August 17, 2007

கணக்கா கணக்குன்னா என்னாப்பா!

வழக்கமாய் போகும் பாதைதான். யாரோ யாரையோ ஏதோ ஒரு அடுக்குமாடியின் காலியான அறையில் சத்தமாய் திட்டுவது போன்ற ஒலி கேட்டது. காகம் கூட கரைய யோசிக்கும் அந்த அமைதியான மதிய நேரத்தில் நேரத்தில் சாமான்கள் இல்லாத அறையின் சுவர்களில் பட்டு எதிரொலிக்கும் குரல் திடுக்கென்று தூக்கிவாரி போட்டது. ஏற்கனவே அதையும் இதையும் போட்டு குழப்பிக்கொண்டிருந்த மனது திடுக்கென்ற உணர்வால் இன்னமும் துணுக்குற்று சாலையோரத்தில் போய்க்கொண்டிருந்தவனை கவனமின்றி
சைக்கிள் காரன் மேல் மோத விட்டது.

"என்னாண்ணே யோசனை" என்று அவன் பதமாக கேட்டது கொஞ்சம் நிதானத்துக்குக் கொண்டுவந்தது. இப்படி நண்பணும் நிதானமாக பேசி இருந்தால்
எனக்கு ஏன் இத்தனை யோசனை என்று அவனுக்குள் எண்ணம் ஓடியது.இதுவரை உதவி என்று யாரிடமும் கேட்டது இல்லை. இவன் செய்திருக்கிறான் கேக்கும் முன்னரே மற்றவர்களுக்கு . ஆனால் இவனுக்கு ஒரு நிலை இப்படி என்று வந்த போது ..ம்...யாரையும் சொல்லி குற்றமில்லை...வெயில் கூட உறைக்காமல் யோசிக்க யோசிக்க தலைக்குள் ஒரு கொதிகலன் குமிழியிட்டு கொண்டிருந்தது."கடை போட்டு கடன் வாங்காம லாபமாத்தான் போனது எங்க தப்பு செய்தேன். நாலு பேருக்கு நல்லது செய்தது தப்பா.. யாரும் எதுவும் சொல்வது க்கு முன்னால அவங்களுக்கு உதவின்னு போய் நிப்பேனே...இன்னிக்கு நண்பன்னு வந்து இத்தனை நாள் என் பாசமான குடும்பத்துல ஒருத்தனா நடிச்சு வாழ்க்கையில்
கஷ்டப்படறேன்னு சொன்னப்போ என்கூடவே வச்சி தொழில் கத்துக்குடுத்ததும் எல்லா பணத்தையும் அவன் பேருக்காக்கி என்னை நடுத்தெருவில் இப்படி புலம்ப வச்சிட்டானே!" ஆராத மனது ஆறாக புலம்ப அவன் வீட்டையே அவனுக்கு அடையாளம் தெரியாதவனாகத் தாண்டிப்போய் பின்னர் உணர்ந்து தலையை உலுக்கியபடி திரும்பி நடந்தான்.நண்பனின்?? குரல் இதய அறைகளில் பட்டு எதிரொலித்தபடியே இருந்தது "இதப்பாரு உன்கிட்ட பார்டனரா சேரும் போதே சொன்னது தான் இப்பவும்.. எனக்கு சீக்கிரம் பணம் பண்ணனும் முதல்முழுசாப் போடமுடியாம தான் உங்கூட சேர்ந்தேன்.. இன்னிக்கு என் உழைப்புல பெரிசாக்கினேன் இப்ப லாபத்தை இருமடங்காக்கினப்புறம் நான் தான் அனுபவிப்பேன் நான் பாவம் புண்ணியம் உன்னை மாதிரி பார்ப்பதில்லை..."


இவன் இதயத்தை போலவே திறந்தே கிடந்த வீட்டின் வாசலில் காலனியைக் கழட்டியதுமே ஓடி வந்துக் காலைக்கட்டிக் கொண்டது அவன் மழலை. "அப்பா நீ நேத்து வாங்கியாந்தீல்ல பலூன் கவர் அதுல நான் அஞ்சு என்று விரல்களில் நான்கைக் காண்பித்து ( அவனுக்கு எண்ணிக்கையே தெரியாது சொல்ல த்தெரிந்த ஒரே எண் அஞ்சு தான் ) நம்ம பக்கத்துவீட்டு பாப்பா க்கு குடுத்தேன்பா "


"இல்லடா கண்ணா இனிமே ஒண்ணு குடு யாருக்கும் . அதுலயே பத்து தானே இருந்தது கணக்கா இருக்கனுண்டா என்னமாத்ரி அள்ளிக்குடுக்காதடா "

"கணக்கா! கணக்குன்னா என்னாப்பா !"

5 comments:

த.அகிலன் said...

இது பின்னூட்டக்கணக்கு

முத்துலெட்சுமி said...

:) அகிலன் கணக்கு நல்லா வருமா உங்களுக்கு...

நன்றியைக்கணக்கில் சேர்த்துகுங்க...

துளசி கோபால் said...

கணக்கு
பிணக்கு
ஆமணக்கு
எனக்கு
வேண்டா(ம்)

நன்றியை இப்பெல்லாம் எங்கே போய்
வாங்கலாமுன்னு சொல்லுங்க.

நானும் கணக்கா இருக்கணும்லெ? :-)

நல்ல கதைதான்.

கோபிநாத் said...

எனக்கு இந்த கணக்கு கொஞ்சம் புரியவில்லைக்கா ;-(

மங்கை said...

நானும் கணக்குல ரெம்ப வீக்..

கதையில சொல்ல வர்ர கணக்குலே 'யும்' தான்..:-))

துளசி..
எனக்கு ட்யூஷன் எடுங்களேன்
எப்படி பின்னூட்ட கணக்கு நல்லா போடறதுன்னு..:-)