September 14, 2012

கண்ணேறு

அவர்கள் ரயில் தண்டவாளங்களைத் தாண்டி ப்ளாட்பாரத்தில் ஏறினார்கள். வயதான ஒரு ஆண் ஒரு பெண். இளமையாக ஒரு பெண் இடுப்பில் ஒரு பெண்குழந்தை. நடுவயதில் ஒரு ஆண் ஒரு பெண். அவர்கள் எத்தனை நாளாக வீட்டிற்கு வெளியே சுற்றிக்கொண்டிருந்தார்களோ மூட்டை முடிச்சுக்களோடு அவர்கள் நெருங்கியபோது முன்னால் ஓடிவந்தான் கால்சட்டை அணியாத அழுக்குச்சிறுவன். 

உலகத்திலேயே மிக மகிழ்ச்சியோடும் தன்னம்பிக்கையோடும் ராஜநடை போட்டு , நிழலாக குறிப்பிட்ட இடத்தைத் தேர்ந்தெடுத்து அமர்ந்த தாத்தாப் பாட்டியின் அருகில் சென்று நின்று கொண்டு ,பின்னால் வந்துகொண்டிருந்த தாயை வேகமாக வரச்சொல்லி அழைத்தான். 

அரசமரத்தின் இலைகள் ,சரசரக்க பேசாமல் அமைதிக்காத்த அந்த வெயில் மதியத்தில் குடிநீர்க் குழாயை அருகில் கண்டதும் அந்த இளம் தாய்க்கு ஒரு வேகம். கைக்குழந்தையின் உடைகளைக் களைந்து நேராக குழாயில் அதனை முழுக்காட்டினாள். தான் குளித்து குளிர்ந்தது போல அந்தத்தாயின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி .

குழந்தையும் பொக்கைவாய் காட்டி சிரித்து மலர்ந்தாள். அதுவரை சுற்றியிருப்பவர்களை கவனிக்காத அக்குடும்பத்து பெரியமனுஷி பாட்டி சுற்றும் முற்றும் பார்த்தாள். குழந்தையின் சிரிப்பை விட்டு முகமற்றாவும் முடியாமல் அதேகணத்தில் எவரேனும் கண்ணேறு போடுவார்களோ என்று கலக்கமுமாக எங்களையும் நோக்கினாள். நாங்கள் கவனிக்காதவர்கள் போல் பார்வையை தூரமாய் நகர்த்தி வைத்தாலும் அவள் மனம் ஆறவில்லை.

தாத்தாவிற்கு ஒரு பீடி கொடுங்களேன் என்று அருகிலிருந்த மனிதர்களிடம் ஒரு பீடியை வாங்கித்தாத்தாவிடம் தந்துவிட்டு அவர் கால் செருப்பை எடுத்தாள் .குழந்தையை சுற்றி இப்படியும் அப்படிமாக கண்ணேறு கழித்தாள் .பிறகு அந்த செருப்பாலேயே அதன் தோளில் இரண்டு தட்டு தட்டினாள். கால்சட்டையில்லாத சிறுவன் வேகமாக வந்து பாட்டியை நாலு அடி அடித்தான். புதிய ஆடை அணிவித்து பேத்தியுடன் பாட்டி சிரித்து விளையாடுவதை அவர்கள் அறியாமல் ஒரு புகைப்படம் எடுத்தேன். எங்கே அந்தப்பாட்டி திட்டுவார்களோ என்று தொலைவிலிருந்து  தான் எடுத்தேன்.


16 comments:

ராமலக்ஷ்மி said...

காட்சியை அற்புதமாகக் கண்முன் விரிய வைக்கிற எழுத்து. அதைத் தொலைவிலிருந்து காட்சிப்படுத்தியும் விட்டீர்கள்:)!

கண்ணேறு கழிப்பதில்தான் எத்தனை விதங்கள். இது போன்ற நம்பிக்கைகள் (உண்மையோ இல்லையோ) மனிதர்களுக்கு நிம்மதியைக் கொடுப்பதை மறுக்க இயலாது.

கோபிநாத் said...

கண்ணேறு இந்த வார்த்தையே எவ்வளவு அழகாக இருக்கு..பாட்டியோட கொசுவத்தி எல்லாம் ஞாபகம் வருது ;))

மிக அழகான பதிவு ;))

Geetha Sambasivam said...

இனியதொரு கவிதை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராமலக்‌ஷ்மி,
அன்பின் மிகுதியில் அந்த நேர நிம்மதிக்காக செய்யப்படுவது தான்..
நன்றி :)

---------------------
கோபி .. பாட்டிகளுக்கெல்லாம் அவ்ளோ பாசம்.. ..:)

---------------
வாங்க கீதா, ரொம்ப நன்றிங்க :)

கவிதா | Kavitha said...

கண்ணாறு" ன்னு எங்க வீட்டுல சொல்லுவாங்கப்பா..

எங்க ஆயா, பூந்தொடப்பத்தை பற்றவைத்து, அதில் கண்ணாறு எனக்கு சுத்தி இருக்காங்க. என்னமா வெடிக்கும் அது... குச்சிகளில் நெருப்புப்பிடித்து..எரிந்து சிவந்த குச்சிகள் மெது மெதுவாய் அனைந்துப் போவதை பார்க்க ரொம்ப பிடிக்கும் எனக்கு.. :)

கொசுவத்தி சுத்தவச்சப்பதிவு

கோவை2தில்லி said...

கண் திருஷ்டின்னு சொல்வோம். அதை இப்படியெல்லாம் கூட செய்வாங்களா...!!!

நல்ல பகிர்வு.

sury Siva said...''// எங்க ஆயா, பூந்தொடப்பத்தை பற்றவைத்து, அதில் கண்ணாறு எனக்கு சுத்தி இருக்காங்க. என்னமா வெடிக்கும் அது... குச்சிகளில் நெருப்புப்பிடித்து..எரிந்து சிவந்த குச்சிகள் மெது மெதுவாய் அனைந்துப் போவதை பார்க்க ரொம்ப பிடிக்கும் எனக்கு.. :)''

கவிதா அம்மா !

கண்ணேறு என்ன எனச்சொல்லப்போய்
என் கண்ணே என எனை அழைத்து
கண் திருஷ்டி கழித்திடவே
என் அன்னையும் அது போலவே செய்ததை
என்னமா நினைவுபடுத்திவிட்டீர்கள் ?

முத்துலட்சுமி அம்மா !!
முன்னே வந்து படம் எடுத்தா
ஆயுசு குறைஞ்சுடும்னு
அந்தக்காலத்துலே எல்லாமே நினச்சாங்க்க..

இப்பதேன்
கண்கள் பாக்கிறதை விட
காமிரா வழி பார்ப்பது தான்
அதிகம்னு தெரியறது.

ஃபோட்டோ நல்லாவே கீது.
ஜமாயுங்க...

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.comவெங்கட் நாகராஜ் said...

இனிய பகிர்வு. கண்ணேறு கழிப்பதில் தான் எத்தனை வகை....

அதிலும் பாட்டிகளுக்கு ரொம்பவே ஆசை.... எங்க அத்தைப் பாட்டி தான் இதைச் செய்வார்கள்....

Dubukku said...

அருமையாய் எழுதியிருக்கீங்க :)

வல்லிசிம்ஹன் said...

கண்ணேறு, கண்ணெச்சில் இதெல்லாம் சஹஜம்பா. நிஜமும் கூட .இந்தப் பாட்டியால அந்தப் பாட்டியைப் புரிந்து கொள்ளமுடிகிறது.
நீங்க சொன்ன விதமும் புகைப்படத்தில் தெரியும் மகிழ்ச்சியும் ரொம்பவே அழகு.
ஈர்க்குச்சி, உப்பு மிளகு, மிளகாய் இதெல்லாம் எப்பவும் ரெடி வீட்டில:) குழந்தைகள் வரும்போது,.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கவிதா புதுமுறையாத்தான் இருக்கு.. :)

சூடன் சுத்துறது, மிளகாய், உப்பு சுத்தி தண்ணியில் போடுவதுன்னு எங்க பெரியவங்க செய்வாங்க..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆதி ஒவ்வொருவருக்கு ஒரு நம்பிக்கை .. இப்படியுமா என்று தான் இருந்தது எனக்கும் .. :)

----------------
சூரி சார்..சரியாச்சொன்னீங்க கண்களால் பார்ப்பதே இல்ல.. ஒன்லி கேமிராக்கண்..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வல்லி அந்த குட்டீஸ் அதைச்சுற்றும்போது என்ன ஒரு அழகா அதை கவனிப்பாங்க.. அதே மாதிரி உங்களுக்குத் திரும்பச் செய்ய முயல்வாங்க இல்லயா.. :)

வல்லிசிம்ஹன் said...

பேரன் கேட்பான். பாட்டி உனக்கு யாரு திருஷ்டி சுத்தறதுன்னு:)
சிரிக்காதே பேசாதே என்று அம்மா எங்களுக்குத் திருஷ்டி கழிக்கும்போதுதான் அடங்காச் சிரிப்பு வரும்:)

கோமதி அரசு said...

கயல்விழி முன்பு நீ சிறியவளாய் இருக்கும் போது ஆச்சி உனக்கு கண்ணேறு கழித்தால் நீயும் அதைபோல் சுத்துவாய், உன் பிள்ளைகளும் அப்படியே செய்வார்கள், இப்போது கவினும் செய்கிறான், ஆச்சி உனக்கு சுத்துகிறேன் என்று சுத்துகிறான்.

என் பதிவிலும் இதை குறிப்பிட்டு இருக்கிறேன். நாம் ரசித்த காட்சியை மறுபடியும் கண்முன்னே கொண்டு வந்து விட்டாய்.
எழுத்து தொடர வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

எங்க ஊர்ல, ‘கண் துட்டி’!! சிவப்பு மிளகாய் நெருப்பில் சும்மா போட்டாலும் படபடன்னுதான் வெடிக்கும். இருந்தாலும், ‘என்னா கண்ணு பாரு’ன்னு ஒரு புலம்பல்ஸ் விட்டாத்தான் அம்மா, பாட்டிகளுக்கு மனசாறும்!!

//அவர்கள் அறியாமல் ஒரு புகைப்படம் எடுத்தேன். எங்கே அந்தப்பாட்டி திட்டுவார்களோ என்று//

அந்தப் பாட்டி மட்டும் பாத்திருந்தா, உங்களுக்கும் ‘கண்ணேறு’ கழிச்சிருப்பாங்க!! :-))))))))))))