May 12, 2008

இசை கொண்டு வாழியவே!

தியாகராஜர் உத்சவம் போல பாபநாசம் சிவன் பாடல்கள் பாடும் விழாவிற்கு எங்கள் பகுதியில் ஏற்பாடு ஆகி இருந்தது.. என் மகளுக்கு எப்பவும் எடுக்கும் போது சுதியில் படுத்தும். சின்ன வயதாக இருந்தபோது , டென்சன் என்பதற்கு அர்த்தம் தெரியாத வரை சரிதான். இப்போது எப்போதும் டென்சன் தான் .. எடுத்த சுதியில் கூடி இருந்த மாமிகள் முகம் கவலை ஆகிப்போனது.

உனக்காக பாடுகிறாய்.. உன் ஆசைக்காக பாடுகிறாய் .. அதற்கு தினம் சாதகம் செய்ய சொன்னால் என்னை எதிரியாகப் பார்க்கிறாய் என்று, கொஞ்சம் முன்னால் தான் அறிவுரை(அதிகம்) செய்திருந்தேன்.. கொஞ்சம் தாமதமாகவே இவளுக்கு பாட நேரம் கிடைத்தது என்பதால் அன்று தில்லித் தமிழ்ச்சங்கத்தில் நடக்கும் ஹைதரபாத் சிவாவின் தமிழிசை கேட்க செல்ல முடியாதே என்று கவலையாக இருந்தது.

எதற்கும் முயற்சிக்கலாமே.. என்று 6.30 கச்சேரிக்கு 7.15 க்கு சென்றால்.. அதற்கு முன் நடக்கவேண்டிய பத்ம விருது பெற்றவர்களுக்கான பாராட்டுவிழாவே முடியவில்லை.. எனக்கு கொஞ்சம் சுசீலாவை பார்க்கவேண்டும் என்ற ஆவல் இருந்தது.. ஆனால் 5 மணிக்கு மகளின் நிகழ்ச்சியை மாற்ற முடியாததால் அந்த ஆசையை சும்மா விட்டிருந்தேன். ஆனால் நிகழ்ச்சி முடிவடையாததால் மேடையில் சுசீலா அம்மாவைப் பார்க்க முடிந்தது. ஒரு தேவதையைப்போல் இருந்தார்கள்.. உள்ளே நுழைந்தபோது எல்லார் ராவ் பேசிக்கொண்டிருந்தார். ஒவ்வொருவர் பாராட்டும் போதும் சுசீலா அவர்கள் அதை பணிவோடு ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக கைகுவித்தபடியே இருந்தார்கள்..

கடைசியாக திருச்சி சிவா பேசினார். அவர் சீர்காழி சிவசிதம்பரம் மற்றும் சுசீலாவைப் பாராட்டிப் பேசியது என் மகளுக்கு அறிவுரை சொல்ல வசதியாக இருந்தது.."எங்களால் உங்களைப்போல பாட முடியாது .. எங்களுக்காகப் பாடியவர்கள் நீங்கள்.. உங்களைப்பாராட்டவேண்டியது எங்கள் கடமை . பெருமை ..உரிமை. அணுகுண்டு அழிக்க முடியாத இடம் ஒன்று, ரஷ்யாவில் ஏற்படுத்தி இருக்கிறார்கள் ..அதில் திருக்குறளும் உண்டு ..உலகம் அழிந்தபின் ஒரு மனிதன் தோன்றினாலும் அவனுக்கு சென்று சேரவேண்டிய பொருட்களில் இசையும் ஒன்று அதில் உங்கள் குரல் இருக்கவேண்டும் என்பது என்ன பேராசையா.. ? என்றார்"

பார் பாடுவது எல்லாருக்கும் வராது .. வருபவர்களை பாராட்டுவதற்குத்தான் நிறைய பேர் இருப்பார்கள். உனக்கு வருகிறது . ஆனால் முயற்சி எடுத்து அதனை சரியாகப் பழகிக்கொள்ள வேண்டும். நாளை என்னை சரியாக வழிகாட்டவில்லை என்று சொல்லக்கூடாது என்றுதான் ... ( தொடர்ந்து அறிவுரை தான் வேறென்ன) சீர்காழி சிவசிதம்பரத்துடன் மகள் ஆட்டோகிராப் வாங்குவது போன்று ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம்..

இரவு ரயிலுக்கு போகவேண்டிய ஹைதரபாத் சிவா அவர்கள் .. தாமதமான கச்சேரி என்று நினைக்காமல் கச்சேரி களை கட்ட பாடினார். அவரும் சரி அவருடைய குழுவினரும் சரி தில்லித்தமிழ்சங்கத்தைச் சேர்ந்த வயலின் சக்கரபாணி அவர்களும் சரி
ஒருவருக்கொருவர் சளைக்காமல் ஈடுகொடுத்தனர்..

சிரித்த முகத்துடன் துள்ளலான பாவத்துடன்.. தாளமிட்டு ரசிக்கும் படி முக்கியமாக தமிழிசை என்பதால் புரிந்து ரசிக்க முடியும்படி இருந்தது அவர் கச்சேரி..இதற்கு முன்பு பன்னிசை தமிழ்மன்ற மேடையில் அவரின் பாடல்கள் கேட்டதிலிருந்து எங்கள் குடும்பமே அவர் ரசிகர்களாகிவிட்டோம்.

மகனோ தாளத்துக்கு ஏற்றபடி அவ்வப்போது ஆடி பக்கத்தில் இருந்தோரை தன் கவனத்துக்கு கொண்டுவந்து கொண்டிருந்தான்.

முடிக்கும் போது
"எல்லாரும் இன்புற்றிருப்பதின்றி வேறொன்றும் அறியேன் பராபரமே..
எல்லாரும் வாழ்க..எல்லாரும் வாழ்க" என்று பாடினார்.. அவர் மகிழ்வுடன் பாடி அந்த மகிழ்வினை மற்றவருக்கும் தன் இசையினிமையால் பரப்புகிறார்.உண்மைதானே..


தமிழ்மொழி வாழ்த்துப்பாடினார்.
தான தனத்தன தான தனத்தன தான தந்தா னே
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழிய வே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையக மே!
தொல்லை வினை தரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நா டே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!
இனிதே பாடி முடித்தார்.

15 comments:

துளசி கோபால் said...

பாடப்பாட ராகம் என்று பாட்டி சொல்லிக் கொடுத்தப்ப ஓடி ஒளிஞ்சவள் நான். அதன் இழப்பு இப்போதும் மனசுக்கு வலி.

மாதினிக்கு நல்ல குரல் வளமிருக்கு. பேச்சே இனிமையா இருந்துச்சுப்பா.


குழந்தை இனிமேல் தினமும் கொஞ்சம் சாதகம் செய்யறேன்னு உக்காரப்போறா பாருங்க.

என் பூரண ஆசிகள்.

Thamiz Priyan said...

நல்ல தமிழ் நிகழ்ச்சிகளெல்லாம் தில்லியில் நடப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது... :)

Thamiz Priyan said...

///உனக்காக பாடுகிறாய்.. உன் ஆசைக்காக பாடுகிறாய் .. அதற்கு தினம் சாதகம் செய்ய சொன்னால் என்னை எதிரியாகப் பார்க்கிறாய் ///
நல்ல அறிவுரை.... நல்ல வார்த்தை பயன்பாடு..... :)

ஆயில்யன் said...

//பார் பாடுவது எல்லாருக்கும் வராது .. வருபவர்களை பாராட்டுவதற்குத்தான் நிறைய பேர் இருப்பார்கள். உனக்கு வருகிறது . ஆனால் முயற்சி எடுத்து அதனை சரியாகப்பழகிக்கொள்ள வேண்டும். நாளை என்னை சரியாக வழிகாட்டவில்லை என்று சொல்லக்கூடாது என்றுதான்//
நன்மை பயக்கும் அறிவுரைதான்:)
நானும் குறித்துக்கொள்கிறேன்!

கானா பிரபா said...

சுடச் சுடப்பகிர்வுக்கு நன்றி, படங்களையும் இட்டிருக்கலாமே

நிஜமா நல்லவன் said...

பகிர்தலுக்கு நன்றி.

Sanjai Gandhi said...

//எங்களால் உங்களைப்போல பாட முடியாது .. எங்களுக்காகப் பாடியவர்கள் நீங்கள்.. உங்களைப்பாராட்டவேண்டியது எங்கள் கடமை . பெருமை ..உரிமை. அணுகுண்டு அழிக்க முடியாத இடம் ஒன்று, ரஷ்யாவில் ஏற்படுத்தி இருக்கிறார்கள் ..அதில் திருக்குறளும் உண்டு ..உலகம் அழிந்தபின் ஒரு மனிதன் தோன்றினாலும் அவனுக்கு சென்று சேரவேண்டிய பொருட்களில் இசையும் ஒன்று அதில் உங்கள் குரல் இருக்கவேண்டும் என்பது என்ன பேராசையா..//

அப்படி போடேய்ய்ய்ய்ய்ய்...

jeevagv said...

//தியாகராஜர் உத்சவம் போல பாபநாசம் சிவன் பாடல்கள் பாடும் விழாவிற்கு எங்கள் பகுதியில் ஏற்பாடு ஆகி இருந்தது..//
நல்ல முயற்சி!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

துளசி நன்றி நன்றி .. அவளைக்கூப்பிட்டு மடியில் உக்காரவச்சுக்கிட்டு உங்க பின்னூட்டத்தைப்படிச்சி காட்டினேன். சிரிச்சிக்கிட்டா.. இனி பயிற்சி செய்வான்னு நினைக்கிறேன் தொடர்ந்து... :)

------

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி தமிழ்ப்பிரியன்..நிறைய நடக்கிறது .. போகவர சிரமமாக இருந்தால் நிறைய விடுபட்டும் போகிறது..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆயில்யன் அறிவுரை எப்போதும் நேரடியாக கிடைக்கும் போது எடுத்துக்கொள்வது கடினம் தான்.. ஆனால் இப்படி மற்றவர்களின் உதாரணமாக வரும் போது பரவாயில்லை என்றூ ஏற்றுக்கொள்வோம்.. எளிதாக.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கானாப்ப்ரபா .. நிஜம்மா நல்லவன் நன்றி..

படங்கள் நான் கடைசி வரிசையில் இருந்தேன்.. என் மொபைல் போன் போட்டோ அத்தனை நல்லா இல்லை..
பெண் அவளுடைய போட்டோவை அவளுடைய ப்ளாக்கில் போடுவாளா இருக்க்கும்ன்னு விட்டுட்டேன்.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சஞ்சய்... ஜீவா வெங்கட்ராமன்.. நன்றி..சஞ்சய் திருச்சி சிவா பேச்சு அனைவரையும் அசத்தியது உண்மைதானே..

ஜீவா.. அடிக்கடி ஒவ்வொரு கம்போஸருக்கும் இப்படி வைப்பார்களாம்.. அதுவும் பாபநாசம் சிவன் தமிழ்பாடல் நிறைய தந்தவர் என்பதால் சிறப்பு நமக்கு..

வேளராசி said...

தில்லி தமிழ்சங்கம் வெளியிடும் வடக்குவாசல் இதழும் நன்றாகவே உள்ளது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மறுமொழிக்கு நன்றி வேளராசி..

வடக்கு வாசல் இதழ் தில்லித்தமிழ்ச்சங்கத்தினருடையது அல்ல,
அப்படி நினைக்கும் அளவுக்கு அதனை நடத்தும் திரு பென்னேஸ்வரன் அவ்ர்கள் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து செயல்படுகிறார்.. :))