April 12, 2007

கொஞ்சம் பெரிய கதை -2-

கொஞ்சம் பெரிய கதை 1
மகாவிற்கு ஒரு குழந்தை பிறந்து அது மூளை வளர்ச்சி இல்லாமல்
கொஞ்ச நாளில் இறந்துவிட்டது . அப்போது இருந்தே வாழ்க்கையில் எதுவுமே பிடிப்பற்றவராக நடக்கத்தொடங்கி இருந்தான் அவள் கணவன் . இப்போது இது என்ன புதுக்கவலை.

மகா தூரத்தில் பார்க் வாசலருகில் வரும்போதே பானு பார்த்துவிட்டாள் . கொஞ்சம் வெளியே போய்ட்டு வந்துடறேன் , என்றபடி பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் அந்த புகைப்படக் கவரையும் எடுத்துக்கொண்டு ஓட்டமாய் வெளியேறினாள். மகா என்னம்மா எப்படி இருக்க என்று ஆரம்பிப்பதற்கும்...மகா அண்ணீ என அழ ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. வா பார்க்குக்குள்ள போயிடுவோம் பாதையோரம் நின்னு பேச முடியாது என்றபடி உள்ளே போய் ஒதுக்குபுறமாய் ஒரு இடத்தில் அமர்ந்தனர்.

அண்ணீ நான் என்ன செய்யறதுன்னே தெரியல .. நேற்று லருந்து அவர் வீட்டுக்கு வரல.ஒரு மாதமாவே நான் கவனிக்கறேன் அவரு சரியா நேரத்துக்கு வீட்டுக்கு வரதில்லை . கேட்டா என்ன என்னவோ காரணம் சொல்லிக்கிட்டிருந்தார் . நான் தான் தப்பு பண்ணிட்டேன் அப்பவே உங்க கிட்ட சொல்லலீருக்கணும். சரியாகிடும்ன்னு விட்டுட்டேன்.

பானு மெதுவாக அந்த புகைப்படக் கவரை அவளிடம் கொடுத்தாள். என்ன அண்ணீ இது .. பாரு...நீ வரலன்னாலும் இன்னைக்கு உன்னைக் கூப்பிட்டு இருப்பேன் நான் . உள்ளே இருந்து வந்த புகைப்படங்களில் மகா வின் கணவர் ஒரு குழந்தையை தூக்கி வைத்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படம். குழந்தையின் கையில் பெரிய பொம்மை இருவரும் அப்படி ஒரு அன்பாக சிரித்தபடி இருந்தனர்.


இன்னோர் புகைப்படத்தில் அந்தக் குழந்தையை ஒரு பெண் தூக்கிக்கொண்டிருந்தாள். பெண் மிகவும் சோகையாக நோய்வாய்ப்பட்ட தோற்றத்தில் இருந்தாள் . நீங்க தான் அண்ணீ அவரிடம் பேச சரியான ஆள். அன்பானாவர் தான் ஆனா எப்ப என்ன செய்வாருன்னு தெரியாம எதயாச்சும் செஞ்சு வைப்பார் அதனால யாராச்சும் கஷ்டப்படுவாங்களான்னு யோசிக்கவே மாட்டாரு.

இந்தப்படத்தைப் பார்த்து உனக்கு அவர் மேல சந்தேகம் ஏதும் வரலையா? என்று கேட்ட பானுவிடம் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே இல்லண்ணீ அவர் அப்படிப் பட்டவரும் இல்லை . நானும் அப்படி ஒரு நாளும் சந்தேகமும் படமாட்டேன் . அவர் நம்பருக்கு நீங்க ஃபோன் பண்ணுங்க பேசுங்க . எங்கருக்காரோ என்ன உதவியாச்சும் வேனும்ன்னா சொல்லச் சொல்லுங்க. எப்பவும் தன் போக்குல போறதே அவருக்கு ஆகிடுச்சு .

மீண்டும் கடைக்குள் வரும்போது ரீனா - "அக்கா கவரைக் கேட்டு அந்தப் பொண்ணு வந்துதுக்கா , போய்ட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வரச்சொன்னேன்" என்றபடி எதிர்பட்டாள். நேற்று முகூர்த்த நாள் என்பதால் இன்று ரோல் ரோலாக வந்து குவிந்து கொண்டிருந்தது . எழுதி எழுதி லேப்க்கு அனுப்பிக் கொண்டிருந்தாள் .

ரீனா திடீரென்று அக்கா அக்கா என்று முழங்கையால் இடித்து அங்க பாருங்க அந்தா அந்த ப் பொண்ணு தான். அவளே தான் ஆனால் புகைப்படத்தை விட நேரில் நல்ல அழகாகப் பட்டாள்." இன்னைக்கு லேப்புக்கு அனுப்பின கவரிலிருந்து சில ரோல்கள் மாறிப்போயிருச்சுங்க . என்ன படம் குடுத்தீங்கன்னு சொல்லுங்களேன்" என்றபடியே கவரையெல்லாம் எடுத்து கலைத்து தேடுவது போல் பாவனை செய்தாள் பானு. "குழந்தை பிறந்தநாளுங்க பொம்மை வச்சுக்கிட்டு குழந்தை தாங்க நிறைய இருக்கும்."


"இது வா பாருங்க . "

"ஆமாங்க இது தான் . "

"அப்ப இதுகூட உங்களுதாத்தான் இருக்கணும் "என்றபடி மகா புருஷன் குழந்தை கூட இருந்த போட்டோவைக் காட்டியதும் "ஆமா எங்களுதுதான் "என்றபடி வாங்கிக் கொண்டாள் . "நாங்க கஸ்டமர் அட்ரஸ் வாங்கறது எப்பவும், எங்க இருக்கீங்க ? "என்ற ரீனாவின் கேள்விக்கு அவள் ஒரு அனாதை இல்லத்து முகவரியைக் கொடுத்தாள் . -----(தொடரும்)

15 comments:

மங்கை said...

ரொம்ப நல்லா இருக்கு லட்சுமி... ஏதோ கண் முன்னால நடக்குற மாதிரி

சென்ஷி said...

அநேகமா நீங்க கூடிய சீக்கிரம் சீரியல் எழுத போவிங்கன்னு நினைக்கிறேன்..

:))

சென்ஷி

முத்துலெட்சுமி said...

என்னவோ உங்களை எல்லாம் நம்பித்தானே எழுதிப்பழகுறேன். நன்றி மங்கை.
---------

சென்ஷி அது என்ன சீரியல் எழுதப்போவீங்கன்னா...நல்லாருக்குன்னு அர்த்தமா இல்ல கொடுமயா இருக்குன்னு அர்த்தமா ? :) கதை அடுத்த பகுதியில் முடிஞ்சுடும்...அய்யோ எப்படித்தான் வருஷக்கணக்கா இழுக்கறாங்களோ அவங்கள்ளாம்..

Nandha said...

எனக்கு நீங்க ஒரு ஹெல்ப் பண்ணுங்களேன். கொஞ்சம் உங்க மத்த எல்லா வேலைகளையும் தள்ளி வெச்சுட்டு ஒரே மூச்சா இதை எழுதி முடிச்சுடுங்களேன்ன். ப்ளீஸ்...... இன்னும் நாளைக்கு வரைக்கும் எல்லாம் என்னால காத்திருக்க முடியாது.....

மங்கை said...

//அநேகமா நீங்க கூடிய சீக்கிரம் சீரியல் எழுத போவிங்கன்னு நினைக்கிறேன்//

அந்த கொடுமை எல்லாம் பார்க்க சகிக்காம் தான தமிழ்மணத்துல பொழுதகழிச்சுட்டு இருக்கோம்...

லட்சுமி கேட்ட கேள்விதான் எனக்கும் தோனுது?...:-))

அபி அப்பா said...

கொஞ்சம் இருங்க படிச்சுட்டு வர்ரேன்!

முத்துலெட்சுமி said...

நந்தா நிஜமாவே அடுத்தபகுதிக்கு ஆவலா இருக்கீங்களா? ஆனா எழுதி திருத்தி அடிச்சு ... கஷ்டங்க...பழகிட்டுத்தானே இருக்கேன். அதனால அவ்வளவு அவசரமா எழுதினா படிக்கற நீங்கள்ளாம் அடிக்க வருவீங்க..கொஞ்சம் பொறுமை ப்ளீஸ்.

காட்டாறு said...

//சந்தேகம் ஏதும் வரலையா? என்று கேட்ட பானுவிடம் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே இல்லண்ணீ அவர் அப்படிப் பட்டவரும் இல்லை . நானும் அப்படி ஒரு நாளும் சந்தேகமும் படமாட்டேன் //
பெண்மையின் டச். கலக்குறீங்க போங்க!

//எங்க இருக்கீங்க ? "என்ற ரீனாவின் கேள்விக்கு அவள் ஒரு அனாதை இல்லத்து முகவரியைக் கொடுத்தாள் . -----//

நல்ல திருப்புமுனை!

காட்டாறு said...

//ஆனா எழுதி திருத்தி அடிச்சு ... கஷ்டங்க...பழகிட்டுத்தானே இருக்கேன். அதனால அவ்வளவு அவசரமா எழுதினா படிக்கற நீங்கள்ளாம் அடிக்க வருவீங்க..கொஞ்சம் பொறுமை ப்ளீஸ். //

முத்துலெட்சுமி, மனசுல வர்றத எழுதுங்க. அப்போ அடித்தல், திருத்தல் இல்லாம வரும். நீங்க நடை, எதுகை, மோனை நினைத்து எழுதுனீங்கன்னா.... பழக வேண்டியிருக்கும். அவசரப் படாம எழுதுங்க! ஆனா நேரம் தாழ்த்தாதீங்க. ரசிக பெருமக்கள் தவிக்கிறாங்க பாருங்க!
:)

முத்துலெட்சுமி said...

காட்டாறு உங்க அன்புக்கு ரொம்ப நன்றிங்க. வேலைக்கு நடுவுல படிச்சு பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தறீங்க.

எழுத்துப்பிழைகள் அப்புறம் கதை கோர்வையா அமையறதும் கொஞ்சம் பழகத்தானே வேண்டி இருக்கு. உண்மைக்கதைன்னா கோர்வையா நல்லா சொல்லுவேன்..கண்ணுமுன்னால நடந்த மாதிரியே.ஆனா இது கற்பனை இல்ல்யா அதான் தடுமாறுது.

வல்லிசிம்ஹன் said...

அழகா எழுதறீங்க லட்சுமி.
தயக்கமில்லாத நடை.

நல்லா இருக்கு.

பங்காளி... said...

நான் இங்கே வந்தேன்....பார்த்தேன்...போனேன் ங்றதுகாக இந்த பின்னூட்டம்...

ஹி..ஹி..கதைக்கும் நமக்கும் ரொம்ப தூரம் தாயே...தப்பா நினைக்காதீங்க...

மஞ்சூர் ராசா said...

கதையின் ஓட்டம் நன்றாக இருந்தாலும் வார்த்தைகளின் கோர்ப்பும், அமைப்பும் இன்னும் சரியாக வரவில்லை. உரையாடலையும், நிகழ்வுகளையும் விவரிக்கையில் மாற்றம் வேண்டும்.

நிறைய படியுங்கள். உங்களுக்கே தெரியும்.

வெற்றியடைய வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி said...

வந்ததுக்கும் பார்த்ததுக்கும் பின்னூட்டமிட்டு உறுதி செய்ததற்கும் நன்றி பங்காளி.

முத்துலெட்சுமி said...

மஞ்சூர் ராசா நேரம் கிடைத்தால் கொஞ்சம் விவரமாக எழுதுங்கள் ...தவறுகள் எவை எவை என்று சரி செய்துகொள்ள உதவியாக இருக்கும்...தொடர்ந்து நல்ல கதைகளை படித்து வருகிறேன். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றீ.