October 15, 2007

அமிர்தசரஸ் -3 ஜாலியன்வாலாபாக்

ஜாலியன் வாலாபாக் பற்றி படிக்காதவர்கள் இல்லை தான். ஆனால் அங்கே சென்று வந்தால் உங்கள் மனநிலை படிப்பதைக்காட்டிலும் அதிகமான வேதனைக்குள்ளாகும். அந்த இடம் மதில்களால் சூழப்பட்ட மிகப்பெரிய மைதானம். உள்ளே செல்லும் வாயிலோ ஒரு மாருதி கார் நுழையக்கூட சிரமமான இடம் மட்டுமே .

மனிதர்களின் உரிமையை மறுக்கும் ரவுலட் சட்டத்தை எதிர்த்து செய்யப்பட்ட கூட்டம் அது என்கிறார்கள். பைசாகி
( நம் பொங்கல் போன்ற விவசாயத்திருநாள் ) கூட்டம் என்கிறார்கள். எதுவானால் என்ன அங்கே கூடிய கூட்டம் அதிகம் ஏதுமறியாதவர்களால் குழந்தைகளால் வ்யதானவர்களால் நிரம்பி இருந்தது மட்டும் உண்மை.

ஜெனரல் டயர் இந்திய வீரர்கள் கை கொண்டே இந்த கொலைக்கட்டத்தை நடத்தி இருக்கிறான். வாசலை மறித்தபடி நின்று கொண்டு சுடுங்கள் என்று உத்தரவிட்டபின் முதலில் நடுவில் சுட்டனராம். மக்கள் சிதறி வலமும் இடமுமாக ஓட .. அடுத்ததாக வலமாகவும் இடமாகவும் சுட்டனராம். மக்கள் தரையோடு தரையாக விழுந்து உயிர் காக்க போராட தரையில் அடுத்ததாக சுட்டனராம்.

மதில்களில் ஏறி கடந்துவிடமுடியாது எனினும் அத்தனை பெரிய மதிலில் ஏறி உயிர் தப்ப நினைத்த பேருக்கும் குண்டு இருந்தது . இன்றும் அந்த மதில்கள் குண்டு துளைத்த அடையாளத்தைத் தாங்கி நிற்கிறது.
இன்று அந்த மைதானம் ஒரு நினைவுச்சின்ன பூங்காவாகப் பராமரிக்கப்படுகிறது.


அணையாத ஒரு விளக்கு எரிகிறது.

புகைப்படங்கள் காட்சிக்குவைக்கப்பட்டுள்ள சின்ன அறையின் உள்ளே நுழைபவர்க்ளின் கண்களைக்கலங்க வைக்கும் அந்த மனித உடல்களின் குவியல்களின் ஓவியம் அந்த காட்சியை நேருக்கு நேர் பார்ப்பது போன்ற ஒரு உணர்வைத்தருகிறது.

டயரை க் கொன்ற உத்தம்சிங் பற்றி படிக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் விட என் மனதில் நின்றது ரத்தன் தேவியின் கலங்கவைக்கும் கதை தான்.

ரத்தன் தேவி சொல்கிறார்... "" நான் அந்த நிகழ்ச்சி நடக்கும் போது வீட்டில் இருந்தேன். என் கணவர் அங்கே சென்றிருந்தார் . துப்பாக்கி சூடு பற்றி அறிந்ததும் நான் இரு பெண்களை துணைக்கு அழைத்துக்கொண்டு அங்கே சென்றேன்.. ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதால் யாருக்கும் வெளியே வர பயம். கூட வந்த
பெண்களை திருப்பி அனுப்பிவிட்டு இரத்தவெள்ளத்தில் குவியல் குவியலாக கிடந்தவர்களில் நான் என்கணவரைத் தேடினேன்.

உறவினரைத்தேடி வந்த ஒருவரின் உதவியோடு என் கணவரை நகர்த்தி வைத்தேன். அவர் தோள்களில் உறவினரின் உடலை எடுத்து சென்றார் . என் வீட்டிலிருந்து யாரையாவது கட்டில் கொண்டு வரும்படி பணித்தேன் . யாரும் வரவில்லை. இரவெல்லாம் ஒரு மூங்கில் குச்சி கொண்டு நாய்களிடம் இருந்து என் கணவர் உடலை க் காப்பாற்ற முயற்சித்தேன்.ஒருவர் அவர் காலை எடுத்துவிடும்படி கூறினார். இரத்த வெள்ளத்தில் இருந்த அவருடைய ஆடையை தூக்கி காலை சரி செய்தேன்.

அருகில் 16 வயது சிறுவன் ஒருவன் முனகினான். நான் அருகில் சென்றதும் குளிர்கிறதா என்று கேட்டேன் . அவன் இல்லை எனக்கு தண்ணீர் வேண்டும் என்றான் அந்த மைதானத்தில் தண்ணீருக்கு எங்கே போவேன். என்னை விட்டு போகாதீர்கள் என்றான். நானும் என் கணவர் உடலை எடுத்து செல்லாதவரை எங்கேயும் செல்லமுடியாது இங்கேயே இருப்பேன் என்று சொன்னேன்.
எங்கேயும் முனகல்கள்.. இரத்தத்தின் வாடை. இருட்டு .நான் மட்டும் தனியே உட்கார்ந்து இருந்தேன். அந்த இரவினைப்பற்றி
எனக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும். அதை விளக்க வார்த்தைகள் இல்லை.. ""
படிக்கும்போதே கண்கலங்கியது. எத்தனை கொடூரம் அந்த இரவு.

சொந்த கச்சேரியில் தேவ் நிறைய படம் போட்டிருக்கார்.
அந்த கிணறு குண்டுகளுக்கு பயந்து குழந்தைகளை இடுப்பில் இடுக்கியபடி குதித்த பெண்கள் .. ஆண்கள் என்று நூற்றுக்கணக்கானவர்கள் உயிரைக்குடித்த கிணறு.
கொஞ்சம் கற்பனை கலந்தது தான் திரைப்படங்கள் என்றாலும் இந்த காட்சியை முடிந்தால் பாருங்கள்.

19 comments:

குசும்பன் said...

"நான் மட்டும் தனியே உட்கார்ந்து இருந்தேன். அந்த இரவினைப்பற்றி
எனக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும். அதை விளக்க வார்த்தைகள் இல்லை.. "

படிக்கும் பொழுது எனக்கும் அதே சேம் பீளீங்ஸ்:(

மங்களூர் சிவா said...

சுவாராசியமான தகவல்கள்

.:: மை ஃபிரண்ட் ::. said...

//ஜாலியன் வாலாபாக் பற்றி படிக்காதவர்கள் இல்லை தான்//

தவறு. நான் படித்தது இல்லை. :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

இதெல்லாம் நன்றாகபராமரித்து ஒரு அருமையான சுற்றுலாத்தலமாக மாற்றியவர்கள்ளுக்கு நன்றிதான் சொல்லணும். ;-)

அறிவன் /#11802717200764379909/ said...

நாமெல்லாம் இவற்றைப் படித்து feelings விட்டு பின் மறக்கிறோம்.
இத்தனை பாடுபட்டு பெற்ற சுதந்திரம் அடைந்த இந்தியா எத்தனை பெருமையுடன் முன்னெறியிருக்க வேண்டும்?
ஏன் நம் அரசியல்வாதிகள் இப்படி அரசியல் வியாதியாகிப் போனார்கள்?ஏன் நமக்கு இவை எல்லாம் சீர் செய்யப் பட வேண்டியவை என்ற எண்ணமே அற்றுப் போய்க் கொண்டிருக்கிறது?
இவைக்கெல்லாம் தீர்வு சாத்தியமா,என்று எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா?

அருட்பெருங்கோ said...

அக்கா, எனக்கு வீடியோ லோட் ஆகலை :(

ரத்தன் தேவி கதை இங்கு படிக்கும்போதே மனசு பாரமாத்தான் இருக்கு… அந்த இடத்தில் நின்று படிக்கும்போது எப்படி இருந்திருக்கும்? அன்றைக்கு அதை அனுபவித்த அவருக்கு எப்படி இருந்திருக்கும்???? :-(((

நாகை சிவா said...

தெரிந்து தகவல்கள் தான்.. இருந்த போதிலும் மனது கனக்குகிறது...

ரத்தன் தேவி வின் மனதை உணர முடிகிறது...

Night creates lot of fear...

முத்துலெட்சுமி said...

குசும்பன் படிக்கும்போதே இப்படி ஃபீலிங்ஸ்..நமக்கு..
ஒரு இறந்த உடல்கூட இருப்பதே பெரிய விசயம். ரத்தன் தேவி எத்தனை இறந்த உடல்களும் பாதி இறந்துகொண்டிருந்தவர்களின் மத்தியில் அய்யோ!!

முத்துலெட்சுமி said...

நன்றி மங்களூர் சிவா.
-----
மைப்ரண்ட் உன்ன மற்ந்துட்டேனே தங்கச்சி ... :( முதல் வரிக்கே எதிர்ப்பா?

முத்துலெட்சுமி said...

கண்டிப்பாக நம் சுதந்திரம் இன்னும் சரியாக உபயோகிக்கப்படவில்லை என்று தெரிகிறது அறிவன். அதற்கான தீர்வு தனிமனித ஒழுக்கம். அது கிடைக்க என்னாலான முயற்சி நான் நாட்டுக்கு எதிரான அல்லது அதன் முன்னேற்றத்திற்கு தடையான எதையும் லஞ்ச்ம் முதலான வற்றை செய்யாமல் இருப்பது .. என் வாரிசுகளுக்கு நேர்மையை ஒழுக்கத்தை போதிப்பது ... நீங்கள் சொல்வது போல அரசியல் வாதிகளை வெளியே நின்று திட்டுவது சரியில்லை என்பதுஎன் எண்ணம்.. நேரடியாக அவர்களைப்போல அரசியலில் இறங்கி போராட திராணி இல்லாத நாம்(அவர்கள் தைரியமாய் இறங்குகிறார்கள் அதன் பலனாக அவர்கள் சில ஊழல்களை செய்து பலன் பெற்றுக்கொள்கிறார்கள் )நாம் நம் குடும்பம் என்று வாழ்ந்துவிட்டு அவர்களை என்ன சொல்ல முடியும்? அவரவரால் நாட்டுக்கு என்ன செய்யமுடியுமோ அதை செய்யலாம்.என்பது என் தாழ்மையான கருத்து.

முத்துலெட்சுமி said...

அருட் பெருங்கோ அது ஒரு திரைப்படத்தின் காட்சி துண்டு யூட்யூப்பிலிருந்து போட்டிருந்தேன்..
அலுவலகம் இல்லாத வேறு இடத்தில் எப்போதாவது முயற்சி செய்யுங்கள்.

முத்துலெட்சுமி said...

உண்மை தான் நாகை சிவா.. இன்னும் எத்தனையோ அங்கே எழுதி இருந்தாலும் இந்த ரத்தனின் கதை என்னோட மனசில் அப்படியே பதிந்துவிட்டது. கணவரின் மேல் எத்தனை அன்பு ஊரடன்கு அமுல்படுத்தப்பட்டு இருந்த அந்த நேரத்திலும்அவரின் தைரியம்...
டயர் சொல்லி இருக்கிறார் அந்த துப்பாக்கிச்சூட்டிற்கு பிறகு அடிபட்டவர்களுக்கும் குற்றுயிரும் குலையுயிருமாக இருந்தவர்களுக்கு எந்த விதமான மருத்துவ உதவியும் அனுப்பப்படவில்லையாம். எழுந்திருக்க முடிந்தவர்கள் மருத்துவமனைக்கு அவர்களாக சென்று விட்டிருப்பார்கள் என்று கோர்டில் பதில் அளித்திருக்கிறானாம்.

துளசி கோபால் said...

ஜாலியன்வாலாபாக் பற்றிப் படிச்சிருந்தாலும், 'ரத்தன் தேவி'யைப் பற்றித் தெரிஞ்சுக்கிட்டது இப்போ உங்கள் பதிவில் இருந்துதான்.

நினைச்சாவெ ஈரக்குலை நடுங்குது.ப்ச்......

இவ்வளவு போராடி வாங்குன சுதந்திரத்தைச் சரியாப் பயன்படுத்தாம,நாட்டின்
அடிமட்டம் முதல் உயர்மட்டம்வரை லஞ்சப்பேய்க்கு அடிமையா ஆக்குன
அரசியல்வியாதிகளை என்னென்னு சொல்றது(-:

கோபிநாத் said...

ஜாலியன் வாலாபாக் பற்றிய ராதன் தேவியின் அனுபவங்களை படிக்கும் போது மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது... ;(

பதித்தமைக்கு நன்றி !

இது போன்ற வன்முறைகளை பார்த்தும், படித்தும் கூட இன்னும் பல இடங்களில் வன்முறைகள் தொடர்ந்து நடந்துக் கொண்டுதான் இருக்கிறது....எப்போது மாறும் இந்த நிலை? ;(

முத்துலெட்சுமி said...

துளசி , கோபிநாத் ரெண்டுபேருக்கும் நன்றி. துளசி இத்தனை நாளுக்கப்பறம் லஞ்சம் இருக்குன்னா அப்படி குடுத்தாவது வேலையாகனும்ன்னு நினைக்கிற மக்களும் தான் காரணம்..

கோபி வன்முறை இன்னும் தொடருதுதான்.. அன்னைக்கும் நம் கையால் தான் டயர் நம் கண்ணை குத்தினார். இப்பவும் நாமே தான் குத்திக்கறோம்... ஆனா ஆர்டர் போட டயர் இப்ப நம்ம ஆளுங்க மனசுக்குள்ள இருக்கார்..

மங்கை said...

அருமையா வந்திருக்குப்பா... கண்முன்னால கொண்டு வந்து நிறுத்திட்டீங்க

முத்துலெட்சுமி said...

கண்ணுக்கு நேராப்பாத்திட்டீங்களா மங்கை நல்லா சொல்றீங்களே.. லீவப்போட்டுட்டு போய்ட்டுவாங்கப்பா..இங்க இருக்கும்போது . :)

IITian said...

1982 டெல்லியில் 3000 அதிகமான சீக்கியர்கள் காங்கிரஸால் கொல்லப்பட்டனர்..........

முத்துலெட்சுமி said...

ஐஐடியன் ஆமாங்க என்ன பண்றது வெளிநாட்டுக்காரனோ உள்நாட்டுக்காரனோ நல்லவனும் கெட்டவனும் கலந்தது தானே உலகம்..
உணர்ச்சிவசப்படுவதும் கலகமும் கொலைகளும் நம்வரலாற்றில் புதியதா என்ன இன்னும் கூட தொடர்ந்து கொண்டு தானே இருக்கிறது... :(