September 13, 2012

தனியே தன்னந்தனியே..


ரயிலுக்கு நேரமாகி இருந்தது..  திரும்பி வரும்போது கொண்டுவரவேண்டிய பொருட்களுக்காக இடம் விட்டு பாதி காலியாக ஒரு பெட்டியும் ,ஏறக்குறைய காலியாக சீரியல் நடிகையின் கைப்பையைப் போல ஒரு தோள்ப்பை  தயாராக இருந்தது.. முதன்முறை தனியாக பயணிக்கிறேன் என்பது மட்டும் கலவரமாக இருந்தது.திருக்குறள் எக்ஸ்ப்ரஸ்.. தில்லியிலிருந்து நெல்லை (திருச்செந்தூர்) வரை என்றால் ஏறக்குறைய இந்தியாவின் இந்தக்கோடியிலிருந்து அந்தக்கோடி தானே.

வீட்டில் எது எது எங்கிருக்கிறது? சில செய்முறைகள் என எல்லாருக்கும் குறிப்புகளைக் கொடுப்பதில் கவனமாக இருந்தேன். எல்லாம் எங்களுக்குத்தெரியும் என்கிற குரல்கள் எனக்கு தெம்பளிப்பதற்காகவே வந்தது. ஆனால் அது என்னைக் கேலிசெய்வதாகப் பட்டது.

 மகள் கைப்பிடித்து நடந்து வளர்ந்தபின்  (இப்பவும் கூட நடந்தால் கைக்குள் கை கோர்த்துக்கொள்வாள்) . பிறகு மகன் . கைப்பையில் இருந்து எதையாவது எடுக்கவேண்டும் என்று அவன் கைப்பிடியை விட்டால் போதும் உடையின் நுனியைப் பிடித்துக்கொள்வான்.  இது என்னவோ போல் எதையோ விட்டுவிட்டுப் போகும் உணர்வு. ரயிலேறிய பிறகு மகனும் வந்திருந்தால் கைப்பையில் ஏறியிருக்கக்கூடிய விளையாட்டுப் பொருட்கள், சாக்லேட்கள் ,பிஸ்கட்களில்  இன்மை உணர்தல்.  வண்டியில் கொறிக்க எதுவுமே வரவில்லை. அழுவதற்கு அவனுமில்லை. ஆனால் எப்பயும் இல்லாமல் எனக்கு கொறிக்க ஆசையாக வருகிறது. பசிக்காத வயிறும் பசிக்கிறது.

எதிரில் விஜயவாடா வரை செல்லும் கணவன் மனைவி. மருந்து அட்டைகளை (இரும்புசத்து மாத்திரையும் கால்சியமும்) நான் வைத்திருந்த புத்தகத்தின்மேல் அந்தப்பெண் வைத்தப்போது  சந்தேகமே இல்லாமல் முதல் ப்ரசவத்துக்கு ஊருக்குப் போகும் பெண் என்று தெரிந்தது. அவள் கணவன் வாசனைப்பாக்கை அதக்கிக்கொள்ளும் போது அந்தப் பெண் ஓயாமல் பேசுவாள் அவர் ம் ம் என்று பதில் சொல்லுவார். அவர் அவள் ஓய்வாக சாய்ந்து இருக்கும் போது ஓயாமல் பேசுவார் . அவள் ம் கொட்டுவாள். ஆகா என்ன ஒரு புரிதல் :)) அவள் சாப்பிடத்தொடங்குவது வரை நானும் காத்திருப்பேன். வயிற்றுப்பிள்ளைக்காரியைப் பார்க்க வைத்து சாப்பிடுவாங்களா என்ன? அதிகம் வெளியாருடன் பேசவிருப்பமில்லாதது போல அமைதியாக இருந்தார்கள்.


 ஒரே ஒருமுறை பாக்கில் கொஞ்சம் வாங்கி அவளும் வாயில் போடும்போது நீங்கள் இப்போது இதெல்லாம் சாப்பிடக்கூடாதே என்று என்னையும் அறியாமல் சொல்லிவிட்டேன்.

பக்கத்து இருக்கைக்காரர். ஐம்பது வயது .பெயர் தியாகி..தொலைபேசித்துறையில் வேலை .. மீரட்டில் இருந்து திருச்சிராப்பள்ளி செல்பவர் .திருச்சியில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்பவர்களுக்கு மேனேஜராக அவருடைய பயணம்.  ஆனால் கன்னியாகுமரி வரை செல்ல இன்னோரு பயணச்சீட்டும் வைத்திருந்தார். முதல் நாள் காலை முழுதும் கன்னியாகுமரி செல்லும் ஆர்வத்தில் இருந்தார். நடுநடுவில் அவருடைய நண்பர் இன்னோரு பெட்டியிலிருந்து வந்து எங்களோடு அமர்ந்து பேசுவார்.

முதலில் ரயில் உணவை ஏன் வாங்கவில்லை என்பதில் பேச்சு ஆரம்பித்தது .வட இந்தியா ரொட்டிக்கும் நம்ம ஊரு சப்பாத்திக்கும் என்ன பெரிய வித்தியாசம். அவருக்கு ஒரே குழப்பம். தென்னிந்தியாவில் போய் என்னமாதிரி சாப்பாடு கிடைக்கும் என்றும்... தமிழ்க்காரங்க இந்தி பேசமாட்டாங்க அதனால் நிச்சயம் ப்ரச்சனை வரும் என்றும் சொல்ல ஆரம்பித்தார். குழுவில் யாரும் கன்னியாகுமரி வரவில்லை. தனியாகச்செல்ல பயம் . கொஞ்சம் கொஞ்சமாக கவலையாக ஆரம்பித்தார். நாங்கள் எவ்வளவோ சொன்னபோதும்,வீட்டைவிட்டு வெகுதொலைவு சென்று ப்ரச்சனைன்னு வந்தா என்ன செய்வேன் என்று தனியாகப் போகப்போவதில்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

எங்கள் பெட்டியில் மொபைல் சார்ஜ் செய்யும் வசதி இருக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு தாங்காது என்பதால் அணைத்து வைத்திருந்தேன்.தியாகி நண்பரோட பெட்டியில் போய் சார்ஜ் செய்யும் போது எனக்கும் செய்து தாங்களேன் ..அலாரம் வைக்க வேண்டும் என்றேன். அதெற்கென்ன என் போனில்  வைக்கலாமே என்றார். அப்ப நீங்க திருச்சியில் இறங்கலையா என்றதும்..?

ஓ அதுசரிதான்.. இல்லை.. இல்லை.. நான் கன்னியாகுமரி போகவில்லை நான் இரவு ஒருமணிக்கே திருச்சியில் இறங்கிவிடுவேன் என்று குழம்பிய குழந்தை போல இருந்தார். எப்போது நான் கன்னியாகுமரி தனியாக சுற்றிப்பார்க்கப்போவதில்லை என்று முடிவு செய்தேனோ அப்போதிலிருந்து இலகுவாக உணர்கிறேன் என்று வேறு சொல்லிக்கொண்டார்.
(என்ன இருந்தாலும் குடும்பத்தை விட்டுட்டு ஊர் சுற்றுவர்களைக் கண்டால் எனக்கு கோபம் வரும் . இப்ப ரொம்ப நல்லது அடுத்த முறை குடும்பத்தோடு வந்தால் சரியாக இருக்குமே என்றும் சொன்னேன்)

மதிய உணவின் போது கைகளைக் கொண்டு ஏன் தென்னிந்தியாவில் சாப்பிடுகிறீர்கள் என்று ஆரம்பித்தார். அப்பத்தான் இவ்வளவு நேரம் இவருக்கு பரிதாபப்பட்டதே தப்பு என்று தோன்றியது.

எதிர் சீட்டுக்கு விஜயவாடாவில் ஏறியவர்களுக்கு ஒரு சின்னப்பெண் . ஐஸ்க்ரீம் வேண்டுமென்று அழுது என் மகனில்லாத குறையைத் தீர்த்தாள். ஒருவேளை கவிதை எதும் தோன்றி (தோணவே இல்லைங்க)அப்போது பார்த்து எழுதிவைக்க எதுவும் இல்லாமல் போய்விடக்கூடாதே என்று ரயில்நிலையத்தில் வாங்கிய நோட் பேடில் முகங்களை வரைந்தாள். அவளோடு சேர்ந்து நானும் பூனை வரைந்தேன்.. பில்லி என்றாள்.. எலி வரைந்தேன் எலி மாதிரி இல்லையோ என்னவோ .. யோசித்தாள். டாம் இது ஜெர்ரி என்றேன்.. பாய்ந்து அப்பாவின் கைபேசியில் இருந்த டாம் அண்ட் ஜெர்ரியைக் கொண்டு வந்து ஓடவிட்டாள். பின் இன்னோரு பக்கம் இன்னோரு பக்கம் என்று முகங்களாய் வரைந்து தள்ளினாள்.. தியாகிக்கு பொறுக்கவில்லை.. வாங்கி வையுங்களேன் என்றார். வரையட்டுமே என்று நான் இருந்தேன் .அவருக்கென்ன தெரியும்...? ஒரு அம்மாவின் கஷ்டம்.

ஒரு ஆச்சரியமான விசயம் . நான் நெல்லையில் இறங்கினேன். தியாகி அண்ட் கோ திருச்சியில் இறங்கினார்கள். டாம் ஜெர்ரிப்பாப்பா கன்யாகுமரியில் இறங்க இருந்தாங்க.. ஆனால் நாங்க எல்லாருமே திரும்ப மதுரையில் இருந்து ஒரே நாள் சம்பக்ராந்தி வண்டியில் ஒரே பெட்டியில் மீண்டும் திரும்பி வந்தோம். 

திருச்செந்தூரில் கோயில் கடைகளைத் தாண்டுகையில், ஒரு நினைவு, கோயில்கடையைத் தாண்டாமல் அழுகிற பையனுக்கு தொலைபேசி
’அம்மா கோயிலில் இருக்கேன் இங்க நிறைய கடை இருக்கு .. உனக்கு எதாச்சும் வாங்கிட்டு வரேண்டா’
’சரி சரி அக்காக்கிட்ட போனைக் கொடுக்கிறேன்..’
’எல்லாரும் எப்படி இருக்கீங்க..’
‘எங்களுக்கு என்ன நல்லா சந்தோசமா இருக்கோம்.. ’




19 comments:

ராமலக்ஷ்மி said...

/திரும்ப மதுரையில் இருந்து ஒரே நாள் சம்பக்ராந்தி வண்டியில் ஒரே பெட்டியில் மீண்டும் திரும்பி வந்தோம்./

அதிசயம்தான்.

ஹோம் சிக் ஆகி திரும்பினீர்களெனச் சொல்லுங்கள்:)!



ஹுஸைனம்மா said...

இந்த மாதிரி அழகா எழுதுனா எனக்கு(ம்) புரியும்!!

நாம இல்லன்னா, அப்பாவும் புள்ளைகளும் ஜனகராஜ் மாதிரி குதிக்காததுதான் பாக்கி!!

//ஒருவேளை கவிதை எதும் தோன்றி (தோணவே இல்லைங்க)அப்போது பார்த்து எழுதிவைக்க எதுவும் இல்லாமல் போய்விடக்கூடாதே //
அது எனக்கும் எப்பவும் அப்படித்தான். ப்ப்ப்ப்ளான்ன்ன் பண்ணி, ஓவர் சீன் போட்டா, ஒண்ணும் நடக்காது. :-)))))

கவிதா | Kavitha said...

:)) நல்லா இருக்குப்பா பயண விபரம். அகமதாபாத் நகரில் இருந்தபோது இப்படி தனியே வந்திருக்கிறேன். (2 நாள் 1 இரவு) யாருடனும் பேசாமல், இரவில் சரியாக தூங்காமல், ஒரு வித பயத்தோடே பயணிப்பேன். அது தான் நினைவுக்கு வருது.

யாழினி said...

கூடவே பயணம் செய்கிற அனுபவத்த தருதுக்கா..

யாழினி said...

போகும்போது கண்டுகொள்ளாத சகபயணிகளை
வரும்போதும் சந்திக்க நேர்ந்தால் பரிச்சியங்களை புன்னகையாய் சமர்பிக்கிறோம்...

எங்களுக்கும் நடந்திருக்கு.

சாந்தி மாரியப்பன் said...

//‘எங்களுக்கு என்ன நல்லா சந்தோசமா இருக்கோம்.. ’//

என்னா ஒரு வில்லத்தனம் :-))

கோபிநாத் said...

"அம்மாவின் தனியே தன்னந்தனியே"ன்னு தலைப்பு வச்சிருந்தா இன்னும் சூப்பராக இருந்திருக்கும் ;))

\\ஒரே ஒருமுறை பாக்கில் கொஞ்சம் வாங்கி அவளும் வாயில் போடும்போது நீங்கள் இப்போது இதெல்லாம் சாப்பிடக்கூடாதே என்று என்னையும் அறியாமல் சொல்லிவிட்டேன்\\

அக்காடா ;))

நிலாமகள் said...

ந‌ல்ல‌ அம்மா... ந‌ல்ல‌ குழ‌ந்தைக‌ள்... ந‌ல்ல‌ ப‌ய‌ண‌ அனுப‌வ‌ம்! அழ‌கான‌ உண‌ர்வுப்பூர்வ‌மான‌ ப‌திவுக்கு வாழ்த்துகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அட எல்லோரும் ஒரே வண்டில வந்தீங்களா. எப்படிப்பா!!
வெகு சுவாரஸ்யம்.
உங்கள் பயணத்தை இனியதாக்கிய டாம்&ஜெர்ரிப் பாப்பாவுக்கு என் நன்றிகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா ராமலக்‌ஷ்மி கொஞ்சம் அப்படித்தான் ஆகிடுச்சு.. வீட்டைவிட்டு எல்லாருமா லீவுக்குப்போனாலே எனக்கு என் ’டில்லிஹோம்’சிக்னெஸ் வந்திரும்.. இதுல தனியான்னா கேக்கனுமா..:)
------------------
ஹுசைனைம்மா பின்ன இந்த போஸ்ட் யாருக்காக எழுதியதுனு நினைச்சீங்க உங்களுக்காகவே தான்..:)
------------------
கவிதா எப்பயும் விட இந்த முறை தான் சரியா தூங்கி இருக்கேன்.. 7 மணிக்கு எல்லாரும் இறங்கி காப்பி குடிச்சது கூட தெரியாம தூங்கி இருக்கேன்.. அவன் இருந்தா அவன் சரியா தூங்கறானா பெர்த் ல இருந்து விழுந்துடாமன்னோ.. கொண்டு போன பெட்டி பத்திரமா இருக்கான்னெல்லாம் பார்ப்பேன் .. இந்த முறை தான் காலிபெட்டியாச்சே :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா யாழினி .. புன்னகை மட்டுமா? அவர்கள் எங்கல்லாம் போனாங்க வந்தாங்கன்னு மீண்டும் கதை ..:)
---------------
அமைதிச்சாரல் பாத்துக்கிட்டீங்களா..:)
’என்னா வில்லத்தனம்.’

--------------------
பின்ன அட்வைஸ் செய்யாம இருக்கமுடியுமா கோபி.. நாம யாரு ? :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நிலாமகள் நன்றிங்க..:)

----------------
வல்லி முதலில் ஐஸ்க்ரீம்காரர் அவள் அழ அழ அங்கயே நின்றுகொண்டிருந்தப்ப நான் அவரை விரட்டி விட்டேன் கொஞ்சம் கடுப்புத்தான் அந்த பாப்பாக்கு .. அப்பறம் ப்ரண்டாகிட்டா..:))

வெங்கட் நாகராஜ் said...

//(என்ன இருந்தாலும் குடும்பத்தை விட்டுட்டு ஊர் சுற்றுவர்களைக் கண்டால் எனக்கு கோபம் வரும் . //

அடடா.... எனக்கு பயமா இருக்கு!

இனிய பயண அனுபவங்கள்....

ADHI VENKAT said...

நல்ல அனுபவம். திரும்ப ஒரே பெட்டியில் வந்தது ஆச்சரியம் தான்.

நான் இருமுறை தனியே பயணித்திருக்கிறேன். ஒன்று தனியே தான். மற்றுமொரு முறை இரண்டே வயதான ரோஷ்ணியுடன்...இதைப் பற்றி முன்பு எழுதியிருக்கிறேன்.

Dubukku said...

எங்க ஊருக்குப் போயிட்டு வந்திருக்கீங்க :) சுவாரஸ்யமான பதிவு

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்களை ஆபிஸ் ல இருந்து கூட்டிட்டுப் போறாங்கன்னு சொல்லிட்டீங்க.. ஒன்னும் செய்யமுடியாது.. வேணா அதே இடத்துக்கு அப்பறம் கூட்டிட்டுபோக பார்த்துவச்சிக்கிறேன்னு சொல்லி தப்பிச்சிக்கோங்க..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆதி படிச்சிருக்கேன் உங்க போஸ்ட்.. எனக்கும் கூட்டிப்போக ஏத்திவிட ஆட்கள் வந்துட்டாங்க .. என்ன பெரிய தனியான பயணம் .. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நான் ரொம்ப நாட்கள் கழிச்சு பதிவு போடறதுன்னு முடிவா இறங்கினமாதிரி.. டுபுக்கு கமெண்ட் போடறதுங்கற முடிவுல இறங்கி இருக்கிறார் போலயே..

அதென்னாங்க உங்க ஊரு மட்டுமில்ல எங்க ஊரும்.:)

கோமதி அரசு said...

மகள் கைப்பிடித்து நடந்து வளர்ந்தபின் (இப்பவும் கூட நடந்தால் கைக்குள் கை கோர்த்துக்கொள்வாள்) . பிறகு மகன் . கைப்பையில் இருந்து எதையாவது எடுக்கவேண்டும் என்று அவன் கைப்பிடியை விட்டால் போதும் உடையின் நுனியைப் பிடித்துக்கொள்வான். இது என்னவோ போல் எதையோ விட்டுவிட்டுப் போகும் உணர்வு. //

இது தான் தாய்மை உணர்வு.

பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.