February 2, 2009

ஒன்றிப்படிங்க விளங்கும்....

முல்லை என்னை வழக்கொழிந்த தமிழ் சொல் சிலவற்றை எழுதுமாறு தொடருக்கு அழைத்திருக்கிறார்கள்.. உண்மையில் நம்மையும் அறியாமல் பல வார்த்தைகளை மறந்துவிட்டிருக்கிறோம்.. மகனிடம் தமிழில் பேசு என்று வலியுறுத்தும் என்னிடம் அவன் திரும்பி கேட்கும் போது தான் நான் ஆங்கிலமே கலந்து எத்தனை பொருட்களைக் குறிப்பிடுகிறேன் என்று உணர்ந்தேன்..நிறங்களை தமிழில் குறிப்பிடுவது குறைந்துவிட்டது. சின்னப்பிள்ளையா இருந்தப்பல்லாம் பச்ச வாளியில் தண்ணி பிடிச்சு வைச்சிருக்கேன் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தவள் தான் எப்ப மாறிவிட்டேன்னு தெரியவே இல்லாமல்..க்ரீன் பக்கெட் நிறைய தண்ணீர் பிடிச்சுவைன்னு சொல்றேன். இப்ப ஆங்கில வார்த்தைகலப்பும் இந்தி வார்த்தைக்கலப்பும் எக்கசக்கமாகிவிட்டது.

எங்க ஆச்சி நாங்க சின்னப்பிள்ளையா இருக்கும் போது குளிப்பாட்டி விடுவாங்க.. அப்போதெல்லாம் முதுகுப்பக்கம் சோப்பு போட்டுவிடனும்ன்னு " பொறத்தக்காட்டுன்னு" சொல்வாங்க.. புறம் என்றால் பின்புறம்ன்னு அர்த்தம்பட சொல்வாங்கன்னு நினைக்கிறேன். அதை அவங்க சொல்லும்போது அழகா இருக்கும்..

என் மாமியார் சமையலுக்கு அளவு சொல்லும்போது அரைப்படி காப்படி அரைக்காப்படி என்று கணக்குகளை சொல்வாங்க.. எனக்கு அவை குழப்பத்தை உண்டு செய்யும்..இப்ப கொஞ்சம் புரிகிறது. அம்மா உழக்கால்( ஆழாக்கு) அளப்பதால் அரை உழக்கு கால் உழக்கு என்றும் சொல்வாங்க.. இப்ப பலரும் டம்ளர் கணக்கு ஒரு டம்ளர் இரண்டு டம்ளர்ன்னு சொல்வதைக் கேட்டிருக்கேன்.

மேற்கொண்டு என்ன வார்த்தை என்று யோசிச்சிட்டே இருந்தேன் அப்பத்தான் முல்லையே ஒரு யோசனை சொன்னாங்க.. உடனே நான் .." நல்ல ஐடியான்னு " சொன்னேன்.. பாருங்க நான் நல்ல யோசனைன்னு சொல்லவே இல்லையே.. :)கிழமைகளை நாம தமிழில் சொல்வதும் குறைந்தே வருகிறது என்று தோன்றுகிறது. இவையெல்லாமும் ஒரு நாள் வழக்கொழிந்த வரிசையில் வந்துவிடுமோ என்று தோன்றுகிறது.

படிக்கும் போது சரியாப் படிக்கலைன்னா.. நல்லா ஒன்றிப் படிச்சால்ல நீ எங்க பாட்டுக்கேட்டுக்கிட்டு ... வாய்பாத்துக்கிட்டு படிச்சான்னு திட்டுவாங்க.. அந்த ஒன்றி படிக்கிறது இப்பல்லாம் நாம் பயன்படுத்துவது இல்லைன்னு நினைக்கிறேன்..

என்ன முழிக்கிற... சொன்னது விளங்குச்சா இல்லையான்னு கணவர் கேப்பாங்க.. விளங்கிக்கொள்ளுகிற என்ற வகையில் விளங்கிச்சா என்பது நல்ல சொல் தானே... நான் யாரையும் கேட்பது புரிஞ்சுதான்னு தான்.. இப்படியாக என் ஞாபகத்துக்கு வந்த சில வார்த்தைகளை இங்கே தந்திருக்கேன்.. இங்கே யாரோ பதிவர் எல்லோரையும் ஞாபகத்தை நியாபகம்ன்னு சொல்லாதீங்கன்னு சொல்லிட்டிருந்தாங்க அது யாருன்னு இப்ப ஞாபகம் இல்லைங்க.. :)

பி.கு .. இதெல்லாம் வழக்கொழிந்தவைகளே இல்லை நீங்க தான் பயன்படுத்தலைன்னு சொல்லாதீங்க.. அப்படி ஆகிடுச்சோன்னு நினைச்சுக்கிட்டுப் போட்டிருக்கேன்.

நான் அழைக்க விரும்புவது....

ரொம்ப நாளா பதிவு போடாத கோபிநாத்,
அப்பரம் அயன்கார்த்தி
துளசி]
ஊடால பின்னூட்டப்பதிவு போட்ட அபி அப்பாவையும் பதிவிட அழைக்கிறேன்..
அவர் வித்தியாசமா ஒரு பதிவு போடுவதாக சொல்லி இருக்கிறார்.

30 comments:

நட்புடன் ஜமால் said...

\\"ஒன்றிப்படிங்க விளங்கும்...."\\

படிச்சிடு சொல்றேன்.

நட்புடன் ஜமால் said...

அழகான வார்த்தைகள்.

ஒன்றிப்-படி

விளங்குச்சா

இன்னும் உபயோகிக்கிறோம்.

இருப்பினும் நீங்கள் ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகா பின் குறிப்பு சேர்த்துட்டுப்ப்பார்த்தேன் ஜமால் நீங்களும் சொல்லி இருக்கீங்க.. :))

Anonymous said...

இது ஒரு நல்ல முயற்சியா இருக்கே... மக்கள் தொலைக்காட்சில இதுமாதிரி தமிழ் வார்த்தை விளையாட்டு ஒன்று நடக்கும். எங்க வீட்ல அதை பார்க்கவே முடியாது. அவங்களும் (நிகழ்ச்சியில்) அதிகம் வடசொல் கலந்தே தான் பேசுவாங்க... எப்படியோ ஆனா நீங்க வழக்கொழிந்திடுமோன்னு பயந்தே எழுதி இருக்கீங்களே..! இது மாதிரி எவ்வளவு வார்த்தைகள் இருக்கு உதாரணத்துக்கு 'வணக்கம்' என்கிற வார்த்தையை ஒரு நாளைக்கு எத்தனை தடவை பயன் படுத்துறோம். கைபேசில கூட ஹலோ தானே... எங்க வீட்ல இன்னும் அடுத்த தலைமுறை வராததால எங்க தலைமுறைல மறந்து போனதைப் பற்றி விரைவில் வருகிறேன்.

சந்தனமுல்லை said...

ஓ..பேசிக்கிட்டிருந்ததையே போட்டுட்டீங்களா...யோசனை-ன்னு சொல்லலை..அப்போ அதுவும் ஒரு வழக்கொழிந்த சொல், அதையும் லிஸ்ட்-லே சேர்த்துடுங்கன்னு நான் சொன்னதை..!! ஆனா, இப்போதான் தோணுது..யோச்னைன்றது தமிழ்ச் சொல்தானான்னு..கருத்து-ன்னும் சொல்லலாம் இல்லையா!!

//பி.கு .. இதெல்லாம் வழக்கொழிந்தவைகளே இல்லை நீங்க தான் பயன்படுத்தலைன்னு சொல்லாதீங்க.. அப்படி ஆகிடுச்சோன்னு நினைச்சுக்கிட்டுப் போட்டிருக்கேன்.//

:-)) அதான் ஜமால் சொல்லிட்டாரே!!

தமிழ் said...

பல நல்ல சொற்களைத் தெரிந்துக் கொள்ள உதவுகிறது/ நினைவுப் படுத்திக் கொள்ளவும் தான்
இந்த தொடர் பதிவின் மூலம்

வாழ்த்துகள்

அபி அப்பா said...

"ஊடால பூர்ராண்டா"ன்னு சினிமா தியேட்டர் கவுண்டர்ல கேட்டிருப்பீங்க, அடுத்து நாம நெல் முற்றியதும் அறுவடைக்கு முன்னே "பாம்பும் நோவாம கம்பும் நோவாம போட்டா என்ன" என பாட்டி ஒரு தடவை கேட்டாங்க!

அதுக்கு என்ன அர்த்தம்ன்னா "ஊடு பயிர்" அதாவது உளுந்து, பயறு அந்த நேரத்திலே விதைத்தால் அது முளைத்து வரும் முன்னமே கதிர் அறுத்து விடலாம். அதன் பின்னே அந்த விவசாயி கால் பட்டு அழுந்தி கிடக்கும் அந்த விதைகள் அந்த அடிப்பகுதி வைக்கோலை இயற்கை உரமாக கொண்டு மேலே வரும்.

இப்படி செய்வதால், தண்ணீர் மிச்சம், உரம் மிச்சம், தவிர நெல்லுக்கும் ஒரு பிரச்சனையும் வராது, அந்த ஊடு பயிருக்கும் நல்லது.

அதான் பாம்புக்கும்"நோகாமல்" அதாவது வலிக்காமல், கம்புக்கும் நோகாமல்"ன்னு சொன்னாங்க பாட்டி!

ஊடால போவதால் ஊடுபயிர்! அது தான் தியேட்டர் வாசல்ல "ஊடால பூர்ரான்"ன்னு ஆகி போச்சு!

நோகாம - வலிக்காம
ஊடு,ஊடால - இடை, இடையே

உஷ் அப்பாடா மூச்சு வாங்குது!"அப்பால" வர்ரேன்!

அப்பால - பிறகு

ராமலக்ஷ்மி said...

’பொறவாசல்’ என்போம் பின்வாசலை:)!
’ஒன்றிப் படி’ இன்றும் உண்டு.
’அப்புரம்...’ அப்படின்னு சுவாரஸ்யமா இழுத்தா ‘அப்புரம் வந்தது சப்பரம், கதையா சொல்றேன். போய் வேலையைப் பார்’னுட்டிடுவாங்க:))!

அமுதா said...

"ஒன்றிப் படி, விளங்குச்சா, பொறத்தகாட்டு"... ம் இதெல்லாம் என் சிறுவயதில் வழக்கில் இருந்து இப்பொழுது வழக்கில் குறைந்து விட்ட சொற்கள். இன்னும் எனக்கு "அரைப்படி காப்படி அரைக்காப்படி" குழப்பம் தான். ஆழாக்கு தான் புரியும்

எம்.எம்.அப்துல்லா said...

வெளங்குச்சு :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மக்கள் தொலைக்காட்சி நிறைய தமிழ் சேவை செய்யறாங்க அயன்கார்த்தி குழந்தைகளுக்கா பட்டாம்பூச்சியில் ஒரு பொண்ணு அழகா குழந்தைகளை தமிழில் பேசவைக்கிறாங்க..:)சீக்கிரமே பதிவு போடுங்க..
---------------------
முல்லை.. நான் எதுக்கும் பின் குறிப்பு போட்டிருவொம்ன்னு எடிட் செய்துகொண்டிருந்தப்ப தான் ஜமால் வந்து பின்னூட்டம் போட்டுட்டார்.. நான் எழுதிட்டு இங்க திரும்பினா கமெண்ட் விழுந்திருக்கு..
:)
யோசனையை பத்தி யோசிச்சு குழம்பி தான் அதுக்கு ஹைலைட் போடலை..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

திகழ்மிளிர் நன்றிங்க. ..:)
----------------------------
ஊடால நீங்க ஒரு பதிவையே பின்னூட்டமா போட்டுட்டீங்களே அபி அப்பா.. :)
------------------------

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பொறவாசலும் எங்க ஆச்சி சொல்வாங்க.. ராமலக்ஷ்மி.. நாம ஒரு ஊருக்காரங்க ஆச்சே (நெல்லை) அதனால் நம்ம வழக்குகள் ஒன்றாக இருந்திருக்கு.. அப்பரம் சப்பரம் கூட உண்டுப்பா இப்பயும்.. :)
-----------------------
அமுதா.. ஒவ்வொரு தடவையும் அதை விளக்கம் கேட்டுட்டு மறந்துடுவேன்.. சில சமயம் கண்ணளவு தான்ம்மான்னு மாமியார் சொன்னா.. இது நல்லாருக்கே அந்த அளவே போட்டுக்கலாம் ன்னு சொல்லிடுவேன்.. :)
----------------
அப்துல்லா .. விளங்கிடுச்சா.. அப்ப ஒன்றிப்படிச்சீட்டீங்க போல.. :) நன்றி.

ராமலக்ஷ்மி said...

@ அமுதா

"அரைப்படி காப்படி அரைக்காப்படி" எல்லாமே எனக்கு ‘அத்துப்படி’:)!
’மானிப்படி’[அரைக்காப்படியிலும் பாதி] தெரியுமா? ’ஆழாக்கு’ சொல்வதில்லை.
’உழக்கு’தான் எங்க வழக்கு:)!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகா அருமை ராமலக்ஷ்மி உங்க முத்திரை பின்னூட்டம் பெற்றேன் ...

ஆமா மானிப்படின்னு ஆரம்பிச்சா நான் அத்தை ஏனிப்படின்னு சொல்லிட்டு உழக்கை அவங்க கையிலேயே குடுத்துடுவேன்..

சகாதேவன் said...

என் பேத்தி அன்று 'மணி என்ன தாத்தா' என்று கேட்டாள். நான் ஒம்போது என்று சொன்னேன். ஒம்போதா அப்படின்னான்னு கேட்டாள். 'நாளை திங்கட்கிழமை. ஹோம் ஒர்க் எல்லாம் செய்தாச்சா?' என்று கேட்டேன். அதற்கு அவள் நாளை Monday தாத்தா! என்றாள்.
இன்னும் கொஞ்ச நாளில் குழந்தைகளுக்கு Spoken Tamil தனியாக கற்றுத் தரவேண்டும் என நினைக்கிறேன்

அமுதா said...

ராமலக்ஷ்மி said...
@ அமுதா

"அரைப்படி காப்படி அரைக்காப்படி" எல்லாமே எனக்கு ‘அத்துப்படி’:)!
’மானிப்படி’[அரைக்காப்படியிலும் பாதி] தெரியுமா? ’ஆழாக்கு’ சொல்வதில்லை.
’உழக்கு’தான் எங்க வழக்கு:)!

ஆமாமாம். இன்னும் எங்க அம்மா மானிப்படி அப்படினு ஆரம்பிச்சா ஆழாக்கு கணக்கு தான் வாங்குவேன். உழக்கும் கேட்டிருக்கேன். "உழக்கு மாதிரி உட்கார்த்துட்டு இருக்காதே..." அப்படீனு :-)) எனக்கு உழக்கு உலக்கையோட குழம்பிடும் :-))

யட்சன்... said...

நல்ல முயற்சி...

அவன், இவன் மாதிரி ’உவன்’...னு ஒரு வார்த்தை இருக்குங்றது எந்தனை பேருக்குத் தெரியும்...

pudugaithendral said...

எனக்கும் இந்த காலேரெக்கால், முக்கால் படி எல்லாம் குழப்பம் தான்.

நான் உங்க பதிவை ஒன்றிப்படிச்சேன் விளங்கிடிச்சு.பாராட்டுக்கள்

நாகை சிவா said...

விளங்குது... :)

பழமைபேசி said...

Great! Thank you very much!!

Poornima Saravana kumar said...

நல்லாவே ஒன்றிப் படிச்சேன்.. நல்லா பிரிஞ்சுது ஹி ஹி நல்லா புருஞ்சுது:)

கோபிநாத் said...

நீங்கள் சொல்லிய படி ஒன்றிப் படிச்சதனால நன்றாக விளங்குச்சி. மறந்து போன பழை வார்த்தைகள் எல்லாம் ஞாபகத்துக்கு வர வச்சிட்டிங்க நன்றி ;)

அழைப்புக்கும் நன்றி ;)

மங்கை said...

நன்றி, வணக்கம், மண்ணிக்கவும்.. இந்த வார்த்தைகளையே மறந்துட்டாங்க..என்னத்தை சொல்ல

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சகாதேவன் ... வீட்டில் தமிழ் பேசிக்கொண்டிருக்கிறோமாதலால்.. அந்த நிலை வராது என்று நம்புவோம்.. :)
----------------------------
@அமுதா .. :)
----------------------------
யட்சன்... எங்க பதிவெல்லாம் படிக்கிறீங்களா.. ?? :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

புதுகைத்தென்றல், நாகை சிவா, பழமைபேசி.. நன்றி :)

-------------
பூர்ணிமா, கோபிநாத், மங்கை உங்களுக்கும் என் நன்றிகள்.

Anonymous said...

காலரைக்கா, அரையரைக்கா, முக்காலரைக்கா - அரிசி போட்டுக்கோ, ஒரு வீசம் உளுந்து போடு என்று எங்க ஆச்சி எங்கம்மாவிடம் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.

இன்னும் நிறைய உங்களின் நினைவடுக்குகளிலிருந்து மீட்டு எழுதியிருக்கலாம்.

rapp said...

//என் மாமியார் சமையலுக்கு அளவு சொல்லும்போது அரைப்படி காப்படி அரைக்காப்படி என்று கணக்குகளை சொல்வாங்க.. எனக்கு அவை குழப்பத்தை உண்டு செய்யும்//

அதான, உங்கள சமைக்கச் சொன்னா குழப்பம்தான இருக்கும் :):):)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வெயிலான் நல்லா சொன்னீங்க.. எனக்கு நினைவு அடுக்குன்னு ஒன்னு இல்லவே இல்லை.இருந்தால்ல அதை தூசி தட்டி எடுக்கலாம்..மறதி கேஸு நான்.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சரிதான் ராப் அவங்களே சமைச்சு சாப்பிட சொல்லி இருந்தா .. எத்தனை சாப்பிடனும்ன்னு மட்டும் குழம்பி இருப்பேன்..