May 15, 2007

விடுமுறை! விடுமுறை!!

விடுமுறை வேண்டும் . ஏதோ ஒருவாரம் இரண்டு வாரம் இல்லீங்க...ஒன்றரை மாதம் முழுதாக வேணும். பதிவு ஆரம்பித்த


இந்த ஆறுமாதத்தில் தினசரி வாழ்க்கையில் ஒன்றாக ஆகிவிட்ட தமிழ்மணம் மற்றும் தோழமைகளை விட்டு பிரிவது மிகவும் கடினமான ஒன்றாகத் தோன்றுகிறது. இருந்தும் வேறு வழியில்லை .
தையல்காரங்களைப் பார்த்து இருக்கீங்களா ? பேசிக்கிட்டே இருப்போம் ...இங்க இப்படி பிடிச்சு இருக்கனும் , சரியில்லன்னு உடையில் தான் இருக்கும் கண். செருப்பு தைக்கிறவர் காலில் தான் கண்ணா இருப்பார். அது மாதிரி எழுத வந்ததும் பார்ப்பது எல்லாமே பதிவு மற்றும் எழுத்து இவற்றின் கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது. அதனால் இந்த விடுமுறையில் நிறைய படித்து , பார்த்து எழுத விஷயம் சேர்த்துக்கொண்டு மீண்டும் வருகிறேன். எல்லாரும் சிறுமுயற்சி பக்கத்தை மறந்துவிடாமல் இருங்கள்.
பி.கு.


அபி அப்பா மற்றும் சென்ஷி எனக்காக நல்ல பதிவுகளில் ப்ராக் ஸி குடுங்க சரியா?

May 14, 2007

சிறகு பெற்ற மனது

இன்று
சிட்டுக்குருவியினை ஒத்த
சிறகுபெற்ற என் மனது
உன் இருப்பிடம் தேடி,
வீட்டின் முற்றத்தில் இறங்கி,
உதட்டிலிருந்து சிதறிய சொற்களை
கடவுளின் பிரசாதமென
கொணர்ந்து சேர்க்கிறது .

நாளை மீண்டும் ஒரு
வண்ணத்துப்பூச்சியென
ஜன்னலின் ஊடாக நுழைந்திருக்கும்.
என்னிடமல்லாமல் வேறு யாரோடும்
பேசும் ஒவ்வோர் வார்த்தைகளையும் கூட
வேதமென எழுதி வைக்கிறது .
மறுநாளும் அதற்கப்புறமும்
வழிதவறியதாகச் சொல்லிக்கொண்டு
வாசல் நுழையும் வண்டென,
திரைச்சீலைத் தள்ளி தைரியமாய் எட்டிப்பார்க்கும் தென்றலென,
நித்தம் பல உருமாறி,
தன்வேலையைச் செவ்வனே
செய்யும் அது.


காதல் கவிதைப் போட்டிக்காக எழுதியது.

May 11, 2007

உதிர்ந்த நட்சத்திரங்கள்

நேரம் எத்தனையிருக்குமென்று பார்க்கவேண்டிய அவசியமில்லை ஞாயிறு தானே...ஆனால் எதையுமே செய்யத்தோன்றாத மனநிலை , இல்லையில்லை வழக்கமாய் செய்யாத எதையாவது செய்தே ஆகவே வேண்டிய கட்டாயத்தில் மனநிலை. எழுந்து சோம்பல் முறித்து தலைமுடியை லாவகமாக இரு சுற்றில் முடியிட்டபடி சன்னலில் எட்டிப்பார்த்தாள் , இக்கதையின் கதாநாயகி.

_________________
அடர்பச்சை புல்வெளியில் உதிர்ந்த நட்சத்திரங்களாய் இரவு பூத்த பவளமல்லிகளின் சிதறல்.அதன் மணத்தை சுவாசப்பையில் நிரப்பிக்கொள்ளும் உத்தேசத்துடன் ஒரு நீண்ட சுவாசத்தை செய்துகொண்டே கண்களை மூடிய படி அவள் நின்றாள்.
என்ன செய்யலாம் பல் துலக்கியே ஆகவேண்டுமா ? ம்...யானை என்ன பல்லாத் தேய்க்கும் எப்போதோ சின்ன வயசில் சித்தப்பா கேட்பது நினைவுக்கு வந்து ஒரு முடிவெடுத்தாள் , இல்லை எல்லாமே இன்றைக்கு தலைகீழாகத்தான் செய்யப்போகிறேன் . நேராக சென்று காபிக்கு பதில் குளிர்பெட்டியில் இருந்து மாஸா வை எடுத்துக்குடித்து விட்டு தோட்டத்திற்குள் ஒரு நடை போகலாம் என்று இறங்கினாள்.
________________

பூவுக்கு வலிக்காமல் ஒவ்வொன்றாய் எடுத்து பவளமல்லிகளை ஓரிடத்தில் சேர்த்தாள். மரம் அவளை குனிந்து உற்று நோக்குவதாய் தோன்றியது . என்ன பார்க்கிறாய் பூப்பதெல்லாம் மரத்துக்குத்தான் என்பாயே இன்று என்ன சேர்க்கிறாய் என்ன செய்யப்போகிறாய் என்று அது கேட்பதாக சரசரத்து தலையில் உரசியதாக உணர்ந்தாள் . "அதுவா இன்று நான் செய்யப்போவது எல்லாம் தலைகீழ் போ"
கற்பனை கேள்விக்கு நிஜத்தில் பதில் கொடுத்துவிட்டு வாசலில் கிடந்த க்ரானிகல் பேப்பரை எடுத்து அதில் பூக்களை எல்லாம் எடுத்துவைத்து க் கொண்டு " காலைத்தென்றல் பாடி வரும் ராகம் " என்று ஹம் செய்தபடி உள்ளே போனாள்.ஊசியைத்தேடி ஆரஞ்சு நிறத்தில் ஸ்ட்ரா போன்ற பவளமல்லியின் காம்பில் ஊசியை நுழைத்து அழகாகக் கோர்த்தாள். அம்மா அப்பாவின் படத்துக்கு மாலையாகப் போட்டாள். "உங்களை நின்று பார்த்து பேசி எத்தனை நாளாகி விட்டது ரொம்ப நாளாக நான் ஒரு இயந்திரமா என்ற சந்தேகம் தோன்றிக்கொண்டிருக்கிறது. காலையில் எழுவதும் காபியை உறிஞ்சியபடி பேப்பர் படித்து , எதையோ சாப்பிட்டு ஆபிஸுக்கு ஓடி நேரம் காலம் இல்லாமல் வேலை பார்த்து மேலிடத்தில் நல்ல பேர் வாங்கி , வேலை செய்ய முடியாத நண்பர்களிடம் திட்டு வாங்கி ..ப்ச்." என்று மனதில் நினைத்தபடி "அம்மா அப்பா சுவர்க்கத்தில் என்ன செய்யறீங்க , எனக்காக கவலைப்படாதீங்க ...சரியா " என்று வாய்விட்டு அவர்களிடம் பேசினாள் . 'நமக்கு பைத்தியம் தான் பிடிக்க ஆரம்பிச்சு இருக்கு போல என்ன இன்னைக்கு இப்படி படத்துக்கிட்டே மரத்துக்கிட்டே பேசிக்கிட்டு இருக்கோம்'' என்று தலையில் தட்டிக்கொண்டாள்.அடுத்ததாக அவள் கண்ணில் பட்டது தொலைபேசி . யாருக்காவது பேசலாம் என்றால் யாருக்கு ? ஆபிஸ் ஆட்கள் இன்று அவரவர் குடும்பத்துடன் சந்தோஷமாய் விண்டோஷாப்பிங்கோ பார்க்கோ சினிமாவோ சுற்றிக்கொண்டிருப்பார்கள். சொந்தக்காரர்கள் என்ற வுடன் யார் எனக்காகக் கவலைப்படுகிறவர்கள் இருக்கிறார்கள் அல்லது கரிசனமாய் பேசப்போகிறார்கள் இந்தத் தொலைபேசி கூட என்னைப்போல தனிமரம் தானோ ? ஆபிஸில் எதாவது அவசரம் என்றால் அல்லாது இது என்று ஒலித்திருக்கிறது, ஒரு முறை இது ஒலித்து தானே என் வாழ்க்கை யை அழித்தது என்று பழைய நினைவுக்குப் போனாள்.


பத்து வருடத்துக்கு முன்னால் ,ஒரு மாலை நேரம் இதே வீட்டின் வாசலில்,
30 ஜோடி காலணிகள் . வாசலுக்கும் திண்ணைக்குமாய் நடந்து கொண்டே அம்மாவுக்கு கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்த அவளின் அப்பாவுக்கு முன்பே இரண்டு முறை அட்டாக் வந்திருந்தது. சொந்தங்களின் அரட்டையில் வீடே அதிர்ந்து கொண்டிருந்தது. முப்பத்திரண்டு வயதுக்கு என்ன அலங்காரம் செய்ய என்று தெரியாமல் மைசூர் சில்க் கட்டி எப்போதும் போல் தலை சீவி பொட்டிட்டு அமர்ந்திருந்தாள். சின்னதாய் மல்லிகை சரமன்றி வேறு அலங்காரம் இல்லை.


இத்தனை வருடத்தில் இப்போது தான் ஒருத்தருக்கு அவள் ஒரு கல்யாணத்துக்கு தகுதியானவள் என்று புரிந்திருந்தது.4 மணிக்கு வரவேண்டும் . நேரம் ஓடிக்கொண்டிருந்தது. யாரையும் காணவில்லை. போன் ஒலித்தது. ஓடிப்போய் எடுத்த அப்பா அப்படியே சரிந்து விட்டார் . ஒரே நாளில் இரண்டு பெண்ணை பார்க்க வந்திருந்தார்களாம் .இவளை விட இரண்டு வயது குறைந்த மணமகள் கிடைத்ததால் ஒரு மணி நேரம் முன் இன்னோரு வீட்டில் நிச்சயம் செய்துவிட்டார்களாம். இப்போது அம்மாவும் இல்லை.


தனக்காய் உழைத்து விட்டு நேரம் காலம் வருடத்தின் கவலையின்றி ஓடியதால் எதையும் பெறவும் இல்லை எதையும் இழக்கவும் இல்லை அவள்.மனதுக்குள் அவளுக்கான ஆறுதலை அவளே தான் சொல்லிக்கொள்வாள் , எல்லா பூக்களுமா மாலையாகின்றன. சில பூக்கள் மலர்ந்து மரத்திலேயே இருந்து பின் உதிர்ந்து விடும் . எல்லாமே தலைகீழ் என்றாளே , ஆனால் , ஒன்று மட்டும் இன்று வழக்கம் போல தான் செய்யப்போகிறாள்.

____________________
தன்னைப்போல உதிர்ந்த நட்சத்திரங்களைக் காண ஒவ்வொரு ஞாயிறும் செல்வது போல இன்றும் மாலையில் அவள் யாருமற்றோரின் இல்லத்திற்கு செல்வாள். சில புத்தகங்களுடன் சென்று குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் படித்துக் காட்டி மகிழ்ந்திருப்பாள்.

May 10, 2007

என் முதல் ப்ளாக்

நான் முதன் முதலில் ப்ளாக் ஆரம்பித்த போது எழுதிய இரண்டு இடுகைகள் இவை. இது எழுதியது சிறுமுயற்சி ப்ளாக்கில் இல்லை வேறு. அதில் சில குழப்படி நேர்ந்ததால் புது ப்ளாக் உருவாக்கினேன். இங்கே இப்போது இணைத்து வைத்துக்கொள்கிறேன். படித்து விட்டு சிரிக்காதீர்கள் எதாச்சும் எழுத்துல முன்னேற்றம் இருக்கா பாருங்க.

அக்டோபர் 26.
என் முதல் எழுத்து இதுஎழுத வேண்டும் என்ற எண்ணம் மிக இருந்தாலும்எழுத இதுபோன்றதொரு வசதி எனக்கு இப்பொழுது தான் கிடைத்தது.மட்டுமல்லாது படிக்கவும் உங்களை போன்றவர்கள் இதுவரை கிடைக்கவில்லை.

இன்றைய தினத்தில் காந்தி தனத்தை பற்றி அனைவரும் பேசி கொண்டு இருக்கிறார்கள்.அந்த விதத்தில் இன்றைய இளையவர்களுக்கு அறிவுரை தரும் படங்கள் வருவது வரவேற்க படவேண்டியதே.[லகெ ரகோ முன்னாபாய் ]

அதிக வருவாய் அதிக சுதந்திரம் தவறான பாதையை தேர்ந்தெடுக்கும் தலைமுறைக்கு இது காந்திய கருத்துக்களை அறிமுகம் செய்கிறது.சிரார்களும் அவருடைய கருத்துக்களை படிக்க விரும்பும் வண்ணம் சிரிப்பு கலந்துதந்துள்ளனர்.கமல் மீண்டும் தரவேண்டும் ஒரு தமிழாக்கம்

இதற்கு வந்த முதல் பின்னூட்டங்கள்

வருக வருக! நல்வரவு!!
By
sivagnanamji(#16342789), At October 26, 2006 3:06 PM ·

நன்றி, முதல் எழுத்துக்கே பின்னூட்டம் தந்து வரவேற்பு தந்ததற்கு .-நான்

தமிழ் பதிவுக்கு புது வரவு.வருக வருக. நல்ல பதிவுகளைத் தருக.நாங்கள் காத்திருக்கிறோம் படிப்பதற்கு.கமலின் காதுகளுக்கு எட்ட வேண்டுமே.பார்கலாம்.நமது சங்கத்து உறுப்பினர்களே வந்து ஆதரவுக்கரம் கொடுங்கள்.
By
தி. ரா. ச.(T.R.C.),


சுத்தமும் பொறுமையும்
சுற்றுபுறத்தை பொது இடத்தைச் சுத்தமாய் வைத்து இருப்பதில்லை என்பதே நம் நாட்டில் உள்ள மிக முக்கிய குறைபாடு.ஆனால் சொல்லும் எவரும் அதை கடைபிடிப்பது இல்லை.அவர்களே கடைபிடிப்பது இல்லை என்றால், குழந்தைகள்?? குடும்பமாய் ஒரு பூங்காவுக்கு சென்ற போது அங்கே கண்ட காட்சியை எழுதுகிறேன்.(யாரது பதிவர் காட்டாறா? இப்போதைய வியர்டு பதிவு படிச்சுட்டு சுத்தத்தைப் பற்றி நீ பேசலாமான்ன்னா கேட்கறீங்க...ஏங்க அந்த அளவு மோசமில்லைங்க...)

ஒரு வெளிநாட்டு தம்பதி இரு குழந்தைகளுடன் வந்து இருந்தனர். சிறுவன் கையில் ஒரு தின்பண்ட கவரை வைத்து இருந்தான் . அது காலியானதும் அவன் அதை அருகிலேயெ கீழே போட்டு விட்டான். தந்தை அதனை எடுத்து குப்பைத் தொட்டியில் போடுமாறு கூற அவன் பலமாக மறுத்து கொண்டு இருந்தான். பிறகு நீ போடவில்லை என்றால் நாம் இங்கிருந்து போகபோவது இல்லை என சொல்லவும், சிறிது மனம் மாறிய சிறுவன் அருகில் இருந்த தொட்டியில் போட முடியாது என்றான்.

சரி என்று அவன் தாய் அவனை சற்று தொலைவில் இருந்த தொட்டிக்கருகில் அழைத்து சென்றார்.ஆனால் அவன் அங்கே சென்றதும்.. இல்லை அங்கே என்று இன்னும் தொலைவில் இருந்த ஒன்றை காட்ட ..அவன் தாய் சிரித்த முகத்துடன் ..வா என்று அழைத்து சென்று போடச் செய்தார்...எப்படியும் அவனை குப்பைத் தொட்டியை உபயோகிக்க வைக்க வேண்டும் என்பதற்கு அந்த பெற்றோர் காட்டிய பொறுமை என்னை வியப்பாக்கியது.


ரயில் நிலையத்தில் எத்தனையோ குப்பைத் தொட்டி இருந்தாலும் தேனீர் அருந்திய பின் தண்டவாளத்தில் போடும் இளைஞர்களை படித்தவர்களை அங்கேயே தட்டி கேட்பதற்கு கூட பொறுமை வேண்டும். என்ன அதெற்கு எதெற்கு பொறுமை என்கிறீர்களா? ஆம் ஒருவேளை வந்து விட்டாயா என்பதாய் திட்டு கிடைத்தால் , புத்தரைப் போல் பொறுமை காத்து ,என்னை அல்ல அவன் திட்டுவது என்று நினைத்துக் கொள்ளவேண்டுமே!!!!


இதற்கு வந்த பின்னூட்டத்தில் ஒன்று தான் இங்கே இருக்கிறது மற்ற இரண்டு காணவில்லை.

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...
அடிப்படை விசயங்களை இந்தியர்களில் 99.99999999....% பேர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு கற்றுத்தருவது இல்லை. இவர்களுக்குத் தெரிந்தால்தானே கற்றுத்தருவதற்கு.இது போன்ற தவறுகளை ஒரு தவறாகவே எடுத்துக் கொள்ளாத மனப்பான்மைதான் உள்ளது. தண்டவாளத்தில் ஒன்னுக்குப் போனா குத்தமா? என்ற அளவிலேயே இது உள்ளது. இதில் பிச்சைக்காரன் முதல் பெரும் பணக்காரர்கள் அனைவரும் சொரணை இல்லாத ஜென்மங்களே.இரயிலில் சாதாரண வகுப்பில் பயணம் செய்பவன் முதல் உயர் வகுப்பில் பயணம் செய்பவன் வரை அனைவரும் குப்பையை ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறியும் ஜென்மங்கள்தான்.


வரிசையில் பொறுமையாக நிற்கவும், குப்பையை அதற்கான இடத்தில் (அது இல்லாத பட்சத்தில் தன்னுடன் வைத்து இருந்து வீட்டில் கொண்டு சென்று போடுதல்) போடுவதற்கும் சுய அறிவு இல்லாத ஜென்மங்கள் வாழும் இந்த நாடு என்றும் இந்த விசயத்தில் திருந்தாது.திருந்த வேண்டுமா? ஒரே வழி குழந்தைகளுக்கு சின்ன வயதில் இருந்தே இது போன்ற விசயங்களில் பெற்றோர்கள் முன்மாதிரியாகச் செயல்பட்டு வர வேண்டும்.இந்த ஜென்மங்கள் பிட்சா தின்னுவது,கார் வங்குவது,ஜீன்ஸ் போடுவது போன்றவற்றில் வெளிநாட்டை கேள்வியே கேட்காமல் காப்பி அடிக்கும்.ஆனால் ...விடுங்கள்... முடிந்தால் நீங்களும் உங்கள் குழந்தைகளும் இதை கடை பிடியுங்கள்.

நான் எழுதியது ஆமாம் வீட்டுல எப்படியோ வெளியே போனால் பிக்னிக்கோ இல்லை பயணமோ குப்பை போடுவதற்கென்று ஒரு கவர் கொண்டுசெல்வேன். வாழைப்பழத்தோலிலிருந்து சிப்ஸ் கவர் வரை எல்லாம் அதில் போட்டு கொண்டுவந்து வீட்டுக் குப்பைத்தொட்டியில் தான் போடுவது வழக்கம்.

May 9, 2007

நானா ரசனை இல்லாதவன்?

எனக்கு குறுக்கும் நெடுக்குமாய் நடக்கிறாள் மலர் . காலையில் இருந்தே எனக்கு ஒரே பரபரப்பு அலுவலகத்தில் ஒரு முக்கிய மீட்டிங்.இவளானால் காலுக்குள் காலுக்குள் நடக்கிறாள்.கண்ணுக்குள் கண்ணுக்குள் எதையோ பார்க்கிறாள். அம்மா டிபனை எடுத்து வைத்துக்கொண்டு இன்னுமா தூக்கம் என்ற பிறகு தான்
கட்டிலை விட்டே எழுந்திரித்தேன் . எண்ணமெல்லாம் இன்றைய மீட்டிங் கில் எப்படி பேச வேண்டும் என்ன எதிர் கேள்வி வரும் என்று தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இவளுக்கென்ன ஆகியிருக்கும்.

ஷேவ் செய்ய எல்லாம் எடுத்து வைத்து ஆரம்பிக்கும் போது சன் ம்யூசிக்கில்
"சுடும்நிலவு சுடாத சூரியன் ஓடும் நிமிஷம் உறையும் வருஷம் எல்லாம்
எல்லாம் எல்லாம் வேண்டுமா காதலித்துப்பார் காதலித்துப்பார் " ...ஆமா எல்லாம் சரிதான் பார்த்திருக்கேன் பார்த்திருக்கேன் அவள் தான் எதுவுமே வேண்டாம்ன்னு போயிட்டாளே .

நீலநிறத்தில் முழுக்கைச்சட்டை சரியா இருக்கும்..அது சரி எந்த நீல நிறம் ..வாங்கறது எல்லாமும் நீலந்தானே . அம்மா அதானே எப்பவும் கேக்கறா "ஏன்டா இது புதுசா என்ன? போன தீவாளிக்குக்கூட இது மாதிரி தானேடா வாங்கினே எனக்கொண்ணும் வித்தியாசமே தெரியல போ." '
ம். அவள் கூட எனக்கு நீலநிறத்தில் தான் சட்டை எடுத்துத்தந்தாள்.

"ம்...உங்களுக்கு ரசனையே இல்லையோன்னு தோணுது . நான் புது சேலை கட்டி இருக்கேன் . பார்த்து நல்லாருக்குன்னு சொல்லத்தோணுதா? டிபனை தட்டில் எடுத்து வைத்துவிட்டு தண்ணீரோடு வந்து பக்கத்திலே உட்கார்ந்து என்னையே பார்த்த மலரை இப்போது தான் கவனிக்கிறேன் ."

"அடடா அதான் விஷயமா உனக்கென்னடா நீ எது கட்டினாலும் நல்லாருக்குமே இதென்ன கேள்வி ம்.. இந்த புடவைக்குத்தானே பெருமை . அட்டகாசமா இருக்கு. . மீட்டிங் இருக்குடா நேரமாச்சு ...சரியா ..பை"

ம்...நானா ரசனை இல்லாதவன் .
கருப்பில் மஞ்சள் பூ சேலையில் ஒரு அழகு . பிங்கில் வெள்ளைப்பூ சூடிதாரில் ஒரு அழகு. எது புதிது , எது வழக்கமாக உடுப்பது என்று பார்த்துப் பார்த்து ரசித்திருக்கிறேன் என்னவளை . அப்போது.

May 8, 2007

நமக்கு மட்டும் தெரிந்த ரகசியம்

காற்று மணலை அள்ளிக்குவித்துக் கொண்டிருந்தது. புல் கூட முளைக்காத அந்தத் திடலின் ஒரு பக்கத்து மதிலின் சுவரோரம் நீல மற்றும் மஞ்சள் பிளாஸ்டிக் ஷீட்களால் கட்டப்பட்டிருந்த கூடாரத்தின் நிலைமைபற்றிக் காற்றுக்கு என்ன கவலை? சுழட்டி சுழட்டி அடித்து ஷீட்களை அங்கும் இங்குமாக கட்டியிருந்த முடிச்சுகளை அவிழ்த்து விடும் வேகத்துடன் வீசிக்கொண்டிருந்தது.


இழுத்துக்கட்ட எத்தனையோ முயன்று கொண்டிருந்தான் , ராம்சிங் . இந்த மாதம் இப்படித்தான் இருக்கும் என்று தெரியும் (bina)பீனா வின் நிலைமையை நினைத்து வேலையை முன்பே முடித்துவிட எண்ணி இருந்தான். எங்கே உச்சியைப் பிளக்கும் வெயிலில் வேலை அத்தனை சீக்கிரம் முடிந்துவிடுமா என்ன?


திடலின் மறுபக்கத்தில் உடைந்திருந்த மதிலை புதுப்பிக்க நியமிக்கப்பட்டவர்களில் ஒருவன் அவன். கூடாரமிட்டு தங்கி , வேலை செய்யுமிடத்திலேயே தான் வாழ்க்கை..இங்கே வேலை முடிந்திருந்தால் மட்டும் என்ன பாதுகாப்பாய் குடியிருக்க என்ன வீடா இருக்கிறது? இருந்தாலும் நல்ல இடத்தில் ஒரு கூடாரம் போட்டிருக்கலாம். புல் தரையோடு மணல் எழும்பாத நிழல் இருப்பதான இடமாக.. இங்கேயோ மணற்காற்றில் இருந்து பீனாவைக் காப்பாற்றுவது பாடாய் இருந்தது அவனுக்கு.


காற்று அவிழ்க்க இவன் முடி போட இருவருக்குமான அந்த போராட்டத்தில் ஒரு கட்டத்தில் காற்று பின்வாங்கி தன் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. தோல்வியுற்ற காற்று அவமானத்தால் இப்போது அவனைப் பழிவாங்குவது போல் இருக்கும் ஓரிரண்டு மரங்களின் கிளைகளைக் கூட அசைக்க மனமில்லாமல் சலனமற்று ப் போனது. வேர்த்து வேதனைப்படட்டும் என்று நினைத்ததோ என்னவோ?


தன் இருப்பை உணர்த்த அவ்வப்போது பீனாவும் சிறு சிறு முனகல்களால்
முயற்சித்துக் கொண்டிருந்தாள். முந்தின வாரமே பத்து ரூபாய் மட்டுமே வாங்கும் மருத்துவரை தேடிக்கண்டுபிடித்து மருந்து சீட்டு எழுதி வாங்கியாயிற்று.ஆனால் மருந்து வாங்க 80 ரூபாய் சேர்க்கத்தான் ஒரு வாரம் ஆகிவிட்டது. அதிலும் ஒரு பத்து குறைகிறது. மூன்று வேளை உணவை ஒரு வேளையாக்கி தினமும் ரொட்டி தால் செய்ய ஆகும் செலவை விடுத்து 10 ரூபாய் சேர்த்து ஒருவாரத்தில் இத்தனை சேர்த்திருந்தான்.சிறு தூறல் வந்து மணற்பரப்பை ஈரமாக்கியது . இனி காற்றடித்தாலும் கவலையில்லை . மண் இனி முன்போல பறக்காது என்ற நிம்மதி வந்தது அவனுக்கு. பணம் வந்தவுடன் பீனாவிடம் சொல்லிக்கொண்டு கடைக்குப் போய் மருந்து வாங்க வேண்டும் என்று நினைத்தபடி காத்திருந்தான் . ஒருவாரத்தில் மருந்து கொடுக்காவிட்டால் அவளை அதற்கு அப்புறமும் தன்னிடம் அழைத்து வர அவசியமில்லாமல் போகும் என்று அவளுடைய மோசமான நிலைமையை குறிப்பால் உணர்த்தி இருந்தார் மருத்துவர்.


காண்ட்ராக்டரின் ஆள் வந்து வழக்கத்தைவிட குறைவான வேலை தான் அன்று நடந்திருப்பதாகச் சொல்லி குறைத்தே குடுத்தான். சரி இன்று ஒருவேளை உணவும் கிடையாது. பழைய கோதுமையைக் கஞ்சி காய்ச்சி "தலியா" செய்துகொள்வோம் என்ற யோசனைகளுடன் மருந்துக்கடையில் சீட்டை
நீட்டினான். பணம் இருக்கா? கேள்வியோடே வாங்கினான் கடைக்காரன் . ஆமாம் இவன் உடையைப் பார்த்தால் அவன் அப்படி கேட்பது சரிதானே. அவனும் ஒரு தொழிலாளி . முதலாளியிடம் பதில் சொல்லக் கடமைப்பட்டவன் தானே.


எடுத்து வைத்த மருந்துகளில் ஒன்று கூட உண்மையான தரத்தில் செய்யப்பட்டது இல்லை யென்பதும் கடை முதலாளியின் சகோதரன் தனியாக
ஆரம்பித்திருக்கும் போலி கம்பெனியின் மருந்துகள் என்பதும் கொடுப்பவனுக்கும் தெரியாது வாங்குபவனுக்கும் தெரியாது. எனக்கும், இப்போது நான் சொன்னதால் உங்களுக்கும் மட்டும்தான் தெரியும்..இதை ராம்சிங்குக்கு யார் சொல்வது?