September 16, 2019

மொழியே நம் அடையாளம்

 ரூட்ஸ் நாவலில் ஆசிரியர் அலெக்ஸ் ,  ஆப்பிரிக்காவிலிருந்து அடிமை வேலைக்கு கடத்தப்பட்ட குண்த்தாவின் பார்வையிலிருந்து அடிமைகள் எப்படி அடிமைத்தனத்தில் ஊறிவிடுகிறார்கள் என்று சொல்லிக்கொண்டே வருகிறார்.  ஒரு முழு ஆண்டு எந்த காவலையும் வைக்காமல் முதலாளி காணாமல் போனால் கூட வந்து பார்க்கும் போது அவர்கள் அப்படியே முணுமுணுத்துக்கொண்டு புலம்பிக்கொண்டும் வேலை செய்தபடியே தான்  இருப்பார்கள் . முதலாளி சொல்லாததையும் முந்திக்கொண்டு செய்யும் அளவுக்கும் போகிறவர்களாக , தன்னை அடிமைப்படுத்தியவர்களின் பெருமைகளை தன்னுடைய பெருமைகளாக நினைத்து பூரிப்பவர்களாக, தன் மதிப்பை , தன் வேர்களை உணராதவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கிடையே சுயமரியாதையோடு வாழ்வதும் விடுதலை எண்ணத்தை ஓரமாய் பிடித்துவைத்துக்கொண்டு வருடங்கள் வீணாக  ஓடுவதை எண்ணிக் கலங்குபவனாக அவனொருவன் மட்டுமே. கொஞ்சம் கொஞ்சமாய் தன் மறுதலிப்பை குறைத்துக்கொண்டு தன்னை அறியாமல் ஒப்படைக்கத் தொடங்கியபின் தான் யாரென்று மறந்து போவதற்கு, அவன் தன் மொழியை மறப்பதே காரணமாக நினைக்கிறான். மொழியைக்கொண்டே தான் அவன் இனக்குழு அடையாளம்.

நம்முள் எழும் சிந்தனையே  நாம் என்றால், அந்த சிந்தனையை எந்த மொழியினால்  செய்கிறோம்; எந்த சிந்தனைகளால் வளர்க்கப்படுகிறோம் என்பதில் உறுதியாக ஒரு தாக்கம் , ஒரு போக்கு இருக்கத்தானே இருக்கும்.

மொழியின் முக்கியத்துவத்தை இழப்பது,  நம் சிந்தனையை , நம்மை இழப்பது இல்லையா? 
#RootsAlexHaley