April 2, 2007

சித்திரக்கதைகள்

இங்கு பதிவர்களில் பலரும் சிறுவயதில் இருந்தே படிக்கும்
பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
முத்து காமிக்ஸ் லயன் காமிக்ஸ், எங்க அப்பாவே வாங்கி படிப்பார்கள் . என்னுடைய டிராயிங்க் டீச்சர் முதன் முதலில் பூந்தளிர் பற்றி என் அம்மாவிடம் சொல்லி வாங்கித் தரச் சொன்னார்கள்.

எப்போது அடுத்த புத்தகம் வருமோ அன்றைக்கு காலையில் கடை திறந்ததும் முதல் ஆளாக அண்ணன் கடைவாசலில் நிற்போம் நானும் தம்பியும். தம்பிக்கு படிக்கத்
தெரியும் முன்பு நான் வாசிக்க அவன் கேட்பான். அவனுக்கு படிக்கத் தெரிந்ததும் யார் முதலில் என்று ஒரே சண்டை தான்.

புத்தகத்தைச் சேர்த்து வைப்பது பைண்ட் செய்து வைப்பது என்றிருப்போம். பக்கத்து வீட்டு குழந்தைகள் வாங்கி சென்று திருப்பாமல் இருந்தால் சண்டை தான். புத்தகம் மடிக்காமல் கிழியாமல் வரவேண்டும். ஒரு முறை அட்டை கிழித்து விட்டதற்காக புத்தகம் கொடுக்காமல் இழுத்தடிப்பதும் உண்டு.

பல ஆங்கில நாவல்களைப் பற்றி அறிமுகப்படுத்தியது பைகோ கிளாசிக்ஸ். டாம் சாயர் ,இரு நகரங்களின் கதை , ஐவன்கோ , கிரேட் எக்ஸ்பெக்டேஷன்ஸ் இப்படி எத்தனையோ. இப்படி பல மேதைகளின் நவீனங்களை சித்திரக்கதையாக படித்ததால் சுலபமாக நினைவில் இருக்கிறது .

பஹுபாலி , திப்பு சுல்தான் , ஜீவகன் ,பாரதி , ராணி அப்பக்கா , ரத்னாவளி என்று எல்லா விதமானவர்களைப் பற்றியும் அறிந்து கொள்ள உதவியாக இருந்தது அமர் சித்திரக்கதை.

பூந்தளிரில் வரும் சுப்பாண்டி கதை கபீஷ் கதை , முல்லா கதை
எல்லாம் இப்போவும் நினைவிருக்கிறது . இவற்றை இப்போது
என் குழந்தைகளுக்கு சொல்லி அவர்களும் அதை அனுபவிக்க வேண்டுமென்றால் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற
ஆசையை உண்டாக்கி வைத்திருக்கிறேன்.

இப்போதும் அம்மா வீட்டுக்கு போனால் பழய பீரோவை திறந்து அந்த பொக்கிஷங்களைப் படிப்பது உண்டு. இந்த பழக்க தோஷத்தால் வெளியூர் சென்றாலும் பரிசு என்றாலும் புத்தகங்களை குழந்தைகளுக்கு என்று வாங்குவது வழக்கமாகிவிட்டது. எட்டு வயதுக்குள்ளாகவே ஒரு சின்ன
லைப்ரரி சேர்ந்து விட்டது மகளிடம்.

மற்ற ஹிந்தி குழந்தைகளின் பிறந்த நாட்களுக்கும் பகத்சிங் ,
சுவாமி அண்ட் ப்ரெண்ட்ஸ் என்றே பரிசளிப்பது என் வழக்கம்.
சில சமயம் குழந்தைகளுக்கு ஏமாற்றமாக இருக்குமோ என்று
தோன்றினாலும் விளையாட்டு சாமன்களை வாங்கித் தர இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று சமாதானப் படுத்திக் கொள்வேன்.

இதற்கு முன் காமிக்ஸ் பற்றி பால பாரதி ஒரு பதிவு , லக்கி லுக் ஒரு பதிவு , எழுதி இருப்பதை கூகுள் மூலம் அறிந்து கொண்டேன். .

இப்போது champak , ரீடஸ் சாய்ஸ் இதிலெல்லாம் சின்னச் சின்ன புத்தகங்கள் ஆங்கிலத்தில் வருகிறதை பெண் படிப்பதுண்டு.
வேட்டைக்கார வேம்பு இதில் சிகாரி சாம்பு . இப்புத்தகங்கள் சின்னச் சின்ன கதைகளில் பெரிய விஷய ஞானங்களைக் குழந்தைகளுக்கு தரும் , ஒரு உதாரணம் பாருங்களேன். ஒரு செவ்விந்தியத் தலைவன் தான் தான் பெரியவன் என்று கர்வமாயிருப்பான். மக்களை அடக்கி ஆள்பவன் என்னைப்போல
யாருமில்லை என்று இருப்பான். ஒரு பாட்டி வந்து என் வீட்டில் ஒரு தலைவன் இருக்கிறான் என்று தன் குடிசைக்கு அழைப்பாள்.

தலைவனும் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்து சிறந்த ஆடை அணிந்து மிகப் பெரிய கழுகு இறகுகளை வைத்து
அலங்காரம் செய்து வளையல் கழுத்தணி எல்லாம் போட்டு பாட்டியை ப் பார்க்கச் செல்வான். அங்கே போனால் பாட்டி சிறு குழந்தையைக் காட்டி இவன் தான் அந்த தலைவன் என்பாள்.

தலைவன் கத்துவான் என்னை முட்டாளாக்கினாயா ? என்று. அப்போது குழந்தை பயந்து அழத் தொடங்கும். அதை சமாதானப்
படுத்த தலைவரும் தன் அணிகலன்கள் கழுகு இறகு எல்லாவற்றையும் கொடுத்து ஜிங் ல்லுங் என்றெல்லாம் மண்டியிட்டு பாடி சிரிக்க வைப்பான். பாட்டி சொல்வாள் . பார் பெரிய தலைவனான நீயே இக் குழந்தை முன் கெஞ்சினாயே !
தலை கவிழ்ந்து இனி நான் கர்வப்படமாட்டேன் என்று தலைவன் கூறுவான்.

20 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இன்று என்ன நாள் என்று தெரியாமலே இந்த பதிவை எழுதினேன்.இப்போது தான் விழியன் பக்கத்தைப் பார்த்து அறிந்தேன்.
சர்வதேச குழந்தைகள் புத்தக தினம் - ஏப்ரல் 2
http://vizhiyan.wordpress.com/2007/04/02/international-children-books-day/#comment-782

பங்காளி... said...

காமிக்ஸ் புத்தகங்களுக்கு வீட்டில் தடா.....அதனால் பொக்கிஷம் போல அம்மாவுக்கு தெரியாமல் சேர்த்து வைத்திருந்தேன்....அவ்ளோவ் புத்தகங்கள்....இப்போது வீட்டில் எங்காவது கிடக்கலாம்...அடுத்த முறை போகும்போது தேடிப்பார்க்க வேண்டும்....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி விழியன்.காமிக்ஸ் தவிரவும் மந்திரக் குதிரை , வாளையின் சட்டம் எந்தன் இஷ்டம் இப்படி
ருஷ்ய நாடோடிக்கதைப் புத்தகங்கள்
கூட எங்கள் வீட்டு கலெக்ஷனில் உண்டு.நீங்க உங்க பதிவுல எழுதி இருப்பது போல படிப்பது என்ற பழக்கம் குழந்தைகளுக்கு கண்டிப்பாக வரவேண்டும் என்பதால் இப்படி வாங்கித் தர தயங்காத பெற்றோர் இருந்தனர்.நானும் அவ்வழியே .

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பங்காளி இப்ப ஸென் படிக்கிற நீங்க தேடிப்பார்த்து அப்படியே கொஞ்சம் காமிக்ஸ் ம் படிங்க.
சிறு வயசு நியாபகம் வரும் . :-)

அமிர்தா said...

நல்ல பதிவு. குழந்தைகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறவர்கள் கவனமாய் வாசிப்பு பழக்கத்தை உருவாக்கிடல் வேண்டும்.

9 வயதில் சிந்துபாத்தின் வீரத்தில் தொடங்கியது தான் என் வாசிப்பும்.

கூமுட்டை said...

அமர்சித்திரா கதைகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள. பல விதமான சித்திரக் கதைகள் உள்ளன. வெளிநாடுகளுக்கு அனுப்பும் வசதி உள்ளது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\குழந்தைகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறவர்கள் கவனமாய் வாசிப்பு பழக்கத்தை உருவாக்கிடல் வேண்டும்.//
உண்மைதான் மகா, மறுமொழிக்கு நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்னபேர் இது கூமுட்டையா..
சரிதான் ரொம்ப தன்னடக்கம் போல
ஏங்க பதிவுல யே எழுதி இருக்கனே \\பஹுபாலி , திப்பு சுல்தான் , ஜீவகன் ,பாரதி , ராணி அப்பக்கா , ரத்னாவளி என்று எல்லா விதமானவர்களைப் பற்றியும் அறிந்து கொள்ள உதவியாக இருந்தது அமர் சித்திரக்கதை.//

அந்த லிங்க் முன்பு ஒருமுறை பார்த்து இருக்கிரேன் நினைவு படுத்தியதுக்கு நன்றி.இப்போ ஆங்கிலத்தில் மகள் வாங்குகிறாள் கலர்படத்தோடு. அப்ப நமக்கு கலரில்லாத படம் தானே.

அமிழ்து - Sathis M R said...

//வேட்டைக்கார வேம்பு //
வேட்டைக்கார வேம்பு எனது இஷ்டம்! நாங்கள் இருந்தது கிராமும் இல்லாத நகரமும் இல்லாத ஒரு ஊர். எனவே புத்தகஙள் எல்லம் மாலை நேரத்தில் வரும். பள்ளி முடிந்து வீடு வந்ததும் எனக்கும் என் தங்கைக்கும் யார் முதலில் புத்தகத்தை எடுப்பது என்று பெரிய போட்டியே நடக்கும்.

சிறிது காலத்தில் பூந்தளிரிலிருந்து "பார்வதி சித்திரக் கதைகள்" என்ற பெயரில் ஒரு மாத இதழ் கொண்டு வந்தார்கள்... அது முழு நீள சித்திரக்கதைப் புத்தகம். ராணி, முத்துக் காமிக்ஸ் போலல்லாமல் இது வித்யாசமாகயிருக்கும். ஆனால் இது சிறிது காலங்களில் நிறுத்தப்பட்டது.

உண்மைத்தமிழன் said...

என் சிறு வயதில் படிக்கத் துவங்கியபோது கிடைத்தது அம்புலிமாமாவும், ரத்னபாலாவும்தான். அம்புலிமாமாவில் விக்கிரமாதித்தன் கதையும், மகாபாரத சித்திரக் கதையும் இருக்கும். ரத்னபாலாவில் புத்திசாலி குரு, முட்டாள் சீடர்கள் என்ற சித்திரக் கதை டாப். இதைத் தாண்டி படிக்கத் துவங்கியபோது கையில் கிடைத்தது இரும்புக்கை மாயாவிதான்.. இது மாதம் ஒரு முறை வரும். இதை வாங்க தினமும் ரெண்டு பைசா, அஞ்சு பைசா என்று காசு சேர்த்தது இப்போது இதைப் படித்தவுடன் நினைவுக்கு வந்தது.. நன்றி முத்துலட்சுமி.. நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.. இப்போது காமிக்ஸ் புத்தகங்களின் வரிசைகளைப் பார்த்தவுடன் பொறாமையாக இருக்கிறது.. ம்.. இப்போது பிறந்து தொலைந்திருக்கலாம்..

பொன்ஸ்~~Poorna said...

நான்கூட காமிக்ஸ் ரசிகை.. சிகாரி சம்பு, காலியா காக்கை எல்லாம் எனக்கும் பிடிக்கும். சான்ஸ் கிடைக்கும் போது டிங்கிள், அமர்சித்ரா கதா, மாடஸ்டி பிளேஸி எல்லாமும் வாங்கிப் படிப்பதுண்டு, இப்ப கூட...

பாரதி தம்பி said...

//நான்கூட காமிக்ஸ் ரசிகை.. சிகாரி சம்பு, காலியா காக்கை எல்லாம் எனக்கும் பிடிக்கும். சான்ஸ் கிடைக்கும் போது டிங்கிள், அமர்சித்ரா கதா, மாடஸ்டி பிளேஸி எல்லாமும் வாங்கிப் படிப்பதுண்டு, இப்ப கூட...//

சொன்னால் நம்பூவீர்களா..? நான் இதுவரைக்கும் ஒரு காமிக்ஸ் புத்தகம் கூட படித்ததில்லை..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அமிழ்து , உண்மைத்தமிழன், பொன்ஸ்
நீங்க எல்லாரும் அப்படியே சின்ன வயசுக்கு போனீங்களா? அது ஒரு அழகிய நிலாக்காலம் அப்படின்னு பாடலாம்.

உண்மைத்தமிழன் அப்ப பிறந்ததால
அதுவாவது படிச்சுட்டு இருந்தோம்.
இப்ப பிள்ளைங்க நிற்க நேரமில்லாம
ஓடறாங்க போட்டி உலகத்துல அது கத்துக்க இது கத்துக்கன்னு ... நம்ம இடம் தேடி உட்கார்ந்து நிதானமா படிச்சோமே.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சொன்னால் நம்புவதற்கு என்ன? நம்பிவிட்டு போகிறேன்.
ஆழியூரான்,சிறுவயதில் அதற்கு பதில்
நீங்கள் வேறு எதும் புத்தகம் படித்திருப்பீர்கள் .
சந்தோஷமாக இருக்க எதோ ஒரு வழி.
எங்களுக்கு சித்திரக்கதைகள்.

Anonymous said...

முந்தா நேத்து கொரியர்ல "லயன் ட்ரீம்ஸ் ஸ்பெஷலுக்கு" அமவுண்டு அனுப்பிய பிறகு படிக்கும் காமிக்ஸ் பற்றிய பதிவு :))) 28 வயசுலயும் காமிக்ஸ் ஆர்டர் செய்து படிக்க ;கொஞ்சம் தில்லு வேனும் தானே... :))) எனக்கு பிடிச்சதெல்லாம் லயன் / முத்து காமிக்ஸ் தான்...எப்போவாது ராணி காமிக்ஸ்...அம்புலிமாமா சூப்பரா இருக்கும்...ஹரீஷ் என்று ஒரு சித்திரக்கதை தொடர் வருமே ( வாண்டு மாமாவின் சித்திரங்கள் அவ்வளவு அருமையாக இருக்கும் ) படிச்சிருக்கீங்களா ?

அந்த காலத்தில் கையில காசு இல்லாமல் வாங்காமல் விட்டுவிட்ட புத்தகங்களை இப்போது வரவழைத்து படித்துக்கொண்டிருக்கேன்...:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\28 வயசுலயும் காமிக்ஸ் ஆர்டர் செய்து படிக்க ;கொஞ்சம் தில்லு வேனும் தானே... :))) //

இதெல்லாம் ஒரு வயசா , படிங்க படிங்க. எத்தன வயசானா என்ன உள்ளுக்குள்ள எல்லாருக்கும் ஒரு
குழந்தைத்தனம் இருக்கும். அது வே
ஆள இளமையா வச்சுருக்கும்.

காட்டாறு said...

பழைய நினைவுகள கண்ணு முன்னால கொண்டாந்து நிறுத்திட்டீங்க. காமிக்ஸ் புத்தகத்த பாட புக்ல ஒளித்து படித்து, எங்க வீட்டு எட்டப்பன் (என் தம்பி தான்) காட்டிக் குடுத்து அடி வாங்குனது ஞாபகம் வந்தது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காட்டாறு பழைய நினைவுகளை கிளப்பிவிடறது தானே என்னோட பொழுதுபோக்கே.

Anonymous said...

Hi Muthulakshmi,
It was so wonderful to recall the names of all the books I have at home! :-)
I had a passion to collect the same book in English and Tamil (e.g. Vaalaiyin Sattam, Yendhan Ishtam and its English verse (forgot the name), Velli Kulambu and few other Russian Tamilized children's books) Poondhalir was the first book series I read and Kabheesh is my favourite section too. Pookutti was also a famous series. I still get lost if start reading those back at home.. We had a nice collection of books during our age!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சௌம்யா , அதெல்லாம் எவ்வளவு அருமையான புத்தகம் பஸ்ஸ்டாண்ட் எதிரில் , பள்ளியில் சில சமயம் வேன்களில் போடப்படும் புத்தகக்கடையில் இருந்து அள்ளிக்கொண்டு வருவோம். அடுப்பு ஒன்றின் மேல் தூங்கு யோஷ்வா தெரியுமா ஜார் மன்னன் அரண்மனைக்கு அடுப்பு அதுவே போகுமே.கோதுமை வயலை சாப்பிட வரும் குதிரை மீதேறி உப்பரிக்கை மீது இருக்கும் இளவரசி மோதிரத்தை எடுப்பானே.,..ம்...