December 15, 2008

ஞானக்கண்ணால் கடவுள் தரிசனம்.

கண்ணாடியை லவட்டிய குரங்கின் உபயம்.. ஏறக்குறைய ஊர்சுத்திக்காமிக்கிற கைட் ஆக மாறி ரொம்பநாளச்சுங்க. ஒருமுறை கோவர்த்தனம் போகலாம்ன்னு கிளம்பினோம். போறவழியில் பிருந்தாவனத்தில் நம்ம ஊரு பெருமாள் கோயில் இருக்கே அதையும் காமிச்சிட்டு அங்க இருக்கும் அய்யரிடம் கோவர்த்தனம் பத்தி எதும் தகவல் கிடைக்குமா கேட்டுப்போகலாம்ன்னு திட்டம். 11 மணிக்குள் போனால் திறந்திருக்கும் இப்ப மூடி இருப்பாங்களே என்று பேசிக்கொண்டே உள்ளே சென்றோம். வெளிப்பிரகாரம் சுற்றித்தான் அந்த கோயில் வாசலுக்குக் போகலாம்.. அதற்குள் கோயில் மூடிய சேதியும் தெரிந்தது. சுற்று பிரகாரத்தில் சில தமிழ் அய்யர்கள் வீடு இருப்பதால் கேட்கலாமே என்று ஒரு வீட்டின் வாசலில் கால் எடுத்துவைக்க இருந்த நேரம். எனக்கு கண் தெரியவில்லை. ஆமாங்க எனக்கு கண் தெரியவில்லை. இத்தனை நேரம் தெள்ளத்தெளிவாக் தெரிந்த கண் கலங்கலாக மேகமூட்டமாக இருக்கிறது.

பொதுவாக கண்ணாடி போடவில்லை என்றால் தான் எனக்கு அப்படி இருக்கும். ஆனால் நடந்து கொண்டிருக்கும் போது நான் கண்ணாடியை கழட்டவும் இல்லையே.. என் கை தானா கண் பக்கத்தில் போனால் என் கண்ணாடி இல்லை. எல்லாரும் அய்யோ குரங்கு என்று கத்துகிறார்கள். உற்றுப்பார்த்தால் ஒரு குரங்கு அதன் கையில் என் கண்ணாடி. என் கண்ணாடியை அத்தனை லாவகமாக அது லவட்டி இருக்கிறது. என் மேல் துளி கூட நகம் படாமல்.

உடனே அது வீட்டின் மேல் ஏறி ஓடவும் ஆரம்பித்துவிட்டது. சட்டென்று இரு சாந்துபொட்டிட்ட ஹிந்திபேசும் இளைஞர்கள் எங்கள் முன்னால் வந்தார்கள். அதற்கு பிஸ்கெட் போட்டால் குடுத்துவிடும் பிஸ்கட் இருக்கா என்றார்கள். நாங்களோ எல்லாமே காரில் வைத்துவிட்டு ஹாயாக வந்திருக்கிறோம். பிஸ்கட் வாங்கசென்றவர் திரும்ப வருவதற்குள் குரங்கைப் பிடிக்க மேலே ஏறிய அந்த இளைஞர்கள் சிறிது நேரத்திற்கு பின் வந்து தனித்தனியாக காதை கடித்து துப்பிய கண்ணாடியைக்கொடுத்துவிட்டு அதற்கு பணம் கேட்டார்கள். பிஞ்சு போன கண்ணாடிக்கு என்ன தருவது என்று பேரம் பேசி லென்ஸ்க்காக 50 ரூ குடுத்தோம்.

பிறகு தான் தெரிந்தது குரங்கை இதற்காகவே அந்த இளைஞர்கள் பழக்கிவைத்திருக்கிறார்கள் என்று அதற்கு பிறகு கோவர்த்தன கிரியை அடைந்த போது எல்லா கோயில்களிலும் கடவுள் இப்படித்தான் இருப்பார் என்று என் ஞானக்கண்ணாலே வணங்கிக்கொண்டிருந்தேனே தவிர என் ஊனக்கண்ணால் வணங்க இயலவில்லை.

ராதாராணி பாதம் என்று ஒரு இடம் இருக்கிறது. அதனருகில் ஒரு சிறு ஆசிரமம் . அங்கே மரத்தின் அடியில் ஒரு கல் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது அதனைக்காட்டி, ஒரு சாது ,"இங்கே பாருங்கள் இந்த கல்லில் உங்களுக்கு என்ன தெரிகிறது" என்று கேட்டார். அவருக்காக உற்றுப்பார்த்ததில் எதோ தெரிகிறார்போலத்தான் இருந்தது.. ஆனால் ஞானக்கண் அப்போது சரியாக வேலை செய்யவில்லை. அவரே சொன்னார். ஒரு ஹனுமான் கல்லின் இயற்கை கலரிலேயே சுயம்புவாக இருக்கிறது என்று.. க்ரீடம் வால் போன்ற இடங்களெல்லாம் மட்டும் தெரிந்தது. மேலும் சில அந்த சிறு குடிலுக்குள் உள்ளது என்றார். உள்ளே செல்ல பயந்து நான் பின்வாங்கிவிட்டேன்.

அடுத்தமுறையும் கோவர்த்தனம் சென்றோம். அதே இடம்.. போன முறையை விட அந்த பாதம் இருந்த இடத்தில் எக்கச்சக்கமான குரங்குகள்.. அதனால் யாரும் காரைவிட்டே இறங்க மறுத்துவிட்டார்கள். நாத்தனார் கணவர் ம்ட்டும் நீங்கள் எனக்கு காண்பியுங்கள் என்று கேட்டதால் கண்ணாடியை பேண்ட் பாக்கெட்டில் ஒளித்துவைத்துக்கொண்டு இறங்கிவிட்டேன். குடிலுக்குள் நடு நாயகமாக இருந்த ஒரு கண்ணாடி போட்ட மேடையில் பல விதமான கற்கள் இருந்தது . அவை எல்லாம் ஒரு குரு வின் கலெக்ஷனாம்..

ஒவ்வொரு கல்லிலும் விதவிதமான உருவங்கள் இயற்கையாகவே வந்த உருவங்கள். ஓவியங்களைப்போல நிழலாக இருந்தன. ஹனுமான் க்ரீடத்தோட முட்டிக்காலில் சிவனை வணங்கும் போஸ்... கிருஷ்ணனை கைபிடித்த யசோதையைப்போல ( ஓவியங்களில் அதிகம் பார்ப்பீர்கள்) கண்ணன் வெண்ணை உண்ணும் காட்சி...புலி, இப்படி... முதலில் அவர் சொல்லும் போது தெரியாது உங்கள் மனக்கண்ணில் அதை உருவகப்படுத்தி ஒப்பிட்டுப் பார்க்கும் போது அது தெரியும்.. ஆச்சரியமாக இருந்தது..

December 11, 2008

கோல்டன் டிக்கெட்..சாக்லேட் ஆறு , சாக்லேட் அருவி

நேற்று இரவு நானும் மகனும் சார்லி இன் த சாக்லேட் பேக்டரி படம் பார்த்தோம். பன்னிரண்டு மணிக்கு மேல் எனக்குத்தான் தூக்கம் வந்தது. ஆனால் அவனோ இன்னும் கொஞ்சம் தான் இருக்கு தூங்காதே அம்மா என் கூட பாரு என்று என்னைத் தொடர்ந்து உற்சாகப்படுத்தியபடி இருந்தான். அப்படியும் ஒரு காட்சியில் என்னை அறியாமல் தூங்கிவிட்டேன். பிறகு அவனே அந்த கதையை எனக்குச் சொன்னான்.

சாக்லேட் சாப்பிடக்கூடாது என்று பல்டாக்டரான தந்தையால் மிகவும் கண்டித்து வளர்க்கப்பட்ட ஒரு சிறுவன் பெரியவனாகி சாக்லேட் தொழிற்சாலையே ஆரம்பிக்கிறான். அவனுடைய ரகசிய செய்முறைகளை யாரோ கடத்தி வெளியே விற்றுவிட்டார்கள் என்ற கோபத்தில் அவன் எல்லா தொழிலாளர்களையும் விரட்டி விடுகிறான். அதே ஊரில் ஏழையாக இருக்கின்ற சார்லியின் தாத்தா அதில் வேலை செய்தவர்களில் ஒருவர். அவர் அந்த தொழிற்சாலையின் முதலாளியான வில்லி வோன்காவைப்பற்றி தன் பேரனிடம் ஒரு மேதையென்று சொல்லிவைக்கிறார்.

அந்த தொழிற்சாலை ஊராருக்கு ஒரு அதிசயம். யாருமே அங்கே வேலைக்குச் செல்வதில்லை ஆனால் சாக்லேட்கள் உற்பத்தியாகி வெளியே அழகாக டப்பாக்களில் அடைக்கப்பட்டு வெளியே வருகிறது. ஒரு நாள் அறிவிப்பு ஒன்று எல்லா இடங்களிலும் ஒட்டப்பட்டுக் காண்கிறார்கள். வோன்காவின் சாக்லேட்களில் ஐந்து சாக்லேட்களில் மட்டும் "தங்க அனுமதி சீட்டு" (கோல்டன் டிக்கெட்) வைக்கப்பட்டிருக்கிறது. யாருக்கு கிடைக்கிறதோ அந்த ஐந்து குழந்தைகள் தொழிற்சாலையை சுற்றிப்பார்க்க ஒரு நாள் அனுமதிக்கப்படுவார்கள்.அவர்களில் ஒருவருக்கு நினைத்துப்பார்க்கமுடியாத ஒரு பரிசு கிடைக்கும்.

சார்லிக்கும் அதனைப் பெற ஆசை . அவன் குடும்பமோ ஏழை. அப்பா அம்மா இரண்டு தாத்தா இரண்டு பாட்டி என்று பெரிய குடும்பம். அப்பாவுக்கோ வேலை போய்விட்டது. சிரமங்களுக்கிடையில் அவன் பிறந்தநாளுக்காக வாங்கிய சாக்லேட் பட்டையில் சீட்டு கிடைக்கவில்லை. ஆனால் அவன் அதை பெரிதாக நினைக்காமல் அதனை குடும்பத்திலிருப்போர் அனைவருடனும் பகிர்ந்துகொள்கிறான்.தாத்தாவின் சேமிப்பில் வாங்கிய பட்டையிலும் கிடைக்கவில்லை. அதற்குள் ஒவ்வொரு அனுமதிச்சீட்டாக பெற்றவர்கள் தொலைகாட்சியில் பேட்டிக்கொடுக்கிறார்கள்..இன்னும் இருப்பது ஒரே ஒரு சீட்டுத்தான்.

அதிர்ஷ்டவசமாக சாலையில் கண்டெடுத்த பணத்தில் சார்லி வாங்கிய சாக்லேட் பட்டையில் அந்த சீட்டு கிடைத்துவிடுகிறது. அதை விலைக்குக்கொடுக்க சொல்லி எல்லாரும் கேட்க, கடைக்காரர் மட்டும் வீட்டுக்கு எடுத்து செல்லப் பணிக்கிறார். வீட்டிற்கு வந்த பிறகு தங்கள் ஏழ்மை நிலை போக அதனை விற்கலாம் என்று முடிவெடுப்பதாக சொல்கிறான். அதுவரை அந்த குடும்பத்தில் எதிர்பதமாக பேசிவந்த இன்னொரு தாத்தா இந்த முறை நம் குடும்பத்தில் என்ன குறை.. பணம் பெரிய விசயமே இல்லை. நீ பலபேருக்கு கிடைக்காத இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்துவது தான் சிறப்பு என்று சொல்கிறார். ஒவ்வொரு குழந்தையும் தன்னோடு ஒரு பெரியவர்களை அழைத்துச் செல்லலாம் என்பதால் அவன் அவனுடைய தாத்தாவையே கூட்டி செல்கிறான்.

அங்கே வருகின்ற குழந்தைகளில் சார்லியைத் தவிர மற்றக்குழந்தைகள் அனைவருமே சரியாக வளர்க்கப்பட்டவர்கள் இல்லை. ஒரு குழந்தை பணக்காரர் மகள். நினைப்பதெல்லாம் அடைய வேண்டும் என்றிருப்பவள். அவளுக்காக அப்பாவின் கம்பெனியில் வேலை செய்பவர்கள் அனைவரும் வேலைகளை விட்டு சாக்லேட் களை பிரித்து தேடிக்கிடைக்கிறது. சார்லி தன் தாத்தாவிடம் .. "இது எப்படி சரியாகும் தாத்தா? அவளாக தேடவில்லையே."
தாத்தா- "அப்படித்தான் எல்லாம் நடக்கிறது சார்லி ."

ஒரு குழந்தை எந்நேரமும் சாக்லேட் சாப்பிடுபவன்.
ஒரு குழந்தை எந்நேரமும் வீடியோகேம்ஸில் அடிஉதை என்று வாழ்பவன். ( சாக்லேட் பிடிக்காதவன் வேறு)
ஒரு குழந்தை ட்ராபிகள் வாங்கிக்குவிக்கும் ஜீனியஸ்.. பபிள்கம் அதிக நேரம் சுவைப்பதில் கின்னஸ் ரெக்கார்ட் செய்தவள்.

உள்ளே குள்ளமனிதர்களும் இந்தியப்படங்களைப்போல அடிக்கடி வரும் பாடல்களும் செட்டிங்களும் பிரமாதம்.குள்ளமனிதர்கள் உதவியுடன் வோன்காவின் தொழிற்சாலை நடக்கிறது.

உள்ளே போனதும் வருகின்ற உலகம் தான் என் மகனுக்கு மிகவும் பிடித்தது. சாக்லேட் ஆறு சாக்லேட் அருவி.. சாக்லேட் மரங்கள் அங்கங்கே ஐஸ்கிரீம்..இதே போல் நம் வீட்டிலும் இருந்தால் அள்ளி அள்ளிச்சாப்பிடுவேன் என்று சொல்லிக்கொண்டான்.. கனவுக்கு போயிருப்பான் .எந்நேரமும் சாக்லேட் சாப்பிடும் பையன் சாக்லேட்டை அள்ளிக்குடிக்கமுயன்று அதற்குள் விழுந்துவிடுவான்.அதனால் அவனும் அவன் அம்மாவும் வெளியேற்றப்படுவார்கள்.அவன் பைப் ஒன்றால் உறிஞ்சப்படும் போது ..என் மகன் சிறியவன் என்பதால் அவனுக்கு அவன் நல்லபடி வெளியே அனுப்பபடுவார்கள் என்று பலமுறை சொல்லவேண்டி இருந்தது.

பபிள்கம் மெல்பவள் வோன்கா சொல்வதைக்கேட்காமல் சோதனை செய்யப்படாத ப்ளூபெர்ரி பபிள்கம் சாப்பிட்டதால் நீல நிறமாக மாறி பந்து போல உருண்டு வெளியேற்றப்படுவாள். அப்போதும் அவனுக்கு பயப்படாமல் இருக்க விவரிக்கவேண்டி இருந்தது. அதிகம் பபிள்கம் சாப்பிடக்கூடாது என்று சொல்ல நல்ல ஐடியா...:) ஜூஸறில் போட்டு பெர்ரியின் ஜூஸ் எடுக்க அவளும் அவள் அம்மாவும் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.

டிவியே அதிகம் பார்ப்பவன் டீவிக்குள் சென்று சின்னவனாகிவிடுவான். ஆட்டம் க்ளோஸ்.

நட்களை( nut) பிரித்தெடுக்க இருக்கும் அணில் குட்டிகளைப்பார்த்து இப்போதே அணில் குட்டி ஒன்று தனக்கு வளர்ப்பு ப்ராணியாக வேண்டும் என்று கேட்டசிறுமிக்காக அவள் தந்தை வோன்காவிடம் பேரம் பேசிப்பார்க்கிறார். வோன்காவின் மறுப்பை கண்ட சிறுமி அணிலைப்பிடிக்க செல்ல.. அணில்கள் கோபம் கொண்டு அவளை சூழ்ந்துகொள்ள... ( இந்த இடமும் பயம் தான் குட்டிப்பையனுக்கு) ஒரு அணில் மிக அருகில் அவள் முகத்துக்கு சென்று நெற்றியில் "டொக் டொக்" இது நல்ல நட் இல்லை..(மகனுக்கு ஒரே சிரிப்பு பேட் கேர்ள் பேட் நட்)


தந்தை பதற.. இப்பொழுது என்ன ஆகும்.. நல்ல நட் இல்லையென்றால் குப்பைக்கூடைக்குப்போவார்கள். மகள் குப்பைக்கூடைக்குள் விழ அப்பாவும் விழ.. ஆட்டம் க்ளோஸ்..

மீதி இருப்பவன் சார்லி என்பதால் அவர்களை வீட்டிற்கு சென்று இனி எல்லாரிடமும் சொல்லிக்கொள் உனக்கான பரிசு நீ என் தொழிற்சாலைக்கு முதலாளி. எனக்கு வாரிசு என அறிவிக்கிறான். குடும்பத்தினரைப் பிரிந்து அந்த தொழிற்சாலையை தனதாக்கிக்கொள்ள விரும்பாத சார்லி வோன்காவுக்கு ஆச்சரியம் தருகிறான்.குடும்பத்தினரை அழைத்துச் செல்ல மறுக்கும் வோன்கா.. திரும்பி செல்கிறான்.

கடைசியில் மற்ற குழந்தைகள் வெளியேறுவடு காட்டப்படுகிறுது.. இல்லாவிட்டால் நம்ம குழந்தைகள் பயந்துவிடுவார்களே... :)

மீண்டும் வரும் வோன்கா சார்லியின் அறிவுரைப்படி தன் தந்தையைக்காண செல்கிறான். அங்கே அவன் தந்தை அவன் பற்களை சோதனையிட்டு ஆச்சரியப்படுகிறார்.
-"வில்லி வோன்கா ? !!!!!
-ஆமாம்...
-நீ இதுவரை சாக்லேட் சாப்பிடவே இல்லயா..?

-இல்லை அப்பா எப்போதுமே"

சார்லியின் குடும்பமும் அதே போல ஒரு வீடும் சாக்லேட் பேக்டரியிலேயே அமைக்கப்பட்டும் குடும்பமாய் ஜாலியாய் ..... கடைசியில் சுபம்.

December 7, 2008

நீ வளர்ந்ததும் பெரிய மந்திரியா வரணும் !!

நமக்குத்தேவை நல்ல தலைவர்கள் என்று அவந்தி பதிவு போட்டிருக்கிறாள். ( தொடர்பதிவுக்கும் அழைத்திருக்கிறாள் ) உண்மை தான் ஆனால் எந்த வீட்டிலும் தலைவர்களை வளர்ப்பதில்லை. யாராவது என் குழந்தை அரசியலில் பெரிய மந்திரியா வரணும் என்று ஆசைப்படுகிறோமா என்ன? அரசியல் பாரம்பரியம் ஒரு ராஜ பாரம்பரியமாக குடும்பம் குடும்பமாக மட்டுமே வளர்கிறது. படிக்கின்ற வயசில் அரசியல் தேவையில்லை என்பதால் அரசியலா அதில் எல்லாம் ஒன்னும் கவனம் வைக்காதே என்று சொல்லி முடிப்பதற்குள் அவர்களுக்கு ஓட்டு போடும் வயசும் வந்துவிடுகிறது. நம்ம தமிழ்நாட்டிலிருந்து நடிகைகள் வருவதில்லை என்பது போல படித்தவர்கள் அரசியலுக்கு வருவது (அரசியல்குடும்பத்தினைத்தவிர) குறைவு.

மகளின் பள்ளியின் சேர்மென் (வய்து 87 ) இந்த காலத்தில் கல்வியும் அறிவும் மட்டும் முக்கியம்ன்னு நினைச்சு பெரியாளான பல அறிவாளிகளால் தான் பணவீக்கம் ,பொருளாதார பின்னடைவு எல்லாம் வருகின்றது. எதிலும் எதிக்ஸ் முக்கியமில்லை என்ற எண்ணம் . கல்வியோடு எதிக்ஸும் அவசியமென்று அவர்களை பழக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நாம் ஒவ்வொருவரும் சுயநலமாக நம் வீடு , நம் படிப்பு நம் வாழ்க்கை என்று வாழும் வரை சுயநல வியாபாரிகள் தான் அரசியலுக்கு வருவார்கள். அவர்கள் தங்களுக்கு போக மீதியைத்தான் தருவார்கள்.. அந்தகாலத்துத் தலைவர்கள் கொள்கையில் வேறுபட்டாலும் அடுத்தவர்களை எதிரியாகக் கருதியதில்லை. இப்போது நிலைமையே வேறு.

குறுக்குவழியில் பெரியவர்களாக ஆகவேண்டும் என்று கற்றுக்கொடுக்கும் நிலையில் , அடுத்த தலைமுறை நல்லமுறையில் வர வாய்ப்பே இல்லை. தன்னலமில்லா தலைவர்கள் வந்தாலும் கீழே இருப்பவர்கள் வரை நல்ல செயல்களை கொண்டு சேர்க்க தடையாக இருப்பது மக்கள் தானே..

எனக்குத் தோன்றுவதெல்லாம் .. உலகத்தில் நீ கொண்டுவர வைக்கவேண்டிய மாற்றத்தின் முதல் படியாக நீயே இரு என்ற காந்தியின் வார்த்தைகள் தான்.

---------------
தீவிரவாதத்துக்கு எதிராக என்னத்த சொல்வது வறுமை குறைந்தால் அதுவும் குறையும். காசு தான் கடவுள். காசு இல்லையா குடுப்பவன் கடவுள். இறப்பை வேறு எவரும் துச்சமாக மதிப்பதில்லை. காசில்லாதவன் தான் வாழ்ந்து என்னத்தைக்கண்டோம் என்று முதலில் நுழைகிறான்.

மதம் காரணம் என்கிறீர்களா? சகிப்புத்தன்மை இல்லாத, அன்பு இல்லாத எந்த மதமும் பின்பற்றி முக்திக்கு உதவபோவதில்லை.

சிலர் தாங்கள் போகும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சோதனைகளில் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கிறார்களா? அதற்கு சலிப்பும் கோபமும்.. எத்தனை பேர் குறுக்குவழிகள் ஓடுகிறார்கள். என்றாவது எதாவது தவறாக நடந்தால் சோதனை சரி இல்லைங்க என்று குறை சொல்வார்கள்.

வரிசையில் நிற்க சங்கடம் , சோதனைக்கு ஒத்துழைக்க சங்கடம், தவறைக்கண்டால் தகவல் அளிக்க சங்கடம்.. நேர்மையாக இருக்க சங்கடம்.. மொத்தத்தில் வரும் சங்கடங்கள் எல்லாவற்றிற்கும் நாமே காரணம்.

இன்னும் புலம்புவதற்கு ,
நான் அழைக்கவிரும்புவது
ஆயில்யன்
தமிழ்பிரியன்
சென்ஷி
புதுகைத்தென்றல்
சந்தனமுல்லை
ராப்
விருப்பமானவங்க எழுதுங்க.. முடியாதவங்க சாய்ஸில் விட்டிருங்க...

December 5, 2008

ரசம் பூசிய கண்ணாடியென வாழ்க்கை...

எதுவும் தனியே கிடைப்பதில்லை.
நான் எனும் தனிமைச்சொல்
கொண்டிருப்பதோ இரண்டெழுத்து.
இன்பமிருக்கும் இடத்தில் துன்பமிருக்கும்
துன்பமிருக்கும் இடத்தில் இன்பமிருக்கும்
பிரிக்க இயலா உறவு அது
உறவின் பொருளி்லிலும் இவையடங்கியே இருக்கும்.
ரசம் பூசிய கண்ணாடியென
பின்மறைவில் மற்றொன்றை வைத்து
விளையாடும் வாழ்க்கை.
அனுபவதினங்கள் தேய்த்து தேய்த்து
ரசம் நீங்கிய கண்ணாடி வழி
இன்பமும் துன்பமும்
உண்மையும் பொய்யும்
அருகருகில் இரட்டைபிறவியென .
தனிமை தனிமை என்ற ஒளி
பட்டு திரும்பிய கதிரெல்லாம்
இன்று ஊடுருவிச் சென்ற பக்கம்
காணக்கிடைக்கும் பல புன்னகை முகங்கள்.

photo .. thanks Leslie marr


சென்ஷியின் நான் எனும் தனிமைச் சொல் கவிதைக்கு எதிர் கவிதை. மேலே இருக்கும் குழந்தை அந்த பக்கம் அறியா இன்பத்திலிருக்கிறது. :))

December 4, 2008

நான் தான் ஹீரோ ஓகேய்?

"டேய் ட்ராகன் டேல்ஸ் ல வர்ர அக்கா உன் அக்காவாம்.. நீ தான் அந்த தம்பியாம்.. "
ம்..... அம்மா நான் தான் ஹீரோ ஓகேய்"
-----------------------------------------------------------------
மகளின் பள்ளி விழாவுக்கு போய் இறங்குகிறோம்.
" அம்மா இந்த ஸ்கூலா ... அப்ப ஏன் அக்கா ஸ்கூலுன்னு சொன்ன...
யே மேரா பி ஸ்கூல் ஹேன்னா? ( இது என்னோட ஸ்கூலும் தானே?) "

அவனுக்குத்தான் அட்மிசன் ஆகிடுச்சே..
-----------------------------------------------------
தினம் எழுந்ததும்,
" அம்மா இன்னைக்கு கோன்ஸா( எந்த) ஸ்கூல் போகனும்?"
ப்ளே ஸ்கூலா பெரிய ஸ்கூலான்னு கேக்கரான்.
" அது ஏப்ரல் மந்த்டா"
" அது எப்ப வரும்"
".... ம் ..... வரும் இன்னும் கொஞ்சம் நாளில்"
"யூனிபார்ம் ஏன் வாங்கமாட்டேங்க்ற நான் எப்பத்த்தான் பஸ்ல போறது"
"இன்னும் கொஞ்சம் பெரிசாகனும் நீ"
" மே படா ஹூம் அம்மா" ( நான் பெரியவன் தான் அம்மா)


----------------------------------
என்னோட கம்ப்யூட்டர் ல கேம் விளையாண்டா ஏன் சத்தம் வரலை..
டேய் அது ம்யூட்ல போட்டிருக்குடா.. அப்பா நெட் மீட்டிங்க் செய்யராங்கள்ள

அப்பா ப்ளீஸ் அந்த லேப்டாப் பந்த் கரோன்னா ( மூடிவைங்களேன்)

"அதுல வேல செய்தாதாண்டா பண ம் கிடைக்கும் ..நீ மெக்டோனால்ட்ஸ் போலாம்.. குக்கும்பர் வாங்கலாம்.. பனானா வாங்கலாம்.. "

அக்கா வந்ததும் ,
"அக்கா அப்பா கம்ப்யூட்டர் மே வேலை கர்ரஹாஹை...( செய்யறாங்க) ..உஷ்...
அப்பறம் பணம் கிடைக்கும், ஹம் டோனால்ட்ஸ் சலேங்கே ( நாம மெக்டோனல்ட்ஸ் போவோம்) , பனானா, குக்கும்பர், சாக்லேட் எல்லாம் அப்பத்தான் வாங்கலாம். "

"நீ நல்லபடிப்பயாடா?"
'எதுக்கு?"
"வேலை செய்யனும்ல ?"
"ம் வேலை மிலேகா ன்னா ( கிடைக்குமில்ல) அப்ப செய்வேன்..
அப்பா கார்ல போவேன்."

December 2, 2008

தொடர்பவர்கள் எல்லாம் தொடர்பவர்கள் இல்லை தொடராதவர்கள் எல்லாம் தொடராதவர்கள் இல்லை

கொஞ்சம் போரடிக்குதேன்னு ப்ளாக்கர் டேஷ்போர்டை கவனிச்சிட்டிருந்தேன்.. ப்ளாக் ஆஃப் நோட்ல புகுந்து புறப்பட்டுட்டு இருந்தபோது ஒருத்தருக்கு 1330 க்கும் மேல ஃபாலோவர்ஸ் இருக்காங்களாம்.. வியூ ஆல் போட்டாலும் கூட ஒரு பக்கத்துக்கு பத்து என்று தான் ப்ளாக்கர் காட்டும் அவரே கூட எப்படி பார்ப்பார் எல்லாரையும் கஷ்டம் தான்.. :(

ஒரு நாள் பின் தொடருபவர்கள் கணக்கு ஒன்று குறைந்து பின்னர் மூன்று கூடியது. குறைந்த அந்த ஒருவர் யாரென்று சரியாகத்தெரியவில்லை.. தப்பித்தவர் யாரோ? ஆனால் பின் தொடர்பவதாக ஃபாலோவரில் போட்டிருக்கும் எல்லாருமே பின் தொடர்வதும் இல்லையென்று நேற்று புரிந்து கொண்டேன். புதியதாக யாரோ இணைய அரட்டையில் இணைந்திருந்தார்கள். யாரென்று கேட்டு அறிந்து அவர்களின் பதிவு இணைப்பைக்கேட்டேன்.அவர்களும் என்னிடம் என் பதிவு இணைப்பைக்கேட்டார்கள். அய்யகோ கடைசியில் அவர்கள் என்னை ஏற்கனவே தொடர்பவர்கள் தான். இதிலிருந்து என்ன தெரிகிறது. தொடர்பவர்கள் எல்லாம் தொடர்பவர்கள் இல்லை.. தொடராதவர்கள் எல்லாம் தொடராதவர்கள் இல்லை.

இது ஏறக்குறைய முன்பே எல்லாரும் பின்னூட்டுபவர்கள் படிப்பவர்கள் கணக்கீடுக்கு சொன்னது போலவே தான்.
-----------------------------
ப்ளாக்கர் buzzல் பார்த்தபோது போஸ்ட் கமெண்ட் அதே பதிவின் கீழ் எம்பெட் செய்யும் வசதி பற்றி அறிந்தேன். ஆனால் அது அதிகம் வேலை செய்யப்படாத டெம்ளேட்டில் வேலை செய்கிறது ஏற்கனவே உள்ள பதிவில் வேலை செய்வதில்லை. அதற்கு ஏதும் வழி இருக்கிறதா? இதற்காக இன்னொரு பக்கத்தை திறக்கவேண்டாம் என்பதும் நன்றாகவே இருக்கிறது.. ரியக்ஷ்னும் அது போலவே தான்.. தெரிந்தவர்கள் பதிவிடுங்கள்.
--------------------------
பலநாட்களாக ப்ளாக்கர் என் சிறுமுயற்சி பதிவிற்கு வரும் பின்னூட்டங்களை மட்டும் டேஷ்போர்டில் எண்ணிக்கையாக காட்ட மறுக்கிறது. மாடரேட் கமெண்ட்ஸ் போய் தான் பார்க்கவேண்டி இருக்கிறது. :( எத்தனை எத்தனை சோதனைகள்.