April 6, 2007

அழகென்ற சொல்லுக்கு

அழகு தொடர் பதிவுக்கு வல்லி கூப்பிட்டு இருக்காங்க. எனக்கு உடனே தோன்றியது இதெல்லாம் தான் ,
1.அழகென்ற சொல்லுக்கு முருகா முருகன்னா அழகு..அழகுன்னா முருகன். வேறெதும் தோணும் முன்னே முருகனோட சிலை தான் நினைவு வருது அதுவும் எத்தனை எத்தனையோ முருகன் கோயில் போயிருந்தாலும் அருகில் இருந்து அடிக்கடி பார்க்கும் உத்தர சுவாமிமலை என்னும் மலை மந்திர் முருகன் கண்ணுக்குள் வரார். அதுவும் பாலபிஷேகம் சந்தன அபிஷேகம் பண்ணும் போது அந்த முகம் இருக்கே அத்தன வடிவு.

இதே மாதிரி தான் கோயிலில் அம்மன் சிலை பார்க்கும் போது சாமிகிட்ட வேண்டிக்கப் போனதெல்லாம் இல்லை. கண் பட்டுடும் போன்னு சொல்லிட்டு வருவேன். அளந்தெடுத்த நாசியும் ஒயிலான இடையும்..."சின்ன சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி சிவகங்கை குளத்தருகே ஸ்ரீதுர்கை சிரித்து இருப்பாள் " பாட்டு காதுக்குள் கேட்கும்.


2. அழகுன்னா குழந்தைகள் . குட்டியா இருக்கும் போது எல்லாமே அழகுன்னு சொல்லுவாங்க...ஆனா குழந்தைங்கன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். சின்னதா இருக்கும் போது சித்தி வீட்டிற்கு போகும் போதே அவங்கள பாத்துக்கறது எல்லாம் செய்வேன்.
கொஞ்ச நாள் தில்லியில் வீட்டில் குழந்தைகள் காப்பகம் மாதிரி வைத்திருந்தேன். அவங்க செய்யறது ஒண்ணு ஒண்ணும் அழகு.
என் பொண்ணு சின்னவளா இருக்கும் போது வித விதமா அலங்கரிச்சு போட்டோ எடுப்பேன் . இப்போ பையன் குறும்பெல்லாம் வீடியோவில் பதிவு.. எப்பவும் ரெடியா இருப்பேன். வீட்டுக் குழந்தைங்கன்னு இல்லை எங்க குழந்தைகளப் பார்த்தாலும் சிரித்து விளையாடி மகிழ்வேன் .


கண்காட்டி சிரித்து,
உதடு சுழித்து ,
பிஞ்சு கரத்தால் அணைத்து,
தோள்மேலே தூளியாடி,
ங்கா உங்கா மொழி பேசி ,
பெற்றவளாய் சில நேரம்,
பிள்ளையாய் சில நேரம் ,
என்று எனை மாற்றும் ,
அள்ள அள்ளக் குறையாத ,
அழகுச் சுரங்கம்.


3.அழகென்றால் பெண்கள் தான் . பதின்ம வயது பெண்கள் அப்போ மட்டும் எங்கிருந்து அவ்வளவு அழகு அவங்களுக்கு வருமோ தெரியல . ஒவ்வொருத்தரும் ஒரு தேவதை தான். பசங்க சும்மா ஒன்னும் கிறுக்கு பிடிச்சு அலையரது இல்ல.. அப்புறம் வளைகாப்பு இட்டிருக்கும் பெண்கள் , அவங்க முகமும் வளையலும் ,சிரிப்பும் சந்தோஷமும் பார்க்கறவங்களைத் தொத்திக்கும்.

4. காடு மலை மழை வானவில் வசந்தம் பாலை இப்படி நிறுத்த முடியாம போய்க்கொண்டே இருக்கும் இயற்கை . இதுல எதச் சொல்ல எத விட .
ரீங்கரிக்கும் காடு அழகு ,
மேகம் தவழும் மலை அழகு ,
சில்லென்ற மழை அழகு ,
வந்து மறைந்தாலும் வானவில் அழகு ,
மலர் தூவும் வசந்தம் அழகு,
காற்றுக்கோலமிடும் பாலை அழகு.5. அன்பு அழகுங்க... அழகு எல்லாம் அன்பாக இருக்காமலும் போகலாம் ஆனா அன்பு எப்போதும் அழகுதானே . பாருங்க கடல் கூட அழகு தான் ஆனா சுனாமி வரலாம் . மழை அழகு தான் ஆனா இடி வெள்ளம் கொண்டுவரலாம் . உண்மையான அன்பு எப்போதும் நல்லது மட்டுமே செய்யும் . அன்பா குணமா இருக்கறவங்க எல்லாரும் அழகானவங்க தான்.
6. முதுமையும் பாசமும் அழகு தாத்தா பாட்டி பேரன் பேத்திகளுடன் கழிக்கும் பொழுதுகளை கவனித்திருக்கிறீர்களா ? தனக்கு கிடைக்கும் சாக்லேட்டில் பாதி பகிர்வதும் ,
செல்லமான அரவணைப்பும் , தள்ளாடும் வயதில் தூக்கிவைத்து
கொஞ்சுவதும் , சட்டிப்பானை , கடை விளையாட்டும்
நட்பாய் கேரமும் ஆடும் போதும் கை கோர்த்து
வேடிக்கை பார்த்துக் கொண்டே சாலை யோரம் போகும் போது கவனியுங்கள் . வயதொத்தவர்களாய் இருவரும் மாறிப்போகும் நிலை அற்புதம்.


அடுத்து நான் அழகு சொல்ல அழைக்கும் பதிவர்கள்,

தம்பி சென்ஷி
தங்கச்சி காட்டாறு
குறைகுடம்

51 comments:

மங்கை said...

என்னோட அழகெல்லாம் உங்களுக்கும்..
இதில் நாலு கண்டிப்பா
குழந்தைகள், பதின்ம வயது பெண்கள், கர்பமாய் இருக்கும் பெண்கள்.. அன்பு .. நான் எப்பவும் ரசிக்கும் விஷயங்கள்...
ரொம்ப நல்லா இருக்கு லட்சுமி...

Radha Sriram said...

அழகு பதிவு ரொம்ப அழகா வந்திருக்கு முத்துலக்ஷ்மி!!

எனக்கும் குழந்தைங்கன்னா ரொம்ப பிடிக்கும்.....அதுவும் பச்சையா மூக்கு ஒழுகிட்டு, அம்மா தலப்ப பிடிச்சிகிட்டு பின்னாடி அழுதுகிட்டே போகும் பாருங்க ரொம்ப அழகு. அதுலயும் சிலதுங்க கொஞ்சம் நேரம் அழுகைய நிறுத்திட்டு சுத்திமுத்தி வேடிக்கை பாத்துட்டு அப்புரமா மறுபடியும் கண்டின்யு பண்ணும் பாருங்க அய்யோ கொள்ளை அழகு.!!

G.Ragavan said...

முருகு என்றாலே அழகு. அப்படியிருக்கையில் அழகு என்றதும் "அழகென்ற சொல்லுக்கு முருகா" என்ற பாடல் நினைவிற்கு வந்தது வியப்பில்லை. மாறாக சிறப்பு.

குழந்தைகள் அழகுதான். அமிழ்தினும் ஆற்ற இனிதென்று குழந்தை உழப்பி ஊட்டும் உணவு என்கிறாரே வள்ளுவர்.

மத்த எல்லாத்துலயும் ஒத்துக்கிறேன். ஆனால் பெண்கள் மட்டுந்தான் அழகுங்குறத ஒத்துக்க முடியாது. மயிலில் ஆணுக்குத் தோகை. ஆனையில் ஆணுக்குக் கொம்பு. குயில் ஆணுக்குக் குரல். இப்படி எதையெடுத்தாலும் ஆணுக்கு ஒரு சிறப்பிருக்கும். ஆக ஆணுக்குப் பெண்ணழகு. பெண்ணுக்கு ஆணழகு என்பதே உண்மை.

பங்காளி... said...

இப்பல்லாம் அழகா பதிவெழுத ஆரம்பிச்சிருக்கீங்களே...அதையும் லிஸ்ட்ல சேர்த்திருந்தா இன்னும் அழகா இருந்திருக்கும்.....

(ஹி..ஹி..)

முத்துலெட்சுமி said...

\\ மங்கை said...
என்னோட அழகெல்லாம் உங்களுக்கும்..//
நீங்க தான் தொடர மாட்டேன்னு
சொல்லிட்டீங்க. நான் எழுதுன எல்லாம் உங்களுதும்ன்னு சொல்லி தப்பிக்க பாக்கறீங்க . யாராச்சும் கூப்பிடாமலா போப்போறாங்க.

-----

நன்றி ராதா ,சுத்தி முத்தி பார்க்கறது கண்டின்யூ பண்றது ஆமாமா எல்லாமே அழகு தான் அவங்க செய்யறது.
---------

முத்துலெட்சுமி said...

\\ G.Ragavan said...
மத்த எல்லாத்துலயும் ஒத்துக்கிறேன். ஆனால் பெண்கள் மட்டுந்தான் அழகுங்குறத ஒத்துக்க முடியாது. மயிலில் ஆணுக்குத் தோகை. ஆனையில் ஆணுக்குக் கொம்பு. குயில் ஆணுக்குக் குரல். இப்படி எதையெடுத்தாலும் ஆணுக்கு ஒரு சிறப்பிருக்கும். ஆக ஆணுக்குப் பெண்ணழகு. பெண்ணுக்கு ஆணழகு என்பதே உண்மை. //

அவங்கவங்களுக்கு எது அழகோ அதைப்பற்றி எழுதச் சொன்னதால் இப்படி எழுதிவிட்டேன். எனக்கு பெண் தான் அழகு என்று தோன்றுகிறது. ஆண் என்றால் எனக்கு அழகான ஆண்களை விட அன்பான ஆண்களைத்தான் பிடிக்கும்.எனவே அன்பு என்ற இடத்தில் ஆண்களையும் சேர்த்தே குறிப்பிட்டதாகவே அர்த்தம்.
----------
\\ பங்காளி... said...
இப்பல்லாம் அழகா பதிவெழுத ஆரம்பிச்சிருக்கீங்களே...அதையும் லிஸ்ட்ல சேர்த்திருந்தா இன்னும் அழகா இருந்திருக்கும்.....//

உண்மைதான் எனக்கே வந்தபோது நடுக்கமிருந்தது. பொன்ஸ் கூட சொன்னாங்க என்ன பயந்தாப்பல எழுதறீங்க உங்களால முடியும்ன்னு.
ஆனா தன்னடக்கம் தான் காரணம் இல்லன்னா ஏழாவதா என் பதிவழக
சேர்த்திருப்பேன். நன்றி.
[உங்களுக்கு நேற்றைய பதிவின் பின்னூட்டத்தில் டேக் செய்திருக்கிறேனே பார்த்தாச்சா]

கண்மணி said...

அழகூ பற்றிய பதிவு ரொம்ப அழகாவே இருக்கு முத்துலசுமி.குறிப்பா 'ங்கா..உங்கா 'குழந்தைகள் யாருக்குத்தான் பிடிக்காது

இலவசக்கொத்தனார் said...

உங்க முதல் அழகும் கடைசி அழகும் பத்தி என்ன சொல்ல! அருமையான அழகுப் பதிவு!

Radha Sriram said...

ஆண்களிடம் நிரைய அழகு இருக்கு ராகவன்.என்ன இப்படி சொல்லிடீங்க??

சமையல் அரையில் ஆண், பெண்களை கண்ணுக்கு கண் பார்த்து பேசும் ஆண், குழந்தைகளுக்கு பாடம் சொல்லிதரும் ஆண்,பதின்ம வயது பிள்ளையிடம் sports discuss பண்ணும் ஆண்,பேரன் பேத்திகளுக்கு கோவிலிலிருந்து கொண்டு வந்த பிராசாதத்தை ஊட்டிவிடும் ஆண் இப்படி நிரைய.....

மங்கை said...

அழக பத்தி நானா?...அது சரி.. எல்லாரும் எழுதறாங்கன்னு நானும் எழுதவா?...எதோ தெரிஞ்சத கிறுக்கிட்டு இருக்கேன்...பாவமேன்னு வந்து பின்னூட்டம் போட்டுட்டு இருக்கீங்க..அதையும் கெடுத்துக்க சொல்றீங்களா... எனக்கு எய்ட்ஸ் விட்டா எதுவும் தெரியாதுங்க..

நீங்க எல்லாம் எழுதினா
அட ஆமா... நமக்கும் இப்படி தோனும் இல்லன்னு நினைக்க தோனும் அவ்வளவு தான்...

நீங்க எல்லாம் எழுதுங்க நான் ரசிக்குறேன்..

நமக்கு அது எல்லாம் வராது லட்சுமி..

முத்துலெட்சுமி said...

\\கண்மணி said...
அழகூ பற்றிய பதிவு ரொம்ப அழகாவே இருக்கு முத்துலசுமி.குறிப்பா 'ங்கா..உங்கா'
குழந்தைகள் யாருக்குத்தான் பிடிக்காது //

ஆமா கண்மணி அதுவும் நம்மைப்போல பெண்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே பிடிக்கும்.
------------

\\இலவசக்கொத்தனார் said...
உங்க முதல் அழகும் கடைசி அழகும் பத்தி என்ன சொல்ல! அருமையான அழகுப் பதிவு! //

ரொம்ப நன்றிங்க கொத்ஸ்.அழகா
ஆரம்பிச்சுவச்சது நீங்க தானே.

முத்துலெட்சுமி said...

\\Radha Sriram said...
சமையல் அரையில் ஆண், பெண்களை கண்ணுக்கு கண் பார்த்து பேசும் ஆண், குழந்தைகளுக்கு பாடம் சொல்லிதரும் ஆண்,பதின்ம வயது பிள்ளையிடம் sports discuss பண்ணும் ஆண்,பேரன் பேத்திகளுக்கு கோவிலிலிருந்து கொண்டு வந்த பிராசாதத்தை ஊட்டிவிடும் ஆண் இப்படி நிரைய..... //

சரிதான் ராதா நீங்க சொன்னமாதிரி பெண்ணான எனக்கு ஆண்கள் அழகா தெரிந்திருக்கணும் என்று நினைத்து சொன்னார் போல.ராகவன். எழுதும் போதே நினைத்தேன் பெண் அழகுன்னா அப்ப ஆண் இல்லயான்னு கேப்பாங்களோன்னு... :)

--------------
\\மங்கை said...
அழக பத்தி நானா?...அது சரி.. எல்லாரும் எழுதறாங்கன்னு நானும் எழுதவா?...எதோ தெரிஞ்சத கிறுக்கிட்டு இருக்கேன்...பாவமேன்னு வந்து பின்னூட்டம் போட்டுட்டு இருக்கீங்க..அதையும் கெடுத்துக்க சொல்றீங்களா... எனக்கு எய்ட்ஸ் விட்டா எதுவும் தெரியாதுங்க..//

சும்மா யார் கிட்ட கதை விடறீங்க.
திடீரென்று ஒரு பின்னூட்டத்தில்
வைரமுத்துவோட தேடல் இருக்கும் இடத்தில் தான் பாட்டை கோட்
பண்ணறீங்க , தில்லானா மோகனாம்பாள் மனோரமாவை 50 தடவை ரசிக்கிறீங்க ... உக்காந்து யோசிக்க எழுத சோம்பேறித்தனமா இரூக்கும்.

உண்மைத் தமிழன் said...

அழகான வார்த்தைகள்.. அழகான கருத்துக்கள்.. மொத்தத்தில் முத்துலஷ்மியின் அழகான இந்தப் பதிவுக்கு இந்த 'அழகனின்' அழகான பாராட்டுக்கள்..

வல்லிசிம்ஹன் said...

சமையல் அரையில் ஆண், பெண்களை கண்ணுக்கு கண் பார்த்து பேசும் ஆண், குழந்தைகளுக்கு பாடம் சொல்லிதரும் ஆண்,பதின்ம வயது பிள்ளையிடம் sports discuss பண்ணும் ஆண்,பேரன் பேத்திகளுக்கு கோவிலிலிருந்து கொண்டு வந்த பிராசாதத்தை ஊட்டிவிடும் ஆண் இப்படி நிரைய//
இதுவும் இன்னோரு அழகு.
முத்துலட்சுமி மடை திறந்த வெள்ளம்னு சொல்லுவாங்க.
அப்படி எழுதிட்டீங்களே.
எத்தனை அழகா வந்து இருக்கு.
உலகத்திலயே அலுக்காத விஷயங்கள் குழந்தை யானை கடல்னு சொல்லுவாங்க.

நீங்க கவிதையா வடிச்சிட்டீங்க அழகை.
ரொம்ப நல்லா இருக்கு.

முத்துலெட்சுமி said...

பாராட்டுக்கு நன்றி உண்மைத்தமிழன்.

முத்துலெட்சுமி said...

வாய்ப்பளித்த வல்லி நன்றி உங்களூக்கு.
அழகா வந்துருக்குன்னு சொன்னதுக்கும் சேர்த்து.

அப்புறம் நீங்க கோட் பண்ண வரிகள் ராதா எழுதியது .

தம்பி said...

சிம்பிளா அழகா இருக்குங்க அழகு பதிவு. குழந்தைகள் பற்றிய வரிகளை ரொம்பவே ரசித்தேன்.

முத்துலெட்சுமி said...

ரசிச்சீங்களா நன்றி தம்பி.

நாமக்கல் சிபி said...

//அழகென்ற சொல்லுக்கு முருகா முருகன்னா அழகு..அழகுன்னா முருகன். வேறெதும் தோணும் முன்னே முருகனோட சிலை தான் நினைவு வருது //

ஆமாங்க! அழகுன்னா முருகன்தான்!
முருகன் என்றாலே அழகுதான்!

வேலன் சீரியல் பார்த்திருக்கீங்களா?
அதுல வேலனா நடிச்ச சிறுமியும் அழகுதான்.

அந்த சீரியல் பார்க்குறப்ப கூட

"அள்ளி அணைத்திடவே" என்ற பாடல் நினைவுக்கு வரும்!

முத்துலெட்சுமி said...

வேலன் பாக்கவில்லை சிபி ஆனா விளம்பரம் பார்த்திருக்கேன். அழகாத்தான் இருப்பா.

சென்ஷி said...

கடைசி அழகு உண்மையிலேயே ரொம்ப ரசிச்சு எழுதியிருக்கீங்க
:)
சென்ஷி

கோபிநாத் said...

ரொம்ப அழகா இருக்குக்கா உங்க அழகு பதிவு

குழந்தைகளைப்பற்றி நீங்கள் சொன்ன விதம் உண்மையில் ரொம்ப அழகாக இருந்தது

மிகவும் ரசித்து, யோசித்து போட்டுயிருக்கீங்க போல
பதிவ படிக்கும் போதே தெரியுது.

குறைகுடம் said...

ஆறும் அழகாக இருந்தாலும், 3-ஆவது அழகை விவரித்திருக்கும் விதம் சூப்பர் :-) அழைப்புக்கு நன்றி. கட்டாயம் எழுதுகிறேன்.

முத்துலெட்சுமி said...

சென்ஷி , குறைகுடம் எப்போ எழுதப்போறீங்க
ரொம்ப ஆவலா இருக்கோம்.

------------
கோபிநாத் ரொம்பல்லாம் யோசிக்கலங்க.
ரசிச்சத மனசுல பட்டத அப்படியே எழுதிட்டேன்.

அபி அப்பா said...

தம்பியா? சென்ஷியா?

அபி அப்பா said...

உங்க அழகு பதிவு நேத்தே படிச்சேன். பதில் தான் போடலை. என்ன பதில் சொல்லலாம் என யோசிக்க டைம் எடுத்துகிட்டேன். அதான் லேட். இந்த நிமிடம் வரை எனக்கு டைம் கிடைக்காத காரண்த்தால் நாளை பதில் போடுவேன்:-)

அபி அப்பா said...

இவ்ளவு நீட்டு சாக்கு போக்கு சொல்வதுக்கு பதில், பின்னூட்டத்துக்கே பதில் சொல்லியிருக்கலாம் ன்னு சொல்வது காதில் கேக்குது:-))

முத்துலெட்சுமி said...

தம்பியா சென்ஷீயான்னா சென்ஷி தான் ஏன்னா தம்பி பதிவு போட்டாச்சு அழகப்பத்தி இல்லயா?

யோசிச்சு பின்னூட்டம் போடனுமா அப்படி யோசிக்கற அளவுக்கு என்ன எழுதிட்டேன்..

காட்டாறு said...

கலக்கிட்டீங்க முத்துலெட்சுமி. அழகை, அருமையா வடித்திருக்கீங்க!

இதுல என்னப்போய் tag செய்து இருக்கீங்களே... உங்கள மாதிரி எனக்கு எழுத வராது. உங்கள் பதிவுல நான் சொல்ல வேண்டிய அழகுகள் அத்தனையும் உள்ளன. எழுதுறேன்.

முத்துலெட்சுமி said...

எழுதறேன்னு சொன்னதுக்கு நன்றி காட்டாறு..உங்க அழகுகள் பதிவை விரைவில் எழுதுங்க.

மா சிவகுமார் said...

அழகான பதிவு.

வாழ்க்கை ததும்பி வழிவது பதின்ம வயதுப் பெண்களிடமும், சிறு குழந்தைகளிடமும். அவர்களுக்கு உலகில் எல்லாமே நல்லதாக நேசம் நிறைந்ததாகத் தோன்றும் என்று படுகிறது. பசங்க அந்த வயதில் குழம்பிச் சுற்றிக் கொண்டிருப்பதுதான் மிஞ்சும். நிறைவாக வயதாகி நாற்பதுகளின் நடுவில் நிற்கும் போதுதான் ஆணுக்கு அழகு.

தாத்தா பாட்டிகளுக்கும் (அதற்குள் பொருளாசையை தீர்த்துக் கொண்டு விட்டால்) அன்பைத் தவிர மீதி அனைத்தும் வற்றிப் போய் அழகு பொங்குகிறது.

அழகுக்கெல்லாம் பேரழகு முருகன்தான்.

அன்புடன்,

மா சிவகுமார்

முத்துலெட்சுமி said...

சிவக்குமார் முதன் முதலாக இங்கு மறுமொழிந்திருக்கிறீர்களோ ?
வருகைக்கு நன்றி .

இராம் said...

லட்சுமி,

அழகான பதிவு....

இந்த பதிவை முன்னாடி படிக்கமாலே இதே மாதிரி தலைப்பை போட்டு நானுமொரு பதிவு எழுதிட்டேன்....

ஹி ஹி அதுக்கு எதுவும் காபிரைட்ஸ் உரிமை துட்டு வெட்டணுமா??? :)

முத்துலெட்சுமி said...

காபி ரைட்ஸ் டீ ரைட்ஸ் எல்லாம் வேண்டாங்க...நாங்க பூஸ்ட் இஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி காரங்க.

ஒரே மாதிரி யோசிச்சிருக்கிறோமா சரிதான். க்ரேட் மென் தின்க் அலைக்..
ஓவரா இருக்கோ. :)

காட்டாறு said...

இதோ உங்க சொல்லுக்கு மதிப்பு:
http://kaattaaru.blogspot.com/2007/04/blog-post_11.html

VSK said...

ஆஹா! எத்தனை அழகு உங்கள் கைவண்ணத்தில்!

அழகை ஆராதித்திருக்கிறீர்கள்!

முத்துலெட்சுமி said...

தொடர்ந்ததற்கு நன்றி காட்டாறு.
--------
பாராட்டுக்கு நன்றி விஎஸ்கே.

சினேகிதி said...

\\பொண்ணு சின்னவளா இருக்கும் போது வித விதமா அலங்கரிச்சு போட்டோ எடுப்பேன் . இப்போ பையன் குறும்பெல்லாம் வீடியோவில் பதிவு.. எப்பவும் ரெடியா இருப்பேன். வீட்டுக் குழந்தைங்கன்னு இல்லை எங்க குழந்தைகளப் பார்த்தாலும் சிரித்து விளையாடி மகிழ்வேன் .\\

makeup podura velai thangachinta but photo edukirathu enta velai:-))

alakana alaku pathivu:-))

முத்துலெட்சுமி said...

வாங்க சினேகிதி முதன்முறையா வந்திருக்கிறீர்கள்.மறுமொழிக்கு நன்றி.

விழியன் said...

அழகாக அழகு..:-)

முத்துலெட்சுமி said...

விழியன் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்.

சிவமுருகன் said...

அழகுக்கு அழகு முருகன், அதையும் முதல் ஆளா இங்கே நிற்கிறாரே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி.

சரி உங்ககிட்ட இராஜ அலங்காரம் படம் இல்லையா? இருந்திருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும் (வந்ததே லேட்டு இதுல கேள்வி வேரயா? - இது என்னோட மனசாட்சி).

முத்துலெட்சுமி said...

தில்லியில் இருந்துகிட்டே இந்த பக்கம் எட்டி பார்க்க இத்தனை நாள் ஆகிருக்கு உங்களுக்கு..சரி சரி வந்தவுடனே கேள்வியா சரியாத்தானே
கேட்குது உங்க மனசாட்சி
உங்க அளவுக்கு என்கிட்ட கலெக்ஷன் ஸ் இல்லப்பா...எதோ கூகிள் துணையோட சில படம் போடறது..தான். மறுமொழிக்கு நன்றி.

சென்ஷி said...

//தில்லியில் இருந்துகிட்டே இந்த பக்கம் எட்டி பார்க்க இத்தனை நாள் ஆகிருக்கு உங்களுக்கு..சரி சரி வந்தவுடனே கேள்வியா சரியாத்தானே
கேட்குது உங்க மனசாட்சி//

மனசாட்சி வேற ஏதாச்சும் கேட்டுச்சான்னு கேட்டு சொல்லுங்கக்கா :))

சென்ஷி

முத்துலெட்சுமி said...

சென்ஷிக்கு சொன்ன பதிலை இங்க போடாம தில்லி சந்திப்பு பதிவுல போய் போட்டுட்டேன்...
வீட்டுல விருந்தின ர் வந்து போனாங்களா குழப்பத்தில கொஞ்சம் தடுமாறிட்டேன்..
இங்க வெட்டி ஒட்டியாச்சு..சரியா சென்ஷி.

சென்ஷி said...

//முத்துலெட்சுமி said...
சென்ஷி ஒரு விசயம் புரியுதா?சிவமுருகனவிட அவர் மனசாட்சி கொஞ்சம் வாயைத்திறந்து பேசற டைப் போல... :)//

ஆனா சிவமுருகன் பதில் வந்தது இந்த பதிவுல இல்லையே :))


உங்க அழகு பதிவுல.. ஏன்ன அதுல சாமி போட்டோ இருக்குதுல்ல :)

சென்ஷி

சென்ஷி said...

சரி செய்ததற்கு நன்றி :)

ஆனா சிவா இங்க இத படிப்பாருன்னு எனக்கு நம்பிக்கையில்ல :))

சென்ஷி

முத்துலெட்சுமி said...

வேற வழி கொஞ்சம் போன் போட்டு
சேட் ரூமுக்கு அதாங்க இந்த பதிவுக்கு வந்து எட்டிப்பார்த்துட சொல்லுங்க.

சென்ஷி said...

நல்லாருக்கே கத...

பேசாம நடந்த மீட்டிங்க பத்தி சீக்கிரம் ஒரு பதிவு போட்டுடுங்க. :)

எட்டிப்பாக்குறப்ப கபால்ன்னு புடிச்சுக்கலாம் :)

சென்ஷி

சிவமுருகன் said...

//ஆனா சிவா இங்க இத படிப்பாருன்னு எனக்கு நம்பிக்கையில்ல :))//

ஐயோ அவரோட நம்பிக்கைய வீனாக்கிட்டேனே! :)

--அது என்ன சென்ஷி அவ்ளோ நம்பிக்கை? பரவாயில்லை. --


எல்லாரோட மனசாட்சியும் வாயைத்திறந்து பேசற டைப் தான். இத நான் தனியா வேற சொல்லனுமா?

முத்துலெட்சுமி said...

அடுக்கடுக்கான மறுமொழிகளுக்கு நன்றி...சென்ஷீ (சொல்லலன்னா மிரட்டறாங்கப்பா)


சிவமுருகன் அசத்தலான பதில்.மறுமுறை விசிட் அடித்தற்கு நன்றி.

சென்ஷி said...

//முத்துலெட்சுமி said...
அடுக்கடுக்கான மறுமொழிகளுக்கு நன்றி...சென்ஷீ (சொல்லலன்னா மிரட்டறாங்கப்பா)


சிவமுருகன் அசத்தலான பதில்.மறுமுறை விசிட் அடித்தற்கு நன்றி.//

இப்ப சென்ஷி அப்பீட்டே.... :))

மறுமொழிக்கு நன்றி சிவா...

என் நம்பிக்கை வீண்போனாலும் ஒரு மறுமொழி கிடைச்சது போதும்.. நாங்க ஜெயிச்சிட்டோமுல்ல :))

சென்ஷி