January 25, 2007

இது புது மொழி

கேட்பதற்கினிய மொழி மழலை மொழி. இந்த புது மொழி தாய்க்கு மட்டுமே புரிந்தது.என் இருவயது மகனின் மழலை மொழிகளின் அகராதி இங்கே,


பக்கா(கையை விரித்த சைகையுடன்)---
காணாமப்போச்சு, காக்காய் தூக்கி போய் விட்டது.

அலோ--
தொலைபேசி யை குறிப்பது ,
மற்றும் தொலைபேசியில் பேசிக்
கொண்டிருக்கிறார்கள் என்பதன் சுருக்கம்.

மம்மம்--
சாக்லேட் மற்றும் இனிப்பு வகையறாக்கள்.

கைங்--
பைக் ,மற்றும் பைக் ஓட்டுகிறார்கள் என்பதன் சுருக்கம்.

புல்லபா(bullaba)--
இது இல்லை அதுதான் வேணும்(ஒருவேளை 'இது இல்லபா அதுபா' வாக இருக்கும்)

தேங்க்தேங்க்--
தேங்க்யூ

ஃபூஃபூ--
முதலில் சாப்பாடு எல்லாவற்றிற்கும் மம் தான்
பின்னால் சூடாக இருப்பதை ஊதி ஊதி சாப்பிடுவதால்
இப்படி மாற்றிவிட்டான். :))

ஸிக்கு(திறப்பது போன்ற அபிநயத்துடன்)--
திறக்கும்போது வரும் சத்ததை வைத்து எனவே
இது பாட்டில் ,பிஸ்கட் பாக்கெட் ,சாக்லேட் கவர்
போன்றவற்றை திறக்க கேட்பதற்கு.

தொம்முனு---
விழுந்துவிட்டான் , விழுந்துவிடுவான் போன்றவற்றுக்கும்
நாற்காலி மற்றும் இன்னபிற உயரமானவற்றில் ஏற்றி விடுங்கள் அல்லது
இறக்கிவிடுங்கள் என்பதற்கும்

காக்கா---
பறப்பன அனைத்துமே

ஸூம்(zoom)
காரில் ஏறி போய்விட்டார்கள்.

லோ--

letsgo and go

16 comments:

Hariharan # 26491540 said...

ஆமாங்க உள்குத்து , வெளிக்குத்து ஏதும் இல்லாத தெய்வமொழி இதுதாங்க!

கேரண்டியா இன்னும் ஒருவருஷத்துக்கு இந்த தெய்வமொழி கேட்பீர்கள் (அதுக்கப்புறமா முழுக்க்கப் பேச ஆரம்பித்துவிடுவார்கள்-விபரம் தெரிய ஆரம்பிக்கும்)

இந்தப் பிராயக் குழந்தைகள் வரப்பிரசாதம் பெற்றோருக்கு. நிறையக் கற்றுக்கொள்ளலாம் இந்த மழலைகளிடம் இருந்து பெரியவர்கள்
:-))

நல்லா சந்தோஷமா இருங்க :-))

லட்சுமி said...

வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி,ஹரிஹரன்.

tamilnathy said...

அருமையாக இருந்தது மகனின் அகராதி. ஹரிகரன் சொல்லியிருப்பது போல மனதில் கசடுகள் படியும்முன்னர் உதிர்க்கும் இதுதான் அற்புதமான மொழி. குறித்து வைத்துக்கொண்டு அவர் வளர்ந்தபின்னர் காட்டுங்கள். சந்தோசப்படுவார்.

லட்சுமி said...

நன்றி,தமிழ்நதி.
உண்மைதான்,வலைபதியும்போது நானும்
இதை மகன் பெரிதானதும் காண்பிக்க வசதியாக இருக்கும் என்றே எண்ணினேன்.

Shruthi said...

அருமையான மொழி இது ஒன்று தான்....

ஒரு திருக்குறள் கூட உண்டு

யாழினிது குழலினிது என்பர் தம்மக்கட்
மழலை சொல் கேளாதோர்.

லட்சுமி said...

வருகைக்கும் குறளுடன் மறுமொழியளித்தற்கும் நன்றி,ஸ்ருதி.

வேழம் said...

யாழினிது குழலினிது என்பர் தம்மக்கட்
மழலை சொல் கேளாதோர்.//

மழலை சொல் இனிதுன்னு சொல்லாம எதுக்காக தம்மக்கட் மழலை சொல்னு சொன்னாரு ?? :) தெரியுமா?

செல்வநாயகி said...

///அருமையாக இருந்தது மகனின் அகராதி. ஹரிகரன் சொல்லியிருப்பது போல மனதில் கசடுகள் படியும்முன்னர் உதிர்க்கும் இதுதான் அற்புதமான மொழி///

same. Thanks for sharing this with us.

துளசி கோபால் said...

குழந்தை நல்லா பேச ஆரம்பிச்சதும்
இதையெல்லாம் மறந்துரும். ஆனா நமக்கு சில வார்த்தைகள் ஒட்டிக்கும்:-)

மழலையின் சொல் அமிர்தம்

மங்கை said...

லட்சுமி...

இதைவிட இனிமையான மொழி இருக்க முடியாது... எத்தனை வருடமானாலும்...ஹ்ம்ம்.. என் பெண் குழ்ந்தையாக இருக்கும் போது பேசிய வார்த்தைகள் இன்னும் பசுமையாக இருக்கிறது மனதில்... நாங்கள் பேசிய மழலை மொழியை அம்மா இன்னும் சொல்லி சொல்லி ஆனந்தம் அடைவார்

சுருதி சொன்னது போல்

யாழினிது குழலினிது என்பர் தம்மக்கட்
மழலை சொல் கேளாதோர்.

பழைய நினைவுகளுக்கு இட்டுச்சென்றதுக்கு நன்றி லட்சுமி..

லட்சுமி said...

\\வேழம் said...
யாழினிது குழலினிது என்பர் தம்மக்கட்
மழலை சொல் கேளாதோர்.//

மழலை சொல் இனிதுன்னு சொல்லாம எதுக்காக தம்மக்கட் மழலை சொல்னு சொன்னாரு ?? :) தெரியுமா? \\

மற்றவர்களுக்கு அது அத்தனை இனிமையாக தோணுவது இல்லையாயிருக்கும். உளறுகிறானே என்றுகூட தோன்றலாம்.
சரிதானா? வேழம் அவர்களே.

லட்சுமி said...

செல்வநாயகி said...
///அருமையாக இருந்தது மகனின் அகராதி. ஹரிகரன் சொல்லியிருப்பது போல மனதில் கசடுகள் படியும்முன்னர் உதிர்க்கும் இதுதான் அற்புதமான மொழி///

same. Thanks for sharing this with us.
\\

வருகைதந்து
மறுமொழி தந்ததற்கு நன்றி செல்வநாயகி .

லட்சுமி said...

\\துளசி கோபால் said...
குழந்தை நல்லா பேச ஆரம்பிச்சதும்
இதையெல்லாம் மறந்துரும். ஆனா நமக்கு சில வார்த்தைகள் ஒட்டிக்கும்:-)

மழலையின் சொல் அமிர்தம்\\

நன்றி துளசி.
உண்மையான வார்த்தைகள்.
நாங்கள் தான் இப்போது புது மொழிக்கு மாறி வருகிறோம்.

லட்சுமி said...

\\மங்கை said...
லட்சுமி...

இதைவிட இனிமையான மொழி இருக்க முடியாது... எத்தனை வருடமானாலும்...ஹ்ம்ம்.. என் பெண் குழ்ந்தையாக இருக்கும் போது பேசிய வார்த்தைகள் இன்னும் பசுமையாக இருக்கிறது மனதில்... \\

ம்..குடுத்து வைத்தவர் மங்கை நீங்கள் எனக்கு என் பெண்பேசிய வார்த்தைகள் நினைவில் இல்லை.
இப்போது எழுதி வைத்து வீடியோ எடுத்து என்று பையனுக்கு செய்வது
எல்லாம் அப்போது செய்யமுடியாமல்
போன வருத்தம் எனக்கு இருக்கிறது.

அஞ்சலி said...

வாசிக்க நல்லாயிருக்கு ஆண்டி.

நானும் இப்பிடி நிறைய சொற்கள் சொன்னதா அம்மா, அப்பா சொல்லுவாங்க.

என்னோட பெயரையே நான் சரியா அஞ்சலி என்று சொல்லாம, அலிலா என்று சொல்லியிருக்கிறேன். அது எப்படி அஞ்சலி, அலிலா ஆச்சுன்னு இன்னும் தெரியாது. :)

லட்சுமி said...

நன்றி.(அலிலா) அஞ்சலி.:))

குட்டி செல்லங்களின் மொழியாச்சே.உங்களைப் போல செல்லப்பிள்ளைகள் பேசின வார்த்தை எல்லாம் நினைவு வச்சுக்கிட்டு பெற்றோர் எப்பவும் மகிழ்ந்து இருப்போம்.