September 29, 2010

பம் பம் போலே -நீல்கண்ட்

ஐயப்பன் கோயில் அறையில் மற்ற பொருட்களை வைத்துவிட்டு இரண்டு நாட்களுக்கான துணிமணிகளை மட்டும் எடுத்துக்கொண்டு ரிஷிகேஷ் செல்ல முடிவு செய்தோம். காலையில் ஒரு ரயில் உண்டு என்று குளிரைப் பொருட்படுத்தாமல் கிளம்பிவிட்டோம். வருடக்கடைசியின் குளிர் 'உங்களுக்கு அவ்வளவு தைரியமா?' என்று எங்களை தன் குளிர்காற்றால் தாக்கத்தொடங்கியது. கையுறையையும் தாண்டியும் எங்களூக்கு நடுக்கம் . இஞ்சி டீ ஒன்றைக் குடித்துவிட்டு ரயில்நிலையம் சென்றோம். அங்கே பலர் குளிரில் நடுங்கியபடி படுத்திருந்ததைப் பார்த்தோம். ஒரு வயதான பாட்டியும் ஒரு சிறுமியும் காலில் செருப்பும் இல்லாமல் அனைவரிடம் கையேந்திக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஏழ்மை தாங்கும் சக்தியை குடுத்திருக்கிறது போல.. காலுறையையும் ரிபோக் ஷூவையும் தாண்டி குளிர் நடுக்கியது எனக்கு. கண்ணைத்தவிர எதும் தெரியாத படி நான் மூடிக்கொண்டு அமர்ந்திருந்தேன்.


இரண்டு பெண்கள் வேறொரு மாநிலத்திலிருந்து வந்திருந்தார்கள். கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். அவர்களில் ஒருத்தியின் அப்பா ராம்தேவ் ஆசிரமத்தில் நடக்கும் யோகவகுப்புக்கு பணம் கட்டி இருப்பதாகவும் அவர் வேறொரு ரயிலில் வருவார் என்றும் இவர்கள் ஹாஸ்டலிலிருந்து வந்து அவர்களுடன் இணைந்துகொள்ள இருப்பதாகவும் சொன்னார்கள். ஆஸ்தா டீவியில் காண்பிக்கும் பெரும் கூட்டம் கூட்டமாக நடக்கும் யோக வகுப்புக்களுக்கு இப்படித்தான் எங்கெங்கிருந்தோ வருகிறார்கள் போலும்..

ரிஷிகேஷில் இறங்கும்போது சற்று கதிரொளியால் கதகதப்பைப் பெற்றோம். ஷேர் ஆட்டோவில் தங்குமிடம் சென்றோம். ரிஷிகேஷ் யோகா வகுப்புக்களுக்கு ப்ரசித்தி பெற்ற இடம். பார்க்குமிடமெல்லாம் சுருட்டிவைக்கப்பட்ட யோகா விரிப்பு நீட்டிக்கொண்டிருக்கும் பெரிய முதுகுப்பையுடன் யாராவது ஒரு வெளிநாட்டு பயணியை எதிர்படுகிறோம்.

ஹரித்வாரைப்போன்ற ஆராவாரங்கள் கொஞ்சம் ரிஷிகேஷில் குறைவு அதனாலேயே முன்பே வடக்குவாசல் ஆசிரியர் பென்னேஸ்வரன் ரிஷிகேஷிலேயே நீங்கள் தங்கலாமே என்று அறிவுறுத்தினார். ஆனால் முதல் முறை என்பதால் ஹரித்வாரிலும் பார்க்க வேண்டிய இடங்கள் இருந்ததால் நாங்கள் ஹரித்வாரில் இரண்டு நாட்கள் தங்கிவிட்டோம். ரிஷிகேஷில் திருக்கோவிலூர் மடத்தைச் சேர்ந்த தங்குமிடத்தைப் பற்றியும் கூறி இருந்தார்.

மடத்தின் பொறுப்பை மேற்கொள்ளும் ஆச்சி எப்போதும் பிசியாகவே இருந்தார். எங்களுக்கு அறையின் சாவியைத்தந்தார். கல்லூரியின் ஹாஸ்டல் போல.. அறை எளிமையாக ஆனால் வசதிக்குறைவு ஏதுமின்றி இருந்தது. குளித்து உடைமாற்றி வந்தபோது உணவுக்கூடத்தில் கூட்டமாக இருந்தது. மடம் ஊருக்கு வெளியே இருப்பதால் இங்கேயே உணவருந்தவேண்டும் என்று தெரியும். ஆனால் இவ்வளவு கூட்டமா என்று பார்த்தோம். நல்ல இட்லியும் மெதுமெதுவடையும் கேசரியும் மணக்கும் சாம்பரும் கிடைத்தது. பின்பு தான் தெரிந்தது வந்திருக்கும் கூட்டம் தில்லியைச்சேர்ந்த சாயி மன்றத்தினர் என்றும் அவர்கள் வருடப்பிறப்பை இங்கே கொண்டாடுவது வழக்கமென்றும்... அவர்கள் கூடவே அழைத்து வந்திருக்கும் சமையல்காரர்கள் புண்ணியத்தில் தான் இந்த உணவு வரிசைகள். மற்ற நேரத்தில் மடத்தைச் சேர்ந்த சமையல்காரரின் சுமாரான சாப்பாடு கண்டிப்பாக உண்டு தான்.

மடத்திலிருந்து சற்று தூரம் நடந்து முக்கிய சாலையை அடைந்த பின் ஷேர் ஆட்டோ கிடைக்கிறது அதில் ஏறி நாங்கள் லஷ்மண் ஜூலா சென்றோம். அதன் அக்கரையில் நீல்கண்ட் செல்லும் வண்டிகள் கிடைக்குமென்று ஆச்சி எங்களுக்கு சொல்லி இருந்தார்கள். லஷ்மண் ஜூலாவிற்கு ஒரு இடத்தில் இறக்கிவிடுகிறார் ஆட்டோக்காரர் .

(படங்களை க்ளிக் செய்து பெரியதாக்கியும் பார்க்கலாம்)
அங்கிருந்து குறுகிய ,கடைகள் நிறைந்த ஒரு இறக்கப்பாதையில் இறங்கி நடந்தோம். வழியில் ஓரிடத்திலிருந்து எடுத்த படம் தான் மேலே இருப்பது. ஜூலா என்றால் ஊஞ்சல் என்று அர்த்தம். கங்கைக்கரையின் மிக உயரமான இரண்டு புறத்தையும் இணைக்கும் அந்த தொங்குபாலம் மிக அற்புதமான ஒன்று தான்.

மறுகரையில் இருக்கும் அந்த கோயில் பல அடுக்குகளாக அழகாக காட்சி தருகிறது. நாங்கள் அதற்குள் நுழையவில்லை.

மறுகரையில் ஜீப்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. பேருந்துகளைப்போல அவை லக்ஷ்மன் ஜூலாவிலிருந்து நீல்கண்ட் சென்று திரும்புகின்றன. போகும் போதே நாம் தலைக்கு 90 ரூ என்று நினைக்கிறேன் பேசிக்கொண்டால் இருந்து அழைத்து வந்துவிடுகிறார்கள்..

போகும் வழியெல்லம் கங்கையின் பேரழகையும் மலையழகையும் என்னால் வார்த்தைகளில் அடக்க இயலாது. ஜீப்பின் ஓரத்தில் அமர்ந்தபடி ஒரு கையால் பேலன்ஸ் செய்துகொண்டு மறுகையால் எடுத்த படங்கள் இவை. ஹரித்வாரும் ரிஷிகெஷும் அப்போது கும்பமேளா தயாரிப்பில் இருந்தது. கரையோரங்களில் முக்கிய ப்ரமுகர்களும் சாதுக்களும் தங்க டெண்ட்கள் கட்டப்பட்டிருந்தது. பார்க்கவே ஆசையாக இருந்தது.

வளைந்து நெளிந்து செல்லும் சாலையில் வெளியூர்க்கார வண்டி ஓட்டிகள் தான் மிக ஆபத்தானவர்கள். வேகம் குறையாமல் வருவது மலைப்பாதையில் எதிர்படும் வாகனங்களுக்கு வழிவிடும் வழிமுறையும் தெரியாமல் திகில் ஏற்படுத்துகிறார்கள்.

நீல்கண்ட் சிவன் கோயில் . நேரம் ஆக ஆக கோயிலின் வெகுதூரத்திலேயே பார்க்கிங் செய்யவேண்டிய நிலை. கொஞ்ச தூரம் நடக்க்வேண்டியதானது.

ஆரஞ்சும் மஞ்சளுமான பூக்கள் கொண்டு செய்திருந்த அலங்காரம் கண்ணைப்பறித்தது. வெளிப்பகுதியில் ஒரு சின்னக்குழந்தை சிவன் பளிங்கில் சாய்ந்தவாக்கில் படுத்திருக்கிறார்.

கோயிலின் உள்ளே செல்ல சன்னிதிக்கு சில படிகள் கீழே இறங்கி நடக்கவேண்டி இருந்தது. எல்லாரும் கைகளில் பால் மற்றும் தண்ணீர் அபிசேகத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள். ப்ளாஸ்டிக் டம்ளர் தண்ணீர் விற்கிறது.
பம் பம் போலே பம் பம் போலே என்று உணர்ச்சி அலைகளுடன் சென்று அந்த சிறிய லிங்கத்துக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

ரிஷிகேஷ் ஆரத்தியை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

September 20, 2010

கங்கா பூஜா அவுர் பேட் கி பூஜாகங்கைக்கு விளக்கேற்றி வழிபட பூக்களும் நெய்விளக்கும்..

காசி ஆரத்தி அளவு இல்லை ஆனால் ஹரித்வார் ஹர்கிபௌரியில் நல்ல கூட்டம். கரையை ஒட்டிய சிகப்பு நிற கங்கா மாதா கோயில். கங்கையின் மத்தியில் ஒரு படித்துறை கட்டி ஆரத்தியை எதிர்புறத்திலிருந்தும் பார்க்க வசதி செய்திருக்கிறார்கள்.

மணிக்கூண்டுக்கு பக்கத்தில் ஒரு மேடையில் ஆதிசங்கரரும் அவருடைய சீடர்களும்

ஹர்க்கிபௌரியில் கூட்டம் சேரத்தொடங்கியதும் , நீல நிற சீருடையில் இருப்பவர்கள் சிலர் கூட்டத்தை ஒழுங்கு படுத்தியபடி அன்னதானம் பற்றி கூறி நன்கொடை கேட்கிறார்கள். ஒரு குழுவை 'இங்க ஒக்காரு அங்க உக்காரு' என சொல்லிவிட்டு அவர்களுக்குள் பிரித்துக்கொள்வார்கள் போல..


ஆற்றில் ஒரு பக்தர் குழந்தையைக் குளிப்பாட்டிக்கொண்டிருந்தார். அந்தக்குளிர் மாதத்தில் மாலைநேரக்காற்றில் கங்கையும் என்ன குறைச்சலா பனிக்கட்டியாக வருகிறாள். அச்சிறுவனின் உடம்பின் ஒவ்வொரு எலும்பையும் நாங்கள் எக்ஸ்ரே இல்லாமலே பார்த்தோம்.. ரெண்டு செம்பு தான், ஓடிவிட்டான். கூட்டம் எக்கச்சக்கமாக சேர்ந்ததும் ஒரு தள்ளுமுள்ளு நடந்தால் என்று ஆற்றின் நடுவில் உட்கார்ந்திருக்கும் போது சற்று பயம் வந்தது. மக்களுக்கு அளவுக்கு மீறி பக்தி வரும். பக்திக்கு மீறி சில சமயம் உயிர் பயம் வருமே..

உட்காருவதற்கு என்று பளபளவென மன்ச் ஃபைவ்ஸ்டார் போன்றவற்றின் மேலட்டைகளுக்கு பயன்படுத்தப்படும் காகிதங்களை விற்றபடி இருந்தார் ஒரு தாத்தா. 5 ரூபாயாம். அவருக்காக வாங்கிக்கொண்டோம். எல்லாம் சீனாவிலிருந்து வருகிறது. டூப்ளீகெட் தயாரிக்கவா இருக்குமோ..!!


ஆரத்தி பாடல் ஒலித்தது. இங்கிருந்தே தெரிந்தவரைப்பார்த்தோம். (மறுநாள் ரிஷிகேஷில் பார்த்த ஆரத்தி இதை விட மிக நன்றாக இருந்தது)
ஹரித்வாரில் இருந்த வரை தினம் அகர்வாலில் சாப்பாடுக்கு பின்னர்... ஐய்யப்பன் கோயில் சந்தில் ஒரு மட்கி(சின்னமண்க்கலயம்) பால் ,கொஞ்சம்போல் ஏடுவிட்டு..

பின்னர் ஊறவைத்த சென்னாவில் சாட் மசாலா.. ஆகா அந்த குளிருக்கும் அதன் ருசிக்கும் நினைக்கவே நா ஊறுகிறது.

முக்கிய சாலையில் ஷிவ் மூர்த்தி தாண்டியதும் ஒரு திரையரங்கம் இருக்கிறது. நாங்கள் போயிருந்த போது '2012 'ஓடிக்கொண்டிருந்தது. மாலை நேரத்தில் அங்கே நம்ம ஊரு பையன் ஒருத்தர் தோசைக்கடை போடுகிறார். நல்ல வியாபாரம். ஒரு நாள் அதையும் ருசிப்பார்த்தோம். மசாலா வெங்காயம் தூவிய தோசைகள்.

காலையில் குஜராத் சமாஜம் எதிரில் இஞ்சி டீ. ஒரு குத்து இஞ்சியை கல்லால் நசுக்கி போட்டால் குளிர் ஓடிப்போச்..அவருக்கு அருகிலேயே இன்னோருவர் டோக்ளா விற்கிறார். எனக்கு அது பிடிக்காது அதனால் வாங்கவில்லை..அது நம்ம ஊரு இட்லிக்கு மஞ்சள் கலர் அடித்தது போன்ற சுவையில் இருக்கும். காலங்கார்த்தால கடலை மாவை உருண்டையா உருட்டி அதை ஒரு கையால மரப்பலகையில் அழுத்தி நீட்டமா பாம்பு சட்டையாட்டம் தேச்சுவிட்டு அதை அப்படியே தூக்கி எண்ணையில் போட்டு பொரிச்சு எடுத்து நீட்டறார். அதை தொன்னை தொன்னையா வாங்கி சாப்பிடறாங்க..
அடுத்து ரிஷிகேஷ் போலாம்...

பின்.குறிப்பு{கங்கா பூஜா அவுர் பேட் கி பூஜா- பூஜான்னா 'நான் கடவுள்' பூஜா இல்லை.. கடவுளுக்கு செய்கிற பூஜை..
பேட் - வயிறு}

September 17, 2010

தேவி தரிசனம் -ஹரித்வார் நினைவுக்குறிப்பு

நீல்பர்வதம் .அழகான மலை. மலைமேலே இருக்கிறாள் சண்டிதேவி. ஆதி சிலையை அமைத்தவர் ஆதிசங்கரராம். கோயிலுக்கு நடந்தும் செல்லலாம். நாங்கள் ரோப் காரில் சென்றோம். செங்குத்தான மலை மேலே ரோப் காரில் போவது நன்றாக இருக்கிறது. கீழே ஒரு கம்பி வலை இருந்தது. ரோப் கார் கீழே விழுந்தால்... என்று பாதுக்காப்புக்கு வைத்திருக்கிறார்கள் போல..

சண்டிதேவி கோயில்

சண்டி தேவி கோயில் இருக்கும் மலையில் அஞ்சனைக்கு ஒரு கோயில். கால் வலிக்குதுன்னு சொன்ன குட்டிப்பையன் 'ஹனுமான் சாலிசா பாடுவியே? அஞ்சனிபுத்ர பவனு சுத நாமா ன்னு அந்த ஹனுமானோட அம்மா அஞ்சனி இருக்காங்க அந்த கோயிலில்' என்றதும் எங்களுக்கு முன்னால் நடக்க ஆரம்பிச்சிட்டான்.. சின்ன கோயிலில் அஞ்சனை மடியில் சின்ன ஹனுமான்.மானசி தேவியும் இன்னோரு மலையில் இருக்காங்க நீங்க வரிசையில் நிக்கவேண்டாம் என்று , இரண்டு கோயில் ரோப்காருக்கும் சேர்ந்தாப்ல டிக்கெட் வாங்கிக் கொண்டுவந்திருந்தார் பட் பட் ஆட்டோக்காரர். ரோப்காருக்காக கொஞ்சம் வரிசை இருக்கத்தான் செய்தது.

மானஸி தேவி கோயில் கடைகளில் வெள்ளிநிறக் குடையும் பூக்களும் அலங்கரிக்கப்பட்டு விற்பனைக்கு.

மான்ஸி தேவி கோயிலிலிருந்து கீழே இறங்கும் போது ஹரித்வாரின் முழு அழகையும் ரசிக்கலாம்.

மாயா தேவி மந்திர் இதுவும் மிகப்பழமையான ஒரு கோயில். சித்தப்பீடக் கோயில்களின் ஒன்னுன்னு சொல்றாங்க.. சதியோட உடலின் ஒரு பாகம் விழுந்த இடம்.

கங்கைக் கரையோரமாக நடந்து கொண்டே காலையில் பட்பட் ல் போகும் போது கண்ணில் பட்ட நம்ம தென்னிந்திய கோபுரத்தைத் தேடிப்போனோம். கங்காமாதா கோயில் தான். கும்பகோணத்து ஐயர் ஒருவர் இருந்தார். சாயரட்ச பூஜைக்கு நாங்கள் தான் இருந்தோம்.


இந்த படம் மொபைல் போனில் எடுத்ததால் தெளிவு இல்லை.. இப்படி தேவி தரிசனத்தோடும் கங்கை தரிசனம் செய்துவிட்டு கங்கா ஆரத்தி நடக்கும் ஹர்க்கி பௌரிக்கு கிளம்பினோம் .. தொடரும்..

September 14, 2010

யமுனையின் தண்ணீர் போர்!!!!!


ஆசியாவில் மிகப்பெரிய கோயிலாக அக்ஷர்தாம் தில்லியில் யமுனையின் கரை மீது கட்டப்பட்டபோதே இது யமுனையின் கரையில் கட்டப்படலாமா என்று பலர் கேட்டிருந்தார்கள். கூடவே காமன்வெல்த் க்ராமமும் அங்கேயே கட்டப்பட்டது. அதற்கு செல்வதற்காக ஒரு பாதையும் அமைக்கப்பட்டது அப்பாதை மிக உயரமாக ஒரு அரண் போல கோயிலைச் சுற்றிக்கொண்டு கட்டப்பட்டது. என்றாவது யமுனையில் வெள்ளம் வரும்போது அது இந்த ஆற்றுபடுகையின் கோயிலைப் பாதிக்காதவண்ணம் தான் ஏற்படுத்தப்பட்டிருக்கவேண்டும்.


நான் திருமணமாகி வரும் முன் (13 வருடத்துக்கு முன்பு எப்போதோ)பாலத்தின் மேலேயே தண்ணீர் வந்ததுண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.இம்முறை மழை எப்போதும் இல்லாமல் பெய்து தீர்க்கிறது. காமன்வெல்த் கேம்ஸில் மனிதனாக ஊழல்கள் செய்து உள்குத்து குத்திக்கொள்ளும் போது இயற்கையும் வெளியிலிருந்து சதி செய்கிறது. சாக்கடையாக ஓடிக்கொண்டிருந்த யமுனா உயிர்பெற்றிருக்கிறது. வருகின்ற வெளிநாட்டினரை யமுனையில் இறங்க விடக்கூடாது . அது மிக அசுத்தமானது என்றார்கள். இன்று அது புதுப்புனலாக இருக்கிறது. டெங்குவைத் தரும் குட்டைகளை தன்னகத்தே வைத்துக்கொண்டு நகரமும் காமன்வெல்த் கிராமமும் பல்லிளிக்கிறது. இயற்கையை மதிக்காதவனுக்கு இயற்கையே செய்த சதியா?


யமுனையை சுத்தப்படுத்த சுத்தப்படுத்த என்று கோடிக்கணக்கில் பணத்தை போட்டதாக தங்கள் கரங்களை கறைகளாக்கிக் கொண்டார்கள்.யமுனை தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொண்டாள்.
சாக்கடைகளை நேராக கலக்காமல் ஆற்றுப்படுகைகளை கட்டிடங்களுக்கு என கையகப்படுத்தாமல் இருந்தாலே இயற்கையாக ஆறு ஓடிக்கொண்டிருக்கும். யமுனையை ஒட்டிய கால்வாய்களை எல்லாம் கூட சிறியதாக்கி அதன் மேல் சாலைகளைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் :(

யமுனைப்பாலத்தின் ஒரு பக்கம் கோயில் மறுபக்கம் யமுனையின் கரையில் பல வயல்வெளிகளும் குடிசைகளும் இருந்தது. அது புறம்போக்கு நிலமாக இருந்தாலும் யாரோ வாழ்வாதாரமாக அந்த நீரைக்கொண்டு கீரையும் காய்கறிகளும் பயிரிட்டு வளர்த்து வந்திருந்தார்கள். அவையனைத்தும் தற்போதைய தொடர் மழை மற்றும் வெள்ளத்தினால் நிறைந்து விட்டது . அவர்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி வர வேண்டிய கட்டாயம் . மேலேறி வந்து சீறிப்பாயும் வாகனங்கள் ஓடும் சாலை ஓரங்களில் வாழும் படியாகிவிட்டது.

கோயில் கட்டப்பட்டபோதே அதன் மதில் சுவருக்கும் இப்புறம் சேரிகள் இருந்தது . இதுபோன்ற ஒரு சேரிக்கருகில் மிகப்பெரிய கோயில் என்று வருத்தப்பட்ட போது "நீங்கள் அதன் மறுகோணத்தைப் பார்க்கவேண்டும்.. இது போன்ற கலைகளை அறிந்த கலைஞர்களுக்கு வேலைகொடுக்கவேண்டிய கட்டாயம் ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் நேரும். அதனை இதனோடு ஒப்பிடக்கூடாது" என்று மாற்றுகருத்தும் வைக்கப்பட்டது.

இன்று காமன்வெல்த் க்ராமத்தை ஒட்டி மக்கள் சாலையில் இருப்பது இந்த வாரத்தில் வர இருக்கும் வெளிநாட்டினருக்கு முன் மிக தர்மசங்கடமாக மேலும் நாடகக்காட்சியின் போது ஒப்பனை கலைந்த முகமாகத் தோன்றுமே என்று வருத்தப்படுகிறார்கள். பிச்சைக்காரர்களை ஒளித்து வைத்த மாதிரி இவர்களையும் எங்கே ஒளித்து வைக்கப்போகிறார்களோ தெரியவில்லை. பாமா விஜயத்தில் பிள்ளைகளை ஒளித்து வைக்கும் அம்மாவைப் போல .....

நேற்று பாகிஸ்தான் வெள்ளம் பற்றி கூகிள் செய்துகொண்டிருந்த போது பார்த்த ஒரு தளத்தில் ஆப்கானும் இந்தியாவுமாக சேர்ந்து வேண்டுமென்றே அணைகளைத் திறந்து பாகிஸ்தான் மேல் தண்ணீர் போர் புரிந்திருக்கிறதாம்.. :( எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க ?

அப்போது யமுனையும் தன்னைக் காப்பாற்ற தவறியவர்கள் மேல் தன் கரையை கைப்பற்றியவர்கள் மேல் தண்ணீர் போர் புரிகிறாளோ?


தப்புக்கணக்கிட்டுத் தானொன் றெதிர்பார்த்தால்
ஒப்புமோ இயற்கைவிதி? ஒழுங்கமைப்புக் கேற்றபடி
அப்போதைக் கப்போதே அளிக்கும் சரிவிளைவு.
எப்போதும் கவலையுற்று இடர்ப்படுவார் இதைஉணரார்.-மாக்கோலம்

September 13, 2010

மாதா துமி பிதா துமி .. (ஹரித்வார்)

உருத்ராட்ச மரம் கேட்டிருந்தீர்கள் இல்லையா? இதுதான் ஹரிஹர் (பார்தேஷ்மந்திர்) ஆசிரமத்திலிருந்த ருத்ராட்ச மரம்.

(படத்தைப் பெரிது செய்தும் பார்க்கலாம்)
ஜகத்குரு ஆசிரமம், பவன் ஆசிரமம் (முழுக்க கண்ணாடி அலங்காரம் செய்த ஓவியங்கள்) பூமா நிக்கேதன் (அசையும் பொம்மைகள் கடவுள் உருவங்கள் நிறைந்திருந்தது). சித்திரக்கூட் ஆசிரமம் உள்ளே போன வேகத்திற்கு வெளியே வந்துவிட்டோம். அங்கேயும் கண்ணாடி ஓவியம் தான் கொஞ்சம் தான் அதுவும்...தங்குவதற்கும் ப்ரசங்கம் மற்றும் உபதேசம் போன்றவற்றுக்கு தான் இவை சரின்னு நினைக்கிறேன். இங்கெல்லாம் சும்மா சுற்றுலா பயணியாகப் போவது மிகப்போர். மேல் விவரங்கள் எல்லாம் மறந்துவிட்டேன்.

பாரத் மாதா மந்திர் என்பது அடுக்கடுக்கான மாடங்களில் ஒவ்வொரு மாடத்திற்கும் பாரத திருநாட்டில் இருந்த ஆன்மீக மற்றும் அரசியல் முன்னோடிகளை கடவுள்களைப் பற்றிய குறிப்புக்களும் சிலைகளும் என அலங்கரிக்கப்பட்டிருந்தது. லிப்ட் கொள்ளாமல் எல்லாரும் போய் வந்துகொண்டிருந்ததால் படி ஏறி 3 அல்லது 4 மாடங்கள் பார்த்தோம். பிறகு வந்துவிட்டோம்.

தக்ஷ்மகாதேவ் கோயில். தக்ஷன் கதை தான் எல்லாருக்கும் தெரியுமே.
கோயிலின் ஒருபக்கம் கங்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு குளிரிலும் காலுறையை நீக்கிவிட்டு கால்நனைத்து உட்காருவேன் என ஒரே பிடிவாதம் இந்த குட்டிப்பையனுக்கு..

கோயிலின் மற்றொரு வாயிலில் இருந்து வெளியே வந்தால் எதிரில் மாஅனந்தமயி ஆசிரமம்.இவர் அவரில்லை..இவர் கல்கத்தாவைச் சேர்ந்தவர்..

ஆசிரமம் அவருடைய சமாதியை நடுவில் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த அறையில் அமைதியாக அமர்ந்து மெடிடேட் செய்துகொண்டிருந்தார்கள் சிலர்.

எனக்கு அம்மாவின் ஆசிரமம் மிகப்பிடித்திருந்தது. உள்ளொளியை உணர்ந்தவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் மேல் ஒரு ஈர்ப்பு , அவர்கள் உணர்ந்தது எப்படி இருக்கும் அது உண்மையா இல்லை மயக்கமா எதுவாகிலும் அதன் மேலான ஆச்சரியம் என குழப்பமான நிலை ஒன்று ஓடும் மனதிற்குள்..

அடியாருக்கு அடியாரை வணங்குவதும் பெரும் சக்தியாக இதுவரை நினைத்த அனைத்தும் ஒருங்கே அந்த குருவுக்குள்ளேயே அடக்கம் என வணங்கி வழிபடுவதும் காலம் காலமாக வருகிறது. அம்மா அப்பா விலிருந்து காளியும் கிருஷ்ணனுமாக 'மா' வின் காட்சியைப்பற்றி ஒரு பாடல். (இங்கே பாடலைக் கேட்கலாம் )


MATA TUMI, PITA TUMI

Mata tumi, pita tumi, bandhu tumi he,

O You are mother, father and friend

Kali tumi, Shiva tumi, Krishna tumi he.

O You are Kali, Shiva and Krishna

Mahamaya, Durga tumi, tumi Tara he,

O You are Mahamaya,Durga, You are Tara

Mahashakti, Mahadevi, Saraswati he.

O Maha Shakti, Mahadevi, Sarasvati


புத்தகநிலையத்தில் அம்மாவைப் பற்றிய ஒரு புத்தகம் வாங்கினேன்.
அங்கும் உருத்ராட்ச மரங்கள் நிறைய இருந்தது.
-தொடரும்..

September 9, 2010

ஹரித்வார் - நினைவுக்குறிப்பு

சோம்பேறித்தனத்துக்கு ஒரு அளவு இருக்கிறதா? ஒரு விசயத்தை தள்ளிபோடுவதுக்கும் ஒரு அளவு இருக்கிறதா ? என் அளவில் இதற்கெல்லாம் அளவே இல்லை. போனவருடக் கடைசியிலிருந்து இந்தவருட ஆரம்பம் வரை (அதான் புத்தாண்டு விடுமுறை நாட்கள் ) செய்த சுற்றுப்பயணத்தின் சிறுநினைவுக்குறிப்பை இப்பொழுது தான் பதியப்போகிறேன். இப்போதும் எழுதவில்லை என்றால் அடுத்த பயணத்திட்டம் போடப்படுமா என்பது கேள்விக்குறியாகிவிடும் போல.. :)

டேராடூன் எக்ஸ்ப்ரஸில் ஹரித்வார் சென்றோம். ஐய்யப்பன் கோவிலில் தங்குவதாக ஏற்பாடு. ரயில்நிலையம் அருகில் தான், 5 -10 நிமிட நடை தூரம். கணவர் வேறுவேலையாக ஹரித்வார் சென்றிருந்த போது பேருந்தில் ஒரு தமிழர் நண்பரானார் .அவர் மூலம் தான் ஐய்யப்பன் கோயிலில் தங்கும் அறைகள் இருப்பதும் அது மிகக்குறைந்த பட்ஜெட்டில்(150ரூ ன்னு நினைக்கிறேன்) ஆனால் ஹரித்வாரின் மையப்பகுதி. (இப்படி இடத்தில் தங்க வருத்தப்படாத மனசுக்கு அடுத்த மாதமே ஒரு நாள் வாடகை 17,000 என்கிற ஹோட்டலில் இலவசமாய் தங்கும் வாய்ப்பும் வந்தது) அருகில் குஜராத் சமாஜம் தங்கும் விடுதி ஒரே ஆரவாரமாக இருந்தது.

இவர் தான் சிவ்மூர்த்தி . ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தால் இடதுபுறம் திரும்பிய சாலையில் சிறிது தூரத்தில் இருக்கிறார். சிவ்மூர்த்திக்கு வலது பக்கம் சந்தில் தான் ஐய்யப்பன் கோயில். சிவ்மூர்த்தி அருகில் ’அகர்வால் போஜனாலாயா’ அங்கிருந்த நாட்கள் முழுதும் எங்களுக்கு உணவளித்து காத்தவர். ஆலுபராத்தா , ரொட்டி , தால்மக்கனி, ராஜ்மா சாவல் , தயிர் இது தான் எங்கள் மெனு. நல்ல கவனிப்பு.. சின்ன ஹோட்டல். ஊரில் அகர்வாலுக்கு தெரியாமல் துரும்பு அசையாது என்பது போல அட்டகாசமான பேச்சு அவருடையது .

காலையில் இரண்டு மின்சார கொதிகலனில் வெந்நீர் சுட்டுக்கொண்டிருக்கும் வேண்டிய அளவு எடுத்துக்கொள்ளலாம். குளித்து விட்டு ஐய்யப்பனை தரிசித்தோம். கொள்ளை அழகு அவர். மகளும் அடுத்த வாரிசாக “ அம்மா அந்த கடைசி சன்னதியில் அனுமனை கவனிச்சியா? மேலே தோளில் ராமனும் லக்‌ஷ்மணனும் இப்படி எங்கயும் பாத்தது இல்லைல்ல” என்றாள். ஆமாம் அவ்ளோ அழகு . ஆனால் நின்றெல்லாம் ரசிக்கமுடியாமல் காலில் குளிர் தாக்கியது.

கோயிலிலும் உணவு கிடைக்கும். தென்னிந்திய உணவு வேண்டுபவர் முன்பே பதிந்து கொண்டால் நமக்கும் சேர்த்து செய்துவிடுவார்கள். எங்களுக்கு வடநாட்டு உணவு தான் வேண்டுமென்பதால் பதிந்து கொள்ளவில்லை.

பிறகு ஒரு பட்பட் ஆட்டோ எடுத்துக்கொண்டோம் . இணையத்தில் கொட்டிக்கிடக்கும் ஹரித்வார் பற்றிய குறிப்புகளிலிருந்து வழிகாட்டியாக எடுத்துப்போன பிரிண்ட் அவுட்களில் அருகில் இருக்கும் ஆசிரமங்களுக்கும் கொஒயிலுக்கும் அழைத்துச் செல்ல சொன்னோம். முதலில் கீதா பவன். நான்கு வேதங்களை கைகளில் ஏந்தியபடி கீதாமாதா நிற்கிறாள். இங்கும் தங்கும் அறைகள் இருக்கின்றன.

பார்தேஷ்வர் மந்திர். பாதரச லிங்கம் .. கோயிலில் ஒரு சாமியார் படம் இருந்தது இவரை டிவியில் பார்த்திருக்கோமே என்று நினைக்கும் போதே பெரிய காரில் வந்து இறங்கினார். அவர் வழிபட்டு கிளம்பிய பின் நாங்கள் சென்று வழிபட்டோம்.அவர் பெயர் ஸ்வாமி அவதேஸானந்தா?! இந்த கோயிலில் மிகப்பெரிய ருத்ராட்ச மரம் உள்ளது.

மகா ம்ருத்ஜ்யர் இருக்கிறார்.


கோயிலின் தூண்களில் அழகான வேலைப்பாடுகள்.

September 1, 2010

HAPPY BIRTHDAY BLOGGER

நமக்கெல்லாம் பொழுதுபோக்காகவும் , நட்பாகவும் ஏன் எல்லாமாவும் இருக்கிற ப்ளாக்கரில் இந்த மாதத்தில் மட்டும் பல புதிய வசதிகளை ,அறிமுகங்களைத் தந்து வந்தார்கள் . இன்று புதியதாக ஸ்டாட் கவுண்ட்டரும் கொடுத்திருக்கிறார்கள். இதன் மூலம் எல்லா வசதிகளையும் நாம் டேஷ்போர்டிலிருந்தே பெறலாம். என்ன ஐ பி அட்ரஸ் மட்டும் தான் தெரியல அதையும் சீக்கிரமே செய்வார்கள் என்று நம்புவோம்.. எங்கிருந்து வந்தா எந்த பேஜ் வியூ , என்ன வார்த்தையை தேடி வந்தார்கள் என அனைத்துமே இருக்கிறது

வாழ்த்துக்கள் ப்ளாக்கர்..

Blogger's 11 th birthday

THANKYOU BLOGGER