August 17, 2009

கண்ணன் பிறந்தநாள் விழா - குற்ற உணர்ச்சியிலிருந்து விடுதலை

போன வருடங்களின் ஜென்மாஷ்டமி கொண்டாட்டங்கள் எப்படி அடுத்தவர் செங்கல்லோடும் மணலோடும் கொண்டாடப்பட்டுவந்தது நாங்க எடுத்த உறுதிமொழிகள் என்ன என்பதெல்லாம் பழைய பதிவில் இருக்கிறது.

சில நாட்கள் முன்னமே என்ன செய்வது எந்த குழுவோடு இணைவது என்று மகளின் திட்டங்கள் தொடங்கிவிட்டது. அவளின் நெருங்கிய தோழி ஒரு பெரிய குழுவோடு இணையப்போவதா செய்திருந்த திட்டம் இவளை முழுக்க சோகமக்கிவிட்டது. நானோ அவள் அக்குழுவோடு இணைவதை விரும்பவில்லை. போன முறையே செங்கல் மணல் திருட்டை மேற்கொண்ட குழு என்பதும் அல்லாமல் முதலீடான பூந்திகளுக்கு என்ற பங்குப் பணம் என் மகளிடமும் அவள் தோழியிடமும் மட்டும் அதிகமாக கேட்ட பெரிய குழந்தைகளாயிற்றே! ..

இரண்டொரு நாளில் அவள் தோழியின் அம்மாவும் அவளை அக்குழுவோடு இணைய வேண்டாமென்ற நல்ல செய்தி கேட்டதும் மீண்டும் மகிழ்வோடு தயாராகிக் கொண்டிருந்தாள். செங்கல்லுக்கு பதிலா பழைய நோட்டு அட்டைகளை ஏழு செமீ அகலத்துக்கு பட்டைகளாக வெட்டிக்கொண்டோம். முதலில் அத்திட்டத்துக்கு மறுத்தவள் மாதிரியை படமாக வரைந்து காட்டியதும் ஒத்துக்கொண்டாள். பிறகு அவற்றை அவளே குறிப்பிட்ட நீளத்திற்கு ஸ்டேபிள் செய்து வைத்தாள்.. நான்கு விதமான பட்டைகளாக தயார் செய்து வைத்தபின் தெர்மக்கோல் நுழைவாயில் தோரணத்திற்கு எடுத்துக்கொண்டாள்.

இம்முறை எதிர்வீட்டுச் சிறுவனும் இணைந்து கொள்ள மகளும் அவள் தோழியும் அவரவர் தம்பிகளுடன் நால்வரோடு ஐவரானோம் என்றபடி அவரவர் வீட்டு கிருஷ்ணர் பொம்மைகளுடனும் ஏனைய கடவுள்களுடனும் கிளம்பினார்கள். பூந்திக்கு பதில் இம்முறை மெதுவான லட்டு வாங்கி பிரித்து வைத்தார்கள். அட்டைகளை அங்கே கொண்டு சென்று சதுரமாக அமைத்து ஓரங்களை நான் இணைத்துக் கொடுத்தேன். அவை நேராக நிற்க ஒரு அட்டையை மடித்து வைத்து |_ ஸ்டேபிள் செய்த பின் அதன் கீழ் பகுதியில் ஒரு கடவுள் பொம்மையை வைத்ததும் அது அந்த சுவற்றை நேராக நிக்க உதவியது.



இவ்வாறாக ஆங்காங்கே |_ இப்படி ஒட்டுக்கொடுத்து அதன் மேல் பொம்மைகளை வைத்து , மணலுக்கு பதிலாக இலைகளாள் தரை பாவி நடுவில் யானைகளின் ஊர்வலம் அமைத்து , வாசலில் வண்ணக்கோலமிட்டு , ஆங்காங்கே சிறு மரங்களைப்போல சிறு கொம்புகளையும், கூடையை கவிழ்த்து அமைத்து சிறு மலைமேல் துர்க்கையுமாக இடம் தயாரானது.



நீலக்காகித்தால் ஆன நதி தயாரானதும் வசுதேவர் கண்ணனைத் தூக்கியபடி ஆற்றில் இறங்கினார். சிறு மரம்போன்ற கொம்புகளுக்கிடையில் கண்ணனும் ராதையும் ஊஞ்சலாடினார்கள். மாடு கன்றுகள் அருகில் யாசோதை பானை தயிற்றில் வெண்ணெய் எடுக்க கண்ணன் அதை எடுக்க ... வெக்கை எங்களை படுத்த என நேரம் சென்றது.



தீபங்கள் ஏற்றி அழகு செய்த நேரத்தில் மக்கள் பார்ப்பதற்கு வர ஆரம்பித்தார்கள். செங்கல்லுக்கு பதிலான என் அட்டைத்திட்டம் பாராட்டுப் பெற்றது. செய்வதற்கும் எளிதும் .. முடித்தபின் அடுத்தவர்களுக்கு தொல்லையும் இல்லை . உடனே கலைத்து எடுத்துச் சென்றுவிடலாம் என்பதெல்லாம் அதன் நன்மைகள். அலங்காரங்களும் யானை அணிவகுப்பும் எல்லாருக்கும் மிகப்பிடித்திருந்ததால் குழந்தைகள் பாராட்டுப் பெற்றார்கள். பெருமிதமாய் அவர்கள் பிரசாதம் வழங்க வந்தவர்கள் தட்டில் பணங்களைப் போட்டபடி வணங்கிச் சென்றார்கள். பிறகு அது அக்காக்களுக்கும் தம்பிகளுக்குமாய் பங்கு போடப்பட்டு அவர்களின் சிறு சேமிப்புக்குச் சென்று சேர்ந்துவிட்டது.




கண்ணன் பிறந்தநாள் கொண்டாடியாச்சு அம்மா என் பர்த்டே எப்பம்மா ? ஆரம்பிச்சாச்சு..சின்னக்கண்ணன்..

21 comments:

☀நான் ஆதவன்☀ said...

இருங்க பழைய பதிவையும் படிச்சுட்டு வரேன்

ஆயில்யன் said...

யானை அலங்காரம்,இலை பரப்பிய தரை மிக அழகு! :)

☀நான் ஆதவன்☀ said...

அவ்வ்வ் அந்த பழைய பதிவுலேயும் ஒரு ப்ளாஷ் பேக் இருக்குது.

செங்கலுக்கு மாற்று ஐடியா கொடுத்து நீங்க “ஐடியா பேங்க்” என்பதை நிரூபிச்சுட்டீங்கக்கா :)

அமுதா said...

அழகா இருக்குதே!!!!

/*கண்ணன் பிறந்தநாள் கொண்டாடியாச்சு அம்மா என் பர்த்டே எப்பம்மா ? ஆரம்பிச்சாச்சு..சின்னக்கண்ணன்..*/
:-)) எங்க வீட்லயும் சின்னக்கண்ணம்மா ஆரம்பிச்சுட்டாங்க...

☀நான் ஆதவன்☀ said...

நதி நீளம் குறைவா இருக்கு ஆனா நீலம் அதிகமா இருக்கே!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நான் ஆதவன், நானே லிங்க் தந்தப்பறம் தான் பார்த்தேன் அங்கயும் ஒரு கொசுவத்தி இருப்பதை :))

---------------------
நன்றி ஆயில்யன் .. இலை வெத்தலை மாதிரி பெரிய பெரிய இலை சட்டுப்புட்டுன்னு பச்சை தரை ரெடியாகிடுச்சு..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அமுதா வாங்க... கண்ணன் பிறந்தநாள் லட்டை வேகமா காலி செய்தது பின்னாடி நின்னிட்டிருந்த இந்த சின்னக்கண்ணன் தான்.. :)

கோமதி அரசு said...

//அவரவர் தம்பிகளுடன் நால்வரோடு
ஐவரானோம்//


கண்ணன் பிறந்தநாள் விழாவில், ராமனும் வந்து விட்டானே.


குழந்தைகளின் கை வண்ணம் கண்டு
மகிழ்ந்தேன்,கண்ணனுக்கு பிறந்தநாள்
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

R.Gopi said...

//போன வருடங்களின் ஜென்மாஷ்டமி கொண்டாட்டங்கள் எப்படி அடுத்தவர் செங்கல்லோடும் மணலோடும் கொண்டாடப்பட்டுவந்தது நாங்க எடுத்த உறுதிமொழிகள் என்ன என்பதெல்லாம் பழைய பதிவில் இருக்கிறது.//

ஆரம்பமே அதிரடியா இருக்கே முத்துலெட்சுமி.....

//முதலீடான பூந்திகளுக்கு என்ற பங்குப் பணம் என் மகளிடமும் அவள் தோழியிடமும் மட்டும் அதிகமாக கேட்ட பெரிய குழந்தைகளாயிற்றே! ..//

அது சரி........

//அவள் தோழியின் அம்மாவும் அவளை அக்குழுவோடு இணைய வேண்டாமென்ற நல்ல செய்தி கேட்டதும் மீண்டும் மகிழ்வோடு தயாராகிக் கொண்டிருந்தாள்.//

மகிழ்ச்சியான செய்திதான்...

//இவ்வாறாக ஆங்காங்கே |_ இப்படி ஒட்டுக்கொடுத்து அதன் மேல் பொம்மைகளை வைத்து , மணலுக்கு பதிலாக இலைகளாள் தரை பாவி நடுவில் யானைகளின் ஊர்வலம் அமைத்து , வாசலில் வண்ணக்கோலமிட்டு , ஆங்காங்கே சிறு மரங்களைப்போல சிறு கொம்புகளையும், கூடையை கவிழ்த்து அமைத்து சிறு மலைமேல் துர்க்கையுமாக இடம் தயாரானது.//

யப்பா............ எவ்ளோ பெரிய வார்த்தை, புள்ளியின்றி.....வெறும் கமாக்களோடு..... (புஸ்...புஸ்.... படிக்கற எனக்கே மூச்சு வாங்குது.....)...

//மாடு கன்றுகள் அருகில் யாசோதை பானை தயிற்றில் வெண்ணெய் எடுக்க கண்ணன் அதை எடுக்க ... வெக்கை எங்களை படுத்த என நேரம் சென்றது.//

ஆ...ஹா.... இன்னா ரைமிங்க்பா??!!!!

//தட்டில் பணங்களைப் போட்டபடி வணங்கிச் சென்றார்கள். பிறகு அது அக்காக்களுக்கும் தம்பிகளுக்குமாய் பங்கு போடப்பட்டு அவர்களின் சிறு சேமிப்புக்குச் சென்று சேர்ந்துவிட்டது.//

வெரிகுட்...... சூப்பர்......

//கண்ணன் பிறந்தநாள் கொண்டாடியாச்சு அம்மா என் பர்த்டே எப்பம்மா ? ஆரம்பிச்சாச்சு..சின்னக்கண்ணன்..//

ஹா.... ஹா.... ஹா....அதான் குழந்தை.......

நல்ல எழுதி இருக்கீங்க முத்துலெட்சுமி..... நம்ம கடை பக்கமும் வந்து போங்க....

சென்ஷி said...

அலங்காரங்கள் மிக அழகு அக்கா.. சென்ற வருட உறுத்தல்களை இந்த வருடத்தின் மாறுதல்களில் சரியாகி விட்டது போல :-))

சின்னக்கண்ணனுக்கும் பொறந்த நாள் கொண்டாடிலாம். தேதி என்னைக்கு?

க.பாலாசி said...

மிக அழகான பகிர்வு. செங்கல்லுக்கு பதிலான அட்டை திட்டம் மிக அருமை.

சந்தனமுல்லை said...

வாவ்..அழகான முயற்சி! உங்க ஆதங்கத்தை பழைய இடுகையிலே பதிவு செஞ்சு இருந்தீங்க...இப்போ நடத்தியும் காட்டிட்டீங்க...kudos to madhini!:-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\கோமதி அரசு said... கண்ணன் பிறந்தநாள் விழாவில், ராமனும் வந்து விட்டானே.//

ஆமாம் :) நன்றி.

-------------------------------

நன்றி யாசவி ...:)

--------------------------

ஆர்.கோபி புள்ளி வைக்காம ஏன் எழுதினேன்னா.. நாங்க வெயிலுக்கு பயந்து வீட்டிலிருந்து தாமதமாகத்தான் வெளியே வந்ததே.. செங்கல் மண் காரர்கள் எல்லாம் அதை கொண்டு வந்து சேக்க நேரமெடுக்கும்.. நாங்க வந்ததும் எல்லாத்தையும் செட் செய்வதை சட் சட் என்று செய்ததால் .. அப்படி புள்ளி வைக்கல.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷி சின்னக்கண்ணன் பிறந்தநாள் அடுத்த வருசம் தான் வரும்.
-----------------------------
நன்றி பாலாஜி .. அட்டைத்திட்டம் இனி வரும் வருடங்களில் மேலும் பொலிவுறும் என்று நினைக்கிறேன்.
-------------------------
நன்றி முல்லை.. :))

துளசி கோபால் said...

இது பெருமுயற்சியா இருக்கேப்பா!!!!!

ரொம்பப் பிடிச்சிருக்கு.

ஐவருக்கும் அம்மாக்களுக்கும் இனிய பாராட்டுகள்.

யானை வச்சதுக்குக்காக இன்னும் 10 மார்க் க்குடுதல் போட்டுருக்கேன்:-))))

goma said...

பொம்மைகள் என்றால் கொலு என்று இருந்த வழக்கத்தை மாற்றி கோகுலாஷ்டமியையும் பொம்மைகள் வைத்து கலக்கி விட்டீர்கள்.
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.

கோபிநாத் said...

கண்ணன் பிறந்த நாள் விழா எல்லாம் அழகு..அட்டகாசம் ;))

\\செங்கல்லுக்கு பதிலான என் அட்டைத்திட்டம் பாராட்டுப் பெற்றது. \\\

அப்போ அங்க உங்க சவுண்டு தான் அதிகமுன்னு சொல்லுங்க ;)))

Anonymous said...

இலையெல்லாம் நிஜ இலை தானே? பச்சைப்பசேல் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அமர்க்களமா கொண்டாடியிருக்கீங்க :))))))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

துளசி பெரியயானைக்கு பின்னால ரெண்டு குட்டியானை வருது அதுக்கும் சேர்த்து 30 மார்க்கா போட்டுருங்க :)
------------------
கோமா எங்க ஏரியாவில் ஜென்மாஷ்டமி போதெல்லாம் இப்படி நடப்பது வழக்கம்.
குழந்தைகளின் பொம்மைக்கொலு :)
---------------------------------
என் சவுண்ட் என்னைக்கு கம்மியா இருந்தது கோபி.. :)
--------------------------------
ஆமா சின்னம்மணி , மழை பெய்து மரம் இலையெல்லாம் சுத்தமா இருந்ததால் இன்னும் அழகு இலைகள்.. அதான் அடிக்கடி ஹேர் கட் செய்வாங்களா .. தளிர் இலைகளே அத்தனை அழகா கீழ குழந்தைகள் பறிக்குமாறு இருந்தது..

------------------
நன்றி அமித்து அம்மா :)

வல்லிசிம்ஹன் said...

எளிமையாக அதே சமயம் பிரமாதப் படுத்தி விட்டீர்கள்.
லட்டு காலி செய்த கண்ணனுக்கு எப்பப் பிறந்த நாள்.
நல்ல முயற்சி செய்து குழந்தைகளைச் சந்தோஷப்படுத்தி இருக்கிறீர்கள் முத்து. வாழ்த்துகள்மா..