June 21, 2013

வெள்ளத்திற்கு முன்பு வள்ளம் தள்ளுதல்

சென்ற பதிவு
பழைய பரமசிவம் - புதிய பரமசிவன்  எழுதிய தினத்தில் புதிய பரமசிவனையும் கங்கை அன்போடு தன்னுடன்  தனக்கே தனக்கென்று அழைத்துச் சென்றுவிட்டாள். விடாது பரமார்த் ஆசிரமத்தலைவர் மீண்டும் சிவன் செய்து வைப்போம் என்று பேட்டியளித்திருக்கிறார்.

நாங்கள் சென்றபோது ( 6 ம் தேதி) வெள்ளம் 17 ம் தேதி
அல்மோரா பயணத்திலும் பின்சர் பயணத்திலும் தொடர்ந்து புதிய புதிய கட்டிடங்கள் மலையின் பக்கவாட்டில் தூணெழுப்பி கட்டும் முறை திகிலையே கொடுத்தது.  இயற்கையை முழுவதுமாக குறைத்து மதிப்பிட்டுவிட்டு வருத்தப்படுவது வழக்கமாகிவிட்டது.

கங்கையில் தினம் காலையில் குளிக்கவரும் அக்கம்பக்கத்தவர்கள் நீரையும் சூரியனையும் வணங்கிவிட்டு வீடு செல்லும் போது ஒரு தூக்குச்சட்டியில் நீருடன் செல்கிறார்கள். வீட்டில் சென்று அந்நீரை தெளிப்பது வழக்கம் என்றும் சொல்கிறார்கள். குளிக்க இறங்கும் முன் நீரை வணங்கிக்குளிக்க செல்வதை சிறு குழந்தைகள் கூட செய்கின்றனர். 

நாங்கள் ராஃப்டிங் செல்ல பணம் கட்டிவிட்டு காத்திருந்தோம். படகோடு ஒரு ஜீப் வந்து அழைத்துச்சென்றது. அதில் படகோட்டியும் கைடு ஒருவரும் நம்முடன் வருவார்கள். சில கிமீ தொலைவில் உள்ள ப்ரம்மபுரி என்ற இடத்திற்கு செல்வதற்குள் அந்த வாகனஓட்டி என்னைத் திகிலடையவைத்தார். ஒரு கோட்டினை சிறிதாக்க அருகில் பெரியக்கோட்டினை வரைவது போல  கங்கையில் படகோட்டப் (படகை ஓட்டறது எப்படின்னு முன்னப்பின்ன தெரியாது வேற)போகிற பயத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார் ஜீப்பை ஓட்டியவர். அப்பாடா வரும் வழியில் படகில் தானே வரப்போகிறோம் என்கிற அளவுக்கு. 
போகும் வழியெல்லாம் பக்கவாட்டில் பள்ளத்தாக்கில் கங்கையின் வேகமும் அதில் படகோட்டுபவர்களும் கண்களுக்கு தென்பட்டுக்கொண்டே இருந்தார்கள். த்ரில்லிங்காக இருந்தது. ப்ரம்மபுரி வந்ததும் எல்லாருக்கும் அவரவர்க்கு ஒரு துடுப்பும் காற்றடைத்த உயிர்காப்பு கவசமும் கிடைத்தது..


வழிகாட்டியின் பெயர் கல்யாண்சிங். இருக்கக்கட்டிக்கொள்ளவில்லை என்றால்  உயிர்காக்கும் கவசங்கள்  தனியாக மிதக்கும் நீங்கள் தண்ணீரில் நழுவிப்போய்விடுவீர்கள் பரவாயில்லையா என்றபடி சிரித்துக்கொண்டே குழந்தைகளுக்கும் இறுக்கி அணிவித்தார்.   பாதையில் இறங்கிப்போகும் போது கவனமாக செல்லுங்கள். போகும் வரும் மக்களுக்கு வழிவிட்டபடி என்று சொல்லும்போது புரியவில்லை எதற்கு இந்தக்கட்டளை என்று. . பாதிவழிக்கு மேல் இறங்கும் போது எங்கள் எதிரில் ஏறிவந்துகொண்டிருந்த குழந்தைகளை அவர்களின் பெற்றோர் கீழிருந்து திட்டிக்கொண்டிருந்தார்கள். பின்னால் திரும்பியபோது  படகை தூக்கிக்கொண்டு இறங்குபவர்கள் . அவரவர் இடத்தில் குனிந்தபடி இருங்கள் நாங்கள் கடந்துவிடுவோம் என்று சொல்லியபடி படகைத்தலையில் கவிழ்த்துக்கொண்டு அவர்கள் கீழிறங்கினார்கள்.


படகில் ஏறுவதற்கு முன்பு ஒரு ராணுவத்தளபதியைப்போல கைஸ்( guys) என்ன கட்டளை வருகிறதோ அதை காது கொடுத்துக் கேட்க வேண்டும் சொல்லும்போதே அருகில் இருக்கும் மற்றொரு குழுவை வேடிக்கைப்பார்த்த எங்கள் குழுப்பையன் ஒருவன் மீது துடுப்பினால் நீர் அள்ளி வீசி மிரட்டினார். யாருக்கெல்லாம் நீச்சல் தெரியும்? என்ற கேள்விக்கு நாங்கள் பெருமையாக தெரியும் என்றொம். ஆனால் நீச்சல் குள நீச்சல் என்று பம்மிக்கொண்டே சொன்னதும். பெரிய சிரிப்போடு அது என்னத்துக்கு உதவும் சரி நீரிடம் பயமில்லை. நல்லது. என்றார்.


நீச்சல் தெரிந்தவர்கள் என்று சொன்னால் காப்பாத்தப்படும்போது முன்னுரிமை குறையுமா என்ற போது கல்யாண் திட்டவட்டமாக எனக்கு எல்லாரும் சமம் தான் என்று கம்பீரமாகச் சொன்னார். முன்னேறு என்று சொல்லும்போது துடுப்பை பின்னோக்கி செலுத்தவேண்டும். பின்னோக்கி என்று சொல்லும்போது துடுப்பு எதிர்ப்புறமாக.. நிறுத்துங்கள் என்று சொன்னால் துடுப்பு உங்கள் துடைகள் மேல் இருக்கவேண்டும். துடுப்புகளை இறுகப்பற்றுவதற்கான முறைகள்  மற்றும் கட்டளைகள் .


பிறகு நீரில் விழுந்தால் அவர்களை எப்படி படகில் இருப்பவர்கள் காப்பாற்ற முயலவேண்டும் என்று ஒரு பயிற்சி . நாங்கள் - நான்குபேர் . மற்றும் நான்கு கல்லூரிமாணவர்கள். கங்கா மாதா க்கு ஜெய் என்றபடி நீரில் இறங்கியது படகு. எனக்கு ஒரே பயம் துடுப்பை இரண்டு கைகளால் பிடித்திருக்கிறோம். படகின் பக்கச்சுவரோ காற்றடைத்த பலூனாக வழுக்கென்றிருக்கிறது அதில் உட்பக்கமாகவும் உட்காராமல் நன்றாக வெளிப்பக்கமாக உட்காரவேண்டும் . அடிப்பாகத்திற்கும் பக்கச்சுவருக்கும் இடைப்பட்ட வெளியில் காலை வாகற்ற ஒரு முறையில் நுழைத்துக்கொண்டால் கிடைக்கின்ற பிடிமானம் மட்டும் தான் துணை.


12 comments:

அமைதிச்சாரல் said...

//அடிப்பாகத்திற்கும் பக்கச்சுவருக்கும் இடைப்பட்ட வெளியில் காலை வாகற்ற ஒரு முறையில் நுழைத்துக்கொண்டால் கிடைக்கின்ற பிடிமானம் மட்டும் தான் துணை.//

ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிடுவது என்பது இதானா :-))

Shahjahan Rahman said...

திக்கு திக்குன்னு படிச்சுட்டு வர்றேன். திடுதிப்புனு நிறுத்திப்புட்டீக. மேலே எழுதறதுக்குப் பயமா...

திண்டுக்கல் தனபாலன் said...

/// அது என்னத்துக்கு உதவும்...? சரி, நீரிடம் பயமில்லை... நல்லது... ///

வாழ்த்துக்கள்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சாரல் அதே தான்.. அப்பவே வேகமான ஓட்டம் தான் கங்கை.. .:)

ஷாஜகான் .. படங்கள் போட்ட பின் பதிவு நீளமாகிடுச்சு.. படிக்கிறவங்க பாவமேன்னு...:)

தனபாலன் நன்றிங்க.:)

அன்புடன் அருணா said...

விறு விறுன்னு போகும்போது என்ன தொடரும் போட்டுட்டீங்க!!!

ராமலக்ஷ்மி said...

/மலையின் பக்கவாட்டில் தூணெழுப்பி கட்டும் முறை திகிலையே கொடுத்தது. /

வீழும் கட்டிடங்களைப் பார்க்கும்போதே பதறுகிறது.

--

படங்களும் பகிர்வும் நன்று. சிலிர்ப்பான அனுபவமாக இருந்திருக்கிறது. தொடருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

ரிவர் ராஃப்டிங்.
கயல் த்கிலா இல்லையா. ஆல் த பெஸ்ட் மா. அடுத்தபதிவின் படங்களுக்கு நானும் ரெடி.
புது சிவனும் கங்கையுடன் சென்று விட்டாரா:(

கோமதி அரசு said...

படகின் பக்கச்சுவரோ காற்றடைத்த பலூனாக வழுக்கென்றிருக்கிறது அதில் உட்பக்கமாகவும் உட்காராமல் நன்றாக வெளிப்பக்கமாக உட்காரவேண்டும் . அடிப்பாகத்திற்கும் பக்கச்சுவருக்கும் இடைப்பட்ட வெளியில் காலை வாகற்ற ஒரு முறையில் நுழைத்துக்கொண்டால் கிடைக்கின்ற பிடிமானம் மட்டும் தான் துணை.//
பயமாய் இருக்கிறது படிக்கவே.

வெள்ளத்திற்கு முன்பு வள்ளம் தள்ளி நலமாக வந்தீர்களே!
இறைவனுக்கு நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

திரில்லிங் மிக்க பயணம் ..

கோபிநாத் said...

செம அனுபவம் போல...என்ஜாய் ;)

திண்டுக்கல் தனபாலன் said...

லிங்க் மாறி விட்டது...

visit : http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_22.html

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருணா இந்தா எழுதிடறேன்..சுறுசுறுப்பா :)

ராமலக்‌ஷ்மி நன்றி:)

வல்லி திகிலாத்தான் இருந்தது ஆனா தைரியமா இருக்கிறமாதிரியே நடிச்சுக்கிட்டு ரோலர்கோஸ்டர் போறதில்லயா அப்படி..:)

கோமதிம்மா.. ஆமா .. அந்த நேரத்திலேயே யோசிச்சது தான் இப்பயே கரைக்கும் கரைக்கும் தொட்டுக்கொண்டு ஓடுகின்றதே தீடீரென்று வெள்ளம் என்றால்..பத்து நாட்களுக்குள் அப்படி கங்கை மாற்றம் கொண்டிருக்கிறது. இறைவனுக்கு நன்றி.

இராஜராஜேஸ்வரி நன்றி :)


கோபி ஆமா நல்லதொரு அனுபவம். :)
தனபாலன் நன்றி.