February 25, 2010

சொந்த அம்புகள்


எங்கோ நிகழ்ந்ததாம்
மரணங்களை
செவியோரமாய் வாங்கியபடி
உறைபிரித்து உள்ளே தள்ளிய
ஒருசதுர ஒயின்சாக்லேட்
எவருடனோ எவரோ பெற்ற
வெற்றி எக்களிப்பு குரல்கள்
ஓசை நரம்புகளைத் தொடுகையில்
கசப்புணர்வாய் நாக்கடியில்
தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும்

இதயம் துளைத்துப் புக
சோக அம்பென்றாலும்
சொந்த அம்பாயிருத்தல் அவசியம்
தனதல்லாத துயரங்களும் இன்பங்களும்
தீண்ட முடியா புற்றுக்களாய்
சூழ வளர்த்திருக்கும் தவங்கள்
தனக்கான துயரதினத்தில்
வெட்கம் துறந்து
வேற்றுக்கரம் பற்ற
புற்றின் மேலாக நீண்டிருந்தது.

ஈழநேசனில் வெளிவந்த என் கவிதை.

38 comments:

Thekkikattan|தெகா said...

இதை இப்பத்தான் இங்கே கொண்டு வாரீங்களா... நல்ல வாசிப்பிற்குண்டான கவிதைங்க..

///சோக அம்பென்றாலும்
சொந்த அம்பாயிருத்தல் அவசியம்...// அனுபவப் பூர்வமான உண்மை :)

கபீஷ் said...

நல்லாருக்கு. :-)
ஸ்மைலிக்கும் நல்லாருக்குக்கும் சம்பந்தமில்லை.

Thamiz Priyan said...

கவிதை உணர்வு எல்லா தேசங்களிலும், எல்லா இனத்திற்கும் பொதுவானதாகி விட்டது..

முகுந்த்; Amma said...

//எங்கோ நிகழ்ந்ததாம்
மரணங்களை
செவியோரமாய் வாங்கியபடி //

இன்றைய காலத்தில் எங்கோ நிகழும் மரணங்கள் மனதில் ஒட்டாமல் பிற hi-tech விசயங்களால் மழுங்கடிக்க படுவது நிதர்சனமான உண்மை. நல்ல கவிதை முத்துலட்சுமி அவர்களே.

சாந்தி மாரியப்பன் said...

சொந்த அம்புகளால் சோகம் கூடுமே முத்துலெட்சுமி....

பிரபாகர் said...

//வெற்றி எக்களிப்பு குரல்கள்
ஓசை நரம்புகளைத் தொடுகையில்
கசப்புணர்வாய் நாக்கடியில்
தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும்
//
நிதர்சனமான வரிகள்.

பிரபாகர்.

Anonymous said...

//தனதல்லாத துயரங்களும் இன்பங்களும்
தீண்ட முடியா புற்றுக்களாய்//

அருமையா இருக்கு.
யாருக்கோன்னு நினைச்சா என்னைக்காகவது அவங்கவங்களுக்கும் வரலாமோ.

நசரேயன் said...

ரெண்டு மூணு தடவை படிச்ச பிறகுதான் எதோ புரிஞ்ச மாதிரி இருக்கு

கோபிநாத் said...

உள்ளேன் அக்கா ;)

Chitra said...

இதயம் துளைத்துப் புக
சோக அம்பென்றாலும்
சொந்த அம்பாயிருத்தல் அவசியம்

.............. மனதை குத்திய உண்மை அம்பு..........

புலவன் புலிகேசி said...

:))

அம்பிகா said...

\\இதயம் துளைத்துப் புக
சோக அம்பென்றாலும்
சொந்த அம்பாயிருத்தல் அவசியம்\\
அருமையான வரிகள்.
அருமையான கவிதை.
சோகத்தைக் கூட சொந்தம், அசல்
என தரம் பிரிக்கும் சுயநலத்தை
எடுத்துக்காட்டும் வரிகள்.
நல்லாயிருக்கு முத்துலெட்சுமி.

settaikkaran said...

//இதயம் துளைத்துப் புக
சோக அம்பென்றாலும்
சொந்த அம்பாயிருத்தல் அவசியம்//

வலியுண்டாக்கிய வார்த்தைகள்! கவிதை அருமை!!

கோமதி அரசு said...

//சோக அம்பென்றாலும் சொந்த அம்பாயிருத்தல் அவசியம்//

ஆம் உண்மை,முத்துலெட்சுமி.

சொந்தம் என்றால் தான் காடு (சுடுகாடு) வரை.இல்லை என்றால் வீடுவரை.

நமக்கு சம்மந்தம் இல்லாமல் ஏற்படும்
மரணங்களை செவியோரம் வாங்கி அந்த நிமிடம் அனுதாபம் தெரிவிப்போம்.

சொந்தங்களுக்கே, நீரில் மூழ்கி நினைப்பொழிந்தாரே என்ற பாடல் உள்ளது.

விக்னேஷ்வரி said...

நல்லாருக்குங்க

ராமலக்ஷ்மி said...

இதயம் உறுத்தும் உண்மையாய் இவ்வரிகள்:

//இதயம் துளைத்துப் புக
சோக அம்பென்றாலும்
சொந்த அம்பாயிருத்தல் அவசியம்
தனதல்லாத துயரங்களும் இன்பங்களும்
தீண்ட முடியா புற்றுக்களாய்//

நல்ல கவிதை முத்துலெட்சுமி.

கண்மணி/kanmani said...

அருமை முத்துலஷ்மி.நமக்குன்னு வரும்போதுதானே துக்கமும் வேதனையும்.
துக்க வீட்டில்கூட் சிரிப்பவர்களைப் பார்ப்பது சகஜம்தான்.
வெகு யதார்த்தம்

அப்புறம் இந்த கோபிநாத் கமெண்ட் வந்தால் பிரசுரிக்க வேனாம்.தானும் பதிவு போடுறதில்லை.
வெறும் அட்டெண்டண்ஸ் மட்டும்.

☀நான் ஆதவன்☀ said...

nice kka

சந்தனமுல்லை said...

:-((
இதயம் துளைக்கவென்றானபின் சொந்த அம்பென்ன...அயல் அம்பென்ன?!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி தெகா , வீட்டில் ரினவேசன் வேலை நடப்பதால் புதிதாக எழுத நேரமில்லாதபோது கொஞ்சம் பழயதை சேமித்துக்கொள்ளலாம் என்றுதான்.. :)

அனுபவபூர்வமான உண்மை// ஆமாம் ஆனால் குரூரமான உண்மை இல்லையா ? :(
--------------------
நன்றி கபீஷூ :)
ஒன்னுமில்ல உங்க பேரு தான் வாலு கொஞ்சம் நீண்டுருச்சு.. :)
--------------
நன்றி தமிழ்ப்ரியன் .
-----------
முகுந்தம்மா அதே தான்.. எத்தனை கோரங்களை நியூஸில் பாத்த்க்கொண்டே உணவருந்த நேருகிறது. சுவைக்குறைகள் தெரியத்தானே செய்கிறது.

ஆயில்யன் said...

உள்ளேன் அக்கா :)

அமுதா said...

/*இதயம் துளைத்துப் புக
சோக அம்பென்றாலும்
சொந்த அம்பாயிருத்தல் அவசியம் */
உண்மை

"உழவன்" "Uzhavan" said...

அருமை. வாழ்த்துகள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

///சோக அம்பென்றாலும்
சொந்த அம்பாயிருத்தல் அவசியம்...//

அனுபவபூர்வமான வரிகள்.

எவ்வளவோ பார்த்து கேட்டு சங்கடப்பட்டாலும் எல்லாத்தையும் நம் மனம் சுமப்பதில்லையே, அப்படியே விட்டுட்டு அடுத்த வேலையை பார்க்க போறோமில்லையா.

ஈழநேசனில் வெளிவந்தததற்கு வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அமைதிச்சாரல் அதுக்கு மட்டும் தான் உண்மையில்ன்னு சொல்லவ்ரேன்.
----------------------
நன்றி பிரபாகர்
------------------------
அதே அதே சின்னம்மிணி;)
------------------------

நன்றி சித்ரா ,கோபி,நசரேயன், புலவன் புலிகேசி, அம்பிகா, சேட்டைக்காரன், விக்னேஷ்வரி, கோமதிம்மா, ராமலக்‌ஷ்மி, நான் ஆதவன்,ஆயில்யன் , அமுதா
----------------

முல்லை அயல் அம்புகள் அந்நேரத்து பாதிப்புகள் மட்டுமே..என்று தோண்றியதால் எழுதினேன்ப்பா
--------------------------
நன்றி ..கண்மணி கோபிஎல்லாம் எதோ பின்னூட்டம் மட்டும் ஆஜர் ஆகிறாங்க.. இல்லன்னா ப்ளாக்கர்ங்கரதே அவங்களுக்கு மறந்து போயிடுமேன்னு தான் :)

கானா பிரபா said...

கவிதையை "உணர்ந்தேன்"

சென்ஷி said...

ஈழநேசன்லயே படிச்சிருக்கேன்க்கா.. எனக்குப் பிடிச்சிருந்தது..

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{ இதயம் துளைத்துப் புக
சோக அம்பென்றாலும்
சொந்த அம்பாயிருத்தல் அவசியம் }}}}}}}}}

கவிதை அருமை . வாழ்த்துக்கள் !

அன்புடன் அருணா said...

/இதயம் துளைத்துப் புக
சோக அம்பென்றாலும்
சொந்த அம்பாயிருத்தல் அவசியம்/
நல்லாருக்கு முத்துலக்ஷ்மி.

க.பாலாசி said...

ரெண்டாவது பத்திய இன்னும் கொஞ்சம் தெளிவுபடுத்தியிருந்தா என்னோட குழந்தைத்தனத்திற்கும் புரிந்திருக்கும்...

டவுசர் பாண்டி... said...

பதிவுகளையும், பின்னூட்டங்களையும் படிக்கும் போது தொலைந்து போனவனின் உணர்வுதான் வருகிறது.

பதிவுலகை விட்டு வெகுதூரம் போய் விட்டேன் போலிருக்கிறது.

நிறைய புதிய பதிவர்கள்....என்னை போலவே ஹி..ஹி....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கானா மிக்க நன்றி
--------------------------
நன்றி சென்ஷி
---------------------
சங்கர் நன்றி
-------------------
அருணா நன்றி
--------------------
டவுசர் பாண்டி உங்க பேர் நல்ல பொருத்தமுங்க..டவுசர் போட்ட சின்னப்பையன் மாதிரியே அடிக்கடி காணாப்போயிட்டே இருக்கீங்க.. பெரியவரா இருந்தா காணாமலே போகனும்ன்னு அடையாளங்க்ளை விட்டுப் போகமாட்டாங்க.. :P

உயிரோடை said...

வாழ்த்துகள் முத்துலெட்சுமி. கவிதை நன்றாக இருக்குங்க

பா.ராஜாராம் said...

மிக அருமையான கவிதை.ரொம்ப பிடிச்சிருக்கு முத்துலெட்சுமி!

சாமக்கோடங்கி said...

சோகத்தைப் பகிர்வது உண்மையில் கடினம்...

நன்றி..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி லாவண்யா நன்றி பா.ராஜாராம்.. கவிஞர்களுக்கு பிடித்திருப்பது மகிழ்ச்சி :)

+Ve Anthony Muthu said...

//தனக்கான துயரதினத்தில்
வெட்கம் துறந்து
வேற்றுக்கரம் பற்ற
புற்றின் மேலாக நீண்டிருந்தது//

ஆம்.

+Ve Anthony Muthu said...

//தப்புக்கணக்கிட்டுத் தானொன் றெதிர்பார்த்தால் ஒப்புமோ இயற்கைவிதி? ஒழுங்கமைப்புக் கேற்றபடி அப்போதைக் கப்போதே அளிக்கும் சரிவிளைவு. எப்போதும் கவலையுற்று இடர்ப்படுவார் இதைஉணரார்.-மாக்கோலம்//

இதுவும் ரொம்ப நல்லா இருக்கு.....