May 11, 2007

உதிர்ந்த நட்சத்திரங்கள்

நேரம் எத்தனையிருக்குமென்று பார்க்கவேண்டிய அவசியமில்லை ஞாயிறு தானே...ஆனால் எதையுமே செய்யத்தோன்றாத மனநிலை , இல்லையில்லை வழக்கமாய் செய்யாத எதையாவது செய்தே ஆகவே வேண்டிய கட்டாயத்தில் மனநிலை. எழுந்து சோம்பல் முறித்து தலைமுடியை லாவகமாக இரு சுற்றில் முடியிட்டபடி சன்னலில் எட்டிப்பார்த்தாள் , இக்கதையின் கதாநாயகி.

_________________
அடர்பச்சை புல்வெளியில் உதிர்ந்த நட்சத்திரங்களாய் இரவு பூத்த பவளமல்லிகளின் சிதறல்.அதன் மணத்தை சுவாசப்பையில் நிரப்பிக்கொள்ளும் உத்தேசத்துடன் ஒரு நீண்ட சுவாசத்தை செய்துகொண்டே கண்களை மூடிய படி அவள் நின்றாள்.
என்ன செய்யலாம் பல் துலக்கியே ஆகவேண்டுமா ? ம்...யானை என்ன பல்லாத் தேய்க்கும் எப்போதோ சின்ன வயசில் சித்தப்பா கேட்பது நினைவுக்கு வந்து ஒரு முடிவெடுத்தாள் , இல்லை எல்லாமே இன்றைக்கு தலைகீழாகத்தான் செய்யப்போகிறேன் . நேராக சென்று காபிக்கு பதில் குளிர்பெட்டியில் இருந்து மாஸா வை எடுத்துக்குடித்து விட்டு தோட்டத்திற்குள் ஒரு நடை போகலாம் என்று இறங்கினாள்.
________________

பூவுக்கு வலிக்காமல் ஒவ்வொன்றாய் எடுத்து பவளமல்லிகளை ஓரிடத்தில் சேர்த்தாள். மரம் அவளை குனிந்து உற்று நோக்குவதாய் தோன்றியது . என்ன பார்க்கிறாய் பூப்பதெல்லாம் மரத்துக்குத்தான் என்பாயே இன்று என்ன சேர்க்கிறாய் என்ன செய்யப்போகிறாய் என்று அது கேட்பதாக சரசரத்து தலையில் உரசியதாக உணர்ந்தாள் . "அதுவா இன்று நான் செய்யப்போவது எல்லாம் தலைகீழ் போ"
கற்பனை கேள்விக்கு நிஜத்தில் பதில் கொடுத்துவிட்டு வாசலில் கிடந்த க்ரானிகல் பேப்பரை எடுத்து அதில் பூக்களை எல்லாம் எடுத்துவைத்து க் கொண்டு " காலைத்தென்றல் பாடி வரும் ராகம் " என்று ஹம் செய்தபடி உள்ளே போனாள்.



ஊசியைத்தேடி ஆரஞ்சு நிறத்தில் ஸ்ட்ரா போன்ற பவளமல்லியின் காம்பில் ஊசியை நுழைத்து அழகாகக் கோர்த்தாள். அம்மா அப்பாவின் படத்துக்கு மாலையாகப் போட்டாள். "உங்களை நின்று பார்த்து பேசி எத்தனை நாளாகி விட்டது ரொம்ப நாளாக நான் ஒரு இயந்திரமா என்ற சந்தேகம் தோன்றிக்கொண்டிருக்கிறது. காலையில் எழுவதும் காபியை உறிஞ்சியபடி பேப்பர் படித்து , எதையோ சாப்பிட்டு ஆபிஸுக்கு ஓடி நேரம் காலம் இல்லாமல் வேலை பார்த்து மேலிடத்தில் நல்ல பேர் வாங்கி , வேலை செய்ய முடியாத நண்பர்களிடம் திட்டு வாங்கி ..ப்ச்." என்று மனதில் நினைத்தபடி "அம்மா அப்பா சுவர்க்கத்தில் என்ன செய்யறீங்க , எனக்காக கவலைப்படாதீங்க ...சரியா " என்று வாய்விட்டு அவர்களிடம் பேசினாள் . 'நமக்கு பைத்தியம் தான் பிடிக்க ஆரம்பிச்சு இருக்கு போல என்ன இன்னைக்கு இப்படி படத்துக்கிட்டே மரத்துக்கிட்டே பேசிக்கிட்டு இருக்கோம்'' என்று தலையில் தட்டிக்கொண்டாள்.



அடுத்ததாக அவள் கண்ணில் பட்டது தொலைபேசி . யாருக்காவது பேசலாம் என்றால் யாருக்கு ? ஆபிஸ் ஆட்கள் இன்று அவரவர் குடும்பத்துடன் சந்தோஷமாய் விண்டோஷாப்பிங்கோ பார்க்கோ சினிமாவோ சுற்றிக்கொண்டிருப்பார்கள். சொந்தக்காரர்கள் என்ற வுடன் யார் எனக்காகக் கவலைப்படுகிறவர்கள் இருக்கிறார்கள் அல்லது கரிசனமாய் பேசப்போகிறார்கள் இந்தத் தொலைபேசி கூட என்னைப்போல தனிமரம் தானோ ? ஆபிஸில் எதாவது அவசரம் என்றால் அல்லாது இது என்று ஒலித்திருக்கிறது, ஒரு முறை இது ஒலித்து தானே என் வாழ்க்கை யை அழித்தது என்று பழைய நினைவுக்குப் போனாள்.


பத்து வருடத்துக்கு முன்னால் ,ஒரு மாலை நேரம் இதே வீட்டின் வாசலில்,
30 ஜோடி காலணிகள் . வாசலுக்கும் திண்ணைக்குமாய் நடந்து கொண்டே அம்மாவுக்கு கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்த அவளின் அப்பாவுக்கு முன்பே இரண்டு முறை அட்டாக் வந்திருந்தது. சொந்தங்களின் அரட்டையில் வீடே அதிர்ந்து கொண்டிருந்தது. முப்பத்திரண்டு வயதுக்கு என்ன அலங்காரம் செய்ய என்று தெரியாமல் மைசூர் சில்க் கட்டி எப்போதும் போல் தலை சீவி பொட்டிட்டு அமர்ந்திருந்தாள். சின்னதாய் மல்லிகை சரமன்றி வேறு அலங்காரம் இல்லை.


இத்தனை வருடத்தில் இப்போது தான் ஒருத்தருக்கு அவள் ஒரு கல்யாணத்துக்கு தகுதியானவள் என்று புரிந்திருந்தது.4 மணிக்கு வரவேண்டும் . நேரம் ஓடிக்கொண்டிருந்தது. யாரையும் காணவில்லை. போன் ஒலித்தது. ஓடிப்போய் எடுத்த அப்பா அப்படியே சரிந்து விட்டார் . ஒரே நாளில் இரண்டு பெண்ணை பார்க்க வந்திருந்தார்களாம் .இவளை விட இரண்டு வயது குறைந்த மணமகள் கிடைத்ததால் ஒரு மணி நேரம் முன் இன்னோரு வீட்டில் நிச்சயம் செய்துவிட்டார்களாம். இப்போது அம்மாவும் இல்லை.


தனக்காய் உழைத்து விட்டு நேரம் காலம் வருடத்தின் கவலையின்றி ஓடியதால் எதையும் பெறவும் இல்லை எதையும் இழக்கவும் இல்லை அவள்.மனதுக்குள் அவளுக்கான ஆறுதலை அவளே தான் சொல்லிக்கொள்வாள் , எல்லா பூக்களுமா மாலையாகின்றன. சில பூக்கள் மலர்ந்து மரத்திலேயே இருந்து பின் உதிர்ந்து விடும் . எல்லாமே தலைகீழ் என்றாளே , ஆனால் , ஒன்று மட்டும் இன்று வழக்கம் போல தான் செய்யப்போகிறாள்.

____________________
தன்னைப்போல உதிர்ந்த நட்சத்திரங்களைக் காண ஒவ்வொரு ஞாயிறும் செல்வது போல இன்றும் மாலையில் அவள் யாருமற்றோரின் இல்லத்திற்கு செல்வாள். சில புத்தகங்களுடன் சென்று குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் படித்துக் காட்டி மகிழ்ந்திருப்பாள்.

13 comments:

சென்ஷி said...

எப்பவும் மீ பர்ஸ்ட்டு ன்னு மைபிரண்டுக்காக பின்னூட்டம் போடுற அபி அப்பாவுக்காக இந்த பின்னூட்டம் :))

சென்ஷி

சென்ஷி said...

ரொம்ப நல்லாயிருக்குது கதை..

அழகா பொறுமையா எழுதியிருக்கீங்க.

ஒருவேளை ஹீரோயின் எல்லாத்தையும் காலையிலேந்து ஒழுங்கா செஞ்சிருந்தா நல்லது நடந்திருக்குமோ.. :(

சென்ஷி

பொன்ஸ்~~Poorna said...

கதை, சொன்னவிதம் ரெண்டுமே நல்லாருக்கு...

சென்ஷி, தப்பா புரிஞ்சிருக்கீங்க, இன்னும் ஒருமுறை படிச்சி பாருங்க...

சென்ஷி said...

// பொன்ஸ்~~Poorna said...
கதை, சொன்னவிதம் ரெண்டுமே நல்லாருக்கு...

சென்ஷி, தப்பா புரிஞ்சிருக்கீங்க, இன்னும் ஒருமுறை படிச்சி பாருங்க... //

ஸாரிக்கா... நாந்தான் சரியா படிக்காம தப்பா புரிஞ்சுக்கிட்டேன்.
சுட்டிக்காட்டிய பொன்ஸ் அக்காவுக்கு நன்றி..

சென்ஷி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷி ,அபி அப்பா மை பிரண்ட்டுன்னு நீங்கள்ளாம் நட்புக்காக ஒருத்தொருக்கொருத்தர் இத்தனை யோசிக்கறீங்களே :) சந்தோஷம்.

இப்ப புரிஞ்சிக்கிட்டீங்களா ரொம்ப சரி ...பின்னூட்டம் போடற அவசரத்தில் படிச்சிட்டீங்க போல பரவால்ல.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லாருக்கா பொன்ஸ் நீங்கள்ளாம் வந்து சொன்னா ரொம்ப சந்தோஷம்..

அமிர்தா said...

நல்ல கதை. படங்களோடு போட்டிருப்பதால், படக்கதை என்று சொல்லலாமா?!

திருமணம் ஆகாதா பெண்ணோ, ஆணோ அவர்களின் உணர்வு மிக தீவிரமானது.

நீங்கள் அதில் சொல்ல சிறு முயற்சி செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

கோபிநாத் said...

அக்கா என்ன ஆச்சு? கதை எல்லாம் எழுதி கலக்குறிங்க ;-))

கதை, நீங்கள் கதை சொன்னவிதம் எல்லாம் ரொம்ப அருமைக்கா ;-))

கோபிநாத் said...

\\இத்தனை வருடத்தில் இப்போது தான் ஒருத்தருக்கு அவள் ஒரு கல்யாணத்துக்கு தகுதியானவள் என்று புரிந்திருந்தது.\\

உங்களின் பார்வையில் அந்த கதாநாயகி யோட ஏக்கத்தை எளிமையான வரிகளில் சொல்லியிருக்கிங்க....நல்லா இருக்குக்கா ;-)

G.Ragavan said...

உதிர்ந்த நட்சத்திரங்கள். உதிராத உள்ளங்கள். குதிர்ந்த பருவம். குதிராத திருமணம். தனிமையை விரட்ட எத்தனை வழிகளைத் தேட வேண்டியிருக்கிறது. ம்ம்ம்ம்...தாய் தந்தைதான் என்றும் துணையோ!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மகா படக்கதைன்னு சொல்லுங்க ..
இல்ல சிறுகதைன்னு சொல்லுங்க..
நல்லாருக்குன்னா சரிதான் எனக்கு

நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபிநாத் ..ஒன்னும் ஆகலப்பா..நல்லா இருக்கேன். :))
ரொம்ப நாள் ஆச்சு கதை எழுதி...
அப்புறம் பதிவு எழுத வேற யோசனை வரல , கதை விடவேண்டியது தானே அதான். எப்படி? :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அடுக்கு மொழி மாதிரி சொல்லறீங்க ராகவன்...

ம்..அம்மா அப்பா எப்போதும் துணயா இருக்க முடியாதே அதானே பிரச்சனையே...எனக்கு தெரிந்து ரெண்டு மூணு பேர் தம்பி அண்ணன் குடும்பத்தோடு இருக்கிறார்கள். தனியாக?? கஷ்டம் .தனிமை சுதந்திரம் கொஞ்ச நாள் நல்லாருக்கும் ..ஆனா யாரும் இல்லாத தனிமை கொஞ்ச கொஞ்சமாய் கொன்று விடும்..