March 20, 2009

அல்மோரா -4 சூரியக்கோயில்

மதிய உணவுக்கு பின் கட்டார்மல் செல்ல அடிவாரத்தில் விட்டு விட்டு ... இந்த காட்டில் தனியாக அமர்ந்திருக்க கஷ்டம் . நீங்கள் இறங்கும் போது தொலைபேசுங்கள் என்று தன் நம்பரை எங்களுக்கு கொடுத்தார். என் மொபைலில் அதனை குறித்துக்கொண்டு ஏறத்தொடங்கினோம். அது கடல் மணலைப் போன்ற மணலும்.. சில பாறைகளுமான பாதை. மேலே செல்ல இருப்பது கோனார்க்கைப்போல சூரியனுக்கென்ற சிறப்புக்கோயில்.ஆங்காங்கே ஓய்வெடுத்தபடி நாங்கள் ஏறினோம் ஏறினோம் ஏறிக்கொண்டே இருந்தோம். சிலர் ஆடு மேய்த்துக்கொண்டும் சுள்ளி பொறுக்கியபடியும் ஏறிக்கொண்டிருந்தார்கள். சரியான பாதை தானா என்று கேட்டுக்கொண்டே ஏறினோம். அவர்களோ குறுக்கு வழிகளில் வேகமாக கண்மறைந்தார்கள்.

எங்கள் பொறுமையின் எல்லையை எட்டியபோது அங்கே ஒரு பள்ளியும் சில வீடுகளும் தென்பட்டன. வீட்டின் பால்கனியில் படுத்தபடி வெயில் காய்ந்துகொண்டிருந்த பெரியவர் அதோ தெரிகிறதே அது தான் கோயில் என்றதும் என் கண்களுக்கு .. குழப்பத்தில்.. உச்சியைக் காட்டுகிறாரோ என்று திகிலாகிவிட்டது. பெரியவரின் குடும்பத்தில் இருந்த ஒரு பெண்மணி .. அங்கே போய் என்ன இருக்கு பார்க்க ...பரவாயில்ல முடியலன்னா இறங்குங்களேன் என்று சொல்ல .. சரி குழந்தைகளுக்கும் போகலாம் என்றே தோன்றிவிட்டது.

அப்போது பள்ளிவிடவும் குழந்தைகள் கேமிராவுக்கு தாங்களாகவே போஸ் கொடுக்க ஆரம்பித்தார்கள். அவர்களின் டீச்சர் வெளியே வந்து .. "என்ன கேமிரா? கம்ப்யூட்டரில் போடற கேமிராவா?.. ஏன் திரும்ப போகிறீர்கள்?.. இத்தனை தூரம் வந்துட்டீங்க இன்னும் 20 நிமிசம் தான் ...போகஸ் செய்து பாருங்கள் .. தூரமில்லை. பின்னால் நினைத்துப்பார்த்து மகிழத்தான் செய்வீர்கள். நான் கூட ஒரு முறை புகைப்படமெடுத்து மற்றவர்களுக்கு காட்டினேன். இத்தனை தூரம் வந்த பாதையைக் காட்டிலும் இந்த சிமெண்ட் பாதை ஒன்றும் பெரியதில்லை" என்று ஊக்கமளித்தார்.
ஞாபகத்துக்கு அவருடன் நான் புகைப்படமெடுத்துக்கொண்டேன்.

பள்ளிக்குழந்தைகள் வழிகாட்ட மேலேறினோம். சின்னக்குழந்தைகள்.. இரண்டாவதும் மூன்றாவதும் படிப்பவர்கள் கால்களில் செருப்புமில்லாமல் சர சரவென்று ஏறினார்கள்.. மூக்கு ஒழிகிக்கொண்டு... பேரைக்கேட்டால் வெட்கப்பட்டுக்கொண்டு.. அந்த ஊர்க்காரர்களுக்கு அது ஒரு கோயிலாகப்படுவதே இல்லை போல. பூட்டியகதவுகளுக்கு வெளியே தொல்பொருள் ஆராய்ச்சிக்காரர்களின் ஆள் காவலிருக்கிறார். 45 சிறு கோயில்களுடன் நடுவில் உடைந்த கோபுரத்துடன் சூரியன் கோயில். டோராவின் பாடலான .. வீ டிட் இட் வீ டிட் இட்.. பாடலைப்பாடி ஆடிக்கொண்டோம்.

பாதுகாவலர் அழைத்ததின் பேரில் சாவியுடன் வந்த இன்னொருவர் திறந்து காட்டினார். உள்ளே அழகான சூரிய தேவன் ஏழுகுதிரைகளுடன்.. மற்ற சுற்று வெளி கோயில்களின் தெய்வங்கள் கால் உடைந்து கை உடைந்த நிலையில் அங்கே பாதுகாக்கப்பட்டிருந்தனர்.
அதை முற்றுப்பெறாத கோயில் என்றும் இரவில் கட்டப்பட்ட கோயில் என்று நம்பிக்கை நிலவுகிறது.

இறங்குகையில் வேகம் தான். அறைக்கு திரும்பினோம். வண்டிக்கு பணம் கொடுக்க சென்ற கணவர் அடுத்த நாள் செல்ல இருந்த நந்தா தேவி கோயிலைப் பார்த்து வைத்துக்கொண்டு வந்தார்கள். அது ஊருக்குள் கடைத்தெருவுக்குள் இருக்கிறது.காலையில் முதலில் மாலைப்பேருந்துக்கு டிக்கெட் புக் செய்து விட்டு கடைத்தெரு சென்று நந்தா தேவியை வணங்கிவிட்டு .. நான்கு மணி பேருந்தில் கீழே இறங்கினோம். வரும் வழியெல்லாம் அழகுக் காட்சிகள். நடுவில் நின்ற ஒரு ஊரின் பெயர் ... சுடுதண்ணி..(கரம்பானி) மலை ஏறும் போது முழு நிலா வெளிச்சத்தில் இரவுக்காட்சி , இறங்குகையில் இளவெயில் மாலைக்காட்சி..

இன்னும் அந்த ஊரிலிருந்தபடி பார்க்க பல இடங்கள் இருந்தாலும் எங்கள் திட்டம் மூன்று நாள் என்பதால் அவற்றை பார்க்க இயலவில்லை. பாதாள் புவனேஷ்வர் என்கிற இடம் நல்லதொரு குகைக்கோயிலாம்.. அதனைப்பற்றி கைலாஷி அவர்கள் எழுதிய பதிவைப்படித்துப்பாருங்கள்..


http://www.kmvn.org/ இந்த தளத்தில் நீங்கள் மேல் விவரங்கள் பெறலாம்.

19 comments:

Thamiz Priyan said...

மீ த பர்ஸ்ட்டு

Thamiz Priyan said...

எங்களுக்கும் சேர்த்து நல்ல அனுபவம்! அந்த 7 குதிரையுடன் இருக்கும் கோனார்க்கையும் படம் பிடித்து இருக்கலாம்.

Vidhya Chandrasekaran said...

வழக்கம்போல போட்டோக்கள் அழகு. அதுவும் அந்தக் குழந்தைகளின் கள்ளம்கபடமில்லாத சிரிப்பு:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழ்பிரியன் ... ஏழுகுதிரை சாமி உள்ளுக்குள்ள இருந்தாரு .. அதை போட்டோ எடுக்கலாமான்னு நான் கேக்கவே இல்லை.. கேமிராவை வெளியே வச்சிட்டு உள்ள போயிட்டேன்..
----------------------------
ஆமா வித்யா .. பேரு கேட்டதுக்கு ஒரு பையன் ரொம்ப வெக்கப்பட்டுக்கிட்டான்.. அவன் ப்ரண்ட் தான் அவன் பேரு சஞ்சய் ன்னு சொன்னான்.. :)

சந்தனமுல்லை said...

டீச்சர்ங்க சொன்னதை தட்டாம செஞ்சுட்டீங்களே! :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முல்லை நாங்க ரொம்ப மரியாதையான பசங்க பாத்துக்குங்க.. :)

ராமலக்ஷ்மி said...

குழந்தைகள் ஃபோட்டோ வெகு இயல்பு. அதிலும் பின்னாலிருந்து எட்டிப் பார்க்கும் சிறுமி முகத்தில் தன் முகம் முழுசா தெரியுமாங்கற கவலை..., நல்ல படம்.

கட்டுரையும் இயல்பா எழுதியிருக்கீங்க முத்துலெட்சுமி. வாழ்த்துக்கள்.

ஆயில்யன் said...

ஆர்க்கியலஜி டிபார்ட்மெண்ட்காரங்க வைச்சிருக்கற கல்வெட்டுல இருக்கிற விசயங்களை படிச்சா ஆ’வென வாயை பிளக்க வைக்கிதே!

படங்கள் நல்லா இருக்கு!

Thekkikattan|தெகா said...

எனக்கு இது மாதிரி பழமை வாய்ந்த இடங்களுக்கு போகுறதுக்கு பிடிக்கிறதே, நாம் time travel பண்றதை உணர்வதற்குத்தான்...

//அந்த ஊர்க்காரர்களுக்கு அது ஒரு கோயிலாகப்படுவதே இல்லை போல. //

வேற எப்படிங்க கருதுறாங்க...? அந்த வெளியில படுத்துருந்த தாத்தாகிட்ட பேசினீங்களா...?

//மற்ற சுற்று வெளி கோயில்களின் தெய்வங்கள் கால் உடைந்து கை உடைந்த நிலையில் அங்கே பாதுகாக்கப்பட்டிருந்தனர்.//

ஆமா, அந்த சிலைகளின் கை, கால் மற்றும் முகங்கள் பல சமயம் இது போன்ற பழைய கோவில்களில் சிதைந்த நிலையிலயே காணப்படும் அதுக்கு என்ன காரணம்...?

//7 குதிரையுடன் இருக்கும் கோனார்க்//

இந்த சூரியக் கடவுளுக்கு ஏழு குதிரைகளுடன் உள்ள முதன்மைக் கோவில் இங்கு மட்டும்தான் உள்ளதா...?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ஆயில்யன்.அதெல்லாம் மொழிபெயர்க்கத் தெரியல.. நீங்களே படிச்சிக்கலாமேன்னு தான் போட்டுட்டேன்.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தெகா.. அந்த தாத்தா சொன்னார் போலாம் ரொம்ப தொலைவு இல்லைன்னு ... ஆனா அவங்களோட கொஞ்ச தூரம்ங்கறது நமக்கு தொலைவு இல்லையா..

நம்ம ஊருல பாழடைஞ்ச கோயிலுன்னாலும் எதாச்சும் ரெண்டு பொம்பளைங்க விளக்குஏத்துவாங்க..
அங்கயும் அந்த குழித்தட்டு இருந்தது ஆனா பூஜை செய்த அடையாளங்கள் மிகக் கம்மி.... அந்த கோயிலுக்கு வருபவர்களை ஆச்சரியமாகப் பார்த்ததிலிருந்தே அது கோயிலாகப் பார்க்கப்படுவதில்லை என்று தெரிகிறது.. மக்களுக்கு எதுவும் எளிதில் அடையறமாதிரி இருக்கனும். கோலு தேவி காரிலிருந்துஇறங்கியதுமே கும்பிடலாம் கூட்டம் அள்ளுதே... :)

கோனார்க் க்கு அடுத்தபடி என்று சொல்கிறார்கள் இந்த சூரியக்கோயிலை.. ஆனால் ஜாகேஸ்வரை ஜோதிர்லிங்கம் என்று சொல்லுகிறமாத்ரி இதுவும் வெறும் அந்த ஊரு நம்பிக்கையா என்று தெரியவில்லை..

நசரேயன் said...

எல்லா பாகமும் ரெம்ப நல்லா இருக்கு.. நேரிலே பார்த்த அனுபவம் இருக்கிறது


//டோராவின் பாடலான .. வீ டிட் இட் வீ டிட் இட்.. பாடலைப்பாடி ஆடிக்கொண்டோம்.//

டோரா தொல்லை தாங்க முடியலை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நசரேயன் நீங்க நம்புறீங்களோ இல்லையோ .. இந்தகமெண்ட் உங்க கிட்ட இருந்து வரும்ன்னு எதிர்பாத்துட்டே இருந்தேன்.. :))

sindhusubash said...

மலைப்பாதை ரொம்பவே அழகா இருக்கு. ரொம்பவே வித்தியாசமான பீலீங்கை தந்தது இந்த தொடர்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தொடர்ந்து வாசிச்சதுக்கு நன்றி சிந்து :)

"உழவன்" "Uzhavan" said...

ஒரு week end trip போன மாதிரி ஒரு ஃபீல் இருந்தது. நன்று :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உழவன் நன்றி..
எங்களுக்கும் இது ஒரு வீக் எண்ட் ட்ரிப் தான்..என்ன வெள்ளிக்கிழமை காலையிலேயே கிளம்பிட்டோம்.. திங்கள் காலையில் வந்துட்டோம்.

Ashwin Ji said...

தங்கள் பதிவுகளைப் படித்தேன். பாராட்டுக்கள். நான் கடந்த வாரம் பாதாள் புவநேஷ்வருக்கு போயிருந்தேன். விரைவில் அது பற்றிய ஒரு பதிவை எனது 'வேதாங்த வைபவம்' வலைப்பூவில் இடவிருக்கிறேன். ஏற்கனவே அமர்நாத்-வைஷ்நோதேவி யாத்திரை பற்றி தொடர் பதிவுகளை எழுதி இருக்கிறேன். My Blog address is www.vedantavaibhavam.blogspot.in

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி அஷ்விஜி, உங்கள் அனுபவங்களை பகிர்ந்து வாருங்கள் பயனுள்ளதாய் இருக்கும்.