September 14, 2010

யமுனையின் தண்ணீர் போர்!!!!!


ஆசியாவில் மிகப்பெரிய கோயிலாக அக்ஷர்தாம் தில்லியில் யமுனையின் கரை மீது கட்டப்பட்டபோதே இது யமுனையின் கரையில் கட்டப்படலாமா என்று பலர் கேட்டிருந்தார்கள். கூடவே காமன்வெல்த் க்ராமமும் அங்கேயே கட்டப்பட்டது. அதற்கு செல்வதற்காக ஒரு பாதையும் அமைக்கப்பட்டது அப்பாதை மிக உயரமாக ஒரு அரண் போல கோயிலைச் சுற்றிக்கொண்டு கட்டப்பட்டது. என்றாவது யமுனையில் வெள்ளம் வரும்போது அது இந்த ஆற்றுபடுகையின் கோயிலைப் பாதிக்காதவண்ணம் தான் ஏற்படுத்தப்பட்டிருக்கவேண்டும்.


நான் திருமணமாகி வரும் முன் (13 வருடத்துக்கு முன்பு எப்போதோ)பாலத்தின் மேலேயே தண்ணீர் வந்ததுண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.இம்முறை மழை எப்போதும் இல்லாமல் பெய்து தீர்க்கிறது. காமன்வெல்த் கேம்ஸில் மனிதனாக ஊழல்கள் செய்து உள்குத்து குத்திக்கொள்ளும் போது இயற்கையும் வெளியிலிருந்து சதி செய்கிறது. சாக்கடையாக ஓடிக்கொண்டிருந்த யமுனா உயிர்பெற்றிருக்கிறது. வருகின்ற வெளிநாட்டினரை யமுனையில் இறங்க விடக்கூடாது . அது மிக அசுத்தமானது என்றார்கள். இன்று அது புதுப்புனலாக இருக்கிறது. டெங்குவைத் தரும் குட்டைகளை தன்னகத்தே வைத்துக்கொண்டு நகரமும் காமன்வெல்த் கிராமமும் பல்லிளிக்கிறது. இயற்கையை மதிக்காதவனுக்கு இயற்கையே செய்த சதியா?


யமுனையை சுத்தப்படுத்த சுத்தப்படுத்த என்று கோடிக்கணக்கில் பணத்தை போட்டதாக தங்கள் கரங்களை கறைகளாக்கிக் கொண்டார்கள்.யமுனை தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொண்டாள்.
சாக்கடைகளை நேராக கலக்காமல் ஆற்றுப்படுகைகளை கட்டிடங்களுக்கு என கையகப்படுத்தாமல் இருந்தாலே இயற்கையாக ஆறு ஓடிக்கொண்டிருக்கும். யமுனையை ஒட்டிய கால்வாய்களை எல்லாம் கூட சிறியதாக்கி அதன் மேல் சாலைகளைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் :(

யமுனைப்பாலத்தின் ஒரு பக்கம் கோயில் மறுபக்கம் யமுனையின் கரையில் பல வயல்வெளிகளும் குடிசைகளும் இருந்தது. அது புறம்போக்கு நிலமாக இருந்தாலும் யாரோ வாழ்வாதாரமாக அந்த நீரைக்கொண்டு கீரையும் காய்கறிகளும் பயிரிட்டு வளர்த்து வந்திருந்தார்கள். அவையனைத்தும் தற்போதைய தொடர் மழை மற்றும் வெள்ளத்தினால் நிறைந்து விட்டது . அவர்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி வர வேண்டிய கட்டாயம் . மேலேறி வந்து சீறிப்பாயும் வாகனங்கள் ஓடும் சாலை ஓரங்களில் வாழும் படியாகிவிட்டது.

கோயில் கட்டப்பட்டபோதே அதன் மதில் சுவருக்கும் இப்புறம் சேரிகள் இருந்தது . இதுபோன்ற ஒரு சேரிக்கருகில் மிகப்பெரிய கோயில் என்று வருத்தப்பட்ட போது "நீங்கள் அதன் மறுகோணத்தைப் பார்க்கவேண்டும்.. இது போன்ற கலைகளை அறிந்த கலைஞர்களுக்கு வேலைகொடுக்கவேண்டிய கட்டாயம் ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் நேரும். அதனை இதனோடு ஒப்பிடக்கூடாது" என்று மாற்றுகருத்தும் வைக்கப்பட்டது.

இன்று காமன்வெல்த் க்ராமத்தை ஒட்டி மக்கள் சாலையில் இருப்பது இந்த வாரத்தில் வர இருக்கும் வெளிநாட்டினருக்கு முன் மிக தர்மசங்கடமாக மேலும் நாடகக்காட்சியின் போது ஒப்பனை கலைந்த முகமாகத் தோன்றுமே என்று வருத்தப்படுகிறார்கள். பிச்சைக்காரர்களை ஒளித்து வைத்த மாதிரி இவர்களையும் எங்கே ஒளித்து வைக்கப்போகிறார்களோ தெரியவில்லை. பாமா விஜயத்தில் பிள்ளைகளை ஒளித்து வைக்கும் அம்மாவைப் போல .....

நேற்று பாகிஸ்தான் வெள்ளம் பற்றி கூகிள் செய்துகொண்டிருந்த போது பார்த்த ஒரு தளத்தில் ஆப்கானும் இந்தியாவுமாக சேர்ந்து வேண்டுமென்றே அணைகளைத் திறந்து பாகிஸ்தான் மேல் தண்ணீர் போர் புரிந்திருக்கிறதாம்.. :( எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க ?

அப்போது யமுனையும் தன்னைக் காப்பாற்ற தவறியவர்கள் மேல் தன் கரையை கைப்பற்றியவர்கள் மேல் தண்ணீர் போர் புரிகிறாளோ?


தப்புக்கணக்கிட்டுத் தானொன் றெதிர்பார்த்தால்
ஒப்புமோ இயற்கைவிதி? ஒழுங்கமைப்புக் கேற்றபடி
அப்போதைக் கப்போதே அளிக்கும் சரிவிளைவு.
எப்போதும் கவலையுற்று இடர்ப்படுவார் இதைஉணரார்.-மாக்கோலம்

31 comments:

Chitra said...

யமுனையை சுத்தப்படுத்த சுத்தப்படுத்த என்று கோடிக்கணக்கில் பணத்தை போட்டதாக தங்கள் கரங்களை கறைகளாக்கிக் கொண்டார்கள்.யமுனை தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொண்டாள்.
சாக்கடைகளை நேராக கலக்காமல் ஆற்றுப்படுகைகளை கட்டிடங்களுக்கு என கையகப்படுத்தாமல் இருந்தாலே இயற்கையாக ஆறு ஓடிக்கொண்டிருக்கும். யமுனையை ஒட்டிய கால்வாய்களை எல்லாம் கூட சிறியதாக்கி அதன் மேல் சாலைகளைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் :(


....... ..... official ஆக யாரும் பொறுப்பாக செய்யவில்லை என்றால், விளைவுகள் மக்களைத்தான் பாதிக்கும்.

☀நான் ஆதவன்☀ said...

:(

இயற்கைக்கான மரியாதையை இந்தியா கொடுக்க தவறிவிட்டது. இயற்கை அதற்கான சரியான தண்டனை தரத்தான் போகிறது முத்தக்கா.

சென்ஷி said...

யமுனையில் புதுவெள்ளம் என்பது மிக மகிழ்ச்சியான ஒன்று. அங்கு வாழும் மக்களின் நிலையை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. நல்ல பகிர்வு.

துளசி கோபால் said...

அப்படியாவது அசுத்தம் எல்லாம் தொலைஞ்சு ஆறு சுத்தமாகட்டும்.

ஆனால்......... சேரி மக்களை அரசு என்ன செய்யப்போகுதுன்னு பார்க்கணும்.

அருமையான இடுகை.

சாந்தி மாரியப்பன் said...

//இயற்கையை மதிக்காதவனுக்கு இயற்கையே செய்த சதியா?//

பொறுமைக்கு உதாரணமா சொல்லப்படற பூமாதேவியே பொங்கிடறது இல்லியா.. அது மாதிரித்தான். நாம செய்றது நமக்கே திரும்பி வருது..

settaikkaran said...

தில்லிக்கு இருமுறை வந்திருக்கிறேன். காஸியாபாத்திலிருந்து பேருந்தில் ஐ.டி.ஓ.வந்து இறங்குகிற வழியில், யமுனா பாலத்தைக் கடக்குமுன் போதும் போதுமென்றாகி விட்டது. ஒரு தேசத்தின் தலைநகர் இப்படியா இருக்கும் என்று வேதனையாக இருந்தது. யமுனையே தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டிருப்பது மகிழ்ச்சி! இதையே தான் மக்களும் பின்பற்ற வேண்டும் போலும்!

செல்வா said...

//யமுனையை சுத்தப்படுத்த சுத்தப்படுத்த என்று கோடிக்கணக்கில் பணத்தை போட்டதாக தங்கள் கரங்களை கறைகளாக்கிக் கொண்டார்கள்.//

அதுலயுமா..? என்ன கொடுமைங்க இது .. ?

/திறந்து பாகிஸ்தான் மேல் தண்ணீர் போர் புரிந்திருக்கிறதாம்.. :( எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க ? //
அட பாவமே.. நல்லாவே யோசிக்கிறாங்க..!!

Anonymous said...

நானும் யமுனையை பாத்திருக்கேன். ஒரே குப்பையாத்தான் இருக்கும் :(

அம்பிகா said...

அருமையான பகிர்வு முத்துலெட்சுமி.
நதிகள் எல்லாம் இப்படி தங்களைத் தானே சுத்தப்படுத்திக் கொண்டால் தான் உண்டு.
/திறந்து பாகிஸ்தான் மேல் தண்ணீர் போர் புரிந்திருக்கிறதாம்.. :( எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க ? //
நல்லவேளை, இந்தியா தான் ஏவுகணை அனுப்பி மழை வர வச்சாங்கன்னு சொல்லாமப் போனாங்களே!

ADHI VENKAT said...

உங்கள் பகிர்வுக்கு நன்றி. பாவம் சேரி ஜனங்கள் தான். விவசாயமும் வீணாகி விட்டது. இயற்கை நம்மை பழி வாங்குகிறது என்று தான் நினைக்கிறேன்.

ஹுஸைனம்மா said...

உண்மைதான், ஊமையாக இருந்த இயற்கை இப்போது பழிவாங்க ஆரம்பித்துவிட்டது!!

கபீஷ் said...

//அப்போது யமுனையும் தன்னைக் காப்பாற்ற தவறியவர்கள் மேல் தன் கரையை கைப்பற்றியவர்கள் மேல் தண்ணீர் போர் புரிகிறாளோ?//

மனுசங்கள மாதிரி பழி வாங்கற குணம் இயற்கைக்கு ஏது. செயல் விளைவு தத்துவப்படி நடக்குது :)

Thekkikattan|தெகா said...

//காமன்வெல்த் கேம்ஸில் மனிதனாக ஊழல்கள் செய்து உள்குத்து குத்திக்கொள்ளும் போது இயற்கையும் வெளியிலிருந்து சதி செய்கிறது.

யமுனையை சுத்தப்படுத்த சுத்தப்படுத்த என்று கோடிக்கணக்கில் பணத்தை போட்டதாக தங்கள் கரங்களை கறைகளாக்கிக் கொண்டார்கள்.யமுனை தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொண்டாள்.//

முத்து, எப்படிங்க இப்படி விளையாடுறீங்க, வார்த்தைகளை வைச்சு.

//பிச்சைக்காரர்களை ஒளித்து வைத்த மாதிரி இவர்களையும் எங்கே ஒளித்து வைக்கப்போகிறார்களோ தெரியவில்லை. பாமா விஜயத்தில் பிள்ளைகளை ஒளித்து வைக்கும் அம்மாவைப் போல .....//

இந்தப் பதிவே வித்தியாசமா இருக்கு உங்க யூசுவல் ஏரியாவை விட்டு வெளியில வந்து கொடுத்த மாதிரி ஒரு ஃபீல் கிடைக்குது. சூப்பர்ப்! நல்ல அவதானிப்பு, அருமையான presentation!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சித்ரா அந்த அஃபிசியல் ஆளுங்களும் பாதிக்கப்பட்டாத்தான் யோசிப்பாங்க போல...:(
---------------------
ஆதவன் இந்தியா என்ன உலகம் பூராவே இயற்கைக்கு எதிராத்தானே
செய்யறோம்..
--------------
சென்ஷி கேம்ஸ் நடக்கும் வரை அவங்களுக்காகவும் கொஞ்சம் அடிச்ச பணத்துல குடுக்கலாம் ..
-------------------------
குடுக்கிற பேட்டியிலேயே இமேஜ் ஸ்பாயில்ன்னு புலம்பறவங்க என்ன செய்வாங்களோ தெரியல துளசி ..
-----------------------
அதே அமைதிச்சாரல் குடுத்து வச்சது வாங்கி கட்டுவோம்
------------------------
நன்றி கோபி
------------------
சேட்டை தேசத்தின் தலைநகராக இருப்பதாலேயே கூட்டம் அம்முவதால்
கழிவும் குப்பையும் அதிகமிருக்கலாம்.
அதோடு தொழிற்சாலை கழிவும்..:(
------------------
செல்வக்குமார் .. சுத்தம் செய்ய என்று கலெக்ட் செய்ததில் பல 'குரு'க்களும் உண்டாம்..
------------------------
ஆமா சின்னம்மிணி வெறும் சாக்கடையாத்தான் இருந்தது..
-------------------
அம்பிகா :))
---------------------
ஆதி ஆமாங்க இருந்ததே குடிசை அதும் போச்சு ன்னு :(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹுசைனம்மா .. கீழேயே கபீஷ் சொல்லிட்டாங்க ..இது தத்துவம்ன்னு .. புரிஞ்சுப்பமா நாம
--------------------
நன்றி கபீஷ் சரியான வார்த்தை..
-------------
நன்றி வெறும்பய..
--------------------
தெகா யூசுவல் ஏரியாவே இதானேங்க.. குப்பையை எங்கே போட்டீங்க? மரத்தை ஏன் வெட்டினீங்கன்னு கேப்பது தானே ஏரியா..

ராமலக்ஷ்மி said...

இயற்கையின் அருமையை நாம் உணரவில்லை. போற்றிக் காக்க மற(று)க்கும் நாம் அது சீறும் போது மட்டும் நொந்து கொள்வதும், நிந்திப்பதும் வாடிக்கையாகி விட்டது:(! நல்ல பதிவு.

Jackiesekar said...

யமுனை பொறுத்து பார்த்து பொங்கிவிட்டாள் போல்..

velji said...

மீதி வெளையாட்டுகள விட இயற்கையோட விளையாடுற விளையாட்டு ரொம்ப ஆபத்தானது...

ஹேமா said...

இயற்கையைப் பாதுகாக்கத் தவறுகிறோம்.கோபம் கொண்டால் பொறுக்கத்தானே வேணும்.

பா.ராஜாராம் said...

தலைப்பில் இருந்தே குடையத் தொடங்கி விடுகிறது.

உயிரோடை said...

//பாமா விஜயத்தில் பிள்ளைகளை ஒளித்து வைக்கும் அம்மாவைப் போல .....
//

:)

ந‌ல்ல‌ ப‌கிர்வு.

ய‌முனை இரு வார‌ங்க‌ளுக்கு முன் பார்த்த‌ போது நானும் இவ்வ‌ள‌வு சுத்த‌மாக‌வானும் வெள்ள‌ம் வ‌ந்துச்சே என்று சொன்னேன். ய‌முனை ய‌முனை போல‌வே பார்க்க‌வே ரொம்ப‌ ந‌ல்லா இருந்துச்சி.

இல்லாட்டி எப்போதும் சாக்க‌டையை அன்றோ பார்த்துக்கொண்டிருந்தோம்.

:(

geetha santhanam said...

ஹரித்வார் பற்றி உங்கள் பதிவுகள் அருமை. அதுவும் யமுனை நதியைப் பற்றிய பதிவில் கருத்துகள் சூப்பர். ஆட்சியில் இருப்போர் பார்வைக்குப் போனால் ஏதாவது விமோசனம் கிடைக்கலாம்.---கீதா

'பரிவை' சே.குமார் said...

அருமையான இடுகை.

வல்லிசிம்ஹன் said...

வாஹ் தாஜ், என்று சொல்லத்தோன்றுகிறது.
அருமையான பதிவு கயல்விழிமுத்து.
யமுனையே நேர வந்து பேசுவது போல இருந்தது. இது போல நாடெங்கும் நதிகள் சீறினால் ...நினைக்கும் போதே திகைப்பாக இருக்கிறது. கூவம் சீறினால் நல்லது. அதன் கரையில் வீடுகட்டினவர்களை என்ன செய்வது. சமூகப் பிரச்சினை.
தன்னைத் தானே சுத்தம் செய்து கொண்ட யமுனை அம்மாவுக்கு வணக்கம்.

Anonymous said...

kavithai ellam kalakkarenga kayalvizhi! Pathengala, ka ka kannu ithuvum kavithaithane (pavam kamban). Nejamave kavithai romba super
Sathya Asokan

முத்துலெட்சுமி/muthuletchumi said...

sathya ..அது என் கவிதை இல்லைங்க.. மாக்கோலம்ன்னு மகரிஷி மனவளக்கலை
பின்பற்றுபவரோட கவிதைன்னு
நினைக்கிறேன்.. தத்துவம் பிடிச்சிருக்குன்னு
அதை எப்பவுமே என் பதிவின் பக்கப்பட்டையில் வச்சிருக்கேன். இன்னைக்கு பதிவிலும் எடுத்துப் போட்டிருக்கேன். .
வருகைக்கு நன்றி :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா ராமலக்ஷ்மி நல்லா நொந்துகிட்டே நிந்திப்போம் :(
------------------------
ஆமா ஜாக்கி நன்றி வருகைக்கு..
--------------------
வேல்ஜி ஆபத்தே தான் ..
-------------------
ஹேமா பொறுக்கவேண்டும் அதோடு
திருத்திக்கொள்ளவும் வேண்டும் தானே
---------------------
பா.ரா.. நன்றி
-------------------------------
ஆமா லாவண்யா.. வெறும் சாக்கடையும் கழிவுமா
வச்சிட்டு பழிச்சுட்டும் இருந்தம்..
---------------------
கீதா நன்றி .. ஆட்சியில் இருக்கிறவர்களுக்கு தெரியாமல் என்ன? அலட்சியம் தான் ..
-------------------
சே. குமார் நன்றீங்க
---------------
வல்லி அந்த மாதிரி இடத்துக்கு வாழ அவர்களை அனுப்பாமல் இருக்க எந்த அரசினாலும் முடியலையே..

அன்புடன் அருணா said...

பூங்கொத்துப் பதிவு!

Thenammai Lakshmanan said...

கரையோர மக்களுக்கு பாதிப்புத்தான்.. ஆனால் யமுனை சுத்தமானது நல்லதுதான்.

அவர்கள் அங்கிருந்து வேறு இடம் செல்வதுதன் நல்லது

நிகழ்காலத்தில்... said...

\\தப்புக்கணக்கிட்டுத் தானொன் றெதிர்பார்த்தால்
ஒப்புமோ இயற்கைவிதி? ஒழுங்கமைப்புக் கேற்றபடி
அப்போதைக் கப்போதே அளிக்கும் சரிவிளைவு.
எப்போதும் கவலையுற்று இடர்ப்படுவார் இதைஉணரார்.-மாக்கோலம்\\

பொருத்தமான வேதாத்திரி மகானின் கவி....

வெங்கட் நாகராஜ் said...

அழகிய பகிர்வு. முன்பெல்லாம் யமுனை என்ற பெயரில் ஓர் சாக்கடை ஓடிக்கொண்டு இருந்ததால் பார்க்கவே தோணாது. தினம் அதைக் கடந்து செல்லும்போது, இப்போதெல்லாம், சுழித்தோடும் வெள்ளத்தினை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். மீண்டும் அதில் சாக்கடைகளை திறந்து விடாமல் இருந்தாலே போதும். ஆனால் செய்யமாட்டார்களே, திரும்பவும் சுத்தம் செய்வதாகச் சொல்லி அப்போது தானே காசு அடிக்க முடியும் :(

வெங்கட்.