தரைமுழுதும் உதிர்ந்திருக்கும்
பின்கட்டு முருங்கைப்பூ,
செலவழிக்க விரும்பாத
சிறுவாடாய் ,
சின்னப்பிள்ளைகள் சிரிப்பினில் மகிழ்ந்திருந்த
மல்லிகை மணம் வீசும்
முற்றமிருக்கும்.
இல்லாதவர் பெயர்தாங்கிய
பலகைகள் தொங்கும்
இலக்கமிட்ட வாயில்
அனைவருக்குமாய் தவமிருக்கும்.
முகவரிகள் தொலைத்தபின்
நலமில்லா விவரம் தாங்கி
இருபக்கமும் கடிதமில்லை.
சோறிட்ட காகங்கள்
நன்றியோடு
நினைவில் நிறுத்தி
கரைகின்ற ஒரு பொழுதில்
யார் காலடியாவது
புழுதி கலைத்து நுழையுமெனில்
மீண்டும் ஒருநாள்
கடிதங்கள் வரக்கூடும்.
பேனாக்கள் உயிர்த்தெழுந்து
நலங்கள் விசாரிக்கப்படலாம்.
நலங்களை நினைப்பதில்
எங்கிருக்கிறது பிழை?
யாவரும் நலமென
எதற்கும் நாம் கையெழுத்திட்டுப்
பழகிக்கொள்வோம்.
11 comments:
பேனாக்கள் உயிர்த்தெழுந்து
நலங்கள் விசாரிக்கப்படலாம்.
நலங்களை நினைப்பதில்
எங்கிருக்கிறது பிழை?
யாவரும் நலமென
எதற்கும் நாம் கையெழுத்திட்டுப்
பழகிக்கொள்வோம்.
...... என்றும் நம்பிக்கையுடன்.....
//மீண்டும் ஒருநாள்
கடிதங்கள் வரக்கூடும்.
பேனாக்கள் உயிர்த்தெழுந்து
நலங்கள் விசாரிக்கப்படலாம்//
மீண்டும் அந்த நாள் விரைவில் வரட்டும்.
பேனாக்கள் உயிர்த்தெழுந்து நலங்கள் விசாரிக்கட்டும்.
வயது முதிர்ந்தவர்கள் நாம் தொலை பேசியில் பேசுவதை கேட்க முடியவில்லை கடிதம் போடு என்றால் வளைய மாட்டேன் என்கிறது.
மீண்டும் கடிதங்கள் உயிர்த்தெழுந்து முதியவர்களுக்கு இன்பம் அளிக்கட்டும்.
கவிதைகள் வலிமையானவை.
உண்மையாய் நலம் விசாரிக்கவும், விசாரிக்கப்படவும் ஆவல் மிகுகிறது. கைபேசி மணியோசை எரிச்சலூட்ட, தபால்காரரின் மிதிவண்டி மணியோசை கேட்க மனம் ஏங்குகிறது.
டைப்பியே பழகிய கைகள், கையெழுத்திட பழகிக்கத்தான் வேணும்.. :-))
மீண்டும் கடிதங்களுக்கு உயிர் கிடைக்கட்டும்.....
பக்கமாய் பக்கமாய் எழுதித் தள்ளுவோம்.
தபால்காரரின் வரவுக்காக காத்திருப்போம்.
அருமை ;-)
அழகு கவிதை
//யார் காலடியாவது
புழுதி கலைத்து நுழையுமெனில்
மீண்டும் ஒருநாள்
கடிதங்கள் வரக்கூடும்.//
வருமா? ஏங்குகிறது மனம்:(! கடிதங்களிலேயே தமிழ் பழகி மகிழ்ந்தேன் ஒரு காலத்தில்.
நல்ல கவிதை... தில்லி வந்த புதிதில் கூட நிறைய கடிதங்கள் எழுதுவேன்.... ம்... இந்த அலைபேசியும், மின்னஞ்சலும் வந்த பிறகு கடிதம் எழுதும் கலையே மறந்து விட்டது அனைவருக்கும்....
மீண்டும் கடிதம் எழுத மனம் ஏங்குகிறது....
யாவரும் நலமென
எதற்கும் நாம் கையெழுத்திட்டுப்
பழகிக்கொள்வோம்.
அருமை ;-)
'நலம் நலமறிய ஆவல்' இப்படி எழுதி எத்தனை காலமாயிற்று. இ-மெயில் வந்தவுடன் ஈ ஓட்டிக்கொண்டிருக்கின்றன தபால் பெட்டிகள்! அதன் ஒட்டடைகளை அகற்றி மறுபடியும் கடிதமெழுத பழகிக்குவோம். இல்லையென்றால் நம் கையெழுத்தே நமக்கு மறந்துபோம்.நல்ல பதிவு கயல், மிகவும் ரசித்தேன்.
Post a Comment