Showing posts with label நவீனநாடகம். Show all posts
Showing posts with label நவீனநாடகம். Show all posts

January 12, 2011

13 வது நாடகத்திருவிழா - மிருக விதூஷகம்





நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமா பெயர் பலகையை பலமுறை வாசித்துக்கொண்டே
உள்ளே என்ன நடக்கும் என்று யோசித்துக்கொண்டே கடந்து போவோம். அதனைப்பற்றிய செய்திகளை பத்திரிக்கையில் வாசித்துக்கொண்டே எப்படித்தான் அவை நடக்கும் என்று பார்க்கவில்லையே இதுவரை என்று உள்ளூர எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.

லிவிங் ஸ்மைல் வித்யா,  தான் பங்கேற்கும் நாடகம், இயக்குனர் முருக பூபதியின் ‘மிருகவிதூஷகம்*அங்கே திறந்தவெளி அரங்கில் 11ம் தேதி இரவு நடக்குமென்று தொலைபேசியில் செய்தி அனுப்பினார். நானொரு கிறுக்கியைப்போல ‘குளிருமே’ என்று மறுசெய்தி அனுப்பிவிட்டு
யோசித்துக்கொண்டிருந்தேன். அன்றோ துணைக்கு அழைத்தால் வீட்டில் ஒருவருக்கும் வரும் வகையுமில்லை . மெட்ரோ துணையிருக்க , பெண்கள் பெட்டியும் இருக்க என்ன குறை.

திறந்தவெளி அரங்கின் வழி விசாரித்து நெருங்கிய போது நாடகத்தின் முதல்
காட்சியாகத்தான் இருக்கவேண்டும். விழுதுகள் தொங்கும் ஆலமரத்தின் மேடை முழுதும்
மணல் நிரப்பப்பட்டிருந்தது. வித்தியாசமான ஒளி அமைப்புகளும் மெல்லிய ஒலியாக குழுவினர் இசைப்பதும் அழகாக இருந்தது. அமர நாற்காலிகள் இருந்தும் வசதியானபடிக்கு நின்று கொண்டே தான் அந்த ஒன்றரை மணி நேர நாடகத்தை பலரும் பார்த்தோம். நாடகத்தில் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றி இயக்குனர் குறிப்பிட்டபடி இன்று பயன்பாட்டில் இல்லாத முறம், கோழிக்கூடைகள் ,சாக்கு போன்றவற்றையைக் கொண்டு அவர்கள் நாடகம் செய்கின்றதும் புல்லாங்குழல் மற்றும் மேளங்களின் ஒலியும் வேறு ஒரு வித்தியாசமான சூழலாக இருந்தது.

ஆரம்பக்கட்டங்களில் மிருகங்களாகவே மாறிவிட்டனரோ எனும்படி அவர்களின் ஒலியும் அசைவுகளும் இருந்தது. மிகச்சிரமப்பட்டுத்தான் நடிக்கின்றனர். விழுவதென்றால் நிஜமாக விழுகிறார்கள். இன்றைய நகரமயமாக்கலால் பாதிக்கப்பட்டும் இழிவுபடுத்தப்பட்டும் வரும் மக்களை அவர்களின் துயரங்களை பேசுகிறதாக அமைந்திருக்கும் நாடகத்தின் முதல் பகுதிகள். பின் இலவசங்களால் விளம்பரங்களால் தொழில்நுட்பத்தால் மதிக்கப்படாமல் மாறிவிட்ட மனிதர்களின் வாழ்நிலையைக் காட்டும் பகுதிகள். திறந்த வெளி தான் அந்நாடகத்துக்கும் நல்ல பொருத்தம்.
வித்யா நன்றாக செய்திருந்தார். டம் டம் என்ற ஓசையோடு அவர் ஆடிவருகின்ற காட்சி மிரட்டியது .

தொலைபேசியோடு  பேசிக்கொண்டே  அலையும் நகரக்காட்சியில்  தமிழ் புரிந்தவர்கள் சிரித்து ரசித்தனர். என்ன இருந்தாலும் உரையாடல் சட்டென்று புரிபடுகிறதே. மற்ற பகுதிகள் புதிரான ஒரு நவீன பாணி இருப்பதும் அவசியமானதானாலும் எங்களுக்கு உரையாடல் பகுதிகள் எளிதாகப் புரிந்தது.

“எங்கள் பொருட்களைப் பயன்படுத்தியவர்கள் தான் சினிமாவில் செயித்திருக்கிறார்கள்.”

அனைவருக்கும் வழங்கப்படும் இலவச சுருக்கு கயிறு ,
“எனக்கும் கயிறுதான் குடுத்திருக்கிறார்கள்”
“எனக்கு இலவசம் வேண்டாம் சார் ப்ளீஸ் ப்ளீஸ்”
“குழாயடி சண்டையைப் படம் பிடித்து அனுப்பினால்” போன்ற பகுதிகளில் கூட்டத்தினர் ரசித்து சிரித்தனர்.



கதை சொல்லிகளும் உண்மைகளைச் சொல்லும் கோமாளிகளும் இல்லாது போன காலகட்டத்தில் அல்லது ஒழிக்கப்பட்டுவிட்ட காலத்தில் “ நல்ல கதை உண்மைக்கதை வேண்டாண்டா” என்று அவற்றை சொல்லவரும் இன்னோருவரை அடக்க நினைக்கிற இடங்கள் நன்று.

அழிக்கப்பட்ட அபூர்வ சிறு பூச்சிக்காகவும் குருவிகளுக்காகவும் மிருகங்களுக்காவும் கூட குரல் கொடுத்த விசயம் எல்லா ஊடகம் மூலமாகவும் சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டிய விசயம் தான்.




 காமெடி வகை நாடகங்களிலிருந்து நாட்டிய நாடகம் , இந்த நவீன நாடகம் வரை எது ஆனாலும் அதனதன் நிலையில் என்னை ரசிக்கவைக்கின்றன. துணுக்குத் தோரண காமெடி நாடகங்களைக்கூட எனக்கு வெறுக்கமுடியாது.

இன்னும் அந்த பிண்ணனி ஒலிகள் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. வாழ்த்தி நினைவுப்பரிசை இயக்குனருக்கு வழங்கும்போது நடிகர்கள் அனைவரும் குலவையிட்டனர். அழைப்பனுப்பிய லிவிங் ஸ்மைல் வித்யாவுக்கு நன்றி. அவர்கள் குழுவினருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்.