March 4, 2008

தனியூர் - புனுகீஸ்வரர் கோயில்

அருள்மிகு சாந்தநாயகி உடனுறை புனுகீசுரர் திருக்கோயில் மயிலாடுதுறை,நாகைமாவட்டம், தமிழ்நாடு.
மயிலாடுதுறை நகரினுள் கூறைநாடு என்னும் பகுதியுள் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இப்பகுதி தனியூர் என்று குறிக்கப்பட்டு வந்தது. மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து ஏறக்குறைய 1 ½ கி.மீ மேற்கிலும்,
மயிலாடுதுறை தொடர்வண்டி நிலையத்திலிருந்து1 ½ கி.மீ கிழக்கிலும்,இத்தலம் அமைந்துள்ளது.

இத்தலம் தேவாரப்பாடல் பெறாவிட்டாலும்- வைப்புத்தலமாகக் குறிக்கப்படாவிட்டாலும், சிறப்புடைய தலமாகும்.சிவத்தலங்கள் மொத்தம் 1008 என்று கூறப்படுகிறது. இவற்றுள் 276 தலங்களுக்கு மட்டுமே தேவாரப் பாடல்கள் கிடைக்கின்றன.ஏனைய தலங்களைப் பற்றிய பாடல்கள் அழிந்து போயின. புனுகீசர் திருக்கோயில் அவற்றுள் ஒன்றாக இருக்கலாம்.1008 சிவத்
தலங்கள் பற்றிய பட்டியலில் பாரிஜாதவனேசுரம் என்ற பெயரில் சில தலங்கள் உள்ளன். அவற்றுள் இது ஒன்றாக இருக்கலாம். ஏனெனில் பாரிஜாதம் என்னும் பவழமல்லிகை இத்தலத்தின் தலவிருட்சமாகும்.மேலும் இத்தலம்
பாடல்பெற்ற சிவத்தலங்களுக்கு இணையாகக் கருதப்படும் சிறப்புக்களைப் பெற்றுள்ளது.

திருக்கோயில் அமைப்பு:
கோயிலுள் நுழையுமுன் ஐந்து நிலைக்கோபுரம் அமைந்துள்ளது. நேராகப் பலி
பீடமும்,உயரிய கொடிமரமும் அமைந்துள்ளன.

இத்திருக்கோயில் இரு பிரகாரங்களுடன் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையுள் புனுகீசப்பெருமான் எழுந்தருளியுள்ளார். சாந்தநாயகியம்மை
தெற்கு நோக்கி யவாறு உள்ளார்.அம்மனுக்குத்தனியான உள் பிரகாரம் சிறிதாக அமைந்துள்ளது.கொடிமரத்தின் வலப்புரம் அலங்கார மண்டபமும்,அதன்
அருகில் பள்ளியறையும் உள்ளன.

வெளிப்பிரகாரத்தின் கன்னிமூலையில்
விநாயகப்பெருமான் உள்ளார்.அருகில் சகஸ்ரலிங்கம், சனீஸ்வரர் ஆகியோருக்குச் சந்நிதிகள் அமைந்துள்ளன. தென்பகுதியில் திருக்குளம் அமைந்துள்ளது
வெளிப்பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் யாகசாலையும்,தென்கிழக்கு மூலையில் மடப்பள்ளியும் அமைந்துள்ளன.கீழ்ப்பகுதியில் நந்தவனம்
அமைந்துள்ளது.

உள்பிரகாரத்தின் கன்னிமூலையில் வரதவிநாயகர் சந்நிதியும் அருகில் உற்சவமூர்த்திகள் எழுந்தருளியுள்ள சந்நிதியும் அமைந்துள்ளன.
வடமேற்குப்பகுதியில் ஆறுமுகப்பெருமான்,இலக்குமி ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன.தெற்கு நோக்கி ஆடல்வல்லானின் சந்நிதி அமைந்துள்ளது. வடக்கு உள்பிரகாரத்தில் தலவிருட்சமான பவள
மல்லிகை அமைந்துள்ளது. கருவறையின் வடக்குமாடங்களில் துர்க்கை, பிரம்மா ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன.அதனருகில் சண்டேசர்
சந்நிதி உள்ளது. வடகிழக்கு மூலையில் பைரவர்,சூரியன் ஆகியோரின் திருவுருவச்சிலைகள் உள்ளன. கீழ்ப்பகுதியில் நவக்கிரகங்களுக்கான சந்நிதி உள்ளது. அதனை அடுத்து மேற்கு நோக்கியவாறு கீழக்குமரர்சந்நிதி
உள்ளது. கருவறையின் கிழக்கு மாடத்தில் லிங்கோத்பவர் அமைந்துள்ளார்.

உள்பிரகாரத்தின் தென்கிழக்குப் பகுதியிலும்,தெற்கிலும் அறுபத்து மூவர் சந்நிதி உள்ளது.ஆலமர்கடவுள்(தட்சிணாமூர்த்தி) தெற்கு நோக்கி
அருள் பாலிக்கிறார். இங்கு நால்வருக்கும் சேக்கிழாருக்கும் திருவுருவங்கள் உள்ளன. மாடத்தில் ஜுரஹரேசுரர்,பிள்ளையார் உருவங்கள் உள்ளன.
புதிதாகச் செய்யப்பட்ட அறுபத்துமூவரின் செப்புச்சிலைகள் உள்ளன. அதனை அடுத்து இத்தலத்தில் திருவவதாரம் செய்ததாகக் கருதப்படுபவரும்
அறுபத்துமூன்று நாயனார்களில் ஒருவருமாகிய
நேசநாயனாரின் சந்நிதி உள்ளது.சிவனடியார்களுக்கு ஆடைகள் ஈந்த தொண்டினை இவர் செய்ததாகப் பெரியபுராணம் கூறுகிறது. (தொடரும்)

(பி.கு) என்ன இது என் வழக்கமான பேச்சுத்தொனியிலான பதிவாக இல்லையே என்று குழம்புபவர்களுக்கு ... ஆமாம் இது நான் எழுதியது இல்லை.. மண்டப்பத்தில் எழுதி வாங்கியது.. என் அப்பா எழுதி அனுப்பியிருந்தார்கள்... பிரதி எடுத்து ஒட்டியிருக்கிறேன்.
புனுகீஸ்வரர்கோயில் சில நினைவுகள்

17 comments:

அபி அப்பா said...

நான் இந்த பதிவை படித்தேன்:-)) நல்ல பதிவு என்பதை சொல்லிக்கிறேன்! வாழ்த்துக்கள் அப்பாவுக்கு போகட்டும்:-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா பதிவைப்படித்து சந்தேகம் ஜி டாக்கில் கேட்டதால் நீங்கபதிவைப்படித்தீர்கள் என்பது உண்மை என்பதை ஒத்துக்கொள்கிறேன்..ஆனால் முதல் பாராவும் கடைசி பாராவும் படித்ததாக ஒரு சந்தேகம் இருக்கிறது.. :)))

அபி அப்பா said...

//அம்மனுக்குத்தனியான உள் பிரகாரம் சிறிதாக அமைந்துள்ளது.கொடிமரத்தின் வலப்புரம் அலங்கார மண்டபமும்***//

இதையும் தான் படித்தேன் மேடம்! இது பதிவின் நடுப்பகுதியாக்கும்:-))

பாச மலர் / Paasa Malar said...

கோவில்களுக்கு உங்கள் ஊரில் பஞ்சமா என்ன? புகைப்படங்கள் நன்றாக, தெளிவாக வந்துள்ளது.

ஆயில்யன் said...

கோயிலுக்கு சென்றப்போதோ, அல்லது கோவிலினுள்ளோ இந்தளவு விவரங்கள் என் கண்ணில் படவில்லை என்றாலும்,இப்பதிவு மிகுந்த மனநிறைவை தந்தது :)
நன்றி!
அப்பாவுக்கும் நன்றிகளுடன்...!

ஆயில்யன் said...

//
அபி அப்பா said...
நான் இந்த பதிவை படித்தேன்:-)) நல்ல பதிவு என்பதை சொல்லிக்கிறேன்!
//

நல்ல பதிவுங்கறதோட நிப்பாட்டியிருந்த சந்தேகம் வந்திருக்காதோ அபி அப்பா ????

Deepa said...

முதலில் அப்பாவுக்கு.. இவ்வளவு நல்ல பதிவு த்ந்ததுக்கு நன்றி. இனிமே வருவது உங்களுக்கு..
முத்தக்கா.. ஒரு வழியா அப்பாவை silent partner ஆ உங்க சிறுமுயர்சியிலே .. பெரும் முயர்சியாலே சேர்த்துகுட்டீங்க.. இனிமே மெல்ல மெல்ல... அவரை active partner ஆக்கிடுங்க..

சென்ஷி said...

//என்ன இது என் வழக்கமான பேச்சுத்தொனியிலான பதிவாக இல்லையே என்று குழம்புபவர்களுக்கு ... //


:)))

சந்தோஷம்... மகிழ்ச்சி :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பாசமலர் உண்மைதான்.. எங்க ஊருல சுற்றுலான்னாலே கோயில் தானே.. படங்கள் உதவி ஆயில்யன்..

------------------
ஆயில்யன் பதிவு இந்த சமயத்தில் வெளிவந்ததே உங்களால் தான் .. இல்லையென்றால் இன்னமும்காலம் கடத்திக்கொண்டிருந்திருப்பேன்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தீபா நன்றி..ஆமா அப்பா எல்லாம் பெரிய ஆளுங்க.. தனியா தளம் ஆரம்பிச்சிருக்காங்க.. முழுமை பெற்றதும் சொல்றேன்.. :)
------------

சென்ஷி நான் பேசினாலோ எழுதினாலோ ஏன் இத்தனை பயமப்பா உங்களுக்கு ??

ரசிகன் said...

//(பி.கு) என்ன இது என் வழக்கமான பேச்சுத்தொனியிலான பதிவாக இல்லையே என்று குழம்புபவர்களுக்கு ... ஆமாம் இது நான் எழுதியது இல்லை.. மண்டப்பத்தில் எழுதி வாங்கியது.. என் அப்பா எழுதி அனுப்பியிருந்தார்கள்... பிரதி எடுத்து ஒட்டியிருக்கிறேன்.
//

ஆஹா நல்லாவே காப்பி அடிச்சியிருக்கிங்க.. :P
சூப்பரு:)))))))

ஆயில்யன் said...

//ஆயில்யன் பதிவு இந்த சமயத்தில் வெளிவந்ததே உங்களால் தான் .. இல்லையென்றால் இன்னமும்காலம் கடத்திக்கொண்டிருந்திருப்பேன்..
//
நன்றி அக்கா!

கோவில் பற்றிய பல சேதிகளை தெரியப்படுத்திய இப்பதிவு உங்களது சிறுமுயற்சியில் உருவானதுதான் :)))

கண்மணி/kanmani said...

முத்து அப்பாவையே ஒரு பிலாக் தொடங்கி கீதாம்மா மாதிரி முக்கிய கோவில்கள் பற்றி போடச் சொல்லுங்க .பலருக்கு உபயோகமான தகவலாக இருக்கலாம்

புது தொடர் விளையாட்டு வாங்கம்மா

http://kouthami.blogspot.com/2008/03/blog-post_04.html

கோபிநாத் said...

\\(பி.கு) என்ன இது என் வழக்கமான பேச்சுத்தொனியிலான பதிவாக இல்லையே என்று குழம்புபவர்களுக்கு ... ஆமாம் இது நான் எழுதியது இல்லை.. மண்டப்பத்தில் எழுதி வாங்கியது.. என் அப்பா எழுதி அனுப்பியிருந்தார்கள்... பிரதி எடுத்து ஒட்டியிருக்கிறேன்.\\


அப்பாவுக்கு ஒரு நன்றி ;)

அழகாக சொல்லியிருக்காரு..தெளிவாக அக்கா போலவே ! ;))

Unknown said...

/(பி.கு) என்ன இது என் வழக்கமான பேச்சுத்தொனியிலான பதிவாக இல்லையே என்று குழம்புபவர்களுக்கு ... ஆமாம் இது நான் எழுதியது இல்லை.. மண்டப்பத்தில் எழுதி வாங்கியது.. என் அப்பா எழுதி அனுப்பியிருந்தார்கள்... பிரதி எடுத்து ஒட்டியிருக்கிறேன்./

ஒரு பத்தி வாசிக்கிறதுக்குள்ளேயே சந்தேகம் வந்துடுச்சு :) தமிழய்யாவுக்கும் வாழ்த்துகள் சொல்லிடுங்க!!!

ஜீவி said...

தனியூர் புனுகீஸ்வரர் தலப்பெருமை அறிந்தேன்; தகவலுக்கு தங்கள் தந்தையாருக்கும் தங்களுக்கும் நன்றி.
ஜூரஹரேசுரருக்கு காஞ்சீபுரத்தில் ஏகாம்பரநாதர் சன்னதித் தெருவில்
தனிக் கோயிலே உண்டு.
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரசிகன், ஆயில்யன் ,கண்மணி , கோபிநாத் , அருட்பெருங்கோ மற்றூம் ஜீவி நன்றி..அப்பா சில மீட்டிங்குகளில் பிசி என்பதால் அடுத்த பகுதி இன்னும் வரவில்லை..