கண்ணாடியை லவட்டிய குரங்கின் உபயம்.. ஏறக்குறைய ஊர்சுத்திக்காமிக்கிற கைட் ஆக மாறி ரொம்பநாளச்சுங்க. ஒருமுறை கோவர்த்தனம் போகலாம்ன்னு கிளம்பினோம். போறவழியில் பிருந்தாவனத்தில் நம்ம ஊரு பெருமாள் கோயில் இருக்கே அதையும் காமிச்சிட்டு அங்க இருக்கும் அய்யரிடம் கோவர்த்தனம் பத்தி எதும் தகவல் கிடைக்குமா கேட்டுப்போகலாம்ன்னு திட்டம். 11 மணிக்குள் போனால் திறந்திருக்கும் இப்ப மூடி இருப்பாங்களே என்று பேசிக்கொண்டே உள்ளே சென்றோம். வெளிப்பிரகாரம் சுற்றித்தான் அந்த கோயில் வாசலுக்குக் போகலாம்.. அதற்குள் கோயில் மூடிய சேதியும் தெரிந்தது. சுற்று பிரகாரத்தில் சில தமிழ் அய்யர்கள் வீடு இருப்பதால் கேட்கலாமே என்று ஒரு வீட்டின் வாசலில் கால் எடுத்துவைக்க இருந்த நேரம். எனக்கு கண் தெரியவில்லை. ஆமாங்க எனக்கு கண் தெரியவில்லை. இத்தனை நேரம் தெள்ளத்தெளிவாக் தெரிந்த கண் கலங்கலாக மேகமூட்டமாக இருக்கிறது.
பொதுவாக கண்ணாடி போடவில்லை என்றால் தான் எனக்கு அப்படி இருக்கும். ஆனால் நடந்து கொண்டிருக்கும் போது நான் கண்ணாடியை கழட்டவும் இல்லையே.. என் கை தானா கண் பக்கத்தில் போனால் என் கண்ணாடி இல்லை. எல்லாரும் அய்யோ குரங்கு என்று கத்துகிறார்கள். உற்றுப்பார்த்தால் ஒரு குரங்கு அதன் கையில் என் கண்ணாடி. என் கண்ணாடியை அத்தனை லாவகமாக அது லவட்டி இருக்கிறது. என் மேல் துளி கூட நகம் படாமல்.
உடனே அது வீட்டின் மேல் ஏறி ஓடவும் ஆரம்பித்துவிட்டது. சட்டென்று இரு சாந்துபொட்டிட்ட ஹிந்திபேசும் இளைஞர்கள் எங்கள் முன்னால் வந்தார்கள். அதற்கு பிஸ்கெட் போட்டால் குடுத்துவிடும் பிஸ்கட் இருக்கா என்றார்கள். நாங்களோ எல்லாமே காரில் வைத்துவிட்டு ஹாயாக வந்திருக்கிறோம். பிஸ்கட் வாங்கசென்றவர் திரும்ப வருவதற்குள் குரங்கைப் பிடிக்க மேலே ஏறிய அந்த இளைஞர்கள் சிறிது நேரத்திற்கு பின் வந்து தனித்தனியாக காதை கடித்து துப்பிய கண்ணாடியைக்கொடுத்துவிட்டு அதற்கு பணம் கேட்டார்கள். பிஞ்சு போன கண்ணாடிக்கு என்ன தருவது என்று பேரம் பேசி லென்ஸ்க்காக 50 ரூ குடுத்தோம்.
பிறகு தான் தெரிந்தது குரங்கை இதற்காகவே அந்த இளைஞர்கள் பழக்கிவைத்திருக்கிறார்கள் என்று அதற்கு பிறகு கோவர்த்தன கிரியை அடைந்த போது எல்லா கோயில்களிலும் கடவுள் இப்படித்தான் இருப்பார் என்று என் ஞானக்கண்ணாலே வணங்கிக்கொண்டிருந்தேனே தவிர என் ஊனக்கண்ணால் வணங்க இயலவில்லை.
ராதாராணி பாதம் என்று ஒரு இடம் இருக்கிறது. அதனருகில் ஒரு சிறு ஆசிரமம் . அங்கே மரத்தின் அடியில் ஒரு கல் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது அதனைக்காட்டி, ஒரு சாது ,"இங்கே பாருங்கள் இந்த கல்லில் உங்களுக்கு என்ன தெரிகிறது" என்று கேட்டார். அவருக்காக உற்றுப்பார்த்ததில் எதோ தெரிகிறார்போலத்தான் இருந்தது.. ஆனால் ஞானக்கண் அப்போது சரியாக வேலை செய்யவில்லை. அவரே சொன்னார். ஒரு ஹனுமான் கல்லின் இயற்கை கலரிலேயே சுயம்புவாக இருக்கிறது என்று.. க்ரீடம் வால் போன்ற இடங்களெல்லாம் மட்டும் தெரிந்தது. மேலும் சில அந்த சிறு குடிலுக்குள் உள்ளது என்றார். உள்ளே செல்ல பயந்து நான் பின்வாங்கிவிட்டேன்.
அடுத்தமுறையும் கோவர்த்தனம் சென்றோம். அதே இடம்.. போன முறையை விட அந்த பாதம் இருந்த இடத்தில் எக்கச்சக்கமான குரங்குகள்.. அதனால் யாரும் காரைவிட்டே இறங்க மறுத்துவிட்டார்கள். நாத்தனார் கணவர் ம்ட்டும் நீங்கள் எனக்கு காண்பியுங்கள் என்று கேட்டதால் கண்ணாடியை பேண்ட் பாக்கெட்டில் ஒளித்துவைத்துக்கொண்டு இறங்கிவிட்டேன். குடிலுக்குள் நடு நாயகமாக இருந்த ஒரு கண்ணாடி போட்ட மேடையில் பல விதமான கற்கள் இருந்தது . அவை எல்லாம் ஒரு குரு வின் கலெக்ஷனாம்..
ஒவ்வொரு கல்லிலும் விதவிதமான உருவங்கள் இயற்கையாகவே வந்த உருவங்கள். ஓவியங்களைப்போல நிழலாக இருந்தன. ஹனுமான் க்ரீடத்தோட முட்டிக்காலில் சிவனை வணங்கும் போஸ்... கிருஷ்ணனை கைபிடித்த யசோதையைப்போல ( ஓவியங்களில் அதிகம் பார்ப்பீர்கள்) கண்ணன் வெண்ணை உண்ணும் காட்சி...புலி, இப்படி... முதலில் அவர் சொல்லும் போது தெரியாது உங்கள் மனக்கண்ணில் அதை உருவகப்படுத்தி ஒப்பிட்டுப் பார்க்கும் போது அது தெரியும்.. ஆச்சரியமாக இருந்தது..