துரத்திக் கொண்டிருக்கும் கட்டளைகளில் வேலைகளில் இருந்து விடுதலையாகி யாரும் தொந்திரவு செய்யமுடியாத இடத்திற்கு
ஓடி மனதுக்கும் மூளைக்கும் கொஞ்சம் புத்துணர்ச்சி ஏற்றிக்கொள்வதென்பது வழக்கமாகிவிட்டது . வடஇந்தியாவில் இருக்கும் சமயத்தில் இங்குள்ள பகுதிகளைப் பார்த்துவிடும் எண்ணம் சேர்ந்து வருடா வருடம் ஒரு இடம் முறை வைத்துப் போவது என்றாயிற்று.
மூன்று வருடம் முன்பு , நானித்தால் போவது என்றவுடன் நாமாக வண்டி எடுத்துப் போவதோ இல்லை சுற்றுலா ஏற்பாடு செய்பவர்களின் எதாவது ஒன்றில் சேர்ந்து போவதோ என்பதை விடுத்து சாதாரண பயணியாக செல்வதாக முடிவெடுத்து பஸ் நிலையத்தில் சென்று நானித்தால் செல்லும் பஸ்ஸில் ஏறிக்கொண்டோம். டிசம்பர் மாத கடைசி என்பதால் குளிர் மிக அதிகம். வறுத்த கடலைகளை உடைத்து சாப்பிட்ட வண்ணம் குளிரை பொருட்படுத்தாமல் கிராம மக்களோடு பயணம்.
இறங்கும் வரை மூடிய பஸ்ஸில் கொஞ்சம் நடுங்கியபடி இருந்த நாங்கள் பஸ்ஸை விட்டு இறங்கியதும் கிடுகிடு என நடுங்க ஆரம்பித்துவிட்டோம். என்னடா என்று பார்த்தால் ..பேருந்து நிலையம் இருப்பது ஏரிக்கரையில்..
காற்று ஏரியைத் தொட்டு இன்னும் கொஞ்சம் குளிரேற்றிக் கொண்டு எங்களை வரவேற்றது. இணையத்தைப் பார்த்து ஸ்நோபாயிண்ட் என்ற இடத்தில் அறை எடுத்திருக்கிறோம். அங்கே போக ரோப் கார் தான் . நாங்கள் இறங்கியது காலை ஐந்து மணி ரோப் கார் தொடங்க விடிய வேண்டும். சிறிது டீ குடித்து சூடேற்றிக் கொண்டு ஜீப் ஒன்றைப் பேசி அந்த செங்குத்து மலை மேல் அடைந்தோம்.
சினிமாவில் வரும் தனி மாளிகை போன்று இருந்தது அந்த அரசாங்க ஹோட்டல் . வடநாடுகளில் அரசாங்கத்தின் பராமரிப்பு நன்றாகவே இருக்கிறது. இருட்டு பயமேற்படுத்தியது . நல்லவேளை லைட்டைப் போட்டு வரவேற்றார்கள் . நடுவில் ஹால் ,சாப்பிட பெரிய மேஜை, இரு புறமும் அறைகள்.ஒரு சமையலறை . காலை ஆறு மணி வரை
கொஞ்சம் ஓய்வு. பின்னர் 5 நிமிட நடையில் பனி மலைகளை
தூரத்தில் இருந்து காணும் படி அமைத்திருந்த ஸ்நோ பாயிண்ட்.
அங்கிருந்து ஹிமாலய மலையழகை ரசிக்கலாம். எல்லோரும் வேறு எங்கோ தங்கிக் கொண்டு இங்கே ரோப் கார் மூலம் வந்து ரசிப்பார்கள் . நாம இங்கேயே தங்கி யாரும் வர ஆரம்பிக்கரதுக்கு முன்பே தனியா ரசிக்க முடிந்ததே என்று ஒரே சந்தோஷம். முடிவெடுத்த தலைவருக்கு ஒரே பெருமை.
அமைதியான அந்த இடத்தை விட்டு போக மனசே வராம வயிறு கூப்பிட்டதேன்னு கீழே இறங்கி வந்தோம். அங்கேயே சமையற்காரர் இருந்தார் ஆனா டீ மட்டும் குடிச்சுட்டு பக்கத்துல மலையில் வாழுறவங்க இருக்கற இடத்துக்கு போய் டீ கடையும் ஹோட்டலுமா இருந்த ஒரு பெட்டிக்கடையில்
ஆலு பராட்டா வாங்கி சாப்பிட்டோம். ஆகா அந்த குளிருக்கும் அதுக்கும் அருமை. சில்லுன்னு காத்துக்கு ஊரோட பரபரப்பு எல்லாம் மறந்து சுடசுட கிடைத்தத சாப்பிடறது சொர்க்கம்.
அப்புறம் வண்டி எடுத்துகிட்டோம். கண்போல இருக்கற தால் நானி தால் , அந்த தால் இந்த தால் எல்லாம் சுத்திக் காண்பிச்சார் டிரைவர். ரோப் கார் ஒரு முறை மேல போக ஒரு முறை கீழ போக ஸ்நோ பாயிண்டில் தங்கி இருக்கறவங்களுக்கு இலவசம். காலையில் எல்லாரும் மேலே வந்து பார்க்கும் பிசியான நேரத்தில் நாங்க கீழே போய்ட்டு மாலையில் மேலே வருவோம். திருப்பியும் தனிமையான அமைதியான சூழல் நல்லா இருந்தது. சூப் , உருளை ப்ரன்ச் ப்ரை சமையற்காரரை செய்யச்சொல்லிக் கேட்டு சாப்பிட்டோம். குளிருக்கு தீமூட்டி சுற்றிலும் உட்கார்ந்து அரட்டை அடித்தோம்.
அடுத்தநாள் நாங்களா கிளம்பினோம். சைனா பீக் என்ற இடம். குதிரையில் போகும் படி சிலர் சொன்னார்கள். எத்தனை கிலோ மீட்டர் என்பது மறந்து விட்டது.. நடக்கும் தூரம் தான் என்று நாங்கள் பேசிக்கொண்டே ஏறத் தொடங்கினோம். ஒத்தையடி போன்றதொரு பாதை தான் . இதில் குதிரையில் வந்தோமோ பயத்திலேயே செத்துருப்போம். யாருமற்ற காடு போல இருந்தது . கொஞ்ச நேரத்திற்கு ஒருமுறை ஓய்வெடுப்போம். பொண்ணு அத்தனை சின்னதில் நடந்ததே பெரிதாயிற்றே. அங்காங்கே தடுமாறினால் விழுந்துவிடும் அதளபாதாளத்தை ரசித்துக் கொண்டே சென்றோம்.
1 மணி நேரத்திற்கு மேல் சென்ற பின் கொஞ்சமே கொஞ்சம் யோசனை வந்தது ஆனாலும் நடைப் பயணத்தின் ஆசை விடாமல் மேலே சென்றோம். மரம் வெட்டும் பெண்கள் பேசிக்கொள்ளும் சத்தம் அவ்வப்போது கேட்டது. இரண்டு பெண்கள் எதிர்பட்டார்கள் . இது தானே சரியான பாதை என்றோம். ஆமாம் இன்னும் பாதி தூரம் இருக்கிறது என்றார்கள். இப்படியே மேலே போகப் போக தரையெல்லாம் ஏதோ வெள்ளையாக கிடந்தது. அதற்கு முன் நாங்கள் பனிப்பொழிந்திருக்கும் இடங்களுக்கு போகாததால் எங்களுக்கு ஒரே ஆச்சரியம்.
மேலே போகப் போக பனி நன்றாக பரவிகிடந்தது ஆனால் பால் வெள்ளையாக இல்லாமல் மண்ணோடு கலந்து இருந்தது. கொஞ்சமே கொஞ்சம் தானே பொழிந்திருக்கிறது.
ஆனாலும் எங்களுக்கு அது புது அனுபவம் ,. என்பதால் மகள் பனித்துகள்களை அள்ளி கூட வந்திருந்த மாமாமேல் போட்டு விளையாடினாள். உடனே முடிவெடுத்தோம் அடுத்த வருடம் போவேண்டும் பனிமலை ...மனாலி ..
மேலே மலையழகு ரசிக்க என்று தொலைநோக்கி வைத்து இருந்தார்கள். ஒரே ஒரு வீடு. அதில் இருந்தவர் அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டவர் போலும். வாருங்கள் டீ வேண்டுமா என்ன சாப்பிடுகிறீர்கள் என்றார். ஆஹா நடந்து வந்த களைப்பு நீங்க
பிரட் ஆம்லெட்டும் டீ யும் தந்து பசியாற்றினார். இன்று முதல் வருகை நீங்கள் தான் என்றார். மகிழ்ச்சியாக இருந்தது.
இறங்கி வரும் பாதையில் முக்கால்வாசி ஆனபின் தான் ஒரு கல்லூரிக்கூட்டம் வந்தது. அய்யோ அம்மா என்று வந்த அவர்கள் இன்னும் எவ்வளவு தூரம் என்றார்கள். இப்போது தான் கால்வாசி வந்திருக்கிறீர்கள். ஆனால் அருமையான இடம் நடைப்பயணம் நல்லா இருக்கு என்றோம். அவர்கள் இத்தனை சிறுமி எப்படி வந்தாள் என்றார்கள். அதுவா ரகசியம் என்ன என்றால் அவளுக்கு ஒரு பார்பி பொம்மை கிடைக்கும் அதுக்குத்தான் . ரொம்ப நாளா கேட்டுக் கொண்டிருந்தாள். நடந்தால் ,ரசித்தால் பரிசு என்று அழைத்துப் போயிருந்தோம்.
பறவைகளின் ஒலிகள் , பசுமை நிறைந்த பகுதி , இயற்கையின் மணம், எல்லாம் சேர்ந்து ஒரு வருடத்திற்கான புத்துணர்ச்சியை உடலில் ஏற்றிக்கொண்டு மீண்டும் பரப்பரப்பான வாழ்வுக்கு பயணமானோம், மனதில் அடுத்த பயணத்தைப் பற்றிய ஆவலுடன்.
14 comments:
ஹை.............. பயணக்கட்டுரையா?
அட்டகாசமான ஆரம்பம்.
பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு.
நைனிடால் போய்ட்டு வந்த மாதிரி சுகமான அனுபவம். சூப்பர். நல்லா எழுதறீங்க. அதான் பொன்ஸக்காவோட மோதிர கை குட்டு(செல்ல குட்டு) கெடச்சுது.:-)))
நன்றி துளசி...நீங்கள்ளாம் குடுக்கற ஆதரவுதான் தொடர்ந்து எழுதத்தூண்டிக் கொண்டிருக்கிறது .
அப்ப டிஜிட்டல் கேமிரா இல்லாததால இன்னும் சில படங்களை வலையேற்ற இயலவில்லை.
அபி அப்பா ,மோதிரக்கை குட்டுனது நல்லதா போச்சு பாருங்க இன்னும் நல்லா எழுதனும்ங்கற வேகம்வருது . இன்னும் நிறைய பார்த்தோம் எழுதினா பெரிசா இருக்குன்னு படிக்க மாட்டாங்களோன்னு சுருக்கிட்டேன்.
ஏற முடியாம மிருக காட்சி சாலைக்கு ஏறிப்போனா அங்கயும் ஒவ்வொரு கூண்டும் ஒரு குன்று மாதிரி ஏறி ஏறிபார்க்கவச்சு முட்டி உடைச்சது யாரும் இறங்கி பார்க்காத ஏரிபக்கம் போனதும் முதலை இருக்குன்னு கேள்விபட்டதுன்னு சிலது இருக்கு.
நல்ல கட்டுரைங்க. ஒரு முறை ஊட்டிக்குப் போறோமுன்னு கிளம்பி கொடைக்கனால் போன கதை ஒண்ணை ஞாபகப்படுத்திட்டீங்க! சீக்கிரமே ஒரு கொசுவர்த்தி சுத்த வேண்டியதுதான். :))
பாருங்க சுடரோட்டம் மாதிரி இந்த
கொசுவத்தி சுத்தரவோட்டம் கூட
ஒருத்தர் கிட்ட இருந்து இன்னோருத்தருக்கு போகுது .
சுத்துங்க கொத்தானார் ஜி.
மகளிர் தின வாழ்த்துக்கள் சகோதரி...
ஜெயமோகனின் ஒரு சிறுகதையைப் படித்துவிட்டு அந்த 'நைனிடால்'என்ற பெயரைச் சொல்லிச் சொல்லிப் பார்த்துக்கொண்டேன். அந்த ஒலி வெகு இனிமையாக இருந்தது. உங்கள் பதிவைப் படித்தபிறகு கட்டாயம் அங்கு போய்ப் பார்க்கவேண்டுமென்ற ஆசை கிளர்ந்திருக்கிறது. இயல்பான நடையில் அழகாக எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் போனது எந்த மாதத்தில்? அங்கு 'சீசன்'எப்போது? முடிந்தால் அறியத்தாருங்கள்.
நாங்கள் போனது டிசம்பர் கடைசி .அது ஆப் சீசன் எனவே தங்குமிடம் விலை குறைவு.குளிரைத் தாங்கிக்கொள்ள முடிந்தவர்கள் டிசம்பர் ஜனவரியில் செல்லலாம். பனிப்பொழிவு இருக்கும்.
மற்ற படி வெயில் காலமெல்லாம் சீசன்.
March to June and Mid-September to the end of October
thankyou ravi for the wish
மிகவும் அருமையாக உள்ளது உங்கள் பயணக் கட்டுரை. எனக்கு நேரிலேயே போய் பார்த்த மாதிரி இருக்கிறது. அங்கு போக வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. படங்கள் அருமை.
முடியும் போது போய்வாருங்கள் தோழி. புது புது மாற்றங்களில் இயற்கையை கெடுக்கும் முன் பார்த்துவிடுங்கள்.
aha...ipidi eluthina ellarukum anga poganum enda aasai vanthidum:-)) appuram antha kadasi kaadu paathai alaka iruku...innum padangal irunthal unga blog la podungo.
இன்னும் படங்கள் எல்லாம் ஸ்கேன் செய்து போட ஸ்கேனர் இல்லை.சினேகிதி.
அதான் போட முடியவில்லை.
Post a Comment