June 25, 2008

சாட்ட ...ம்ம்.. சாட்ட.. ம்ம்.. சாட்ட


(மு.கு)இந்தப் படத்தினைப்பற்றிய விவரம் பதிவு இறுதியில்.
குழந்தையா இருந்தபோது நாம் செய்த குறும்புகளை இப்போது நமக்கு சொன்னால் வெக்கமாகவும் சமயத்தில் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.. நாங்கள் பாடம்படிப்பதை டேப் செய்து வைத்திருந்தார்கள் . அழுகையை , பள்ளிப்பாடல்களை , சினிமாப்பாடல்களை....என்று பதிந்து வைத்தவைகளை இப்போது கேட்டாலும் ஆனந்தம் தான் ஒலி நாடாவை சிடி யாக்கி வைக்கவேண்டும்.. இப்போது என்குழந்தைகளை வீடியோ எடுப்பது போல அப்போது ஒலிப்பதிவு.


வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா
இடி இடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்
மின்னல் ஒரு நாட்டியம்
மேடை வான மண்டபம்
தூரல் ஒரு தோரணம்
தூய மழை காரணம்
எட்டுத் திசை காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே
தெருவெல்லாம் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே
பார் முழுதும் வீட்டிலே
பறவை கூட கூட்டிலே
தவளை மட்டும் பாடுமே
தண்ணீரிலே ஆடுமே
அகன்ற வெளி வேடிக்கை
ஆண்டு தோறும் வாடிக்கை"

பாடலை ரொம்ப நாளா நியாபகப்படுத்த முயன்று தோற்றுப்போனேன். பி.கே.பி அவர்களின் பதிவில் தற்செயலாகப் பார்த்து நினைவுக்கு வந்தது. இந்த பாடலைப் பற்றி எக்கச்சக்க பேர் எழுதி இருக்கிறார்கள்.
இந்த பாடலை வேகவேகமாக பாடி அதுவும் அந்த வாடிக்கை வரும் போது வாடிக்காய் என்று அடிப்பது போல முடிப்பேன். இப்போது மகன் அப்படித்தான் ஹிந்தி ரைம்ஸ் பாடுகிறான்.. என்னைபோலவோ..

சினிமா பாட்டுன்னா அப்ப பாடி பதிந்தது "மூக்குத்தி பூமேல காத்து " ரொம்ப எல்லாம் இல்லங்க பல்லவி மட்டும் தான்.

ஒரு முறை தம்பி தீபாவளிக்கு சாட்டை கொளுத்தனும்ன்னு கேட்டான். இப்ப இல்ல அப்பறம் ராத்திரிக்கு ன்னு சொல்லி இருப்பாங்களோ என்னவோ.. அவன் ரொம்ப நேரம், சாட்ட ம்ம்ம்ம்.. சாட்ட... ம்ம்.. சாட்ட னு விடாம அழுதுட்டே இருந்தான்.அதை அப்படியே அவனுக்கு தெரியாமல் பதிவு செய்துட்டாங்க. இப்ப கேட்டா ஒரே சிரிப்பு தான்.
இது போல ஆச்சி தாத்தாக்களின் பேச்சுகளையும் எடுத்து வைத்திருக்கிறோம். எங்கே என்று தேடத்தான் வேண்டும்.


இந்த் கொசுவத்திக்கேத்த ஒரு கொசுவத்தி ஓவியம் மேலே இருப்பது. என் அப்பா வரைந்தது... நான் பொருள்களைப் பிடித்து நடக்க ஆரம்பித்த போது வரைந்தது.. பழைய காகிதம் உடைகிறது அதனை ஆவணப்படுத்த(!!!! :) ) வேண்டுமல்லவா..

June 22, 2008

பாடல்வரிப் புதிர்

றேடியோஸ்பதியில் அடிக்கடி புதிர் வச்சு என்பதிவில் புதிர் வைக்கும் ஆசையைக் கிளப்பிட்டார் கானாப்ரபா..
நம்மை ஒருவர் மண்டை குழம்பச் செய்தால் நாம் நாலு பேரை குழம்பச் செய்ய வேண்டாமா..
பார்த்துவிட்டு இந்த வரிகள் வந்த பாடல் என்ன படம் என்ன சொல்லுங்கள் பார்க்கலாம். ..

1..கடலுக்கு மேல் ஒரு மழைதுளி வந்து விழுந்ததே உப்பென மாறுமா இல்லை முத்தென மாறுமா

2... வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான்....

3.நிழலை விட்டுச் சென்றாயே
நினைவை விட்டுச்சென்றாயே

4.. கோயிலை பாத்தாத் தானா கைகள்
உனக்காகத்தான் கும்பிடுதே

June 18, 2008

சிவாஜி வாயில் ஜிலேபியைப் போடவில்லை..

வாசல் தெருவில் கோடு கிழித்து பிள்ளைகளோட பிள்ளைகளாய் விளையாண்டு கொண்டிருந்த சுமதி அவ்வப்போது அம்மாவிடம் "அப்பாருஎப்ப வருவாரு?" என்று விசாரித்தபடியே இருந்தாள்..
"வந்தா உன்னையத்தாண்டிதானே வரனும் சும்மா நொய்நொய்ய்ன்னுகிட்டு" என்று அம்மா அதட்டிய அதட்டலில் கொஞ்சம் அடங்கி பத்துநிமிசமாக கேட்பதையும் விட்டிருந்தாள்.

வரும்போதே சிவாஜி எதோ கோபத்தில் ஒரு கால் செருப்பு வாசலிலும் ஒரு கால் செருப்பு வீட்டுக்குள்ளுமாக விழ அடித்தபடி உள்ளே போனான். குதித்து ஓடி அப்பா என்றவளுக்கு "தொம்" என்று விழுந்தது ஒன்று.. "சே மனுசன் வரங்காட்டியும் ஆரம்பிச்சிடுவியா நீயு போடி " கத்தியவனாய் உண்டியலை உடைத்து காசுக்களை பொறுக்கிக்கொண்டிருந்தான்.

"அப்பா நேத்தைக்கே கேட்டேன்ல வரும்போது சிலேபி வாங்கிவரேன்னியேப்பா" அடிவாங்கியதால் வந்த கேவலோடே சொல்லிக்கொண்டிருந்தாள் சுமதி . அவனவன் ரிக்ஷா இழுத்தும் தினப்படிக்கான காசுவரலையேன்னு இருக்கையிலே சிலேபியாம்ல சிலேபி ... அடியே இவளை இழுத்துட்டுப் போ இல்லாட்டி அடிவாங்கி சாவப்போறா" என்று மனைவியிடம் சொல்லிக்கொண்டே விருட்டென்று வெளியேறி நேராக சாராயக்கடைக்கு சென்றான்.

வலி போக நிறைய குடித்தவன் வரும்வழியில் நண்பன் செய்த தகராறுக்கு துணை போனதாக குற்றம்சாட்டப்பட்டு பதினைந்து நாள் சிறையில் போடப்பட்டான். மறுநாள் தலைவர் பிறந்தநாள் என்று எல்லாருக்கும் சிலேபி வழங்கப்பட்டது. கையில் வாங்கியவன் சாப்பிடாமல் தேம்பி அழுததை பார்த்து உடனிருந்தவர்கள் குழம்பி நின்றனர்.
சிவாஜி வாயில் சிலேபியை போடவில்லை..

-----------------------------
சிவாஜி
வாயில்
ஜிலேபிக்காக எழுதிய கதை.. என்னை அழைத்த ராமலக்ஷ்மிக்காக எப்படியோ எழுதியாச்சு... இதுல வேற இன்னும் என்ன எல்லாம் எழுத முடியும்ன்னு தெரியல.. கவிதை கட்டுரை கதை நல்ல கருத்துன்னு ஆளாளுக்கு ஒன்னு எழுதிட்டாங்க.. இன்னும் யாரைக்கூப்பிடுவதுன்னு தெரியல.. அதனால் குறிப்பிடவில்லை விருப்பம் இருக்கறவங்க எழுதுங்கப்பா....

June 6, 2008

லட்சியக்கனவு திண்ணை வச்ச வீடு

திண்ணை வச்சு முற்றம் வச்சி .. வீட்டுக்குள்ள ஊஞ்சல் போட்டு வீடுகட்டனும் இதாங்க வாழ்க்கை லட்சியம்.. இது வரை நான் வாழ்ந்த எந்த வீட்டிலும் இது மாதிரி எதுவும் இல்லை.. ஒண்ணாப்பு படிச்சப்ப நாங்க திருவெண்காடு கிராமத்துல இருந்தோம். ஆனா பாருங்க அங்க கூட நாங்க மாடிவீட்டில் தான் இருந்தோம்.. அதுக்கப்பறம் மாயவரத்துல இருந்தது எல்லாமே கால்னி வீடுங்கதான்.. நாலுவீடு வரிசையா சந்துல இருக்கும் பெட்டி பெட்டியா.. . சந்துக்குள்ள கொஞ்ச நாள் .. காலனியிலேயே ரோட்டைப்பார்க்க இருக்கற வீடுன்னு கடைசியில் போனவீடு மாடியிலிருந்து ரோடே தெரியாத ஒரு வீடு.. இப்ப தில்லியிலும் மாடிவீடு .

பாலபாரதி விடுபட்டவைகள் வரிசையில் திண்ணையைப்பற்றி எழுதி தொடர்ந்து பதிவர்களை எழுத கேட்டுக்கொண்டதை அடுத்து முரளிக்கண்னன் அவர்கள் ஆரம்பிக்க இது என்னோட திண்ணைப்பதிவு.

நன்றி : அஸ்வின் ( http://www.flickr.com/photos/ashwin_/2202461327/ )


பேப்பரில் புத்தகத்தில் வருகிற அழகான திண்ணை வச்ச மாடர்ன் முற்றம்வச்ச வீட்டு டிசைன் எல்லாம் கட்டிங் செய்து வச்சிருக்கிறேன் கனவு நனவாகும் நாளுக்காக காத்திருக்கிறேன்.. எங்க ஊரில் நாங்க இருந்த தெருவில் பெரிய திண்ணை வச்ச வீடு கிடையாது. ஆனா வேற தெருக்களில் பாத்துருக்கேன்.. ஆனா திண்ணை வச்சிருக்கறவங்களும் அதில் மரத்துலயோ இரும்புலயோ அழி போட்டு வச்சிருந்தாங்க அப்பவே.. இப்ப திண்ணை வச்சு கட்டற பழக்கமே கிடையாது.. வெளி காம்பவுண்ட் க்கு அப்பறம் கொஞ்ச தூரம் கழிச்சு வீடு ஆரம்பிச்சிருக்கும்..

சரோஜினி டாக்டர் ஆஸ்பத்திரியில் முன்பு ஒரு திண்ணை இருந்தது எப்போதும் காத்திருக்கும் கூட்டத்துக்கு அந்த திண்ணை தான் இடம்..

அய்யனார் கோயில் தெருவில் நான் பாக்க ஒரு பெரிய திண்ணை வச்ச வீடு இருந்தது.. இப்ப அந்த வீடு மாறி இருக்கும்ன்னு நினைக்கிறேன். முதல்ல் ரோட்டை விட உயரமான ஒரு மேடை இருக்கும்.. அதற்கப்பறம் தான் திண்ணை ஆரம்பிக்கும் திண்ணைங்கற இடமே ஒரு பெரிய வீடு அளவு க்கு இருக்கும்.. உயரம் வேறயா , பார்க்க ஒரு அரண்மனை மாதிரி இருக்கும்.. உள்ளே பல குடித்தனங்கள் இருந்தாங்க.. சில தோழிகள் வீட்டுக்கு போயிருக்கும்போது உள்திண்ணை வச்ச வீடுகள் பார்த்திருக்கேன்.. ஆனா அதையும் தடுத்து ஒண்டுகுடித்தனங்களா ஆக்கி இருப்பாங்க.. அடுக்களை மட்டுமே அறை.. வீடு என்பது அந்த திண்ணையாகவே வாழ்ந்துகொண்டிருந்தார்கள்..

எல்லார் வீட்டுத்திண்ணைகளிலும் எப்போதும் யாராவது அமர்ந்து கொண்டிருந்த காலம் உண்டு. வயது வித்தியாசம் இருப்பது இல்லை..ஏன் வீட்டுக்கதவே கூட சாத்தி நான் எங்க ஊரில் பார்த்தது இல்லை.. காலையில் வாசல் தெளிக்க திறந்த கதவு தான் பின் தூங்கும் போது தான் அடைக்கப்படும்.. ஆனால் அவைகள் இன்றைக்கெல்லாம் எப்போதும் சாத்தியவீடுகளாகி விட்டது..

வழவழப்பான தூண்களூம் சிவப்பு சிமெண்ட் தரையும் மரவேலைப்பாடுகளுமாய் உள்ள திண்ணையாகட்டும்.. சிறு மூங்கில் கழி வைத்து கூரையைத் தாங்க செய்து சாணி மெழுகிய திண்ணையாகட்டும்.. அதற்கு ஒரு கவர்ச்சி இருந்தது.. சுவற்றில் சின்ன மாடமும் எப்போதும் ஒரு பானைத்தண்ணீரும் வைத்திருக்கும் வீடுகள் கூட உண்டு..


என் கனவு வீட்டில் திண்ணை வேண்டும்.. முற்றம் வேண்டும்.. முற்றத்தில் நடுவில் துளசி வீட்டு அல்லிக்குளம் போல ஒரு செட்டப் வேண்டும்.. முற்றத்தின் மேடையில் ஒரு ஊஞ்சல் வேண்டும்.. கோவையில் வீடு கட்ட இடம் ரெடி. வீடு கட்ட பணம் சேர்ந்த பின் கட்டுவதற்கு யாராவது நல்ல மாடல் செய்து தாருங்கள் பதிவர்களே..
அது பழமையும் புதுமையும் கலந்தவண்ணம் இருக்கனும்..

மதுரை ... பொள்ளாச்சி கோவை இப்படி சில இடங்களில் சின்ன சின்ன திண்ணை பாத்திருக்கேன்.. வீடு ஒரு அறை தான் ஆனா வாசலில் ஒரு பெஞ்ச் அளவு திண்னை இருக்கும் அழகா.. யாருன்னாலும் உக்காரலாம்..

தாத்தா பாட்டிகளுக்கு வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடப்பது பிடிக்காதுங்க.. வீட்டுல இருக்கறவங்க ஓட்டமா ஓடிக்கிட்டிருப்பாங்க.. திண்ணைதான் அவங்க உலகம்.. பாருங்க புளியங்குடியில் ஒரு வீட்டு திண்ணையில் இந்த தோழிகள் இருவரும் உக்காந்து தாயக்கட்டை விளையாண்டுகிட்டுருந்தாங்க.. அவங்க ரெண்டு பேருக்கும் நடுவில் அந்த சின்னத்திண்ணையில் தாயம் வரைஞ்சிருக்கு.. :-)

எப்பவும் நான் கூப்பிடறவங்க மூணுபேரும் பயங்கர பிசியாக்கும்.. அதுக்காக இப்ப கூப்பிடவங்களும் சும்மா இல்ல.. மங்கை எட்டிப்பாக்க நேரமில்லாம ஓடிக்கிட்டுருக்காங்க.. கோபி மாசம் ஒரு பதிவுன்னு பந்தா விடறார்.. சென்ஷி பி.ந. இலக்கியவாதியாக மாறிட்டார்.. ஹ்ம்..

அடுத்ததா முரளிகண்ணண் அவ்ர்கள் பதிவிலேயே துண்டு போட்டு இடம் பிடித்துவிட்ட அதிஷா..
ஒளி-பதிவர் மற்றும் பாவமன்னிப்பு இரண்டாம் பாகம் புகழ்
ஜீவ்ஸ்..

மற்றும் கொசுவத்திப்புகழ் செண்டிமெண்ட் புகழ் ஆயில்யன் இவர்களை
அழைக்கவிரும்புகிறேன்..

June 3, 2008

பேஸ்டு ஆன் ஒன் ஹெல் ஆஃப் ய ட்ரூ ஸ்டோரி

பலநேரம் சேனல்களை கடந்து போகும் போது சில நிமிட நேரப்பார்வையிலேயே.. .. அந்த காட்சிகள்
இது நல்ல படம் என்று சொல்லிவிடும்.. ஆரம்பத்தை இன்னொரு நாள் பார்த்துக்கொள்வோம் என்று மனதை சமாதானப்படுத்திவிட்டு பார்க்கத்தொடங்கிவிடுவது வழக்கம்.. அப்படித்தான் அன்று சேனல்களை பின்னுக்கு தள்ளியபடி ரிமோட் போய்க்கொண்டிருக்கும் போது இந்த படம் சிக்கியது..


ஒரு தாத்தா சிறுவன் ஒருவனிடம் உரையாடிக்கொண்டிருந்தார். அவர் ஒரு மோட்டார் பைக் ரேஸ்க்காரர் .. தன் அந்த வயதிலும் போட்டிஒன்றில் கலந்து கொள்வது பற்றியே கனவு கண்டுஇருக்கிறார். 25 வருடக்கனவு என்று சொல்லிக்கொள்ளும் அவர்.. தன் மோட்டார்சைக்கிளை பேக் செய்தபடி நியூஸிலாந்திலிருந்து கப்பலில் அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் நடைபெறும் போட்டிக்கு கிளம்புகிறார். அவருடைய இண்டியன் மோட்டார்சைக்கிள் என்னும் வண்டி உலகத்திலேயே அதிக பட்ச வேகமான வண்டி என்பது அவருடைய வாதம்.


அனைவரும் அவரை நம்பாத போதும் அந்த சிறுவன் அவரை நீங்கள் ரெக்கார்ட் செய்வீர்கள் நம்புகிறேன் என்று சொல்லி வழியனுப்புகிறான். அமெரிக்காவில் வந்து சேரும் அந்த வயதானவரின் அனுபவங்கள் தான் படத்தின் கதை.
இமிக்க்ரேஷன் பகுதியில் வரிசையில் கவுண்ட்டருக்கு அருகில் செல்ல முயற்சிப்பவரை மஞ்சள் கோட்டுக்கப்பறம் நிக்க சொல்லி மிரட்டுவதில் ஆரம்பிக்கறது அவர் அனுபவம்.. நீங்கள் அமெரிக்க விசா எடுத்தவர் என்றால் புரிந்து கொள்வீர்கள்... வாடகைக்கு டேக்ஸியில் ஏறியவர் வாடகையை கேட்டு நான் காரை விலை பேசவில்லையே என்று பதறுகிறார். :-)

ஹாரன் அடிக்கும் ஒரு காரின் மீது, முன்னால் இருக்கும் கார் வேண்டுமென்றே இடிப்பதைப் பார்த்து பதறும் அவரிடம்.. இப்படிப்பட்ட க்ரேஸி மக்கள் நிறைந்த ஊர் அய்யா நீங்கள் அமைதியா இருங்கள் என்னும் டேக்ஸி ட்ரைவரை விநோதமாக பார்த்தபடி நம்ம ஊர் கிராமத்தான் பட்டணம் வந்ததும் நடிகர்களை பார்க்க விழைவதைப்போல அவரும் ஹாலிவுட்டில் இறங்குகிறார்.

தங்குமிடத்தில் வரவேற்பில் வேலைசெய்யும் ஒரு திருநங்கையின் நட்பின் வழிகாட்டலில் ஒரு காரை பழய விலைக்கு வாங்கிக்கொள்கிறார். அந்த கார்கடைக்காரரிடம் உதவி கேட்டு இரவு நேரத்தில் வெல்டிங் வேலைகள் செய்து தன் மோட்டர் சைக்கிளை காரின் பின் இணைக்க வழி செய்துகொண்டு வரவேற்பாளினியின் உதவியுடன் மோட்டார் சைக்கிளை கப்பலிலிருந்து பெற்றுக் கொண்டு போட்டி நடக்கும் ஊருக்கு கிளம்புகிறார்..கார்கடைக்காரர் அவரின் திறமையைக்கண்டு அங்கே யே எப்போது வந்தாலும் வேலை தருவதாகவும் அழைக்கிறார். ஆனால் அவர் மறுக்கிறார்.

வழியில் மோட்டார்சைக்கிளை இழுத்து வரும் சக்கரங்களில் ஒன்று வீணாகப்போனதும் வழியில் ஒரு செவ்விந்தியரின் நட்பு.. வயதான அவர்களின் ப்ரச்சனைகளை பேசி நட்பாகி விடுகிறார்.
பிறகு ஒரு வயதான பெண்ணின் நட்பு ..
வழியில் ஒரு ஆர்மிக்கார இளைஞனின் நட்பு...

வழியில் கார் இல்லீகலாக பார்க் செய்திருக்கிறதே என்று பார்க்கவரும் போலிஸிடம் ஒன்றுமில்லை எனக்கு சின்னதா ஹார்ட் அட்டாக் வந்தது வண்டியில் தூங்கிவிட்டேன் என்று சாதாரணமாக சொல்கிறார்.

போட்டி நடக்கும் இடத்திற்கு வந்தபின் தான் அதற்கு ஒரு மாதம் முன்பே பதிவு செய்திருக்க வேண்டுமென்பதும் அவருக்கு தெரியவருகிறது... அவருக்காக சிலர் பேசிப்பார்த்தும் அவருடைய பழைய மோட்டார்சைக்கிளும் அதன் சேப்டி பற்றாக்குறையும் அவருடைய வயதும் என்று மறுப்புக்கு பல காரணங்களை அடுக்குகிறார்கள்..

பாதுகாப்பு அதிகாரிகளை மீறி அவர்

தன் வண்டியின் வேகத்தையும் தன்னுடைய திறமையையும் அவர் ஒரு முறை செய்து காட்டியபின் போட்டியில் அவரை சேர்த்துக்கொள்ளமுடிவெடுக்கிறார்கள்..
அதிக வேகம் செல்லும் போது வண்டி ஆடுவதும்... கால் வைக்கும் பகுதியில் ஏற்படும் அதிக சூடு அவர்காலை பதம் பார்ப்பதும் என்று அவருக்கே தெரியும் சில தவறுகளை சரி செய்ய அவர் முயற்சிகளை மேற்கொண்டாலும் சரிவராததால் முயற்சிகளை கைவிட்டு விட்டு முன்பு போலவே போட்டியில் கலந்து கொள்கிறார்.


அவருக்கு ஒரு மாத்திரையும் வண்டிக்கு ஒரு மாத்திரை குடுத்துவிட்டு வண்டியை ஓட்டும்
கடைசி காட்சிகளும் அவர் ரெக்கார்ட் ப்ரேக் செய்வதும் நமக்கும் உற்சாகமளிப்பதாக இருக்கிறது.. தொடர்ந்து முயன்றால் எல்லார் கனவும் ஒரு நாள் பலிக்கும் .

இது ஒரு உண்மையான மனிதனின் கதையாம்.. உண்மையான பர்ட் முன்ரோ 178.971 MPH வேகத்தில் ரெக்கார்ட் செய்திருக்கிறார்

"தி வேர்ல்ஸ்ட் ஃபாஸ்டஸ் இண்டியன்".. இது தான் படத்தின் பெயர். பர்ட்டாக நடித்தவர் அசாத்தியமான நடிப்பு ..ஆண்டனி காப்கின்ஸ். உறைந்த அந்த ஏரியின் மேல் நிகழும் அந்த போட்டியும் அதனைச்சார்ந்த அவருடைய ஏமாற்றமும் வெற்றியுமான நடிப்பும் அருமையானது..