August 28, 2008

கோல நினைவலைகள்

நேற்று ஒரு பதிவு எழுதி வைத்திருந்தேன்.வேர்ட் பேட்டை save செய்திருக்கவில்லை.. ஆனால் ஒரு வேலையாக நகரும்பொழுது கணினியை மானிட்டரில் ஆஃப் செய்துவிட்டு சென்றேன். நடுவில் கரெண்ட் கட் ஆகிவிட்டது. இப்படியாக மானிட்டர் ஆஃப் ஆகி இருக்கும் போது மானிட்டரை ஆன் செய்தால் அது ஷட்டவுன் ஆகி மீண்டும் திரை உயிர் பெறுகிறது. அந்த டாக்குமெண்ட் அழிந்துவிட்டது. தானாக அது ஆஃப் ஆகாமல் இருக்க ஏதும் வழி இருக்கிறதா?

ஒரு தோழியின் அறிவுரையில் இப்போதெல்லாம் நான் ஹைபர்னேட் தான் செய்கிறேன்.. அதனால் வேர்ட் டாக்குமெண்டை சேவ் செய்வதே இல்லை.. அப்படியே பாதியில் ஹைபர்நேட் செய்துவிட்டுப் போய்விடுவேன். மறுநாள் விட்ட இடத்திலிருந்து ஆரம்பிப்பேன்.
இன்று மீண்டும் டைப் செய்துப்போட்டிருக்கிறேன். ஆனால் முன்பு தோன்றிய விதமாய் வரவில்லை பதிவு. புதுகைத்தென்றலின் கோலம் பதிவில் எழுந்த நினைவலைகள்......

எங்கம்மா நான் அஞ்சாப்பு படிக்கும்போதே பொம்பிளைப்பிள்ளைன்னா கோலம் போடத்தெரிந்தே ஆகனுன்னு மூன்று புள்ளி மூன்று வரிசை ஐந்துப்புள்ளி ஐந்துவரிசை என்று சின்னதா கத்துக்கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். சாயங்காலம் வாசல் தெளித்துக்கோலம் போடுவது உன்வேலை என்று பொறுப்பும் ஒப்படைத்துவிட்டார்கள்.

நாங்கள் இருந்தது காலனி வீடு. மூன்று வீடுகள் சின்ன சந்தில் இருக்கும்..அதில் நடுவீடு எங்கள் வீடு. பத்து அடி பாதை தான் . சிமெண்ட் தளம். என்பதால் பெரிய வேலை இல்லை. மார்கழி மாதக்கோலங்களுக்காக மட்டும் காலனி வாசலில் போடுவோம்.

கோலங்களை வகுப்பறையில் கூட நோட்டு புத்தகத்தில் போட்டு பயிற்சி எடுத்துக்கொள்வேன்.
மார்கழிமாதக்கோலத்திற்காக அம்மா புதுகைத்தென்றலின் அம்மாவைப்போலவே முதல் நாள் இரவில் பயிற்சி எடுத்துக்கொள்வதோடு அப்பாவோடு கலந்து என்ன என்ன நிறங்கள் கொடுக்கவேண்டும் என்றும் பேசிவைத்துக்கொள்வார்கள். சாணம் தெளித்து கோலமிட்ட பின் கலர் தூவ என்னை அழைப்பார்கள். அம்மாவைப்போல நேர்த்தியாக வராது .. நான் கலர் தூவிய இடங்களை அம்மாவின் அவுட்லைன் தான் சிறப்பாக்கும்..

காலையில் முதல் ஆளாக 4 மணிக்கே எழுந்து கோலமிடுவதே அம்மாவுக்கு வழக்கம் ஒரு நாள் சிறிது தாமதமாகிவிட்டாலும் வருந்துவார்கள்.33 மூன்று புள்ளியைக்கூட சின்னதாக அழகாக நேர்த்தியாகப்போடுவார்கள்.. நான் என் முறை வரும்போது ஏழு புள்ளிக்கோலத்தையே தள்ளித்தள்ளி வைத்து பெரியதாகக்காட்டிவிடுவேன்.

சின்னவயதில் நூல்கண்டில் சிக்கெடுப்பது மிக பிடித்த பொழுதுபோக்கு. புள்ளிக்கோலம் எனப்படும் சிக்குக்கோலம் எனக்கு அதிகம் வராது. இருந்தாலும் நூலில் சிக்கெடுப்பது போல இதிலும் ஆர்வம் உண்டு. அவ்வப்போது முயற்சிப்பேன். கிருஸ்துமஸ் தினங்களில் அம்மா போடும் கிருஸ்துமஸ் தாத்தா கோலம் எனக்கு மிகவும் பிடிக்கும்.. அப்போதெல்லாம் கேமிரா இல்லாததால் படம் எடுத்துவைக்கவில்லை.

அம்மா வாழ்த்து அட்டைகளைக்கூட கோலமாக்கி போடுவார்கள்.சின்ன அளவில் ஒரு கார்ப்பெட் போல தோன்றும். இப்போது அவற்றை படமெடுத்து ஆல்பத்தில் வைப்பது பழக்கமாகி இருக்கிறது. உங்களுக்கு காண்பிப்பதற்கு டிஜிட்டலில் இனி தான் எடுக்கவேண்டும்.

தில்லியில் இருக்கும் 3 அடி வாசலில் 6 புள்ளி 5 புள்ளி கோலங்கள் மட்டும் தான் இடலாம். அதையும் குளிர் மற்றும் நேரமின்மை என்று காரணம் காட்டி கோல ஸ்டிக்கர் வாங்கி ஒட்டும் சோம்பேறியாகிவிட்டேன் நான்.மகளுக்காக விழாக்காலங்களில் வழக்கம்போல கோலமிட்டு கலர் தூவுவதை வழக்க்மாக வைத்திருக்கிறேன்.

அம்மா எப்போதும் டிகாஷன் இறக்கியபின் காப்பித்தூளை காயவைத்து அதனை ப்ரவுன் கலருக்கு உபயோகப்படுத்துவார்கள்.
இரும்புக்கடையில் இருந்து ஒரு விதமான கருப்பு கலர் வாங்கி யானைக்கு நிஜமான யானைக்கலர் போடுவார்கள். அந்த அந்த கோலத்திற்கு அப்படியே அதன் நிறம் வரவேண்டும் என்பதில் மிக குறிப்பாக இருப்பார்கள். மான் கோலத்தன்றும் மஞ்சள் காவி என்று இரும்புக்கடையில் அப்பாவை வாங்கிவரச்சொல்லி வாசலில் நிஜமானே துள்ளி ஓடும்.

இரண்டு மூன்று நிறப்பொடிகளை வேறு வேறு விகிதங்களில் கலந்து அவ்வப்போது தேவையான ஒரு நிறத்தினை கொண்டுவந்து விடுவார்கள். கலர்ப்பொடிகளை வெள்ளைக்கோலமாவுடன் கலக்கும்போதே நிறம் வெளிறாமல் கலப்பதே ஒரு கலை. இப்போதெல்லாம் ஆற்றுமணலில் கலர் ஏற்றிய கோலமாவுகளை மதுரையில் இருந்து வாங்கிவருகிறார்கள். அது இன்னமும் எளிதாக அழகாக பரவுகிறது. இருந்தாலும் நாமே கலந்து செய்த அந்தக்காலம் போல வருமா?

புதுகைத்தென்றல் பதிவில் நான் பின்னூட்டம் போட்டதும் அவங்க என்னை டேக் பண்ணிட்டாங்க.. அதே பாணியைப் பின்பற்றி இந்த பதிவில் பின்னூட்டமிட்ட முதல் பெண் என்பதால் ராமலக்ஷ்மிக்கு டேக் பண்ணிட்டேன் :) ராமலக்ஷ்மி கோலம் பற்றி எழுதி அசத்துங்க பார்க்கலாம்.

13 comments:

pudugaithendral said...

நம்ம அம்மாக்கள் எல்லோரும் ஒரே மாதிரி தான் போல. (நாமளும்தான். நானும் கலர் கோலத்திற்கு ஹெல்ப் செய்வேன். சரியா வராட்டி திட்டுவாங்க. அதனால ஒழுங்கா போட்டிடுவேன்.)

என் நினைவுகளும் கலந்து அலைகள் உங்கள் கோல நினைவலைகள்.

Thamiz Priyan said...

அக்கா! ஆட்டோ சேவ் வசதியை கிளிக் செஞ்சு வைங்க.... ஆபிஸ் என்ன தொகுப்பு வச்சு இருக்கீங்கன்னு தெரியலையே ?...

என்னிடம் ஆபிஸ் 2007 இருக்கு. வேர்ட் ஆப்ஷ்னில் போய் சேவ் பகுதியில் ஆட்டோ ரெகவரியில் நேரம் குறித்து விட்டால் அதுவே தானாக சேமிக்கும். பவர் கட்டாயி மீண்டும் வந்தாலும் நாம் செய்த வேலைகள் கிடைக்கும்.

Thamiz Priyan said...

எங்க தெருவில் உள்ள வீடுகளில் முன்னர் எல்லாம் நாங்கள் காலை தொழுகைக்கு செல்வதற்கு முன்பே வாசல் தெளித்து கோலம் போட்டிருப்பார்கள். இப்போதெல்லாம் வீட்டு வாசல்களில் கோலங்களைப் பார்ப்பதே அரிதாகி விட்டது.

ராமலக்ஷ்மி said...

//நான் என் முறை வரும்போது ஏழு புள்ளிக்கோலத்தையே தள்ளித்தள்ளி வைத்து பெரியதாகக்காட்டிவிடுவேன்.//

:)))!

//இரும்புக்கடையில் இருந்து ஒரு விதமான கருப்பு கலர் வாங்கி யானைக்கு நிஜமான யானைக்கலர் போடுவார்கள். அந்த அந்த கோலத்திற்கு அப்படியே அதன் நிறம் வரவேண்டும் என்பதில் மிக குறிப்பாக இருப்பார்கள். மான் கோலத்தன்றும் மஞ்சள் காவி என்று இரும்புக்கடையில் அப்பாவை வாங்கிவரச்சொல்லி வாசலில் நிஜமானே துள்ளி ஓடும்.//

எத்தனை சிரத்தையுடன் செய்திருக்கிறார்கள் பாருங்கள். நீங்கள் சொல்லியிருக்கும் விதத்திலேயே யானையின் பிளிறலைக் கேட்கவும், துள்ளி ஓடும் மானைப் பார்க்கவும் முடிகிறது.

//அதையும் குளிர் மற்றும் நேரமின்மை என்று காரணம் காட்டி கோல ஸ்டிக்கர் வாங்கி ஒட்டும் சோம்பேறியாகிவிட்டேன் நான்.//

ஹி ஹி. பெங்களூரும் குளிருதானுங்க. விசேஷ நாட்களில் மட்டும் கோல டிசைன் தட்டுக்கள்(அதான் ஹமாம் நலுங்கு மாவு சோப்புடன் கொஞ்ச காலம் இலவசமா கொடுத்தாங்களே, அது மாதிரி, அதை விட 4 பங்கு சைசில் கிடைக்கிறது வித விதமா) வித விதமா அசத்தப் பார்ப்பேன். ஆனா யாரும் அசந்தாங்களா தெரியாது:)))!

Deepa said...

அம்மாவுக்கு நல்லா பொரையேறியிக்கும்... நம்ம பசங்க நம்மளைபத்தி இது மாதிரி சொல்ல நாம என்னத்தை பெரிசா பண்ணிட்டோம்... ஹ்ம்..ஹ்ம்ம் (பெருமூச்சு தான்! )

ஆயில்யன் said...

எங்க வீட்லயும் இதே மாதிரி கதைதான் அக்கா!
எங்க அம்மா அழகா இந்த புள்ளி வைச்ச கோலங்கள் போடுவாங்க! என் அக்காவும் நிறைய கோலபுத்தகங்களினை பார்த்து டிரெயினிங்க் எடுத்துப்பாங்க!

எனக்கு சில சமயம் கலர்+கோல மாப்பொடி கலக்குற வேலை இருக்கும் :)


நல்ல கொசுவர்த்தி :))

கப்பி | Kappi said...

கோலத்துக்கு ஒரு சூப்பர் கொசுவத்தி :))


எங்க அம்மாவுக்கு டிசைன் டிசைனா போடறதெல்லாம் அவ்வளவா வராது..ஊருக்கு போனா சித்தி இது கூட தெரியலைனு அம்மாவை கிண்டல் பண்ணிட்டே சொல்லிக் கொடுப்பாங்க :))

கோபிநாத் said...

சூப்பர் கொசுவத்தி....;))

மே. இசக்கிமுத்து said...

சின்ன வயசில், பொங்கல் சமயங்களில் அம்மா போடும் கோலத்திற்கு கலர் பொடி தூவும் வேலை நானும் என் தம்பிகளும் செய்வதுண்டு. கலர் பொடிகளை தயார் செய்வது போன்ற வேலைகளிலும் ஈடுபட்டதுண்டு!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

புதுகைத்தென்றல் ,உங்க பதிவு எங்கம்மா படிச்சுட்டு என்ன சொன்னாங்க தெரியுமா? நானும் உங்கள மாதிரி எதோ பாப்பா படம் கோலமா வரைஞ்சேனாம் அதை பாலிதீன் பேப்பர் போட்டு மழையில் இருந்து காப்பாத்தினாங்களாம்.. எனக்கு ஆனாலும் மறதி ஜாஸ்த்தி..
------------------------
தமிழ்பிரியன் நன்றி.
இப்போதெல்லாம் மார்கழியில் இரவே கோலம் போட்டுவைக்கிறார்களாம்.. :(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராமலக்ஷ்மி அம்மா அதையும் வாங்கிக்கொடுத்து கோலமாவை தட்டவாவது செய்வாளான்னு பார்த்தாங்க நானா அசருவேன் ? :)
இப்ப மகள் தான் எப்பவாவது தட்டுவா...போனமுறை திநகரில் ஒரு டப்பா வித்தாங்கப்பா.. அதுல 5 ஓட்டை இருக்கும் சேர்ந்தாப்பல அவன் ரோட்டுல ஐந்துவரியில் அழகா கோலமிட்டு காட்டினான் 10 ரூ க்கு நான் மூணு வாங்கினேன் அம்மா மாமியார் எனக்குன்னு ..ஆனா இன்னும் பயன்படுத்திபார்ர்கல..
-------------------
தீபா உண்மை தான் சொல்றீங்க ... அவங்க கிட்ட கேட்டிரலாம் என்ன தான் என்னைப்பத்தி நினைக்கறேன்னு? ?

சந்தனமுல்லை said...

சுவாரசியமா இருந்தது படிக்க!!

எங்க அம்மாவும் நல்லா போடுவாங்க..நான் போய் பார்க்கறதோட சரி..
இந்த நுண் கலைகளையெல்லாம் கத்துக் கொடுகக் எவ்வ்வளவோ ட்ரை பண்ணாங்க..
ஹிஹி..அதெல்லாம் நமக்கு வராதுங்க..:-)

dondu(#11168674346665545885) said...

Wordpad எல்லாம் வைத்து கொண்டு ஏன் அவதிப்பட வேண்டும்? அதுதான் பிளாக்கரிலேயே சேமித்து வைத்துக் கொள்ளும் வசதி வந்து விட்டதே. பதிவை அப்படியே பிளாக்கரில் அடிப்பதுதான் நலம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்