April 3, 2009

எனக்குள் ஒளிந்திருக்கும் உன் தோழி்

அழியாதகோலங்கள் தொடர்பதிவுக்காக என் வானம் அமுதாவின் அழைப்பின் பேரில் மீனாளுக்கு ஒரு கடிதம்..

மீனா எப்படி இருக்கேடீ?

பத்துவருசம் ஆகப்போகுது நாம பார்த்துக்கிட்டு.. இன்னும் பூனா தானா? உன் பசங்க எப்படி இருக்காங்க? அப்பா வீட்டுக்கு நீ வருவதே இல்லையா? நானாக உன் அப்பாவிடம் வாங்கிய நம்பரில் ஒரு முறை போன் செய்தேன் . ஆனால் அது தவறான நம்பர் என்று வந்து விட்டது. முன்னைப்போலவா பொறுப்பு அதிகமாகிவிட்டது. அம்மாவீட்டுக்கு வரும்போதும் அரக்கபரக்க வெந்நீரைக் காலில் ஊற்றிக்கொண்டு விசேசங்களுக்கு வந்தோமோ போனோமா என்று நானும் கிளம்பிவிடுகிறேன். உன் வீட்டில் அண்ணியைப்பார்த்துக்கேட்கலாம் என்று தான் நினைப்பேன். ஆனால் எப்படியோ தடையாகிவிடுகிறது.

நானாகத்தான் ஊருக்கு வந்தால் போனைப்போட்டு ஒவ்வொருவராக விசாரிப்பேன். அக்கம்பக்கத்தில் கட்டிக்கொடுத்த நம் தோழிகள் கூட ஒருவரை ஒருவர் சந்திப்பதில்லையாமடி.. பின்ன நம்மைச்சொல்லி என்ன செய்ய? நான் இந்தியாவின் கோடியிலிருந்து வந்தால் இங்கேயே 10 கிமீ தூரத்தில் இருப்பவளைப்பத்தி என்னிடமே கேட்கிறாள்கள் இவளுகள். ஒவ்வொரு மே மாதமும் கூட்டமாய் கூடி கல்லூரியின் புளியமரத்தடியில் அரட்டை அடிப்போம் என்று பூண்ட உறுதி முதல் வருடமே நமக்கு முடியவில்லையே?

உனக்கு ஞாபகம் இருக்கிறதா? பஸ் வந்தால் நம் முன்னே படிக்கட்டு வந்தால் தான் ஏறுவோம் என்று உறுதி எடுத்துகிட்டு அரட்டை அரட்டை என்று நேரம் போக்குவோமே.. என்னதான் அரட்டைன்னாலும் கெமிஸ்ட்ரி ஈக்குவேசனை அதுக்கு உதாரணம் காட்டுவியே..அய்ய்யோய்யோ அப்பல்லாம் நாங்க சிரிச்ச சிரிப்பு இருக்கே.. ஒரு தடம் கருத்தம்மா படம் பாக்கப் போயிட்டு பெண்களைப்பத்தி எத்தனை கவலைப்பட்டோம்.. ஆனா அப்பக்கூட எதோ ஈக்குவேசன் சொன்னியேடி.. :))) பசங்களுக்கு நீயே சொல்லித்தரியா.. நான் கெமிஸ்ட்ரி எல்லாம் மறந்து பல வருடமாகிவிட்டது. இப்போதைக்கு நினைவிலிருப்பது H2O மட்டும் தானடி..

இன்னும் பாவடை சட்டை போடறயா?? பஃப் கை வைத்த பூப்போட்ட பாவடை உன்னை நினைத்தாலே ஞாபகம் வரும்... ஒன்பது தோழிகளும் நவக்கிரகங்களா சுத்தி வந்தோம்.. திசைக்கொன்றாய் பிரிந்து வாழ்கிறோம்.

ஒரு நாள் வழியில் நீயா என்றபடி புவனா வந்தாள் . அவளைப்பற்றி நானும் என்னைப்பற்றி அவளும் பேசிக்கொள்ளவில்லை . குழந்தைகளின் சேட்டைகள் , பெருமைகள் அதுவே எங்கள் பேச்சு முழுதும் நிறைந்திருந்தது.

நான் பேசினப்பேச்செல்லாம் நினைவு வச்சிக்கிட்டு என்னைப்பற்றிக் கற்பனை செய்யாதே.. பேச்செல்லாம் தான் பெரிசா இருந்தது ..வாதங்கள் பிரதிவாதங்கள் எல்லாம் பொழுதுபோக்குக்கு பேசியதாகிவிட்டது.அல்லது அதனை நடைமுறைப்படுத்தத் தெரியாத முட்டாளாகிவிட்டேன் நான். சூழ்நிலை கைதியாக நான் ஜாலியா வீட்டில் உக்காந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கேன்..நான் நாலுபேருக்கு வேலைக்கொடுக்கவும் இல்லை. நான் எங்கேயும் வேலை செய்யவும் இல்லை. என் ஆசையெல்லாவற்றையும் என் மகளிடம் கொட்டி வைத்திருக்கிறேன். அவள் எட்டாத உயரங்களை எட்ட கைகோர்த்து நடக்கிறேன்..ஒருகாலத்தில் எனக்கென்ற வட்டங்களோடு சுற்றியவள் தான்.. இன்று பிள்ளைகளின் நட்பு வட்டத்து பெற்றோர்கள் என்று சுருக்கிக்கொண்டு இருக்கிறேன். குழந்தைகள் எங்கே ஆனந்தமாய் இருக்கிறார்களோ அதுவே என் உலகமாகிப்போனது.
எப்போதாவது யாருமில்லாமல் தனித்து நடந்தால் எதையோ மறந்து விட்டுவிட்டு நடப்பதாக மனசு பரபரக்கும். விரல்கள் பற்ற மகன் வரவில்லையோ சரி சரி என்று சமாதானப்படுத்திக்கொள்வேன்.


ஒரு முறை நாம் அன்றிருந்ததுபோல நம்மை மறந்து பேசி சிரித்து யாரேனும் திரும்பித் திட்டினால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது. அட தமிழ்மொழியில் சேர்ந்தாற்போல இரண்டு நிமிடம் அரட்டை அடிக்க முடியவில்லையடி ... எதோ புரியாத மொழியில் உங்களுக்குள் பேசுகிறீர்களே என்று மகளின் இன்னோரு ஹிந்திக்காரத்தோழியின் அம்மா சண்டைக்கு வருகிறார்கள். எட்டிநடைபோட்ட கால்கள் இன்று என் மகனின் வேகத்துக்கே மட்டுப்பட்டுவிட்டது .. அவன் அம்மாவுக்கு வயதாகிறது. மனதுக்கு வயதாகவில்லை. அது மீனாளோடு கதையடித்த காலத்திலேயே தான் இருக்கிறது. உன் மகன்களையும் என் மகனையும் விளையாடவிட்டுவிட்டு நாம் சிரித்திருக்கலாம்.பேராசை என்று மட்டும் சொல்லாதே..!!அம்மாவாகிய என்னுள் ஒளிந்து இருக்கும் உன் தோழியைக் கண்டுபிடிக்கவேணும் வாயேன்..
உன் தோழி கவிதா

கவிதாவாக மாறி கடிதமெழுத அழைப்பது கோமா

மிஸஸ் தேவ்

28 comments:

Thamiz Priyan said...

அக்கா..நீங்களுமா?.. ;)) மீத பர்ஸ்ட்

சந்தனமுல்லை said...

கலக்கிட்டீங்க..அருமை! தலைப்பை ரசித்தேன்!

சந்தனமுல்லை said...

//என் ஆசையெல்லாவற்றையும் என் மகளிடம் கொட்டி வைத்திருக்கிறேன். அவள் எட்டாத உயரங்களை எட்ட கைகோர்த்து நடக்கிறேன்.//

வாழ்த்துகள்! என் பெரிம்மா, நான் பயந்தபோதும் தைரியமூட்டி, எனக்கு ஸ்கூட்டி வாங்கித் தந்ததை நினைவூட்டுகிறது..

அமுதா said...

சூப்பர்..
/*ஒரு நாள் வழியில் நீயா என்றபடி புவனா வந்தாள் . அவளைப்பற்றி நானும் என்னைப்பற்றி அவளும் பேசிக்கொள்ளவில்லை . குழந்தைகளின் சேட்டைகள் , பெருமைகள் அதுவே எங்கள் பேச்சு முழுதும் நிறைந்திருந்தது.*/
குழந்தைக்கு பிறகு குழந்தைகள் தான் உலகம் ஆகிவிடுகிறார்கள். நிறைய பேர் கடிதத்தில் இதைப் பார்க்கலாம்...

/*விரல்கள் பற்ற மகன் வரவில்லையோ சரி சரி என்று சமாதானப்படுத்திக்கொள்வேன்*/
ம்.. நம்மில் ஒரு பகுதியாகத் தான் ஆகிவிடுகிறார்கள்...

/*அம்மாவாகிய என்னுள் ஒளிந்து இருக்கும் உன் தோழியைக் கண்டுபிடிக்கவேணும் வாயேன்*/
மிக இரசித்தேன்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

அருமையா எழுதியிருக்கீங்க

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்ன தமிழ்பிரியன் புரியலயே.. ?
------------------------
நன்றி சந்தனமுல்லை..
நான் என் பொண்ணுக்குத்தான் வாங்கித்தரனும் முல்லை.. :)
ஸ்கூட்டி என் லிஸ்டலயும் இருந்தது..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அமுதா நன்றிப்பா.. நீங்களும் எனக்குள் இருந்த தோழியை ஞாபகபடுத்தினீங்க..
நாமெல்லாம் அம்மாக்களாகவே மாறிட்டோம்..
------------------------------
நன்றி அமித்து அம்மா.. ஆமா உங்க பேரு என்னப்பா?? :)

அன்புடன் அருணா said...

//எப்போதாவது யாருமில்லாமல் தனித்து நடந்தால் எதையோ மறந்து விட்டுவிட்டு நடப்பதாக மனசு பரபரக்கும். //
என்னன்னு தெரிலை...இந்த அழியாதகோலங்கள் பதிவு யார் எழுதியதைப் படித்தாலும் கண்கலங்குகிறது...
அன்புடன் அருணா

ஆயில்யன் said...

நெகிழ்வாய் இருக்கிறது!

மீண்டும் தோழியை காணும் சந்தர்ப்பம் நோக்கி காத்திருங்கள்! மனதில் இத்தனை ஆசைகளையும் தேக்கி வைத்துக்கொண்டு...!

ஆயில்யன் said...

//குழந்தைகளின் சேட்டைகள் , பெருமைகள் அதுவே எங்கள் பேச்சு முழுதும் நிறைந்திருந்தது//

உங்கள் பெருமை பேசத்தான் குழந்தைகள் இருக்கிறார்களே...!

பிறகென்ன கவலை :)

அபி அப்பா said...

அட அருமையான கடிதம்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஒவ்வொருவரும் அவங்க நட்புகளை நினைச்சுப்பார்க்கறப்ப உங்கள் நட்புகள் ஞாபகத்துக்கு வந்து அப்படி மனசுக்கஷ்டமாகிடுது போல அருணா..
-------------------------
ஆயில்யன் இந்த முறை சரியான போன் நம்பரை வாங்கப்பாக்கிறேன்.. :)

சென்ஷி said...

மறுபடியும் ஒரு டேக்கான்னு கொஞ்சம் அலுப்போட படிக்க ஆரம்பிச்சதை மாத்த வைச்சுடுச்சு உங்க கடிதம்.

நட்பு பிரிதல் ரொம்ப கஷ்டமானது. ஆசைகள் இழத்தலும் அதேபோலத்தான்.

உங்கள் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்ற உங்கள் மகள் என்றும் உங்கள் துணை நிற்பாள் என்று வாழ்த்துகிறேன்.

பழமைபேசி said...

நட்பு பாராட்டி இருக்கீங்க!

ராமலக்ஷ்மி said...

//அம்மாவாகிய என்னுள் ஒளிந்து இருக்கும் உன் தோழியைக் கண்டுபிடிக்கவேணும் வாயேன்.. //

இது இது..ரொம்ப அருமை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி அபி அப்பா..
-------------------
சென்ஷி நன்றி..
என் நிறைவேறாத ஆசைகளை நிறைவேத்த சொல்லி சொல்வதில்லை. ஆனால் அவள் ஆசைகளை நிறைவேத்தித் தருவதையே எண்ணமாக வைத்திருக்கிறேன்.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பழமைபேசி .. நன்றி.. :)
------------------------
ராமலக்ஷ்மி நன்றி:)

வல்லிசிம்ஹன் said...

என் தோழிகளை எங்கே தேடுவேன் என்று ஏங்க வைத்துவிட்டது உங்க பதிவு கயல் லக்ஷ்மி.

Thekkikattan|தெகா said...

திரும்ப அந்த புளிய மரத்தை ஞாபகப் படுத்திட்டீங்களே... :-)

ஓ! பேருந்தின் படிக்கட்டு உங்களுக்கு வசதியா வந்து நிக்கணுமாக்கும், கல்லூரிக்கு முன்னாடி எப்போ அது மாதிரி நிப்பாட்டியிருக்காங்க...

//குழந்தைகள் எங்கே ஆனந்தமாய் இருக்கிறார்களோ அதுவே என் உலகமாகிப்போனது.//

எங்கேயிருந்து எங்கே வந்துருக்கு பாருங்க, எதார்த்தம் - ஹா!

அருமையான நினைவோடை!

☀நான் ஆதவன்☀ said...

கல்யாணம் முடிந்ததும் பெண்கள் மட்டும் இழக்கும் பல விஷயங்களில் முக்கயமானது நட்பு :(

அதை அழகாக குழந்தைகள் மேல் காட்டி ஆறுதல்படும் உங்கள் பதிவு நல்லாயிருக்கு மேடம்

கோபிநாத் said...

யப்பா!!!!!!!!!!! எம்புட்டு இருக்கு!!

அருமையான கடிதம் ;)

குடுகுடுப்பை said...

நல்லா இருக்கு

Sasirekha Ramachandran said...

//உங்கள் பெருமை பேசத்தான் குழந்தைகள் இருக்கிறார்களே...!//

apdiyaa?

//குழந்தைகளின் சேட்டைகள் , பெருமைகள் அதுவே எங்கள் பேச்சு முழுதும் நிறைந்திருந்தது//

adhennavo unmadhan!

நானானி said...

//ஒருகாலத்தில் எனக்கென்ற வட்டங்களோடு சுற்றியவள் தான்..//
ஆஹா! ஸேம் ப்ளட்.

சிகெரட் புகையை உள்ளிழுத்து வட்டவட்டமாக வெளிவிடுவார்களே! அதுபோல் நமது வட்டமும் வளையம் வளையமாக மேலேறி காற்றில் கரைந்து விட்டதோ?

தோழிகளை பழைய புகைப்படங்களில் பார்துக்கொள்வதோடு சரி!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வல்லி தேடித்தான் பாருங்களேன் :)
-------------------------

தெகா :) நன்றி
--------------------------
நன்றி ஆதவன்.. ஆனால் வேலை ஊர்மாற்றங்கள் என்று ஆண்களும் இப்பொழுதெல்லாம் நட்புகளை இழக்கத்தான் செய்கிறார்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இன்னிம் எத்தனையோ இருக்கு கோபி எழுதியது கொஞ்சம் தான். :)
---------------------
நன்றி குடுகுடுப்பை
நன்றி சசிரேகா
--------------------
நானானி நல்ல கற்பனை ... ஆனா வளையம் மறைஞ்சதென்னவோ உண்மைதானே..

"உழவன்" "Uzhavan" said...

//எட்டிநடைபோட்ட கால்கள் இன்று என் மகனின் வேகத்துக்கே மட்டுப்பட்டுவிட்டது .. அவன் அம்மாவுக்கு வயதாகிறது. மனதுக்கு வயதாகவில்லை. அது மீனாளோடு கதையடித்த காலத்திலேயே தான் இருக்கிறது. உன் மகன்களையும் என் மகனையும் விளையாடவிட்டுவிட்டு நாம் சிரித்திருக்கலாம்.பேராசை என்று மட்டும் சொல்லாதே..!!அம்மாவாகிய என்னுள் ஒளிந்து இருக்கும் உன் தோழியைக் கண்டுபிடிக்கவேணும் வாயேன்.. //

அருமையாகச் சொன்னீர்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி உழவன்.. :)