March 30, 2009

40 நாள் குழந்தைக்கு ஆப்பரேசன்

2005 பிப்ரவரி தில்லி.
குழந்தைங்க டயப்பர் மாத்தறப்ப காலை தூக்கி அப்படி இப்படி ன்னு அவங்களைப்படுத்தினால் கொஞ்சம் பிடிக்காம அழத்தான் செய்வாங்க.. என் மகனும் அப்படித்தான் துணி நாப்கினை மாத்தும் போது அழுவான். ஆனா தொடர்ந்து கொஞ்ச நாளா ( ரெண்டு நாள் அல்லது மூணு நாள்) கூடவே கொஞ்சம் அழறாப்பல இருந்தது.. ஆனா எந்த மாற்றமும் எங்களுக்கு தெரியல.

பின்னால் ஒரு நாள் விடாமல் அழறான் , பூச்சிக்கடிச்சிருக்குமோ , சூ போக முடியலையோ .. நல்லவேளை 38 நாள் ஆன பையன்னு என் அம்மாவும் அப்ப கூட இருக்காங்க.. நாங்க நினைச்ச எதுவுமில்ல.. அவன் அழறதை விடவும் இல்லை..இது வழக்கப்படி இல்லை என்று உணர்ந்து வீட்டில் அணிந்திருக்கும் உடையோடே குளிராடையை உடுத்திக்கொண்டு குழந்தை டாக்டரிடம் ஓடினோம்.

அங்கே கடைசி ஆளாக ஒருவர் பேசிக்கொண்டிருக்கிறார். தனியாள் . கம்பவுண்டரை கேட்டால் காத்திருக்க சொல்கிறார். குழந்தையோ அழுகிறான்.சண்டையிட்டு உள்ளே சென்றால் டாக்டர் பார்த்த அடுத்த விநாடி .. எமர்ஜென்ஸி ..ஆப்பரேசன் தேவை .. நான் எழுதித்தரும் டாக்டரிடம் காட்டுங்கள்.. இந்த மருத்துவமனைக்கு செல்லுங்கள்..

ஓட்டமாய் மருத்துவமனை அடைந்தால் .. எமர்ஜென்ஸி வார்டில் , என்ன ஏது அந்த பெட்ல போடுங்க.. நீங்க சொல்கிற டாக்டருக்கு போன் செய்துட்டோம் .. அவங்க காலையில் வருவாங்க.. ஐசியூவில் அட்மிட் செய்துடலாம்..அதுவரை தாய்ப்பால் குடுக்காதீங்க.. குழந்தை அழுவதற்கு தடை செய்ய ஒரு வழியும் செய்யாமல் அடுக்கிக்கொண்டே போகிறார்கள். அது அப்படித்தான் அழும்..ஒரு நம்பிக்கை வார்த்தையில்லை..சமாதானமில்லை. எத்தனை பாத்திருக்கோம் என்று நகரும் டாக்டர்கள் இளவயதுக்காரர்கள்..

ஆப்பரேசன் ஆகிய உடம்பு அழக்கூட எனக்கு தெம்பில்லை.. பிப்ரவரி மாதத்துக்கு குளிர் உடலை நடுக்கிறது. அம்மா என்னைவிட உடைந்து அழுகிறார்கள். கணவர் பல சமயம் உடல்நிலைக் கோளாறுகளைக் கண்டால் பதுங்குபவர்கள் அதிசயமாய் தைரியமாய் நடக்கிறார்கள். பணம் கட்டுக்கிறார்கள் .. ஓடுகிறார்கள் பேசுகிறார்கள்..

ஐசியூக்குள் ஒருவர் தான் இருக்கலாம். குழந்தைகளுக்கு என்று தனிப்பிரிவு.உள்ளே நுழைந்ததும் சினிமாவில் வருவது போல உடலெங்கும் ஒயர்களுடன் கருவிகளுடன் சின்னவயசுக்குழந்தைகள்.பதறியது மனம். குழந்தை அழுகிறான். பால் கொடுக்ககூடாது என்ன கொடுமை.நான் வெளியே நிற்கிறேன். கணவர் போன் பேசசென்றிருக்கிறார்கள்.. ஆறுவயது மகள் ஐசியூ இருக்கும் இடத்திற்கு வரக்கூடாது என்று கீழே செக்யூரிட்டிக்கு பக்கத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறாள்.அம்மா குழந்தைக்கு அருகில்..அம்மாவும் நானும் மாற்றி மாற்றி குழந்தைக்கு அருகில் நின்று வருகிறோம்.

குழப்பம் குழப்பம்..இது என்ன நிலைமை.. நாம் நம்பி குழந்தையை ஓப்படைக்க ஒரு நல்ல வார்த்தை கேட்டோமில்லையே.. திரும்ப உள்ளே நான் நுழைந்த போது குழந்தை அழுகையை சற்றே நிறுத்தி விசும்புகிறான் .. தெம்பு இல்லை.. இனி அவனுக்கு குளுக்கோஸ் ஏறனும் . அம்மாவிடம் சொல்லிவிட்டு கீழே இறங்கி மீண்டும் டாக்டருக்கு போன் ..நீங்க சொன்ன டாக்டர் ஒரு நம்பிக்கையும் குடுக்கவில்லை பார்க்க வரவும் இல்லை. குழந்தையோ அழுகையை நிறுத்திவிட்டான் என்று சொல்லவும் சரி நீங்கள் அழைத்து வாருங்கள்.. நாளை விரும்பும் டாக்டரிடம் காட்டிக்கலாம் ..அழுகை நின்றுவிட்டால் ஆபத்து இல்லை என்கிறார்.

மேலே ஓடினால் ,நர்ஸ் "உங்கள் ரிஸ்கில் எடுத்து செல்வதாக கையெழுத்து இடுங்கள்" என்றாள். சரி உன்கையில் குழந்தையை குடுக்க நான் அதையே செய்வேன் என்று கையெழுத்திட்டேன். "கட்டிய காசு 20,000 பிறகு தான் கிடைக்கும்" என்றாள்.. "நன்றி" என்று ஓடியே வந்துவிட்டோம்.

மறுநாள் அவன் பிறந்த மருத்துவமனைக்கு சென்று குழந்தைகளுக்கு ஆப்பரேசன் செய்யும் டாக்டரிடம் பேசினோம். அவர் எங்களுக்கு சொன்ன அளவுக்கு இல்லையெனிலும் முதல்மருத்துவமனை டாக்டர் ஒரு வார்த்தையேனும் நான் இருக்கேன் என்று சொல்லி இருந்தாள் அன்றைக்கு அங்கே ஓடிவந்திருக்கமாட்டோம்..

இன்ன இன்ன காரணம்.
குழந்தைகளுக்கு வரும் இங்வைனல் ஹெர்னியா என்பது எந்த வயதிலும் வரக்கூடிய ஒரு உபாதை ஆனாலும், பெரும்பாலும் பிறந்த குழந்தையிலிருந்து, 1 வயது குழந்தை வரை வரலாம்
நல்ல ஆரோக்கியமாக பிறக்கும் குழந்தைகளில், 3ல் இருந்து 5 சதவீத குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை வரலாம்.குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளில், 30% குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை வரலாம்.

படங்கள் வரைந்து பாகம் குறித்து.. என்ன என்னவோ எனக்கு இப்ப முழுதாக அதெல்லாம் நினைவில் இல்லை. ..
நான் 14 வயதுக்குள்ளான குழந்தைகளைத்தான் பார்க்கிறேன். குழந்தைக்கு ஜெனரல் அனஸ்தீஸியா தந்து செய்வது என்பதால் யோசித்து சொல்லுங்கள்.. செய்துஆக வேண்டிய கட்டாயம் உண்டு என்றார். நாள் பார்த்து அதற்கு முந்தினநாள் இரவு 8 மணியிலிருந்தே பால்கொடுக்காமல் தூங்கவைத்து காலையில் 9 மணிக்கு வந்தால் ஆப்பரேசன் என்றார்.

இந்த ஹெர்னியாவும் 65 % குழந்தைக்கு வலதும் 25% வருமாம்.. 15 % குழந்தைக்குத்தான் இரண்டுபக்கமும் வருமாம்.. இவனுக்கு இரண்டு பக்கமும் வந்தது.
ஆப்பரேசன் முடிந்தது வெளியே வந்தான் ..மயக்கத்தில்.மயக்கம் தெளிந்தால் அழுவான்.. அவன் நல்லா அழனும்..கதறி அழனும் அப்பத்தான் அவன் முழுதாக மருந்திலிருந்து வெளியே வந்ததாக அர்த்தம்..ஒரு ஸ்பூனில் தண்ணி மட்டும் உதட்டுக்கு பக்கம் பிடிக்கனும்..தானாக அதை நாக்கால் ருசித்தால் தான் பின்னர் தாய்ப்பால் என்றார்.

ஊம் ஊம் என்று தலையாட்டினேன்..கை இத்துனூண்டு அதில் குளுக்கோஸ் ஏத்த இடம் ஏது?மணிக்கட்டில் ஒரு தெர்மக்கோல் அட்டை ஸ்கேல் அளவுக்கு முட்டுக்கொடுத்து இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக மயக்கம் தெளிகிறான்.அழத்தெம்பில்லாதவனாக அழுகிறான். ஒவ்வொரு முனகிய மெல்லிய விசும்பலுக்கும் எனக்குள் ஓராயிரம் வலிகள் .. நான் அழுகிறேன் . அடக்கமுடியாமல். டாக்டர் உள்ளே நுழைந்தவர் என்னைப்பார்த்த கோபத்தில் கத்துகிறார். என்னப்பா உன் மனைவிக்கு என்ன பையித்தியமா?

அவன் எத்தனை அழறானோ அத்தனை அவளுக்குத்தானே நல்லது சொல்லு லக்ஷ்மியை அழாதேன்னு சொல்லு.. ன்னு கத்தறார்.
நான் வீட்டுக்குக்கூட போகாம காரில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துட்டு திரும்பவும் வந்து நிக்கிறேன் ..இவனுக்காகத்தானே .. அவன் அழட்டும் நல்லா என்கிறார். அழுதான் கதறி அழுதான் தானாக தண்ணீர் குடித்தான். பசித்து பால் குடித்தான். பிழைத்தான்.

அடுத்த திங்கள் வரை நோ குளியல்.. நீங்களாகவே வயிற்றின் இருபுறமும் இருக்கும் ( அருணாக்கொடிகட்டும் இடம்) பிளாஸ்திரியை எடுத்துவிடுங்கள்.. என்னிடம் ப்ரச்சனை இருந்தால் வரலாம். ஆனால் ஒன்றுமிருக்காது. எனக்கு விடைகொடுங்கள் என்றார்.

சாதரண விரலுக்குப்போடும் ப்ளாஸ்திரி தான். பிரித்தால் .. வலது இடது பக்கத்தில் ஒவ்வொன்றும் ஒரு இஞ்ச் இடைவெளி வெட்டுக்கள்..தையலே போட அவசியமில்லாத வயது. ஒருவாரத்தில் தானாக இணைந்து விட்டதாம்.
நினைத்துப்பார்த்தால் எத்தனை பெரிய புயல் அது.. போன பதிவில் அவன் ஒரு செல்லமாக வளர்ந்ததுக்கு இதுவும் காரணமாக இருக்குமோ என்று தோன்றியது பதிவிட்டேன்.. ஹ்ம்.

31 comments:

சென்ஷி said...

படிக்கும்போதே பகீர்ன்னு இருக்குது. ஆனாலும் ஒரு தாயோட மனநிலையில் இருந்துதான் இதை அனுபவிக்க முடியும்னு இல்லாம எங்களுக்கும் வலிக்க வைக்குது.

பகிர்வுக்கு நன்றிக்கா

சென்ஷி said...

என்னோட சின்ன அக்காவுக்கு குழந்தை பிறக்கும்போதும் பிறந்த உடனே குழந்தைக்கு ஊசி ஏத்தணும்னு சொன்னாங்க. அலைஞ்சு பிடிச்சு தேடி கொண்டு வந்த பின்னே குழந்தையோட ரத்த வகைய கண்டுபிடிக்க குழந்தையோட வலதுகால்பாதத்துல ஊசி குத்தி ரத்தம் எடுத்தாங்க. உடம்பே ஆடிப்போச்சு எனக்கு அப்ப.. :-(

சின்ன கை அதுல தக்கணூண்டு விரல்ன்னு இருக்குற பாப்பாகிட்டேர்ந்து ரத்தம் எடுக்கறதையே தாங்கிக்க முடியல. இதுல ஆப்பரேசனா.. கடவுளே...

அபி அப்பா said...

ஆமாம் முத்துலெஷ்மி இது மாதிரி எல்லாம் நடக்கும் தான்.ஆனா தைரியம் தான் முக்கியம் இது போன்ற நேரத்திலே!

நீங்க ரொம்ப தைரியம். பாருங்க பையன் இப்ப "ராட்சசி"ன்னு சொல்லும் அளவு தைரியம் நீங்க!

ஒரு நல்ல அவேர்னஸ் பதிவு!

மங்கை said...

எனக்கும் இது போல ஒரு அனுபவம் இருக்கு...குழந்தைகள் அழுவதை பார்ப்பது கஷ்டம் தான்... ஆஸ்பத்திரியில் வேலை பார்த்த போதும்...குழந்தைகள் பிரிவு பக்கம் போகாமல் இருந்த காலம் உண்டு.. அந்த அழுகை வயிற்றை கலக்கும்..

Thekkikattan|தெகா said...

படிக்கும் பொழுது எது போன்ற பிரச்சினையோ என்னவோ ஏதோன்னு நம்மையும் பயமுறுத்தி பிறகு ஒரு சர்ஜரியில நிறுத்தி, உஷ் யப்பாடான்னு பிடிச்சு நிறுத்திட்டீங்க.

எல்லாம் "தாய்மை" அப்படிங்கிற முழுமையை எட்ட - பாக்கேஜ்க்குள் இது போன்று நடைபெறும் நிகழ்வுகளும் ஒரு பகுதிதானே...

Thamiz Priyan said...

அக்கா படிக்கும் போதே பயமா இருந்தது.. எப்படி சமாளிச்சீங்களோ..நினைக்கவே கஷ்டமா இருக்கு.. ஆனாலும் சபரி நல்ல பையன் தான்..சேட்டை எல்லாம் கிடையாதுன்னு நினைக்கிறேன்.

ஆயில்யன் said...

எழுத்துக்களில் உணரமுடிகிறதக்கா நீங்கள் அனுபவித்த துன்பம் :(

ஆயில்யன் said...

//சென்ஷி said...
என்னோட சின்ன அக்காவுக்கு குழந்தை பிறக்கும்போதும் பிறந்த உடனே குழந்தைக்கு ஊசி ஏத்தணும்னு சொன்னாங்க. அலைஞ்சு பிடிச்சு தேடி கொண்டு வந்த பின்னே குழந்தையோட ரத்த வகைய கண்டுபிடிக்க குழந்தையோட வலதுகால்பாதத்துல ஊசி குத்தி ரத்தம் எடுத்தாங்க. உடம்பே ஆடிப்போச்சு எனக்கு அப்ப.. :-(

சின்ன கை அதுல தக்கணூண்டு விரல்ன்னு இருக்குற பாப்பாகிட்டேர்ந்து ரத்தம் எடுக்கறதையே தாங்கிக்க முடியல. இதுல ஆப்பரேசனா.. கடவுளே...
///

படிச்சாலே பதறுதய்யா :((

☀நான் ஆதவன்☀ said...

உங்களுக்கு தைரியம் தாஸ்தி மேடம்.
உண்மையா படிக்கும் போதே பதறுது நெஞ்சம்.

செல்வநாயகி said...

சில வலிமிகுந்த தருணங்கள் கடக்கும்போது கடினமாகவே இருக்கின்றன. உங்களின் அந்த உடல்நிலையில் குழந்தையின் நிலை எவ்வளவு வருத்தியிருக்கும் என்பதை உணரமுடிகிறது. ஆச்சு, இப்போது பெரிய பள்ளிக்குப் போறாரா? அவருக்கு என் வாழ்த்துக்கள்!

Poornima Saravana kumar said...

குழந்தைக்கு எவ்வளவு வலி இருந்திருக்கும்....
படிக்கையிலேயே நெஞ்சு பதறுகிறது!

*இயற்கை ராஜி* said...

பகீர்ன்னு இருக்குது

ராமலக்ஷ்மி said...

:(!

பகிர்தலுக்கு நன்றியும்.

//போன பதிவில் அவன் ஒரு செல்லமாக வளர்ந்ததுக்கு இதுவும் காரணமாக இருக்குமோ என்று தோன்றியது பதிவிட்டேன்.. ஹ்ம்.//

எல்லாம் வய்துக்கே உரிய இனிய குறும்புகள்தானே? ரசிக்க வேண்டிய நேரத்தில் ரசியுங்கள். வளரும் போது தானாகக் குறைந்து விடும். நல்லா வருவான்.

Vidhya Chandrasekaran said...

எனது பதிவொன்றில் நீங்கள் கையெழுத்து போட்டு தூக்கிக்கொண்டு வந்ததை மட்டும் சொல்லிருந்தீங்க. ஆனா குழந்தையின் வயசு. கலங்கடிக்குது:(

Anonymous said...

இப்பத்தான் சபரியோட புதுமொழியப் படிச்சு சிரிச்சுட்டு வந்தா, இந்த பதிவில கண் கலங்க வச்சிட்டாரே.

எனக்கும் இது போல ஒரு அனுபவம் உண்டு. பிறந்த ஒரே வாரத்துல மகளை (அதுவும் எட்டு வருஷங்களுக்கு பிறகு பிறந்தவ) மஞ்சள் காமாலைன்னு அட்மிட் பண்ணிட்டு, நான் அழுத அழுகை இன்னமும் நினைவில இருக்கு. உங்களுக்கு எப்படி வலிச்சிருக்கும்ன்னு புரியுதுப்பா.

Discharge ஆகி வந்தப்பறமும், தொடர்ந்து சில வாரங்களுக்கு ரத்தப் பரிசோதனைக்கு போகும்போதெல்லாம் அந்த சின்ன பாதங்கள்ள குத்தி ரத்தம் எடுத்ததை பாத்ததெல்லாம் கொடுமையோ கொடுமை.

சித்ரா

கைப்புள்ள said...

படிக்கும் போதே கஷ்டமாக இருந்தது. அதை அனுபவித்த உங்கள் அப்போதைய நிலைமயைப் பற்றி நினைக்கவே பயமாய் இருக்கிறது. உங்கள் மகன் இப்போது நன்றாய் இருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி.

பதிவில் நீங்கள் சொல்லி இருக்கும் மருத்துவம் தொடர்புள்ள தகவல்கள் கண்டிப்பாகப் படிப்பவர்களுக்குப் பயன் படும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷி அந்த பிஞ்சுகைகள் கால்கள் மேலே சோப்பு போடும்போதே வலிக்குமோன்னு இருக்கும் .. :(
-----------------------
அபிஅப்பா என்ன அவர்னெஸ் ? சும்மா ஒரு சோககொசுவத்தி
-------------------------
ஆஸ்பத்திரியில் குழந்தைபெரியவங்க வேறுபாடு என்ன எல்லா அழுகையும் கலக்கத்தான் செய்யும்..அழவே வேண்டாம் கவலை தோய்ந்த முகங்கள் பார்த்தாலே கலங்குமே மங்கை...
---------------------
தெகா.. தாய்மை பேக்கேஜ்... ம் உண்மைதான் பெரிய சைஸ் சொப்பு வச்சு விளையாடற விளையாட்டில் இதெல்லாம் மட்டும் தான் நிஜம் காட்டுது..
-------------------------
தமிழ்பிரியன் .. ஆமாமா சொல்லிக்கலாம்.. சேட்டக்காரப்பயலேன்னு தானே கொஞ்சுவோம்..:)

KarthigaVasudevan said...

பாப்புவை பிறந்த அடுத்த நொடியில் எங்கள் கைகளில் தராமல் உடனே கணப்பு அறைக்குள் (இன்குபேட்டரை எப்படி சொல்வது தமிழில் !) கொண்டு போய் கண்காணிப்பில் வைத்து விட்டார்கள் ,சிசேரியன் என்பதால் வெளி வெப்பத்தை குழந்தையின் தளிர் உடல் ஏற்றுக் கொள்ள சிறிது நேரம் ஆகும் என்றார்கள் .கூடவே வெளி உலகைக் காணும் அவசரத்தில் குழந்தை கருப்பையைச் சூழ்ந்திருக்கும் நீரை வேறு கொஞ்சம் உட்கொண்டு விட்டதால் அதை நீக்க மூக்கில் டியூப் வேறு மாட்டி இருந்தார்கள்.கிட்டத்தட்ட 4 மணி நேரம் சென்ற பின் தான் என் கண்ணில் காட்டினார்கள் .அதற்குள் என் அம்மா ...அத்தைகள் மற்றும் பாட்டிகள் பேத்தியை கண்ணாடி வழியாகப் பார்த்து விட்டு பரிதவித்துப் போனார்களாம். உங்கள் கஷ்டம் புரிந்தது . நான் பாப்பு பிறந்து ரொம்ப நாட்கள் வரை நான்கு மாதங்கள் வரை வெளி ஆட்கள் யாரையுமே குழந்தையை தூக்க அனுமதித்ததே இல்லை .எல்லாம் பயம் தான் காரணம் ...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆயில்யன் , நான் ஆதவன்

உங்களையெல்லாம் துன்ப நினைவுகளை சொல்லிக் கஷ்டப்படுத்திட்டோனோ?
-------------------------
செல்வநாயகி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிப்பா..
----------------------------
பூர்ணிமா , இயற்கை உங்கள் வருகைக்கு நன்றி.
------------------------
ராமலக்ஷ்மி உங்கள் ஆசிக்கு நன்றி..

சந்தனமுல்லை said...

நமக்கு மனசு கஷ்டம்..அதோட அந்த pain that kid goes thru..அது தான் கொடுமை!

சென்ஷி said...

//தெகா.. தாய்மை பேக்கேஜ்... ம் உண்மைதான் பெரிய சைஸ் சொப்பு வச்சு விளையாடற விளையாட்டில் இதெல்லாம் மட்டும் தான் நிஜம் காட்டுது..//

:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வித்யா ...உங்கள் பதிவில் சொன்னதுநினைவிருக்குப்பா.. டீச்சர்களுக்கு அடுத்தபடியா டாக்டர்களைப் பார்த்து பயப்படற ஆள் நான்..நானே ஓடிவந்தேன்னா அங்க நிலைமை அப்படி...
----------------------------
சித்ரா உங்கள் வருகைக்கு நன்றி..இதில் ஒரு பெரிய நன்மை என்னான்னா அந்த சின்ன வயசில் கால் கொஞ்சம் அசைப்பது கம்மி.. அதனால் வலி குறைச்சல். இன்னும் கொஞ்சம் பெரிசாகி இருந்தாலும் கால் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்து வலி இருந்திருக்கும்.. இல்லையா?
-----------------------------
கைப்புள்ள .. மேலும் தகவல்கள் இங்கே இருக்கின்றது.. http://www.hernia.org/paeds.html
ஆனால் இந்த கஷ்டம் வேற யாருக்கும் வரவேண்டாம்.

Anonymous said...

அவ்வளோ சின்ன உடம்புல ஆபரேஷனா- படிக்கவே வலிக்குதே

Iyappan Krishnan said...

ஹெர்னியா போன்றவை குழந்தை வளரும் போது தான் தெரியும் என்றாலும் நாம் தேர்ந்தெடுக்கும் மருத்துவமனை டாக்டர்களின் பங்கு மிக முக்கியம்.

என் மகளுக்கு பிறந்த 2 மணி நேரத்துக்குள் ஒன்றும், 12 மணிக்குள் இன்னொன்றும் என இரண்டு ஊசிகள் - மருத்துவர்கள் முன்னெச்சரிக்கையாகவே செயல் பட்டனர் மஞ்சள் காமாலை வராமல் இருக்க.

மருத்துவர்களின் அலட்சியப் போக்கை ஒரு முறைக் கண்டால் அந்த மருத்துவமனைப் பக்கம் திரும்புவது கூட கிடையாது

goma said...

வயிற்றைக் கலக்கும் வேதனை.
தக்க சமயத்தில் நோயினைக் கண்டு அதற்கான மருத்துவத்தையும் செய்ய வைத்த இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
குழந்தை பல்லாண்டு வாழ வாழ்த்துக்களும் ஆசியும் பதிவர்கள் அனைவர் சார்பில் சொல்லிக்கொள்கிறேன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

டவுட் பேரு மாத்திட்டீங்களா?
இவனையும் பிறந்தப்ப நர்சரியில் வச்சிக்கிட்டாங்க..அம்மாவுக்கு வலி மறக்க ஊசிப்போட்டுட்டு அவனை அங்க வச்சிக்கிட்டாங்க...இப்ப நர்சரி ஈ செக்ஷனுக்கு போறான் :)
----------------------------
ஆமாம் முல்லை மனசுக் கஷ்டத்தோட எனக்கு உடல்கஷ்டமும் இருந்தது..
பயங்கரக்கனவு போல தான் இருக்கு..
-----------------------------
சின்ன அம்மிணி சின்னப்புள்ளைங்களுக்கு வலி சீக்கிரம் காணாப்போகிடுமாம்.. அவன் ஆப்பரேசனுக்கப்பறம் ஜாலியா இருந்தான்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஜீவ்ஸ் .. பையன் பிறந்த மருத்துவமனை கொஞ்சம் தூரமே என்று இந்த டாக்டர் சொன்ன டாக்டரிடமே காட்டச் சென்றோம் . இனி அந்த பக்கமே தலைவைக்க மாட்டோம்.
--------------------------
கோமா வாங்க.. அது தான் எங்க அம்மாவும் சொன்னாங்க.. ப்ரசவத்துக்கு வந்த அவர்களும் அந்நேரம் துணைக்கிருந்ததால் எனக்கு எத்தனையோ தைரியம்.

கோபிநாத் said...

கடவுளே..!!!!!!

"உழவன்" "Uzhavan" said...

உங்கள் முகம் எனக்கு தெரியாது; உங்கள் குழந்தையின் முகமும் எனக்குத் தெரியாது. ஆனால் உங்களின் பரிதவிப்பையும், அழுகையையும் இப்படித்தான் இருக்குமென்று உணரமுடிந்தது. கண் கலங்குகிறது :-(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா கோபி அந்த கடவுள் தான் தக்க சமயத்தில் காப்பாத்திட்டார்..
----------------------
உழவன் நன்றி... அந்த நேரத்தில் இன்னொரு குழந்தை வாயில் கொசுவத்தி மேட் குட்நைட்டை போட்டு கடிச்சு தின்னுடுச்சாம்.. ஓடிவந்தாங்க தூக்கிட்டு.. பகீரென்று தான் இருந்தது... தேடிப்போவது தானாக வருவது விதவிதமான சோகங்கள்..

sindhusubash said...

படிச்சிட்டு மனசு கனத்துபோயிச்சு. குழந்தைக்கு ஒரு ஊசி போட போனா கூட நம்ம மனசு பதபதச்சு போகும்...அதில் இத்தனை வேதனைன்னா....