March 6, 2007

ரேடியோ டேப்ரெக்கார்டர்

பாடல்கள் என்றால் ஒரு அளவுக்கு இல்லாமல் பயித்தம் பிடித்து அலைபவள் நான் . எங்கள் வீட்டில் டி.வி. வாங்கியபோது நான் 11 ம் வகுப்பு . அதற்கு முன்பு வரை என் தோழி ரேடியோ தான்.
எங்கள் வீட்டில் பெரிய பேட்டரி ரெண்டு போடும் வண்ணம் ஒரு பிலிப்ஸ் ரேடியோ இருந்தது. நன்றாகவே பாடும். காலையில் மூன்று மதப் பாடல்களோடு விடியும். அதுவும் இறைவனிடம் கையேந்துங்கள் பாடல் ரொம்பவும் பிடிக்கும்.


இன்னப்பாடல் தான் என்றில்லை விளம்பரப்பாடல்கள் கூட கூடவே பாடுவேன். மழைக்காலம் வந்தால் அந்த ரேடியோ பாடாது . அதுக்கு குளிரடிக்கும் போல. பின்னர் அதை கொஞ்சம் வெயிலடிக்கும் போது கொண்டு போய் மாடியில் காயப்போட்டால் பாடும். தட்டி கொட்டி பாடும் அந்த ரேடியோவால் நியுஸ் கேட்பது தடைஆகிறது என்று முடிவெடுத்த அப்பா, ஒரு நாள் ஒரு குட்டி சோனி டேப் ரெக்கார்டருடன் சேர்ந்த ரேடியோ வாங்கி வந்தார்கள். 1200 ரூ.

குட்டியாக ஒல்லியாக கருப்பு கலரில் சும்மா சூப்பராக இருந்தது அந்த சோனி. அப்புறம் ஒரே கொண்டாட்டம் தான். பிடித்த பாடல் களை ரேடியோ விலிருந்து டேப் செய்வது நாங்களே பாடி பதிவு செய்து கேட்பது என்று ஒரே சந்தோஷம். பிள்ளை யார் சதுர்த்தியா பிள்ளையார் பாட்டாக பிடித்து வைத்துப் போடுவார்கள் அப்பா. பொங்கலா தை திருநாள் சினிமா பாட்டாக
சேர்த்து போடுவார்கள். எங்களிஷ்டம் ஆகிவிட்டது.

ஆரம்பக் காலத்தில் சின்னச் சின்ன தவறு நேர்ந்து வந்தது . சேர்ந்தார்ப் போல் ப்ளே பட்டனையும் அழிக்கும் பட்டனையும் அமுத்தி இருப்பார்கள் யாராவது . ஒரு முறை என் ஆச்சி "கொழுக்கட்டை அதிகம் தின்னைநாக்கி அப்புறம்" அப்படின்னு சொன்னது கூட பதிவாகிடுச்சு. எப்ப பிள்ளையார் சதுர்த்தி வந்தாலும் பிள்ளளயார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பாட்டிற்கு இடையில் ஆச்சி குரலும் அந்த வார்த்தையும் ஒரே சிரிப்பு தான்.


நாங்கள் பாடங்களை மனப்பாடம் செய்வதை எல்லாம் பிடித்து வைத்து இப்போது கேட்டாலும் சிரிப்பு தான். வேரென்ன அசோகர் மரங்களை நட்டார் தான். சிலோன் ரேடியோ நல்ல நல்ல பாட்டா போடுவாங்க. ஆனா என்ன ஒரு பாட்டோட ஆரம்பம் போட்டுட்டு நடுவில் வந்து அவங்க கொஞ்சம் வர்ணனை சொல்லிட்டு ப் போவாங்க ...பதிவு பண்ண சிரமமா இருக்கும்.
அப்படியும் பழய பாடல் , ஹிந்திப் பாடல் களை அதிலிருந்து பதிவு செய்திடுவேன்.



கூடைக்குள்ள வைத்து தேரோட்ட சத்தங்களையும் வாத்தியங்களையும் கோயில் மணி சத்தங்களையும் பதிவு செய்திருக்கிறோம் . அதைக் கேட்கும் போது அங்கேயே இருக்கும் உணர்வைத்தரும். ரேடியோவில் ஒரு முறை ராமாயணம் நாடக விழாவில் போட்டார்கள் அப்பா அதைப் பூராவும் பதிவு செய்து வைத்திருந்தார்கள்.



எத்தனையோ இரவில் பாட்டு கேட்டபடி தூங்கிப் போயிருப்பேன் அனைக்க மறந்து , அப்பா வந்து அனைத்து , மேலே எடுத்து வைத்திருப்பார்கள். வீட்டில் அம்மா அப்பா இல்லையென்றால் ஊருக்கே கேட்கும்படி பாட்டை அலறவிட்டு கேட்போம். ஆமா அந்த குட்டி ஸ்பீக்கரில் கேட்டதுக்கே அப்போ அப்படி சொன்னாங்க இன்னைக்கு இருக்கும் ஸ்டீரியோ செட்டில் என் பிள்ளைங்க க்ரேஸிக்கியாரே அலறி அடிக்கறத கேட்டா என்ன சொல்லுவாங்களோ.




டீவி வாங்கியும் அந்த க்ரேஸ் போகல . டி.வி. ல அப்போல்லாம் etc ன்னு நினைக்கிறேன் . ஹிந்திப் பாட்டா போடுவான். சின்ன சோனிக்கு கூடுதல் இணைப்பெல்லாம் குடுத்து டி.வி. ஸ்பீக்கர் பக்கத்தில் வைத்துப் பாட்டைப் பிடிப்பேன். இன்று பெரிய செட் வாங்கி வைத்திருந்தாலும் அதன் துல்லியமெல்லாம் எனக்கு ஒன்றும் பெரிய விசயம் இல்லை. இடம் விட்டு இடம் நகர்த்த முடியாதது தான் எனக்கு பிடிக்கவில்லை. வாங்கும் போது கூட வந்த மாமானார் என் கிட்ட அந்த காலத்துல 1500 ரூ வாக்மேன் வாங்க உண்ணாவிரதம் இருந்தான் இன்னைக்கு 17,000 போட்டு வாங்கறான் என்று சந்தோஷப்பட்டது தனிக்கதை.



எனக்கென்று ஒன்று சின்னதாக கேட்டு வாங்கிக் கொண்டேன்.
சமையல் அறையோ , மற்ற வேலையோ பாட்டு கேட்டுக் கொண்டே இருப்பது தான் எனக்கு பிடிக்கும். ஆடிப்பாடி வேலை செய்தா அலுப்பிருக்காது.

17 comments:

அபி அப்பா said...

எங்கள் வீட்டில் புதிய National Panasonic டேப் வாங்கிய போது நான் என் குரலை ரெக்கார்ட் செய்யும் போது வாத்தியாரிடம் ஒப்பிப்பது போல் கை கட்டிக்கொண்டு "கொங்குதேர் வாழ்க்கை" ஒப்பித்தது ஞாபகம் வருகின்றது:-))

கானா பிரபா said...

என்னதான் சின்னத்திரை யுகம் வந்தாலும் வானொலிக்கு நிகர் எதுவுமில்ல, நல்லதொரு பதிவு.

ஆகாசவாணி எனக்கு ஏற்படுத்திய தாக்கம் இதோ

http://kanapraba.blogspot.com/2006/09/blog-post.html

துளசி கோபால் said...

ஐய்யோ........ இப்படி என்னக் கொசுவர்த்தி ஏத்தவச்சுக்கிட்டே இருக்கீங்க. நல்லா இல்லே..
ஆமாம் .........சொல்லிட்டேன்:-)))))

✪சிந்தாநதி said...

நிறைய பேருக்கு இந்த 2in1 அனுபவம் இருந்திருக்கும் போல...

சற்றேறக்குறைய இதே அனுபவங்கள் தான் எனக்கும்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்ன அபி அப்பா நீங்க தமிழ் ல்ல அப்படி இப்படின்னு சொல்லிட்டு கொங்குதேர் ஒப்பிச்சீங்களா? பரவாயில்லையே.
நானெல்லாம் அப்போ வரலாறு தான் இஷ்டமா படிப்பேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி கானாப்பிரபா , உங்கள் பதிவினைப் படிக்கிறேன்.

துளசி , இதெல்லாம் பழிக்கு பழி.நீங்க என்னை ஊர்க்கோவிலை பத்தி சொல்லி நியாபகப்படுத்தினீங்களா
அதான்.

நன்றி சிந்தாநதி, இது எல்லாருக்கும் நடந்திருக்கும் தான்.
என்னசெய்ய கொஞ்ச நாள் இப்படி
கொசுவத்தி சுத்தி முடிச்சுட்டு காலி
ஆனதும் வேற எழுத யோசிக்கணும்.:-)

இலவசக்கொத்தனார் said...

//ஐய்யோ........ இப்படி என்னக் கொசுவர்த்தி ஏத்தவச்சுக்கிட்டே இருக்கீங்க. நல்லா இல்லே..
ஆமாம் .........சொல்லிட்டேன்:-)))))//

ரிப்பீட்டே!! அடுத்தது என்ன டிவி வாங்குன கதையா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\இலவசக்கொத்தனார் said...
//ஐய்யோ........ இப்படி என்னக் கொசுவர்த்தி ஏத்தவச்சுக்கிட்டே இருக்கீங்க. நல்லா இல்லே..
ஆமாம் .........சொல்லிட்டேன்:-)))))//

ரிப்பீட்டே!! அடுத்தது என்ன டிவி வாங்குன கதையா? //


எழுதினா நல்லாத்தான் இருக்கும் .வாங்குன கதையும் ஆண்டெனா மாட்டுன கதையும்.அந்த அளவு அதுல பட்டுருக்கோம் கொத்ஸ்.

வல்லிசிம்ஹன் said...

நல்லா இருக்கு லட்சுமி.
கொசுவர்த்தி எல்லா வீட்டிலேயும் நல்ல சுத்த விட்டுருவாங்க இனிமேல்.
பாட்டுக் கேட்டுக் கொண்டே தூங்குவது டிரான்ஸிச்டரோட ஆரம்பிச்சுது.
அப்ப ஜேசுதாசின்''உன்னிடம் மயங்குகிரேன்,உள்ளத்தால் நெருங்குகிறேன்'' பாட்டு கேட்கிற ஞாபகம் வந்திட்டது. அழகா எழுதி இருக்கீங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வல்லி வாங்க... ஒன்னா ரெண்டா அத்தனை பாட்டு நியாபகம் வருது.
மாலைப் பொழுதின் மயக்கத்திலே ஆரம்பிச்சு...அப்படியே சொல்லத்தான் நினைக்கிறேன்...கேட்டுட்டு ...
ஓ பட்டர்பிளை பட்டர்பிளை ..அப்படியே..இசையின் மயக்கத்தில் திரிஞ்ச காலம் .

சீனு said...

ஹூம்...முதல் முறையா நம்ம கொரல பதிவு பன்னலாம்ன்னு ஒரு முறை ஏதோ பேசினேன். பின் அதை போட்டு கேட்டவுடன் தான் தெரிந்தது...தப்பு பன்னிட்டோம்ன்னு B-)

நானெல்லாம் பாத்ரூம் ஸிங்கர் கூட இல்லை. 'ஹார்ட்'ரூம் ஸிங்கர்...

கோபிநாத் said...

இப்போது எல்லாம் செல்போன்ல தான் பாட்டு எல்லாம்....

ம்ஹும்...அது ஒரு காலம்..இப்பதான் சூர்யன், ஆஹா, மிர்ச்சின்னு தெருவுக்கு ஒன்னு வந்துவிட்டது...

வடுவூர் குமார் said...

எங்க சின்ன வயது காலத்தில்,ரேடியோவெல்லாம் நாங்கள் தொடக்கூடாது.
7.15 PM செய்தி கேட்டுட்டு தூங்கிவிடவேண்டியது தான்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உண்மைதாங்க சீனு , சிலருடைய குரல் மைக் மூலம் கேட்கும்போது வேறமாதிரி இருக்கும். நான் ஒரு ரெண்டு தடவை பதிவு பண்ணி யாரும் இல்லாதப்போ கேட்டுக்கிட்டது தான் நமக்கு தான் தெரியுமே நம்ம பத்தி இருந்தாலும்...ஆசையாரவிட்டது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபி ம் அது ஒரு காலம்தாங்க.
இப்ப இருக்கர சூரியன் போன்ற fM எல்லாம் அப்ப இருந்த மாதிரி இல்லயே ..ஒரே சத்தம். இனிமையின்னா என்னன்னு கேக்கராங்க.
இங்க தில்லியில் தமிழ் எங்க கேட்க.
செல்போன் ,நெட் எதில கேட்டாலும் நாம விரும்பி செலக்ட் பண்ணி கேட்கறத விட...ரேடியோ ல எதிர்பார்க்காம திடீர்ன்னு ஒரு பாட்டப் போடும்போது இருக்கிர திரில் இதில் இல்லை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\வடுவூர் குமார் said...
எங்க சின்ன வயது காலத்தில்,ரேடியோவெல்லாம் நாங்கள் தொடக்கூடாது.
7.15 PM செய்தி கேட்டுட்டு தூங்கிவிடவேண்டியது தான்//

அப்படீங்களா/ அய்யோ பாவம். எங்க வீட்டுல அந்த சட்டத்திட்டம் இருந்தது புதுசா வரும் பொருளுக்கு கொஞ்ச நாள் இப்படி திட்டமெல்லாம் அமுல் படுத்தறது தான். அப்படியே அதை மறக்கடிச்சு எங்க ராஜ்யத்துக்கு மாத்திருவோம்ல.

வல்லிசிம்ஹன் said...

நல்ல கொசுவத்தியோடப் பதிவுலக பழைய நண்பர்களையும் படிக்க முடிந்தது. நன்றி.
இப்பவும் எனக்கு ரேடியோ கேட்டுத் தூங்கும் வழக்கம் இருந்தது. குழந்தையா இருக்கும்போது தாலாட்டு கேட்ட அனுபவமோ என்னவோ.
இப்ப இருக்கிற போஸ் ரேடிய்யொல ஸ்லீப் மோட் இருக்குன்னு பொண்ணுதான்காண்பித்துக் கொடுத்தா.
ரிமோட் பக்கத்தில வைத்துக் கொண்டாலும் பழைய ட்ரான்ஸிஸ்டர்ல கேட்ட சென்னை ,சிலோன் மாதிரி இல்ல.ரொம்ப நன்றி. கயல்.