மாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக
April 3, 2008
யாரும் என் கதையைக் கேட்பது இல்லை!!
கே.ஏ.அப்பாஸ் கதைகள் - தமிழாக்கம் முக்தார்
முதல் நான்கு சிறுகதைகள் வாசித்ததுமே .. அதிலும் இந்த "சந்தா" வின் கதை குற்றவாளிகள்
படித்ததும், சுருக்கம் நிறைந்த ஒரு மூதாட்டி மனசிற்குள் உட்காந்து கொண்டு புலம்பிக்கொண்டே இருக்கிறாள்.
"இந்தக் கிழவியை மன்னித்து விடு மகனே! எனது இதயம் நோகும்போது கண்களில் நீர் தாரை தாரையாக வந்து கொண்டே இருக்கும் "
ஓ, மழை குறைந்து விட்டது. இப்போது வெளியே போனால் கடைத்தெருவிற்கு, வைத்தியர் கடைக்குச் சென்று, ‘என் கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது, மருந்து கொடுங்கள்’ என்று சொல்லு, பைத்தியக்காரி சந்தா அனுப்பி இருக்கிறாள் என்று சொல்லு.
ஆனால் நீ முதலிலேயே சென்று விட்டாயே, என் வெற்றுரைகளைக் கேட்டு அலுத்து விட்டாயா? இறுதியில் நீயும் என் கதையைக் கேட்கவில்லை - யாரும் என் கதையைக் கேட்பதில்லை - நான் பைத்தியக்காரி அல்லவா...” மழை நிற்கும் வரை தங்கி இருக்கலாமே, மகனே
கதையினை நீங்களும் வாசியுங்கள் முழுமையாக ....
------------------------
வெகுநாட்களுக்கு பிறகு ஒரு அழகான காதல் கதை படித்தேன்.
இப்பொழுதும் தான் எத்தனையோ பேர் கதையும் நாவலும் எழுதுகிறார்கள்.ஆனால் எவற்றிலிருந்தாவது கற்றுக்கொள்வதற்கு உணர்ந்து கொள்வதற்கு எதாவது இருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான். நாவலோடு இணைந்து கதாபாத்திரங்களோடு இணைந்து இப்படி இரு இப்படி இருக்காதே என்று சொல்லாமல் சொல்வது இப்போது காணக்கிடைப்பது இல்லை. அவன் நல்லவன் இவன் கெட்டவன் ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டு, அந்த கதாப்பாத்திரம் கதையில் என்ன செய்கிறது என்பது ,அந்த வார்த்தைக்குள் அடங்காமல் போனாலும் கவலைப்படாமல் இழுத்துக்கொண்டே போவதும் வழக்கமாய் இருக்கிறது.
மு.வரதராசன் எழுதிய "பாவை" நாவல் படிக்கக்கிடைத்தது. காதல் ரசம் தான் கதையின் நாடி என்றாலும் இடையிடையே இருந்த வரிகள் அந்நாளைய சமூக நிலைகளை அதனைப்பற்றிய ஆசிரியரின் கருத்துக்களை குறிப்பிடும்படியாக அமைந்திருக்கிறது.
"குருவிக்காரர் செய்யும் ஆரவாரங்கள் தெருக்கூத்துக்காண ஊரார் கூடிவிட்டார்கள். ஆனால் ஊரில் உள்ள எல்லாரும் போகவில்லை . உறங்கிவிட்ட குழந்தைகள் போகவில்லை: உறங்காதகிழவர்களும் போகவில்லை. உறங்கத்தெரியாத செல்வர்கள் போகவில்லை. பட்டுத்துணிகளை அடுக்கிவைத்திருக்கும் பேறு பெற்றவர்கள் போகவில்லை........... அரசாங்கத்திற்குத் தாம் ஒரு தூண் என்பதாக எண்ணிய மணியக்காரர் போகவில்ல: ...இப்போது அவர்களோடு சேர்ந்து ஆற்றைக்கடந்தால் வாழ்வின் பெருமை போய்விடும் என்பது அவர்கள் கவலை.."
இன்றும் இந்த நிலை ஒன்றும் மாறவில்லை.. மேல்தட்டு மக்களின் கோயிலில் கீழ் தட்டுமக்கள் தென்படுவது குறைவு. கீழ்த்தட்டுமக்களின் கோயிலுக்குள் மேல் தட்டுமக்கள் நுழைவதாகத் தெரியவில்லை.. .
கதையில் கதாபாத்திரங்களைக்கொண்டு அன்பையும் நேர்மையையும் உண்மையையும் அதன் சிறந்த நிலையையும் உணரும் படி செய்கிறார்.. காதல்கதையே ஆனாலும் அதில் இத்தனை யும் பிரதிபலிக்கிறது.
எடுத்த புத்தகத்தை கீழே வைக்காமல் படித்து முடித்துவிட்டேன்.எனக்குப்பிடித்த கதாப்பாத்திரங்கள் - ஏகாம்பரம் செட்டியார் - நேர்மை,
சுவாமிநாதன்,கமலம்- நல்லதொரு இணை
கண்ணப்பர்- நல்லதொரு கணவன் .
டிஸ்கி: தலைப்பு சும்மாவாச்சுக்கும் கேட்சியா இருக்கதான்.. என்ன வைக்கிறதுன்னு தெரியல.. கிழவியை மன்னித்துவிடு மகனே! ன்னு வச்சிருக்கலாமோ :)
February 20, 2007
சில கேள்விகளும் பதில்களும்
என் மதமே சிறந்தது என்பது சரியா?
கொள்கை வெறி நல்லதல்ல. எனது மதம் ஒன்றே சரியானது மற்ற மதங்கள் தவறு என்பது நல்லதல்ல.எல்லாரும் கடவுளைத்தான் வழிபடுகிறார்கள். இனிப்பு ரொட்டியை நேராக சாப்பிட்டாலும் சரி, குறுக்காக சாப்பிட்டாலும் சரி இனிப்பாகவே இருக்கும்.
கடவுள் உருவம் ,அருவம் எது சரி?
ஒன்றில் நம்பிக்கை இருந்தால் சரி. உருவமில்லாதவர் கடவுள் என்றால் அது ஒன்றுதான் உண்மை என்ற எண்ணத்திற்கு இடம் தராதீர்கள். உருவமும் உண்மை என்பதை நினைவில் வைக்கவேண்டும். ஆனால் உங்களுக்கு எது நம்பிக்கையோ அப்படி கும்பிடுங்கள் .
கெட்டவர்களிலும் இறைவனே இருக்கிறான் அவர்களிடம்
எப்படி நடப்பது?
கடவுள் எல்லா உயிரிலும் இருக்கிறார். ஆனால் நல்லவர்களுடன் பழகலாம். கெட்டவர்களைக் கண்டால் தூர விலகி நிற்க வேண்டும். புலியிலும் கடவுள்
இருக்கிறார். அதற்காக புலியைக் கட்டித் தழுவிக்கொள்ள முடியாது. புலியும் கடவுளே, புலி வருகிறது ஓடு என்பவனும் கடவுளே அவனுடைய வார்த்தையை ஏன் கேட்கக் கூடாது.
கெட்டவர்கள் கெடுதல் செய்ய வந்தால் நாம் என்ன செய்யவேண்டும்?
பாம்பு ஒன்றின் கதை மூலம் சொல்கிறார், தீமை செய்ய வரும்போது அவர்கள் துன்பம் தந்துவிடாமல் இருக்க சீறலாம் பயமுறுத்தலாம் . ஆனால் பதிலுக்கு விஷத்தைச் செலுத்திவிடாமல் இருக்க வேண்டும் .
இன்று ஸ்ரீராமகிருஷ்ணரின் பிறந்தநாள். கஷ்டமான தத்துவங்கள் அவர் கூறும் எளிமையான கதைமூலம் யாரும் புரிந்துகொள்ளும்படி இருக்கும். எத்தனை மதங்களோ அத்தனை வழிகள் என்று மத நல்லிணக்கம் கூறிய அவருடைய கருத்துக்கள் நிறைந்த அமுதமொழிகள் புத்தகத்திலிருந்து எடுத்தது.
February 8, 2007
மாறித்தான் ஆகவேண்டும்
நாம் காண்பதோ கோபம் ,அச்சம் , பகை , போர் . தனி மனிதரிடம் , சமுதாயத்திடம், உலக நாடுகளுக்கு இடையே என்று அமைதியின்மை பெருகிக் கொண்டே போகிறது.
இந்த நிலைமை நீடிக்கலாமா? மாறித்தான் ஆக வேண்டும்.
இயற்கை நியதியை _ ஒரு செயலின் விளைவிலிருந்து ஒரு போதும் தப்ப முடியாது என்ற நியதியை உணர்ந்து எப்போதும் விழிப்போடு செயலாற்றப் பழகிக் கொள்ள வேண்டும். எண்ணம் , சொல், செயல், மூன்றிலும் விழிப்போடு இருக்க வேண்டும்.
தற்சோதனை செய்வதால் அறிவு கூர்மையடைந்து கிரகிக்கும் சக்தி அதிகப்படும். பிறரோடு ஒத்து வாழும் நிலையும் சந்தர்ப்பச் சூழ்நிலைக்கேற்ப சகித்துப் போகும் நிலையும் (Adaptablility) உண்டாகும். தன்னலம் கருதாத தகைமையுணர்வும் (Magnanimity) மேலோங்கும்.
இவற்றால் தீமை விளைவிக்கும் செயலில் ஈடுபடமுடியாத நிலை ,ஆக்கச் செயலில் மட்டுமே ஈடும்படக்கூடிய தெளிவு தானே உண்டாகிவிடும்.
ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவுண்டு. ஒவ்வொருவரும் தனக்கோ , பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ , உடலுக்கோ, உயிருக்கோ தீங்கு நேரா வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அமைதியும் இன்பமும் ஏற்படும்.
January 29, 2007
எப்படி எழுத வேண்டும்?
அருமையான உள்ளக் காட்சிகளை எளிமை கொண்ட நடையிலே எழுதுவது நல்ல கவிதை. ஆனால், சென்ற சில நூற்றாண்டுகளாக, வெகு சாதரண விஷயங்களை அசாதாரண அந்தகார நடையில் எழுதுவது தான் உயர்ந்த கல்வித்திறமை என்று தீர்மானம் செய்து கொண்டார்கள்.
கூடிய வரை பேசுவது போலவே எழுதுவது தான் உத்தமமென்பது என்னுடைய கட்சி.எந்த விஷயம் எழுதினாலும் சரி ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம் ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் , எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது.
பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து அதாவது ஜனங்களுக்கு சற்றேனும் பழக்கமில்லாமல் தனக்கும் அதிக பழக்கமில்லத ஒரு விஷயத்தைக் குறித்து எழுத ஆரம்பித்தால், வாக்கியம் தத்தளிக்கத் தான் செய்யும், சந்தேகமில்லை.ஆனாலும் ஒரு வழியாக முடிக்கும் போது வாய்க்கு வழங்குகிறதா என்று வாசித்துப் பார்த்துக் கொள்ளுதல் நல்லது. அல்லது ஒரு நண்பனிடம் படித்துக்காட்டும் வழக்கம் வைத்துக் கொள்ளவேண்டும். சொல்ல வந்த ஒரு விஷயத்தை மனதிலே சரியாகக் கட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு கோணல், திருகல் ஒன்றுமில்லாமல், நடை நேராகச் செல்ல வேண்டும். முன்யோசனை இல்லாமலே நேராக எழுதும் திறமையை வாணி கொடுத்து விட்டால், பின்பு சங்கடமில்லல.
ஆரம்பத்திலே, மனதிலே கட்டி முடிந்த வசனங்களையே எழுதுவது நன்று. உள்ளத்திலே நேர்மையும் தைர்யமுமிருந்தால் கை பிறகு தானாகவே நேரான எழுத்து எழுதும்.தைர்யம் இல்லாவிட்டால் தள்ளாடும். சண்டிமாடு போல் ஓரிடத்தில் வந்து படுத்துக் கொள்ளும். வாலைப் பிடித்து எவ்வளவு திருகினாலும் எழுந்திருக்காது.
வசன நடை, *கம்பர் கவிதைக்குச் சொன்னது போலவே தெளிவு, ஒளி, தண்மை , ஒழுக்கம் இவை நான்கும் உடையதாகயிருக்க வேண்டும். உள்ளத்திலே தமிழ்ச் சக்தியை நிலைநிறுத்திக் கொண்டால், கை நேரான தமிழ் நடை எழுதும்.
* ( " சவியுரத் தெளிந்து தண்ணென் றொழுக்கமும்
(பி.கு.) இது என்ன இவளுக்கே எழுதத் தெரியாது ? சொல்ல வந்துட்டான்னு தானே பார்க்கறீங்க? அதுவுமில்லாமல்
சொன்ன கருத்துக்கும் எழுத்துக்கும் கொஞ்சமும் பொருத்தமில்லாத பழைய காலத்து எழுத்து நடை என்று
பார்க்கறீங்களா? இப்படி எல்லாம் எழுத எனக்கு எங்கே வரும் " படித்ததில் பிடித்தது " பகுதிக்கு இது. பாரதியாரின்
"கவிதையும் வசனமும்" எனும் எழுத்தில் இருந்து எடுத்தது.
December 21, 2006
முகவரியைத் தொலைத்தவர்கள்
முகவரியைத் தொலைத்தவர்கள்
--அப்துல் ரகுமான்
மனிதனின் உண்மையான முகவரி எது?
பெயரில் அவன் இருக்கிறானா? இல்லை.
பெயரென்பது வெறும் சப்த அடையாளம்.
இடுகுறி.
எந்த மனிதனும் அவன் பெயருக்குள் இல்லை.
இந்த உலகம் கதவு எண்ணை முகவரியாகச்
சொல்லுகிறது.
மனிதன் கதவு எண்ணிலா இருக்கிறான்?
இல்லை.
கதவு எண் மனிதனின் முகவரி அல்ல.
இந்த உலகம் வசிக்கும் வீட்டை முகவரியாக சொல்கிறது.
வீடு மனிதனின் முகவர் அல்ல.வீடு
உடலுக்கு ஒரு சத்திரம்.அவ்வளவுதான்.
சிலர் முகவர்ச் சீட்டில் தங்கள் தொழிலைக்
குறிப்பிடுகிறார்கள்.
மனிதன் அவன் பார்க்கும் தொழிலிலா
இருக்கிறான்? இல்லை.
தொழில் என்பது வயிற்றுத் தீயைத்
தணிப்பதற்கான தண்ணீர், அவ்வளவுதான்.
தெருவோ, ஊரோ, நாமோ ஏன் உலகமோ
கூட மனிதனின் முகவரி இல்லை.
இவை மனிதனின் முகவரி என்றால் சில
நேரங்களில் அவன் இவற்றையெல்லாம்
விட்டு விட்டு வெளியேற நினைக்கிறானே ஏன்?
மனிதனின் முகவரி அவன் ஆன்மாவில்
இருக்கிறது.
வாழ்க்கை என்பது இந்த முகவரியைத்
தேடும் முயற்சிதான்.
ஆனால், வாழ்க்கை என்ற சந்தைக் கூட்டத்தில்
மனிதன் தன் முகவரியைத் தொலைத்துவிடுகிறான்.
மனிதனுடைய துயரம் இதுதான்.
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய முகவரியையே
தேடி அலைய வேண்டியிருக்கிறது.
கவிஞர் ராஹி கூறுகிறார்:-
ராஹிக்கு என்ன ஆகிவிட்டது.
நண்பர்களே?
தயவு செய்து சொல்லுங்கள்
அவன் தன் தெருவிலேயே
தன் முகவரியை
விசாரித்துக் கொண்டிருக்கிறான்.
November 15, 2006
யாருக்கு போர் வேண்டும்?
மனிதகுலத்தில் வாழ்க்கை வளம் காக்கும் முயற்சியில் ஏற்பட்ட ஆட்சி முறைகள் பலப்பல. தடியாட்சி,முடியாட்சி சர்வாதிகார ஆட்சி கடைசியாக குடியாட்சி அன்று ஆட்சி முறைகள் வந்தன.ஆட்சியாளர்கள் எடுத்த பாதுகாப்பு முயற்சியே போர்களாக உருவானது. இப்பொழுது மனித குல வாழ்க்கை வசதிகளும் விஞ்ஞானமும் கல்வியின் மூலம் உயர்ந்துள்ளன.இன்னுமா போர் மனிதனுக்கு வேண்டும்? யாருக்கு போர் வேண்டும்?யுத்தத் தளவாடங்கள் செய்து விற்பனை செய்பவர்களுக்கு மாத்திரம் போர் வேண்டும்.ஐக்கிய நாடுகள் சபையில் ஐந்து நாடுகளுக்கு ரத்துரிமை [VETO power] என்ற அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.எனவே அந்தச் சபை உலகக் குடியாட்சி முறையாகச் செயல்பட முடியவில்லை. சில நாடுகளுக்கே உள்ல இந்த உரிமையை ரத்து செய்ய வேண்டும்.
ஒவ்வொரு நாடும் எல்லை பாதுகாப்பு ராணுவம் வைக்காமல் ஐநா சபை எல்லா நாடுகளுக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு செய்யவேண்டும்.
போரில்லா நல்லுலகம் வேண்டும்.வளம் பெற்று வாழ்வோம்.
மேலும் மகரிஷியின் எழுத்துகளை படிக்க அறிய
http://www.vethathiri.org/