அதோ அந்த வீடு தான் கோயிலுக்கு இந்தப்பக்கம் பச்சை நிறத்தில் பெரிய கதவு இருக்கே. இறங்கிக்கலாம் . பக்கத்தில் தான் போகவேண்டிய இடம் ஆனா இங்கயே இறங்கி கொஞ்சம் நடந்து போகலாம்ன்னு தோணுது . பத்து வருஷம் முன்னால இந்த வீடு கிடையாது . இங்க ஒரு ஓட்டு வீடு தானே இருந்தது. அதுல மூணு குடித்தனம் இருந்தது . கோயில ஒட்டி சின்ன வாசல் . யாரும் குனிஞ்சு தான் போகணும் .
ஒரே ஒரு முறை உள்ள போயிருக்கேன். உள்ளே போகும்போது யாரும் தென்படவில்லை. அறை ஒன்றும் பெரியதில்லை . அறை என்று இருப்பது அது ஒன்றுதான் தாழ்வாரத்தில் தட்டியிட்டு பிரித்த இடமே சமையலறை . மொத்தம் இருக்கின்ற மூன்று அறைகளில் ஒவ்வொரு குடித்தனத்திற்கும் ஒரு அறை போலும் தாழ்வாரம் தான் மற்ற உபயோகத்திற்கு . ஆனால் எல்லாம் சுத்தமாக இருந்தது. வருவேன்
என்றே ஒதுங்க வைக்கப்படிருக்குமோ தெரியவில்லை.
என்ன பேச என்று தெரியவில்லை ஏதோ உன் இருப்பிடம் எப்படி இருக்கும் என்று பார்க்க ஆசை என்று மட்டும் சொன்னேன் . ஒரு மர அலமாரி , மேஜை . ஓரமாய் தையல் இயந்திரம் , ஆமாம் அம்மா தைத்துத் தருவதாகக் கூட யாரோ சொன்னார்கள் .அக்கா அம்மா அப்பா என எல்லோரும் எங்கே அமர்ந்து அரட்டை அடிப்பீர்கள் ? நீ எங்கே அமர்ந்து படிப்பாய் ? எங்கே தூங்குவாய் என்று கேட்க நினைத்துக் கேட்கவே இல்லை.
வா என்று வரவேற்று உட்காரச் சொல்லி கொண்டு போன கவிதை நோட்டை வாங்கி சில திருப்பல்கள். காண்பிக்கக் கொண்டு போன ஆல்பத்தில் இருந்து ஒரு புகைப்படத்தை அனுமதி இன்றி எடுத்துக் கொண்ட போது மறுக்க மனமில்லை.
ப்ராஜக்ட் வேலையாக செல்ல வேண்டி இருந்ததால் அதிக நேரம் இருக்க முடியாமல் போனது . முன்பாக வைக்கப்பட்ட இனிப்பு பிடித்த ஒன்று தான் ஆனால் உதடுகள் பிடிக்காது என்றே முனகின. ஏன் என்று புரியவில்லை . காபி நம் இருவருக்குமே போடத்தெரியாது .
வெளியே வந்தபோது ஒரு பெண் முற்றத்தை ஒட்டிய தாழ்வாரத்தில் கூட்டிக்கொண்டிருந்தார்கள் . என் காலணியைக்
காணவில்லை . இது போன்ற குடித்தனத்தில் எங்கு விடுவதென்று எனக்கும் தெரியவில்லை. வாசல் அவர்களுக்கு சொந்தமான இடம் போல அப்பெண் எடுத்து தன் வீட்டு காலணி போடும் டப்பாவில் போட்டிருக்கிறாள். கேட்டபின் நான் போகும் போது பார்க்கலயே என்று விசாரித்தாள்.
புரிகிறது அவளிடம் பேச வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தவே
வேறு யாருடையதோ என்று தெரிந்தும் அதை உள்ளே போட்டிருக்கிறாள் . நாங்கள் பேசிக்கொண்டது கூட கேட்டிருக்கக்கூடும் . வீட்டில் அப்போது இல்லாதவர்களை எல்லாம் குறிப்பிட்டு அவர்களையா பார்க்கவந்தீர்கள் என்ற கேள்விக்கு என்ன சொல்வது ? ஏற்கனவே விடை தெரிந்த கேள்விக்கு எதற்காக பதில் சொல்லிக்கொண்டிருப்பது . சிரித்துத் தான் வைப்பது இது போன்ற சமயங்களில். இருந்தும் வந்து போனது யாரென்று பின்னால் விசாரித்திருப்பாள் . நேற்று யாரோ வந்தாங்க உங்க வீட்டுக்கு கல்யாணப்பத்திரிக்கை குடுக்கவாமே என்று மறு விசாரணை அம்மாவிடம் கூட செய்திருப்பாள் . வேறு எதோ ஒரு பத்திரிக்கையை நீ காட்டி இருக்கலாம் .
வீடு இருந்த நிலை மாறி இருக்கலாம் அந்த குறுகிய சந்து அப்படியே தானிருக்கிறது . இவ்விடம் கடக்கும் போது நடக்க நினைக்கும் காரணம் , முனை திரும்பும் போது குறுகிய வாசலில் இருந்து எப்போதும் வீசப்படும் புன்னகையோடான முகம் இப்போதும் பின் தொடர்வது போன்றதொரு உணர்வை அனுபவிக்கத்தான் .
15 comments:
//காபி நம் இருவருக்குமே போடத்தெரியாது //
ஆமாம். உண்மைதான்:-)))))
கதை நல்லா இருக்கு முத்துலெட்சுமி.
கதையில் வரும் ரெண்டுபேருக்கும் காபி போடத் தெரியாது.
\\ஆமாம். உண்மைதான்:-)))))//
மூணாவது எழுதுன எனக்கும் போடத்தெரியாதுன்னு சொல்லறீங்களா ?
அப்ப பதட்டத்துல நல்லாப் போடல போல காப்பிய என்ன? :)
:-)))))
ச்சும்மா...............
கதை அருமையாய் இருக்கிறது. கவிதையாய் முயன்றிருக்கலாமோ?
கவிதையாவா ...
எழுதி இருக்கலாம். ரொம்ப நாள் ஆச்சே கதை எழுத முயற்சித்துன்னு...தான்.
நல்லாருக்குன்னு சொல்லிட்டீங்க.நன்றி லக்ஷ்மி .
ஆஹா ..சிறுகதையா?...வாழ்த்துக்கள்
அக்கா.....அருமையான கதை ;-))
ரொம்ப அழகாக எழுதியிருக்கிறிர்கள். நடையும் அருமை.
நன்றாக ரசிக்க முடிந்தது. லக்ஷ்மி அவர்கள் சொன்னது போல கவிதையிலும் முயற்ச்சித்து இருக்கலாம்.
\\மங்கை said...
ஆஹா ..சிறுகதையா?...வாழ்த்துக்கள்
//
மங்கை வாழ்த்துக்களுக்கு நன்றி.
கோபிநாத் அது என்ன நான் எழுதும் கவிதைக்கு நீங்களும் லக்ஷ்மியும்
இத்தனை சிபாரிசு. கதையின் நடை நல்லா ரசிக்கும்படி இருந்ததுன்னு சொன்னதுக்கு நன்றி.
நல்லா இருக்கு கதை...
படிச்சப்புறம் ரொம்ப அமைதியா மாறுது மனசு... ஏன்னு தெரியல
சென்ஷி
கதைக்குள்ள ரொம்ப மூழ்கிட்டீங்கன்னு
நினைக்கிறேன் சென்ஷி அதான்.
பாருங்க தெரியல புரியலன்னு
நானே ரெண்டுமூணு இடத்துல அந்த வார்த்தைகளை உபயோகிச்சிருக்கேன்.
அதான் நீங்க ஏன்னு தெரியலன்னு சொல்லிட்டீங்க. :)
கடைசி பத்தி நல்லா இருக்கு லட்சுமி...
அந்த பத்து நிமிஷ நிகழ்வை கண்ணு முன்னாடி கொண்டு வந்துட்டீங்க...
\\நிகழ்வை கண்ணு முன்னாடி கொண்டு வந்துட்டீங்க... //
இடத்தோட வர்ணிப்புகளில்
அந்த மாதிரி ஒரு இடம் கண்ணுக்குள்
வரணும் என்று எழுதினேன்.
வெற்றியா அப்பன்னா?
ஓவரான நினைப்புதான்ங்கறீங்களா?
மென்மையான, ஆனால் அழுத்தமான கதை. வாழ்த்துக்கள்.
மறுமொழிக்கு நன்றி குறைகுடம்.
Post a Comment