February 28, 2011

மூங்கிலில் பூத்து தொங்குது பூ


அமைதிச்சாரல் வீட்டுத்தோட்டம் பற்றி பதிவிட்டிருந்தார்கள். அப்போது நான் பார்த்த மூங்கில் குழாய் தொட்டி பற்றி பின்னூட்டமிட்டேன். அதைப் புகைப்படமாக எடுத்துக் காண்பிக்குமாறு கேட்டிருந்தார்கள். நேற்று கடைத்தெரு பக்கம் போனேன். கைபேசியின் மூலமே புகைப்படமெடுத்து வந்தேன். இரவு வெளிச்சமென்பதால் சுமாராகத்தான் இருக்கிறது. ஆனால் ஒரு ஐடியாவிற்கு இங்கே.மூங்கில் குழாயில் ஒரு பட்டை மட்டும் நீக்கிவிட்டு  அதில்  மண் நிரப்பி பூந்தொட்டியாக்கி  பூக்களை  பதியனிட்டு  அதை இப்படி தொங்கவிட்டிருந்தார்கள் கடை வாசலில்...

இணையத்தில் தேடும்போது கிடைத்த படத்தை  பாருங்களேன் ஆகா..


நன்றி ராமலக்‌ஷ்மி :)

இந்த ஐடியாவை சீக்கிரம் நானும் செய்து பார்க்க ஆசைப்படுகிறேன்.


எனக்குமூங்கிலென்றால் ரொம்ப பிரியம். வீட்டுல சோபா செட் கூட மூங்கில் தான். குளிர்காலத்தில் வெயிலில் உட்கார்ந்திருக்க மூங்கில் மோடா தான்.

ஆரோவில் கூட மூங்கிலுக்கென்று ஒரு தளம் வைத்திருக்கிறார்கள்.
----------------------------------------------

நம்ம லிட்டில்ஸ்டார் அவங்க அக்காவோடு சேர்ந்து ஒரு வேப்பமரம் வளர்க்கிறதாக கையெழுத்துப்போட்டு இருக்கிறார். இங்கே போய் பாருங்க அவருடைய பெருமிதத்தை...
-------------------------------------------------

இந்தவாரம் ஒரு தோழியோடு பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னார் எல்லாரும் பாலிதீன் பேக் ல் பொருட்களை வாங்கிக்கொண்டு போகும்போது நாம் மட்டும் வேண்டாமென்று சொல்லும்போது மற்றவர்கள் திரும்பிப்பார்ப்பது சங்கடமாக இருக்கிறது என்று.. ஆனால் உண்மையில் நாம் அந்த சங்கடத்தை அடையவேண்டியதே இல்லை. எனக்கும் இருக்கத்தான் செய்தது. ஆனால் வருடங்களாக இப்பொழுது அந்த பழக்கத்திற்கு வந்த பிறகு தற்போது சங்கடமும் இல்லை பெருமிதமும் இல்லை.. இயல்பாய் ஆகிவிட்டது.February 23, 2011

கற்பக விருட்சம்

ஒரு நாள் சுழன்று மறுநாள் ஆவதன்
இடைப்பட்ட பொழுதில்
நீள்கனவு
மூழ்கியவனை மீள்காட்டும்
கனவில் நீளும் கடற்கரைகள்

சுவடுகள் அழித்து அழித்து
அலையெழுதும் கதைகளில்
விதிகளின் வழிப்படியும்
வலியுடனும்
விட்டெறிந்த கல்லாக
ஆசைகள் மீள்வதைக் காணும்
அலையோசைக் கனவுகள்

பச்சையம் சமைக்கும் சருகுகள்
இயலாததில்லையென்று
முட்டி மோதி கிளைத்தெழுதலை
இட்டு நிரப்பும்
வளர்விருட்சக் கனவுகள்

இயல்பை மறந்த எதிராளியும்
குழப்ப முடிச்சின் நுனியும்
தோன்றுமொரு நாளின் கனவை
நனவாக்கும்
மந்திரக்கோல் தேடுதல்
மற்றொரு கனவின் தொடக்கமாகக் கூடும்.

ஈழநேசனில் 2009 ல் வெளிவந்த கவிதை

February 17, 2011

நாஞ்சில்நாடனுக்கு பாராட்டுவிழா - தில்லி தமிழ்ச்சங்கம்
தில்லி தமிழ்ச்சங்கம் சார்பில் சாகித்ய அகாடமி விருதுபெற்ற திரு.நாஞ்சில் நாடன் அவர்களுக்கு பாராட்டுவிழா நடத்தப்பட்டது. வெளியே மழைக்காற்றும் சிலுசிலுப்புமாக இருந்தது. வழக்கம்போலவே போவதா வேண்டாமா குழப்பங்களுடன் முதல் முறையாக( இப்படியே எத்தனை முறை சொல்வேனென்று கேட்காதீர்கள்) நிஜம்மாகவே முதல் முறையாக இரண்டு பேருந்து(1மணிநேரம்) மாற்றித் தமிழ்ச்சங்க வாசலை அடைந்தேன்.

6 மணிக்கு தொடங்கவேண்டிய நிகழ்வு 6.30 வாக்கில் தொடங்கியது. பேராசிரியர் நாச்சிமுத்து அவர்கள் நாஞ்சில் நாடன் அவர்களை வாழ்த்தி நிகழ்வைத் தொடங்கிவைத்தார். நுணுக்கமான விவரங்களை காவியமரபில் வருவது போன்றே நாஞ்சில் நாடன் அவர்களின் படைப்பில் காணமுடிகிறது என்று சுட்டிக்காட்டினார். இன்றைய இளைஞர்களைத் தமிழின்பாலும் வாசிப்பின்பாலும் ஈர்க்கக்கூடிய கவர்ச்சியுடைய எழுத்தாளர்களில் இவரும் ஒருவர் எனப்பாரட்டினார். இந்த விருது சக தமிழனாக அனைவருக்குமே பெருமை அளிக்ககூடிய விருதென்று வாழ்த்தினார்.

அனைவரின் வாழ்த்துக்களையும் தன் நெஞ்சின் மீது கரம் வைத்து நாஞ்சில் நாடன் அவர்கள் மேடையில் ஏற்றுக்கொண்ட காட்சியே சிறப்பாக இருந்தது. இதயபூர்வமாக வரும் பாரட்டுக்களை இதயபூர்வமாகவே அவர் ஏற்றுக்கொண்டதன் அடையாளமாகவும் தோன்றியது.

இதழியலாளர் திரு ஏ.ஆர்.ராஜாமணி அவர்கள் விருதுகள் பெறுவது கூட பூர்வஜென்ம பலன் தான் என்று நகைச்சுவையுடன் பேசிக்கொண்டிருந்தார். சட்டதிட்டங்களுக்கு மத்தியில் அனைவருக்கும் சரியானபடி விருது போய்ச்சேர வழியில்லை. அப்படி சரியானபடி விருது வந்து சேர்ந்தால் பேரதிர்ஷ்டக்காரராகத்தான் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டார். அரசாங்கத்துக்கு ஆலோசனைகளை கட்டுரைகளில் வழங்குவதை குறைத்துக்கொண்டு கதை நாவல்களில் அதிகம் கவனம் செலுத்துபடியாகவும் கேட்டுக்கொண்டார்.

ஒய்வு பெற்ற பேராசிரியை எம்.ஏ. சுசிலா அம்மா நாஞ்சில் நாடன் அவர்களின், விருது பெற்ற ’சூடிய பூ சூடற்க’ தொகுப்பிலிருந்து சில அறிமுகங்களைக் கொடுத்துப் பேசினார். ’யாம் உண்பேம் ‘ கதை பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார். ’மஞ்சனமாட்ட கனாக்கண்டேன்’ என வரும் இடம் பற்றிக் குறிப்பிட்டபோது நாஞ்சில் நாடன் அவர்களும் கதையில் அவ்வுணர்ச்சி மிக்க இடத்தினை நினைவு கூர்ந்து வருத்தப்பட்டார். எப்படி அவருடைய கதைகளில் மனிதம் ஓங்கி நிற்கின்றது என்று கூறி வனம் சிறுகதையையும் உதாரணமாகக் குறிப்பிட்டார்கள்.

தனக்கு தில்லியின் நகரமும் மக்களும் உணவும் பதட்டத்தை தருகின்றன ஆனால் நாஞ்சில் நாடனோ புலம்பெயர் உலகின் மண்வாசனையையும், ’நல் உணவும் நாப்பழக்கம்’ என்று உணவுப்பழக்கத்தையும், மண்ணின் மக்களையும் உள்வாங்கி அதன் வாடையை தன் படைப்பில் கொண்டுவருவது தனக்கு வியப்பளிக்கிறது என்றார். மேலும் பல நகரங்களுக்கும் நாடுகளுக்கும் சென்று நாஞ்சில் அவர்கள் தங்கினால் இன்னும் பல மண்ணின் மணத்தை நாம் அறிய வாய்ப்பாக இருக்குமென்ற தன் அவாவினை வெளிப்படுத்தினார்.

திரு பென்னேஸ்வரன் அவர்கள் பேசியபோது ”இன்றைய தினத்தில் இணையத்தில் சிலர் எல்லாம் தெரிந்ததைப் போல எழுதுகிறார்கள் - கூகிள் உதவியுடன், அவர்களின் வாசிப்பின் வீச்சும் பரப்பும் எனக்குத் தெரியும் ஆனால் இணையத்தில் செயல்படாத நாடன் எழுத்துக்களோ அசலாக இருக்கின்றன” என்று குறிப்பிட்டார். விருதுக்கு தகுதியான மனிதர் என்று அனைவராலும் ஒருமுகமாக நாஞ்சில் நாடன் பாராட்டப்பட்டார்.

விழா நாயகன் நாஞ்சில் நாடனின் மனைவி அவர்களையும் மேடையேற்றி அவருக்கும் மரியாதைகளை செய்து அவரையும் மேடையில் அமரவைத்தார்கள். நெகிழ்ச்சியுடன் அவர் அமர்ந்திருந்தார்.

விழாவுக்கு கூட்டம் பரவாயில்லை எனும்படியே இருந்தது. இலக்கியக்கூட்டங்களுக்கு அதுவும் அலுவலக தினத்தில் இது அதிகமே என்று பென்னேஸ்வரன் அவர்களும் குறிப்பிட்டார். அதனபடியும் கூட நாஞ்சில் நாடன் பேரதிஷ்டக்காரர் தான்.

திரைப்பட நடிகர் தாமு அவர்கள் தற்செயலாக நிகழ்ச்சியன்று தமிழ்சங்கம் வந்திருந்தார். அவரும் வாழ்த்திப்பேசினார். இருதயபூர்வமான கைத்தட்டல்களென்றால் இன்னும் உரத்து ஒலிக்கட்டுமென்று கேட்டார். பெற்றோரிடத்து அன்புமிக்கவராக இருந்திருக்கவேண்டும் அதனால் தான் இத்தகைய விருதினைப் பெற்றார் எனவே அவருடைய பெற்றோருக்கும் நற்றுணையாக இருக்கும் மனைவியை அளித்த மாமனார் மாமியாருக்கும் கூட கைத்தட்டல்களை வாங்கிக்கொடுத்தார். அப்படியே அடுத்த வருடம் அவர் இயக்குனாராக இருக்கிறாராம் அதற்கும் எங்களிடமிருந்தும் விருது பெற்ற சாம்பினிடமிருந்தும் ஆசிகளாக கைத்தட்டல்களைப் பெற்றுக்கொண்டார்.

நாஞ்சில் நாடன் அவர்கள் தன் படைப்புகளின் தரம் பற்றிய அதன் தகுதி பற்றிய நம்பிக்கையின் பேரில் விருதினை ஏற்றுக்கொண்டாலும் இதனைப் பெறாத ஆனால் தகுதியுடையமற்றவர்களை நினைவு கூர்ந்து பேசினார். அதன் உட்கருத்து இப்பேட்டியிலும் உண்டு. பரிசில் வாழ்க்கை தானே.. விருது என்பதும் அவசியம் தான். காலதாமதமாக அளிக்கப்படும் விருதுகளைத்தான் தான் விமர்சிப்பதாகவும் கூறினார். மேலும் ஏனைய மொழிகளில் விருதுபெற்றவர்களின் படைப்புகள் தமிழுக்கு முன் மிக சாதரணமாகவே தெரிகின்றதென்றும் தமிழில் விருதுபெறுவதற்கு தகுதியான படைப்புகள் பல இருந்தும் அவை அளிக்கப்படாமல் விடுபடுவதுதான் விமர்சிக்கப்படக் காரணமும் என்றார்.

விருது பெற்றதிலிருந்து தினம் வீட்டில் மூன்றரை லிட்டர் பால் வாங்கி விருந்தினரை உபசரிக்கும் மனைவியைப் பற்றியும் தொடர்ந்த வருகையால் இரண்டு நாள் குளிக்கக்கூட நேரமில்லாமல் போய்விட்டதென்றும் விருதினால் கிடைத்த பணமெல்லாம் தில்லியிலேயே கூட செலவழிந்தும் போய்விடலாமென்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டார். ஆனால் பணம் புகழ் பாராட்டு இதையும் தாண்டி விருது தனக்கு மட்டுமல்லாம் தன் மொழிக்கும் சக எழுத்தாளர்களுக்குமான ஒன்றாக அவர் பார்க்கின்றார்.

எழுத்தாளர்களின் சொற்கிடங்கு என்பது அம்புறாத்தூணி போல எடுக்கஎடுக்க குறையாத சொற்கள் நிறைந்ததாக இருக்கவேண்டுமென்று கூறி சொற்கள் அம்புகள் என்பதற்கு கம்பராமயணத்திலிருந்து உதாரணமளித்தார். தொன்மையான நம் மொழியின் பல சொற்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றதென்றும் அவற்றை படைப்புகளில் பயன்படுத்துவது அவசியமென்றும் கூறினார். பயணங்களில் உணவு முக்கியமில்லை பயணங்களும் மனிதர்களை படிப்பதும் தனக்கு எப்படி உதவியதென்றார். விற்பனை பிரதிநிதியாக இருந்த நாட்களில் எப்படி அலுவலக வரவேற்பரையில் காத்திருக்கும் நேரங்களிலேலாம் தான் படித்துக்கொண்டிருந்ததையும் குறிப்பிட்டார்.

நாஞ்சில் உணவுகள் பற்றிய தன் புத்தகத்தை முடித்துவிட்டு கதை நாவல்கள் பக்கம் திரும்ப இருக்கிறாராம். இருந்தாலும் சமூகத்தைப்பற்றிய விமர்சனங்களை கட்டுரைகள் தானே சிறப்பாக வெளிப்படுத்தும் அதனை கதைகளில் வைத்து என்னபயன்? என்றும் கேட்டுக்கொண்டார்.

கேள்வி நேரம் என்று இரண்டு கேள்விகளுக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இரவு வெகுநேரமாகிவிட்டதென்பதால் நான் அதற்கு அமரமுடியவில்லை.

விருது அவருக்கு தாமதகமாக அளிக்கப்பட்டதாகச் சொன்னாலும் கூட, எப்போது அளிக்கப்பட்டாலும், அப்பொழுது தான் வாசிப்பின் பக்கம் திரும்பும் வாய்ப்புள்ள சிலர் அந்த தருணத்தில் இருக்கத்தானே இருப்பார்கள். அவர்கள் இதுபோன்ற ஏற்புரைகளை கேட்கும்போது இலக்கியத்தின் அமைதியான பக்கங்களையும் தெரிந்துகொள்ள வாய்ப்பாக அமையுமென்றே தொன்றுகிறது.

சுசீலாம்மாவின் விரிவான பதிவு இங்கே 

February 2, 2011

காற்றுவெளியில் ஒரு கவிதை


காற்றுவெளி இணைய இதழில்   என்  கவிதை மீள்பிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது. இதழின் பிற பக்கங்களையும் இங்கே வாசியுங்கள். முழு திரை என்று க்ளிக் செய்து இதழை ஒவ்வொரு பக்கமாக வாசிக்கலாம்..

சிதல் அரிக்கும் நாட்கள்

சிதல் அரிக்கும் நாட்கள்
பாதிவழியில் திரும்புவதே
வழக்கமாகி விடுகிறது.
ஒவ்வொரு முறையும்
பிழைகள் எதிர்கொண்டு
பின்னங்களில் வெற்றியாய்
திருப்பி அனுப்பும்
முடிவில்லா
வாழ்க்கைக்கணக்குகள்

சென்று மீண்ட வழிகளின்
பள்ளங்கள் மேடுகள்
பழகியென்ன?
தடைகளாய் முளைக்கிறது
உதவிக்காய் கொணர்ந்தவைகள்

கண்ணாடிச் சுவர் மீது
சப்தமெழுப்பும் வழி தேடல்
முடிச்சவிழ்க்க அவிழ்க்க
வளரும் ரகசியங்கள்
மாதங்களை வருடங்களை
இரக்கமில்லாமல்
உறிஞ்சியபடி
நாட்களில் புயற்கண் அமைதி
*சிதல் - கரையான்