November 30, 2011

பேரருள்

காணிக்கை என்பதும் கையூட்டாய்
கடவுள் கூட அவர் கூட்டாய்
பால்வெண்மையில் கரையுமோ
சிவப்பு நிறப்பாவங்கள்
கண்கள் மூடிய அரையிருட்டில்
தள்ளுமுள்ளு இல்லாத
தரிசனத்தில்
தள்ளுபடியானதோ கணக்குகள்?
மனமிரங்கக் கேட்டோர் குரல்
மலை எதிரொலிக்க பட்டு
திரும்புவதோ
வாழ்வின் திருப்பம்?
நீளும் உயிரும்
நெருக்கிய இருளுமாய்
தவித்த இரைச்சல்களை
கடந்த கால்கள்
இன்று யாத்திரையோ?
குற்றம்சுட்டிய விரல்கள்
நெஞ்சு துளைக்க
இன்றவர் கூப்பியகரங்களோ?
இல்லையென்றார்
இருக்கின்றாரென்றார்
நிலையானவர் என்றார்
நிலையுயர்த்துவார் என்றார்
நிலையாக நிற்பவரே
உம்நிலை தான் என்ன?

டிசம்பர் 2009 - ஈழநேசன் தளத்தில் வெளிவந்த எனது கவிதை

November 27, 2011

கூட்டம்


வண்ணக்குழம்புகள் பூசிய முகங்கள்
ஒன்றேபோல உடைகள்
புடைத்த நரம்புகள்
கனத்த குரல்கள்
குறிக்கோள் தாங்கிய கண்மணிகள்
வீசி உதறி குதித்து
ஓரோர் பக்கமாய் நிமிர்ந்து நின்றனர்.

பறவையைப்போல்
சிறகுவிரித்துப் பறந்தான் ஒருவன்
மஞ்சள் வண்ணம் ஒளிரும் முகம்
சிரிக்கக் கண்டார்கள்.

நிமிட இடைவெளியில்
புகுந்தான் ஒருவன்
திரண்ட தோளுக்குரியவனாய்
கருமையும் செம்மையுமாய்
வண்ணக்கலவை மிரட்ட
உரக்கக்கூவினான்
யார் நீ? யார் நீ?

நான் நீ! நான் நீ!
குழம்பி உரைத்தான் இவன்.
மறுத்துச் சாய்த்தான் ஒருவன்..
மடங்கி சரிந்தான் இவன்..
இதயம் கனத்தது என்றது கூட்டம்.
எதையோ இழந்தோம் என்றது கூட்டம்.
பேசிக் கலைந்தது கூட்டம்.
கூட்டம் விட்டுச்சென்ற
முகமூடிகளைப்
பொறுக்கிச் சேர்த்தான் ஒருவன்.

நன்றி:
 22 ஜூலை 2009 ல் ஈழநேசன் முல்லை இணைய இதழில்  வெளிவந்த என் கவிதை. 

November 16, 2011

யந்திரவாகனன்


சிறுமுயற்சிக்கு 5 வருடம் நிறைந்துவிட்டது.
அதற்கு காரணமாயிருந்த நட்புகளுக்கு என் நன்றிகள்.

நான் செம்படம்பர் மாதம் தில்லி ஹிந்தி அகடமியில் கவிதை வாசித்தபோது என்கவிதைகளை மொழிபெயர்த்து தந்த பாலசுப்ரமணியம் சார் அவர் மொழிபெயர்த்த இப்புத்தகத்தை தன் நல்லாசிகளோடு கையெழுத்திட்டுத்தந்தார்கள். நாவலை மற்ற கதைகளைப்போல நான் வேகவேகமாக கடக்கவே முடியவில்லை. நாலோ ஐந்தோ பக்கம் படித்துவிட்டு மூடிவைத்துவிட்டு நானும் அவரைப்போலவே உள்ளே யோசிக்கக்கூட ஆரம்பித்துவிட்டேன். யோசனை ஓடி ஓடி ஒரு சில கவிதைகள் கூட எழுதிவைத்தேன். மனசுக்குள்ள(யும்)யே பேசித்தீர்த்துக்கிறவங்களுக்கு இந்தக்கதை படிக்க ரொம்பவுமே பிடிக்கலாம். உடலைத்தேர் என்றும் ஆத்மாவை தேரோட்டி என்று கொண்டதாக உருவகிக்கும் ஆழமானதொரு கதையை மொழிபெயர்த்தவரே எனக்கு பரிசளித்தது மிகப்பெருமையாக கருதுகிறேன். நன்றி சார்.

[கவிதை வாசிப்பு நிகழ்ச்சியை இங்கே யூட்யுபில் காணலாம்..
என்கவிதைகளின் முதல் மேடை..பிழைகளைப் பொறுத்தருள்க. கவிதை வாசிப்பு நிகழ்விற்கு என்னை பரிந்துரைத்த திரு ஷாஜகான் அவர்களுக்கு சிறுமுயற்சியின் பாதையில் ஒரு முக்கிய நிகழ்வை தந்ததற்காக தனிப்பட்ட நன்றியை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.

ஹிந்தியில் என் கவிதைகள்

இரண்டு கவிதைகள் ராஜஸ்தானி மொழியில் திரு நீரஜ் தையா அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.]


--------------------------------------------
யந்திரவாகனன் - சந்திரசேகர் ரத் ஒரியா மொழியில் எழுதிய நாவல்.
ஹிந்தியில் - சங்கர்லால் ப்ரோஹித்
தமிழில் - திரு ஹச்.பாலசுப்ரமணியம்

தாசர் என்கிற கிராமத்துக்கோயிலில் பூஜை செய்கிற மனிதரோட கதை. கிடைக்கிறதை விட அதிகமா எதிர்ப்பார்க்காத நிம்மதியான மனுசனான தாசர் ,உலகத்து வாழ்வில் வாழ்வதைவிட மனசுக்குள் ஒரு வாழ்க்கையை தனியா வாழ்ந்துகிட்டிருக்கார். சொல்லப்போனா அவர் மனசுக்குள்ள வாழற வாழ்வைத்தான் முழுமையா வாழ்ந்தார்ன்னு நினைக்கிறேன்.

தோட்ட வேலை செய்கிற மாலியையும் சத்பதி போன்ற தத்துவநெறிகளை அறிந்த மனத்தெளிவு கொண்டவராக மதிக்கப்படறவரையும் சமமாக ஞானிகளாக பாவிக்கிறார். அவர்களை ஏறக்குறைய துலாபாரத்துல ஒரு தட்டில் வைத்து தன்னை அஞ்ஞானியாக மற்றோரு தட்டில் வைத்து உள்ளுக்குள்ளேயே தர்க்கம் செய்துக்கிறார்.பழமையான எண்ணங்களில் தத்துவங்களில் பழகிப்போன வாழ்க்கையை வாழ்ந்தாலும் அவரோட மனசுக்குள்ளே அவற்றை கேள்வியும் கேட்டு விவாதம் செய்கிறார். பசுவை தானம் குடுக்கச்சொல்லி ஒருவருக்கு சொல்லிவிட்டு அதை தனக்கான ஆதாயத்துக்காக சொல்லிவிட்டோமோ என்ற குற்ற உணர்ச்சியில் மனுச மனங்களின் கள்ளங்களை அவர்களின் நேர்மையைப்பற்றி கேள்விக்கேட்டுக்கொள்கிறார். விதியைப்பற்றி இறந்த பின்னான உலகம் பற்றியும் படித்தவனானாலும் நீலகண்டருக்கு இருக்கின்ற பொறாமையைப்பற்றியும் நீளநீளமாக யோசித்து நேரம் கடத்தி மனைவியின்
“இப்படியே தான் உக்காந்திருக்கப்போறீங்களா ?”

போன்ற அதட்டலில் நிகழுலகத்துக்கு வந்து வந்து போகிறவர்.புரிக்கு திருவிழா பார்க்க குடும்பத்தை அழைத்துச்செல்லமுடியாத நிலையில் ..

“கோவிந்த தூவதசி வர்ரது எல்லாரும் கிளம்பராங்க , புண்ணியம் சம்பாதிக்கவா போறானுக ? அட ஒரு ஆடு நொண்டித்துன்னு பின்னால் வர எல்லா ஆடும் நொண்டுமே அது மாதிரி கதைதான்”
என்று திருவிழாவில் கடையும் கொண்டாட்டமும் என்று கடவுளை நினைக்காதவங்களை பற்றி குறைபட்டுக்கொண்டே மனைவியின் புலம்பலிலிருந்து தப்பித்து கோயில் வாசலில் தூங்கிய தூக்கத்தின் நடுவில் கனவில் அவர் புரிக்குச் சென்று கடவுளையும் தரிசித்துவிடுகிறார்.

ரயில் வண்டியிலிருந்தே ஜெகன்னாநாதனை நினைத்தபடி கூட்டத்தில் முண்டியடித்து

‘ஹே பரந்தாமா! ஈரேழு பதினாலு லோகமும் உன்னுடைய லீலாபூமி . பிரபு! உனக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா? அகற்றிடு மேகநாதர் மதிலை..மேகத்தின் பக்கமாக உயர்த்தி விடு இதை. எவ்வளவு தூரத்திலிருந்து உன்னை தரிசிக்க வந்திருக்கு ஜனகோடிகள். ஏழை எளியவர் எல்லாரையும் உள்ளே நுழைய விடு . எல்லாரும் பக்கத்தில் வரட்டும் .. ஹரி ஜெகந்நாதா! ஜெய் ஜகன்னாதா!உன்னைக் கண்களால் பருகும்போதே இந்த உயிர் பிரிஞ்சுடனும் 

என்றபடி மற்றவர்களுக்காகவும் வேண்டி உருகி வழிபடும் அவர் உள்ளுக்குள் கண்ட தரிசனத்தைப் போல கோயிலுக்கு போனவர்கள் கூட கண்டிருக்கமுடியாது.


சத்பதியைப்பற்றி மாலியும் தாசரும் உரையாடுவதிலும் சத்பதியிடம் விவாதிக்கிற இடங்களிலும் தத்துவங்களை கேள்விகேட்டு புரிந்துகொள்ள முயல்கிறார்கள்.

ஒருநாளானால் மனைவியும் குழந்தைகளும் தன்னை வாழ்க்கையில் பெரும் மோகத்தில் ஆழ்த்தும் சக்திகளென்று வெறுத்து யோசித்தாலும் மருத்துவம் பார்க்க பணமில்லாமல் மனைவியும் ஒரு மகனும் இறந்த பின்  மனைவியின் மேலான அன்பு மேலிட மனம் பேதலித்து நிற்கிறார்.

 தனக்குள்ளே பேசி தர்க்கம் செய்து வாழ்ந்தவர் பேதலித்த மனதோடு வாய் வார்த்தை குறைந்து உள்ளுக்குள் ஆமைஓட்டுக்குள் சுருங்கியது போல இருக்க, அவரின் மனம் மாற்ற கொள்ளவேண்டுமென்று சத்பதி தலயாத்திரை அழைத்து செல்கிறார். மௌனச்சாமியாராக..காசிக்கு சென்று கங்கையில் முங்கி சிவனை தரிசிக்க செல்லும் வழியில் அவருடைய பேதலித்த நடையைக் கண்டு கடைக்காரர்கள் தாமாக அவரையும் பூஜித்து, கடவுளுக்கு சாத்த பூவும் பொருட்களும் குடுக்க..
‘கடைசியில் பிச்சையும் எடுத்தாய் இல்லையா?’
இவர்களுக்கு என்ன பைத்தியமா? என்னை மதிப்பதற்கு ..காசியில் எது வேண்டுமானாலும் நடக்கும். தினம் ஒரு மகான் தோன்றக்கூடும் மனிதனைபிடித்து மகானாக்குவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கபோகிறது
என்றபடி சத்பதி மகராஜிடம் வேடிக்கையாக .. காசி மக்களுக்கு பக்தி ஜாஸ்தி இப்படி பைத்தியம் பிடிச்சு என்னையும் பைத்தியமாக்கிவிட்டார்கள் என்று சொல்கிறார்.

எவ்வளவு மனைவியை மறக்க நினைக்கிறாரோ அவ்வளவு அவள் நினைவுக்கு வருவதை
‘’” இந்த டுக்கு அம்மா அடிக்கடி நினைவுக்கு வராளே ஏன் ? ஒரு நாழிகைப் பொழுதாக நானும் பார்க்கிறேன் அவள் ஞாபகமே வருதே! மனம் ரொம்ப சஞ்சலமடைகிறது’ மதுரா பிருந்தாவன்னு சொல்றாளே எப்படி இருக்கும் போய் வரலாமா என்றாள் நான் சிரிச்சி மழுப்பினேனே.. அவ ஆத்மா மறந்திருக்காது . அவளும் கூடவே வந்திருக்கா. என் சரீரத்தில் புகுந்து அவளும் பிருந்தாவன் பார்ப்பா போலிருக்கு. //

தாசரும் அவரை மனசமாதனம் படுத்த

இவ்வளவு தூரம் கிளம்பி வந்தது அதையெல்லாம் விடறதுக்குத்தானே . நீர்தான் வீணாக நிழலை பார்த்துண்டு ஓடறீர்’

இல்லே சுவாமி! வெளிச்சத்துக்கு வரும்போதெல்லாம் நிழலையும் கூடவே கொண்டுதானே நடக்கவேண்டி இருக்கு.

ஒளியை இலக்காகக் கொண்டு நாம் முன்னேறினா நிழல் தானே
பின்னடைஞ்சுடாதா? அதுக்கு போய் கவலைப்படுவானேன்?’

அப்ப நிஜம்மாவே நிழல் விட்டுப்போயிடும்ன்னு சொல்றேளா? ஒளிபக்கத்தில் வரவர நிழலும் அதிலிருந்து சக்தியைப் பெருக்கிக்கும் . ஒளியோட சேர்ந்துட்டா அங்க நிழல் இருக்காதே. அது ஒளியில் லயித்துவிடும்’
எத்தனையோ சிந்தனைத்தெளிவாக ஓரொரு சமயம் பேசினாலும் ,தன்னை சுற்றி நடப்பதையோ , பேச்சுக்களையோ உணரமுடியாத நிலையிலேயே சிலநாட்கள் குழம்பி பின் மனைவி ஆசையாக செல்லவேண்டுமென்றாளே அந்த ஜகன்னாத புரியில் இறக்க ஆசைபடுகிறேன் என்று அங்கேயே சென்று இறக்கிறார்.

படித்தவராகவும் இந்த சாதரண மனுசன் மேல பொறாமையும் கொண்டிருந்தவராகவும் இருக்கிற நீலகண்ட பண்டிதருக்கும் தாசருடைய மரணத்திற்கு பின்பு அவரின் மகத்துவம் ,பொறாமையற்ற எளிமையான மனது புரிகிறது.