April 6, 2011

மந்திரக்கோல்

பெண் எழுத்து என்கிற தலைப்பில் நம்ம ஆசியா கூப்பிட்டிருக்காங்க..ரொம்ப நாட்களாக பிள்ளைகளின் பரிட்சையும் விடுமுறையும் என்று நான் எதையும் எழுத இயலவில்லை. பாருங்க இப்படி இருக்கு பெண் எழுத்து. பலவிதமான கடமைகளுக்கு நடுவில் பெண்கள் விசயங்களைப் பகிர்ந்துகொள்வதை கொஞ்சம் தள்ளிப்போடுவதை வழக்கமாக்கியே வைத்திருக்கிறோம். அப்படியே பகிர்ந்துகொண்டாலும் அதன் தொடர்விளைவுகளைப் பற்றியும் யோசிக்கிறோம். சிலர் பரீட்சார்த்தங்களில் ஈடுபடுகிறார்கள். முயற்சிக்கிறார்கள் . சிலர் வெற்றி பெறுகிறார்கள். எழுத்தைப் பெண் எழுத்தென்று பிரிக்கவேண்டிய அவசியமில்லை என்று கூறுவது ஒரு புறமிருந்தாலும் அதன் அவசியம் என்று ஒன்று இருக்கிறது.

உலகம் முழுதும் ஆண்களைப்பற்றிய கருத்துக்கள் ஒன்று விடாமல் ஆண்களால் எழுதப்பட்டுவிட்டதோடு அவர்களே பெண் மனம் என்ன சிந்திக்கும் அவளுக்கான துயரங்கள் என்ன? அதற்கான தீர்வுகள் என்ன என்பதையும் எழுதி வைத்திருக்கிறார்கள். எந்த ஒரு விசயத்திற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. பல வருடங்களாக நாம் அந்த ஒரு பக்கத்தையே ஏன் பார்க்கவேண்டும் மற்றோரு பக்கத்தையும் பார்க்கலாமே.. அதற்காகவேனும் பெண்களின் எழுத்து என்று ஒன்று நிறைய வரவேண்டியே இருக்கின்றது. இன்னமும் கூட போதுமன உயரத்தை அந்த எழுத்து அடையாமல் இருப்பதற்கு அவர்களுடைய தளைகளே காரணம். அவை அன்பான தளைகளாய் இருப்பதால் கொஞ்சம் கடினம் தானே.

பெண் எழுத்து என்ற உடன் சமீபமாய் படித்த, நினைவுக்கு வந்த சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன் .

நினைவுக்குறிப்பாக அக்கதையைப்பற்றி சிறிதாக எழுதி வைத்திருக்கிறேன் இங்கே சசி தேஷ்பாண்டேயின் “என் அன்பான சாரதி” வயதான காலத்தில் கணவனை இழந்த தாய்க்கும்சிறுவயதில் கணவனை இழந்த மகளுக்கும் இடையில் எழும் பிரச்சனையைக் குறிப்பிடும் கதை.

-----------

The white masai என்று ஒரு படம் பார்த்தேன் . ஒரு ஜெர்மனியப்பெண் பாய் ப்ரண்டுடன் கென்யாவுக்கு லீவுக்கு சென்றவள் அங்குள்ள பழங்குடியன் ஒருவன் மேல் கொண்ட ஈடுபாட்டால் அங்கேயே தங்கிவிடுகிறாள். அது அந்த பெண் எழுதிய உண்மைக்கதையைக் கொண்டு எடுக்கப்பட்டது என்பதால் அதனைப்பற்றி இணையத்தில் தேடியபோது அதன் பின் அவர் மேலும் இரண்டு புத்தகங்களூம் போட்டிருப்பதாகத் தெரிந்தது. நேர்மறை எதிர்மறை கருத்துக்கள், அப்புத்தகத்தை விட அந்த பெண்ணின் குணத்தைப்பற்றிய அலசல்கள் தான் அதிகம் கிடைத்தது. வாழ்க்கையில் சடாரென்று முடிவெடுப்பது பற்றி பலருக்கும் பல கேள்விகள் இருந்தது. ஃபேரிடேல்களைப் படித்து வளர்ந்தவர்களுக்கு கூட வாழ்க்கையில் அதுபோன்ற சந்தர்ப்பங்களை நம்பமுடிவதில்லை. மேலும் கலாச்சாரத்தில் எதிரெதிர் துருவங்களைச்சேர்ந்ததாலேயே அவளால் அங்கு தொடர்ந்து வசிக்கமுடியவில்லை என்று குறிப்பிட்டு அலசிக்கொண்டிருந்தார்கள். கலாச்சாரத்தை விடுவோம்.. ஒன்றுமில்லை ஒரே கலாச்சாரமாக இருந்தாலும் கூடவே பெண்கள் ஒருகுடும்பத்திலிருந்து மற்றொன்றுக்கு வாழ்க்கைப்படும்போது வருகின்ற ப்ரச்சனைக்கும் இதற்கும் எனக்கு வித்தியாசமே தெரியவில்லை.

பதினைந்து வருடத்திற்கு பின் பழங்குடி கிராமத்தை மகளுக்கு காண்பிப்பதற்காக (புத்தகத்துகாகவும் இருக்கலாம்) சென்று பார்த்தபோது அவருடைய மூன்றாம் புத்தகத்தில் மூன்று மனைவிகளில் இவரை முதல்மனைவியாய் இன்றும் மதிப்பதாக குறிப்பிட்டிருக்கிறார் . இதுவும் நமக்கு ஆச்சரியத்தைக்கொடுக்காது . ஏனெனில் மனைவிகள் எத்தனை இருந்தாலும் தலைவன் உயர்ந்தவன். தலைவிகளின் வாழ்க்கையின் பின்புலத்தை அக்குவேறு ஆணிவேறாக அலசுவது தான் பண்பாடு..

உலகின் எந்த மூலையில் எந்த கலாச்சாரத்தைச்சேர்ந்தவனை அவள் கல்யாணம் செய்திருந்தாலும் ஈகோ , சந்தேகம் போன்ற ப்ரச்சனைகள் வர வாய்ப்புக்கள் இல்லையா என்ன? ஒரு பெண் இந்த புத்தகத்தை விமானத்தில் படித்ததால் ஜன்னல் வழி தூக்கிப் போடமுடியவில்லை என்றார். இந்த மாதிரியான எண்ணங்கள் எல்லாம் இதுவரை ஆண்களால் மட்டுமே பெண்களைப்பற்றி எழுதப்பட்டதாலே தான் இருக்கவேண்டும்.

--------------------
திரைப்பாடல்களில் கூட பல வருடங்களாக பெண் மன ஆசைகளை ஆண்களே எழுதி வந்ததற்கும் தாமரை வந்த பின் பெண்ணின் கோணத்தில் எழுதப்பட்ட பாடல்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தைக் காணலாம். இன்னும் சொன்னால் ஆண்கள் காதல் வயப்பட்டு பாடும் சினிமாப்பாடல்கள் கூட  தாமரை எனும் பெண்ணின் கவிதையின் மூலம் இன்னும் அழகாகத் தெரிவதாக நான் உணர்கிறேன்.
------------------------
ஆங்கில பதிவுகளில் நான் தொடரும் ரோசாரியாவின்  பதிவில் பெண்களின் அன்றைய நிலை ஒரு இடத்தில் சுட்டப்பட்டபோது வயது வித்தியாசமில்லாமல் பலரும் அது இன்றும் தொடர்வதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். The more things change, the more they remain the same...
----------------------------
சமீபத்தில் மீட்டுருவாக்கக்கதைகள் , புராணக்கதையில் இருக்கும் பெண்களின் நிலையை வேறு பார்வையில் ( வேறென்ன பெண்ணுக்காக யோசிக்கும் பார்வையில் தான் ) எழுதப்பட்டகதைகள் பற்றிய நிகழ்வொன்றினைப்பற்றி சுசீலாம்மா சொன்னார்கள். ஆனால் குழந்தைகளின் விடுமுறையால் என்னால் அதனைச் சென்றுபார்க்க முடியவில்லை. எவ்வளவோ காலங்களாக பெண்கள் குறைவாகவே எழுதுவதால் ஆண்களால் கட்டமைக்கப்பட்ட சமூக நீதிகளால், எப்பொழுதாவது எழுத்தென்னும் கூர்வாட்களுடன் புறப்பட்டால் அது பெண் எழுத்தென்றே கூறி சிறுமைப்படுத்தப்படுவதும் நடந்துகொண்டே இருக்கிறது.
-------------------------
பலகாலமாக நாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம் . பள்ளிப்பிள்ளைகளின் புத்தங்களில் அப்பா பேப்பர் படிக்கிறார். அம்மா சமைக்கிறாள் என்று இருக்கிறதே என்று. ஆனால் தற்போது மகனின் பள்ளிப்புத்தகத்தில் அம்மா புத்தகம் படிக்கிறாள். அப்பா செடிக்கு தண்ணீர் ஊற்றுகிறார். அம்மாவும் அப்பாவும் சமைக்கிறார்கள் என்று நான் அவனுக்கு சொல்லிக்கொடுக்கும்போது அட என்றபடி புத்தகத்தை வடிவமைத்தவர்களைத் தேடி முன்பக்கம் சென்றபோது அது பள்ளியின் தலைமை ஆசிரியையும் மற்றும் இரு ஆசிரியைகளும் என்று அறிந்தபோது பெண்களின் கைகளுக்கு ஒரு மந்திரக்கோல் கிடைத்தால் இப்படியே எல்லா சரியான இடங்களில் சரியானபடி பொருந்திப்போய்விடுமோ என்று தோன்றுகிறது.




31 comments:

Asiya Omar said...

பல தரப்பட்ட பெண் எழுத்துக்களை ஆராய்ந்து அதனை பகிர்ந்தது புதுமை.பெண்கள் மனதை பெண்கள் சொன்னால் தானே தெரியும்.
அதெப்படி ஒரு ஆணுக்கு முழுமையாக தெரியும்,புரியும்?உண்மை.அழைப்பை ஏற்று
அருமையாக எழுதியமைக்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.

Thekkikattan|தெகா said...

எந்த ஒரு விசயத்திற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. பல வருடங்களாக நாம் அந்த ஒரு பக்கத்தையே ஏன் பார்க்கவேண்டும் மற்றோரு பக்கத்தையும் பார்க்கலாமே.//

முதல் பத்தி டாப்கியரில் போட்டு ஊசியல் குத்தி யோசிக்க வைச்சிருக்கீங்க...


//இந்த மாதிரியான எண்ணங்கள் எல்லாம் இதுவரை ஆண்களால் மட்டுமே பெண்களைப்பற்றி எழுதப்பட்டதாலே தான் இருக்கவேண்டும்.//

பெண்களின் மனதை முழுதுமாக உளவியல் பின்னணியில் படம் பிடிப்பதில் வேண்டுமானால் கொஞ்சம் இடைவெளி இருக்கலாம்
ஆனால், சமூக/கலாச்சார உளவியல் பின்னணிகளை ஓரளவிற்கு ஊகித்து எழுத முடியும்தானே?

நம் சமூகத்தில் இந்த இடைவெளி ரொம்ப அதிகமின்னே நினைக்கிறேன்... இன்னும் நிறைய பேர் பல விடயங்களின் பொருட்டு தங்களது பார்வைகளை பதிய வேண்டும். இன்னும் போக வேண்டிய தொலை தூர்மிருக்கிறது.

ம.தி.சுதா said...

வித்தியாசமாக இருக்கதங்க அருமை...

ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

Thekkikattan|தெகா said...

புத்தகத்தை வடிவமைத்தவர்களைத் தேடி முன்பக்கம் சென்றபோது அது பள்ளியின் தலைமை ஆசிரியையும் மற்றும் இரு ஆசிரியைகளும் என்று அறிந்தபோது //

இந்த வரிகளை படித்தவுடன் சிரிப்பு வந்ததை மறுக்கவியலாது. உள்ளக் கிடக்கையை சரியான படி, தக்க தருணத்தில் வெளிப்படுத்தி இருக்காங்க. ஆனா, பழைய பலி வாங்கின மாதிரி இருக்கே அப்போ கணவர் படிச்சார், இப்போ இவரு படிச்சிட்டு இருக்கார் அவர் வெளியில தோட்ட வேலை ;-)... பிறகு திரும்பவும் ரெண்டு பேரும் சேர்ந்து சமையல் வேல... அங்கே பேலன்ஸ் இல்லையே ...ஹிஹிஹி!

கோபிநாத் said...

நல்ல பகிர்வு ;)

Chitra said...

ரொம்ப நாட்கள் கழித்து ஒரு பதிவு..... வாங்க....வாங்க.... வாங்க.... நிறைய கருத்துக்களைத் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்க....

சாந்தி மாரியப்பன் said...

அவளாகச்சொல்லும்வரை பெண் மனதையோ அதன் எண்ணங்களையோ மற்றவர்களால் நிச்சயமா புரிஞ்சிக்க முடியாது..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆசியா குறிப்பிடவேண்டிய எழுத்துகள் எவ்வளவோ இருந்தாலும் நான் சமீபத்தில் படித்தவற்றை வைத்து எழுதி இருக்கிறேன்.. அழைப்பிற்கு நன்றிப்பா :)
0000000000000000
தெகா தோட்டவேலையை வேலையாவாப் பார்க்கறீங்க நான் ஹாபின்னுல்ல நினைச்சேன்.. அவங்கம்மா படிக்கிற ஹாபின்னா அப்பாக்கு கார்டனிங் என்று. மகளிடம் கூட சொல்லிக்கொண்டிருந்தேன் உடனே இந்த எக்ஸ்ட்ரீமுக்கு போய் அம்மா படிக்கிறாள் அப்பா சமைக்கிறார்ன்னு எழுதலை பாரு அதான் பெண்ணோட சமத்து ந்னு.. அதுக்குள்ள நீங்க இப்படி நினைச்சிட்டீங்களே.. உல்டா ஆகிடுமோ என்ற பயமே சமமாவும் ஆகவிடாம தடுக்குதுங்கரது சரியாப்போச்சே :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம.கி.சுதா நன்றிங்க:)

நன்றி கோபி :)

வரவேற்புக்கு நன்றி சித்ரா.. :)

சாரல் நன்றீப்பா:)

கோமதி அரசு said...

// இன்னமும் கூட போதுமன உயரத்தை அந்த எழுத்து அடையாமல் இருப்பதற்கு அவர்களுடைய தளைகளே காரணம். அவை அன்பான தளைகளாய் இருப்பதால் கொஞ்சம் கடினம் தானே.//

ஆம், ஆம் கொஞ்சம் கடினம் தான்.

இந்த தலை முறையில் நிறைய தாயுமானவர்க்ள் இருக்கிறார்கள்.
இரண்டு பேரும் வேலைக்கு போவதால் இரண்டு பேரும் சேர்ந்து சமைத்து ,சேர்ந்து குழந்தைகளை கவனித்து என்று,பரஸ்பரம் புரிதல் என்ற மந்திரக் கோல் இருந்தால் எல்லாம் நலமே.

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

அருமை :)

சுசி said...

பெண்களின் கைகளுக்கு ஒரு மந்திரக்கோல் கிடைத்தால் இப்படியே எல்லா சரியான இடங்களில் சரியானபடி பொருந்திப்போய்விடுமோ என்று தோன்றுகிறது.
//

:))))))))))

ராமலக்ஷ்மி said...

அருமையாக பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். அனைவரது கையிலும் மந்திரக்கோல் இருந்துவிட்டால்.. நன்றாகதான் இருக்கும்:)!

☀நான் ஆதவன்☀ said...

கடைசி விசயம் :)) எப்படிக்கா இதெல்லாம் கவனிக்கிறீங்க! :)

சி.பி.செந்தில்குமார் said...

>>>ஒரு பெண் இந்த புத்தகத்தை விமானத்தில் படித்ததால் ஜன்னல் வழி தூக்கிப் போடமுடியவில்லை என்றார்

அமரர் சுஜாதாவின் எள்ளல் நடை

சி.பி.செந்தில்குமார் said...

>>>புத்தகத்தை வடிவமைத்தவர்களைத் தேடி முன்பக்கம் சென்றபோது அது பள்ளியின் தலைமை ஆசிரியையும் மற்றும் இரு ஆசிரியைகளும் என்று அறிந்தபோது பெண்களின் கைகளுக்கு ஒரு மந்திரக்கோல் கிடைத்தால் இப்படியே எல்லா சரியான இடங்களில் சரியானபடி பொருந்திப்போய்விடுமோ என்று தோன்றுகிறது.

ayyayoo.. அய்யய்யோ.. ஆபத்தாச்சே.. ஹி ஹி (ஆண்களுக்கு.)

சி.பி.செந்தில்குமார் said...

>>திரைப்பாடல்களில் கூட பல வருடங்களாக பெண் மன ஆசைகளை ஆண்களே எழுதி வந்ததற்கும் தாமரை வந்த பின் பெண்ணின் கோணத்தில் எழுதப்பட்ட பாடல்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தைக் காணலாம். இன்னும் சொன்னால் ஆண்கள் காதல் வயப்பட்டு பாடும் சினிமாப்பாடல்கள் கூட தாமரை எனும் பெண்ணின் கவிதையின் மூலம் இன்னும் அழகாகத் தெரிவதாக நான் உணர்கிறேன்.

உண்மைதான்.. வசீகரா (மின்னலே) பாட்டு ஒரு மைல் கல்

சென்ஷி said...

//பலகாலமாக நாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம் . பள்ளிப்பிள்ளைகளின் புத்தங்களில் அப்பா பேப்பர் படிக்கிறார். அம்மா சமைக்கிறாள் என்று இருக்கிறதே என்று. ஆனால் தற்போது மகனின் பள்ளிப்புத்தகத்தில் அம்மா புத்தகம் படிக்கிறாள். அப்பா செடிக்கு தண்ணீர் ஊற்றுகிறார். அம்மாவும் அப்பாவும் சமைக்கிறார்கள் என்று நான் அவனுக்கு சொல்லிக்கொடுக்கும்போது அட என்றபடி புத்தகத்தை வடிவமைத்தவர்களைத் தேடி முன்பக்கம் சென்றபோது அது பள்ளியின் தலைமை ஆசிரியையும் மற்றும் இரு ஆசிரியைகளும் என்று அறிந்தபோது பெண்களின் கைகளுக்கு ஒரு மந்திரக்கோல் கிடைத்தால் இப்படியே எல்லா சரியான இடங்களில் சரியானபடி பொருந்திப்போய்விடுமோ என்று தோன்றுகிறது.//

அருமையான பத்தி...

சென்ஷி said...

//

பெண்களின் மனதை முழுதுமாக உளவியல் பின்னணியில் படம் பிடிப்பதில் வேண்டுமானால் கொஞ்சம் இடைவெளி இருக்கலாம்
ஆனால், சமூக/கலாச்சார உளவியல் பின்னணிகளை ஓரளவிற்கு ஊகித்து எழுத முடியும்தானே?
//

தெகா :))

ஊகித்து எழுதப்பட்டவற்றைத்தான் பலகாலமாக படித்தும் போதித்தும் கொண்டிருக்கிறார்களே..!

ADHI VENKAT said...

இப்படி ஒரு மந்திரக்கோல் இருந்தால் நன்றாகத் தான் இருக்கும்!
பகிர்வுக்கு நன்றி முத்துலெட்சுமி.

மாதேவி said...

சித்திரை புதுவருட வாழ்த்துகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி கோமதிம்மா:)
--------------
நன்றி கனாக்காதலன்:)
--------------------------
நன்றி சுசி :)
-----------
நன்றி ராமலக்‌ஷ்மி :)
----------------
ஆதவன் ரொம்ப நாள் ஆசை நிறைவேறி இருக்குன்னு பார்த்ததும் முன்பக்கம் திருப்பி பார்க்காம இருந்தாத்தான் ஆச்சரியம்.:)
---------------------
சி.பி. செந்தில் அந்தம்மா சுஜாத்தாவைப் படிச்சிருக்கமாட்டாங்க .வெளிநாட்டுக்காரங்க..:)

நன்றி
-------------------
நன்றி சென்ஷி :)
---------------
நன்றி ஆதி :)
--------------------
நன்றி மாதேவி உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் புதுவருட வாழ்த்துக்கள் ப்பா..:)

பாச மலர் / Paasa Malar said...

தாமரை பற்றிய உங்கள் கருத்தே என் கருத்தும்....

ஹுஸைனம்மா said...

//பெண்களின் கைகளுக்கு ஒரு மந்திரக்கோல் கிடைத்தால் இப்படியே எல்லா சரியான இடங்களில் சரியானபடி பொருந்திப்போய்விடுமோ//

முத்தக்கா, கைகொடுங்க!!

//இந்த எக்ஸ்ட்ரீமுக்கு போய் அம்மா படிக்கிறாள் அப்பா சமைக்கிறார்ன்னு எழுதலை பாரு அதான் பெண்ணோட சமத்து//

அதேதான்!! (ஆனாலும், வீட்டில ஆம்பிளைங்கள நம்ம்ம்பி சமையல்கட்டை முழுசா ஒப்படைக்க முடியுமா என்ற காரணமாவும் இருக்கலாம்!!) :-)))))

Unknown said...

பெண் எழுத்தைப் பற்றி அருமையா பகிர்ந்திருக்கீங்க..
கண்டிப்பா அந்த மந்திரக் கொள் நம் கையில் கிடைத்தால் மிகவும் நன்றாகத் தான் இருக்கும்.

Unknown said...

மன்னிக்கவும்..மந்திரக்கோல்

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

ஆச்சி ஸ்ரீதர் said...

//பெண்களின் கைகளுக்கு ஒரு மந்திரக்கோல் கிடைத்தால் இப்படியே எல்லா சரியான இடங்களில் சரியானபடி பொருந்திப்போய்விடுமோ என்று தோன்றுகிறது.//

அப்படியே நடக்கட்டும்.பகிர்ந்த கருத்துக்கள் அருமை.

சிவகுமாரன் said...

\\ஆனால் தற்போது மகனின் பள்ளிப்புத்தகத்தில் அம்மா புத்தகம் படிக்கிறாள். அப்பா செடிக்கு தண்ணீர் ஊற்றுகிறார். அம்மாவும் அப்பாவும் சமைக்கிறார்கள் என்று நான் அவனுக்கு சொல்லிக்கொடுக்கும்போது அட என்றபடி புத்தகத்தை வடிவமைத்தவர்களைத் தேடி முன்பக்கம் சென்றபோது அது பள்ளியின் தலைமை ஆசிரியையும் மற்றும் இரு ஆசிரியைகளும் என்று அறிந்தபோது பெண்களின் கைகளுக்கு ஒரு மந்திரக்கோல் கிடைத்தால் இப்படியே எல்லா சரியான இடங்களில் சரியானபடி பொருந்திப்போய்விடுமோ என்று தோன்றுகிறது///

அட.. இது இது இதைத்தான் கனவு கண்டான் பாரதி.

பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா
.

geetha santhanam said...

பெண்ணெழுத்தைப் பற்றிய சிறப்பானப் பகிர்வு. பெண்ணின் பார்வையில் பெண்ணெழுத்தும் வித்தியாசமாகவே இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

நல்லெழுத்து
யார் எழுதினாலும் வாசிக்கப்படும் என்பதற்கு உங்கள் எழுத்து
இங்கே காரணமாகிறது...எடுத்துக்காட்டாக.

மந்திரக்கோல் ஹ்ம்ம்
எண்ணங்கள் மாறுமா.எழுத்துகள் மாறுமா. மாறும்.