாரம் இன்னும் சின்ன சின்ன பாட்டெல்லாம் பழகிவைத்திருப்போம். கூட்டத்தோட கூட்டமா சிவபுராணம் மங்கள ரூபிணி கூட சொல்ல பழகி விட்டோம். ப்ரதோஷம்ன்னா அது ஒரு மகிழ்ச்சி நந்திக்கு அபிசேகம் , முள் பாதையில் ப்ரகாரம் சுற்றுவது என்று. ..இப்ப முழுதும் சிமெண்ட் போட்டாச்சு.ப்ரதோஷம்ன்னா இப்பகொஞ்ச காலமா எல்லா கோயிலிலும் கூட்டம் இருக்கு.. அப்பவே எங்க கோயிலில் கூட்டம் தான்.

வருடத்தில் ஒரு நாள் ஆண்டுவிழா அன்று நிறைய சிவபூசை செய்பவர்களை அழைத்து சிறப்புற பூசை நடக்கும் . ஒவ்வொருவரிடமும் போய் விபூதி பூசிக்கொள்வோம் . விளக்குபூஜை நாட்கள் , வேடிக்கை பார்த்த காலத்திலிருந்து நானே செய்த வரை அந்த கோயில் பத்திய நினைவுகள் இருக்கிறது. கார்த்திகை க்கு சொக்கப்பனை. இப்படி ஒவ்வொரு விசேச நாட்களும் கோயிலோடே நகர்ந்தது.

ஏறக்குறைய் என் வீடு போல அந்த கோயில் என்று சொல்லலாம்..என் திருமண வரவேற்புக்கு மாப்பிள்ளை அழைப்பு அங்கிருந்து ஆரம்பிக்கும்வரை.. சின்னபிள்ளைங்களா இருக்கும்போது
கோயிலில் வாரவழிபாட்டில் ஒரு தாத்தா ஆச்சி கிடைச்சாங்க கோயில் ஆச்சி கோயில் தாத்தான்னு சொல்லுவோம் சிவன் எனக்கு நண்பரைப்போல.. எப்பவும் வேண்டுதலாக எதையும் வைத்ததே இல்லை. ஒரு பாட்டு மனதில் , அதன்பின் , எனக்கு எது நல்லது தெரியாதா .. அதெல்லாம் தானா செய்வே இல்ல,என்று சொல்லிவிட்டு திரும்பிடுவேன்..

மக்கள் முருகன் மகாலட்சுமி சனிபகவான்னு ஒரு இடம் விடாம பரிட்சைபேப்பர் நம்பரை திரிக்கரியாலேயே எழுதி எக்கசக்கமா வேண்டுதல் வச்சிருப்பாங்க...

சுத்தி வரும்போது சாமிக்கு நேர் பின்னால் அடிமுடி காணும் முயற்சி யில் ப்ரம்மாவும் விஷ்னுவும் இருக்கும் லிங்கோத்பவர் சாமி எனக்கு ரொம்ப பிடிக்கும். தட்சணாமூர்த்தி கிட்ட மட்டும் கூடுதலா கொஞ்ச நேரம் அமைதியா நின்னு மனதுக்குள் நமச்சிவாய சொல்வதும் ரொம்ப பிடிக்கும். கொஞ்ச நாள் முன்னால் அறுபத்து மூவருக்கும் உற்சவ மூர்த்தி செய்திருந்தார்கள் .. அழகோ அழகு .
பதிவர் ஆயில்யன் ஊருக்குபோய் எடுத்து வந்த கோயில் படங்களை அனுப்பிய உடனே எனக்கு வந்த நியாபகங்களை இங்கே எழுதி திரும்ப கொண்டுவருகிறேன் அந்த நினைவுகளை...
சாந்தநாயகி சமேத புனுகீஸ்வரர் கோயில் பத்தி விளக்கமா பத்தி அடுத்த பதிவில்..


கோயில் படங்கள் இணையத்தில் ரொம்ப நாளா தேடியும்கிடைக்கல.. ஆயில்யன் உதவியில் இன்னைக்கு நானே போட்டுடறேன்.. (பாருங்க ஆங்கிலத்தில் யாராவது தேடினாலும் கிடைக்கனும்ன்னு போட்டோ விற்கு
கீழே ஆங்கிலத்தில் பெயர் )

6 comments:

கோபிநாத் said...

நானும் உங்க கூட சேர்ந்து கோயிலை சுத்திட்டேன் ;))

\\சிவன் எனக்கு நண்பரைப்போல.. எப்பவும் வேண்டுதலாக எதையும் வைத்ததே இல்லை. ஒரு பாட்டு மனதில் , அதன்பின் , எனக்கு எது நல்லது தெரியாதா .. அதெல்லாம் தானா செய்வே இல்ல,என்று சொல்லிவிட்டு திரும்பிடுவேன்..\\

ஆகா..நண்பர் மேல என்னொரு நம்பிக்கை... ;))

அழகான பதிவு ;)

மணியன் said...

நல்ல பதிவு.சிறுவயது நினைவுகளை அழகாக கொணர்ந்திருக்கிறீர்கள்.ஆனால் கடைசிவரை உங்கள் நினைவுகளுடனேயே தங்கிவிட்டதால், பிரபலமான கோவில்களையும் அறியாத என்னைப்போன்றவர்களுக்காக கோவில் ் எந்த ஊரில் உள்ளது எனத் தெரிவிக்கவில்லை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபி இன்னொரு சுத்து திருப்பி கூட்டிட்டு போறேன் அடுத்த பதிவுல... :)
எதையும் சரியாத்தான் செய்வேங்கற அளவு நம்பிக்கை என்பேரில் இல்லாததால.. நண்பர் மேல நம்பிக்கை வைத்தாச்சு..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மணியன் ரொம்ப பிரபலக்கோயில்ன்னு எல்லாம் சொல்லிக்க முடியாது.. இது இருப்பது மயிலாடுதுறை கூறைநாட்டில்.. வீடு பக்கத்தில் என்பதால் நாங்கள் அடிக்கடி சென்று பழகிவிட்ட கோயில் என்பதால் அதை பற்றி இணையத்தில் தேடிப்பார்த்தேன்..

Anonymous said...

மிகவும் அருமை ! 3 வருஷமா மாயவரம் போகணும்னு ப்ளான்! இன்னும் நடக்கலை! சீக்கிரம் போகணும். என் சரிபாதிக்கு அது தாங்க பொறந்த ஊர் !
நல்ல தகவல்! நன்றி !

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சரவணன் .. கூட்டிட்டு போங்க அம்மணி ஊருங்கறீங்க இப்படி தள்ளி போட்டுக்கிட்டே போனா எப்படி..
தகவல் என்னங்க இதுல பெரிசா இருக்கு அடுத்த பதிவு பாருங்க கீழே லிங்க் இருக்கு .. தனியூர் -புனுகீஸ்வரர்கோயில்ன்னு அதுல தாங்க தகவல் இருக்கு..