October 24, 2008

கடைசி விடுமுறை


லாஸ்டு ஹாலிடே
50 ல் ஒரு முறை எடுக்கப்பட்ட கதை. அந்த திரைப்படத்தில் ஒரு ஆணைச்சுற்றிப் பின்னப்பட்டிருந்த கதையை கொஞ்சம் மாற்றி 2006 ல் வேறு மாதிரி எடுத்திருக்கிறார்களாம்.. வாய்விட்டு ரசித்து சிரித்து மகிழ்ந்த படம் இது. சாதரண விற்பனையாளரா வேலை பார்க்கிற ஜியார்ஜியாங்கறபெண். தான் என்னவெல்லாம் ஆசைப்படுகி்றாளோ அவையெல்லாவற்றையும் ஒரு புத்தகத்தில் புகைப்படங்களா சேமித்து வைத்திருக்கிறாள்.

தன்னுடன் வேலை செய்கிற நண்பரிடம் தோன்றுகின்ற காதலை சொல்லமுடியாமல் இருக்கும் நிலையில் மூன்று வாரத்தில் தான் சாகப்போகிறவள் என்று தெரிய வருகிறது. டாக்டராக வருகிறவர் ஒரு இந்தியர் . அவர் வருகிற காட்சி நல்ல நகைச்சுவை (கொஞ்சம் கிறுக்கு மாதிரி??)

அப்பறமென்ன அம்மணி கையிருப்பில் இருக்கும் சேமிப்பு எல்லாம் எடுத்துகொண்டு கிளம்பி ஹெலிக்காப்டர்ல போய்... இருக்கறதுல யேஏஏ பெரிய ஹோட்டல்.. வசதியான அறை, வாழ்க்கை, வீர தீர ஆபத்தான விளையாட்டுக்கள் என்று அடித்து தூள்பரத்துகிறார்..

விமானத்தில் சகபயணி இருக்கையை சாய்க்கவிடாமல் தடுப்பதும், பின்னர் சண்டை போட்டுக்கொண்டு அதிகம் பணம் கொடுத்து மேல்வகுப்பில் பயணம் செய்வதாகட்டும்.. "மேக் மி இண்டர்நேஷன்ல்" என்று துணிக்கடையில் கேட்பதாகட்டும் ஆஹா! கனவுலகம் போனமாதிரி தான் ..

கூழாங்கல் ஸ்பா, ஆவிக்குளியல் என்று என்ன என்ன வகையுண்டோ அத்தனை அழகு படுத்தும் முறைகளையும் செய்து கொள்கிறாள். ஸ்கேட்டிங் ஜ்ம்பிங் என்று விளையாடி தன் கடைசி விடுமுறையை அட்டகாசமா கொண்டாடுறாங்க..

அங்கே தங்கி இருக்கும் ஏனைய பெரிய பணக்காரர்கள் இவள் யார் யார் என்று மண்டையை பிய்த்துக்கொள்ளும் போது பெருமிதமாக சுற்றிவருகிறாள். வேலை செய்பவர்கள் எல்லாரிடம் கனிவு காரணமாகவும், பணக்காரர்களிடம் பேச்சுத்திறமையாலும் நட்பாகிறாள்.. ஒருவரைத்தவிர , எல்லாரிடமும் நட்பாகிவிடுகிறார்.. நாளையைப்பற்றியோ , என்ன நினைப்பார்கள் என்ற கவலையோ இப்போது அவளுக்குஇல்லையே..அவள் நினைப்பதை செய்கிறாள் நினைப்பதை பேசுகிறாள்.கடைசியில் அந்த ஒருவரும் ஜார்ஜியாவைப்புரிந்து கொள்கிறார். காதலரும் இவர் இருக்கும் இடம் தேடி வந்துவிடுகிறார்.

கடைசி காட்சியில் பெரிய கட்டிடத்திலிருந்து தற்கொலைக்கு முயல்கிற ஒருவரை மனம்மாறச்செய்யும் காட்சி எனக்கு மிகவும் பிடித்தது.

வழக்கமான சினிமா தானே... மருத்துவர் தவறாக நோய் என்று கணித்திருக்கிறார் என்று சொல்லி சுபமான முடிவு.. இன்னும் இரண்டு தடவை பார்த்து சிரிக்கனும் என்று தோண்றுகிறது.



Enjoy yourself . . . It's later than you think! இதைத்தான் படத்தில் சொல்லவர்ராங்க.. அப்படி நினைத்து செய்யும் போது நிஜம்மாவே நாம் நாமாக இருப்போம் என்றே தோன்றுகிறது. ஜார்ஜியா முதலில் இருந்த ஷை டைப்புக்கும் கடைசியில் பெற்ற வெற்றிக்கும் அவள் அவளாகவே இருந்தது தானே காரணம்.

October 20, 2008

வாழ்வெனும் பாதை


வெயிலால் நீண்டுகொண்டிருக்கும்
சாலையைப்போன்ற
தகிக்கும்
நெடியநினைவுகள்...
ஒரு மரநிழலுக்கும் மற்றொன்றுக்குமான
தூரவித்தியாசமென
பிரிதலும் சேர்தலுமான காட்சிகள்
வெம்மையும் இளைப்பாரலுமென
கடக்கின்ற நாட்கள்...

வளைவுகளில் நிதானிக்கையிலோ
வந்தவழி புலப்படாத மனமயக்கம்..
நேர்க்கோட்டு நேர்ப்பார்வையிலோ
கானல் நீர் கலங்கலாக
போகும்வழி குழப்பும் கண்மயக்கம்.

பிரிவுகளில் தேர்ந்திடத் தடுமாற்றம்
ஏற்றங்களில் இறக்கங்களில்
சுமையென விழிப்பென ,
கடந்த, எதிர்-காலங்கள்.
எதிர்படும் அறிந்த அறியாத
முகம்தெரிந்த தெரியாத பயணிகள்
முற்றுப்பெறாத பயணங்கள்.

சும்மா சமாளிபிகேஷன் போஸ்ட்...

தோழி ஒருத்தங்க வீட்டில் புதுமனைபுகுவிழா. எங்கு திரும்பினாலும் கட்டிடங்கள் எழும்பி நிற்கும் ஒரு உலகம். எத்தனை விதம் விதமாக வந்தாலும் எல்லாவற்றிலும் குடியிருக்க ஆட்கள் வந்தவண்ணமே இருக்கிறார்கள். முடிவுறா சாலைகள். முடிவுறா கட்டிடங்கள். காற்று நுழைந்து செல்லும் போது ராஜ கோபுரத்தை நினைவுப்படுத்துகிற கட்டிடங்கள். ஒரு ஊருக்கும் இன்னொரு ஊருக்கும் இடையில் முன்பெல்லாம் கொஞ்சமேனும் வெற்று நிலங்களும் , விவசாய நிலங்களும் பார்த்திருப்போம். இனி அப்படி பார்ப்பது சிரமம் என்று நினைக்கும் படி முடிவுறாமல் குடியிருப்புகள். ஹைவேக்களின் ஓரங்களெல்லாம் பளபளப்பான குடியிருப்பு வளாகங்கள்.


சிறிதே தாமதமாக வந்தவர்கள் , பூஜையில் தோழியும் அவள் மாமியாரும் அமர்ந்திருந்ததைப்பார்த்து , இது புதுவழக்கமா இருக்கிறதே. எங்கள் வீடுகளில் கணவனும் மனைவியும் தானே அமர்வது வழக்கம் என்றார்கள். வழக்கம்போல கணவன் மனைவி தான் பூஜை செய்தார்கள் . அதன்பின் தான் பூஜை செய்பவர் லக்ஷ்மி பூஜை ஒன்று செய்யவேண்டும் என்று சொல்லி பெண்களை அமர்த்தினார். இதில் இரண்டு பயன். லக்ஷ்மி வருகிறாள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.
மாமியாருக்கு முக்கியத்துவம் கொடுத்து வைத்ததாய் ஆகும்.



வெகுநேரமாக ஹோமப்புகை அதிகப்பட்டு தீ அணைந்துவிட்டது போலவெ ஆனதும் எல்லாருக்கும் உள்ளூரக்கவலை . அய்யா அது என்றதும் அவர் அதெல்லாம் கவலைப்படாதீங்க தானாவே அந்நேரம் சரியாகிடும் என்றார். இது என்ன நம்மைப்போலவே கவனிக்காமல் விட்டுவிட்டு சப்பை கட்டு கட்டுகிறாரோ என்று எனக்குத்தோன்றியது. ஆனால் அவர் சொல்லி வாய் மூடவில்லை சடாரென்று தீ நாக்கு ஒன்று புகைக்கு நடுவில் எழுந்தது. ( நான் எதாவது வேலையை பாதியில் விட்டுட்டு சமாளிபிகேஷன் செய்யும்போதெல்லாம் இப்படி எதும் நடக்க மாட்டேங்கிறதே)

------------------------------------------------------------
டெஸ்க்டாப் ல என்ன படமா? ஏம்ப்பா ஆயில்யன் இதெல்லாம் டேக்கா... நானெல்லாம் அடிக்கடி மாத்தறது இல்லை.. எப்பவோ கொஞ்ச நாள் முன்ன ஒரு சாமிப்படம் வைத்திருந்தேன். அப்பறம் இந்த புல்வெளியும் வானமும் வச்சது தான் மாத்தவே இல்லை.

நடுவில் ஒரு சொந்தக்காரப் பையன் வந்தான். சரி எதோ மெயில் பார்க்கனும் என்றதால் கொடுத்தேன். அப்பறம் ஊருக்கு கிளம்பிப் போனதும் கணினியைத் திறந்தால் .. எப்போதோ ஒரு நண்பர் அனுப்பிய படத்தை டைல் செய்து டெஸ்க் டாப்பில் வைத்துவிட்டு போயிருக்கிறார். இதெல்லாம் என்ன வேண்டாத வேலை என்று ஒரு பக்கம் கோபமாக வந்தது. படத்தை மாற்றும் முறையையே மறந்திருந்தேன் . மீண்டும் தேடி மாற்றி வைத்தேன். என் மொபைலில் தான் பெண்ணின் போட்டோ இருக்கும். பையனின் குரலில் அழைக்கும்.
யாரு இந்த டேக்கை தொடர விரும்புறீங்க ..?
எப்படியோ சமாளிச்சு ஒரு போஸ்ட் இன்றைக்கு போட்டுவிட்டேன்.

October 15, 2008

குணமென்னும் குன்றேறி

வளவனுக்கு அய்யாசாமி ஐயாவைப்பார்த்து கடும்கோபம் வந்தது. வளவன் இந்த பள்ளியில் சேர்ந்த ஓரு வருடத்தில் அய்யாசாமியின் மதிப்பு அவனுக்கு தெரிந்திருந்திருந்தது.
'இந்த பள்ளிக்காக எத்தனை செய்திருப்பார் ஐயா' என்று வாயார ஒவ்வொருவரும் சொல்லும்போது அவரை தனக்கு ஒரு முன் மாதிரியாக கொள்ளவேண்டும் என்று தோன்றும்.

இந்த பள்ளியில் படித்து பேரும் புகழுமாய் இருப்பவர்கள் எல்லாமே ஐயாவின் அறிவுரையால் மேலே போனவர்கள் தான். இத்தனை ஏன் வருடா வருடம் பத்திரிகையில் பேர் வரும்படியாக பள்ளி மாணவர்கள் தேர்ச்சி இருப்பதற்கும் ஓரிருவர் மாநில அளவில் பதக்கம் வாங்குவதும் கூட ஐயாவால் தான். இருந்தும் அவரை ஒருவர் மதிக்காமல் கத்திவிட்டு போகிறார் வளவனுக்கு ரத்தம் கொதித்தது.

ஆனால் அய்யாசாமி முகமோ எப்போதும் போலவே பளபளப்பாய் இருந்தது. உடல் நிறத்தின் காரணமாய் சிறிதே சிரித்தாலும் பற்கள் பளிச்சிட்டது. அவரென்னவோ அவரை ஒருவர் நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரை செய்வதாய் சொல்லிப்போனது போல் மகிழ்ச்சியாய் இருப்பதாகத் தோன்றியது வளவனுக்கு.

அவனும் பொறுத்துப் பொறுத்துப்பார்த்தான். அவர் ஒரு முறை கூட வளவனிடம் வந்து போன ஆளைப்பற்றி குறையும் சொல்லவில்லை அதுபற்றி வருத்தம் இருந்ததாய் கோடும் காட்டவில்லை. இப்படியும் மனிதர் இருப்பாரா? இல்லை இவருக்கு அந்த நேரம் காது தான் கேட்காமல் போய்விட்டதா? அவன் மனம் ஆறவே இல்லை.

மெதுவாக அவர் இருந்த மேஜை பக்கம் சென்று வந்தான். இது ஒன்றும் முதல் முறையில்லை. காலையில் இருந்தே ஆறேழு முறை அவனும் அவரும் ஒருசேர எப்போதெல்லாம் வகுப்பு முடித்து ஆசிரியர் அறைக்கு வந்தார்களோ அப்போதெல்லாம் இப்படி ஒரு நடை நடப்பான். அய்யாசாமி ஒரு முறை நிமிர்ந்து பார்ப்பார் . எதையோ எடுக்க வந்ததாக போக்கு காட்டி திரும்பிவிடுவான்.

மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டு தைரியம் வரவழைத்தான். இம்முறை எப்படியும் கேட்டுவிடவேண்டும் , கேள்வி எல்லாம் தயார்.

"என்னதான் தவறு செய்தீங்க ? எதற்கு அமைதியாக இருக்கிறீங்க?
அடுத்தவர் தான் தவறுன்னு தெரிஞ்சப்பறம் கோபம் வருவது கூட தவறு என்று எந்த புத்தகத்தில் படிச்சீங்க? "
அவரரகில் சென்றதும் எல்லாம் மறந்து போய், "ஐயா! எனக்கு மனசே சரியில்லை வீட்டிற்கு கிளம்புகிறேன்" என்று முடித்தான்.

வளவா! என்ன அவசரம் பேசவேண்டும் உட்காரேன். நீ மனோகருடைய அப்பா வந்து கத்தியதை நினைச்சு வருத்தப்படறேன்னு நினைக்கிறேன். நான் ஏன் கோபப்படலேன்னும் கூட உனக்கு கேள்வி குடையுது சரியா?
"தெரிஞ்சு என்ன ஐயா புண்ணியம் .. அப்ப பேசாம விட்டுட்டீங்களே"

மனோகர் நல்லா படிக்கற பையன் தான்ப்பா .. முயற்சி எடுத்தா படிக்கலாம் அதற்குத்தான் அவனை நான் தனிமைப்படுத்தி வச்சேன் . அவனும் படிக்காம நாலு பேரை படிக்கவும் விடாம தடுத்தான்னு செய்தவிசயத்துக்கு இவர் வந்து கத்திட்டு போறார். வேற எதோ காரணமா நான் தண்டிக்கறதா நினைச்சுக்கிட்டார். போனவாரத்துக்கு இந்த வாரமே அவன் வீட்டுல செய்யவேண்டிய வேலையெல்லாம் நோட்டில் சரியா செய்திருக்கிறான். பாரேன் இவனே நாளை முதல் மதிப்பெண் எடுத்தாலும் ஆச்சரியமில்லை. என் கோபமெல்லாம் அவனை வழிப்படுத்த மட்டுமே..என்ன சரிதானே!

நீத்தார் பெருமை
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது.

* அறிவில் முழுமைப் பெற்ற குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஓரு கணம் கூட நிலைத்து நிற்காது.

அழைத்த புதுகைத்தென்றல் ... ஆரம்பிக்க காரணமான ஜீவ்ஸ் இருவருக்கும் நன்றிகள்.

நான் அழைப்பவர்கள்..

1. புகழன்
2. புதுவண்டு
3. செல்விஷங்கர்

விதிமுறை: திருக்குறளின் கருத்தும் கதையின் கருத்தும் ஒன்றாக இருக்கவேண்டும்.
இன்னும் மூன்று பேரையாவது அழைத்து எழுத வைக்க வேண்டும்.


( யாரங்கே இது என்ன 1973 ல் வந்த கதை மாதிரியே இருக்குன்னு சொல்வது ? அப்ப நானே பிறக்கலைப்பா..அந்த ட்ரெண்ட்ல இருக்கு கதை ஓட்டம் அவ்வளவு தான் )

October 14, 2008

சினிமா சினிமா .. ஆன்ஸர் ஷீட்

இதுவரை வந்த சினிமா கேள்விபதில் பதிவுகளைப்பார்க்கும் போது எனக்கு பிரமிப்பா இருக்கிறது. வெட்டி ஒரு படி மேலே போய் 6 மாசத்துலயே சினிமா தியேட்டரில் கல்யாணம் பேசி முடிச்சிருக்கறதெல்லாம் நினைவுப்படுத்திச் சொல்கிறார்.. எனக்கு ஞாபகமறதி நிறைய. அதனால் என்னால் நினைவுப்படுத்தி சொல்லமுடிவது மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.. அழைத்த ஆயில்யன் மற்றும் மை ப்ரண்டுக்கு நன்றி.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

ரொம்ப சின்ன வயதிலும் படம் பார்த்திருப்பேன் . எனக்கு நினைவுக்கு வருவது பாலும் பழமும்(ரீலீஸ் ஆன காலமில்லங்க பழய படம் தியேட்டருக்கு திரும்ப வருமில்ல ) படத்தைப் ரயிலடி ஆச்சியைக் கூட்டிக்கிட்டுப்போனதா ஞாபகம். சுந்தரம் தியேட்டரில் எனக்கு உட்கார இடமில்லாம , சின்னப்பிள்ளைதானே நின்னுக்கிட்டேப்பார்த்தமாதிரி கலங்கலாத் தெரியுது . பெரிய திரையில் படம் பார்ப்பது சிறுவயதில் பெரிய பிரமிப்பு தான். வீட்டிலும் வேறு சின்னத்திரை கிடையாது. ஒரு முறை எங்க பெரியப்பா என்னை தாய்வீடு படத்துக்கு கூட்டிச் சென்றார்களாம். எனக்கு ரஜினின்னா ரொம்ப பிடிக்கும். அதனால் எழுந்து சீட் மேல நின்னு கை தட்டினேனாம் .. ( என்ன கொடுமை இது மீரா ஜாஸ்மின் மாதிரி இருந்திருக்கேனே) வீட்டுக்கு வந்து ரஜினி மாதிரியே " புட்டு புட்டு வச்சிடுவேன்னு" ஆக்சனோட எல்லாரையும் மிரட்டினேனாம் . இன்னமும் எல்லாரும் அதை சொல்லி சிரிப்பது வழக்கம்.


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தில்லியில் தமிழ்ப்படங்கள் தமிழ்ச்சங்கத்தில் தான் பார்க்கவேண்டும் என்ற நிலை மாறி இப்போதெல்லாம் திரையரங்கிலும் வருகிறது. சமீபத்தில் பார்த்தது சிவாஜி ,தசாவதாரம்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
ஜெயங்கொண்டான் சிடியில் பார்த்தேன். படம் நல்லா இருந்தது. போன படத்தை விட ஹீரோ இந்த படத்துல நல்லா நடிச்சிருந்தார்ன்னு தோண்றியது. இயல்பான படமா இருந்தது போல இருந்தது. ஹீரோ எல்லாரையும் நல்லா அடிக்கிறார். ஆனா அதுல ரஜினி விஜய் மாதிரி அடிச்சா பறக்குறாங்கன்னு முதல்ல ஒரு இண்ட்ரோ காட்சி வராததால் .. இயல்பாவே அவன் கொஞ்சம் அடிக்கக்கூடிய ஆளுன்னு தோணும்படி இருந்தது என்று நினைக்கிறேன். தங்கச்சியா வந்த பெண் நல்லா நடிச்சிருக்கான்னு நினைச்சேன்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

கருத்தம்மா ... அந்த படத்தை கல்லூரித்தோழிகளுடன் பார்த்தேன். கருத்தம்மா அவள் அப்பாவை குளிப்பாட்டி விடும் காட்சியில் அவர் மனசில் பழசை நினைப்பதும் .. கருத்தம்மாவின் அக்கறையும் கண்ணீர் சிந்த வைத்தது. தாக்கிய என்பதற்கு, மனசில் இடம் பிடித்த படம் என்றால்.. மணல் கயிறு , தில்லு முல்லு , இன்று போய் நாளை வா..இப்பவும் இந்த படங்களெல்லாம் சின்னத்திரையில் எப்பொழுது வந்தாலும் உட்கார்ந்து ரசித்து சிரிப்பேன்.. கூடவே மனப்பாடமாய் எல்லா வசனமும் சொல்லிக்கொண்டே ..:)

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
தமிழ் சினிமா- அரசியலா? அப்படின்னா?

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?


6.தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
நிச்சயமாக .
புத்தகம் , நியூஸ் பேப்பரில் வரும் செய்திகளை படிப்பதுண்டு. ஆயில்யன் சொன்னதுபோல கிசுகிசுக்கள் யாரைக்குறிப்பிடுகிறது என்று மண்டை உடைய யோசிப்பது வழக்கம்.


7.தமிழ்ச்சினிமா இசை?
இந்த இசையைக் கேட்காமல் இப்பொழுதெல்லாம் ஒரு குழந்தை கூட வளருவதில்லை. முக்கியமாக இதான் முதல் இசை பயிற்சி. எப்பொழுதும் சினிமா இசையைக் கேட்பது என்பது ந்ம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து போயிருக்கிறதே.இன்னார் என்று இல்லாமல் எல்லா இசையமைப்பாளர் இசையும் ரசிப்பேன்.


8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

தொலைகாட்சி பெட்டி வாங்கிய காலத்திலிருந்தே பிறமொழி படம் பார்ப்பது என்பது பழக்கமாகிவிட்டது. பெங்காலி படங்கள் அந்த காலத்துப்படங்கள் பிடிக்கும். சத்யஜித்ரேயின் பதேர் பாஞ்சாலி பற்றிய "நிதர்சனத்தின் பதிவுகள் " என்கிற எஸ். ராமகிருஷ்ணனி ன் புத்தகத்தை அன்புடன் காட்சிக்கவிதைப்போட்டியின் போது பரிசாகக்கேட்டிருந்தேன். அது திரைப்படத்தைப்பற்றிய இன்னொரு கோணத்தை காட்டியது.
ரேபிட் ஃப்ரூப் பென்ஸ்,
பே இட் ஃபார்வேர்ட்,
நாட் ஒன் லெஸ் மனதை பாதித்த படங்கள்.
இது போல படங்கள் பார்க்க நேரிட்டால் அவ்வப்போது பதிவில் பகிர்ந்து கொள்வேன்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

எங்கம்மாவோட மாமா அந்த காலத்துல( ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்துல) கதை வசனகர்த்தாவா இருந்தாங்க.. எங்கமாமா சத்யராஜோட ப்ரண்ட் . பள்ளிக்கூடக்காலத்துல அவங்க சேர்ந்து சுத்தியிருப்பதா சொல்லி இருக்காங்க. அவர் கூடப்போய் போட்டோ எடுத்துட்டுவந்தாங்க. இப்பத்தான் நம்ம ப்ளாக்கர்ஸ் பலரும் சினிமாத்துறைக்குப்போறாங்க.. சினிமாத்துறை ஆளுங்க ப்ளாக்கர்ஸ் ஆகிறாங்க. :) தமிழ் சினிமாவுக்கு சினிமாவை பார்ப்பது தான் உதவின்னு நினைச்சு செய்துட்டுவரேன்.



10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எதிர்காலம் பற்றி சொல்ல நான் காலக்கடிகாரமா வச்சிருக்கேன். இருந்தாலும் நல்லா ப்ரகாசமா இருக்கும்ன்னு தான் நினைக்கிறேன். சினிமா வந்த காலத்திலிருந்து இப்ப வரைக்கும் வளர்ந்து கிட்டேயும் தான் இருக்கிறது. எங்கயாவது சறுக்கினா எங்கயாவது உயர்ந்து கிட்டு பேலன்ஸ்டா கொஞ்சமா வளர்ந்துகிட்டு இருக்கு.


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

இனிமே எப்பவுமே வராது என்ற நிலைதான் கவலைப்பட வைக்கும். ஓராண்டு என்பது பெரிய விசயம் இல்லை . இதுவரை வந்த எத்தனையோ படங்கள் பார்க்காமல் விட்டிருப்போம். ஆனால் தியேட்டர் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களைப் பொறுத்தவரையில் அது மிகக்கொடுமையானதாக இருக்கும்.

பின்.நவீனத்துவ கதாசிரியர் சென்ஷி
ஆங்கிலப்பேராசிரியை ராப்
என் குரு துளசி


இவர்களை கேள்விபதிலை தொடரும் படி கேட்டுக்கொள்கிறேன்.

October 9, 2008

கஞ்ஜக் தேவிகள்

நவராத்திரியின் அஷ்டமி தினத்தில் வடநாட்டில் பொதுவாக கஞ்ஜக் என்று கன்னிப்பெண்களை அழைத்து பூஜை செய்வது வழக்கம். வருடா வருடம் என் மகளும் அதற்கு செல்வது வழக்கம்.. இப்போது தான் ப்ளாக்கராகிவிட்டோமே அதைப்பற்றி பதிவிடவில்லை என்றால் அழகில்லையே? அதனால் தான் இந்த பதிவு. போனவருடமே ஏன் போடவில்லை என்று யாரங்கே முந்திரிக்கொட்டையாக கேட்பது? அதுக்கும் காரணம் இருக்கிறது. போனவருடம் புதுப்பதிவராகையால் பதிவுக்கு விசயப்பஞ்சமெல்லாம் வரலையே..

சிலர் நவமியிலும் செய்வாங்க சிலர் அடுத்த நாள் அஷ்டமிலயும் செய்வாங்க... அந்த நாட்களில் காலையில் வேகமாய் எழுந்து அழகா தயாராகி சின்னப்பெண்கள் எல்லாம் கலகலப்பாய் இருப்பாங்க. ஒவ்வொரு வீட்டிலும் 9 கன்னிப்பெண்களை அழைத்து பூஜை செய்யவேண்டும் என்பதால் முன்பே புக் செய்துவிடுவார்கள்.


நான் நேரில் பார்த்ததில்லை ஆனால் என் மகள் சொன்னதை வைத்து எழுதுகிறேன். முதலில் பெண்களை உட்காரவைத்து கால்களை அவ்வீட்டுப்பெண்கள் கழுவி விடுவார்கள். பிறகு குங்குமத்தில் தண்ணீர் விட்டு கலந்த கரைசலில் அரிசி யை தொட்டு நெற்றியில் பொட்டு வைத்து இக்கன்னிப்பெண்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொள்வார்கள். கைகளில் சிகப்பு கயிறு கட்டி விடுவார்கள். கன்னிப்பெண்கள் காலில் விழுந்தவர்களுக்கு அவ்வாறே குங்குமம் வைத்துவிடுவார்கள்.


பூரி அல்வா, கருப்பு கொண்டைக்கடலை சுண்டல் வகைகளை ஒரு தட்டில் வைத்து பிரசாதமாக தருவார்கள். ( அன்னைக்கெல்லாம் நான் சமைக்கவே மாட்டேன் ஏன்னா இதே தான் அதிகம் சேர்ந்துடுமே) சிலர் அந்த தட்டும் புதிதாக தருவார்கள். சிலர் புது தோடு ..காதணி .. கர்சீப் பத்து ரூபாய் அதோடு வைப்பார்கள்.

என் வீட்டுவேலைக்காரம்மா ஒரு படம் பார்த்தாங்களாமா.. அதில் ஒரு பெண்ணுக்கு குழந்தை இல்லாத குறை தீர கன்னிப்பெண்களை அழைத்து பூஜை செய்யும்படி பரிகாரம் சொல்கிறார்கள். ஆனால் குழந்தை இல்லாத பெண் வீட்டிற்கு யாரும் குழந்தைகளை அனுப்பவில்லையாம். இதனால் மாதா தன் சகோதரிகளான மற்ற மாதாக்களை அழைத்துக்கொண்டு வந்ததாக ஐதீகம் . எனவே தான் கன்னிப்பெண்களை அழைத்து பூஜை என்றார்.

கீழ் வீட்டு ஆண்ட்டியிடம் இதற்கு கதை எதுவும் இருக்கிறதா ? என்றேன். இத்தனை நாள் இல்லாத சந்தேகம் ஏனடா வந்தது இவளுக்கு என்று சந்தேகமாய்ப்பார்த்தார்கள். அப்படி இல்லை ஆண்ட்டி நான் ஒரு ப்ளாக்கராக்கும் இணையத்தில் தேடியும் வி்வரமாய் கதை ஒன்றும் தெரியவில்லை என்றேன்.

எனக்குத்தெரிந்து கதையெல்லாம் இல்லை. நவராத்திரி நாயகிகள் தான் அந்த ஒன்பது கன்னியரும் அவர்களை கடைசி நாள் அழைத்து நவராத்திரி விரதத்தை முடிப்பது வழக்கம் என்றார். இங்கே நவராத்திரி முழுவது வெங்காயம் பூண்டு இல்லாமல் சாப்பிடுவது எல்லாருடைய வழக்கம். உணவகங்களில் கூட இதற்க்காக தனியாக வகைகள் செய்வார்கள்.
முழு நேரமும் சிலர் உருளைக்கிழங்கை வேக வைத்து அதை மட்டுமே உணவாகக் கொள்பவரும் உண்டு.இன்னமும் சிலரிடம் பேட்டி கண்டு அடுத்த வருடம் இன்னும் விவரமா பதிவு போடலாமென்று தோண்றுகிறது.

இங்கே குழந்தைகள் பெரியவர்களைக் கண்டால் காலில் விழும் பழக்கம் உண்டு என்று சொல்லி இருக்கிறேன் அல்லவா? ( வளைந்து காலைத்தொடுவது போல் முட்டிவரை கை கொண்டுபோவது தான்) அதைப்போல பழக்க தோஷத்தில் குழந்தைகள் செய்தால் பெரியவர்கள் .. பயந்து ஒதுங்கி இன்று நீ கஞ்சக் தேவி நீ காலில் விழக்கூடாது நாங்கள் தான் விழ வேண்டும் என்று சொல்லி வணங்கி செல்வார்கள்.

ஆனால் இதில் பெரிய சோகம் என்னவென்றால் கஞ்சக் தேவி என்று பெண் குழந்தைகளை வணங்கும் வட இந்தியாவில் தான் பெண் குழந்தையா என்று பார்த்து அழிக்கும் வழக்கமும் வரதட்சிணை கொலைகளும் அதிக அளவில் இருக்கிறது.

October 8, 2008

எங்கள் வீட்டு கொலு -2008



ப்ளாக்கர் படத்தை ஏற்ற சோதித்துவிட்டது அதனால் தாமதமாக கொலுபடங்கள்..புத்தக அலமாரியில் இருந்த புத்தகங்களை எல்லாம் படிகளாக்கி கொலுப்படிகள். (புத்தக அலமாரி காலியாக இருப்பதை கவனிக்கவும்.)


இது முதல் படி திருச்செந்தூர் முருகனின் வேலும் சேவல்கொடியும் .. இரண்டு பக்கமும் சாய்ந்து உட்கார்ந்த ஒய்யார பிள்ளையார்.. ஒன்றில் படகில் அமர்ந்திருக்கிறார். வெளிச்சம் போதவில்லை. கிருஷ்ணர் மற்றும் துர்க்கை. நடுவில் கதகளி பொம்மை. ( குருவாயூர்)


இரண்டாம் படியும் மூன்றாம் படியும் முழுக்க முழுக்க விநாயகர் கொலு . வெட்டிவேர் பிள்ளையார் , ப்ளாஸ்டிக் பிள்ளையார் , கண்ணாடி பிள்ளையார் , வெள்ளிப்பிள்ளையார், மண், மெட்டல், சைனா களிமண் எல்லா வகையிலும் .




நான்காம் படி சைனா களிமண் பொம்மைகள், ஒரு நியூயார்க் ஒளிரும் கண்ணாடி
சதுரம், ஒன்றுக்குள் ஒன்று போடும் யானை பொம்மை . (முதல் நாள் 5 யானையாக இருந்தது .. சபரி எல்லாவற்றையும் ஒன்றுக்குள் ஒன்று போட்டு வைத்துவிட்டான் அடுத்த நாள் )

5 படி தக்ஷிண சித்ராவில் வாங்கிய திரிகை , அம்மி, ஆட்டுக்கல், உரல், முறம்.. ஒரு ஜெய்ப்பூர் பித்தளை அடிபம்ப், மரப்பாச்சி , சின்ன ஜெயிண்ட் வீல்
DSC00096
இது அவசர செட்டப்... தில்லியின் ஒரு பகுதியின் மாடல்..
யமுனா ( நீலக்கலர் பேப்பர்) மேல மெட்ரோ போகுது பார்த்துக்குங்க
DSC00093

சபரி'ஸ் ஃ பேஷன்


ஒரு மால்.. குழந்தைகளுக்கு பிடித்த படங்கள் ஓடுகிறது. மை ஃப்ரண்ட் கணேஷா, ஓம் சாந்தி ஓம். செக்யூரிட்டி நிக்கிறார் வாசலில்.
DSC00092

மேக்ஸ் ஹாஸ்பிட்டல்..ஆம்புலன்ஸ்
DSC00095

மலைமந்திர்


கானா கேட்டப்பறம் தான் சுண்டலை விட்டது ஞாபகம் வந்தது ப்ளாக்கர் சொதப்பியதுல இந்த படம் எப்படியோ விட்டுப்போச்சு.. இந்தா வாங்கிக்குங்க எல்லாரும் .. அங்க யாரு அது இந்த பக்கம் ஒரு கை அந்த பக்கம் ஒரு கை நீட்டறது ? :)