நானித்தால் சுற்றிக்கொண்டிருக்கும் போதே முடிவானது அடுத்த
முறை மணாலி என்று, பனிமலையில் விடுமுறை . இம்முறை
தில்லியில் இருக்கும் ஹிமாச்சல் டூரிஸம் அலுவலகத்திலிருந்து கிளம்பும் பஸ்ஸில் பதிவு செய்து கொண்டோம். எப்போதும் திசம்பர் கிருஸ்த்மஸ் விடுமுறையில் இப்படி கிளம்புவது என்பதால் குளிருக்கு தகுந்த ஆடைகளுடன் தயாராக இருந்தோம். அந்த அலுவலகத்தில் இருந்தே ஹோட்டல் பியாஸ் ல் அறையும் எடுத்துக் கொண்டோம்.இந்த தங்குமிடம் நடுத்தரமானது . அனைத்து அறைகளும் பியாஸ் நதியை பார்க்கும் வசதியுடன் இருக்கிறது.
எத்தனை குளிருக்கான ஆடை அணிந்து இருந்தும் குளிர் மூடிய பஸ்ஸுக்குள் நடுங்க வைத்தது. ஷூக்குள் காலுறை தண்ணீரில் நனைந்தது போல் உணர்ந்தோம். இரவு முழுதும் பயணம். வளைவுகளில் அவர் திரும்பும் ஒவ்வொரு கணமும் பயத்தில் இருந்தேன். மணாலி சேர்ந்ததும் அறைக்கு போகும் முன் அங்கிருக்கும் அரசாங்க சுற்றுலா மையத்தில் பேசி வாடகைக்கு
ஒரு வண்டி ஏற்பாடு செய்துகொண்டோம். அறையில் சாமான்களை வைத்துவிட்டு குளித்து கிளம்பினோம்.
மணாலியில் தங்கிக்கொண்டு எந்த எந்த மாதத்தில் எங்குவரை
பனிப்பொழிவு இருக்கிறதோ அங்கே இந்த ஜீப்களில் சென்று பார்த்துவரவேண்டும். நாங்கள் போனபோது பனி குலாப்
என்னும் இடம் வரை இருந்தது. அங்கே செல்லும் பாதையில் பனிப் பொழிவு இருந்ததால் வண்டியை ஏற்கனவே வண்டி சென்ற தடத்தில் கவனமாக ஓட்டிச்செல்ல வேண்டி இருந்தது . கடவுளே என்று நான் புலம்புவதை கண்ட வண்டியோட்டி நாங்கள் தினம் தினம் போவது தானே இந்தப் பாதை ஏன் பயப்படுகிறீர்கள் என்றார்.
பாதையில் வாடகைக்கு கோட்டும் பனியில் உபயோகிக்கும் உயரமான ஷூக்களும் வாடகைக்கு எடுத்துக்கொண்டோம்.
அங்கே நாங்கள் சென்றபோது குறைவான கூட்டம் தான் இருந்தது . ஸ்கேட்டிங் சாமான்களை வாடகைக்கு தருபவர்
கூட்டம் குறைவாக இருக்கும் போது தான் நன்றாக செய்யமுடியும் அப்புறம் என்று யோசிக்காதீர்கள் என்றதை
ஒப்புக்கொண்டது நல்லதாயிற்று. முதலில் மகள் , முயற்சித்தாள் நன்றாகவே வந்தது ஆனால் அடிக்கடி விழுந்து கொண்டிருந்தாள்.
அடுத்தது நான். அவர் சொன்னபடி உடனேயே செய்து காட்டி குருவிடம் பாராட்டும் வாங்கிக்கொண்டேன். மூன்றுமுறை முழுமையான வட்டம் .
பனி மனிதன் செய்தோம். கனவில் மிதப்பதான உணர்வு . இத்தனை வெள்ளைவெளேர் என்ற இடம் என்னமோ மேகத்தில்
இருப்பதாக உணர்ந்தோம். பெரிய டையர் ட்யுப்பில் உட்காரவைத்து கீழே தள்ளிவிடும் விளையாட்டுக்கு பணம் கொடுத்து சருக்கினோம். பின்னால் பிளாஸ்டிக் கயிறு கொண்டு கட்டி இருந்தனர். மரஸெலெட்ஜில் சென்றோம் . ஏறும்போது சரி இறங்கும் போது அவரும் அதன் பின் நின்று கொள்கிறார் அதுவே ஒரு ஜாய் ரைட் தான். திரில்.
அடுத்த நாள் ஷோலங் பள்ளத்தாக்கில்[Solang Valley] சிவ்லிங்க் எனும் இடம் சென்றோம். அங்கே செல்ல பாதை சேரும் சகதியுமாக .. குதிரைக்காரர்களின் தொந்திரவு வேறு. சரி என்று குதிரையில் சென்றோம் . எங்கே குதிரையிலிருந்து விழுந்துவிடுவோமோ என்ற பயம் எனக்கு. பின்னால் குதிரையில் வந்த 5 வயது மகள் ..அம்மா பயப்படாதே என்றாள். கீழே உள்ள படம் சிவ்லிங் போகும் பாதையில் குதிரையில் பயணம் .அங்கே போனதும் கண்ட காட்சி இருக்கிறதே அருமை.
மலை மேலே இருந்து ஒரு மெல்லிய அருவி விழுந்து கொண்டிருக்கிறது.. விழ விழ வே கீழே 50 அடி உயரத்திற்கு பனிமலையாக குவிகிறது . அது லிங்கவடிவமாக இருப்பதால் தான் சிவ் லிங்க் என்று வணங்குகிறார்கள். இது குளிர்காலத்தில் தான் இருக்கும் . இந்தப் படம் எடுக்கும் போது சாயங்காலம் ஆகிவிட்டது எனவே குளிரில் தண்ணீர் கொட்டுவது நின்று விட்டது.
அருகில் செல்ல ஒரு பனியால் மூடிய ஆற்றின் மேல் செல்ல வேண்டும். குச்சி ஒன்றை 5 ரூ க்கு வாடகைக்கு தருகிறார்கள். அப்படியும் தடுமாறி விழுந்து கொண்டே இருந்தோம் .பனியில் ஸ்கேட்டிங் செய்தது போல் தான்.
அருகே சென்றதும் ஒரு சிறுகுடிலில் சாமியார் ஒருத்தர் இருந்தார் . படிகளில் ஏற ஷூவைக் கழட்ட வேண்டும் . ஏதோ தைரியத்தில் நானும் தம்பியும் ஏறிவிட்டோம். பாதி படிகளிலேயே கால் உணர்ச்சியற்று போனதாக உணர்ந்தோம்.
இருந்தும் படிகளில் ஏறி வணங்கிவிட்டுத் தான் இறங்கினோம்.
இறங்கியதும் சுடச்சுட குடிலில் சாமியார் பெரிய வானலியில்
பாயசம் கிளறிக்கொண்டிருந்தார் அதனைக் குடிக்கத்தந்தார்கள்.
கால் உணர்ச்சியற்றுப் போனதற்கு இன்னொரு வயதானவர் அருகில் கிடந்த பனியை உடைத்து கெட்டிலில் போட்டு சுட வைத்து வெந்நீரை கொத்தனாரின் கலவைப்பாத்திரம் போன்ற ஒன்றில் ஊற்றி காலை அதில் வைக்கும்படி சொல்லி
நன்றாக பாதபூஜை செய்வது போல் செய்ய கால் பழய தெம்புக்கு வந்தது. அதை ஒரு சேவையாக அவர் செய்கிறாராம்.
ம்..எத்தகைய மனிதர்.
சிறு குழந்தைகளை முதுகில் கட்டித் தூக்கிவர என்று தனி ஆட்கள் இருக்கிறார்கள். லாவகமாக அவர்கள் முதுகில் கட்டிக் கொள்வது அழகு. குழந்தை அழாமல் இருக்க வேண்டும் .
அந்த சிவலிங்கம் போன்ற அமைப்பு மார்ச் ஏப்ரல் மாதங்களில்
நடுவில் மேலே இருந்து விழும் தண்ணீரால் இரண்டாக பிரியுமாம். அப்போது அதை சிவன் பார்வதியாக வழிபடுவார்களாம்.
பாரா கிளைடிங் , ட்ரெக்கிங் , ஸ்கேட்டிங் என்று எத்தனையோ வகை பொழுதுபோக்குகள் . இதில் நாங்கள் சென்ற வாரம் அங்கே விண்டர் கார்னிவல் வேறு. ஊருக்கு நடுவில் இருந்த சதுக்கத்தில்
ஆடலும் பாடலும் குளிரை மறந்து ரசித்தோம். ஆனால் சாயங்காலம் ஆனால் குளிர் ஆட்டுகிறது . காரணம் காற்று.
கடைகளில் வைத்திருந்த புகைப்படங்களில் கடைகளின்
வெளியே 2 அடிக்கு பனி விழுந்திருக்கும் காட்சி. அப்படி இருந்தால் நாம் சுத்திப் பார்ப்பது எப்படி . இப்போது கொஞ்ச தூரம் போய் பனியைப் பார்த்துவருவது தான் சரி நமக்கு என்று
நினைத்துக் கொண்டோம்.
எங்கே போனாலும் நம்ம சாப்பாடு கிடைக்கும் என்றால் சந்தோஷம் தானே. அங்கே மெட்ராஸ் கபே என்ற ஒரு கடை இருப்பதாக அறிந்து தேடி கண்டு கொண்டோம். தமிழ் நாட்டில்
இருந்து வந்து 40 வருடங்களாகி விட்டதாம். சேலம் என்று சொன்னதாக நியாபகம். வரவேற்று உபசரித்த விதமும் சாம்பார் வடையும் , முழுச் சாப்பாடுமாக எங்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தார்கள்.
திபெத்திய கோவில் , ஹாடிம்பா தேவி கோயில் ,வெந்நீர் ஊற்றுக்கள் பற்றி அடுத்த பதிவு.
9 comments:
பொறாமை....பொறாமைன்னு ஒன்னு சொல்லுவாஹல்ல...இப்ப அது வந்திருக்கு...ம்ம்ம்ம்...
அதுக்கு பரிகாரமா...எப்டி போகனும்...எப்ப போகனும்னு வெலாவாரியா டிப்ஸெல்லாம் டீட்டெய்லா போட்டீகன்னா புண்ணியமா போகும்...ம்ம்ம்ம்ம்
பொறாமை வந்துடுச்சா ...குடும்பத்துல இருக்கறவங்க குளிர் தாங்கினாங்கன்னா எங்கள மாதிரி
நவம்பர் டிசம்பர் ல போலாம்.
இல்லன்னா மே மாசம் கூட போலாம்.
என்னா குலாப் ல பார்த்தோம்
பனிய . நீங்க இன்னும் கொஞ்சம்
டிராவல் செஞ்சு ரோடன்பாஸ் ல போய்
பாக்கனும்.அடுத்த பதிவுல மேலும் தகவல்களும் லிங்குகளும் போடறேன்.
ஆஹா....மொகல் தோட்டம், மணாலின்னு கலக்குறிங்க...
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க...உண்மையில் அந்த நபர் (அதான் உங்களுக்கு வெந்நீர் கொடுத்தாரே) பாராட்டுக்குறியவர்.
நீங்கள் செல்லும் இடங்கள் எல்லாம் மிகவும் அருமையாகவும், இயற்கை வளம் உள்ளதாக இருக்கிறது. யாரு இதை எல்லாம் தேர்வு செய்வது??
//பனி மனிதன் செய்தோம். கனவில் மிதப்பதான உணர்வு . இத்தனை வெள்ளைவெளேர் என்ற இடம் என்னமோ மேகத்தில்
இருப்பதாக உணர்ந்தோம்.// முத்துலெட்சுமி உள்நாட்டிலேயே இவ்வளவு அழகான இடங்களைப் பார்க்காமல் கடல்கடந்து வந்தாச்சு ;-( பார்க்க வேண்டுமென்று ஆசையா இருக்கு. ஒவ்வொரு வருடமும் திட்டம் போடுவதோடு சரி, ஏதாவது ஒன்னு வந்து கெடுத்துவிடுகிறது. விடுமுறையில் இந்தியாவுக்கு வரும் போது 10 நாள் இப்படி சுற்றி திரிய ஆசை, ம்ஹும் நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் என்று பாட வேண்டியதுதான்..
உங்களுக்குப் பனிதானே பார்க்கணும்?
பேசாம நியூஸி வந்துட்டுப்போங்கப்பா:-)))))
\\கோபிநாத் said... நீங்கள் செல்லும் இடங்கள் எல்லாம் மிகவும் அருமையாகவும், இயற்கை வளம் உள்ளதாக இருக்கிறது. யாரு இதை எல்லாம் தேர்வு செய்வது??//
ஹா கேட்டீங்க பாத்தீங்களா கேள்வி..
நெட்ல வலைபோட்டு பிடிப்போம்.
தலைவரும் நானும் ரெண்டுபேரும் தான். லிஸ்ட் போட்டு
முடிச்சுட்டு வரோம்.
வாங்க ஜெஸிலா வடநாட்டு ல இருக்கற இடங்களை பார்த்து முடிப்பது என்பது இந்த ஜென்மத்துல முடியாது.
அவ்வளவு இருக்கு.
முயற்சி செய்யுங்க..ஆனா சென்னைக்கு
போயிட்டு இங்க வரதப் பத்தி கனவு கூட கானாதீங்க..சொந்தபந்தத்துக்கு தனியா...லீவ்...சுத்திப்பார்க்க நேரா
வந்து இறங்குங்க டில்லி.சரியா.
\\துளசி கோபால் said...
உங்களுக்குப் பனிதானே பார்க்கணும்?
பேசாம நியூஸி வந்துட்டுப்போங்கப்பா:-))))) //
நல்லா இருக்கே இது..டிக்கெட்ட்
யாரு எடுத்து தராது நீங்களா?
படிச்சு பாத்தீங்கள்ள
ஆஃப் சீசன் புடிச்சு செலவ கொறைச்சு ஊரா ஊரா சுத்தறம்.
நல்லா எழுது இருக்கீங்க, வாழ்த்துக்கள்.
Post a Comment