May 14, 2007

சிறகு பெற்ற மனது

இன்று
சிட்டுக்குருவியினை ஒத்த
சிறகுபெற்ற என் மனது
உன் இருப்பிடம் தேடி,
வீட்டின் முற்றத்தில் இறங்கி,
உதட்டிலிருந்து சிதறிய சொற்களை
கடவுளின் பிரசாதமென
கொணர்ந்து சேர்க்கிறது .

நாளை மீண்டும் ஒரு
வண்ணத்துப்பூச்சியென
ஜன்னலின் ஊடாக நுழைந்திருக்கும்.
என்னிடமல்லாமல் வேறு யாரோடும்
பேசும் ஒவ்வோர் வார்த்தைகளையும் கூட
வேதமென எழுதி வைக்கிறது .
மறுநாளும் அதற்கப்புறமும்
வழிதவறியதாகச் சொல்லிக்கொண்டு
வாசல் நுழையும் வண்டென,
திரைச்சீலைத் தள்ளி தைரியமாய் எட்டிப்பார்க்கும் தென்றலென,
நித்தம் பல உருமாறி,
தன்வேலையைச் செவ்வனே
செய்யும் அது.


காதல் கவிதைப் போட்டிக்காக எழுதியது.

14 comments:

இசக்கிமுத்து said...

******நித்தம் பல உருமாறி,
தன்வேலையைச் செவ்வனே
செய்யும் அது**********

எப்பொழுது வரை என்று சொல்லவில்லையே!!!

கோபிநாத் said...

கவிதை ரொம்ப நல்லா இருக்குக்கா

\\நித்தம் பல உருமாறி,
தன்வேலையைச் செவ்வனே
செய்யும் அது.\\

இந்த வரிகள் இன்னும் அருமையாக இருக்கு ;-)

போட்டியில் வெற்றி பேற என் வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி said...

வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி இசக்கிமுத்து அவர்களே!.

எப்பொழுது வரை என்றால்.
என்றென்றைக்கும் என்பதாக இருக்கும் பதில்.
நினைவு இருக்கும்வரை.
உடலில் உயிர் இருக்கும்வரை.

முத்துலெட்சுமி said...

கோபி வெற்றியாவது நீங்க வேற..
போட்டிக்கு கடைசியாப் போய் நம்ம பேரும் இங்க இருக்கட்டும்ன்னு எழுதிட்டு வந்திருக்கேன்...பெரிய பெரிய கவிஞர்களெல்லாம் எழுதிக்கிட்டு இருக்காங்க அங்க...
வலை வரலாற்றுல நம்ம பேரும் இருக்கட்டும்ன்னு அப்பப்ப எல்லா இடத்திலும் தலைகாட்டுவேன். சும்மா...

அய்யனார் said...

:)

மென்மையான கவிதைகளை படிக்கும்போது ஒரு நல்ல வாசிப்பனுபவம் அல்லது இதழ்களில் ஒரு புன்முறுவல் எழுவது இணையத்தில் சிறிது கடினமாக இருக்கிறது.சலித்த அல்லது நொய்ந்த கவிதைகளாக நம்மவர்கள் எழுதிக் குவிக்கும் இத்தருணங்களில் இக்கவிதை புன்முறுவலைத் தருவதாய் அமைந்ததிற்க்கு நன்றிகள்

முத்துலெட்சுமி said...

நன்றி அய்யனார்...

நானும் அதிகம்,சலித்த சோகமான கவிதைகள் எழுதுவது தான். இன்றென்னவோ சந்தோஷமாய் வந்துவிட்டது .. :) அன்றைக்கென்ன மனநிலையோ அப்படியே எழுத்தும்.

சென்ஷி said...

வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி said...

போட்டியில் பங்குபெற்றதுக்குத்தானே அந்த வாழ்த்து சென்ஷி...நன்றி.

சென்ஷி said...

அட ஆமாங்க. ஜெயிச்சப்புறம் நாங்க பெரிய வாழ்த்து சொல்வோம் :)

சென்ஷி

Anonymous said...

மிக அழகாக வந்துள்ளது.
அரை நிலா நாளில்,
ஆற்றங்கரையருகில்,
ஒற்றையடிப் பாதையில்,
பவழமல்லிப்பூக்களின் வாசம் சூழ
நடக்கும் சுகம்தருகிறது உங்கள் கவிதை.

வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி said...

பொற்கொடி முதல் வருகைக்கு நன்றி.
அய்யோ என்ன என்னவோ சொல்லறீங்களே ! அவ்வளவு நல்லாருக்கா சரிதான் ..இப்படி தலைகால் புரியாம ஆக்கிட்டீங்களே!

சேதுக்கரசி said...

வெற்றிபெற வாழ்த்துக்கள் முத்துலட்சுமி :-)

சேதுக்கரசி said...

http://tamiltalk.blogspot.com/2007/04/blog-post_30.html

முத்துலெட்சுமி said...

வாழ்த்துக்களுக்கு நன்றி சேதுக்கரசி..

பெரிய பெரிய வலை கவிஞர்களுக்கு மத்தியில் வெற்றி கிடைக்குமா ஆனாலும் பேராசை இல்லையா? எனக்கு.பார்க்கலாம்.