April 23, 2009

டெம்ப்ளேட் டிசைன்களும் நான் படும் பாடும்...

எனக்கு பொழுது போக்கே பதிவுகளைப் படித்து பின்னூட்டமிடுவது தான். பதிவிடுவது என்பது தினப்படி வேலையில்லை. என் பொழுதுபோக்குக்கு இப்பொழுது மிகப்பெரிய சோதனை. பல பதிவர்கள் சாதாரண டெம்ளேட்டில் போரடித்துப்போய் தாங்கள் தனித்துவமானவர்கள் என்று காட்டுவதற்காக மிக அழகாக வடிவமைத்த டெம்ப்ளேட் டிசைன்களை புகுத்தி வைத்திருக்கிறார்கள்..

ப்ளாக்கரில் நான் சிறிதே கலர் மாற்றங்களை செய்த போதே பாலபாரதி சொன்னது நினைவுக்கு வருகிறது. எளிமையான பக்கமாக கண்களுக்கு பாதிப்பில்லாத பின்புலம் இருந்தால் மட்டுமே படிக்கவருபவர்களுக்கு பதிவைப் படிக்க வசதியாக இருக்கும் . சிலர் கருப்பு பின்புலம் வைத்திருக்கிறார்கள் (உதாரணம்: சசி... ப்ளீஸ் மாத்துங்களேன் கண் வலிக்குது) அப்படிப்பட்ட பதிவுகளை வேகமாக போஸ்ட் கமெண்ட் தேடி ஓடி க்ளிக் செய்து ஷோ போஸ்ட் என்பதை க்ளிக் செய்து படித்து முடிப்பதுவழக்கம்.

உதாரணமாக புதுகைத் தென்றல் , ஸ்ரீமதி போன்றவர்களின் டெம்ளேட் அவர்களின் அழகுணர்ச்சியையும் தனித்தன்மையினையும் காட்டுகிறது மகிழ்ச்சி. ஆனால் என்னால் அவர்கள் பதிவை படிக்கவே முடிவதில்லை. சரி என்ன ஆனாலும் பரவாயில்லை என்று பதிவுக்கு சென்றேனோ தொலைந்தேன். குறைஞ்சபட்சம் 5 நிமிடத்திலிருந்து 10 ..15 நிமிடத்திற்கு என் கணினி அப்படியே நின்றுவிடும். வேறு எந்த வேலையும் கூட செய்ய இயலாது. .. சில நேரம் ஃபயர்பாக்ஸ் க்ராஷ் ஆகி காணமலே போய்விடும்.

ஆனால் எனக்கு ஆச்சரியம் அங்கே கும்மியிலிருந்து பெரிய விவாதங்கள் வரை நடைபெறுகிறது. வருபவர்களுக்கு என்னைப்போல ப்ரச்சனைகளே வருவதில்லையா..? முன்பு எண்ணுவான் ( கவுண்ட்டர்) இதுபோன்ற ப்ரச்சனைகளை பலருக்கும் செய்து கொண்டிருந்தது. இப்போதும் இந்த டெம்ளேட்களா அல்லது பக்கங்களில் அவர்கள் இணைத்திருக்கும் வேறு எதும் அதிகப்படியான கேட்ஜெட்களா? என்று தெரியவில்லை மொத்தத்தில் என்னால் சரியாக பலரது பதிவைப் படிக்க முடிவதில்லை.

April 22, 2009

மரம் வளர்ப்பவங்களுக்குத்தான் ஓட்டுப்போடனும்தேர்தல் நேரத்து வழக்கமாக தொலைக்காட்சியில் ப்ரச்சாரக்கூட்டங்களைக் காட்டிக்கொண்டிருந்தார்கள். ஜே வின் பேச்சைக் கொஞ்ச நேரம் கேட்டபின் மகளுக்கு எதோ சந்தேகம்..
அம்மா இவங்க யாரு பேரு மறந்துடுச்சு..
இவங்க தான் ஜெயலலிதா பழய முதலமைச்சர்.
சரி இவங்க யாரை இப்படி திட்டிக்கிட்டிருக்காங்க?
இப்பத்தைய முதலமைச்சரை..
ஏன் திட்டறாங்க?
தேர்தல்ல்ன்னா அப்படித்தான் .. இன்னன்ன செய்வோம் இன்னன்னத்துக்காக எனக்கு ஓட்டுபோடுங்கன்னு எல்லாம் இப்ப கேட்பதில்லைம்மா இதான் ட்ரெண்ட்..
பள்ளியில் எர்த்டே கொண்டாடிவிட்டு வீட்டுக்கு வந்த அன்று சொல்கிறாள்...
"அம்மா எந்த நேத்தா ( அரசியல்வாதி) மரம் வளர்த்து நம்ம ஊரை நல்லா வச்சிப்பாரோ அவருக்குத்தான் ஓட்டுப்போடனும்மா.." ( அவ கவலை அவளுக்கு அவ தானே நாளை உலகத்தில் வாழப்போறவ)

தில்லியில் பாலிதீன் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கச் சொல்லியிருந்தும் பல இடங்களில் இன்னமும் அதே பழக்கம்தான் இருக்கிறது என்றாலும் மக்கள் அதிகம் துணிப்பைகளுடன் பார்க்க முடிகிறது. வழக்கமாக வாங்கும் மளிகைக்கடையில் ப்ரவுன் கவர் கொடுக்கிறார்கள்.. வீட்டிலிருந்து பை கொண்டுவந்தால் நேராக அதிலேயே வாங்கிக்கொள்ளலாம்.

அரசின் காய்கறிக்கடையான சஃபலுக்கு சென்றிருந்தேன். அவரசரத்திற்கு நாலு தக்காளி தேவை.. கைகளிலேயே எடுத்துச் சென்றுவிடலாம் கார் அருகில் தானே என்று நினைத்தேன்.அதிகப்படியாக மாம்பழங்களையும் வாங்கி விட்டேன். வெளியே சென்றுவிட்டு திடீரென்று நினைத்துக்கொண்டு சஃபலுக்கு சென்றதால் பை கொண்டு செல்லவில்லை. கடைக்காரப் பையன் ஒரு பையைக் காட்டி 20 ரூ தான் வேண்டுமா என்றான்.. இது எதுக்கு ஒரு நாள் கூத்துக்கு என்று வாய் திறப்பதற்குள்.. இது திருப்பி குடுத்தால் நாங்க 20 ரூபாயைத்தந்துவிடுவோம் என்றான். ஆகா என்று வாங்கிக்கொண்டுவந்தேன்.. நல்ல ஐடியா தானே..

பத்திரமாக எடுத்துவைத்து அடுத்த வாரத்திலேயே அந்த பக்கம் போகும் போது கொடுத்துவிட்டு 20 ரூபாய் வாங்கிட்டோம்ல..
(ஆனால் சிலர் அதை வைத்துக்கொண்டு வாரசந்தையில் காய்கறி வாங்குவதைப் பார்த்திருக்கிறேன்.
பயன்படுத்தி பழசாக்கிட்டு சிறிது நாள் கழித்து எல்லாம் குடுக்காதீங்க மக்களே!!..)
இன்னைக்கு கூகிளில் படம் எர்த்டே... அதான் இந்த பதிவு..

April 15, 2009

நடிகர் விவேக் சொற்பொழிவு

புதன்கிழமை வேலை நாளாக இருந்தாலும் மக்கள் விவேக் ஒருவருக்காக அலைகடலென (சே தில்லியில் கடலே கிடையாதே! ) ஆந்தி காற்றென( மணற்புயல் ) வந்து குமிஞ்சிட்டாங்க.. சாலை நெறிசலில் சிக்கி தாமதமாக தமிழ்ச்சங்க அரங்கத்தை அடைந்தோம்.. மக்கள் கீழ் தளம் நிரம்பி பலகணியிலும் நிரம்பி பலகணியின் இடைப்பட்ட படிக்கட்டுகளையும் நிரப்பிக்கொண்டிருந்தார்கள். நாங்களும் கார்பெட் விரித்த படிக்கட்டுகளில் அமர்ந்தோம். ஒரு இளைஞர் அதிசயமாய் நீங்க உக்காருங்களேன் என்று எனக்கு இருக்கை அளித்தார். நன்றி சொல்லி அமர்ந்தேனோ பிழைத்தோனோ.. ? ஏறுவோரும் இறங்குவோரும் என்று தொந்திரவாக இருந்திருக்கும்.

விவேக்கும் சாலை நெரிசல் காரணமாக தாமதம் எனவே நிகழ்ச்சியும் தாமதமாகவே ஆரம்பித்தது. பத்மஸ்ரீ விருது வாங்கியவர்களுக்கு சுடச்சுட தில்லித் தமிழ்சங்கம் தரும் பாராட்டுவிழா. விவேக் பேச்சிலேயே சொன்னார் ..தமிழனுக்கு சூடுன்னா ரொம்ப பிடிக்கும்ன்னு ( தமிழ்மணம் படிப்பாரோ சூடான இடுகை எல்லாம் தெரிஞ்சுருக்கே அவருக்கு) ரெண்டு நண்பர்கள் சந்திச்சா அடிக்கிற வெயிலப்பத்தி கண்டுக்காம வாயேன் சூடா ஒரு டீ குடிக்கலாம்ன்னு சொல்வாங்கன்னு ..:)

அவரைத்தவிர அங்கே வந்திருந்த அறிஞர்களைப் பற்றிய அறிமுகம் கொஞ்சம் குறைவானதே ( ஒருவேளை என்கருத்தாக இருக்கக்கூடும்) பத்ம பூஷன்
டாக்டர் சரோஜினி வரதப்பன் சிறந்த சமூக சேவகி
பத்மஸ்ரீ
டாக்டர் கிருஷ்ணக்குமார் ( ஆரியவைத்தியசாலை கோவை )
பத்மஸ்ரீ டாக்டர் தன்வந்திரி சிவராமன் (அலோபதி டாக்டர்)
பத்மஸ்ரீ சுப்ரமணியம் கிருஷ்ணஸ்வாமி ( குறும்பட இயக்குனர்)
பத்மஸ்ரீ காஞ்சிவரம் ஸ்ரீரங்கச்சாரி சேஷாத்ரி ( கணிதம்)

ஐ ஏ எஸ் அதிகாரி பாலசந்திரன் அவர்கள் வழக்கம்போல அழகான ப்ரசங்கத்துடன் தலைமை தாங்கி ஒவ்வொருவரையும் பாராட்டிப் பேசினார். போன முறை சுசீலா அம்மாவுக்கெல்லாம் பாராட்டு விழா நடந்தபோது ஒவ்வொருவரையும் பேச வைத்தனர். ஆனால் இம்முறை யாரும் தயாராக வரவில்லையோ என்னவோ? ஆனால் விவேக் தான் சொற்பொழிவு ஆற்றுவதாக இருந்தாரே அதுக்குத்தானே கூட்டம்.

சுடச்சுடத் தமிழ்சங்கம் அளிக்கும் விழாவில் அவருக்கு பல வெளிநாட்டு தமிழ்சங்கங்களுக்கு சென்றுவந்ததில் ஒரு சுவையான நிகழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். ஊரைச்சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாது கதையாக அந்த அமரிக்க தமிழ்சங்க பெயரை மட்டும் சொல்லவில்லை. சொன்னால் இண்டர்நெட்டில் அவரை திட்டுவார்களாம்.. ( நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா..)
விழாவுக்கு போகும் முன் கிருஷ்ணா ஸ்வீட் ஓனரை கோயிலில் வைத்து பார்த்தாராம் அடுத்த நாள் நிகழ்ச்சிக்கு வாங்க என்று சொந்த அழைப்பில் அழைத்துப் போனாராம். அங்கே நன்கொடையாக எல்லாருக்கும் இலவசமாக குடுக்க என்று கிருஷ்ணாக்காரர் குடுத்த மைசூர்ப்பாக்கை டேபிள் போட்டு வித்துட்டிருந்தாங்களாம்.. பஞ்ச் டயலாக் என்னனா க்ருஷ்ணா ஸ்வீட் ஓனர் கிட்டயே சார் கிருஷ்ணா மைசூர் பாக்கு சார் 50 ரூபாதான் இண்டியாலேர்ந்து வந்திருக்கு நல்லாருக்கும்ன்னு விக்கப்பாத்தாங்களாம்.. சரி சரி நன்கொடை எப்படியோ வசூலாகுதுன்னு சிரிச்சிக்கிட்டாங்களாம்..

பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கும் போது தன் பெற்றோரையும் மேடை ஏற்றி அவர்களுக்கும் சிறப்பு செய்தார்.

வரிசையா அவர் நடித்த பல படங்களின் சாதா ( ஆனா செம ஹிட்) காமெடிகளை அடுக்கினார் . ஒவ்வொன்று க்கு பின்னும் இதுக்காகவெல்லாம் எனக்கு பத்மஸ்ரீ குடுக்கல என்று சொல்லிக்கொண்டே வந்து பகுத்தறிவு மற்றும் இன்னபிற கருத்து கந்தசாமி காமெடிகளை சொல்லி இவற்றுக்காகத் தான் கொடுத்திருக்கனும் என்று முடித்தார். விழா ஆரம்பத்தில் நடுவில் எழுந்து உள்ளே போய்விட்டு வந்தார். போகும் போது எங்க ரசிகர்கள் பயந்துடுவாங்களோ என்று இந்தா வரேன் வரேன்னு சைகை செய்ததை நினைத்து ஒவ்வொரு ரசிகர்களும் ஆனந்தப்பட்டார்கள்.

வழக்கம்போல மைக் கிடைச்சா அறுத்தெடுப்பார்ன்னு நினைச்சுத்தான் போனேன். ஆனா நாம நினைச்சது எங்க நடக்குது அவர் நல்லாவே பேசிட்டார். ஐ. ஏ. எஸ் அதிகாரியின் பேச்சை விவேக் மிகவும் பாராட்டினார்.. என்னய்யா அதிகாரிகள் என்னத்த பேசப்போறாங்க.. லெட்ஸ் ஸ்டார்ட் சொல்லிட்டு கிளம்பிருவாய்ங்களேன்னு நினைச்சேன் . யூ மேட் மை டே ன்னு சொல்லிட்டார்.


சென்னையில் மூணு க்ளைமேட் உண்டாம் ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட்.. அது மாதிரி அவருக்கு டெல்லின்னா ஹாட்டஸ்ட் ஒன்னாம் இன்னோன்னு கோல்டஸ்ட் ஆம். ஒன்னுல உடம்புவெடிக்க வெயிலாம். இன்னோன்னு உதடு வெடிக்க குளிராம்.. ஆக மொத்தம் வெடிச்சிட்டே இருக்குமாம். காலையில் வாக்கிங் கீக்கிங் போய் உடம்பை ட்ரிம்மா வச்சிக்கவேண்டிய கட்டாயத்துல இருக்காராம் ஏன்னா இன்னு ம் வர இளைய நடிகர்களுக்கும் நண்பரா வரவேண்டாமா? அமைச்சர்கள் வீடுகிட்ட ஹோட்டல். காலை வாக்கிங் போனப்ப எங்க பாத்தாலும் துப்பாக்கி காவலர்களையும் சிமெண்டு மூட்டைக்கிடையில் காவலர்கள் என்று நிம்மதியா இந்த ஊருல வாக்கிங் போகமுடியுமாய்யா.. வேகமா நடந்தாலும் பாக்கறாங்க ..மெதுவாப்போனால் சந்தேகப்படராங்க.. உத்துப்பாத்தா சுட்டுடுவாங்கன்னு பயந்துகிட்டே வாக்கிங்க் போனாராம்.

சரோஜினி வரதப்பன் கூட நல்ல வாக்கர் பீச்ல வாக்கிங்க் வருவாங்க் காந்தி மாதிரி பெரிய பெரிய ஆளுங்கள்ளாம் கூட நல்ல வாக்கர்ஸ் ன்னு அங்கயே கருத்து கந்தசாமியாகிட்டார். எல்லாரும் மன நிறைவோட அவர் ஜோக்குகளுக்கு சிரித்துவிட்டு ஆட்டோக்ராப்க்கு முண்டியடித்துக்கொண்டிருந்தார்கள்.

பி.கு நிஜம்மாகவே மேடையில் இருந்த மற்றவர்களைப் பற்றி இனிதான் நான் தெரிந்துகொள்ளவேண்டும். அவர்களைக் குறிப்பிட்டு அதிகம் எழுதாததற்கு மன்னிக்கவேண்டுகிறேன்.

April 12, 2009

எதற்கேனும் அழவேண்டும்...

கோபமோ மகிழ்ச்சியோ
அந்நேரமே
அழித்தொழித்தோ பகிர்ந்தளித்தோ
நிலை மாற்றி இடம் மாற்றி
வாழ்வடுக்கை அலங்கரித்தாள்.
பால் மறுத்து அழுத அழுகையோ
நினைத்த பொருள் கேட்டழுத அழுகையோ
அப்போதைக்கபோது
தனக்காக
கண்ணீர் வடித்தவள் வளர்ந்துவிட்டாள்.
முதிர்பருவத்தின் இழப்பென்று
அழுகை மட்டும் தொலைந்து போனது.
முகம் சுருக்கி அழுத
அகந்தை அறியாத - அந்த
பாவாடைச் சிறுமியாகி
எதற்கேனும் அழவேண்டும்.
பின்.குறிப்பு: நீங்கள் சிரிக்காதீர்கள்..

April 6, 2009

விருது , மகுடம், தோல்வி..

நான் போட்ட புத்தகம் நல்ல விற்பனை( பின்னூட்டம்)தமிழ்பிரியன் உபயத்துல தமிழ்மண மகுடத்தில் கூட ஏறிடுச்சு.. முதல்ல இது தப்போன்னு தோன்றிக்கொண்டிருந்தாலும் திட்டிவர கண்ட பதிவெல்லாம் வரும் போது நான் வரைஞ்ச புக்கைப்போட்ட பதிவு.. இதிலென்ன தவறுன்னு நானே சொல்லிக்கிட்டேன்.. :)

ஆனா கொஞ்ச நேரம் மகுடத்தில் ஏறியதுமே தம்ஸ் டவுன் குத்து குத்துன்னு யாரோ குத்தி இறக்கிவிட்டுட்டாங்க.. இப்படி ஒரு சீசா நடக்குதான்னு கேட்டாங்க தோழி.. சீசாவில் ஏறினால் தானே ஏற்ற இறக்கம் தெரியும்...இதனால் நல்லா பொழுது போச்சு.
----------------------------------
தமிழ்சங்கத்தில் மகளிர் தினப் போட்டிகள் வருடா வருடம் நடந்த சுவடு தெரியாமல் நடந்து விடும். பரிசளிப்பு நடக்கையில் மட்டும் தான் தெரியவரும். இந்த முறை விண்ணப்பதாள்கள் முன்னமே வழங்கப்பட்டு நடந்தது. என்னையும் நம்பி நாலு பேர் கலந்துக்க சொல்லி வற்புறுத்தவே நான் ஒரு அனுபவம் தானே என்று ஒரே ஒரு போட்டிக்கு மட்டும் பெயரளித்திருந்தேன். கவிதை கட்டுரைக்கு ஸ்லாஷ் போட்டு இருந்தது. 15 நிமிடம் முன்பு நூலகத்தில் கூடியவர்களுக்கு தலைப்பு வழங்கப்படும்.. பின்னர் எழுத 30 நிமிடம் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

கட்டுரையும் கவிதையும் இரண்டுமே செய்யுங்களேன் என்று சொன்னதும் சும்மாத்தானே இருக்கோம் என்று தலையாட்டிவிட்டேன்.
அறிவித்திருந்தது போல அல்லாமல் பரிட்சை கேள்விகளைப்போல தலைப்பை சொன்ன மறுநிமிடம் டைம் ஸ்டார்ட்ஸ் சொல்லிவிட்டார்கள். 15 நிமிடம் தான் என்றும் சொன்னார்கள். என்ன என்று தலை நிமிர்ந்தவர்களுக்க்கு .. இதைக்கேட்டு இன்னும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளாதீர்கள் என்று சொல்லிவிட்டார்கள். இருப்பதிலேயே டப்பா தலைப்பாகப் பார்த்து கட்டுரையை ஆரம்பித்தேன்.

கவிதைக்கும் அப்படியே .. ஆனால் மக்கள் மிகத் தெளிவாக பெண் சமூகம் இரண்டு தலைப்பும் எப்படியும் ஒத்துப்போகும் என்று சில நோட்ஸ்களை நெட்டுருவும் செய்துகொண்டிருந்தார்கள்.. வந்திருந்தவர்களில் சிலர் ஆசிரியர்களாம், ஒரு பெண்மணி பட்டிமன்றத்தில் பேசுபவர்கள். நான் 15 நிமிசம் டைம் என்றதுமே முடிவு செய்துவிட்டேன் . நம்மாலாகாது என்று. ..

சிவசங்கரி கையால் பரிசு எனக்கில்லை ... சொக்கா என்று கிளம்பி வந்துவிட்டேன் .. நடுவரம்மாவைத்தவிர யாரும் படித்துவிடக்கூடாதே என்று தான் இப்போதைய கவலை.. :))

கவிதையெல்லாம் தானாகவே தன்னை எழுதிக்கொள்ளும் என்ற கொள்கையே என் கொள்கை. இதுவரை தலைப்புக்கெல்லாம் கவிதை எழுதியதில்லையாக்கும் நான். உள்ளுக்குள் பாதிக்கப்பட்டு வார்த்தைகள் தானாகவே உள்ளே உருப்பெற்ற பின் தான் கவிதை என்று எதையோ எழுதி வைப்பது பின்னர் தான் தலைப்பிடுவது.. சரி சரி.. நிறுத்திட்டேன்..
-----------------------------------------
இந்த பட்டாம்பூச்சி விருது ரெண்டு பேரு தரேன்னு சொன்னாங்க.. வீட்டுல இடமில்லங்கன்னு சொல்லிட்டேன்.. இதெல்லாம் என்னவோ நாம தான் குடுத்துக்கறமான்னா இல்லீங்க.. ஆங்கில ப்ளாக்கர்ஸ் பக்கம் போனா .. ஸ்க்ரோல் டவுன் மெனு போட்டு எக்கச்சக்க விருது வச்சிருக்காங்க.. ஸ்டார் ல வர்ரதெல்லாம் விஜய் டிவியில் தமிழ்படுத்தி வராதா? அது மாதிரி தான் இதுவும். ட்ராப் டவுன் மெனுவெல்லாம் இப்பத்தான் தெரிஞ்சுகிட்டேன் .. வீட்டுல இடமில்லன்னாலும் விருது வச்சிக்கலாம் போலயே.. :))

என் பதிவில் வகைகள் (லேபிள்) ஸ்க்ரோல் டவுனில் மாற்றிவிட்டேன்.. ரொம்ப நாட்கள் கழித்து டெம்ப்ளேட்டில் கை வைத்திருக்கிறேன். வழக்கமாக இப்படி எதும் செய்தால் தமிழ்மணத்துல இணைக்க போராட வேண்டி இருக்கும்..அப்படி இல்லாமல் இந்த கூட்டு தமிழ்மணத்துல மணக்குதா பார்க்கலாம்..

April 4, 2009

நானும் ஒரு புத்தகம் போட்டாச்சு

சிறுமுயற்சி புத்தகமாகிறது..
எனக்குப் பிடித்த நிறம் பச்சை. அந்த நிறத்திலேயே அட்டை .


சும்மாதான் பொழுதுபோகலை.. :)

இது மொக்கை, சும்மா என்ற லேபிளின் கீழ் வரும்.

April 3, 2009

எனக்குள் ஒளிந்திருக்கும் உன் தோழி்

அழியாதகோலங்கள் தொடர்பதிவுக்காக என் வானம் அமுதாவின் அழைப்பின் பேரில் மீனாளுக்கு ஒரு கடிதம்..

மீனா எப்படி இருக்கேடீ?

பத்துவருசம் ஆகப்போகுது நாம பார்த்துக்கிட்டு.. இன்னும் பூனா தானா? உன் பசங்க எப்படி இருக்காங்க? அப்பா வீட்டுக்கு நீ வருவதே இல்லையா? நானாக உன் அப்பாவிடம் வாங்கிய நம்பரில் ஒரு முறை போன் செய்தேன் . ஆனால் அது தவறான நம்பர் என்று வந்து விட்டது. முன்னைப்போலவா பொறுப்பு அதிகமாகிவிட்டது. அம்மாவீட்டுக்கு வரும்போதும் அரக்கபரக்க வெந்நீரைக் காலில் ஊற்றிக்கொண்டு விசேசங்களுக்கு வந்தோமோ போனோமா என்று நானும் கிளம்பிவிடுகிறேன். உன் வீட்டில் அண்ணியைப்பார்த்துக்கேட்கலாம் என்று தான் நினைப்பேன். ஆனால் எப்படியோ தடையாகிவிடுகிறது.

நானாகத்தான் ஊருக்கு வந்தால் போனைப்போட்டு ஒவ்வொருவராக விசாரிப்பேன். அக்கம்பக்கத்தில் கட்டிக்கொடுத்த நம் தோழிகள் கூட ஒருவரை ஒருவர் சந்திப்பதில்லையாமடி.. பின்ன நம்மைச்சொல்லி என்ன செய்ய? நான் இந்தியாவின் கோடியிலிருந்து வந்தால் இங்கேயே 10 கிமீ தூரத்தில் இருப்பவளைப்பத்தி என்னிடமே கேட்கிறாள்கள் இவளுகள். ஒவ்வொரு மே மாதமும் கூட்டமாய் கூடி கல்லூரியின் புளியமரத்தடியில் அரட்டை அடிப்போம் என்று பூண்ட உறுதி முதல் வருடமே நமக்கு முடியவில்லையே?

உனக்கு ஞாபகம் இருக்கிறதா? பஸ் வந்தால் நம் முன்னே படிக்கட்டு வந்தால் தான் ஏறுவோம் என்று உறுதி எடுத்துகிட்டு அரட்டை அரட்டை என்று நேரம் போக்குவோமே.. என்னதான் அரட்டைன்னாலும் கெமிஸ்ட்ரி ஈக்குவேசனை அதுக்கு உதாரணம் காட்டுவியே..அய்ய்யோய்யோ அப்பல்லாம் நாங்க சிரிச்ச சிரிப்பு இருக்கே.. ஒரு தடம் கருத்தம்மா படம் பாக்கப் போயிட்டு பெண்களைப்பத்தி எத்தனை கவலைப்பட்டோம்.. ஆனா அப்பக்கூட எதோ ஈக்குவேசன் சொன்னியேடி.. :))) பசங்களுக்கு நீயே சொல்லித்தரியா.. நான் கெமிஸ்ட்ரி எல்லாம் மறந்து பல வருடமாகிவிட்டது. இப்போதைக்கு நினைவிலிருப்பது H2O மட்டும் தானடி..

இன்னும் பாவடை சட்டை போடறயா?? பஃப் கை வைத்த பூப்போட்ட பாவடை உன்னை நினைத்தாலே ஞாபகம் வரும்... ஒன்பது தோழிகளும் நவக்கிரகங்களா சுத்தி வந்தோம்.. திசைக்கொன்றாய் பிரிந்து வாழ்கிறோம்.

ஒரு நாள் வழியில் நீயா என்றபடி புவனா வந்தாள் . அவளைப்பற்றி நானும் என்னைப்பற்றி அவளும் பேசிக்கொள்ளவில்லை . குழந்தைகளின் சேட்டைகள் , பெருமைகள் அதுவே எங்கள் பேச்சு முழுதும் நிறைந்திருந்தது.

நான் பேசினப்பேச்செல்லாம் நினைவு வச்சிக்கிட்டு என்னைப்பற்றிக் கற்பனை செய்யாதே.. பேச்செல்லாம் தான் பெரிசா இருந்தது ..வாதங்கள் பிரதிவாதங்கள் எல்லாம் பொழுதுபோக்குக்கு பேசியதாகிவிட்டது.அல்லது அதனை நடைமுறைப்படுத்தத் தெரியாத முட்டாளாகிவிட்டேன் நான். சூழ்நிலை கைதியாக நான் ஜாலியா வீட்டில் உக்காந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கேன்..நான் நாலுபேருக்கு வேலைக்கொடுக்கவும் இல்லை. நான் எங்கேயும் வேலை செய்யவும் இல்லை. என் ஆசையெல்லாவற்றையும் என் மகளிடம் கொட்டி வைத்திருக்கிறேன். அவள் எட்டாத உயரங்களை எட்ட கைகோர்த்து நடக்கிறேன்..ஒருகாலத்தில் எனக்கென்ற வட்டங்களோடு சுற்றியவள் தான்.. இன்று பிள்ளைகளின் நட்பு வட்டத்து பெற்றோர்கள் என்று சுருக்கிக்கொண்டு இருக்கிறேன். குழந்தைகள் எங்கே ஆனந்தமாய் இருக்கிறார்களோ அதுவே என் உலகமாகிப்போனது.
எப்போதாவது யாருமில்லாமல் தனித்து நடந்தால் எதையோ மறந்து விட்டுவிட்டு நடப்பதாக மனசு பரபரக்கும். விரல்கள் பற்ற மகன் வரவில்லையோ சரி சரி என்று சமாதானப்படுத்திக்கொள்வேன்.


ஒரு முறை நாம் அன்றிருந்ததுபோல நம்மை மறந்து பேசி சிரித்து யாரேனும் திரும்பித் திட்டினால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது. அட தமிழ்மொழியில் சேர்ந்தாற்போல இரண்டு நிமிடம் அரட்டை அடிக்க முடியவில்லையடி ... எதோ புரியாத மொழியில் உங்களுக்குள் பேசுகிறீர்களே என்று மகளின் இன்னோரு ஹிந்திக்காரத்தோழியின் அம்மா சண்டைக்கு வருகிறார்கள். எட்டிநடைபோட்ட கால்கள் இன்று என் மகனின் வேகத்துக்கே மட்டுப்பட்டுவிட்டது .. அவன் அம்மாவுக்கு வயதாகிறது. மனதுக்கு வயதாகவில்லை. அது மீனாளோடு கதையடித்த காலத்திலேயே தான் இருக்கிறது. உன் மகன்களையும் என் மகனையும் விளையாடவிட்டுவிட்டு நாம் சிரித்திருக்கலாம்.பேராசை என்று மட்டும் சொல்லாதே..!!அம்மாவாகிய என்னுள் ஒளிந்து இருக்கும் உன் தோழியைக் கண்டுபிடிக்கவேணும் வாயேன்..
உன் தோழி கவிதா

கவிதாவாக மாறி கடிதமெழுத அழைப்பது கோமா

மிஸஸ் தேவ்