April 16, 2007

மின்னல் நொடிகள்

கண்கள் தவமிருப்பது
எத்தனை நேரமிருக்கும் என்பதற்கு
கணக்கு எதுவும் இருப்பதில்லை .
ஆனால் மின்னல் போல்
சிறுதூறல்கள்
சில நொடிகள் தான்.

உணவோ , நீரோ தராத ஒரு
சக்தி அந்த மின்னல் நொடிகளுக்கு.
காலையோ மாலையோ
காத்திருப்பது ஓர் கடமையாய்.

சுற்றிலும் ஒலிக்கும்
குரல்களில் இல்லை கவனம்.
சுற்றிலும் இயங்கும்
இயக்கத்திலும் இல்லை.
எங்கோ திரளும் கருமேகம்
எப்போது வந்து
சிறுதூறலிடும் என் முற்றத்தில்.
எதிர்பார்ப்பில் ஓடும் ஒவ்வொரு கணமும்.


சிறுதூறலாய் கடந்துவிடும் மேகம்.
வந்த சுவடுக்கு மண்வாசனை
நாளெல்லாம் மனதின் ஓரத்தில்.
வானவில் வண்ணங்களால் படிகட்டி,
மனமேறி உட்கார்ந்து விடும்
நொடிப்புன்னகை.

16 comments:

சென்ஷி said...

ஹை... நாந்தான் ஃபர்ஸ்ட்டா..

எனக்கு கடைசி மூணு வரி புரிஞ்சது..

கவுஜ..கவுஜ...


சென்ஷி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அப்ப மத்த வரியெல்லாம் புரியலயா?
எல்லாம் ஒண்ணுக்கொண்ணு தொடர்புடையது தானே சென்ஷி :)

கவுஜ தானா? இது.

மஞ்சூர் ராசா said...

தூரலா? தூறலா?


முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

சென்ஷி said...

//உணவோ , நீரோ தராத ஒரு
சக்தி அந்த மின்னல் நொடிகளுக்கு.
காலையோ மாலையோ
காத்திருப்பது ஓர் கடமையாய்.//

என்னங்க இதப்போய் கடமையாக்கிட்டீங்க.. இது அதுக்கு மேல....

கவித ரொம்ப நல்லாயிருக்கு :)
இப்பத்தான் புரிஞ்சது ...

சென்ஷி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மஞ்சூர் ராசா தவறை சரி செய்துவிட்டேன். சுட்டியதற்கு நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷி கடமைக்கும் மேலாகவும் இருக்கலாம்.
கடமை என்று சொன்னதன் காரணம் அதுவும் ஒரு நாளின் முக்கியமான வேலைகளில் கண்டிப்பாய் இடம்பெறுவதால்.

அன்புத்தோழி said...

வணக்கம்,

நான் உங்களை அழகு சுற்றுக்கு அழைக்க விரும்புகிறேன். பங்கேற்க சம்மதமா...

http://anbuthozhi.blogspot.com/2007/04/blog-post_16.html

அன்புத்தோழி

காட்டாறு said...

அழகா எழுதியிருக்கீங்க முத்துலெட்சுமி!

//மனமேறி உட்கார்ந்து விடும்
நொடிப்புன்னகை.//
எதிர்ப்பார்ப்பின் கனம் சடுதியில் மறைந்தது இந்த வரியில் கலந்து இருப்பது அழகு.

//உணவோ , நீரோ தராத ஒரு
சக்தி அந்த மின்னல் நொடிகளுக்கு.
காலையோ மாலையோ
காத்திருப்பது ஓர் கடமையாய்.//
தடுமாற்றமா? முதல் இரு வரிகள் ஆழமானதாய் உள்ளது; கடைசி இரு வரிகள் குழப்பமானதாய் இருக்கிறதே. எனக்குத்தான் புரியவில்லையோ?

தமிழ்நதி said...

\\சிறுதூறலாய் கடந்துவிடும் மேகம்.
வந்த சுவடுக்கு மண்வாசனை
நாளெல்லாம் மனதின் ஓரத்தில்.
வானவில் வண்ணங்களால் படிகட்டி,
மனமேறி உட்கார்ந்து விடும்
நொடிப்புன்னகை.\\

முத்துலட்சுமி!இப்போது கவிதையும் நன்றாக வருகிறது இல்லையா...:)
மேகம் ஒருநாள் கரைந்து மின்னி இடித்துப் பொழியத்தான் போகிறது. ஆனால்,காலம் இதுவல்லவே... நாம்தான் காத்திருக்கவேண்டும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அன்புத்தோழி அழைத்ததற்கு நன்றி .
என் அழகென்ற சொல்லுக்கு பதிவைப்படித்துப்பார்த்து எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். உங்களுக்காகவும் எழுதியதாக எடுத்துக்கொள்ளுங்கள் ப்ளீஸ்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காட்டாறு நீங்க கேட்டது போலவே சென்ஷியும் கேட்டாச்சு.

ம்...கடமை என்பதை ஒரு கட்டாயமாக ஒரு தண்டனையாக நினைப்பவர் போலில்லாமல், அன்றாடம் தன்னிச்சையாக செய்கிற ஒரு பணியைப்போல அது , பல்துலக்குதல் , உணவு உண்பது போல் அதுவும் அன்றாடக்கடமையாக ஆகிப்போனது என்பதால் அப்படி குறிப்பிட்டேன்.
ஓகேவா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நதி நீங்க வந்து என் கவிதைக்கு பின்னூட்டமிட்டீங்களா? ஒரே இடிமழை அடித்து பெய்கிறது போல இருக்கு.
கவிதையும் 'யும்' ஆகா நன்றி நன்றி.
நீங்க சொன்னா அப்பீல் ஏது. :-)

கோபிநாத் said...

அழகான கவிதைக்கா ;-)

\\சுற்றிலும் ஒலிக்கும்
குரல்களில் இல்லை கவனம்.
சுற்றிலும் இயங்கும்
இயக்கத்திலும் இல்லை.
எங்கோ திரளும் கருமேகம்
எப்போது வந்து
சிறுதூறலிடும் என் முற்றத்தில்.
எதிர்பார்ப்பில் ஓடும் ஒவ்வொரு கணமும்.\\

எனக்கு இந்த வரிகள் மிகவும் பிடித்திருக்கிறது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி கோபிநாத்...எனக்கும் அதில் அந்த வரிகள்தான் ரொம்பவும் பிடித்திருந்தது.

ஷைலஜா said...

//சிறுதூறலாய் கடந்துவிடும் மேகம்.
வந்த சுவடுக்கு மண்வாசனை
நாளெல்லாம் மனதின் ஓரத்தில்.
வானவில் வண்ணங்களால் படிகட்டி,
மனமேறி உட்கார்ந்து விடும்
நொடிப்புன்னகை./ /

முத்துலட்சுமி! வானவில் படிக்கட்டு அசாத்தியகற்பனை! அழகாஇருக்கு,ரசித்தேன்!
ஷைலஜா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரசிச்சீங்களா ..வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஷைலஜா..