August 31, 2010

Whatever will be, will be

சமீபத்தில் கேட்ட பாடல்கள் சிலவற்றை பகிர்கிறேன்.. மற்றும் என் சேமிப்புக்காகவும்.

கலகலப்ரியாவின் பதிவின் பின்னூட்டத்தில் பிரியா சிவனை பின்பற்றி சென்றதில் அவரின் பெண்களைப்பற்றிய கட்டுரையும் இப்பாடலும் கிடைத்தது. உடனே இணையத்தில் தேடி , மௌஸ் பிடித்த கை சும்மா இருக்குமா?’ மற்றும் தேடுதலே வாழ்க்கை இல்லையா? இந்த பாடலைக் கேட்டமாத்திரத்தில் பிடித்துப்போய் நான் எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று கணக்கு வைத்துக்கொள்ளவே முடியவில்லை. நானே கூட பாடிவிடக்கூடிய அளவில் அதன் எளிமை இருப்பதால் .. தொடர்ந்து ஹம் செய்வதோ அல்லது பாடவோ என்று இன்று இங்கே ஒரே கச்சேரியாக இருக்கிறது. எதற்கும் இருக்கட்டுமே என வாசல் கதவை நன்றாக சாத்தி வைத்தேன்.When I was just a little girl
I asked my mother, what will I be
Will I be pretty, will I be rich
Here's what she said to me.

Que Sera, Sera,
Whatever will be, will be
The future's not ours, to see
Que Sera, Sera
What will be, will be.

When I grew up and fell in love
I asked my sweetheart what lies ahead
Will we have rainbows, day after day
Here's what my sweetheart said.

Que Sera, Sera,
Whatever will be, will be
The future's not ours, to see
Que Sera, Sera
What will be, will be.

Now I have children of my own
They ask their mother, what will I be
Will I be handsome, will I be rich
I tell them tenderly.

Que Sera, Sera,
Whatever will be, will be
The future's not ours, to see
Que Sera, Sera
What will be, will be.இதே பாடலைப்போடும்போதே உள்ளுக்குள் ஜிக்கி குரல் போல எதோ ஒன்று கேட்டுக்கொண்டிருந்தது. அதை ஒரு தட்டு தட்டி அடக்கிவைத்திருந்தேன். ஆனால் பின்னூட்டத்தில் கோமதியம்மா வந்து சொன்னதும் தான் அந்த ஜிக்கியின் குரல் தெளிவாக கிடைத்துவிட்டது. அதே ஆரம்பம் ..அதே மெட்டு.. நன்றி கோமதியம்மா.. இதோ உங்களுக்காக ஏ எம் ராஜா ஜிக்கி குரலில் சின்னப்பெண்ணான போதிலே ஆரவல்லி திரைப்படத்திலிருந்து.. ( ஆமா பெரிய ரேடியோ ஜாக்கி)


---------------------
கெக்கேபிக்குணி போன பதிவில் இந்த பாடல் so-the-journey-goes இணைப்பை தந்தார்கள். நம்ம ஊர் அம்மணி ஒருவர் தான் பாடி இருக்காங்க .. எனக்கு ரொம்பவும் பிடிச்சது. சலநாட்டைக்காக இந்தப்பாடலை அவங்க குடுத்தாங்க.. மேலே இருக்கும் கே ஸரா ஸரா கூட இதே ராகம் போலவே எனக்கு தோன்றுகிறதே யாரும் இசைமேதைகள் என் ஐயத்தை தீர்ப்பீர்களா?

பாட்டுக்கு நடுவில்
How do they see my differences with the same dress and skin?
How do they know me as a foreign alien?
அதெல்லாம் கண்டுபிடிச்சிடுவாங்க இல்ல.. :)

அவர்களே போபால் ப்ரச்சனைக்காக (city-of-lakes )ஒரு பாடல் செய்திருக்கிறார்கள். கேட்டுப்பாருங்கள் லிரிக்ஸ் ம் அங்கேயே இருக்கின்றது.

---------------------------------------
இன்றைய சிந்தனை ஓட்டம்
நண்பரொருவர் சொன்னார். ”எல்லா தகராறுகளும் நிகழ்வுகளையும் அறிந்து கொள்ளாவிட்டாலும் உலகம் மற்றவர்களுக்கு இயங்கத்தான் செய்கிறது. பிறகு அதை அறிந்துகொள்வதில் என்ன இருக்கிறது? ”


யாரோ ஒரு பெரியமனிதர் அதிக விலையுள்ள பொருட்கள் பகுதியை சுற்றி வந்துவிட்டு எதும் வாங்க மாட்டாராம். இவைகள் இல்லாமலே இன்பமாக வாழமுடியுமென்று நினைப்பதற்காம். அப்படியே எல்லாவற்றையும் கற்று தெளிந்துவிடப் போராடுபவர்கள் கூட அல்லது நான் பல கற்றவன் என்று சொல்பவர்கள் பார்க்கையில் நாலு விசயத்துக்கு மூன்று குறைவாக தெரிந்து வைத்துக்கொள்பவனுக்கு ஏதும் குறைவந்துவிடுமா வாழ்வில் ? ஒன்றுமே புரியவில்லை போங்க..

August 29, 2010

உள்ளடக்கமும் அடக்கமும் ஒரு மண்டக்குடைச்சலும்

சில சமயம் ப்ளாக் ஆஃப் நோட் பிடித்து வெளிநாட்டு ப்ளாக் களை நோட்டமிடுவேன்.
இதை எழுது அதை எழுதாதே ..எழுத வரலையா எழுதாதே என்று எந்த பெரியமனிதத் தொல்லையும் அவங்களுக்கு இருக்கா என்று தெரியவில்லை.. வாழ்க்கையை அழகாக பார்த்து இன்பயமாக்கிக்கொள்கிறார்களோ என்று எனக்குப் பொறாமையாகக் கூட வரும். அங்கே ஒரு பின்னூட்டம்.
{Alessandra said...

Hey, I think I'm the first one to leave a comment today yay...Here it goes: } - வட எனக்குத்தான் மீ த பர்ஸ்ட் ஹேய்..
ஒரு பதிவின் உள்ளடக்கம் .
”திரும்பிப் பார்க்காமல் உங்களுக்கு பின்னால் என்னவெல்லாம் இருக்கிறது , நடக்கிறது உடனே பகிருங்கள். உங்கள் வீட்டுக்குள் நுழையும் உங்கள் பக்கத்துவீட்டுக்காரர் பார்வையில் உங்கள் வரவேற்பரையை பகிர்ந்துகொள்ளுங்கள் ” அவரும் பகிர்ந்திருக்கிறார் அனைவரையும் அழைக்கிறார்.
நான் அவன் வீட்டு வரவேற்பரைக்குப் போனேன் அவன் அடுக்கியவிதம் சரியில்லை, அவனே சரியில்லை என்று குறைபடாமல் நம்மை நாமே கவனித்துக்கொள்ள என்ன ஒரு அழகான வழி. ம்...

-------------------------------------------------
இனிது இனிது படத்திற்கான தொலைகாட்சி நிகழ்ச்சியில் ப்ரசன்னா ப்ரகாஷ்ராஜைப் பற்றிப் பேசிவிட்டு அடக்கமாட்டாமல் அழுதபோது எனக்கும் தொண்டை அடைத்துக்கொண்டது. தன்னலமற்ற அன்புக்குத்தான் எத்தனை அழகு. ஆனால் இதைச் சொன்ன இந்த பசங்களுக்கு பெருந்தன்மையே தவிர அவர்களோடு இருக்கும் போது நான் அழகா இருக்கிறேன் என்பது மட்டுமே தன் தன்னலம் என்பது போல அவர் பதில் அடக்கமாகவே இருந்தது.
சொந்தவாழ்க்கைகளை வைத்து முன்முடிவாக அணுகாதவரை அந்த நேரம் அழகாகவே இருந்தது.

இப்படித்தான் அன்றைக்கு சின்மயி மனதோடு மனோவில் அம்மாவைப் பற்றி பேசியபோது எனக்கும் அழுகை வந்தது. இன்னோருநாள் மகதி என்று நினைக்கிறேன் உன்னிகிருஷ்ணனின் உயிரும் நீயே உணர்வும் நீயே பாடலைப்பாடியபோதும் இப்படித்தான்.

4:17 ல இருந்து கொஞ்சம் பாருங்களேன். சின்மயிகுரல் இன்றைய நிலையில் எவ்ளோ ரசிக்கப்படும் பெருமைப்படுத்தப்படும் நிலையில் இருந்தாலும் என்ன ஒரு எளிமையான பதில் , எத்தனையோ பெரியபெரியவர்கள் இருந்த இசை உலகத்துல அவங்க கால் மிட்டி தூல் மண் நான்னு சொல்லுறது .. உயரத்தில் அடக்கம் நிச்சயம் அரிதான விசயம் இல்லையா ?
-----------------------------------------
போனவாரக் கடைசியில் இரண்டு கச்சேரிகள் தமிழ்சங்கத்தில், சஞ்சயும் நித்யஸ்ரீ யும் தமிழில் பாடி அல்லல் நீக்கினார்கள். ஒரு பாடலின் ராகம் சலநாட்டை என்று சொன்னாரென்று நினைக்கிறேன். ஆலாபனை செய்யும்போது மண்டைக்குள் அது போன்ற ஒரு திரைப்பாடலின் முதல் வரியைப் பிடிக்க போராடிக்கொண்டிருந்தேன். கடைசி வரை முதல் வரியை என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை. நானுமதே ராகத்தை இரண்டு நாட்கள் ஏதோ என்னறிவுக்கு தெரிந்தவரை பாடிக்கொண்டே இருந்தேன் . திரைப்பாடல் தளத்தில் சில பாடல் ராகங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டிருப்பதாக ஆயில்யன் சொன்னார். . அங்கே போய் பிடித்ததில் அது பனி விழும் மலர் வனம் .இந்தபாடல் தான் மண்டையை குடைந்தது என்று முடிவுக்கு வந்தேன். தொல்லை விட்டது.

August 20, 2010

ஸெர்யோஷாவும் குட்டீஸ் சிந்தனைகளும்

புத்தகங்களைப் போல போதையொன்று இல்லையென்ற ரீதியில் அவை சில நேரம் கிறக்கத்திலேயே வைத்திருக்கும். வேண்டாவெறுப்பாய் போ என்று ஒதுக்கினாலும் மீண்டும் மீண்டும் போய் விழுந்துவிடுகிறோம் தானே. விடுமுறை பொள்ளாச்சியில், புத்தக உலகம் என்கிற கடையைத் தாண்டிப் போகிற போதெல்லாம் எப்போதடா உள்ளே நுழைவோம் என்றிருந்தது. மகளின் பிறந்தநாளுக்காகக் காத்திருந்தோம்.
கௌரிகிருஷ்ணாவில் பரோட்டாவும் புத்தக உலகில் புத்தகங்களும் என்று திட்டமிட்டிருந்தோம்.

நிறைய புத்தகங்களை ஒருசேரப்பார்த்தால் எதை எடுப்பது எதை விடுவது என்று தெரிவதில்லை. நூலகத்தில் என்றால் செலவு பற்றியும் கவலை இல்லை . ஆனால் காசு கொடுத்து வாங்குவது என்றபிறகு மிகுந்த யோசனையும் இருக்கும். மகள் அவளுக்கான தேடுதலில் இருந்தாள். குழந்தையும் அல்லாத பதின்ம வயதும் இல்லாத அவளுக்கு குறைவான புத்தகங்களே இருந்தது. அதில் இரண்டை எடுத்துக்கொண்டாள்.

குழமம் ஒன்றில் பரிந்துரைத்த ’இரண்டாம் இடம்’ நாவல் நான் எடுத்துக்கொண்டேன். அந்த நாவலை நான் ரயில் பயணத்தில் கோவையில் துவங்கி கீழேயே வைக்காமல் படித்து முடித்தபோது ஃபரிதா பாத் வந்துவிட்டது. . சின்னவளா இருக்கும்போதிலிருந்து ரஷ்யக் கதைபுத்தகங்களை வாசித்த ஆசையில் ஒரு குறுநாவல் ஒன்று ’ஸெர்யோஷா என்றொரு சிறுவன் ’. வங்காளிக்கதைகள் தொகுப்பு ஒன்று.

இந்த ஸெர்யோஷாவைப் படிக்கத்தான் தாமதம் செய்துவிட்டேன். உங்களில் சிலர் இக்கதையைப் படித்திருக்கலாம். போனவாரம் கதையைப்படித்ததும் முடிவில் தொண்டை அடைத்து கண்ணில் நீர்முட்டிக்கொண்டு வந்தது. சில இடங்களில் குழந்தையாக சில இடங்களில் குழந்தைகளின் தாயாக என்று மாறி மாறி யோசித்து ஒருவழியாகிவிட்டேன். இப்பொழுது இற்றைகள் எழுதும் ஒரு தாயாக குழந்தைகளின் சிந்தனைகளை கவனிக்க முயற்சி எடுக்கிறேன் தான் .. ஆனாலும் இன்னமும் கூட முயற்சி செய்ய வேண்டுமோ போதாதோ என்று தோன்றுகிறது. சின்னச்செடியை நறுக்கி செதுக்கி மரமாகவிடாம போன்சாய் செய்வது போல டூஸ் அண்ட் டோண்ட்ஸ் வைத்திருக்கிறோமே நிறைய. மேலும் சொல்லும் அறிவுரையைப் போல நடந்து காண்பிப்பதும் சிரமம் தான்.

கதை முழுதும் சிறுவனின் மனவோட்டங்களாலும் தந்தைக்கும் மகனுக்குமான உறவின் அழகுணர்ச்சியிலும் முடிவான மகிழ்ச்சியிலும் வாசிப்பவருக்கு இனிமையானதொரு அனுபவத்தைத் தருகிறார் வேரா பனோவா. இவர் ஸ்டாலின் பரிசைப் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் அவருடைய இரண்டாம் படைப்பாம் இது. குழந்தையைப் பற்றிய கதையாக இருந்தாலும் இதனை பெற்றவர்களுக்காகத்தான் வெரா பனொவா எழுதி இருக்கிறார். வாசிப்பவர்கள் இனி குழந்தையை அணுகும்போது அவர்கள் எண்ணவோட்டம் என்னவாக இருக்குமென்று யோசிக்கத்தொடங்குவார்கள். மேம்போக்காக யோசித்தால் மிகச்சாதரணமான விசயத்தைக் கையாண்டது போலத்தெரிந்தாலும் உள்பொதிந்திருக்கும் விசயம் மிக மேன்மையானது. குழந்தைகள் உலகம் நம்மிலிருந்து வேறுபட்டது. நாம் அதைத் தாண்டி வந்ததை மறந்து அவர்களை தவறாக கையாள்வதை தவிர்க்க இக்கதையில் உணர்த்துகிறார் வேரா பனோவா.

{Vera Panova’s Серёжа (translated as Seryozha and Time Walked and A Summer to Remember}
இக்கதையைப் பற்றிய என்னுடைய சிறு விமர்சனத்தை ஈழநேசன் தளத்தில் வெளியிட்டிருக்கிறார்க்ள். (சிறுமுயற்சியிலும் இங்கே பதியப்பட்டுள்ளது.)  நண்பர்கள் அங்கு சென்று வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வரிக்கு வரி அதைப்பற்றி பேச எனக்கு நிறைய இருக்கிறது. ரசித்த பகுதிகள் என்று பிரித்து சொல்லவே முடியாமல். ..ஒவ்வொன்றையும் ரசித்திருக்கிறேன். அதனால் தான் அங்கிருப்பது மிகச்சிறிய விமர்சனம் என்கிறேன். :)

August 17, 2010

ஊஞ்சல் ஏறி ஆடம்மா

நாம் விதைத்து வைக்கின்ற கனவுகள் எல்லாம் ஆலமாய் வளராவிட்டாலும் சிறு போன்சாய் மரங்களாகவாவது வளர்ந்து நின்று மனம் குளிர்விக்கிறது.முற்றத்து வீட்டு ஊஞ்சல் கனவை விதைத்த போது வாழ்த்திய நண்பர்களிடம் மகிழ்வையும் பகிர்ந்துகொள்கிறேன். நன்றி .

பொள்ளாச்சியில் எதிர் வீட்டில் இருந்த ஊஞ்சலைப் போலவே வேண்டுமென்று அவர்கள் வாங்கிய அதே பாலக்காடு க்ளோபல் பர்னீச்சரைத் தேடிப்போயிருந்தோம். நாங்கள் சொன்னது போலவே செய்து தந்தார்கள் . கேரளா ரோட் வேஸில் அழகாக பேக் செய்து வீடு வந்து சேர்ந்தது. அதற்கான சங்கிலிகள் கூட அங்கிருந்தே வாங்கி வந்திருந்தோம். நட்டுக்கள் வெளியே தெரியும் படியான எதிர் வீட்டு ஊஞ்சலிலிருந்து புது முறையாக ஊஞ்சல் காலுக்குள் நட்டுகள் மறைவாக இருக்கும்படி செய்திருந்தார்கள்.

என்னவோ உள்ளூர இந்த தளம் கொக்கிகள் எல்லாம் இத்தனை கனமான ஊஞ்சலைத்தாங்குமோ என்கிற பயம் உள்ளூர இருந்தது. நமக்கு மட்டும் தான் பயமோ என்று பார்த்தால் பாருங்க துளசி கூட பயந்திருக்காங்க அவங்க வீடு கட்டும் போது ..

செயின் மட்டும் 9 கிலோ வருகிறது. ஊஞ்சல் 40 கிலோ வருமா இருக்கலாம்.. நான் எத்தனை கிலோ என்று கணக்கு போட்டபடி மேலே பார்ப்பேன். கணவரும் உக்கார வந்தால் மரியாதையா எழுந்துகொள்கிறேன் :P பயம் போக நாளாகலாம். ( ஊஞ்சலைச் சொன்னேன்)
இது தான் எங்க வீட்டு ஊஞ்சல். படிப்போ , அரட்டையோ மகளுக்கு எல்லா நேரமும் இப்போது ஊஞ்சலில் தான். இரண்டு கம்பிகளுக்கு இடையில் ஏறி நின்றோ கம்பிகளைப் பிடித்தபடி தலைகீழாய் தொங்குவதோ என சாகசம் காட்டுவான் மகன். சில சமயம் குட்டித்தூக்கம் கூட போடலாம் .

வடநாட்டில் இதுபோன்ற பலகை ஊஞ்சல் பெரிதாக பழக்கமில்லாததால் பார்க்கும் குழந்தைகள் எல்லாம் இத்தனை பெரிய ஊஞ்சலா என்று ஆச்சரியம் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்தப் பாடலைக் கேளுங்களேன் கவிஞர் துரைசிங்கம் எழுதி பைரவி என்கிற சிறுமி பாடிய’ ஊஞ்சல் ஏறி ஆடம்மா’..அருமையாக இருக்கிறது.
ஊஞ்சல் ஏறி ஆடம்மா..
........................
................
ஊக்கம் கொண்ட மனிதரே
உயர்வு காண்பர் வாழ்வினில்
என்ற உண்மை தன்னை
நமக்கு ஊஞ்சல் சொல்லுதே
ஊஞ்சல் ஏறி ஆடம்மா
உயர பறக்குது பாரம்மா
நெஞ்சம் மகிழ்ச்சி கொள்ளவே
நீயும் நானும் ஆடுவோம்


August 12, 2010

இயக்குனர் ஜனநாதன் அவர்களுடன் ஒரு பேட்டி

முதல் படமான இயற்கையிலேயே தன்னால் வித்தியாசமான படங்களை அளிக்கமுடியுமென மக்களை திரும்பிப் பார்க்கவைத்த , ஈ, பேராண்மை என்று தொடர்ந்து நல்ல படங்களை தந்துவரும் இயக்குனர் ஜனநாதன் அவர்களுடன் ஈழநேசன் வாசகர்களுக்காக கண்ட பேட்டி.

கேள்வி: இயற்கை படம் காதலைப் பேசினாலும் வித்தியாசமாக இருந்தது. அதே போல ஈ மற்றும் பேராண்மை அதனதன் கருத்தில் தங்களை ஒத்த மத்த படங்களிலிருந்து தனித்தே தெரிந்தது. பார்த்து முடிக்கும்போது இது, அது மாதிரி இல்லாத புது மாதிரி .. என்று சாதாரண சினிமா ரசிகர்களுக்கும் தோன்றும்படி இருக்கிறது. அப்படியாக வித்தியாசத்தை எவ்வாறு கொண்டுவருகிறீர்கள்?

பதில்: அப்படி வித்தியாசமா எடுக்கனும்ன்னு முயற்சி எதுவும் எடுக்கறதில்லை.. தனியா அதற்காகன்னு யோசிக்கவும் இல்லை.ஆனா ஒவ்வொரு படத்துக்கும் முன்னால் எனக்கு நிறைய தகவல்களை சேகரிக்க வேண்டி இருக்கிறது. இயற்கை படத்தை எடுத்துக்கிட்டா, உலகத்திலேயே மிகப்பெரிய வியாபாரம் ஷிப்பிங்க் தானாம். அதப்பத்தி எடுக்க நிறைய விவரங்கள் தேவைப்பட்டது. கடல்பத்திய படத்துல பொதுவா கடற்கரை மக்கள் மீனவர்கள் இப்படி கடற்கரையோடையே கேமிரா நின்றுவிடுகிறது. கடலைதாண்டிப் போனவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக்கிட்டதாலேயே அந்த படம் வித்தியாசப்பட்டது. முதல்ல எனக்கு கிடைச்ச தேசிய விருதே யுனிக்கா இருந்ததுன்ற காரணத்துக்காகத்தான் கிடைச்சது.கேள்வி: அந்த விருதை நீங்க எதிர்பார்த்தீங்களா?


பதில்: இல்லை. எதிர்ப்பார்க்கவே இல்லை.. ஆர்ட்டைரக்‌ஷன் மற்றும் போட்டோகிராபிக்காக கிடைக்கும் என்று தான் நினைத்தேன்.. போட்டோக்ராபி கொஞ்சம் மிஸ் ஆகிடுச்சு. தண்ணீர்க்குள்ளே லைட் ஹவுஸ் செட் செய்திருந்தோம். சண்டை மாஸ்டர் வந்து இறங்கியதும் அதை நிஜம் என்றே நினைத்துவிட்டார். விருது கிடைக்காததற்கு ஒருவேளை அது செட்டுன்னே தெரியாம இருந்திருக்கலாம்..கேள்வி: இயக்குனர் தன்னுடைய கருத்துக்களை எப்படியாவது படத்தில் புகுத்தி எதாவது மெஸேஜ் கொடுக்கனும் என நினைக்கிறீங்களா?

பதில்: ஆமா, என் வேலையாகவே அதை நினைக்கிறேன்.. எவ்வளவு அதிகமா விசயத்தை சொல்லமுடியும்ன்னு பார்ப்பேன். அதேபோல பெயர்கள். மருதுக்கு மருது என்கிற சிங்காரவேலன்னு வச்சிருப்பேன். அவர் தான் முதல்ல மே தினம் கொண்டாடியவர் .. அவர் ஒரு மீனவர். க்ளாரா பல்கலைக்கழகம் (க்ளார பெண்கள் தினம் முதலில் கொண்டாடியவர் ), ரோஸா (பெண்ணியவாதி) கல்லூரி போன்று பெயர்களை அமைத்திருப்பேன். பேர் வைக்கிறதுலயும் கூட முடிந்தவரை எதையாவது நினைவுபடுத்தறமாதிரி வைக்க நினைப்பது வழக்கம்..கேள்வி: ஈ படம் போலவே இன்றும் மருத்துவ பரிசோதனை மற்றும் மருந்து ஊழல்கள் வெளிவருகிற்தே?


பதில்: ஆமாம். உண்மையில் வெளீநாட்டுல தடை செய்யப்பட்ட பல மருந்துகள் நம்ம ஊருகளில் கடையில் விக்கப்படுகிறது. டாக்டர்களும் எழுதித்தராங்க. இதெல்லாமே ஒரு பெரிய ப்ரச்சனை தான் மக்கள் மேல் நடத்தப்படற பரிசோதனை தான். நான் எடுக்கும் போது எதோ அதிகமாத் தெரிந்தது. ஆனா ஆந்திரால குழந்தைங்க இறப்பு, இங்க மருந்து ஊழல்கள் , நாள் முடிந்து போன மருந்துகள், மருந்துக்கு பதிலா சுண்ணாம்பு பௌடர் என்று மருந்துகளில் நம்ம ஊரில் பெரிய ஊழலே நடந்துக்கிட்டிருக்கும் போது ஈ யை எல்லாருக்கும் இவை ஞாபகப்படுத்துது.கேள்வி: பேராண்மை போன்ற வித்தியாசமான ஒரு நல்ல முயற்சியில் எதற்காக இரட்டை அர்த்த வசனங்கள் அதுவும் பெண்கள் மூலமாக என்பது பலருடைய வருத்தமாக இணையத்தில் பதிந்திருந்தாங்க .. அதுக்கு உங்க பதில் என்ன?

பதில்: இந்த விசயத்தை இப்படி பேசுவதே ஆணாதிக்க மனோபாவம் . பெண்கள் தனியாக இருக்கும்போது உடல்பற்றிய விசயங்களை பேசிக்கலாம்ன்னே நான் சொல்வேன். இதெல்லாம் ஒரு சில பொருளாதாராச் சூழ்நிலையில் மாறிபோன விசயம் தான். உடல்பற்றிய விசயங்களை பெண்கள் பேசுவதில் தவறுன்னு சொல்பவர்கள் ஆண்கள் தான். அவங்க கூட பழைமையில் ஊறிப்போய் இருப்பவங்களா இருப்பாங்க. கற்புன்னா என்னன்னு ஒரு பெண் கேக்கறமாதிரி வச்சிருப்பேன். கற்பு போன்ற விசயங்கள் எல்லாம் கூட ஆணாதிக்க சிந்தனையால் உருவான சொல் தான். என்னிடம் பெண்கள் யாரும் திட்டலைங்கறது மட்டுமில்ல சிலர் அதனை பாராட்டியும் இருந்தாங்க.கேள்வி: இன்றைய தினத்தில் வாழ்வினை ஒட்டிய படங்கள் அதிகமாக வருகின்றன அவைபற்றி என்ன நினைக்கிறீங்க?


பதில்: இருப்பதை அப்படியே பதிவு படுத்துவது என்பது ஒரு விசயம். அடுத்தகட்டத்துக்கு நகர்ந்து அதற்குமேல் ஒரு சினிமா காமிக்கனும்ன்னு நான் முயற்சிக்கிறேன். அப்படியே பதிவு செய்வதுக்கு பதிலா என் படங்கள் யதார்த்தக்கு மேல் இருக்கறமாதிரி இருக்கும். கொஞ்சம் ஃபிக்சன்ன்னா கூட இருக்கலாம். ப்ரசண்டேசனில் சொல்யூசனை நோக்கிப் போகிறது என்று நகர்த்த முயற்சிக்கறதா இருக்கும். உதாரணமா பேராண்மையில் ஹீரோ ஒரு ஆசிரியர் மாணவிகளை சமூகத்திற்காக பயிற்சி கொடுத்து தயார் செய்யவேண்டிய கதாபாத்திரம், அதை ப்ராக்டிகல் பாடமா சொல்லிக் கொடுத்திருக்கிறார். இது கொஞ்சம் ஃபிக்சனா யதார்த்ததுக்கு மேலானதாகவே இருக்கும்.கேள்வி: நோர்வே திரைப்படவிழா அனுபவம் எப்படி இருந்தது?


பதில்: நோர்வே போய்வந்தது எனக்கு மிகப்பெரிய அனுபவம். மைனஸ் 15 டிகிரி குளிர் ஒரு புது அனுபவம். சென்னையிலேயே திரைப்படத்துறையிலேயே இருந்தாலும் இந்த பயணத்தில நான், மிஸ்கின், சமுத்திரக்கனி, சசிக்குமார் எங்களுக்குள்ள ஒரு நல்ல நட்பு உருவானது. உலகத்திலேயே முதல் முறை நார்வேயில் தமிழுக்கு மட்டுமேன்னு இந்த திரைப்படவிழாவை வசீகரன்கறவர் நடத்தினார். இது ஒரு சிறப்பான விசயம். புலம்பெயர்ந்த தமிழர்களால் தயார் செய்யப்பட்ட தமிழ் படங்கள், நார்வே, கனடா என்று உலகில் பல இடங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட படங்கள் அங்க திரையிடப்பட்டது. தமிழ் சினிமாங்கறது தமிழ்நாட்டில் கோடம்பாக்கத்தில் இருந்து மட்டுமே வரனும்ங்கறது இல்லாம உலகம் முழுக்க தமிழ் ரசிகர்கள் இருக்காங்க அதுபோல உலகம் முழுதுலேர்ந்தும் தமிழ்சினிமா உருவாக வாய்ப்பு இருக்கு. அது தமிழ்நாட்டிலும் திரையிடப்படனும் . இது அநேகமா நடக்கலாம்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.கேள்வி: மாற்று சினிமா ஒன்று வர்த்தகரீதியாக வெற்றியடையாதபோது அக்குறைபாடு மக்களிடமா அல்லது இயக்குநர் மக்கள் இரகசிக்கும் படியாக அப்படத்தை கொடுக்கதவறிவிட்டார் என்பது சரியாகுமா?


பதில்: இல்லை இல்லை. உருவாக்கறவங்க தான் கவனம் எடுக்கனும். மக்கள் ரசிக்கத்தெரியாதவங்க இல்லை. டாக்குமெண்ட்ரி குடுக்கறதா இருந்தா கூட பார்க்கவைக்கிறமாதிரி குடுக்கறது ஃப்லிம் மேக்கரோட வேலை தான். நீ பாக்கலை நீ பாக்கலைன்னு சொல்றது தவறு. இப்ப இது நிரூபிக்கப்பட்டுட்டு தான் வருது. இப்ப எங்க படம் மத்த ஸோ கால்ட் படங்களிலிருந்து வித்தியாசமா இருந்தாலும் மக்கள் அதை ஜெயிக்க வச்சாங்க. அதைத்தாண்டி இப்ப அங்காடி தெரு வந்தது. பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றிருக்காங்க.. படம் சரியாப்போகலைன்னா மக்கள் தப்புன்னு இல்லை. குடுக்கறவங்க முறையில் தான் இருக்கு நிச்சயமாக.கேள்வி: உங்கள் படத்தில் உங்களையே ப்ரதிபலிக்கிறமாதிரி எதும் கதாப்பாத்திரம் இருந்திருக்கிறார்களா?


பதில்: நேரடியாக அப்படி இல்லைன்னாலும் எல்லாக் கதாபாத்திரத்துக்குள்ளயும் நான் கொஞ்சம் நுழைந்திருப்பேன். அப்படி நுழையக்கூடாது. அதான் சினிமாக்கலை என்று சொல்றது. ஆனா நான் கொஞ்சம் நுழைஞ்சு வெளியே வருவேன். பேராண்மையில் ஒரு ஊனமுற்ற இளைஞன் பேசும்போது உள்ள வந்திருப்பேன் .ஹீரோ பேசுறதுல ,பெண்கள் பேசறதுல கூட எங்கெல்லாம் என் கருத்து நுழைக்கமுடியுமோ அங்க தோன்றி மறைவேன். இதை நான் பயன்படுத்திகிறேன் .படம் எடுக்கும் நான் சமூகத்தைப் பற்றிய என் கருத்தை கதாபாத்திரத்தின் மூலமா காண்பிக்கிறேன். மக்கள் விரும்பும்படியா கருத்தைக் கொடுக்க நினைக்கிறேன்.கேள்வி: கிராமப்புற குழந்தைகளுக்கு சினிமா பற்றீய கல்வியை தர முயற்சி செய்வதாக இருந்த திட்டம் எந்தளவில் இருக்கிறது?


பதில்: இப்போ எவ்வளவு முயற்சி செய்து சினிமா எடுத்தாலும் ஒரு விசயத்தை நான் ஒரு கோணத்தில் பார்ப்பேன். ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியோ ஒடுக்கப்பட்ட மக்களோ அவங்களைப் பற்றிய விசயங்களை அவங்க பார்வையிலேயே எடுக்கும்போது அந்த கோணத்தில் வித்தியாசம் இருக்கும். உதாரணமா பாரதியார் ஒரு கதையில் முஸ்லீம் ஒருத்தர் தன் மனைவியோட தங்கச்சியையே கல்யாணம் செய்ததா எழுதி இருக்கார். சாதரணமா முஸ்லீம் ஒருத்தர் இத்தனை பெண்களை கலயாணம் செய்துக்கலாம்ன்னு இருக்குன்னு மட்டும் தான் நமக்குத்தெரியும். அப்பறம் தான் அவருக்கு தெரிந்தது, முஸ்லீம் சமூகத்துக்குள்ள பார்த்தா மனைவியோட அக்கா தங்கச்சியை கல்யாணம் செய்யற வழக்கம் இல்லை. அதனால் ஒரு இஸ்லாத்தை வாழ்நிலையை நான் எடுக்கறதுக்கும் ஒரு முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த இளைஞனே எடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கும் நிச்சயமா. கலாச்சாரத்தை அது தான் சிறப்பா பிரதிபலிக்கமுடியும். அதனால் ஒடுக்கப்பட்ட மக்களிடமே கலை போய் சேரும்போது அது வேற கோணத்தில் வேறு விதமான சினிமாவே உருவாக வாய்ப்பிருக்கு. அதைத்தான் செய்ய விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளை எடுத்துக்கிட்டிருக்கேன். முறைப்படி செய்வதற்க்கு மிகப்பெரிய குழுவே தேவைப்படுது. நிச்சயம் அந்த வேலையை முழுமையாகச் செய்வேன்.கேள்வி: தமிழ்சினிமா நம் கலாச்சாரத்தில் ஒன்றாக மாறிவிட்டதா?


பதில்: முதன்மையாக இருக்கிறது. ஓன்றாக கூட மட்டும் இல்லை நம்பர் ஒன்னாக இருக்கிறது. கோடம்பாக்கம் தான் உலகம் முழுக்க தமிழர்களை ப்ரதிபலிக்கிற கண்ணாடியாக இருக்கிறது. தமிழர்கள் வாழ்வை தமிழ்சினிமா ப்ரதிபலிப்பதாக உலகமே நினைத்துக்கொண்டிருக்கிறது. அதனாலேயே கவனமெடுக்கவேண்டியது அவசியம். சின்னக்குழந்தைகள் அதுவும் வெளிநாட்டில் வாழும் குழந்தைகள் தமிழ்நாட்டில் பூங்காக்களில் காதலன் காதலி பாட்டு பாடி நடனமாடுவார்கள் போல இருக்கு என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு நாட்டு படங்களில் அது நடப்பதில்லையே.கேள்வி: இணையத்தில் விமர்சனங்கள் பற்றி என்ன நினைக்கிறீங்க ? அதுவும் பேராண்மையை வித்தியாசமான முயற்சி இதுல குறைகளை பெரிசாக்காமல் பேசப்பட வேண்டியது என்று கூட பதிந்திருந்தார்கள்.


பதில்: ஆமா இணையத்தில் பலர் எழுதுகிறார்கள் . சில விமர்சனங்களில் அதிகம் பேர் கவனிக்காத நுட்பமான விசயங்களைக்கூட பேசறாங்கன்னு நினைக்கிறேன். படங்களை விமர்சிக்கிறவங்க பற்றிய பார்வையைப்பற்றி கூட எழுத எனக்கு ஆசை. ஒரு படத்தை எல்லாரும் எப்படி அணுகுகிறார்கள் என்பதைப் பற்றி எழுதனும். இணையம் , பத்திரிக்கை எல்லாமே இந்த முயற்சிக்கு பாராட்டுத்தெரிவித்து இருந்தாங்கதான்.கேள்வி: நீங்கள் தமிழ் ஈழம் மேல் இருந்த ஆர்வத்தால் அப்பெயரில் ஒரு தேநீர்க்கடை ஆரம்பித்தீர்களாமே?


பதில்: ஆமாம். சின்னவயசிலிருந்தே திராவிடக்கட்சியில் இறங்கி வேலை செய்யறவங்க எங்க குடும்பம். நான் மட்டும் தான் கொஞ்சம் படித்திருந்தேன்..தமிழ் முழுமையா படிச்சிட்டேனான்னு தெரியலை ஆனா தமிழ் இனவுணர்வு இருக்கிறதுங்கறது நியாயம் தானே. குட்டிமணி போன்றவர்கள் இறந்த காலகட்டத்தில் பெரிய எழுச்சி இருந்தது. அந்த சூழ்நிலையில் தமிழீழம்ன்னு ஒரு தேநீர் விடுதி அண்ணனுக்காகத் தொடங்கினோம். ஒருவருடம் நடத்தினோம்.கேள்வி: தற்போது ஈழத்தில் நிகழ்ந்துவருகின்றவற்றை நீங்கள் கவனித்து வருகிறீர்களா? அரசியல் தீர்வுக்காக முயன்று வரும் இன்றைய நிலை பற்றி உங்கள் கருத்து?


பதில்: எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம் இது. உலகம் முழுதும் இதுபோன்ற இனப் போராட்டங்கள் நடந்துகிட்டிருந்தாலும் தமிழ் தேசியப்போராட்டம் என்பதுமிகப முக்கிய போராட்டமா நினைக்கிறேன். பல தேசியபோராட்டங்கள் விவாதிப்பு நிலையில் அல்லது ஓட்டெடுப்பு நிலையே வராம கூட இருக்கு. என்னுடைய கணக்குபடி வட்டுக்கோட்டை தீர்மானம் தந்தை செல்வா தலைமையில் நடந்தது அப்போதே தமிழ் ஈழம் தான் சரியான தீர்வுன்னு மக்களின் சிந்தனை வெளிபடுத்தப்பட்டுவிட்டது. உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டுவிட்டது. பத்து பதினைந்து கோடி கொண்ட தேசிய இனத்தின் கோரிக்கை நிறைவேறாமல் எப்படி இருக்கிறது? இவ்வளவு போராட்டத்திற்கு பிறகும் சர்வதேசத்தால் அங்கீகாரப்படலை. சாத்தியப்படலைங்கறதால் இன்னமும் கவனமெடுக்கவேண்டி இருக்குகேள்வி: ஈழத்தை பின்புலமாக வைத்து எதுவும் படைப்பு உங்களிடமிருந்து வரக்கூடுமா?


பதில்: என்னை பலரும் கேட்டிருக்காங்க, ஈழத்தமிழர்களே கூட நோர்வேயில் கேட்டாங்க.. முன்பே சொன்னமாதிரி தான் இன்னமும் தமிழகத்திலேர்ந்து உருவாகும் இயக்குனர்களே பத்து பேர் கூட அதுவும் தமிழகத்தை வாழ்க்கை முறையை முழுமையாக ப்ரதிபலிக்கிறமாதிரி படம் எடுக்கலை. ஈழங்கறது உலகத்தின் மிகப் பெரிய விசயம். அதனை அத்தனை சரியாகவும் நுட்பமாகவும் அவங்க பார்வையில் ஈழத்து இளைஞர் எடுக்கும் போது சிறப்பா வரும். என்னுடைய வேலையாக , சினிமா என்பது பெரிய படிப்பு. அதனை ஒரு ஈழத்து இளைஞருக்கு கற்றுகொடுத்து சிறப்பான ஒரு படைப்பு வெளிவர உதவலாம் என்பதுஎன் கருத்து. பண்ணமாட்டேன் என்று சொல்லவில்லை. நான் அந்த சூழ்நிலையில் வாழலை. என்னைவிட அவங்க சிறப்பாக செய்ய முடியும் என்று தான் சொல்றேன். உதாரணமா இப்ப நார்வே திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட ’1999’ , ’மீண்டும்’ போன்ற ஈழத்து இளைஞர்கள் எடுத்த படங்களைப் பார்த்த நம்பிக்கையில் இதை சொல்கிறேன். அவங்களால் முடியும். அவர்களைப் போன்றவர்கள் தயாரிக்கின்ற படங்கள் இங்கே தமிழ்நாட்டிலும் திரையிடப்படனும்னு நினைக்கிறேன். உலக தமிழ் நடிகர்கள் , உலக தமிழ் சூப்பர்ஸ்டார் கூட உருவாக வாய்ப்பிருக்கிறது.கேள்வி: பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டிருக்காங்களே?


பதில்: எங்கம்மா பேருகூட பார்வதிதான். அவர்களை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. ஒரு ஆட்சியில் சில தடைகளை உருவாக்கி வைத்திருந்தால், அடுத்த மாற்று ஆட்சிக்கு மக்கள் ஓட்டு போட்டு கொண்டு வந்திருக்கும்போது ,அவர்கள் அந்த தடைகளை தொகுத்து அதை சரி செய்து வைக்கவேண்டும்.. இப்பொழுது பார்வதி அம்மாவிற்கு அனுமதி மறுக்க முந்தைய ஆட்சி அவற்றின் ஜி ஓ க்கள் தடை என்றால் அவைகள் முன்பே களையப்பட்டிருக்கவேண்டும். தொடர்ந்து அதைக்காரணமாகக் காட்டிக்கொண்டிருப்பது எப்படி சரியாகும் என்பது தான் என் கேள்வி. அடுத்த ஆட்சி வந்தபின் குழு ஒன்று அமைத்து சீர் செய்யப்பட்டிருக்க வேண்டிய விசயங்கள் இது.நன்றிங்க..

தொடர்ந்து ரசிகர்களுக்கு நீங்கள் வித்தியாசமான நல்ல படங்களைத் தரனும் என்று வாழ்த்துகிறோம்


நன்றி நன்றி.. வித்தியாசமான நல்ல படங்களைத் தொடர்ந்து தருவேன் என்று நானும் உறுதி தருகிறேன்.


ஏப்ரல் மாதம் ஈழநேசனுக்காக எடுத்த பேட்டி சேமிப்புக்காக இங்கே...
நன்றி: ஈழநேசன்.

August 10, 2010

இப்படித்தான் ஒருமுறை மதுரைமுத்து தில்லிதமிழ்சங்கத்துல...

அப்பா பெரியப்பாக்கள் சித்தப்பா என்று கூடி உட்கார்ந்தாலே சிரிப்புத்தான். பழைய கதையைச் சொல்லி நாங்களெல்லாம் ஆ வென்று கதை கேட்டும் சிரித்தப்படியும் இருப்போம்.
இப்படித்தான் பெரியப்பா இன்னோரு கரண்டி கூட்டாஞ்சோறு எடுக்கும் போது என்பையன் ஆரம்பித்து வைத்தான். ”தாத்தா நீங்க மட்டும் எவ்ளொ சாப்பாடு சாப்பிடறீங்க ?” (அடப்பாவி )

அவங்களுக்கு பழைய நினைவு வந்துவிட்டது.

“இப்படித்தான் ஒருமுறை தென்காசி அத்த எங்களை ஒருத்தங்க வீட்டுக்கு கூட்டிப்போனா. அங்க அவங்க பாயசம் இன்னும் கொஞ்சம் வேணுமான்னாங்க. சரின்னு சொன்னேன். அவங்க வீட்டுப்பையன் ‘ பாயசம்ன்னா எவ்ளோவும் குடிப்பீங்களோ’ன்னான்.- பெரியப்பா

”அப்பறம் அந்த பாயசத்தைக் குடிச்சீங்களா?”- என் தங்கச்சி

”ஆமா அவன் கேட்டான்னு குடிக்காமலா வருவேன்” - பெரியப்பா.

அடுத்த நாள் இன்னோரு பெரியப்பா வீட்டில் நேத்து சாப்பாடு விசயமாக சில பழைய விசயம் பேசிக்கொண்டிருந்தோம் என்றதும். பாயாசக்கதையைச் சொல்லி இருப்பானே என்று சொல்ல எல்லாரும் சிரித்துக்கொண்டிருந்தோம். இப்படி நமக்குள்ள கலகலப்பாய் இருப்பது போல . இப்படித்தான் அங்க இங்கன்னு பேசறதுக்கு பேரு ஸ்டாண்டப் காமெடியாம்.

மதுரை முத்து டீவியில் பேசப்போறார்ன்னா ஸ்டேட்டஸ்லயே இருங்க முத்து பேச்சைக் கேட்டுட்டு வந்துடறேன்னு போட்டுவிட்டுப் போகும் ஆள் . தில்லி தமிழ்சங்கத்துக்கு வந்தால் போகாமல் இருப்பமா? நல்ல கூட்டம். விமானம் தாமதமாக வந்ததால் நிகழ்ச்சியும் தாமதமாகத்தான் தொடங்கியது. ஆனால் அரங்கு நிறைந்து கலையாமல் ஆர்வத்துடன் காத்திருந்து அளித்த வரவேற்பில் அசத்தபோவது தானென்று நினைத்து வந்த முத்துவை தில்லிக்காரங்க நாங்க அசத்திவிட்டோம்.

நிகழ்ச்சியின் முன்பு பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் மகன் மாணிக்கம் அவர்களுக்கு டாக்டர் பட்டம் கிடைத்ததற்கு பாராட்டுதல் வழங்கப்பட்டது. அவரே நிகழ்ச்சியினைத் தலைமை தாங்கவும் செய்தார். முடிவில் ரசித்து சிரித்துவிட்டு காசோலை ஒன்றும் பரிசளித்துச் சென்றார்.

எதையுமே அவர் சிரிப்பாகவே பேசினார். பேச்சுக்கு நடுவில் அதிகம் கைதட்டி பேச்சைகேட்காமல் போய்விடுவோமோ என்று எல்லாரும் இருந்த போது ஒருவர் மட்டும் கையைத்தட்டிவைக்க.. ’அய்யா நான் எதோ உங்களுக்கு 200 ரூ குடுத்து கைதட்டச் சொன்னதா நினைச்சிடுவாங்க இல்ல.. தனியா தட்டாதீங்க’
சிறிது நேரத்தில் வேறொரு பக்கத்திலிருந்து தனியாக கைத்தட்டுவரவே.. ’அய்யா இப்ப அங்க போயிட்டாரா’ என்றார்.

இது போன்ற எளிய மனிதர்கள் எல்லாராலும் ரசிக்கப்படுவதும் அவசியம் தான். அவர் கூட வந்த இருவரும் விமானத்தில் முதல் முறை வந்ததையும் தமிழ்நாடு தாண்டி வந்ததையே ஒரு வெளிநாடு போல் உணர்ச்சிவசப்பட்டதையும் பார்த்தபோது எளிய மனிதர்களுக்கு இது போல பல வாய்ப்புக்களை வழங்கும் தமிழ் சங்கத்தைப் பாராட்டத்தான் வேண்டும்.நகைச்சுவையில் சிரித்து சிரித்து முடியாமல் பலர் அங்காங்கே இருமிக்கொண்டும் கண்ணைத் தொடைத்துக்கொண்டும் இருந்தார்கள். முடிவில் ஒரு பெண்கள் குழு அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். அதில் ஒரு வயதான பெண்மணி ‘ மதுரையிலிருந்து இங்கு வந்து ‘ என்று பாராட்டத்தொடங்கியதும்.. என்னம்மா அங்க...ருந்து வந்தா இந்த கொடுமை யை செய்யறேன்னு கேக்கப்போறீங்களா என்று ஜோக் அடித்துவிட்டு வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டார்.

அவருடன் நாகேஷ் செல்லக்கண்ணு என்பவர் நாகேஷ் போன்று ஆடிய நடனத்தைப் பார்த்து மகனுக்கு ஒரே சிரிப்பு. டமால் டமால் என்று சேரிலிருந்து கீழே விழுகிறார். ஆடும்போதே பந்து போல விழுந்து எழுகிறார். பீடியை வாய்க்குள்ளயே வைத்தபடி ஆடிக்கொண்டிருந்துவிட்டு திடீரென திரும்ப எடுத்து புகையை வெளியே விடுகிறார். இந்த முயற்சியால் அவர் சுவை நரம்பு பாதிக்கப்பட்டிருக்கிறதாம் . இருந்தும் நாம் சிரிக்க ரசிக்க என்று சொல்லிவிட்டு முத்து அவர்கள் நாங்க என்னைக்கு சிரித்திருக்கிறோம் என்றார். உண்மை .

மேஜிக் அப்துல்லா மிகக்குறைந்த நேரத்தில் நிறைய மேஜிக் செய்து காட்டி அசத்தினார். ஒரு பையனை அழைத்து மேஜிக் நடுவே ஹிண்ட்களை எல்லாம் பின்னிருந்து சொல்லிக் கொடுக்க அவன் சொல்லும் பதில்கள் அரங்கத்தை அதிர வைத்தது. என்னதான் பின்னிருந்து சொல்லிக்கொடுத்தாலும் அந்த பையனும் உடனுக்குடன் அதை தானே சொல்வது போல சொல்லியதும் பாராட்டத்தான் வேண்டும். ஆனால் வயதுக்குமீறிய விசயங்களைப் பேசவைத்ததை மட்டும் தவிர்த்திருக்கலாம்.


முடிவில் மேஜிக் சொல்லித்தருகிறேன் என்று சொல்லிவிட்டு எல்லாரையும் ஏமாத்தி டாட்டா காட்டவைத்துவிட்டார் அப்துல்லா.
அந்த மாலைப்பொழுது உரத்த சிரிப்பில் கரைந்தது.

August 2, 2010

அறியாமையே ஆனந்தமோ?

கருமையின் பக்கங்களை அழித்து வெள்ளையாக்கும் முயற்சியில் காற்று ஈடுபட்டிருந்தது. இருந்தும் நன்றி மறக்காமல் காத்து நின்ற மரங்களுக்கு சற்றே ஒரு சின்னத்தூறலைச்
சிந்திச்சென்றது மேகங்கள் .முகம் கழுவிய மரங்கள் பலநாள் தூசிகள் நீங்கி பொலிவாய் தலையாட்டியதில் குளிர் காற்றால் வெளி நிரம்பி இருந்தது. கட்டாந்தரை முழுதும் விரிந்த புல்வெளியாகி இருந்தது. நாலைந்து மைனாக்கள் ஒன்றையொன்று துரத்தியது . நேற்றைய மழையின் மிச்சங்களில் சிறகு விரித்து கீச்சிட்டு குதித்தன. பெயர்தெரியாத பறவைகளும் கூட இருந்தன. இருந்த அமைதியை கிழித்தபடி அதன் குரல் கூப்பாடு போடுவது போல இருந்தது.

நின்ற இடத்திலிருந்து தெரிகிற ஐந்தாறு மரங்களில் ஒன்றைத்தவிர எதற்கும் எனக்குப் பெயர் தெரியவில்லை. நேற்றைய வாசிப்பில் அந்த கதையில் வங்காள கதாசிரியர் அவர் வீட்டு முற்றத்தில் இருந்த மரங்களின் பெயர்களையும் அது பூத்த காலத்தையும் கிளைத்த காலத்தையும் கூட விவரித்திருந்ததை நினைக்கையில் ஒரு வெட்கம் ஓடியது. எதை அறிந்திருக்கிறோம்?

அறிதல் !!. அறியாமலே செய்யும் செயல்கள் இப்படி எத்தனையோ உண்டே? அறியாமையைபோல ஒரு அமைதியில்லை என்றும் தோன்றி இருக்கிறதே?. அதுபோன்றதொரு நேரத்தை நினைத்தபடி வெட்கம் துறக்கலாம்.

அறியாத மனிதர்களிடம் கூட அறிந்தவர்கள் போல பேசுவதில் ஆனந்தமடையும் அதே மனதிற்கு தெரிந்த மனிதர்களிடமும் அறியாதவர்களாய்த்தான் இருந்தோம் என உணர்ந்து நிற்க நேரும் கணங்களும் வாய்ப்பதுண்டு. தலைகீழ் பிம்ப வாசிப்புகளைத் தொடரும் நியாயம் அழிக்கும் தன்முனைப்புகள் அந்த மேகங்களைப்போல ஏதும் சின்னத்தூரலையும் கூட விட்டுச் செல்வதில்லை.

எத்தனையெத்தனையோ முகங்களில் ஒன்றாக, அறியாதவர்களை கடக்கையில் தோன்றாத சில பதட்டங்கள் அறிந்தவர்களை கடக்கையில் தோன்றி மறையும்.

யாருமற்ற தனிமையில் குரலெடுத்துப் பாடிய பாடலில் முதல் வரியில் இல்லாத நயம் இரண்டாம் வரியில் வந்து நின்றது. அந்த பாடலின் ராகத்தையும் தான் அறிந்திருக்கவில்லை.

பெயர் தெரியாத மஞ்சள் நிறப்பூ பூக்கும் மரமொன்றை சிறிய செடியாக நடைபாதை ஓரத்தில் நேற்று நட்டு வைத்திருக்கிறேன். மஞ்சள்பூ மரத்திலிருந்து நானே பறிந்த விதையில் வந்த செடி தான் என்பதால் மஞ்சளாய்த்தான் அது பூக்குமென்பது மட்டும் தெரியும். அதுபோதாதா?