April 11, 2007

கொஞ்சம் பெரிய கதை

காலை நேரம் பானுவுக்கு அவசரத்தில் தான் எப்போதும் ஓடுகிறது..ஒரு நாளைக்காவது அந்த உப்புமாவைத் தவிர வேறு செய்யவோ இல்லையென்றால் அந்த உப்புமாவை உட்கார்ந்த வண்ணம் சாப்பிடவோ முடிந்தது இல்லை.
நின்று கொண்டே ஸ்பூனால் ஒரு வாய் ஓட்டமாய் போய் குழந்தைக்கு வேண்டிய அத்தனை சாமான்களையும் எடுத்து கூடையில் தயார் செய்து அடுத்த வாய் போடும் போது எழுந்துவிட்ட குழந்தைக்கு தலைக்கு ஊத்தி ஆடை மாற்றிக்கொண்டிருப்பாள்.

கணவர் காலையில் எந்திரிச்சு 5 மணி ஷிப்ட்க்கே போயாச்சு. குழந்தைக்கானவற்றில் ஒன்று குறைந்தாலும் அம்மா கத்துவாள் . பக்கத்தில் தான் 5 நிமிட நடையில் இருந்தாலும் எடுக்க வரமாட்டாள் அவளுக்கு அவள் கவுரவம் போய்விடும். அப்பாவை போகச்சொல்லுவாள் . கவனமாய் எல்லாம் எடுத்துவைத்தோமா என்ற கவலையில் சில நாள் தட்டில் மீதி இருப்பதை கவனிக்காமல் ஓடி விட்டிருக்கிறாள். மாலையில் அது அவளைப்பார்த்து இப்படி காயவிட்டாயே என்று முறைத்துக் கொண்டிருக்கும்.
.
கடைச்சாவி பானுவிடம் தானே இருக்கிறது. அவள் போவதற்கு கொஞ்சம் நேரமானால் ரெட் ரூமில் வேலையிலிருக்கும் சுனில் வந்து நிற்பான். முதலாளியிடம் சேச்சி வர நேரமானது அதான் இன்னைக்கு அந்த படம் ரெடியாகலை என்று போட்டுக்கொடுப்பான். வாங்கும் 2000 சம்பளத்துக்கு அவரிடம் கூனிக்கொண்டு நிற்கவேண்டும். முன்னாடியே போய் உட்கார்ந்திருந்தால் கடைகூட்டும் பையன் முதலாளி வீட்டில் இருந்து சில்லறைக்காசு பை கொண்டு வந்திருப்பான் எத்தனை இருந்தது என்று எண்ணிப் போட்டு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஃபிலிம் ரோலில் எத்தனை கொடாக் எத்தனை ப்யுஜி கோனிகா என்று எழுதி வைத்து புதிதாக ஷீட் எழுதணும்.

இன்றைக்கு மகாவுக்கு பிறந்தநாள் .மகா பானுவோட நாத்தனார் . சாமி முன்னாடி நின்னு அவ நல்லா இருக்கணும்ன்னு வேண்டிக்கிட்டு , செருப்ப மாட்டிக்கொண்டாள் . கடைக்கே வந்து பார்ப்பதாகவும் கொஞ்சம் பேசணும்ன்னும் சொல்லி நேற்றே போன் செய்திருந்தாள் மகா.

அம்மாவீட்டில் விடும்போது குழந்தை அழுததைக் கேட்காதது போல ஓடினாள் 7ம் நம்பரை விட்டால் நேரத்துக்கு போய்சேரமுடியாது. நல்லவேளை யாரும் வரவில்லை நாந்தான் முதலில் காலை எழுந்ததிலிருந்து இப்போது தான் நிம்மதி பெருமூச்சு வருகிறது அவளிடம். வழக்கம்போல எல்லாமே நடந்தது .

பின்னாலேயே ரீனாவும் , சாந்தியும் வந்து சேர்ந்தார்கள். புதிசா வந்த சாந்திக்கு கள்ளக்கணக்கு எப்படி எழுதணும் என்று சொல்லிக்கொடுப்பதே ரீனா வேலை . இஷ்டப்பட்ட பேரை எழுது , இத்தனை ரோல் கழுவக் கொடுத்தாங்க , இத்தனை ஆல்பம் வாங்கினாங்க , என்ன வேணா எழுது ஆனா தினத்துக்கு 3000 ரூபாய்க்கு மேல வரக்கூடாது அதான் ரூல்.

யாரும் வராத நேரம் டேபிளுக்கு அடியில் தலைய விட்டுக்கிட்டு பிரிண்ட் போட வந்த படங்களை நோட்டம் விடறது அவங்க வேலை . அக்கா இதப்பாருங்களேன் அதப்பாருங்களேன் என்று கிண்டல் நடக்கும். முதலாளி வந்தா சத்தமில்லாம இருப்பாங்க பள்ளிக்கூடப் பிள்ளைங்களப்போல.


வழக்கம் போல முதலாளி பேங்க் வேலையாக வெளியே சென்றதும் ரீனாவும் சாந்தியும் தலையை டேபிளுக்கு அடியில் கொண்டுபோய் படம் பார்க்க ஆரம்பித்தார்கள் .திடீரென்று அக்கா அக்கா இங்க பாருங்க இந்த படத்தை என்றதும் வாங்கிய பானுவுக்கு ஒன்றுமே புரியவில்லை , "இது யாருப்பா கொண்டாந்து குடுத்தா தயவுசெய்து கேட்க வர்ரவங்க கிட்ட வேலையாகலன்னு சொல்லி நாளைக்கு வாங்கிக்கச் சொல்லு என்ன?"


அக்கா சாயங்கலம் ரெடியாகிடும்ன்னு சொன்னேனே இப்ப எப்படி ...என்று இழுத்த ரீனா பானுவோடா கலவரமான முகத்தைப் பார்த்து சரி அக்கா எப்படியாச்சும் சமாளிக்கறே ன் என்று முடித்தாள்..
பானு மகா வருகிறாளா என்று இப்போது கலக்கத்துடன் காத்திருந்தாள்.
----(தொடரும்)

8 comments:

சென்ஷி said...

என்னங்க... பெரிய கதைன்னு போட்டுட்டு சஸ்பென்ஸோட தொடரும் போட்டுட்டீங்க..

சற்றே பெரிய தொடர் கதையோ..

சென்ஷி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சிறுகதையே முழுதா எழுதிப்பழகல இதுல தொடர்கதையான்னு கேப்பாங்களோன்னு தான் , கொஞ்சம் பெரிய கதைன்னு போட்டேன். கதைக்கு
தலைப்பும் வைக்க வரலை..அதான் இப்படி.விட்டா இலவசமாத்தானே கிடைக்குது ப்ளாக்குனு நாவலே எழுதுவேன்ல.

சென்ஷி said...

//முத்துலெட்சுமி said...
சிறுகதையே முழுதா எழுதிப்பழகல இதுல தொடர்கதையான்னு கேப்பாங்களோன்னு தான் , கொஞ்சம் பெரிய கதைன்னு போட்டேன். கதைக்கு
தலைப்பும் வைக்க வரலை..அதான் இப்படி.விட்டா இலவசமாத்தானே கிடைக்குது ப்ளாக்குனு நாவலே எழுதுவேன்ல.//

தூள் கிளப்புங்க... :))

இலவசக்கொத்தனார் said...

//தூள் கிளப்புங்க... :))//

ரிப்பீட்டேய்!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷி , கொத்தனார்ஜி ரெண்டுபேரும்
சொல்றதப்பார்த்தா நல்லாருக்கு போல ...கதை. நன்றி நன்றி .

மங்கை said...

நாளைக்கே அடுத்த பகுதி போடுங்க

அபி அப்பா said...

பெரிய கதைன்னு போட்டதால ஸ்கிப்பாகி பின்ன படிச்சுகலாம்ன்னு இருந்தேன். சரி எவ்ளோவ் பெரிய கதைன்னு பாத்த உடனே சின்னதாய் இருந்ததால் உடனே படித்தேன். கடைசில தொடரும் போட்டதால ஏமாந்துவிட்டேன். சகோதரி மங்கை சொன்னது மாதிரி இன்னைக்கே தொடர்ந்துடுங்க. கதை நல்லா வந்திருக்கு, வாழ்த்துக்கள்!!

காட்டாறு said...

இரண்டு நாள் வேலியா இருந்தேன். நீங்க இங்க கதை எழுதி கலக்கிட்டு இருக்கீங்க.... ஒவ்வொன்னா படிச்சிட்டு பதில் எழுதுறேன்.

//கவனமாய் எல்லாம் எடுத்துவைத்தோமா என்ற கவலையில் சில நாள் தட்டில் மீதி இருப்பதை கவனிக்காமல் ஓடி விட்டிருக்கிறாள். மாலையில் அது அவளைப்பார்த்து இப்படி காயவிட்டாயே என்று முறைத்துக் கொண்டிருக்கும்.
//

ரொம்ப நல்லாயிருந்தது இந்த வரி.