January 25, 2008

அறிமுகத்தேர்வாம்................

குழந்தைகளுக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு 11.45 மணிக்கு இருந்த அமரிக்க விசா அறிமுகத்தேர்வுக்கு முன்பாகவே சென்று பாதுகாப்பு சோதனைகள் முடித்துக்கொண்டு முதல் சன்னலில் பாஸ்போர்ட் மற்றும் தாள்களை தந்த போது குழந்தைகள் வேண்டாம் . பதின்நான்கு வயதுக்கு கீழே இருக்கும் குழந்தைகள் நேரில்வருவது அவசியம் இல்லை என்றும் , உங்களுக்கு தான் காத்திருக்கும் நேரத்தில் சிரமம் என்றும் சொன்ன பெண்மணிக்கு கோடிபுண்ணியம்.. உள்ளே நுழைந்து மீண்டும் பாதுகாப்பு சோதனை.. சோதனை செய்பவர்கள் , இத்தனை பாஸ்போர்ட்டா எங்கே மற்றவர்கள்? என்றார்கள் .. குழந்தைகள் உள்ளே வேண்டாம் என்று வெளியே சொன்னார்களே என்றதும்.. நாங்கள் எதுவும் சொல்லவில்லையே என்றார் . விட்டுவிட்டு வரசொன்னதை குறையாக சொல்வதாக நினைத்திருப்பார் போலும்.. மொபைல் இருந்தால் தந்துவிடுங்கள் என்றார் இல்லை என்றபடி குளிருக்கு பயந்து கோட்டுக்குள் கைவிட்டால் பையில் என்ன என்று கேட்டார் அய்யா ஒன்றுமில்லை ஆளைவிடுங்கள் என்றபடி உள்ளே சென்றேன்.

உள்ளே தண்ணீர் மற்றும் சிப்ஸ் இரண்டு மூன்று மடங்காக விற்கிறார்கள்.. குழந்தைகளைக் கையோடு அழைத்து வந்தவர்கள் பாடு திண்டாட்டம் தான்.. வீட்டிலேயே விட்டுவந்தாலும் பின் காண்பிக்கத்தான் வேண்டுமென்று கேள்வி எழுப்பினால் கஷ்டம் தான்..


கைவிரல் ரேகை பதியும் இடத்தில் உதவிக்கு இருப்பவள் நல்லது மிக நல்லது நீங்கள் குழந்தையை விட்டுவந்தது என்றாள்.. ஆனால் இப்படி எதுவும் முன்பே குறிப்பிட்டமாதிரி தெரியவில்லை . வரிசை மிக நீளமாக போய்க்கொண்டிருந்தது. இந்தி மொழிக்கென்று ஒரு சன்னலும் ஆங்கிலத்துக்கு என்று ஒரு சன்னலும் மட்டுமே திறந்திருந்தது.. இந்திமொழிக்கென்று எழுதி வந்தவர்கள் வரிசை வேக மாக நகர்ந்தது ஆகா நாமும் அப்படி செய்திருக்கலாமோ என்று சிலர் நினைக்கத்தொடங்கிய நேரம் தான் தெரிந்தது அந்த மனிதர் எல்லாரையும் திருப்பி மட்டுமே அனுப்பிக்கொண்டிருந்தார் என்ற விசயம்..


பொதுவாக இந்தி மொழி அறிமுகத்திற்கு வந்தவர்கள் எல்லாரும் வயதான தம்பதிகள் ..அவர்களுக்கு தங்கள் மகனோ மகளோ பற்றிய் எல்லா விவரங்களும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அப்படியே சொல்லிக்கொடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் நினைவுத்திறனும் சமயங்களில் கைகொடுப்பதில்லை.
ஒரு தாய் தனியே வந்திருக்கிறாள்.. உன் மகன் வேலை என்ன என்றால் அவன் சொந்த பிசினஸ் என்கிறாளே தவிர அது என்ன என்று சொல்லத்தெரியவில்லை . எல்லா தாள்களையும் திருப்பி தந்துவிட்டபின் அந்த தாய் எங்கே செல்லவேண்டும் அடுத்து என்கிறாள் . இல்லை நீங்கள் காத்திருக்க அவசியமில்லை என்று விளக்கி அனுப்பியபோது அந்த முகத்தில் எத்தனை கவலை..


வரிசையில் நிற்கும் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு விதமாய் .. புதியதாய் திருமணம் ஆன பெண்கள் வளையல்களும் நெற்றி குங்குமமுமாய் கையில் வெல்வெட் பெட்டியில் திருமணப்புகைப்படத்துடன் காத்திருக்கிறார்கள். நான் பார்த்தவரையில் நாம் கொண்டு செல்வது கட்டாயம் ஆனால் அவர்கள் அதை பார்க்கிறார்களா என்பது சந்தேகமாக இருக்கிறது.


என் தாள்களில் எல்லாவற்றையும் எழுதி நிரப்பியவர் கணவர் என்று அதிலேயே குறிப்பிட்டிருந்தும் என் முறை வந்தபோது அவள் உங்கள் கணவரின் கடிதம் வேண்டுமே என்கிறாள்.. அம்மணி அவர்தானே எழுதி நிரப்பியிருக்கிறார் அவர்தானே பணம் போடுவேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் .. கேட்டாலும் அவர்கள் சொல்வதே சட்டம்.. சரி வெளியில் மீண்டும் வந்து கணவர் குழந்தை என்று எல்லாருமாய் மீண்டும் சோதனைகள் செய்துகொண்டு உள்ளே சென்றோம். கணவரின் பாஸ்போர்ட் வேலை விவரங்கள் கேட்டறிந்து உங்களை அனுமதிக்கிறோம் என்று பதிலளித்தாள்.

வயதானவர்களுக்கு விசா அறிமுகத்தேர்வு வெற்றிகரமாக அமைவதில்லை என்று பார்த்தும் கேட்டும் அறிகிறேன்.. என்ன பேசலாம் எப்படி பேசலாம்.. என்னென்ன தாள்கள் அவசியம் என்பவை
அவர்களுக்கு வலையில் குறிப்புகளாக யாராவது எழுதி வைத்தால் நல்லது..

16 comments:

துளசி கோபால் said...

அமெரிக்க விஜ(ஷ)யமா?

எப்போ? எந்த ஊர்? வலை மாநாடு நடத்திட்டுத்தான் வரணும்.ஆமா.....


இந்தத் தேர்வு பற்றி இப்படித்தான் இருக்கும்முனு சொன்னதுக்கு நன்றி.

ரிஸல்ட் வந்துருச்சா?

முத்துலெட்சுமி said...

என்ன இப்படித்தான் இருக்கும்ன்னு சொல்லி இருக்கனா... ஆமாம் உங்க ஊருக்குவிசா வாங்கறதுவேற மாதிரி இருக்குமா.. இருந்தா அதையும் சொல்லிடுங்க துளசி அப்பறம் எப்படி உங்க வீட்டுல ஒரு மாநாடு நடத்துறது... எப்போ போவோம்ன்னு எல்லாம் தெரியாது எடுத்துவச்சிக்குவோம்.. நெருங்கின சொந்தங்கள்ளாம் இருக்காங்க... பாவம் அவங்களுக்கு வீட்டுக்கு கெஸ்ட் யாரும் வரலையேன்னு கவலை வரக்கூடாதுன்னு தான். :) ரிஸல்ட் பாஸுன்னு தான் வாங்கிவச்சிக்கிட்டா அம்மணி... எத்தனை வருசத்துக்குன்னு இன்னும் தெரியல..

மணியன் said...

அறிமுகத் தேர்வு என்பதைவிட நேர்காணல் என்ற சொல் சரியாக பொருந்தும் என நினைக்கிறேன்.ஒரு தேர்விற்குப் போவதுபோல முன்னேற்பாடுகளுடனும் மனத்தகைவுடனும் செல்வதாலா ?

அமெரிக்க பயணமா அல்லது ஊர் மாற்றமா ? வாழ்த்துகள் !

Deepa said...

வயதான தம்பதிகளை குறித்து நீங்க சொல்லியிருக்கிரது ரொம்பவும் உண்மை.. அவங்களை கொஞ்சம் கூட யொசிக்க விடமாட்டாங்க.. ஜன்னலில் இருக்கும் அதிகாரி என்ன கேள்வி கேட்டார்னு வயதானவர்களுக்கு புரியவே கொஞ்ச நேரம் ஆகும்.. அப்புறம் தானெ பதில் சொல்ல முடியும்.. அதுக்குள்ளே.. அதிகாரி டாடா - பைபை ன்னு சொல்லி அனுப்பிச்சுடுவார்.. பாவம்.. பாஷை தெரியாத்தவங்களும் , முதிர்ந்தவர்கள் பாடு திண்டாட்டம் தான்

கோபிநாத் said...

அமெரிக்க விஜ(ஷ)யமா? - ?????

\\அப்படியே சொல்லிக்கொடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் நினைவுத்திறனும் சமயங்களில் கைகொடுப்பதில்லை\\\

பாவம் ;(

முத்துலெட்சுமி said...

ஊர்மாற்றம் எல்லாம் இல்லை மணியன்.. சும்மா கூடப்பிறந்தவர்க்ள் இருப்பதால் ஊர்சுற்றிப்பார்க்கும் பயணம் தான்..
நேர்கோணல் என்றும் சொல்லலாமா..இங்கே நான் பாஸ் ரிஜக்ட் எல்ல்லாம் ஆகிறோமே அதனால் இது தேர்வு என்று தான் பட்டது .. :)

முத்துலெட்சுமி said...

உண்மைதான் தீபா.. கண்ணாடிக்குள் இருந்து அவ பேசினது எங்களுக்கே புரிவது கஷ்டமாகத்தான் இருந்தது.. அவள் மைக் கை விடுத்து திரும்பி திரும்பி பேசும்போது உன்னிப்பா கவனிக்கவேண்டி இருக்கிறது.. என் மகள் கூட அந்த ஆண்டி பேசினது எதும் புரியல.. மைக்ல பேசினாதான கேக்கும்.. நிறைய so வேற போடறாங்கன்னு கம்பெளெயிண்ட்...

முத்துலெட்சுமி said...

விஜயம் எல்லாம் எப்பன்னு தெரியாது.. கோபிநாத்... பாவம் தான் அந்த பாட்டி தாத்தால்லாம்..
எனக்கு அவங்களை கண்டு கவலையாகிவிட்டது...

மங்கை said...

நல்ல அனுபவம் தான்...

ஒரு வேளை நான் போனா இது எல்லாம் நினைவுல வச்சுக்குறேன்.. நன்றி அம்மணி..

எப்ப பயணம்...:-))

காட்டாறு said...

எப்படி இந்த பதிவை மிஸ் செய்தேன்னு தெரியல... எல்லாத்துக்குமே வலைல உதவி தளங்கள் இருக்குது முத்து. http://immihelp.com/ இதிலே விசிட்டர் விசா- B2க்கு போனா.. எல்லா விளக்கங்களும் இருக்கும்.

காட்டாறு said...

முக்கியமான கேள்வி கேக்கலையே. எப்போ வருவீங்க? சொல்லிட்டு வாங்க. :-)

முத்துலெட்சுமி said...

மங்கை நின்னு நின்னு காலும் பசியில் தலையும் வலிச்சுது நல்ல அனுபவம் தான் போங்க..

@ காட்டாறு அது ஆங்கிலத்தில் இல்ல இருக்கு. என்ன நான் சொல்றது தமிழ் பெரியவங்களுகு தமிழிலும் இந்தியில் இந்திக்கார தாத்தா பாட்டிக்கும் விளக்கம் வேணும்ன்னு கேட்டேன்..

காட்டாறு said...

// முத்துலெட்சுமி said...
@ காட்டாறு அது ஆங்கிலத்தில் இல்ல இருக்கு. என்ன நான் சொல்றது தமிழ் பெரியவங்களுகு தமிழிலும் இந்தியில் இந்திக்கார தாத்தா பாட்டிக்கும் விளக்கம் வேணும்ன்னு கேட்டேன்..
//
முத்து, இது கூப்பிடும் ஒவ்வொரு மகன்/மகளின் கடமையல்லவா. ஏறக்குறைய எல்லா அமெரிக்க வாழ் மக்களுக்கும் தெரிஞ்சிருக்கும். என்ன கேள்வி கேட்பாங்க, எப்படி நடந்துக்கனுமின்னு. அவங்களுக்கு தெரியலைன்னா இந்த வெப்சைட்ல உள்ளதை படிச்சி சொல்லியிருக்கலாம். நேரம் செலவழித்து பெற்றோருடம் பேசுவதற்கு இவங்களுக்கு வலிக்கிறதுன்னு நெனைக்கிறேன். :(

Radha Sriram said...

அஹா எப்ப வரீங்க முத்துலக்ஷ்மி??East or West
கண்டிப்பா போன் # குடுங்க.....பாக்க முடியலனாலும் பேசலாமெ??

முத்துலெட்சுமி said...

காட்டாறு ஏன் இப்படி எல்லாம் ... போனில் அவங்க சொல்லி இருக்கலாம் ஆனா போனில் பேசி எல்லாம் இது தெளிவாகறதுக்கு இப்படி தானா படிச்சி தெரிஞ்சிக்கிட்டா நல்லாருக்குமேன்னு சொல்லவந்தா .. விடுங்கப்பா..பாவம் பசங்க..

முத்துலெட்சுமி said...

கிழக்கு மேற்கு இரண்டுமே முக்கியமானவங்க இருக்கற இடம் தான் வந்தா ரெண்டும் தான் போவேண்டி இருக்கும்.. நீங்க எங்க இருக்கீங்க.. கண்டிப்பா பேசலாம்.. வரும் போது சொல்றேன்..