March 8, 2007

இழப்பின் வலிகள்

எதைத் தொலைத்தோம் என்று நாங்கள் புலம்புகிறோம் , அரற்றுகிறோம் என்பதை அறியாத , புரிந்து கொள்ளமுடியாத சிலரின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் வகை அறிந்திருக்கவில்லை நான். சொல்லிப் புரியவைக்க முடியும் என்ற எண்ணத்தை கைவிட்டு வாளா இருக்கவும் முடியவில்லை. வெற்றி பெற்ற பெண்களைப் பற்றி வேறு யாராவது சொல்வார்கள் . விழுக்காட்டில் அதிகம் இழப்பின் வலிகளை அனுபவித்தவர்களே . பேசித்தீர்ப்பதற்காக இல்லை எனிலும் இழந்தவை எது என்று சொல்கிறேன் கேளுங்கள்.

என் பள்ளியில் கூடப்படித்தத் தோழிகள் சிலர் ஒரு வித அர்ப்பணிப்புடன் பள்ளியிறுதி தேர்வுகளை எழுதி மதிப்பெண்களை வாங்கிக் குவித்தனர்.அவர்கள் எத்தனை ஆர்வமாய் படித்து மதிப்பெண் எடுத்தார்கள் என்பதை அறிந்த நான் அடுத்து அவர்கள் என்னவாக வருவார்கள் என்று கற்பனை செய்துபார்ப்பேன் . ஆனால் மதிப்பெண்கள் அதிகம் இருந்தும் அடுத்த நிலை ? என்னடி எடுக்கப் போற. ம் தெரியலடி இங்க பெண்கள் கல்லூரியில் இருப்பதே நாலு .அதில் எதாவது ஒன்றை எடுக்கவேண்டியது தான். ஆங்கிலம் இல்லைன்னா தமிழ் எடுத்துப் படிச்சுட்டு ஒரு எம்.ஏ வாங்கலாண்டி. அப்படியே ஒரு பி.எட் படிச்சேன்னு வையேன் . கொஞ்சம் பணம் எதாச்சும் குடுத்து டீச்சர் வேலைக்கு அப்ளை செய்யலாம். அது ஒன்னு தாண்டி கல்யாணத்துக்கப்புறம் சரியா வரும் .சொன்னவள் யார் தெரியுமா? இயற்பியலில் 199 /200 வாங்கியவள்.


அவளுக்கு இயற்பியல் எடுத்து படித்து மேற்படிப்புக்கு வழிகாட்டும் கல்லூரி அருகில் இருந்தது . பெற்றவர்களுக்கு விருப்பம் இல்லை. அருகில் இருக்கும் மற்றொரு கல்லூரியில் கோ.எட் என்றா நினைக்கிறீர்கள் ? இல்லை அது காலையில் ஆண்களுக்கும் , பெண்களுக்கு மதியமும். அப்படியும் ஆண்களை அவள் சந்தித்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணம் அவர்களுக்கு . பி.எட் எடுத்து படித்து இன்று பணம் குடுத்தாலும் நல்ல பள்ளியில் வேலைக்கிடைக்காமல் , ஒரு தனியார் பள்ளியில் ஆயிரத்துஐநூறு வாங்கிக்கொண்டு தொண்டை கிழிய கத்திக்கொண்டு மெலிந்த உடலுடன் அவளைப் பார்க்கும் போது பள்ளியில் வெறியுடன் படித்த அவளின் நிலை கண்முன் வருகிறது.
கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வைத்திருந்து என்ன படிக்க வைக்க முடியுமோ அது மட்டும் படிக்க வைக்க நினைப்பார்கள் பெண்களை . பள்ளியில் நன்கு படித்த பெண்களெல்லாம் படிப்படியாக அங்கங்கே தேங்கிப்போக வாழ்க்கையின் லட்சியமெல்லாம் கல்யாணம் என்ற ஒன்றுமட்டும் என்று போதிக்கப்பட்டன சிற்றூர்களில் . படித்தவள் தான் வேண்டுமென்றனர் . பெண் படித்தாள் . வேலை செய்பவள் வேண்டுமென்றார்கள் பெண் வேலைக்கு போனாள் . ஆசிரியை என்றால் காலையில் போனால் மாலையில் காபி தரவந்து விடுவாள் . இன்று கம்ப்யூட்டர் வேலை அதோடு இணைந்து கொண்டது . காரில் போய் காரில் கொண்டு வந்து விட்டு விடுவார்கள். விடுமுறைகள் கிடைக்கும் .

இசையில் விருப்பமுடைய தோழி கல்லூரியில் பாடிய பாடலைக்கேட்டு வந்த பெரிய இசைக் குழுவின் வாய்ப்பை தட்டிக்கழித்தாள். அது பெண்ணுக்கு உகந்த தொழில் அல்ல என்பதால். சில நகர்ப்புறப் பெண்கள் எதனையும் செய்யும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள் . இன்னும் எங்கள் சிற்றூரில் வாய்ப்புக்களைப்பற்றி அறியாத ..அறிந்திருந்தாலும் அதனுடைய இழப்பைப் பற்றி பேச இயலாத வாய்மூடிய பதுமையாய் பெண்கள் வாழ்வதைக் கண்கூடாகக் காண்கிறேன் நான்.

என் பெண் அப்படிப் படிக்கிறாள் இப்படி படிக்கிறாள் என்று அவர்கள் இன்று வாயாரப் புகழ்ந்து பேசுகிறார்கள். இவளாவது விருப்பப்பாடத்தைப் படிப்பாளா? படித்தாலும் அவளுடைய விருப்பத்துக்கு வேலைக்கு செல்வாளா? என்கேள்வியைக் கேட்டால் எங்கே அவர்களின் இழப்பின் வலியைக் கிளறி விடுவேனோ என்ற அச்சத்தில் நான் கேட்பதே இல்லை.

பஸ் நிறுத்தத்தில் கூட கெமிஸ்ட்ரி ஈக்வேஷன் பற்றி பேசிக்கொண்டு இருக்கும் தோழி ஒருத்தி இன்று உப்பு புளி கணக்கு மட்டும் பேசிக்கொண்டு இருக்கும் வேதனை உங்களுக்கு புரிகிறதா? தன் கனவை தன் குழந்தையின் எதிர்காலத்தில் பார்க்கத்துடிக்கும் என் தலைமுறை பெண்கள் இன்னமும் சுமந்து கொண்டிருக்கும் இழப்பின் வலிகளை இனி பேசித்தீர்க்கமுடியாது.
ஒன்றே ஒன்று இனி யாரும் இப்படி இழப்பின் வலி பற்றி பேசும் நிலையில்லாமல் செய்ய முடியுமென்றால் அதுதானே உண்மையில் எங்களின் மகிழ்ச்சி . உங்கள் குழந்தை ஆணோ பெண்ணோ எப்படி வரவேண்டுமென்ற கற்பனையை அவர்களுக்கே விட்டுத்தாருங்கள். சிறகு விரித்து சிகரம் தொட அனுமதியுங்கள்.


அப்படியே அவர்களை படிக்க அனுமத்திருந்தாலும் சில குடும்பங்களில் இருந்த நிலையைச்சொன்னால் உங்களுக்கு புரியுமோ புரியாதோ தெரியவில்லை. தினம் தினம் வீடு வந்து சேரும் போது சில கேள்விகளோடு எதிர்படுவார்கள் பெற்றோர். அவர்களைச் சொல்லி குற்றமில்லை சமூகக்கோட்பாடுகளுக்கு அவர்கள் பயப்படுகிறார்கள். சரியான நேரத்தில் வந்தாளோ? அவள் முகம் எப்படி இருக்கிறது? எதும் கள்ளம் மறைக்கப் பட்டிருக்கிறதா கண்களில்? என்று தேடிப்பார்ப்பார்கள். இக்கேள்விகளுக்குப் பழகி அவற்றை ஒரு வழக்கமான ஒன்றாக பார்க்க தெரிந்தால் பிழைத்தாள் . இல்லை ஐயகோ என் போன்ற உத்தமியை இப்படி சந்தேகக்கண்ணோடு என் தாயே என் தந்தையே கேட்டார்களே என்று மனதை சங்கடப்படுத்திக் கொண்டு அவர்களையும் கூடப்பிறந்த பிறப்புகளையும்
காணும் சக்தியற்று ஒரு முழக்கயிற்றையோ , மண்ணெண்ணையோ தேடிப்போய் மாலையிட்ட சட்டத்துள் இருக்கும் என்னுடைய சில தோழியரைப்போல் வாழ்வை முடித்துக் கொள்ளவேண்டிவரும்.


நேரம் கழித்து வந்தாயே உன்னால் குடும்ப மானம் போனதே என்று எந்த பெற்றோராவது ஒரு ஆண்மகனை சாடியதாக கேள்விப்பட்டதுண்டா ?
பெண்ணொருத்தியோடு கல்லூரியின் வாசலில் கண்டதற்காக பெற்றோரின் வசவு கேட்டு தற்கொலை செய்து கொண்ட ஒரு ஆண்மகனை பற்றி நீங்கள் கேட்டதுண்டா?
தொடர்ந்த வயிற்றுவலியும் அதனால் தற்கொலையும் பெண்களுக்கு மட்டுமே வருவது என்பது ஒரு புரியாத புதிர்.
அத்தனை கொடூரமான வார்த்தை சாட்டைகள் அவளை துவைத்திருக்கும் .குடும்பமானம் காக்கும் பெண்களுக்கு என்று பத்திரிக்கைக்கு தருவதற்கென்றே தயாரிக்கப்படும் ஆயத்த பதில்கள் அவை.


விருப்பங்களை இழந்தாய்.
முயற்சிகளை மறந்தாய்.
இழப்புகளை இயல்பென்றாய்.
சோதனைகளை வாழ்வென்றாய்.
தோழி - இனியொரு முறை
பிறந்து வா.
பெண்ணாகவே வா.
நீயே அன்னை,
அன்புக்கு உரமிடு.
நீயே சக்தி,
வெற்றிக்கு வழிதேடு.
நீயே வானம்,
எல்லைகளை விரித்திடு.
வெட்டப்பட்ட சிறகுகள்,
வளர்ந்து விட்டது உணர்.
சிறகு விரி,
சிகரம் தொடு.

15 comments:

மங்கை said...

லட்சுமி

//எதைத் தொலைத்தோம் என்று நாங்கள் புலம்புகிறோம் , அரற்றுகிறோம் என்பதை அறியாத , புரிந்து கொள்ளமுடியாத சிலரின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் வகை அறிந்திருக்கவில்லை நான்.//

உணரத்தான் முடியும்..ம்ம்ம்ம். .அருமை...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழ்நதி சொன்னது போல பெண்கள் கோபப்படவும் முடியாது வருத்தப்படத்தான் முடியும்.நான் வருத்தப்பட்டு உணர்ந்ததை எழுதி இருக்கிறேன். அவ்வளவு தான்.
கொண்டாட்டத்திற்கான நாள் இல்லை.
போலியோவை ஒழிக்க ஒரு நாள் மாதிரி
பெண்களுக்கு இருக்கும் கஷ்டங்களை
போக்க ஒரு நினைவு படுத்தும் நாள் அவ்வளவு தான் மகளிர் தினம்.

சீனு said...

//ஒரு தனியார் பள்ளியில் ஆயிரத்துஐநூறு வாங்கிக்கொண்டு தொண்டை கிழிய கத்திக்கொண்டு மெலிந்த உடலுடன் அவளைப் பார்க்கும் போது பள்ளியில் வெறியுடன் படித்த அவளின் நிலை கண்முன் வருகிறது.//

கொடுமைங்க. நானெல்லாம் யூ.ஜி.யில 63% மட்டுமே எடுத்திட்டு எம்.சி.ஏ. சேர்ந்துட்டேன். என் மாமா மெண் ஒருத்தி என்னை விட நன்றாக படிப்பாள். நான் +2வில் தேர்வடைந்ததே ரொம்ப கஷ்டப்பட்டு தான். ஆனால், அவளோ நன்றாக படிப்பவள். ஏதோ பேருக்கு அவளை B.Sc CS படிக்க வைத்துவிட்டு கல்யாணம் செய்து கொடுத்துவிட்டார்கள். In fact, +2வில் ஊர் சுற்றிக் கொண்டிருந்த என்னை திட்டி திட்டி படிக்க வைத்ததே அவளும் அவள் அண்ணனும் தான்.

//தினம் தினம் வீடு வந்து சேரும் போது சில கேள்விகளோடு எதிர்படுவார்கள் பெற்றோர்.//

என் அக்கா பட்டிருக்காள் என் தந்தையிடம்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சீனு...இப்படி எத்தனையெத்தனையோ பேர் நசுக்கப்பட்டவர்கள் இருக்க...இன்னமும் நாங்கள் வெட்டியாய் புலம்புகிறோமென்கிறார்களே
என்ன செய்ய?

காட்டாறு said...

இழப்பின் வலி .... ஒரு சில வலிகள் நாமே (பெண்களே) ஏற்படுத்திக்கொண்டது தான் தோழி. இது என் தாழ்மையான கருத்து/கண்ணோட்டம். நாம் நம் கருத்தைப் பேசினால், எதிர்த்து பேசினாள் என்ற இழி சொல் வருமோ என்று பயந்த என் தோழிகளும் உண்டு. என்னுடன் 12 ஆம் வகுப்பு படித்த என் தோழி 1105/1200 மதிப்பெண் எடுத்தும், 12 முடித்தவுடன் திருமணம் செய்து வைத்தனர் அவள் பெற்றோர். என் தந்தையும் அவள் தந்தையும் நெருங்கிய தோழர்கள். என் தந்தையுடன் எந்த அளவு வாதாடியிருப்பேன் என்று எனக்குத் தான் தெரியும். அவரும் எடுத்து சொல்ல தயங்கினார். ஆனால், என் தொழியின் தங்கையோ, அவள் பெற்றொருடன் வாதாடி, இன்று டாக்டர்.

இன்று தைரியமாக சொல்லும் சீனுவினால் அன்று அவருடைய மாமாவிடமோ, தந்தையுடனோ போராடியிருந்தால்........

என் தோழியின் தங்கை போல், ஒவ்வொரு பெண்ணும் இருந்தால் ......

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்கள் கருத்தும் சரியாக இருக்கலாம்.
ஆனால் சூழ்நிலை தான் இதற்கு
காரணம். அக்கா தயங்கிய காலம்
வேறு தங்கை வார்த்தையாடிய காலம் வேறு..இரண்டுக்கும் நடுவில் இருந்த
காலத்தின் வேறுபாடு ஒரு காரணம்.

அடி உதை வசவு களை காதுகொடுத்துக்
கேட்கமுடியாத பெண் சொல்படி தான்
கேட்பாள். கெட்டவார்த்தையால் திட்டும் தென்னை விளக்கமாற்றால் அடித்து வாசலில் நிறுத்தும் பெற்றோரை
வழிக்கு கொண்டுவர பெண் வார்த்தையாடினால் மானத்தை இழக்க வேண்டியிருக்கும்...உறவை இழக்க
வேண்டி இருக்கும்.


குடும்பத்தில் பெற்றோருக்கு இருக்கும்
உரிமை அண்ணனுக்கோ தம்பிக்கோ
கிடையாது எனவே அக்காவுக்காக சீனு பேசியிருக்கமுடியாது. நாம் மரியாதை
நிமித்தம் அடங்கி இருந்தோம்.

நாம் வேண்டுவது போராடாமலே நமக்கு இணக்கமான சூழல் நிலவவேண்டும்.எப்படி ஆணுக்கு எளிதாக இருக்கிறதோ வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் அப்படி ஏன்
பெண்களுக்கு இல்லை. என்பது தான்.

அன்புக்கும் மரியாதைக்கும் அடங்கிய
பெண் தன் தாழ் நிலைக்கு தானே
காரணம் என்றால் என்ன சொல்வது
என்று தெரியவில்லை. நல்லவர்களுக்கு
காலமில்லை என்பது இது தானோ.

Chandravathanaa said...

நியமான வருத்தம்.
தேவையான பதிவு

சினேகிதி said...

இது ஒரு இழப்பே என்பது போல வாழ்வார்கள் சிலர்...இடையில புகுந்து யாரையாவது வீட்டுச்சூழலில் மட்டும் தங்கிவிடாது வெளியுலகத்துக்கு அழைத்துச்செல்ல முறட்டு எல்லாரிடமும் அடங்காப்பிடாரி பட்டம் வாங்கிக்கொள்வதுதான் சோகம்..இதுக்கு யாரையும் சாடாமல் சம்பந்தப்பட்டவர்களே வட்டத்தை விட்டு வெளியே வந்தால்தானுண்டு!

வெற்றி said...

/* தன் கனவை தன் குழந்தையின் எதிர்காலத்தில் பார்க்கத்துடிக்கும் என் தலைமுறை பெண்கள் இன்னமும் சுமந்து கொண்டிருக்கும் இழப்பின் வலிகளை இனி பேசித்தீர்க்கமுடியாது. */

என்ன சொல்வது என்றே தெரியவில்லை. (:-

இப்போது இந்த நிலைமை மாறி வருகின்றது என நினைக்கிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சந்திரவதனா நன்றி ...பழய பதிவைத்தேடிப்படித்து உயிரூட்டி இருக்கிறீர்கள்.
-------
வட்டத்தை விட்டு வெளியே வந்தால் தான் அடங்காப்பிடாரி என்பார்களே!
;(
-----
வெற்றீ எதுவும் சொல்ல இயலாத மௌனமா ... காலம் மாறிவிடும் மாறித்தானாக வேண்டும்.. ஆனால் வலிகளைப்பற்றி பதிவிடத்தோண்றியது ...இது பெண்கள் தினத்திற்கு போட்டது.

Nanda Nachimuthu said...

இனி எவரும் எதையும் இழக்கமலிருக்க இயன்றதை செய்வோம்

என்ன செய்ய முடியும் என எழுதுங்கள் ---

nnandakumar@gmail.com

நந்தா நாச்சிமுத்து.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்கள் குழந்தை ஆணோ பெண்ணோ எப்படி வரவேண்டுமென்ற கற்பனையை அவர்களுக்கே விட்டுத்தாருங்கள். சிறகு விரித்து சிகரம் தொட அனுமதியுங்கள்.

என்று தான் மேலே பதிவிலேயே சொல்லி இருக்கிறேனே நந்து..
பழய பதிவு எடுத்து படித்ததற்கு நன்றி..

Nanda Nachimuthu said...

//உங்கள் குழந்தை ஆணோ பெண்ணோ எப்படி வரவேண்டுமென்ற கற்பனையை அவர்களுக்கே விட்டுத்தாருங்கள்.//

அக்கா....நம்முடைய / இன்றைய தலைமுறை பெற்றோர்கள் கண்டிப்பாக இந்த தவறை செய்ய மாட்டார்கள்.

என் கேள்வி அதுவல்ல....இப்பொழுதும் அந்த தவறை செய்து கொண்டிருக்கும் பெற்றோரையும்...அவதிப் படும் குழந்தைகளையும் எப்படி திருத்தி மீட்டெடுக்க போகிறோம்.

அனைவருக்கும் இலவச உயர் தர கணிணி கல்வி என்ற தளத்தில் மற்றும் நோக்கத்தில் இயங்கி கொண்டிருப்பதால் உரிமையுடன் கேட்கிறேன்.

என்ன செய்ய முடியும் என எழுதுங்கள் ---

nnandakumar@gmail.com

நந்தா நாச்சிமுத்து.

cheena (சீனா) said...

முத்துலட்சுமி

இழப்பின் வலிகள் வடுக்களாய் மாறி வருத்தத்தை அளிக்கின்றன. என்ன செய்வது - நம் நாட்டில் பெண்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது.

இன்றைய தலைமுறை பெண்களூம் போர்க்கொடி தூக்கி பெற்றோரும் மனநிலை மாறி இருக்கிறார்கள் - இல்லையா ?

காலநிலை மாறும் - கவலை வேண்டாம்

கோவை விஜய் said...

//காலநிலை மாறும் - கவலை வேண்டாம்//

காலம் மாறிக் கொண்டிருக்கிறது.

மகளிர்க்கான கல்லூரிகள் போக இரு பாலர் படிக்கும் கல்லூரிகளின் எண்ணிக்கையும் கூடுகிறது.

அலுவலகங்களிலும் பெண்களின் பங்களிப்பு அதிகமாகிறது

வீடுகளிலும் ( நடுத்திர குடும்பங்களில் கூட) பெண் பிள்ளைகளுக்கு சலுகைகள் தொடங்கிவிட்டன

(இன்னுமொரு உண்மை பெற்ற தாய் தந்தையரை கடைசிகாலத்தில் அன்போடு கவனிக்கும் மகன்களை விட மகள்களின் எண்ணிக்கை இதை வலுவாக்கும்)

இன்னும் 5-10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிலமையில் நல்ல முன்னேற்றம் எதிர் பார்க்கலாம்.


கிராமங்களில் கூட மாற்றங்கள் தெரிய ஆரம்பித்து விட்டன.

இழப்பின் வலிகள் இல்லாத நாள்
வரும் .

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/