May 11, 2010

தில்லியில் திடீர் அரண்மனைகள்






கார் போய்க்கொண்டே இருந்தது. கையில் இருந்த வரைபடத்தில் குறிப்பிட்டு கேட்கவேண்டி இருந்த இடம் வந்தபாடில்லை. இப்படியே போனால் புதிய சண்டி துளசி இருக்கும் சண்டிகருக்கே சென்றுவிடுவோம் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அடுத்த ஊரில் நடக்கும் திருமணத்துக்கு அழைத்துக்கொண்டுவந்துவிட்டீர்களே என்றோம். ரோகினி எங்கே ? என்று ஒரு தலைக்கவசம் விற்பவரைக் கேட்டோம். அவளை எனக்குத் தெரியாது என்று சொல்வாரென்று எதிர்பார்த்தேன் . அவர் எனக்குத்தெரியாது என்று மட்டும் சொல்லி முடித்துக்கொண்டார். இவர்களைப்போல தொழில் செய்பவர்கள் ஊரூராய் நாடோடிகள் போல நகர்பவர்களாக இருக்கும்.

கணவரின் கூட வேலை செய்வர் தன் சகோதரியின் திருமணத்துக்கு அழைத்திருந்தார். விசாரித்து விசாரித்து ஒருவழியாய் அரண்மனையை அடைந்தோம். தில்லியில் திடீர் திடீர் அரண்மனைகள் முளைக்கும். இன்று மாலை இருக்கும் கோட்டை அடுத்த நாள் காலையில் இருக்காது. ஈட்டிகளோடு வாயிற்காப்போனும் மலர் சொறிதலும் கூட சில சமயம் உண்டு.

சக்தி டெண்ட் காரர்கள் உபயத்தில் ஒரு பூங்கா அரண்மனையாக உருமாறி இருந்தது. பரிசிலும் கிடைத்தது. நுழைந்துகொண்டிருந்தவர்களுக்கு எல்லாம் 21 ரூ கவரில் வைத்து கொடுத்துக்கொண்டிருந்தார்கள். எங்களுக்கும் கிட்டியது. மகளே வாங்கிக்கொள் என்று பெரியவர் கொடுத்தார். அவர் மணமகளின் தந்தையாக இருக்கலாம். இதுவேறு செலவா?

புதியதொரு கார் . மாப்பிள்ளைக்குத் தான். வாயிலின் மறுபக்கத்தில் கட்டில் மெத்தையிலிருந்து அதில் மாற்றி மாற்றி இட 7 போர்வைகளும் , துவைத்தல் சமைத்தலுக்கு எல்லா எல். ஜி தயாரிப்புகளும் , கேஸ் சிலிண்டரும் பாத்திரங்களூம் என ஒரு வீட்டிற்கு தேவையானவையும் அதற்கு அதிகமானவையும் இருந்தது. மொத்தமாக செலவுக்கணக்குக் கூடிக்கொண்டே போகிறதே!!

எங்கெங்கு காணிலும் ஆண்கள் ஆண்களே.. ஆங்காங்கே நீள் மெத்தை இருக்கைகள் .நடுவில் மேசையுடன். பெரிய பெரிய பூஞ்சாடிகள் என்று மயன்மாளிகை அலங்காரங்கள் , உப்பரிக்கைகள். மிக மிகத் தொலைவில் மேடை. பன்னீர் தெளிக்கும் காத்தாடிகள். பேல்பூரி , பானிபூரி , ஐஸ்கீர்ம் , உருளை போண்டா , நூடுல்ஸ் , ரொட்டிகள் என கடைகண்ணிகள் அது ஒரு சிற்றூரின் கடைத்தெருவைப்போல இருந்தது . என்னையும் மகளையும் தவிர ஒரே ஒரு பெண் தெரிந்தார். மற்றபடி பெண்களெல்லாம் மாயமாய் மறைந்திருந்தனர். அது இஸ்லாமியத் திருமணமாகிற்றே.

வாயிலில் சற்றே பரபரப்பு . மணமகன் தலையிலிருந்து கால் வரை ரோஜாக்களால் மறைத்து மூடிய முகமூடியோடு மெதுவாக மிக மெதுவாக.. வந்தார். . பெண்கள் பகுதிக்கு நகரத்தொடங்கினோம் நானும் மகளும்.

நுழைவாயில் அருகேயே பெண்களுக்கு என தனிவாயில் இருந்திருக்கிறது. பெண்கள் பகுதிக்கு நுழைந்ததும் எங்களுக்கு பகீரென்றது. அது மிகச்சிறியதும் அலங்காரங்களிலும் ஆண்கள் பகுதிக்கும் இதற்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். என்ன அநியாயம். ஆனால் ஆண்கள் பகுதியில் வெறும் வெள்ளை சந்தன நிற ஷெர்வானியோ அல்லது சாதா குர்தாவோ பார்த்து விட்டு இங்கே நுழைந்தால் கண் கூசுகிறது. பெண்கள் ஜரி என்னும் அலங்கார வேலைப்பாடுகள் செய்த உடைகளாலும் கைகளிலும் கால்களிலும் பளபளப்பான வளையல் காலணி என ஜொலித்தார்கள். நானும் மகளும் மட்டும் தனித்தே தெரிந்திருப்போம்.

ஆனால் அங்கே சில ஆண்கள் இருக்கத்தான் இருந்தார்கள். அதுவும் நான்கு சிறுவயது ரோமியோக்கள் அங்கேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். உட்கார இடமே இல்லை. இருந்த இடங்களில் எல்லாம் பெண்கள் குழுமி இருந்தார்கள். எல்லாரும் சிக்கனும் மட்டனும் வெளுத்துக்கொண்டிருந்தார்கள். நாங்கள் எல்லாருடைய அனார்கலி சுடிதார்களை நோட்டமிட்டு கொண்டே அப்படியே கொண்டையலங்காரங்களை பற்றி அலசி விட்டு நூடுல்ஸ் எடுத்துக்கொண்டோம். பின் ஒரு ஓரமாக கிடைத்த மேஜையில் நின்று கொண்டே ரொட்டியும் சென்னாவும் சாப்பிட்டோம். அப்போது அங்கே ஒரு பெண் முக்காடு இட்டு வந்து அமர்ந்தார்.

அமர்ந்ததிலிருந்து எண்ணையில் போட்ட கடுகு போல பொறிந்து தள்ளினார். அங்கே உக்காராதே இங்கே உக்காராதே எனச் சொல்லுகிறார்கள். பார்! போன கல்யாணத்தில் அங்கே உக்கார்ந்தேன். அங்கே பசங்க வருவாங்க என்று திட்டினார்கள் . ஊரார் என்ன சொல்வார்கள் என்றார்கள். இதோ இங்கே உக்கார்ந்திருக்கிறேன். வந்ததும் ஏன் இங்கே விற்பனையாளர்கள் ஆண்களில்லையா என்பார்கள் கேள்! மூலையை ஏன் தேர்ந்தெடுத்தாய் எனவும் சொல்வார்கள்.. அவர்கள் இவர்கள் எல்லாரும் என்ன சொல்வார்கள் என்று திட்டுவார்கள் பார்! , என்றாள் ,. அதுவே நடந்தது.

எங்களைப்பார்த்து நீங்கள் என்ன வெறும் ரொட்டி சாப்பிடுகிறீர்கள் இதெல்லாம் டேஸ்ட் செய்வதில்லையா என்று கேட்டார்கள். வெஜ் என்று சொன்னதும் ”பாவம்” என்று முடித்துக்கொண்டார்கள். நாங்கள் இருந்தவரையிலும் மணப்பெண் வரவே இல்லை. ஆனால் நாங்கள் முக்காடிட்டு அமர்ந்திருக்கிற நாலைந்து பெண்களை அதுதான் மணமகளோ என நினைக்கும்படி இருந்ததால் இது தபுசமா என்று விசாரித்துக்கொண்டிருந்தோம். எங்களை விநோதமாகப் பார்த்தார்கள். அது சரி அலங்காரம் அப்படி இருந்தால் எங்கள் மேல் என்ன தவறு.

முதல் முதலாக கணவனும் மனைவியும் பிரிந்து இருக்கும் திருமணம் இல்லையா என்று கேட்டார் நண்பர். ஆமாம் இப்படித்தான் இருக்குமென்று எதிர்ப்பார்த்தேன். என் பள்ளித்தோழி கல்யாணத்தில் ஆண்களும் பெண்களூம் தனியாக இருப்பதை நம் ஊரிலும் பார்த்திருக்கிறேன். அப்போது வெஜ் பிரியாணி இருந்தும் கூட வந்திருந்த மற்றொரு தோழியின் கட்டாயத்தால் உணவருந்தாமலே பஸ் ஏறினோம்.

வீட்டுக்கல்யாணங்களில் பேதமின்றி அனைவரும் வட்டமேஜை மாநாடு போட்டு மாமாக்களும் சித்தப்பாக்களும் அத்தைகளும் என கொண்டாடியதெல்லாம் நினைவுக்கு வந்தது. கடுகு பொறிந்தவர்களைத் தவிர மற்றெல்லோரும் மகிழ்ச்சியாகவே இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். மொத்த கல்யாணமும் 30 லட்சம் செலவாம்...


இத்தனையும் உங்களூக்கு அந்த அரண்மனையைக் காட்டத்தான். என்ன ஒரு கடவுளின் சித்தம் பாருங்கள் படத்தில் பெண்களின் மேடையலங்காரம் தான் அழகாக வந்திருக்கிறது. ராயலாக.. :) ஆனால் கோட்டையின் சுற்று அலங்காரம் என்ன சொல்லுங்கள் ஆண்கள் பகுதிதான். பெண்கள் பகுதியில் சுற்று அலங்காரமே இல்லை. ..



24 comments:

Thamiz Priyan said...

இத் திருமணம் இஸ்லாமியத் திருமணம் அல்ல.. முஸ்லிம் பெயர்களை வைத்துக் கொண்டவர்கள் செய்த வீண் விரயம்... :(

☀நான் ஆதவன்☀ said...

அரண்மனை எல்லாம் நல்லா வந்திருக்கேக்கா.

முஸ்லீம் கல்யாணத்துக்கு போயிட்டு பிரியாணி சாப்பிடாம வ்ந்துட்டிங்களேக்கா.

முகுந்த்; Amma said...

அரண்மனைகள் அழகாக இருந்தாலும்,
எப்படி எல்லாம் ஆடம்பர திருமணங்கள் நடக்கிறது பாருங்கள் என்ற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை.
தமிழ் பிரியன் சொன்னது போல வீண் விரயம் என்ற எண்ணமே ஓங்கி நிற்கிறது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ தமிழ்ப்ரியன் முன்னோர்கள் சொன்ன கட்டுப்பாடுகள் எல்லாம் இன்றைய பணம் என்னும் சொல்லுக்கு கட்டுப்படுவதில்லையே, புதியசட்டங்களுக்கு ஆட்பட்டாக வேண்டிய சூழ்நிலையே நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அருகே நடக்கும் நன்மையின் தாக்கம் அனைவருக்கும் வருவதில்லை. இது மத சம்பந்தப்பட்டது அல்ல இந்து திருமணங்களும் இவ்வாறே ஆடம்பரமாக நிகழ்கின்றன.. நான் அலங்காரத்தில் பெண்கள் பகுதியை கவனிக்காமல் விட்டுவிட்டார்களே என்று மட்டுமே நொந்துகொண்டேன். தந்தையின் கடனை நினைத்து நொந்து கொண்டேன். நாளை நன்மையை சுட்டிக்காட்டுகிறேன்

சந்தனமுல்லை said...

ஹைய்யோ...முஸ்லிம் கல்யாணம்னா எங்க ஊருதான்பா!செம ஜாலியா கலர்புல்லா இருக்கும் - பிரியாணி வாசனையோட அதுவும் கும்பலா உட்கார்ந்து நடுவுலே பிரியாணி குண்டாவை வச்சுக்கிட்டு.....சான்சே இல்ல...விகற்பமில்லாம பழகுவாங்க...நான் அட்டெண்ட் பண்ணின கல்யாணத்தை பார்த்த வரைக்கும் சொல்றேன்...ம்ம்..பெரிம்மாக்கிட்டே கேக்கணும்.அடுத்து யார் கல்யாணம் வருதுன்னு! :-)

ஆயில்யன் said...

நம்ம ஊர்ல குதிரையில மாப்பிள்ளை ஷெர்வானி டிரெஸ் பண்ணிக்கிட்டு வலம் வருவதும்,குதிரை டான்ஸும் பார்த்ததுண்டு ! வளைகுடா கல்யாணமெல்லாம் இப்படி செட்டிங்க்ஸ் போட்டுத்தான் நடக்கும் இங்கே!


//ஹைய்யோ...முஸ்லிம் கல்யாணம்னா எங்க ஊருதான்பா!//

ஆச்சி ஒரு திருத்தம் ‘எங்க ஊருதான்பா’ வரகூடாது ‘எங்க ஊர்ல எம்மாம் பிர்யாணி’ அப்படி வரணும் :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இங்க ப்ரியாணி இருந்ததான்னு தெரியல ஆதவன்.. :( ஆனா அன்னைக்கு என் ப்ரண்ட் கல்யாணத்துல சாப்பிடாம வந்துட்டு ஒரே ஃபீலிங்க் தான்.. அதும் பெரிய தட்டுல மொத்தமாக் கொட்டி அவங்க வச்சிருந்தது பாத்து ஆசையா இருந்தது தான்..
-----------------------
ஆமா முகுந்த் அம்மா.. நம்ம ஊருல மண்டபம் இங்கே செட்டிங்.. செலவுல ஒன்றும் மாற்றமில்லை என்றே தோன்றுகிறது. அது நம்ம வசதி மாப்பிள்ளையோட ரேட் பொறுத்து இருக்கிறது.
------------------------
முல்லை வராங்கன்னு முதல்ல்யே ரெண்டு குண்டான் சேத்து செய்யச் சொல்லனுமா அப்படியே ...:)
-------
ஆயில்யன் ஆமா நம்ம ஊரு ஏவிசி கல்யாணமண்டபத்துலயே பேல்பூரி , சாட் ஐயிட்டம்ன்னு இதே போல கடைகண்ணி வச்சு நடக்குதாமே கல்யாணம்..

அம்பிகா said...

அரண்மனை அலங்காரங்கள் அருமை.
\\இது மத சம்பந்தப்பட்டது அல்ல இந்து திருமணங்களும் இவ்வாறே ஆடம்பரமாக நிகழ்கின்றன..\\
உண்மைதான்.
அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்.

Thekkikattan|தெகா said...

என்னது 30 லட்சமா..... அவ்வ்வ்வ்

//அது நம்ம வசதி மாப்பிள்ளையோட ரேட் பொறுத்து இருக்கிறது.//

இது செம கும்மாங்குத்து ...ஹாஹாஹா

Chitra said...

royal treat.... :-)

நசரேயன் said...

//மொத்த கல்யாணமும் 30 லட்சம் செலவாம்...//

மொய் பணம் எவ்வளவு வந்து இருக்கும்?

goma said...

கல்யாணச்செலவு 30 லட்சம்...!!!!
ஒரு முடிச்சுக்கு 10 லட்சம்....

இனிமேல் இப்படித்தான் வசனம்
இருக்கும் .....

ஒரு முடிச்சுக்கு ,2 லட்சத்துக்கு ஒரு பைசா குறைக்க மாட்டோம்....

goma said...

முடிச்சுக்கு 20 லட்சம் என்றிருக்க வேண்டும்....ஒரு 0 இல்லையென்றால் எல்லாமே ziரோதான்

துளசி கோபால் said...

யா...அல்லா!!!!!!!


இப்பெல்லாம் எந்த மதம் என்றில்லாமல், தங்களுடைய 'பலத்தை' உலகுக்குக் காமிக்கத்தான் (குறிப்பாக எதிரிகளுக்கு!)திருமண ஏற்பாடுகள்ன்னு ஆகி இருக்கு.


கல்யாணம் முடிஞ்ச கையோட வண்டியை இந்தப் பக்கம் திருப்பி இருக்கலாம் நீங்க. வெறும் 4 மணி நேரப் பயணம்தான்.

வெங்கட் நாகராஜ் said...

இன்றைய திருமணங்கள் எல்லாம் ஆடம்பரமாகவும் பணத்தைத் தண்ணீராக செலவு செய்தும் நடக்கின்றன. இவை தவிர்க்க வேண்டிய செலவுகள். அடுத்தவர் மெச்ச இத்தனை ஆடம்பரம் தேவையா? மக்கள் எப்போது உணர்வார்கள் என்று புரியவில்லை.

வெங்கட் நாகராஜ்

சாந்தி மாரியப்பன் said...

முத்துலெட்சுமி, வடக்கத்திய திருமணங்கள் எல்லாமே, அது எந்த மதமா இருந்தாலும் இப்படித்தான் செட் போட்டு ஆடம்பரமா நடக்குது.

பொண்ணுக்கு குடுக்கிற சீர்வரிசைகளை கண்காட்சி வைக்கிறதும் இங்கே வழக்கம்தானே..

கபீஷ் said...

இனிமேல் பொண்ணுங்க பக்கமும், பசங்க பக்கம் மாதிரி அலங்காரம் செய்யப்பட ஆவண செய்யப்படும்.:-)))) கண்ண தொடச்சுகோங்க.

எங்க ஊர்ல முஸ்லிம் கல்யாணத்துல பெண்கள்,ஆண்கள்னு தனி ஏரியா கிடையாது. ஒரே ஹால்ல ஒரு பக்கம் அவங்க இன்னொரு பக்கம் இவங்கனு இருப்பாங்க.முந்தின நாள் மெஹந்தி வைக்கறப்போ மட்டும்தான் பெண்கள் மட்டும் இருப்பாங்க, ரொம்ப ஜாலியான பார்ட் முஸ்லிம் கல்யாணத்துல.

வல்லிசிம்ஹன் said...

அரண்மனை வெளியே நன்றாகத்தான் இருக்கிறது. செலவுதான்.:(
நம்ம சென்னையிலியே பராத் எல்லோரும் வைக்கிறார்கள்.வட,தென்
எல்லோரும்தான்.

settaikkaran said...

திருமணச்செலவு என்பது பணவிரயத்தின் குறியீடுகளாக மாறியிருப்பதை செரிக்கக் கடினமாயிருக்கிறது. ஆனால், படங்கள் ஒவ்வொன்றும் அருமை என்று சொல்லித்தான் ஆக வேண்டும்; வழமை போல சுவாரசியமான நடை! நன்று! :-)

ராமலக்ஷ்மி said...

எல்லா மத, மாநிலத்திலும் இம்மாதிரியான ஆடம்பரங்கள் இருந்து வரவே செய்கின்றன. திடீர் அரண்மணையை அப்படியே பதிவுக்கு நகர்த்திக் கொண்டு வந்திருக்கிறீர்கள் அழகான படங்களாய்:)!

கோமதி அரசு said...

முத்துலெட்சுமி,பெண்கள் பகுதி அலங்காரம் குறைவுக்கு காரணம்:

பெண்கள் ஜரி ஆடைகள் அப்போதுதான் கண்ணைகவரும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி அம்பிகா
-----------------------
தெகா :)
----------------
ஆமாங்க சித்ரா..நாங்களும் ராணியாட்டம் கொஞ்ச நேரம்
பன்ன்னீரில் நனைந்து சிவப்பு கம்ப்ளத்தில் நடந்தோமில்ல
------------------
தெரியல .. நாங்க பணமாத்தான் வச்சோம்.. அங்க அடுக்கி இருந்த பொருட்களைப்பாத்துட்டு நலல்வேளை பணமா வச்சோம்ன்னு நினைச்சேன். அங்க இருந்ததில் இல்லாத எதை நாங்க வாங்கி இருக்கப்போகிறோம்..?
:)
-------------------
கோமா வாங்க.. ஜோக்காத்தாங்க இருக்கு வாழ்க்கை.. நாமும் ஜோக்கர் ஆகிடறோம்..
-------------------
துளசி ஆமா அந்த ராத்திரியில் ஹை வே சூப்பராக இருந்திருக்கும்..
-------------------
நன்றி வெங்கட்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அமைதிச்சாரல் உண்மைதாங்க எல்லா இடங்களிலும் மதங்களிலும் இது நடக்கிறது. கொண்டாடறாங்கங்க.. ஜாலியா.. நான் மதத்தை குறிப்பிட்டது ஒன்லி ஃபார் பிரிச்சி வைச்சிங்க் ..
-------------------------
கபீஷ் நீங்கதாங்க என்னை சரியா புரிஞ்சுகிட்டீங்க.. இந்தா துடைச்சிக்கிட்டேன் .அநியாயட்தை தட்டிக்கேட்ட கபிஷ் வாழ்க.
----------------------------
வல்லி எத்தனை லைட்டுங்க்றீங்க.. பகல் போல் வெளிச்சம் வெற.. :)
-----------------------------
நன்றி சேட்டைக்காரன்.. எங்க போனாலும் பதிவெழுதத்தானே யோசிக்கிறதாப்போச்சு.. ;)
-----------------------------------
நன்றீ, ப்ரபசனல் போட்டோகிராபர் ராமலக்‌ஷ்மி .. :)
----------------------------
எல்லாத்தையும் பாஸிட்டிவா பாக்கறீங்களே கோமதிம்மா.. நல்லா இருக்கு ..

மாதேவி said...

"அரண்மனை திருமணம்" படங்களில் வருவதுபோல அசத்தலாக இருக்கு.

எல்லோரும் கூறியதுபோல் இவ்வளவு ஆடம்பரம் தேவையானதா...? சிந்திக்க வேண்டியதே.