April 7, 2008

தீக்குள் விரலை வைத்தால் ..

நான் உள்ளே நுழையும் நேரம் அந்த பெண் பாடிக்கொண்டிருந்தாள். நிறம், நல்ல தென்னிந்திய நிறம். மை இடப்படமாலே பெரியதாக தெரியும் வகையான கண்கள். நான் அமர்வதற்கு நல்ல அமைப்பான இடம் தேடிக்கொண்டிருந்தேன். தூணுக்கருகில் பாடகர்களை நன்றாக கவனிக்கும்படியாக நேர் பார்வையில் அதே சமயம் காற்றும் வெளிச்சமும் ஒரு சேர கிடைக்கும் படி ஒரு இடம் கண்களில் பட்டது. அமர்ந்த சில நொடிகளில் பாடிக்கொண்டிருந்த பாட்டின் கடைசிவரிகளைப் பாடிக்கொண்டிருந்தாள் அவள். கண்டிப்பாக யாரிடமாவது கேட்டு அவள் பெயர் தெரிந்து கொள்ளவேண்டும். ஒரு வேளை 'விழி'யில் முடியும் ஏதாவது பெயராகவோ அல்லது ஏதாவது ஒரு மலரின் பெயராகவோ தான் அவளுடைய பெயர் இருக்கவேண்டும் என்று தோன்றியது. இல்லாமல் போனால் கூட அவளுடைய பெயர் அழகானதாகத்தான் இருக்கும்.


கண்களாலேயே பக்கவாத்தியக் காரர்களிடம் எப்படி சரிதானா என்று கேட்டாள் .. அவர்களும் புன்னகையில் அற்புதம் என்று பதில் தர. அவள் கண்களும் புன்னகைத்தன. அங்கே ஒரு நாட்டிய நாடகம் நடந்தது அவள் கண்களில். இதுவரை படித்ததும் இந்த வர்ணனைகளும் ரசிப்பும் ஒரு இளைஞனுடையது என்றா நினைத்தீர்கள். ம். நான் ஐம்பது வயதைக்கடந்தவள். தினமும் மாலை வேளைகளில் இந்த சிவன் கோயிலோ இல்லையெனில் செட்டித்தெரு பிள்ளையார் கோயிலிலோ என்னைப் பார்க்கமுடியும்.. இன்று பிள்ளையார்கோயில் தான்போவதாக இருந்தேன். ஆனால் இங்கே கச்சேரி இருப்பதாக பரிமளம் வழியில்பார்த்து சொன்னதால் வந்தேன்.. எனக்கு ராகமோ தாளமோ தெரியாது. பாடல் கேட்டால் மனதுக்கு இதமாக இருக்கும். முக்கியமாக இசையெல்லாமே என் மகளை நினைவுப்படுத்தும்.

அடுத்தப்பாடல் "காக்கைச்சிறகினிலே நந்தலாலா" என்று ஆரம்பித்தாள் நான் உருகிப்போனேன். கேட்கும் ஒலிகளெல்லாம் "ஆம் அவள் குரல் தானே இன்றும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது".

"தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா" ....அவள் பாடிக்கொண்டிருக்கையில் நான் மயங்கி விழுந்துவிட்டேன். யாரோ என் முகத்தில் பாட்டிலிலிருந்த குடிநீரை தெளித்து எழுப்பிவிட நான் நன்றிக்கூறிக்கொண்டே எழுந்து கொண்டேன்.தீ தீ என்று கத்தியதாக இரண்டு பேர் சொன்னதும் வெக்கமாகப்போய்விட்டது எனக்கு. எப்போதும் இப்படித்தான் என் உடல் நிலைக்கு நான் அதிகம் உணர்ச்சிவசப்பட்டால் இப்படி மயங்கிவிடுகிறேன் என்று சமாளிக்கப்பார்த்தேன்.. கச்சேரிக்கு என்னால் இடையூறு வேண்டாமென்று கோயிலில் வேறோரு இடம் தேடி என்னை அமரவைக்குமாறு அருகில் இருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டேன்.

என் மகள்.
கோயில் சிலை போன்ற நங்கை அவள் .

தீக்குள் விரலை வைத்தால் நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதையே நந்தலாலா" விரலை வைத்தால் பரவாயில்லை பின்னால் இழுத்துக்கொண்டுவிடலாம் , இரண்டு ஊது ஊதினால் சரியாகி இருக்கும்... இல்லையா நானாவது அம்மா காட்டு காட்டு என்று என் வாய் எச்சிலால் குணப்படுத்தி இருக்கலாம்.. என் மகள் தான் அதில் குளித்தே பார்த்துவிட்டாளே .. நான் என்ன செய்வேன். ஏனா? நன்றாக கதையின் ஆரம்பத்தைக்கவனித்தீர்களா? இந்த பாடகியின் நிறத்தை,நான்எப்படி சொன்னேன்.. ஆம் என் மகளும் அப்படியே தான் இருப்பாள். நல்ல தென்னிந்தியநிறமாக்கும் .. வேறுவிதமாகவும் சிலர் சொல்வதுண்டு அவள் கறுப்பென்றாலும் களை என்று, அது எப்படி கறுப்பென்றாலும் அப்படி சொல்லி சொல்லியே கறுப்பு மட்டமென்று சொல்லிவிட்டார்கள். மறுக்காமல் மணந்துகொண்டபின், நாளெல்லாம் நீ கறுப்பென்று முகம் சுளித்து துன்பம் தந்தவன்,மனம் குளிர இவள் தீக்குளித்துவிட்டாள்.
----------------------------------------
இது கதை மாதிரி .. ஆயில்யனின் பதிவு பார்த்த பின் தோன்றியது . என் வீட்டு வேலைக்காரங்களுடைய பெண் நல்ல தென்னிந்திய நிறம். அவளை பள்ளியில் இந்த ஊர் ஹிந்திக்காரங்க பெண்கள், உனக்கு திருமணமே ஆகாது என்று சொல்லிவிட்டார்கள் என்று, அந்த பெண் வீட்டில் வந்து அழுதாளாம்.. அவளுக்கு வயது 10 என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

சிறிது நாட்களுக்கு முன்பு வரை அநியாயத்திற்கு, பெண் கள் நிறமாக இருக்கவேண்டும் என்று முகக்கிரீம் ஆட்கள் விளம்பரம் செய்துவந்தார்கள். இப்போது சமநீதி கிடைத்துவிட்டது. ஆண்களும் வெள்ளையென்றால் தான் காதலிக்கப்படுவார்கள் என்று அவர்களூக்கும் தனி க்ரீம் வந்துவிட்டதாக விளம்பரம் செய்கிறார்கள் .. :-)

26 comments:

ஆயில்யன் said...

:(

(நான் இட்ட பதிவும் அது எந்த மாதிரியான பாதிப்பினை என் மனதில் விதைத்திருக்கும் என்பதும்கூட உங்களுக்கு புரிந்திருக்குமே அக்கா!)

ஆயில்யன் said...

அந்த மெழுகுவர்த்தியின் மீதான விரல்!

சின்ன வயதில் அது போன்று விளையாடுகையில் மனம் மகிழ்ந்தது!

இன்று அதை காண்கையில் ஏதோ தட்டிவிடத்தோன்றி மனம் பதறுகிறது..!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமாம் ஆயில்யன் .. சிறுபிள்ளைத்தனமாக தான் எல்லோருமே நிறத்தை பெரிதுபடுத்துகிறார்கள்.. அவர்கள் விளையாடுவது ஒரு மனதோடு ..இல்லை இல்லை உயிரோடு என்று புரிந்தால் சரி..

கோபிநாத் said...

கதை நன்றாக வந்திருக்கு.

வேகமான எழுத்து நடை...கலக்குறிங்க ;)

மங்களூர் சிவா said...

/
சிறிது நாட்களுக்கு முன்பு வரை அநியாயத்திற்கு, பெண் கள் நிறமாக இருக்கவேண்டும் என்று முகக்கிரீம் ஆட்கள் விளம்பரம் செய்துவந்தார்கள். இப்போது சமநீதி கிடைத்துவிட்டது. ஆண்களும் வெள்ளையென்றால் தான் காதலிக்கப்படுவார்கள் என்று அவர்களூக்கும் தனி க்ரீம் வந்துவிட்டதாக விளம்பரம் செய்கிறார்கள் .. :-)
/

வெள்ளையா இருக்கறது வியாதிங்க

(நன்றி திருவிளையாடல் ஆரம்பம் தனுஷ்)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபி இது கதைதான்னு சொல்லிட்டியாப்பா.. நன்றி நன்றி.. ஆயில்யனின் பதிவு படிச்சதும் அந்த பொன்ணோட அம்மா நினைவுக்குவந்தாங்க.. எப்படி பொத்தி வளர்த்துருப்பாங்கன்னு.. அதான் எழுதிட்டேன்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மங்களூர் சிவா.. நல்லா வேடிக்கையான பதில் தான்.. ஆனா அடுத்து வெள்ளையா இருக்கறவங்களை அது தாக்குதே.. வெள்ளையோ கறுப்போ .. அழகு என்பது நிறத்தில் இல்லை,, அன்பு தான் அழகு..கறுப்பென்று சொல்பவர்களுக்கு அது புரிந்தால் சரி..

நிஜமா நல்லவன் said...

அக்கா இப்பதான் ஆயில்யன் பதிவு படிச்சிட்டு இங்க வந்தா அதோட தொடர்ச்சியா உங்க பதிவு. எல்லோரும் சேர்ந்து கண்கலங்க வைக்கிறீங்களே:(

நிஜமா நல்லவன் said...

கருப்பே அழகு காந்தலே ருசி அப்படிங்கிறத அந்த பொண்ணு தீஞ்சு போய் தான் நிரூபிக்கனுமா? என்ன கொடும இது?
:(

MURUGAN S said...

அருமை !!!

சென்ஷி said...

//ஒரு வேளை 'விழி'யில் முடியும் ஏதாவது பெயராகவோ அல்லது ஏதாவது ஒரு மலரின் பெயராகவோ தான் அவளுடைய பெயர் இருக்கவேண்டும் என்று தோன்றியது. //

ஒரு வேளை மலர்விழியா இருக்குமோ :))

சென்ஷி said...

//சிறிது நாட்களுக்கு முன்பு வரை அநியாயத்திற்கு, பெண் கள் நிறமாக இருக்கவேண்டும் என்று முகக்கிரீம் ஆட்கள் விளம்பரம் செய்துவந்தார்கள். இப்போது சமநீதி கிடைத்துவிட்டது. ஆண்களும் வெள்ளையென்றால் தான் காதலிக்கப்படுவார்கள் என்று அவர்களூக்கும் தனி க்ரீம் வந்துவிட்டதாக விளம்பரம் செய்கிறார்கள் .. :-)//

ரொம்ப நல்லா முடிஞ்சிருக்கு கதை..

எனக்கு தெரிஞ்சு சிறப்பான முடிவுகளுல்ல கதைகள்ல இதையும் சேர்த்துக்கலாம்..

சென்ஷி said...

//கோபிநாத் said...
கதை நன்றாக வந்திருக்கு.

வேகமான எழுத்து நடை...கலக்குறிங்க ;)
//

கோபிநாத் சொன்னது சத்தியமாய் உண்மை. சமீபத்திய பதிவுகளிலிருந்து இது மிக சூப்பர்... ஆனாலும் அந்த தீக்குளித்த கேரக்டர் மற்றும் தலைப்பு மனதை நெருட செய்கிறது.. :(

Thamiz Priyan said...

சிவப்பு மட்டுமே அழகு என்ற மனநிலை சமூகத்தில் ஒழிய வேண்டும். அதுவும் திருமணத்திற்கு பெண் தேடும் போது குணம், படிப்பை விட நிறத்தை தேர்ந்துடுப்பது கொடுமை.. :( ( நான் அப்படி பாக்கலைங்க).... கொஞ்சம் பேர் மனதிலாவது இது மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென விரும்புகிறேன்...

துளசி கோபால் said...

நடை நல்லா இருக்குங்க.

இந்த நிறக்குறைவு, கூட ஒரு பத்துப் பதினைஞ்சு சவரன் நகை போட்டவுடன் பளிச்சுன்னு வெளிர் நிறமாவதையும் கேள்விப்பட்டிருக்கேன்(-:

துளசி கோபால் said...

சொல்லமறந்துட்டேனே.....பதிவில் அந்தப் படம் நல்லா இருக்கு

Unknown said...

உடல் அழகு கறுப்பு இருந்தால் என்ன
உம் உள் அழகு வெண்மையாக இருக்கும் போது
கயல்விழி முத்துலெட்சுமி அக்கா
உங்கள் எழ்த்து நடை நன்றாக
இருக்கிறது மேலூம் தொடர என் வாழ்த்துகள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நிஜம்மா நல்லவன் ,
என்ன பண்றது கலங்கிப்போய் தானே இதை எழுதனும்ன்னு எனக்கு தோணியது..
---------------
தமிழ்குழந்தை .. மறுமொழிக்கும் வருகைக்கும் நன்றி.
-----------
சென்ஷி பேர் பத்தியாரும் கமெண்ட் அடிக்கலயேன்னு பாத்தேன்.. சரியா கமெண்ட் அடிக்க உன்னைவிட்டா யாரு இருக்கா..
----------

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழ்பிரியன் சரியா சொன்னீங்க..
கஞ்சா கருப்பு ஒரு படத்துல சொல்லுவார் தெரியுமா... நான் சாக்லேட் ப்ரவுன் நான் கறுப்பு இல்ல.. ஆனா பொண்ணு அழகா வேணும்ன்னு அப்படித்தான் எல்லாரும்..

--------------
துளசி இதை விட நல்ல படம் இருந்தது கூகிள் ஆண்டவர் கிட்ட.. அது ஒரு கையின் வடிவம் .. அந்த் வடிவமே தீயால் ஆனது.. ஆனா அது எதோ ப்ரைபைல் படம்ன்னு போட்டிருதது சண்டைக்குவருவாங்களோன்னு இதை போட்டேன்..
----------
சென்னைக்குரல் வருகைக்கும் இனிய மறுமொழிக்கும் நன்றி.

அபி அப்பா said...

கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு டொய்யொங் டொய்ய்யொங்:-))

நிஜமா நல்லவன் said...

////கயல்விழி முத்துலெட்சுமி said...
சென்ஷி பேர் பத்தியாரும் கமெண்ட் அடிக்கலயேன்னு பாத்தேன்.. சரியா கமெண்ட் அடிக்க உன்னைவிட்டா யாரு இருக்கா.. ////



நானும் கொஞ்சம் சென்ஷி மாதிரியே யோசிச்சேன். சொன்னா ஒரு வேளை அடி விழுந்தா என்ன பண்ணுறது ன்னு தான் விட்டுட்டேன்.:)

ஜீவி said...

//தீக்குள் விரலை வைத்தால் நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதையே நந்தலாலா" விரலை வைத்தால் பரவாயில்லை பின்னால் இழுத்துக்கொண்டுவிடலாம் , இரண்டு ஊது ஊதினால் சரியாகி இருக்கும்... இல்லையா நானாவது அம்மா காட்டு காட்டு என்று என் வாய் எச்சிலால் குணப்படுத்தி இருக்கலாம்..//

இதைவிட அந்த பாசத்தையும், பரிதாபத்தையும் வெளிப்ப்டுத்த
வேறு வார்த்தைகள் இருப்பதாகத் தெரியவில்லை. 'கதை' என்று படிக்க ஆரம்பித்து, பின்பு நெஞ்சு கனத்தது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அபி அப்பா நல்ல பாட்டு அந்த பாட்டு :)
-------
நிஜம்மா நல்லவன் உங்களுக்கும் தோணிச்சா... சரி சரி.. :) கதை எழுத தெரியுதோ இல்லையோ ..வாசகர்களுக்கு எந்த எந்த இடத்தில் என்ன என்ன தோணும்ன்னு எனக்கு தெரியுதுப்பா..:)
------
ஜீவி ரொம்ப நன்றி.. நிஜமா நல்லவனுக்கும் சென்ஷிக்கும் பேர் பற்றி யோசனை வந்தமாதிரி எனக்கும் இந்த கதையில் அந்த அம்மாவின் பாசமான அந்த வரிகள் தான் பிடிச்சது.. அது அந்தபாசம் உங்களுக்கு புரிந்தது அறிந்து மகிழ்ச்சி

மங்கை said...

நாங்க தான் கேரண்டி கலராக்கும்... அதுவும் இல்லாம நாங்க தான் "கலர்"
வெள்ளை கலரே இல்லையே.... இது எப்படி இருக்கு

சத்யா said...

/ஆண்களும் வெள்ளையென்றால் தான் காதலிக்கப்படுவார்கள் என்று அவர்களூக்கும் தனி க்ரீம் வந்துவிட்டதாக விளம்பரம் செய்கிறார்கள் .. :-)
//

அழகு நிறத்தில் இல்லைனு நம்ம நிவிஷா அழகா சொல்லி இருக்காங்க பாருங்க!

Anonymous said...

மனதைத் தொட்ட இந்தச் சிறு கதையை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழின் பதிவுகள் பகுதியில் முதல் பதிவாக வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்குறிஞ்சி தங்கள் படைப்புகளை வரவேற்கிறது.