March 19, 2007

மதுரைத் தமிழில் நகைச்சுவை

முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களின் "இலக்கியமும் நகைச்சுவையும் " உரை கேட்டு வாய்விட்டு சிரித்து சனிக்கிழமை மாலையை ஒரு சந்தோஷ மாலையாக்கிக் கொண்டோம். சரளமாக துணுக்குத் தோரணங்களை உரையெங்கும் அள்ளித் தெளித்தார். நகைச்சுவை மன்றங்களைத் தொடர்ந்து பல இடங்களில் துவக்கி வைத்து வருவதாயும் நீங்களும் அப்படி செய்யுங்களேன் என்றார். நல்ல விஷயம் தான்.



மதுரைத் தூங்கா நகரம் என்று ஏன் பெயர்வந்ததாம்.. விடியவிடிய
பட்டிமன்றங்கள் நடக்குமாம். பத்துமணிக்கு ஆரம்பிப்பதால் பத்துமன்றம் என்றார். நகைச்சுவைகளில் அறுவை , கடி ,சீசன்
அனுபவ நகைச்சுவைகளை பட்டியலிட்டு உதாரணத்துடன் ஆரம்பித்தார். மேடையைத் தவிர மற்ற இடங்களில் இருளை வழக்கம்போல செய்த சங்கத்துக்கு உடனேயே ஒரு வேண்டுகோள் விடுத்தார். மக்கள் சிரிக்கிறார்களா பல்லை க்
கடித்துக் கொண்டிருக்கிரார்களா என்று எனக்கு தெரியவேண்டாமா? உடனே ஒளியூட்டப்பட்டது அரங்கம்.



கஷ்டத்தில் கூட ஒருத்தருக்கு வந்த நகைச்சுவையைப் பாருங்களேன். ஒருத்தர் பனியான நகரத்தில் நாயால் துரத்தப்பட்டு கீழே விழுந்தாராம் நாயை அடிக்கக் கல்லைத்தேட அது பனியால் தரையோடு ஒட்டிக்கொண்டு வரவில்லையாம்.
"என்னடா ஊரு இது தலைகீழா இருக்குது. கட்டிவைக்கவேண்டிய நாயை அவிழ்த்துவிட்டு கல்லைக் கட்டி வைத்திருக்கிறார்களே." என்றாராம்.



எல்லோரும் சிரிப்பை மறந்து அழுகைக்கு அடிமையாகி விட்டார்கள் மெகாசீரியலில் மூழ்கி இருக்கிறார்கள் . சைக்கிள் கத்துக்க ஆரம்பிக்கும் போது இறங்கத் தெரியாமால் போஸ்ட் கம்பி எதும் கிடைக்கும் வரை சுற்றுவது போல் இயக்குனர்கள் முடிக்கத் தெரியாமல் இருக்கிறார்களோ என்றார்.



இலக்கியத்தில் இருந்து சில நகைச்சுவைகள். சிலேடை , வஞ்சப்புகழ்ச்சி , உயர்வு நவிற்சி வகைக்கு உதாரணங்களுடன் விளக்கினார் . ஒளவை தொண்டைமானின் ஆயுதக்கிடங்குக்கு போய் "அதியமானிடம் எல்லாம் முனைமழுங்கிய கத்தி தான் இருக்கிறது நீ எத்தனை பளபளப்பாய் வைத்திருக்கிறாய் ..... ஆனால் அதியமான் அடிக்கடி போருக்கு போவான்" என்று வஞ்சப்புகழ்ச்சியில் உண்மையை உணர்த்தியதை குறிப்பிட்டார்.



ஒருமுறை அரசர் ஒருவர் வேம்பத்தூர் பிச்சுவயர் என்பவரை மன்றத்தில் "வேம்புக்கு இங்கு இடமில்லை" என்று சொன்னாராம். அந்தப் புலவரும் உடனே வேம்பு அரசோடு தான் இருக்கும் என்றாராம் . வேப்பமரம் அரசமரம் என்ற சிலேடையில்.
ஒரு அரசர் கடைமடையில் பிறந்த புலவரைப் பார்த்து வாருங்கள் "கடைமடையாரே" என்று கடைசியாக வந்த மடையரே என்று பொருள் படும்படி கூற அவர் மன்றத்தலைவரே எனப்பொருள் படும்படியும் மடையர்களுக்கு தலைவரே எனும்படியும் " மடத்தலைவரே" என்று கூறினாராம்.



பரத்தை வீட்டுக்கு போன கணவனை வாசலில் வைத்து மனைவி எங்கே போனாய் எனக்கேட்காமல் ...நேற்றுப் போனவீட்டில் பாடினாயோ என்று கேட்டாளாம். ஆம் என்றானாம். காட்டுல பேய் அழுகுது என்றாள் அன்னை நரி ஊளையிடுகிறது என்று சொன்னாள் தோழி 'நான் நீ என்றேன் போ , என்று சொன்னாளாம்.



வாரியார் பேச்சில் வரும் நகைச்சுவைகளைக் குறிப்பிட்டு சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. அவருடைய பேச்சுக்களை சிறுவயதில் கேட்டிருந்தாலும் நினைவு இல்லை. காதல் கடவுளைக் காமன் என்று ஏன் சொல்லுகிறோமாம் அவர் common god என்பதாலாம் [கிரேக்கமதத்தில் கூட அம்புடன் இருக்கும்] காதல் கடவுள் போல் . குழந்தையைக் கூப்பிட்டு முருகனின் தந்தை யார் எனக்கேட்டால் சிவனாக நடித்த சிவாஜியைக் குறிப்பிட்டதாம் .சிவா ஜி அதாவது ஹிந்தி மரியாதை விகிதியான ஜி எனவே குழந்தை சரியான விடை தான் தந்தது என்றாராம் வாரியார்.




நடுவில் வெண்பா பாடுவதுபற்றியும் மற்றும் இடையிடையே சில கேள்விகள் கேட்டார் . பயப்படாதீர்கள் " வந்திருக்கக்கூடாதோ" என நினைக்க வைக்கமாட்டேன்.. கேள்விக்கு சிறு இடைவெளியில்
நானே விடையும் சொல்லிவிடுவேன். ஆனால் வெண்பா மற்றும்
இலக்கணங்கள் எல்லாம் 8 வகுப்பில் படித்தது என்பதை மட்டும்
மறக்காதீர்கள் என்றார்.




காளமேகப் புலவரின் வசைபாடும் பாடல்களில் கூட நகைச்சுவை மிகுந்திருப்பதை சுட்டினார். சுருக்க வேண்டும் குடுமியை எனும் பாட்டைக் கேட்டு எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தனர். சிரிப்பின் மகத்துவத்தை சிரித்துக் கொண்டு இருப்பதால் தான் மனிதன் என திருக்குறள் சொல்கிறது. வடிவேலு இன்று நகைச்சுவையில் கொடிகட்டி பறக்கும் காரணம் மதுரைத் தமிழ் என்றார் .மதுரையில் இன்னும் வழக்கத்தில் பல பழய தமிழ் சொற்கள் இருப்பதைக் குறிப்பிட்டு இன்று தமிழில் குழந்தைகளுக்கு தமிழில் வைப்பது அரிகி வருவதைக் கவலையாகக் குறிப்பிட்டார்.


ஒரு மதுரைக்காரர் சென்னை சென்றாராம் . பஸ்ஸில் மீதி சில்லறைக்கு "அண்ணே பையத் தாங்க" என்றாராம் .மதுரைக்காரர் பேசிய தமிழைப் புரியாமல் நடத்துனர் பயந்து போனாராம். என்னடா 50 பைசா சில்லறைக்கு இந்த ஆள் 500 ரு பை யைக்கேக்கறானே என்று.
மதுரைக்காரர் சொன்னது "பைய தாங்க " என்றால் மெதுவாகத் தாங்க என்று அர்த்தம்.



முடிவில் அவர் எழுதிய புத்தகங்களை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தார் .உடனடியாக பெட்டி காலியாகியது.
எங்களுக்கு கிடைத்தது பேசும் கலை எனும் அவருடைய புத்தகம் . அதில் அவருடைய கையொப்பம் வாங்கி வந்தோம். தமிழை வளர்க்கும் இன்னொரு வழி நகைச்சுவை என்று புது வழி கண்டிருக்கிறார் .

24 comments:

அபி அப்பா said...

//எல்லோரும் சிரிப்பை மறந்து அழுகைக்கு அடிமையாகி விட்டார்கள் மெகாசீரியலில் மூழ்கி இருக்கிறார்கள் . சைக்கிள் கத்துக்க ஆரம்பிக்கும் போது இறங்கத் தெரியாமால் போஸ்ட் கம்பி எதும் கிடைக்கும் வரை சுற்றுவது போல் இயக்குனர்கள் முடிக்கத் தெரியாமல் இருக்கிறார்களோ என்றார்.//

ஆமாம் உண்மைதான். நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும். நீங்க சொன்னது போல நகைச்சுவை மட்டுமே எழுதுவேன். ஏன்னா எனக்கு வேறு எதுவும் தெரியாது.:-))

சென்ஷி said...

முனைவர் கு.ஞானசம்பதன் அவர்கள் நகைச்சுவையை சரியான இடத்தில் சரியான பதத்தில் இடத்தெரிந்தவர்.
முன்னொரு முறை எழுத்தாளர் சுஜாதாவின் விழாவில் இவ்வாறு கூறினார்.

"3 வயசு பையன் சொல்றான் சார்..
என் லைஃப்ல இப்டியொரு மேட்ச பாத்ததில்லன்னு"

செம கலாட்டாவாக இருக்கும்... :))

சென்ஷி

Mani - மணிமொழியன் said...

நல்லா இருந்துச்சுங்க

//ஒரு அரசர் கடைமடையில் பிறந்த புலவரைப் பார்த்து வாருங்கள் "கடைமடையாரே" என்று கடைசியாக வந்த மடையரே என்று பொருள் படும்படி கூற அவர் மன்றத்தலைவரே எனப்பொருள் படும்படியும் மடையர்களுக்கு தலைவரே எனும்படியும் " மடத்தலைவரே" என்று கூறினாராம்//

இதை ரொம்ப ரசிச்சேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\நீங்க சொன்னது போல நகைச்சுவை மட்டுமே எழுதுவேன். ஏன்னா எனக்கு வேறு எதுவும் தெரியாது.:-)) //

அபிஅப்பா நகைச்சுவை மூலம் எப்படி இங்கே இப்பேராசிரியர் தமிழ் இலக்கியத்தை அறிமுகப்படுத்தினாரோ
அப்படி வெரைட்டியான விஷயங்களை உங்கள் நகைச்சுவை மூலம்
எழுதுங்கள். வெற்றிபெறும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உண்மை தான் சென்ஷி.டைமிங்கா
அவர் பேசிய எல்லாமே கலக்கல் தான்.
குழந்தைங்ககிட்ட பேசுங்க நல்லா
நகைச்சுவை கிடைக்கும்.
அதுவும் கடி ஜோக் குழந்தைகிட்ட
தான் கிடைக்கும்ன்னு சொல்லிடு சொன்னார். ஒரு குழந்தை சொல்லிச்சாம்
முடி ஏன் கொட்டுதாம் இலை
உதிர் காலமாம்.ஏன்னா அது
மரமண்டையாம்.அய்யோஅய்யோ.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி கோவை மணி அவர்களே.
இன்னும் நிறைய சொல்லலாம் என்று
சொல்லிவிட்டு சாய்ஸில் விட்டு
விட்டார். காரணம் வெறும் இலக்கியம்
என்றால் நம்ம மக்கள் ஓடிடுவாங்க
அதான்.

பங்காளி... said...

சுர்ர்ருன்னு வர்ற கோவமும், இயல்பாய் வரும் நக்கல் நையாண்டியும்...எங்க ரத்தத்தோட கலந்தது....

இந்த மாதிரி கலந்து கட்டி அடிச்சிட்டு போய்ட்ட்டே இருக்கிற ஆளுகள எங்கூர்ர்ல சர்வசாதாரணமா பாக்காம்.

ஹி..ஹி..நானும் அப்டீத்தேன்....

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இந்தச் சில பகிடிகள் கேட்டுள்ளேன். உண்மை சிரிப்பால் தமிழ் வளர்க்கலாம். பேச்சாளர்கள் சிரிப்புச் சரம் தொடுக்கவே வேண்டும்.
அடுத்து பைய என்ற சொல்; மெதுவாக எனும் பொருள்பட எங்கள் ஈழத்தில் இன்றும் பாவனையில் உண்டு.
பதிவி படித்துச் சிரித்தேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ThangaMagan said...
சிவா-ஜி! அற்புதம்!..வாரியார் விளையாடுகிறார்! //

இன்னொன்று கூட சொன்னார் .கைலாசம் என்ற பெயர் எவ்வளவு பொருத்தமாம். இராவணன் மலையைத்தூக்கி சிவபெருமான் கால் கட்டை விரலால் அழுத்த கை மாட்டிக்கொண்டக் காட்சியைக் கூறி
கை loss அதான் கைலாஸ் என்றாராம் ஒருமுறை வாரியார்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\பங்காளி... said...
சுர்ர்ருன்னு வர்ற கோவமும், இயல்பாய் வரும் நக்கல் நையாண்டியும்...எங்க ரத்தத்தோட கலந்தது....

இந்த மாதிரி கலந்து கட்டி அடிச்சிட்டு போய்ட்ட்டே இருக்கிற ஆளுகள எங்கூர்ர்ல சர்வசாதாரணமா பாக்காம்.//

என்ன இப்படி எங்கூருன்ன்னு பிரிச்சு பேசிட்டீங்க ...எங்க மதுரைக்காரர்ன்னு
தானே நிகழ்ச்சிக்கு ஒருமணி நேரம் முன்னாடியே போய் உட்கார்ந்தேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
இந்தச் சில பகிடிகள் கேட்டுள்ளேன். உண்மை சிரிப்பால் தமிழ் வளர்க்கலாம். பேச்சாளர்கள் சிரிப்புச் சரம் தொடுக்கவே வேண்டும். //

நன்றி யோகன். உண்மையில்
மக்களை சிரிப்பால் கட்டுப்படுத்தி
உட்காரவைத்து சொன்னால்
சரியாக கருத்துக்கள் சென்று
சேரும் என்பது தெரிகிறது.

இலவசக்கொத்தனார் said...

//இராவணன் மலையைத்தூக்கி சிவபெருமான் கால் கட்டை விரலால் அழுத்த கை மாட்டிக்கொண்டக் காட்சியைக் கூறி
கை loss அதான் கைலாஸ் என்றாராம் ஒருமுறை வாரியார்.//

அப்புறம் ராவணன் பாட்டு எல்லாம் பாடி கையை மீட்டுக்கிட்டான் இல்லையா? அப்போ கொஞ்சமா கையில் அடிபட்டுப் போச்சாம். அதுனாலதான் நம்மாளுங்க கை/loss/some அப்படின்னு சொல்லறாங்க இல்லையா? ஹிஹி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\இலவசக்கொத்தனார் said...
//இராவணன் மலையைத்தூக்கி சிவபெருமான் கால் கட்டை விரலால் அழுத்த கை மாட்டிக்கொண்டக் காட்சியைக் கூறி
கை loss அதான் கைலாஸ் என்றாராம் ஒருமுறை வாரியார்.//

அப்புறம் ராவணன் பாட்டு எல்லாம் பாடி கையை மீட்டுக்கிட்டான் இல்லையா? அப்போ கொஞ்சமா கையில் அடிபட்டுப் போச்சாம். அதுனாலதான் நம்மாளுங்க கை/loss/some அப்படின்னு சொல்லறாங்க இல்லையா? ஹிஹி//

பரவால்ல நல்ல முயற்சிதான் உங்களுதும். :-))

பங்காளி... said...

ஹீ..ஹி..கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்...நம்மூரு...நம்மூரு....நம்மூரேதான்.....

ப்ரசன்னா said...

//லவசக்கொத்தனார் said...
//இராவணன் மலையைத்தூக்கி சிவபெருமான் கால் கட்டை விரலால் அழுத்த கை மாட்டிக்கொண்டக் காட்சியைக் கூறி
கை loss அதான் கைலாஸ் என்றாராம் ஒருமுறை வாரியார்.//

அப்புறம் ராவணன் பாட்டு எல்லாம் பாடி கையை மீட்டுக்கிட்டான் இல்லையா? அப்போ கொஞ்சமா கையில் அடிபட்டுப் போச்சாம். அதுனாலதான் நம்மாளுங்க கை/loss/some அப்படின்னு சொல்லறாங்க இல்லையா? ஹிஹி////

யப்பா கலக்குறீங்க கொத்ஸ்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\Prasannaa said...
யப்பா கலக்குறீங்க கொத்ஸ்...//

கொத்தனார் பின்னூட்டத்தில் பேசினா அவர் பேசினதையே வச்சுட்டு வரவங்க
பாராட்டறதோ இல்லாட்டி
கேள்விக்கேட்கறதோ தப்பு.அவரத்தான்
நான் நல்லாருக்கு உங்களுதுன்னு சொல்லிட்டேன்னுல்ல.
அப்பறம் என் எழுத்தப் பத்தி
சொல்லாம இது என்ன
"சின்னப்பிள்ளத்தனமால்ல இருக்கு."

[ அது சரி நானாவா எழுதி இருக்கேன்.
எதோ வரவங்க எல்லாம் கு.ஞானசம்பந்தம் பற்றியும் வாரியார்
பற்றியும் பாராட்டுனாங்க. பிரசன்னா
கொத்தனார்ஜி பத்தி பாராட்டுரார்.போட்டும்விடுன்னு விடாம
நானும்...]

நற்கீரன் said...

அருமை, அருமை. நன்றாக சிர்க்க முடிந்தது. நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றாக படித்து சிரித்தீர்களா உடலுக்கு நல்லது .நன்றி நற்கீரன்.

வெற்றி said...

முத்துலட்சுமி[நல்ல அழகான பெயர்]
நல்ல பதிவு. பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.

மங்கை said...

லட்சுமி

இந்த 'பைய'வில எனக்கும் அனுபவம் இருக்கு...கல்யாணம் ஆகி முதல் தடவை ஊருக்கு போன போது, இவங்க தோட்டத்தில கிணத்துக்கிட்ட போறப்போ, இவரும், இன்னொருத்தரும், 'பைய பைய'னு சொல்ல, நான் எங்கிட்ட என்ன பை இருக்கு?..அப்படீன்னு கேட்டு, அங்க இருந்தவருக்கு எனக்கு புரியலைங்கறது தெரியலை, மறுபடியும் 'தாயீ, பைய பைய'னு சொல்லி வெறுப்பேத்தி, ஒரே காமெடி அன்னைக்கு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\வெற்றி said...
முத்துலட்சுமி[நல்ல அழகான பெயர்]
நல்ல பதிவு. பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள். //

நன்றி வெற்றி.


\\ மங்கை said...
லட்சுமி

இந்த 'பைய'வில எனக்கும் அனுபவம் இருக்கு...கல்யாணம் ஆகி முதல் தடவை ஊருக்கு போன போது, இவங்க தோட்டத்தில கிணத்துக்கிட்ட போறப்போ, இவரும், இன்னொருத்தரும், 'பைய பைய'னு சொல்ல, நான் எங்கிட்ட என்ன பை இருக்கு?..அப்படீன்னு கேட்டு,//

ஆகா மங்கை நீங்க மேற்கு அவங்க தெற்கு ...நகைச்சுவை தொடரே எழுத
கைவசம் விஷயம் வெச்சிருக்கீங்க போங்க.

ப்ரசன்னா said...

//கொத்தனார் பின்னூட்டத்தில் பேசினா அவர் பேசினதையே வச்சுட்டு வரவங்க
பாராட்டறதோ இல்லாட்டி
கேள்விக்கேட்கறதோ தப்பு.அவரத்தான்
நான் நல்லாருக்கு உங்களுதுன்னு சொல்லிட்டேன்னுல்ல.
அப்பறம் என் எழுத்தப் பத்தி
சொல்லாம இது என்ன
"சின்னப்பிள்ளத்தனமால்ல இருக்கு."//

அய்யோ குத்தமாகிப்போச்சா.... மன்னிச்சிடுங்க.... நீங்க பகிர்ந்துகிட்ட விதம் உண்மையிலேயே சூப்பர்...அதைச் சொல்ல வந்தப்போதான் கொத்தனாரின் பின்னூட்டத்தைப் பார்த்து அதை விட்டுட்டேன்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குத்தமெல்லாம் இல்லீங்க சும்மா
நகைச்சுவைக்கு தான் சொன்னேன்.
:))

ப்ரசன்னா said...

//குத்தமெல்லாம் இல்லீங்க சும்மா
நகைச்சுவைக்கு தான் சொன்னேன்.
:))//

ரொம்ப தாங்க்ஸுங்கோ....