நான் எழுத வந்து கொஞ்ச நாளே ஆனதாலே இந்த சுடர் விளையாட்டை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். நமக்கெல்லாம் யார் குடுக்கப்போறான்னு தோன்றினாலும் உள்ளூர ஒரு ஆசை யாராச்சும் குடுக்கமாட்டாங்களான்னு ஒரு பக்கமா . செல்வநாயகி சுடர் பதிவை சும்மாவாச்சும் அப்படியே ஒரு சுத்து சுத்திட்டு படுக்கப் போலாம்ன்னு பார்த்தா முடிக்கும் போது வச்சிருந்தாங்க அந்த புஸ்வானத்தை . அப்படியே சினிமால வரமாதிரி பட்டாம்பூச்சியா பறக்குது சுத்திலும் , புஸ்வானம் பூப்பூவா சிதறுது......என் பெயர் தானா ஒரு தடவைக்கு ரெண்டு தடவை படிச்சுப் பார்த்தேன்.
எதுக்கும் மயில் எதும் தூது வந்துருக்கா பார்த்தேன். ஆமா வந்துருக்கு. திருவிழாவை வேடிக்கப் பாக்கப்போன என்னை யானை மாலை போட்டு மேடை ஏத்தின மாதிரி ஒரு உணர்வு , இல்லன்னா இப்படியும் சொல்லலாம் , வேடிக்கை பார்த்திட்டு இருந்த வடிவேலுவ களத்தில் இறக்கிவிட்ட கணக்கா இருந்தது.
நம்மள நம்பி குடுத்துட்டாங்க நல்லபடியா முடிக்கனுமே தாயே பராசக்தி காப்பாத்தும்மான்னு கும்பிட்டு ஆரம்பிச்சிட்டேன் .
பாருங்க கேள்வி ஒன்னும் மூணும் பரவால்ல மத்தது கஷ்டம் தான் . பாக்கலாம் என்ன தேறுது என்கிட்ட இருந்து.
1. உங்க பள்ளிக்கூட வாழ்க்கை பத்தி சொல்லுங்க. வகுப்புல எப்பவும் பேசிக்கிட்டே இருப்பீங்களா? (அடிக்க வராதீங்க:))
என் பள்ளிக்கூட வாழ்க்கை ....ம்.. கொஞ்சம் அளப்பேன் . பயப்படறவங்க வேண்டுமானால் அடுத்த பதிலுக்கு நேராக ஓடிடுங்க . 3வது படிக்கும் முன்ன படிச்ச பள்ளிக்கூடம் பத்தி ஒரு பதிவு போட்டேன். அதுக்கப்புறம் நான் படிச்சது எல்லாம் கிறிஸ்டின் ஸ்கூல் . அந்த பள்ளிக்கூடத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவங்க ஜெர்மன் காரங்க அம்மான்னு சொல்லுவோம். வெள்ளைவெள்ளைன்னு இருப்பாங்க . சேர்ந்த புதிதில் எனக்கு கிராமத்தில் இருந்து சின்ன நகரத்துக்கு வந்த பயத்தில் யார்கிட்டயும் பேச மாட்டேன். பள்ளிக்கு தேவையான எல்லாத்தையும் நோட்டுல எழுதி அம்மாகிட்ட கேட்பாங்க டீச்சர் . நானா வாயத்திறந்து ஒன்னும் சொல்ல மாட்டேன்.
அப்புறம் கொஞ்ச கொஞ்சமா அடுத்த வருஷம் நாலாப்பும் அஞ்சாப்பும் படிக்கும் போது சும்மா வாயாடி மங்கம்மா ரேஞ்சுக்கு ஆகிட்டேன். டீச்சருக்கு புடிச்ச பொண்ணு நான். ஆனா படிப்பெல்லாம் நடுத்தரம் தான் . அங்க ஹாஸ்டல் பிள்ளைங்களுக்கு கொஞ்சம் பவர் ஜாஸ்தி அதனால அவங்க சொன்னது கேக்கணும்.
ஒருத்தி இருப்பா ஆறடிக்கு [அப்பவே அஞ்சாங்கிளாஸில் ]எல்லாரும் கண்ணமூடி இருங்க ன்னு சொல்லிட்டு கிரவுண்டில் விழற மாம்பழம் பொறுக்கி எடுத்து வர ரெண்டு பேர அனுப்பிட்டு அவ சாப்பிடுவா. இப்பவும் ஊருக்கு போனா உள்ள போய் அந்த வகுப்பு ,கிறுஸ்மஸ் க்கு டேன்ஸ் ஆடின மேடை {அதுக்கப்புறம் ஆடவே இல்லையே } மாமாரம் மகிழமரம் பாத்துட்டு வருவேன்.
கிளாஸுக்கு நடுவில் எதாச்சும் வேலை வந்திரும் அஞ்சாங்கிளாஸ் டீச்சருக்கு, அவங்க தான் ஹெட்மிஸ்டர்ஸ் கூட அதுனால தான். அப்ப நாங்க டாக்டர் விளையாட்டு விளையாடுவோம். ஜாமிண்ட்ரி பாக்ஸ் தான் பெட்டி. காம்பஸ் தான் ஊசி ...சாக்பீஸ் தான் மருந்து . சபிமுனிசா என்னோட க்ளோஸ் பிரண்ட். பசங்க எல்லாம் பெஞ்ச் மேல ஏறி குதிப்பானுங்க.
ஆறாம் கிளாஸ் வேற பள்ளிக்கூடம் ,பெண்கள் பள்ளி . அதுவும் கிறித்துவ பள்ளிதான். ஆங்கிலமே தெரியாம இருந்துட்டோம் அங்க போய் அப்பா பேர ஆங்கிலத்துல எழுத சொன்னா இண்ட்ர்வூயு ல முழிமுழின்னு முழிச்சேன்.வாய்ப்பாடு எழுத சொன்னா பாதில நிக்குது. ஜூலி டீச்சர் அப்பாகிட்ட சுமார் ரகம் தான் நான் பாத்துக்கரேன்னாங்க. அதே மாதிரி அந்த வருஷ ப் பாதிலயே வகுப்பில் இருக்கும் அஞ்சு குரூப்புல ஒரு குரூப்புக்கு நம்மள லீடர் ஆக்கிட்டாங்க. ஆறடிக்கு இருக்கற பிள்ளைங்கல்லாம் என்கிட்ட ஒப்பிச்சாகனும் . போர்ட்ல எழுதிபோட்டு டீச்சர்கணக்கா ஓட்டுவோம். சில பொண்ணுங்க நேரம் ஆச்சு விடு பனங்கிழங்கு வாங்கிட்டு வரேன் உப்பு நெல்லிக்கா வாங்கித்தரேன்னு சொல்லுவாங்க.லஞ்சம் ..நானா மூச். நமக்கு கடமை தான் முக்கியம்.
நட்புன்னு வந்துட்டா எதுன்னாலும் செய்யறது ...அதுனால எல்லாரையும் வளைச்சுப்போட்டு வச்சுருந்தேன் .டீச்சர்லேர்ந்து பிள்ளைங்க வரைக்கும் .ஒருமுறை பதினோன்னாவது படிக்கும் போது ஒரு டீச்சரு கூட மட்டும் வம்பாகிடுச்சு. யாரோ அவங்க மேல சாக்பீஸ தூக்கிப்போட்டதுக்கு யாருன்னு சொன்னாத்தான் பாடம் எடுப்பேன்னாங்க டீச்சர். இல்லாட்டியும் புத்தகத்தை பார்த்து அப்படியே வாசிக்கறவங்க தான் அவங்க . நான் சொன்னேன் பயந்துக்கிட்டு யாருன்னு யாருமே சொல்லாட்டி எங்க பாடம் இல்ல போகும்ன்னு . அது எப்படி நீ அப்படி சொல்லலாம் மன்னிப்பு கேள் இல்லாட்டி நான் போறேன்னு போயிட்டாங்க வெளில. அதுக்கப்புறம் மூணு கிளாஸ் அவங்க வரவே இல்ல. ஏதோதோ காரணம் சொன்னாங்க வராம இருந்ததுக்கு. மன்னிப்பு கேட்டா வருவாங்களா இருக்கும் எல்லாரும் ப்ளீஸ் கேளுடி ன்னு கூட்டிட்டு போனாங்க ..நான் பாதி வழி போகும் போது மரத்தடில க்ளாஸ் எடுத்துட்டு இருந்த டீச்சர் அவங்களே வந்து சரி சரி வரேன் போங்கன்னாங்க..நான் மன்னிப்பு கேட்கறதுக்கு முன்னாடியே.
அப்புறம் 12 வது படிக்கும் போது பள்ளிக்கூட வரலாற்றிலேயே முதன் முறையா ஸ்டிரைக் செய்தோம் . கண்டபடி கெட்ட வார்த்தையில் திட்டும் டீச்சரை ஹெட்மிஸ்ட்ரஸ் கேள்விகேட்கச் சொல்லி... ஒன்றுமில்லை மதிய உணவு வேளையில் டிபன் பாக்ஸ் திறக்காமல் வகுப்புக்கு வெளியில் தர்ணா. வெற்றியும் பெற்றோம் கடைசியில் . அதற்கப்புறம் அந்த டீச்சர் அப்படி திட்டுவதே இல்லை.
2. காதல் --- திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின் --- சிறுகுறிப்பு வரைக.
விவகாரமா இருக்கே கேள்வி . திருமணத்திற்கு முன்னோ பின்னோ ஈகோ இல்லாத காதல் வெற்றி பெறும் . ஆனால் மனிதர்கள் யாரும் ஈகோ இல்லாமல் இருப்பது இல்லை. கொஞ்சம் கூடக்குறைய இருக்கும் . அன்பு தூக்கலா ஈகோ கொஞ்சமா போட்டு கலந்தா காதல் ருசிக்கும் . ஈகோவை விட்டு காதலைச் சொல்லும்போதோ, ஏற்கும்போதோ காதல் ருசிக்கும் அடிக்கரும்பு . அப்புறம் சூழ்நிலையும் சுற்றி இருப்பவர்களும் முக்கியமாகப் போய் வார்த்தைகள் வலைகளாகி ஈகோ தூக்கலாகிவிடும் . கஷ்டப்பட்டாதான் ஜெயிக்கும் திருமணத்துக்கு முந்திய காதல் . சேர்த்துவைக்க ஆளிருக்க மாட்டாங்க .. பிரிக்கத்தான் இருப்பாங்க.
திருமணத்திற்கு பின் குழந்தையாயிடுச்சுன்னு வையுங்களேன். ஈகோ சண்டைக்கு நடுவில் வந்து தத்தக்க பித்தக்கான்னு எதாச்சும் செய்யும் அந்த குட்டிங்க ...கோவத்துல இருந்தவங்க சிரிச்சுடுவாங்க . அங்க பாரேன் உன்ன மாதிரியே தான் இது . சரிதான் ன்னு சேர்ந்து காதலிக்க ஆரம்பிச்சுடுவாங்க திருப்பியும்.. சேர்த்துவைக்கத் தான் குட்டி தேவதைங்க இருக்காங்களே .
3. டில்லி பத்திக் கொஞ்சம் எடுத்து உடுங்க. முக்கியமா உங்கள அன்போட தன் தோட்டத்துச் செடிகளைப் பாக்க வரும்படி பின்னூட்டத்துல சொல்லியிருந்த அப்துல் கலாம் பற்றி?
டில்லி வந்து பத்து வருஷம் ஆகப்போதுங்க. வந்தப்போ இருந்த பிரமிப்பு இன்னும் அகலவே இல்லை. ரெண்டு நாள் பயணம் செய்து வந்து குளிருக்கும் வெயிலுக்கும் பழகி இப்போ இங்க விட்டு போகனும்ன்னா மனசே வராத அளவு சிநேகிதமா ஆகிட்டேன் தில்லி கூட. தில்லின்னா மௌனராகம் படத்துல காட்டறமாதிரி பெரிய சாலைகள் இண்டியா கேட் பக்கத்துல இருக்கற நிற்காமல் சுத்தி சுத்தி போகும் பாதைகள் தான் சிறப்பு. அதெல்லாம் அந்த காலத்துல ஆங்கிலேயன் செய்த வடிவமைப்பு .அந்த மரங்களும் அகலமான பாதையும் ஊரிலிருந்து வந்தா எல்லாரையும் அங்க கூட்டிட்டு போய் அசத்துவோம். மத்தபடி செங்கோட்டைக்கு பக்கத்துல இருக்கற சந்து பொந்துக்கெல்லாம் போனா மதுர மேல மாசி வீதிக்குள்ள இருக்கமான்னு சந்தேகம் வரும் இடங்களும் இருக்கு.
ரிக்ஷா தாங்க அருமை .ஏறி உட்கார்ந்து அஞ்சுரூபாக்கு எவ்வளவு தூரம் போவாங்க தெரியுமா அதே மாதிரி ஆட்டோகூட தான் நம்ம ஊருக்கு இது தேவலாம் . ஆனா ஏமாத்தறது பாத்துக்கணும்.எல்லா இடத்திலும் இருக்கறது தானே.
மக்கள் ரொம்ப அருமை. யார் வம்புக்கும் போகறது இல்ல. நீ எந்த ஊர் ஏன் இங்க வந்த இது என் ஊருன்னோ சொல்லறது இல்ல. என்ன ஊரில் எங்க போன ..வந்தனு கேக்க ஆளு இருப்பாங்க இங்க பக்கத்து வீட்டுல கல்யாணம் அழைப்பு இல்லை .வருத்தமும் இல்லை.ஹாய் பை விசாரிப்பு தான். விடுமுறையா பார்க்கில் போய் விளையாட்டு ... மால் விண்டோ ஷாப்பிங்க் ...தமிழ் சங்க நிகழ்ச்சி ...மலை மந்திர் சந்தோஷம். ஆனா பணம் இருக்கறவங்களுக்கு சொர்க்கம்.
வெளிநாடுன்னு நான் போனது சிங்கப்பூர் தான் அங்க ஏசி பஸ்ஸும் மெட்ரோ ட்ரெய்னும் தான் இங்கில்லாதது சுத்தமான ரோடும் பெரிய பெரிய கட்டடமும் மாலும் இங்கயே இருக்கு அப்படின்னு நினைச்சேன்... இங்கயும் அது போல
இப்ப சூப்பரா மெட்ரோ ட்ரெய்ன் வந்து டுச்சு. ஏசி பஸ் வரப்போகுது என்ன இல்லை இத் திருநாட்டில் .
அந்த மொகல் கார்டன் போகனும்ன்னு ரொம்ப நாளா ஆசை இந்த மாதம் போறேன். கண்டிப்பா ப்ளான் பண்ணியாச்சு. கலாம் வேற ஆசையா கூப்பிட்டு இருக்காரே. அனானி யா வந்து கூப்பிட்டாலும் ஒரு மரியாதை இருக்குல்ல. கலாமைக்கூட சந்திக்கணும் ...பாக்கலாம் நடக்குதான்னு ஒரு முயற்சி செய்யணும் சிலர் இருக்காங்க அந்த பக்கத்துல வேலையா. கேட்டுப்பாக்கணும்.
4. ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி பத்தி உங்களுக்குத் தெரிஞ்ச தகவல்கள் சொல்லுங்க?
எனக்கு உடனே நியாபகம் வந்தது வேலுத்தம்பி தான் . இன்றைய கேரளாவின் ஒரு பகுதியான திருவாங்கூரை ஆண்ட பலராம வர்மா வுக்கு கீழ் தாசில்தாராக வாழ்ந்த வேலுத்தம்பி பற்றி நான் பூந்தளிர் அமர்சித்திரக்கதை புத்தகத்தில் சிறுவயதில் படித்தேன். அதில் இருந்த படி அவர் முதல் சுதந்திர போராட்ட வீரர் என்று குறிப்பிட்டு இருந்தது .
பதினாறு வயதே ஆன ராஜா பொறுப்பு முழுதும் திவானிடம் குடுத்து இருந்தார். திவான் தன் சுகத்திற்கு வரிகளை மக்களின் மேல் திணித்து ஆடம்பரமாக வாழ்ந்திருப்பான்.ஆங்கிலேய அதிகாரி மெக்காலே துணையுடன் கஜானாவைக் காலியாக்கி இருப்பார். புதிய திவானாக வேலுத்தம்பி வருவார் . மகாராஜாவுடன் செய்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க 8 லட்சம் வரிகேட்பார்கள் ஆங்கிலேயர் .பதுக்கல்காரர்களை தண்டித்து ராணுவத்தை முடுக்கி நிலத்தின் விளைச்சலுக்கு ஏற்ப வரி என்று சீர்திருத்தி பணம் சேர்ப்பார் வேலுத்தம்பி . தன் தாயைக்கூட ஒழுங்காக வரி கட்டாத குற்றத்திற்கு கோபிப்பார் வேலுத்தம்பி .ஏழையோ பணக்காரனோ திவானோ சட்டம் சமமாக இருக்கவேண்டும் என்பார்.பழைய திவானின் நண்பன் தாரகனின் நிலம் அபகரிக்கப்படும் ஆபத்து வரும் போது ஆங்கிலேயனின் கட்டளைக்கு பணியாததால் பணத்தை உடனே கட்டும்படி கோர மறுத்துவிடுவார் வேலுத்தம்பி.
போர் நடக்கிறது . வல்லமை மிக்க ஆங்கிலேயன் படை கொஞ்சம் கொஞ்சமாக முன்னெறுகிறது.திருவனந்தபுரம் நெருங்கும்போது அரசரிடம் சென்று புரட்சி செய்தது நான் தான் மக்களுக்கோ அரசருக்கோ தெரியாது என் திட்டம் என்று என்னை மட்டும் குற்றவாளியாகக் காட்டி எழுதி கையொப்பமிட்டு இருக்கிறேன் . விடைபெறுகிறேன் என்று வெளியேறி காளி கோயிலில் ஒளிந்திருப்பார். தகவல் அறிந்து முற்றுகையிடப்படுவார் . ஆங்கிலேயரை அப்புறப்படுத்த கனவு கண்டேன் முடியவில்லை ஆனால் தொடர மற்றவர்கள் இருக்கிறார்கள் என்று தம்பியிடம் கடைசியாக சொல்லிவிட்டு தன்னை கொல்லும்படி கேட்பார் .அவன் மறுக்க கோழையே என்று கத்தியை தன் மேல் பாய்ச்சிக் கொண்டு இறந்து விடுவார். ஆங்கிலேயன் என்னை கைதியாக்க முடியாது என்று சொல்லிக் கொண்டே இறந்த அவரை அவர்கள் உடலையாவது தூக்கிலிடுவோம் என்று எடுத்துச் செல்வார்கள்.
5. இப்போ இந்தியாவின் முக்கியமான பிரச்சினை என்ன? அதை எப்படிக் களையலாம்?
காந்தியைப் பற்றி பலருக்கு பல கருத்து இருந்தாலும் அவர் சொன்ன ஒரு வார்த்தை உண்மை . வறுமை என்பது மிகப் பெரிய வன்முறை. எல்லாரும் சமம் என்ற நிலையை எப்போதுமே ஏற்படுத்த முடியாது . ஆனால் வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களை உணவுக்கும் உடைக்கும் இருப்பிடத்துக்கும் போராடும் மக்களை சிறிதேனும் முன்னேற்றும் வழியைக் கண்டுபிடிக்கவேண்டும். ஒரு பக்கம் மக்கள் வாங்கும் திறன் அதிகரிக்கிறது .
பிராண்டட் ஐட்டம் தான் உடுக்கிறார்கள்..கப்பல் போன்ற காரில் பயணிக்கிறோம். சிக்னலில் பிள்ளையுடன் பிச்சையெடுப்போரையும் காண்கிறோம் . விரைந்து செல்லும் எட்டு வழி சாலையின் பக்கத்தில் கல் மண் சாலையில் சைக்கிளை மிதிக்க முடியாமல் போகும் கிராமத்தை மறந்து விட்டது ஏன்? இன்னமும் சிற்றூரில் கவனிக்கப்பட வேண்டிய சாதாரண அடிப்படை விஷயங்கள் கிடப்பில் கிடக்க இங்கே பாலங்களும் மால்களும் கிடுகிடுவென மிரளவைக்கின்றதே.
யாராவது சமமாக திட்டங்களை போடுகிறார்களா? இல்லை முன்னுரிமை நகரங்களுக்கு மட்டும் குடுக்கப்படுகிறதா?
எனக்குத்தான் சரியாகத் தெரியவில்லையா ?
எல்லாவேளையும் உணவு ...உடுத்த நல்ல உடை ..சுகாதாரமான இருப்பிடம் எல்லாருக்கும் கிடைக்க வழி.செய்யணும் ..இவை கிடைத்ததும் அடுத்தது கல்வி , எழுதப்படிக்க மட்டும் தெரிந்தாலும் போதும்...அப்புறம் தொழிற்கல்வி முக்கியமாக.
கனவு காண்போம். கலாம் சொன்னது போல்.வறுமை ஒழிய.
அடுத்து என் கேள்விகள்.
1. பெண்ணாப் பொறந்துட்டோமேன்னு நினைச்சதுண்டா ? இல்லைன்னா ஏன்? ஆமாம் ன்னா ஏன்? எந்தந்த சமயத்தில் அப்படி தோன்றியதுன்னு சொல்லுங்க.
2.ஒரு நாள் ப்ரைம் மினிஸ்டர் ஆனா என்ன எல்லாம் திட்டம் கொண்டுவருவீங்க?
3.சமூக முன்னேற்றத்திற்கு நீங்க என்ன எல்லாம் முயற்சி செய்யறீங்க? மத்தவங்க என்ன எல்லாம் செய்யணும் ? எதாச்சும் ஐடியா?
4.சமையல் கத்துக்கிட்ட அனுபவம் சொல்லுங்க[.நல்ல சிரிப்பான கதை அது]
5.நீங்கள் கல்லூரியில் எடுத்த பாடத்தைப் பற்றியும் அதை ஏன் எடுத்தீர்கள் அதன் அனுபவங்கள் பற்றி....
பாவம் கை கொஞ்சம் பிரச்சனை ஆகி இருக்கும் மங்கையை தொந்திரவு செய்யறனேன்னு தோன்றினாலும் மகளிர் தினமா இருக்கறதால மங்கை கிட்ட சுடரக் கொடுக்கிறேன். இண்டிபிளாக்ஸ் வரை போன அவங்க பதிவு படிக்கிறவங்கள சிந்திக்க தூண்டும் வண்ணம் இருக்கு. மங்கை தொடருங்க ........
26 comments:
//5. இப்போ இந்தியாவின் முக்கியமான பிரச்சினை என்ன? அதை எப்படிக் களையலாம்?
காந்தியைப் பற்றி பலருக்கு பல கருத்து இருந்தாலும் அவர் சொன்ன ஒரு வார்த்தை உண்மை . வறுமை என்பது மிகப் பெரிய வன்முறை. எல்லாரும் சமம் என்ற நிலையை எப்போதுமே ஏற்படுத்த முடியாது . ஆனால் வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களை உணவுக்கும் உடைக்கும் இருப்பிடத்துக்கும் போராடும் மக்களை சிறிதேனும் முன்னேற்றும் வழியைக் கண்டுபிடிக்கவேண்டும். //
கலக்கிட்டீங்க...
நிச்சயமா புதுசா பதிவு எழுதுறவங்களுக்கு இவங்களை மாதிரி எழுதுங்கன்னு என்னால ஒரு நாலு பேர காட்ட முடிஞ்சா அதுல நிச்சயம் உங்க பேரும் இருக்கும்.
இன்னொருத்தர் அபி அப்பா :))
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
சென்ஷி
சென்ஷி சொல்வது போல், அந்தக் கடைசி கேள்விக்கான பதில் சூப்பர்... நல்லா சொல்லி இருக்கீங்க.. மங்கைக்குத் தான் கொடுப்பீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்.. மகளிர் தினச் சுடர்கள் எல்லாமே சிறப்பா நகருது :)
//மங்கைக்குத் தான் கொடுப்பீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்.. மகளிர் தினச் சுடர்கள் எல்லாமே சிறப்பா நகருது :) //
எக்கோவ் இந்த பக்கம் ஆம்பளைங்க சுடர காணோமுன்னு தேடப்போறாங்க..
:)))
சென்ஷி
//நான் எழுத வந்து கொஞ்ச நாளே ஆனதாலே இந்த சுடர் விளையாட்டை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். நமக்கெல்லாம் யார் குடுக்கப்போறான்னு தோன்றினாலும் உள்ளூர ஒரு ஆசை யாராச்சும் குடுக்கமாட்டாங்களான்னு ஒரு பக்கமா //
ஹிஹி!! நமக்கும் ஒரு நப்பாசை இருக்கு.பாப்போம்.
அதுபோல யார் கைக்கு சுடர் வந்தா யார் கைக்கு அவங்க குடுப்பாங்கன்னு நான் ஒரு காமடி பதிவு நினைத்து வச்சிருந்தேன்..அதுல நினைச்ச மாதிரியே நீங்க மங்கை கிட்ட குடுத்திட்டீங்க!!
உங்கள் பதிள்களும் சூப்பர்..மங்கைக்கு கேட்ட கேள்வியும் சூப்பர்>>
23 ஆண்பதிவர்களுக்கு இடையில் ஒரே ஒரு பெண்பதிவர் தான் எழுதி இருக்கிறார்கள். நாலே நாலு பேர் பெண்கள் தொடர்வது பொறுக்காதா ஆண்களுக்கு. அப்போது நாங்கள் பெண்கள் ஆண்கள் என்றூ பிரித்து யோசிக்கவே இல்லையே. மகளிர் தின வாரம் என்பதால் எடுத்துக்கொண்ட சுதந்திரம் ..சின்னதாக..ஏன் அதற்குள் பயப்படுகிறீர்கள் ..ஆண்கள் தான் நிறைய இருக்கீங்க பதிவுலகில்.
பொன்ஸ் நன்றி , சென்ஷி ரொம்ப புகழறீங்க நீங்க.அபி அப்பா கண்டிப்பா நீங்க சுடர் எழுதனும்.நடக்கும்.
//முத்துலெட்சுமி said...
23 ஆண்பதிவர்களுக்கு இடையில் ஒரே ஒரு பெண்பதிவர் தான் எழுதி இருக்கிறார்கள். நாலே நாலு பேர் பெண்கள் தொடர்வது பொறுக்காதா ஆண்களுக்கு. அப்போது நாங்கள் பெண்கள் ஆண்கள் என்றூ பிரித்து யோசிக்கவே இல்லையே. மகளிர் தின வாரம் என்பதால் எடுத்துக்கொண்ட சுதந்திரம் ..சின்னதாக..ஏன் அதற்குள் பயப்படுகிறீர்கள் ..ஆண்கள் தான் நிறைய இருக்கீங்க பதிவுலகில்.//
இதனால் அறியப்படுவது என்னவெனில் ஆண் பதிவர்கள் இந்த வாரத்தை மகளிர் தின வாரமாக கொண்டாடுங்கள்..
இது சும்மா ஜாலிக்காக கேட்டதுங்க..
தப்பிருந்தா மாப்பு கேட்டுக்கறேன்..:((
சென்ஷி
சென்ஷி சிரிப்பானைப் போட மறந்துவிட்டேன் .நானும் ஜாலியாகத்தான் கமெண்ட் அடித்தேன்.
:-))
முத்துலட்சுமி,
பதிவுக்கு நன்றி. சுடரை வேகமாக நகர்த்திவிட்ட சுறுசுறுப்பு மங்கை நீங்க:))
சூப்பர் மா. சூப்பர் சூப்பர் சூப்பர்ம்மா....
ஏழ்மையை ஒழிக்கச் சொன்னா நம்மாட்கள் ஏழைகளை ஒழிச்சுருவாங்க.
சம உரிமை மட்டும் போதாது. சமதர்ம சமுதாயம் வரணும்.
//முதன் முறையா ஸ்டிரைக் செய்தோம் // உங்க பதிவை படிக்கும் போது நாங்க பள்ளியில செஞ்ச தர்ணா நினைவுக்கு வந்தது. எந்த ஊருல படிச்சீங்க?
//ரிக்ஷா தாங்க அருமை .ஏறி உட்கார்ந்து அஞ்சுரூபாக்கு எவ்வளவு தூரம் போவாங்க தெரியுமா // ரிக்ஷால போறதே எனக்கு பிடிக்காது காரணம் பள்ளி பருவத்தில் ரிக்ஷால போனா ஓட்டுபவர் கால்களில் புடைத்து தெரியும் நரம்புகளையே பார்த்துக்கிட்டு இருப்பேன். பாவமாக இருக்கும். மனசே பாரமாயிடும். கேட்கும் காசைவிட அதிகமா கொடுத்துட்டு இறங்குவேன்.
கடைசிக் கேள்விக்கு கலக்கலான பதில். உங்கள் எழுத்து பணி தொடரட்டும்.
நன்றி துளசி . ஆமா பிச்சைக்காரர்கள் இருக்கக்கூடாதுன்னா பிச்சைக்காரர்களை துரத்திவிடுறது இல்லன்னு புரியவே புரியாது சிலருக்கு . எங்க ஊரில் பிச்சைகேட்டு வரவங்க கிட்ட ரோட்டு பக்கம் புல் வெட்டறது மண் நிரப்பற்துன்னு எதாச்சும் வேலை வாங்கிட்டு அம்மா நிறைய காசு குடுப்பாங்க.
நன்றி ஜெஸிலா.
நான் படித்தது மாயவரம்.
இங்கே தில்லியில் ரிக்ஷா லைட் வெய்ட்ங்க..இந்த வேலையை நம்பி பிகார்லேந்து வந்து மக்கள் பொழைக்கறாங்க. நான் வேற ரொம்ப ஒல்லிங்க ...கும்பலா நாலஞ்சு பேர் போனா எனக்கு கூட பிடிக்காதுங்க.
சைக்கிள்ள தோழியை வச்சு கூட்டுப்போறமாதிரி தான். கூட ரெண்டு பேர் வந்தா அதுலயே உட்கார அவர் சொன்னாக்கூட இல்ல இன்னோரு எடுத்துக்கலாம்ன்னு சொல்லிருவேன். மத்தபடி உங்க கருத்து நல்லது தான்.
ஆஹா..லட்சுமி...
நீங்களாவது வேடிக்கை பார்க்க கூட்டத்தில இருந்தீங்க..நான் சிவனேனு வீட்ல இருக்கேன்..என்ன இழுத்து விட்டுட்டீங்களே?..
என்ன பரந்த மனசு உங்களுக்கு?... இதுக்கு தான் காலைல கை நல்லா இருக்கானு கேட்டீங்களா?
அதுவும் நான் பிரதம மந்திரி ஆகனுமா?
எத்தன நாளா காத்துட்டு இருக்கீங்க இப்படி மாட்டி விட...
அதென்ன இத்தன பேர் என்கிட்ட தான் குடுப்பீங்கனு வேற நினச்சு இருக்காங்க...
உங்க பதில் எல்லாம் அருமை
கலக்கலாப் பதிஞ்சு இருக்கீங்க முத்துலட்சுமி.
நல்ல சிந்தனை. தெளிவான நடை. எங்கே இருந்தீங்க இத்தனை நாளா?
மங்கையர் தின நல் வாழ்த்துகள் உங்களுக்கும் மங்கைக்கும் சேர்த்துத்தான்.
இப்பதான் முதன் முறையாக இங்கே வருகிறேன்.அருமையான சிந்தனைகள்.அதை நல்லாவும் எழுதியிருக்கீங்க முத்துலட்சுமி.
//நான் எழுத வந்து கொஞ்ச நாளே ஆனதாலே இந்த சுடர் விளையாட்டை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். நமக்கெல்லாம் யார் குடுக்கப்போறான்னு தோன்றினாலும் உள்ளூர ஒரு ஆசை யாராச்சும் குடுக்கமாட்டாங்களான்னு ஒரு பக்கமா . //
முத்துலெட்சுமி,
ஆசையா இருந்தாலும் அது உங்க கைக்கு வந்தவுடனே கொஞ்சம் பயமா இருந்துச்சா இல்லையா??? நான் அதை எழுதுறோப்போ கொஞ்சம் கஷ்டமாதான் இருத்துச்சு.... :)
நீங்க நல்லா எழுதியிருக்கீங்க... எல்லாரும் சொன்னமாதிரி 5வது பதில் அருமை :)
//மத்தபடி செங்கோட்டைக்கு பக்கத்துல இருக்கற சந்து பொந்துக்கெல்லாம் போனா மதுர மேல மாசி வீதிக்குள்ள இருக்கமான்னு சந்தேகம் வரும் இடங்களும் இருக்கு//
அடடா நம்மூர்காரவங்களா நீங்க..??
நான் நினைத்ததை விட வேகமாக சுடரை நகர்த்தி விட்டீர்கள்!
அவசர அவசரமாக எழுதினாலும், பதில்களில் ஒரு நிதானம் தெரிகிறது.
யானைன்னு சொன்னதும், பொன்ஸுக்கு கொடுப்பீங்களோன்னு ஒரு எண்ணம் வந்தது.
ஆனால், அடுத்த வரியிலேயே மாலைன்னு வந்ததும், சரி, 'மாலையிட்ட மங்கைக்கு' தான் இதுன்னு முடிவு பண்ணினேன்.
அதே போலவே செஞ்சுட்டீங்க!
அப்புறம், இந்த சென்ஷி சொல்றாருன்னு பார்க்காதீங்க!
கொஞ்ச நாள் அங்கேயே சுத்தட்டும்.
எனக்குத் தெரிஞ்சு ரொம்ப ஆம்பளைங்க "விட்டுது சுடர்"னு நிம்மதியா இருக்காங்களாம் இப்ப!
:))
மகளிர் தினம், மாதா தினம், மனைவியர் தினம், மாணவி தினம்னு எதுனாச்சும் சொல்லிகிட்டு நீங்களே வெச்சுக்கங்க!
:))
நல்லாச் சொல்லி இருக்கீங்க. முதல் கேள்விக்குப் பதில் சொல்லி டயர்டா ஆயிருச்சு போல. மத்த பதிலெல்லாம் சின்னதாப் போச்சு!
நம்ம டெல்லி அனுபவங்கள் எல்லாம் கொஞ்சம் மோசமுங்க. அதுனால அங்க வரவே பிடிக்காம போயிருச்சு! :(
//நாலே நாலு பேர் பெண்கள் தொடர்வது பொறுக்காதா ஆண்களுக்கு.//
ஆரம்பிச்சுடீங்களா?
பதில்கள் அனைத்தும் சூப்பர்...
1. ம்ம்ம்...பெரிய ஆளு தான் நீங்க...பள்ளிக்கூடத்துல கொடி எல்லாம் புடுச்சி கலக்கியிருக்கிங்க.
3. \\கலாம் வேற ஆசையா கூப்பிட்டு இருக்காரே. அனானி யா வந்து கூப்பிட்டாலும் ஒரு மரியாதை இருக்குல்ல. \\
கலாம் எல்லாம் கூப்பிட்டாரா!!!! நமக்கு டில்லி எல்லாம் வரைப்படத்துல பார்த்ததோட சரி...பதில் எல்லாம் கலக்கல்.
4.எப்படி எல்லாம் போராடி இருக்காங்க...அருமையான கேள்வி...அருமையான பதில்.
5. சூப்பரான பதில்....கனவில் மட்டும் தான் காண்போமா??காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...
\\செல்வநாயகி said...
முத்துலட்சுமி,
பதிவுக்கு நன்றி. சுடரை வேகமாக நகர்த்திவிட்ட சுறுசுறுப்பு மங்கை நீங்க:)) //
நன்றி செல்வா சுடரில்லையா அது சூடா இருக்குமே சீக்கிரமா தள்ளிட்டேன்.
\\##மங்கை
அதென்ன இத்தன பேர் என்கிட்ட தான் குடுப்பீங்கனு வேற நினச்சு இருக்காங்க...//
அதானே மங்கை எப்படி நம்மள பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சது அவ்வளவு பிரபலமாகிட்டமா? :-)
\\வல்லிசிம்ஹன் said...
கலக்கலாப் பதிஞ்சு இருக்கீங்க முத்துலட்சுமி.
நல்ல சிந்தனை. தெளிவான நடை. எங்கே இருந்தீங்க இத்தனை நாளா?
மங்கையர் தின நல் வாழ்த்துகள் உங்களுக்கும் மங்கைக்கும் சேர்த்துத்தான். //
நன்றி வல்லி . அங்க இங்க சுத்தி இப்பத்தானே வந்தேன். வாழ்த்துக்கள் உங்களுக்கும்.
\\icarus prakash said...
இப்பதான் முதன் முறையாக இங்கே வருகிறேன்.அருமையான சிந்தனைகள்.அதை நல்லாவும் எழுதியிருக்கீங்க முத்துலட்சுமி. //
வாங்க வாங்க ப்ரகாஷ் முன்பே ஒருநாள் உங்களுக்கு நன்றி சொல்ல நினைத்திருந்தேன். முடியவில்லை. இப்போது சொல்லிக்கொள்கிறேன்
தொடந்து வருகை தாருங்கள்.
## நன்றி ராம்.
ஆமாங்க பிறந்தது மதுரை.
சுடர் பதிலளிப்பது சரி கேட்பதும் சரி எனக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. பாருங்கள் வராதவங்கல்லாம் வந்து படிப்பீங்களே .அதான்.
###நன்றி எஸ்கே . அதுஎப்படிங்க இப்படி எல்லாம் நினைக்கறீங்க யாருக்கு குடுப்பேன்னு எல்லாம்.
###நன்றி கொத்தனார்ஜி..ரெண்டாவது கேள்வி சிறு குறிப்பு வரைக. சின்னதாத்தானே இருக்கணும்.டெல்லிபத்தி பாருங்க ஒவ்வொருத்தருக்கு ஒரு விதமான அனுபவமா இருக்கும் அதான் சின்னதா சொல்லிட்டேன். மத்ததுல தெரிஞ்சது அவ்வ்ளவு தான்.
###சீனு நாங்க எங்கங்க ஆரம்பிச்சோம் ? சும்மாத்தானெ இத்தனை நாள் இருந்தோம் வேடிக்கை பார்த்துட்டு ?
### நன்றி கோபி, கனவு கண்டு நனவாக்குவோம்ப்பா. முடியும்ன்னு நினச்சி கனவு காணுவோம் சரியா.
பெரிய பந்தமா கொளுத்தீட்டு அதைப்போய் சுடர்ன்னு சொல்றீங்க...அநியாயமால்ல...ஹி..ஹி
நெறய வேலை தாயே...அதான் இங்கிட்டு வரமுடியல, கோவிக்காதீக...
நன்றி பங்காளி ...வேலைகளுக்கு நடுவில் வந்து மறுமொழி சொன்னதற்கு.
சுடர் என்பதால் வராதவங்க எல்லாம் வந்திருக்காங்க..ஆனா எப்பவும் வர ரெண்டுமூணு பேரக்காணமேன்னு பாத்தேன். கோவிக்கல்லாம் இல்லீங்க..
சும்மாநாச்சுக்கும் ...
Post a Comment