January 6, 2010

கயிறின் வரலாறும் கயிறில் வரலாறும்

நாவல் ஒன்றில் அதிகபட்சம் எத்தனை கதாபாத்திரங்களை நீங்கள் எதிர்பார்க்கலாம்? எத்தனை பேருடைய வாழ்க்கையை , எத்தனை வருடங்களின் நிகழ்வுகளை உங்களால் அறிந்து கொள்ளமுடியும்? இவை அத்தனைக்கும் உங்கள் பதில் என்னவாக இருந்தாலும் அது தவறாகவே முடியக்கூடிய சாத்தியம் கயறு நாவலில் நிச்சயம் உண்டு . சுழற்சி முறையில், ஒரு காலத்தில் பிரபுக்களானவர்களின் குலம் தாழ்நிலைக்கும், தாழ்நிலையில் இருந்த குடும்பங்கள் மேலெழுந்து நிலங்களை சேமித்தும், பின் நில உச்சவரம்புசட்டத்தில் மீண்டும் அனைவரும் அதை இழந்தும் என்று வாழ்வு சுழல்கிறது. பல தலைமுறைகளை தகழியோடு நாமும் ஒன்றாய் வாழ்ந்து பார்த்துவிட்ட உணர்வை இவ்வாசிப்பனுவத்தில் பெறலாம்.

.
தகழி சிவசங்கர பிள்ளை என்றால் வாசிப்பனுபவம் உள்ள எவரும் அறியக்கூடிய பெயர் தான். அப்படியே வாசிப்பனுபவம் இல்லாது போனாலும் நீங்கள் திரைப்படம் பார்ப்பதில் விருப்பமுள்ளவரெனில் “செம்மீன்” கதையாசிரியர் எனும்போது அறியக்கூடும்.


சிவசங்கரப்பிள்ளை 1912 ல் கேரள குட்டநாடு ஆலப்புழாவிற்ககு அருகில் தகழி எனும் இயற்கை எழில் மிக்க சிற்றூரில் பிறந்தவர். பின் தகழி என்று அவ்வூரின் பெயராலேயே அழைக்கப்பட்டார். அவருடைய தந்தை சங்கர குரூப் ஒரு கதகளி கலைஞர். தன்னைப்போல கலைஞனாக மட்டும் இருக்க வேண்டியதில்லை என்று மகனை வக்கீலுக்கு படிக்க வைத்திருந்தார். கதகளி, விவசாயம் , வக்கீல் தொழில் என அறிந்து கொண்ட இவை எல்லாவற்றின் கூடவும் அவர் மலையாள இலக்கிய உலகில் மிக சிறந்த படைப்பாளியாக உயர்ந்து நின்றார். மிக இளவயதிலேயே அவர் கதைகள் எழுதத்தொடங்கினார். பத்மபூஷன் விருது, சாகிதிய அகாடமியின் விருது( கயறு) மற்றும் ஞானபீட விருது(கயறு) போன்ற உயரிய விருதுகளைப் பெற்று மலையாள இலக்கியத்தில் அழியாத இடம் பெற்றவர்.. 1999 ல் தன் 87 வது வயதில் இயற்கை எய்திய அவருக்கு சங்கரமங்கலத்தில் அவர் வாழ்ந்த வீடே இன்று காட்சியகமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

தகழி , கல்வியறிஞர் பாலகிருஷ்ணப்பிள்ளை மற்றும் பள்ளித்தலைமையாசிரியர் கைரளிக்கார குமாரப்பிள்ளை மூலம் பல இந்திய இலக்கிய படைப்புக்கள் மற்றும் ஐரோப்பிய இலக்கியங்களில் ஆர்வம் கொண்டார். எழுத்தாளர் மாப்பசான் மற்றும் சிந்தனையாளர்கள் மார்க்ஸ் மற்றும் ஃப்ராய்ட் இவர்களின் தாக்கத்தைக் கொண்ட எழுத்தாளாராக அறியப்படுகிறார். ஒடுக்கப்பட்ட மக்களின், ஏழைகளின் துயரங்களைப்பற்றி அவர் கதைகளில் நாம் அதிகமாகக் காணலாம்.

தோட்டியின் மகன் , செம்மீன்,இரண்டு படி, ஏணிப்படிகள், ஓசோப்பின் மக்கள் மற்றும் சுக்கு போன்றவை பெயர் பெற்றவையாகும். 40 நாவல்களும் நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் படைத்திருக்கிறார்.பொதுவாக எழுதவேண்டும் என்று தோன்றினால் ஒழிய அவர் எழுத அமர்வதில்லை , எழுதத் தொடங்கி ஒரு வாரயிறுதியிலேயே நாவலையே முடித்துவிடக் கூடியவர் என்று கூடச் சொல்வதுண்டு. செம்மீன் கதையை அப்படியே ஒரு வாரயிறுதியில் எழுதி முடித்திருக்கிறார் .மூன்று வருடங்களில் கயிறு நாவல் எழுதப்பட்டதாகக் குறிப்பு..


ஒரு வரலாற்று செய்தியாளரைப் போல 1930 க்கு பின் கேரளாவின் நிகழ்ந்த மாற்றங்களைப உற்று நோக்கி பதிவு செய்திருக்கிறார். அந்நாளைய ஜாதீய அமைப்புகளின் கட்டுமானம் வலுவானதாக இருந்தது. நிலச்சுவான்தார்கள், அவர்களுக்கு கீழ் குத்தகைக்கு நிலமெடுத்த விவசாயிகள் , அவர்களுக்கு கீழ் விவசாயக்கூலிகள் என்று இருந்து வந்தனர். கடனுக்காகவோ அல்லது விசுவாசத்துக்காகவோ தங்கள் வாழ்க்கையையே வேலை செய்து கழிக்கவேண்டிய நிலையில் இருந்த கீழ்த்தட்டு மக்கள் இருந்த காலம். நிலச்சீர்திருத்தம் , சமூக பொருளாதார மாற்றம் , மற்றும் அரசியல் மாற்றங்கள் மூலம் அக்கட்டுமானம் தலைகீழாக மாறிவிட்டதை அக்கால கட்டங்களின் நிகழ்வுகளோடு கதையில் பதிவு செய்திருக்கிறார்.

இந்நாவலின் தமிழாக்கம் சி.ஏ பாலன் அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது. தமிழ் மற்றும் மலையாள மொழிகளுக்கு சிறந்த பாலமாக விளங்கிய இவர் ஜெயகாந்தன், கல்கி , ஜானகிராமன் போன்ற எழுத்தாளர்களின் படைப்புக்களை மலையாளத்திற்கும் தகழி, கேசவதேவ் , பொற்றேகாற்ட் போன்ற சிறந்த மலையாள ஆசிரியர்களின் படைப்புக்களை தமிழுக்கும் மொழியாக்கம் செய்திருக்கிறார்.


மூன்று பாகங்களாக அச்சடிக்கப்பட்டிருகிற இந்நாவல் ஒவ்வொன்றும் ஆயிரம் பக்கங்களுக்கு மேல் இருக்கிறது. மனித உணர்வுகளை கதையில் மிகமிகத் துல்லியமாக உணர்த்துகிறார். அன்பு , காமம், காதல், பாசம் , தனிமை , போட்டியும் பொறாமையும் ,துரோகமும் இந்நாவல் பேசாத உணர்வுகள் இல்லையென்றே சொல்லலாம். கயறு நாவல் 250 வருட கால நீட்சியில் கேரள நாட்டில் நடைபெற்ற நிகழ்வுகளை, ஐந்தாறு தலைமுறைகளில் வீழ்ந்தும் எழுந்துமாகிய குடும்பங்களை , அக்குடும்ப மனிதர்களை கொண்டு பின்னப்பட்டதாகும். நாவல் என்றால் இப்படி என்ற வடிவமைப்புக்கு மீறியதும் , எந்த ஒரு கதாநாயகனைச் சுற்றியும் பின்னப்பட்டதாகவும் இல்லை. நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்களின் வாழ்வை கண் முன் நிறுத்தும் கதை. கதையை உருவாக்குவது என்பதும் வாழ்க்கையை கதையாக்குவது என்பதும் ஒன்று அல்ல. பின்னது மிக சவாலானதும் கூட என்று கூறுகிறார் தகழி. இது ஒரு வாழ்க்கை சித்திரம்.

கயறு நாவலைப் பொறுத்தவரையில் கதாபாத்திரங்களிலோ அல்லது அவற்றின் போக்கில் , குணாதிசியத்தில் தாமாக எந்த ஒரு மாற்றத்தையும் புகுத்தவில்லை என்றும் அவை தானாகவே எழுத்தின் ஓட்டத்தோடு உருப்பெற்றதாகவும் முன்னுரையில் கூறுகிறார். சுதந்திரத்துக்கு முன்பும் பின்புமான காலங்கள், காங்கிரஸ், கம்ப்யூனிசம், நக்சல் ,குருகுலக்கல்வியிலிருந்து மாறி ஆங்கில வழிக் கல்வியும் அதனால் ஏற்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் , காந்தீயவாதம் அதனால் மக்கள் அடுக்குகளில் நிகழ்ந்த மாற்றம், பழங்காலத்திலிருந்தே எல்லா தரப்பிலும் புரையோடிப் போயிருக்கும் லஞ்ச ஊழல் என அக்கால சமூகத்தினைப் பற்றிய அத்தனைக் குறிப்புக்களையும் காணலாம்.


ஒருமுறை ஒரு நிலம் தொடர்பான வழக்கில் வாதாடுவதற்காக 135 வருடங்களுக்கு முன்பான நில அளவுச்சட்டக் குறிப்புக்களைத் தேடி அனுப்பப்பட்டபோது தாலுகா அலுவலகத்திலிருந்து தூசிகள் நிறைந்த கட்டுகளில் அக்காலகட்டத்தில் நிலத்தைப் பெறுவதற்காக நிகழ்த்தப்பட்ட குழப்பங்கள் , நிலத்தைச் சுற்றிய கதைகள் என்று அவர் முன் தெள்ளத்தெளிவான ஒரு வரலாற்று பொக்கிஷமே கிடைத்தது. ஆனால் அதை எழுதுவதற்கு ஒரு முறை அல்லது அமைப்பு அவருக்குத் தேவைப்பட்டது. அதனை ஒரு மேல்நாட்டு பாணி அமைப்பில் எழுதப் பிரியப்படாமல் குறுகுறுப்பை பலவருடங்களுக்கு சுமந்து கொண்டிருந்திருக்கிறார். ஒரு நாள் மகாபாரதத்தின் நினைவு தோன்றி அதைப்போன்ற அமைப்பில் எழுதலாம் என்று முடிவெடுத்து கயிறு நாவலைப் படைக்கத் தொடங்கினாறாம்.

மக்களுக்கு நிலத்தின் மேல் ஏற்பட்ட பற்றினால் 'நிலம்' தான் இக்கதையில் நாயகன் என்றும் இது ஒரு காதல்தோல்வியின் கதை என்றும் சொல்கிறார் தகழி. மனிதனுக்கு நிலத்தின் மீதான தாகம் தொடங்கியது எப்போதென்று தெரியாது . ஆனால் விவசாய நிலத்தில் இறங்கி உழைப்பதிலிந்து ஒரு காலத்தில் அனைவரும் விலகத் தொடங்கிவிட்டார்கள். நில அளவு சட்டத்தில் நிலங்கள் பிரிந்தது. பின் குடும்பத்தில் தலை எண்ணி பாகம் பிரித்ததில் பிரிந்தது. கடனுக்காக , யுத்தகாலத்திற்காக பின் கூட்டுறவு சங்க அமைப்பில் என்று தாங்கள் உழைத்த வயலின் நெல்மணி தங்கள் வீடுவந்து சேராத நிலை வந்தது. நிலத்தின் மீது இருந்த தாகம் குறைந்தது. தொழிற்சாலைகள் , வெளிநாடுகள் , அரசாங்க வேலைகள் மக்கள் பணத்திற்காக உழைப்பை திசை மாற்றினர்

கேரளாவில் அக்காலத்தில் 'மருமக்கள்தாயம்' என்கிற பெண்வழி உறவுக்குத்தான் முன்னுரிமை இருந்தது. பெண்குழந்தைகளைப் பெறுவது குடும்பம் செழிக்க. ஆண்குழந்தைகளைப் பெறுவது குடும்பத்தின் செழிப்பை உயர்த்த என்று ஒரு அமைப்பு. ஒருவன் தன் தங்கை குழந்தைகளுக்கு சொத்து சேர்க்கிறான். தன் குடும்பத்துக்கு அல்ல. நாயர் ஆக்ட் (1912) என்கிற சட்டத்தினால் அப்பாரம்பரியக் கூட்டுக்குடும்பங்கள் உடைந்தன. தலை எண்ணி பாகம் பிரித்தல் என்று தரவாட்டில் ( குடும்பத்தில்) இருக்கும் மகன் மகள்களுக்கு சொத்துக்கள் பாகங்களா பிரிக்கப்பட்டது. அதற்கு பிறகு கணவனுடைய உழைப்பு மனைவிக்கு என்று மாறியது. அது நாள் வரை சகோதரிகள் மற்றும் நம் குடும்பம் என இருந்த தலைமகன்கள் சொத்திழந்து குடும்பங்கள் நிலை குலைந்தன.

அத்தகைய ஒரு நாயர் குடும்பத்தின் கோணத்திலிருந்து கதை, சிறு சிறு இழைகள் இணைந்த நீண்ட கயற்றினைப் போல பல தனிமனித வாழ்க்கைகளால் இணைந்த ஒரு சரித்திரத்தினைப் போல நாவலாக நீண்டு செல்கிறது. கதைக்குள் கதையாக பல நூறு சிறுகதைகள் பிண்ணிப் பிணைந்தது கயறு நாவல் , அச்சரித்திரத்தில் சிறுதுளிகளை இங்கே ருசிப்போம் - (தொடரும்)

( இக்கட்டுரை ஈழநேசன் தளத்திற்காக நான் எழுதியது)
நன்றி ஈழநேசன்

15 comments:

சந்தனமுல்லை said...

சிறுமுயற்சி வளர்ந்துகிட்டே போகுதே! :-)

☀நான் ஆதவன்☀ said...

// சந்தனமுல்லை said...

சிறுமுயற்சி வளர்ந்துகிட்டே போகுதே! :-)//

இதெல்லாம் பெரு முயற்சி :)

இந்த புக்கை சென்னையில இருக்குற நண்பர்கிட்ட வாங்க சொல்லலாம்னு நினைச்சேன். மூன்று பாகம்னா அப்புறம் அவர் டென்ஜன் ஆகிடுவாரேன்னு விட்டுட்டேன் :)

Anonymous said...

கயிறு தான் தலைப்பா புத்தகத்துக்கு

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முல்லை நான் தான் வளரலை.. ப்ளாகாச்சும் வளருதுஙகறீங்களே.. ;))

----------------
ஆதவன் ஆமா பின்ன ஒவ்வொன்னும் மொத்தம் ஒரு 3000 பக்கத்துக்கு மேலன்னா. தூக்கிட்டும் வரனுமில்ல.. :)
---------------------
ஆமா சின்னம்மிணி கயிறு தான் தலைப்பு.. சாகித்திய அகாதமி வெளியிட்டிருக்கு..

அண்ணாமலையான் said...

நீங்க வளரலையா? ஏன் இப்படி புளுகறீங்க...? (டெல்லில ரொம்ப பெரிய ஆளுன்னு கேள்விப்பட்டேன்...!?)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகா யாரு உங்க கிட்ட கதையளந்தா அப்படின்னு தெரியலயேப்பா.. தில்லி என்ன உலகத்தின் எந்த இடத்துக்குப் போனாலும் நான் சின்ன ஆளு தான் ( நான் என் உயரத்தைச் சொன்னேன் :)) )

"உழவன்" "Uzhavan" said...

நல்ல விவரிப்பு.. நாவலைப் பற்றிய ஆர்வம் அதிகமாகிறது.

ஆயில்யன் said...

//சந்தனமுல்லை said...

சிறுமுயற்சி வளர்ந்துகிட்டே போகுதே! :-)
//


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்! :)


// உலகத்தின் எந்த இடத்துக்குப் போனாலும் நான் சின்ன ஆளு தான்//

நாமெல்லாம் யாரு மாயவரமாச்சே! :)

மங்கை said...

வாழ்த்துக்கள்...

ஆனா..நமக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம்

கோபிநாத் said...

பகிர்வுக்கு நன்றி ;))

நசரேயன் said...

இது பெரு முயற்சி, வளரட்டும் ....

அமுதா said...

//சந்தனமுல்லை said...

சிறுமுயற்சி வளர்ந்துகிட்டே போகுதே! :-)
//


ரிப்பீட்டு

யாழினி said...

கயிறு
இந்த நோவெல படிக்கிற ஆர்வத்தை உங்க எழுத்து
தந்திருக்குக்கா..
அருமைய இருக்கு..
வாழ்த்துக்கள்

நிஜமா நல்லவன் said...

/சந்தனமுல்லை said...

சிறுமுயற்சி வளர்ந்துகிட்டே போகுதே! :-)
/


ரிப்பிட்டேய்ய்ய்!

Iyappan Krishnan said...

வாழ்த்துகள் :)